நாங்கல்லாம் மதுர காரங்ய…!

மதுரையின் ஏதோ ஒரு பேருந்து நிலையத்தில் வெளியூரிலிருந்து வந்து இறங்குங்கள். எதிரே தென்படும் “மதுரைக்காரர்” ஒருவரிடம் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி கேளுங்கள். நம் மதுரைக்காரர் வழியைச் சொல்லிவிட்டு, “அண்ணே நானும் பஸ்ஸுக்குத்தான் நின்னுகிட்டுருக்கேன்… வாங்க ஒரு காபியோ டீயோ அடிச்சா வண்டி வர சரியாயிருக்கும்” என்று மாமாங்கமாக பழகியவர் போல் உங்களை அழைக்கும் சாத்தியம் மிக அதிகம். பிறகு சட்டென்று தோன்றியது போல், “ஜில்லுன்னு வேணும்னா புரூட் மிக்ஸர் சாப்பிடலாம்” என்று சொன்னாலும் ஆச்சரியப்படாதீர்கள். பொறுங்கள். அவருடன் கடைக்குப் போனால் அங்கு இன்னும் சில ட்விஸ்ட் உங்களுக்காக காத்திருக்கும். மதுரையில் பழரசக் கடைகள் தனியே இருப்பதில்லை. அதற்கு அடுத்தாற்போல் எப்படியும் காபிக்கடை இருக்கும். வெறும் காபியெல்லாம் மதுரைக்காரர்களை திருப்தி செய்வதில்லை. எனவே அந்தக் கடையின் முன்னால் வடை, பஜ்ஜி சகிதம் ஒருவர் முண்டா பனியனுடன் எப்போதும் எண்ணெய் சட்டியில் பிஸியாக இருப்பது தெரு தோறும் தென்படும் காட்சி. “அண்ணே” என்றழைத்தவர் இப்போது பண்டங்களை சற்று நோட்டம் இடுவார். பஜ்ஜியின் நிறத்தை வைத்தே கடையின் தரத்தை அறியும் திறன் அவருக்கு பரம்பரையாகவே வந்திருக்கும். “உங்களுக்கு வடையா பஜ்ஜியா?” என்பார். வேண்டுமா? என்ற கேள்வியெல்லாம் சங்கம் வளர்த்த ஊர் பண்டு தொட்டு வளர்க்கும் நாவிற்கு தேவையில்லாதது.

“பாசக்கார பயபுள்ளைக” என்பதன் பொருள் இப்போது உங்களுக்குப் புரியத் துவங்கியிருக்கும். வடையையும் பஜ்ஜியையும் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, அதற்குப் பக்கத்தில், ஒரு பெரிய அலுமினிய தட்டில், பிரவுன் கலரில் பல உருளைகள் தட்டுப்படும். “நம்மூரில் பார்த்ததில்லையே” என்று நீங்கள் யோசிப்பது சிறிய கல்லாவில் அமர்ந்திருக்கும் வெள்ளைச் சட்டைக்காரருக்கோ பாய்லர் பக்கமிருப்பவருக்கோ தெரிந்து விடுவதில் ஆச்சரியமேதும் இல்லை. அவர், “மைதா கேக்… சாப்டு பாருங்க நல்லாருக்கும்” என்று பரிந்துரை செய்வார். உருட்டி வைக்கப்பட்ட பிஸ்கட்டுக்கும், போண்டா எப்படி இனிக்கும் என்ற சந்தேகத்திற்கும் இடையில் தொக்கி நிற்கும் அந்த வஸ்துவை நீங்கள் சாப்பிட்டு முடிப்பதற்குள் உங்கள் புதிய நண்பர் வாழைக்காய் பஜ்ஜியும் வடையும் காரச்சட்னியும் கொண்ட தட்டை உங்களிடம் நீட்டுவார். அடுத்த பத்து நிமிடங்களில் உங்கள் ஜாதகம் அவரிடத்திலும் அவர் ஜாதகம் உங்களிடத்திலும் இருந்தால் நீங்கள் நிற்கும் ஊர் மதுரையே.  நீங்கள் பார்த்தவர் “சாதா மதுரைக்காரர்” தான். “சிறப்பு மதுரைக்காரர்” வகையினர் இன்னும் ஒரு படி மேலே போய், மேற்சொன்ன அனைத்தும் சிறுகுடலை அடைவதற்குள், “என்ன வெயில் தாகமே அடங்கல” என்ற அங்கலாய்ப்புடன் பக்கத்து கடையின் நன்னாரி சர்பத் நாடி நகர்வார். 

