பத்து வயது ஆகையில்

தமிழாக்கம் : ராமலக்ஷ்மி

அந்த முழு எண்ணமும் என்னை உணர வைக்கிறது
நான் ஏதோ ஒன்றுடன் இறங்கி வருவதைப் போன்று,
ஏதோ ஒன்று,
எப்படியான வயிற்றுவலியை விடவும் மோசமானது
அல்லது மோசமான வெளிச்சத்தில் நான்
வாசிக்கும் பொழுது வரும் தலைவலியைப் போன்றது–
ஒருவிதமான, ஆவியைப் போன்ற கொப்பளங்கள்,
மனநோயின் பொன்னுக்குவீங்கி,
ஆன்மாவை உருக்குலைக்கும் சின்னம்மை.

நீங்கள் சொல்கிறீர்கள் திரும்பிப் பார்ப்பதற்கு
இது வெகு சீக்கிரம் என,
அது ஏனெனில் நீங்கள் மறந்து விட்டீர்கள்
ஓரிலக்க வயதின் குற்றமற்ற எளிமையை
மற்றும் ஈரிலக்க வயதின் அழகான சிக்கலை.
ஆனால் என் படுக்கையில் படுத்தவாறே
என்னால் ஒவ்வொரு இலக்கத்தையும்
நினைவுபடுத்திக் கொள்ள முடிகிறது.
நான்கு வயதில் நான் ஒரு அரேபிய மாந்திரிகன்.
குறிப்பிட்ட முறையில்
ஒரு குவளைப் பாலைக் குடிப்பதன் மூலமாக
என்னை நானே மறையச் செய்திட முடிந்தது.
ஏழு வயதில் நான் படைவீரனாக இருந்தேன்,
ஒன்பதில் இளவரசனாக.

ஆனால் இப்போதெல்லாம் அதிகமாக
சன்னல் அருகே இருக்கிறேன்
பின்மதிய வெளிச்சத்தைக் கவனித்தபடி.
அத்துணை அழுத்தமாக அது விழுவதில்லை
எனது மர வீட்டின் பக்கவாட்டில்,
வாகனக் கூடத்தின் மேல்
இன்றைக்குப் போல் என்றைக்குமே
எனது மிதிவண்டி சாய்ந்து நின்றதில்லை
அனைத்து ஆழ் நீல வேகமும் வடிந்து போய்.

இது சோகத்தின் துவக்கம்,
எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்,
பிரபஞ்சத்தில் ஊடாக
என் பைம்மிதிகளுடன் நடந்தபொழுதில்.
எனது கற்பனை நண்பர்களிடமிருந்து
விடைபெறும் காலம் வந்து விட்டது,
முதல் பெரிய எண்ணுக்குச் செல்லும் காலம்.

ஏதோ நேற்றைப் போலிருக்கிறது
என் தோலுக்குக் கீழ் ஒளியைத் தவிர
வேறெதுவுமில்லை என நான் நம்பியது.
நீங்கள் என்னை வெட்டினால்
நான் பிரகாசித்திருப்பேன்.
ஆனால் இப்போது வாழ்வின் நடைபாதையில்
நான் விழுவேனேயானால்,
என் மூட்டின் தோல் உரியும். இரத்தம் கசியும்.
*

மூலம்: ‘On Turning Ten’ By Billy Collins


பில்லி காலின்ஸ்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும் 81 வயதான பில்லி காலின்ஸ் (வில்லியம் ஜேம்ஸ் காலின்ஸ்) கவிஞரும், எழுத்தாளரும், பேராசிரியரும், நூல் திரட்டாளரும் ஆவார். 2001 முதல் 2003_ஆம் ஆண்டு வரையிலும் அமெரிக்காவின் அரசுக் கவிஞராக நியமனம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. 2014_ஆம் ஆண்டு கவிதைக்காக நார்மன் மெயிலர் பரிசைப் பெற்றவர். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையால் “அமெரிக்காவின் மிகப் பிரபலமான கவிஞர்” எனப் பாராட்டப்பட்டவர்.

பில்லி காலின்ஸ் 1941_ஆம் ஆண்டு மன்ஹாட்டன் நகரில் வில்லியம் – கேதரின் காலின்ஸ் தம்பதியருக்குப் பிறந்தவர். இவரை வளர்ப்பதற்காகத் தன் செவிலியர் வேலையை ராஜினாமா செய்த தாய் கேதரின், கவிதை உட்பட எந்தத் தலைப்பிலான எழுத்தையும் பாராயாணம் செய்து ஒப்பிப்பதில் வல்லவர்.  சிறுவயதிலேயே தான் படித்தவற்றைப் பாடி, ஒப்பித்து மகனுக்கு வார்த்தைகளின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியவர். தன் தந்தையிடமிருந்து நகைச்சுவை உணர்வைப் பெற்றதாகக் குறிப்பிடுகிறார் காலின்ஸ்.

இவர் ஹோலி க்ராஸ் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டமும், கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும், காதல் கவிதைகளுக்காக முனைவர் பட்டமும் பெற்றவர். நியூயார்க் நகரின் லேமன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி 2016_ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இவரது முக்கியத் தொகுப்புகளாக அறியப்படுபவை: The Apple That Astonished Paris, Questions About Angels, The Art of Drowning.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.