இத்தகைய கடைகளின் பண்டங்கள் மட்டுமல்ல கடையின் பெயரில் கூட “நாங்க வித்தியாசமானவங்க” என்று காட்டுவது மதுரை வழக்கம். “மணியன் காபி பார்” என்பது எந்த ஊரிலும் இருக்கலாம். ஆனால் “நினைவூட்டும் மணியன் காபி பார்” என்று பெயரிட்டு அத்துடன் ஒரு பசு, தன் நாவால் பால் சுவைக்கும் படமுடன் பலகை இருந்தால் அது மதுரை. முப்பது வருடங்களுக்கு அங்கு நான் அருந்திய காபி இன்றும் நினைவிலிருப்ப‌தற்கு அந்த “நினைவூட்டும்”மே காரணம். உங்கள் நண்பர் இப்போது உங்கள் நாக்கின் நீள அகலத்தை தன் அனுபவம் மூலம் அளந்திருப்பார். “எத்தனை நாள் இங்க இருப்பீங்க” என்று கேட்டவுடன், ஏதோ முக்கியமான தகவல் சொல்லப்போகிறார் என்று நீங்கள் ஆர்வம் கொள்வீர்கள். “விளக்கத்தூண் பக்கம் போனீங்கனா பழைய சிட்டி சினிமா முன்னாடி சாயங்காலம் ஒருத்தர் பன் பட்டர் ஜாம் போடுவார். நல்லாருக்கும்” என்று ஆரம்பித்து, அதில் என்னென்ன இருக்கும், எப்படி தயாரிப்பார் என்று சொல்கையில் வந்த வேலை மறந்து கூகுள் மேப்பில், இல்லாமல் போன‌ சிட்டி சினிமா எங்கிருக்கிறது என்று நீங்கள் தேடத்துவங்கும் ஆபத்தும் உண்டு. உங்களின் ஆர்வம் எப்படியிருக்கிறது என்பதன் அடிப்படையில் மெல்ல மெல்ல, அக்கா கடைகள், மெஸ்கள், ஓட்டல்கள் என்று மதுரையின் விருந்தோம்பலை விரிவாக்கிக் கொண்டே போவார் உங்கள் நண்பர். இந்நேரம் நீங்களும் அவரை “அண்ணே” என்று அழைக்கத்துவங்கியிருப்பீர்கள். “ப்ரோ” வை என்றோ கண்டுபிடித்து விட்டது மதுரை.

ஒவ்வொரு தெருவிலும் எப்படி இத்தனை காபி வடை கடைகள்? காலை துவங்கி நள்ளிரவு வரை எப்படி விடாமல் எல்லா கடையிலும் ஒரு கூட்டம் எதையேனும் சாப்பிட்டபடியே இருக்கிறது? இன்று நேற்றா? பத்து இருபது ஆண்டுகளாகவா?  போன நூற்றாண்டிலிருந்தா? என்றிலிருந்து தோன்றியது இத்தகையதொரு பழக்கம்? நம்புவதற்கு கடினமெனினும், சங்க காலம் தொட்டு “மதுரைக்காரர்கள்” இப்படித்தான் இருந்திருக்கிறார்கள்! மதுரை மக்களிடம் பிரத்யேக உணவு மரபணுக்கள் ஏதேனும் இருக்குமோ? சொல்ல முடியாது… இன்னும் சில ஆண்டுகளில் ஏதேனும் ஒரு மரபணு ஆராய்ச்சியில், “மதுரை மரபணு” என்றொன்று கண்டறியப்படலாம். அது மனிதர்கள் புழங்கிய மண்ணின் வழியே அவர்களின் “உண்ணும் திறனை” உயிரணுக்களுக்குள் செலுத்தும் என்று விளக்கம் சொல்லப்படலாம். அப்போதும் கூட, மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் அறிவியல் பூர்வமான ஆதாரம் கிடைத்ததை, “இவைங்களுக்கு இப்போதான் தெரியுது மாப்ள” என்று ஏற்றி விட்ட காலருடன் இருவர் காபி அருந்தியபடி பேசிக் கொள்ளக்கூடும் என்பதை, கற்பனை என்று புறந்தள்ள முடியாத மக்கள் வாழ் மதுரை!

“உங்க ஊர் மதுரைங்கறதுக்காக ரொம்ப ஓவரா சங்க காலத்திலேயே இப்படித்தான் இருந்தாங்கன்னுல்லாம் அடிச்சு விடக்கூடாது” என்று நீங்கள் சொல்வது புரிகிறது. அதற்காகத்தான் மாங்குடி மருதனாரை கையோடு அழைத்து வந்திருக்கிறேன். அவருக்கு 2000 வயதுக்கு மேல் ஆகிறது! தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனுக்கு “உலகியல்” விளக்குவதற்காக, “மதுரைக் காஞ்சி” பாடியவர் இவர். “மதுரையின் அன்றைய உணவு அங்காடிகள் குறித்தும் மக்களின் உண்ணும் விருப்பங்கள் குறித்தும் விவரித்து விட்டுத்தான் மன்னனுக்கு சொல்ல வந்த விஷயத்திற்குள்ளேயே நுழைகிறார் அவர். மருதனார் சொன்னால் நம்புவீர்கள் தானே?

மதுரையின் நான்கு பெருவீதிகளிலும் (மாசி வீதிகள்?) நடந்த உணவு விற்பனைகளையும் அதை உண்ணும் கூட்டத்தையும் விளக்கும் மருதனார் பாடல் பாருங்கள்:

"பெருநா ளிருக்கை விழுமியோர் குழீஇ	
விழைவுகொள் கம்பலை கடுப்பப் பலவுடன்
சேறு நாற்றமும் பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேமாங் கனியும்
பல்வே றுருவிற் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி	
மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகும்
அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேரூன் சோறும்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயி னுகர..."

“நல்லா கேக்கறாங்யப்பா டீடெயிலு” என்பது வடிவேலுவின் காமெடி மட்டுமல்ல. மதுரை மக்கள் டீடெய்ல் விரும்பிகள். அது தெரியாதவரா மாங்குடி மருதனார்? “இனிப்பு விற்றார்கள்” என்று மேம்போக்காய் சொல்லிவிட்டு நகரவில்லை. “அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்” என்கிறார். கடிகை என்றால் இனிக்கும் கட்டி. தேனைக் கட்டியாக்கி அமிர்தம் போன்ற சுவையுள்ள கடிகையாய் விற்றார்கள் என்கிறார். பள்ளிகளின் வாசல்களில் விற்கப்பட்ட “தேன் மிட்டாய்” நினைவில் வந்தாலோ, திருவிழாக் காலங்களில் விற்கப்படும் “ஜவ்வு மிட்டாய்” நாவில் நின்றாலோ, மாங்குடி மருதனார் தயவில் நாம் சொல்லிக் கொள்ளலாம், “நாங்கல்லாம் மதுர காரங்ய”. 

“கீரை வகைகள் கிடைத்தன” என்பதற்கு, “கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகும்” என்று கவித்துவமான டீடெய்ல் கொடுக்கிறார். கொண்டல் என்றால் மேகம். அடகு என்றால் கீரை வகைகள். மெல்லிய சிறிய அழகிய இலைகள் உடைய கீரை. இப்போதுள்ளது போல் மருந்து அடித்து வளர்ந்த கீரை அல்ல. மழை வளர்த்த கீரை! “ஆர்கானிக்” என்பதையே மருதனார் மழை வளர்த்தது என்கிறாரோ? . “நான் வெஜ் மீல்ஸ்” கிடைத்தது என்பதை “புகழ்படப் பண்ணிய பேரூன் சோறும்” என்கிறார். அதாவது உண்டவர்கள் புகழும் வண்ணம் சமைக்கப்பட்ட  இறைச்சி நிரம்பிய சோறு கிடைத்ததாம். இப்பாடலை “இன்சோறு தருநர் பல்வயி னுகர” என்று முடிக்கிறார். அதாவது பலவகையிலும் உண்டு மகிழும் வண்ணம் சோறு வகைகளை பரிமாறிக் கொண்டே இருப்பார்களாம். அப்போதே இருந்திருக்கிறது “அன்லிமிடட் மீல்ஸ்”!

இத்தகைய மீல்ஸ் கிடைக்கும் இடங்களை மதுரைக் காஞ்சிக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் “சோறிடுஞ்சாலைகள்” என்கிறார். அதாவது இன்றைய மெஸ், ஓட்டல்களின் அன்றைய வடிவம்.

இப்படி தெருவெங்கும் உணவு விற்பனை நிகழ்ந்தால் அந்த இடம் எப்படியிருக்கும்? அதை அறிய மருதனாரை நாட வேண்டியதில்லை. மாலை நேர மாசிவீதிகளை சுற்றியும் குறுக்குத் தெருக்களின் வழியாகவும் நடந்தால், அங்கு நாம் காணும் ஆரவாரமே போதும். 

நீங்கள் தொல்மதுரையில் பிறந்திருக்க வேண்டியதில்லை. அங்கு வளர்ந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. மதுரைக்குச் செல்லும் பொழுது, மாங்குடி மருதனார் பாடிய வீதிகளில் நடந்தபடி, ஒரு தெருவில் பஜ்ஜியும், அடுத்த தெருவில் ஆமை வடையும், ஆவி பறக்கவொரு காபியும்,  அதிர்ஷ்டமிருந்தால் தட்டுப்படும் பீமபுஷ்டி அல்வாவையும், அதன் சுவை அடங்குமுன் ஒரு ஜிகர்தண்டாவும், கிடைக்கும் இடைவெளியில், பொட்டலத்தில் கட்டப்பட்ட சுண்டல் கலவையை வாயில் போட்டபடி, “கட்டபொம்மன் குடித்தது” என்ற விளம்பரத்துடன் வண்டியில் விற்கப்படும் பருத்திப் பால் பருகிவிட்டு நகரத்து மையப் பகுதியை ஒரு சுற்று சுற்றியபின், “இன்றைய பொழுது ஏன் நன்றாக இருப்பது போலிருக்கிறது” என்ற மகிழ்ச்சி தோன்றும் நொடியில், நீங்களும் சொல்லிக் கொள்ளலாம் “நாங்கல்லாம் மதுர காரய்ங்க…”!

பி.கு: மிளகாய் கடித்தபடி கேழ்வரகு கூழ், நெய்பொடி தோசை, மசாலா பால், மலைப்பழம்,தேங்காய் பன், கேரட் கேக் என்று எத்தனை ஐட்டம் இருக்கிறது பட்டியலிட… விட்டு விட்டீர்களே என்று பலரும் செல்லமாக கோபிக்கலாம். மதுரைக்காரர்கள் கோபத்தில் எப்போதும் நியாயம் இருக்கும் அல்லவா?

2 Replies to “நாங்கல்லாம் மதுர காரங்ய…!”

  1. இப்பவே மதுரைக்குப் போகும் ஆவலை எழுப்பி விட்டுவிட்டீர்களே! சாப்பாடு தவிர மீனட்சியம்மன் கோவில் கடைகளில் கலர் கலரான கண்ணாடி வளைகள், கோவில் வாசலில் நூறு இருநூறு என எண்ணிக்கையில் வாங்கும் மதுரைமல்லி…. அப்பாடா, சொக்கிப் போவோமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.