தெய்வநல்லூர் கதைகள் – 7

This entry is part 7 of 10 in the series தெய்வநல்லூர் கதைகள்

பிரேம் எங்கள் அணியில் இணைந்தது குறித்து எங்கள் அணியினர் அனைவருக்கும் ஒரு கலவையான உணர்வே இருந்தது. நான், சிவாஜி,  டொம்ப்ளி, டும்ரீக்கோல், அமுக்கு டப்பா  ஆகியோர் “கொற்றவைக்கு இட்டெண்ணி தலை கொடுக்கும் “ எயினர் உணர்வும், நியூஸ், யக்கா, கிடா, சேமியா, ஈத்தக்குச்சி  ஆகியோர் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு உணர்வும் , மு மாரியப்பன், ஊளப்பால், முட்ட ஆகியோர் மூன்றில் ஒரு பங்கு ஆதரவு உணர்வும் கொண்டிருந்தனர். பிற உறுப்பினர்கள் பிரச்சினைகள் அடிப்படையில் ஆதரவு எனும் நிலைப்பாடு எடுத்தனர். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நாங்கள் வெறுமே தகவல் சேகரிப்பு மட்டுமே செய்து வந்த நாட்களில் மு மாரியப்பன் தலைமையில் உள்வட்டக் குழு ஒன்று உருவாகி தங்கள் அதிருப்தியை தெரிவித்தபடியே இருந்தது. தெண்டில் குழுவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டாலும் பிரேம் தொடர்ந்து அறிக்கை கேட்டு அதிகாரம் செய்வதுதான் சொல்லப்படாத காரணமாக இருந்தது. குறிப்பாக மு மாரியப்பன் ஆண்டிற்கு இருமுறை மட்டுமே அவர் அப்பா வேலை பார்க்கும் கடையிலிருந்து கொண்டு வரும் பொரிகடலை எனப்படும் பொட்டுக்கடலையை மொத்த குழுவுக்கும் அளிக்காமல் உள்வட்டக் குழுவினருக்கு மட்டுமே அளித்து  அத்தகவலை எங்களுக்குக் கசிய விட்டதன் வழியே  தன் அதிருப்தியை அழுத்தமாகப் பதிவு செய்தார். மு மாரியப்பன் அப்பா வேலை செய்யும் மளிகைக் கடையின் உரிமையாளர் ஆண்டிற்கு இருமுறை இறைவழிபாட்டுக்கு ( குலதெய்வக் கோவில் கொடை  மற்றும் திருச்செந்தூர் தரிசனம்) பணியாளர் பொறுப்பில் கடையை விட்டுவிட்டு  செல்வார் என்பது ஈண்டு ஒரு தகவலாக மட்டுமே பதியப்படுகிறது.  

முன்பே நாம் பார்த்தபடி கோனாக்கமார் தெரு, கழுநீர் ஓடைத்தெரு ஆகியவை அடுத்தடுத்து அமைந்து பஜார் தெருவையும், ராஜபாளையம் சாலையையும் இணைக்கும். சாலைக்கு மறுபுறம் வயல்களும், சிற்சில கடைகளும், பேருந்து நிலையத்தை ஒட்டிச் செல்கையில் உயர்ந்த பெரிய மசூதியும் இருக்கும். இதில் மேற்சொன்ன இரு தெருக்களும் சாலையில் இணையும் மறுபுறத்தில்  செண்பக விநாயகர் ஏகாந்தமாக இருப்பார். அவர் பீடத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட சதுர வடிவ திண்ணைக் கற்களில் வடக்கு பகுதியும், மேற்குப் பகுதியும் நாங்கள் கோலிக்காய் கொண்டு  விளையாடும் விளையாட்டான “எக்கான் குழி”(இன்றைய கிரிக்கெட் மைதானங்களின் பிட்ச் போன்றது என அறிக)  மைதானங்களாக விளங்கி வந்தன. வடக்குப் பகுதி சற்றுத் தேர்ந்த வீரர்களுக்கான “டாங்கன்/டாங்கென்” காய்களைத் தாங்கும் விதத்தில் அகலமான ஆறுகுழிகள் கொண்ட , நாலுகால் “அத்தம்” வரையறுக்கப்பட்ட “பிட்ச்”. ஆட்டத்துக்கு மூன்று காய்கள் அல்லது ஒரு டாங்கென் என பணக்காரப்  பந்தயக்காரர்கள் விளையாடும் மைதானம். மேற்குப் பகுதி சாதாரண கோலி கொண்டு இரண்டு கால் அத்தத்தோடு நாலு குழிகள் கொண்ட சிறிய  “பிட்ச்”. ஆட்டத்துக்கு ஒரு கோலிக்காய் மட்டுமே பந்தயமாக்கப்படும் சிறார்களுக்கான மைதானம் இதுவென அறிக.  சமயங்களில் சற்று பெரிய அண்ணன்மார்கள் வடக்கு எக்கான் குழியில் காசு வைத்தும் ஆடுவதுண்டு. அதிலும் மாடு மேய்க்கும் நாயக்கமார் தெரு கோவிந்தண்ணன் “தோப்புக்கு” (தோற்பு) வரக்கூடாது என விநாயகரை வேண்டிக்கொள்வோம். அந்த அண்ணன் மட்டும் ஜெயிப்புக்கு வந்தால் எங்களுக்கு பழைய நாலணா வடிவ பிஸ்கட்டுகள் வாங்கி அளிப்பதால் அவர் தோப்புக்குப் போகக்கூடாது என வேண்டிக் கொள்வோம். 

இங்கு ஒரு மாலையில் கிடாவும், உப்புக் கண்டமும் எக்கான் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோதுதான் தெண்டில் குழுவின் முறைகேடு சம்பந்தமான முதல்  துருப்பு (துப்பு) எங்களுக்கு கிடைத்தது.   இங்கு ஒன்றைச் சொல்லியாக வேண்டும். எங்களது இரு குழுக்களும் எதிர் எதிர் தரப்பாக இருந்தாலும் ஒருவரையொருவர் முறைப்பதோ, பேசாமல் இருப்பது போன்ற சிறுபிள்ளை விளையாட்டுக்களிலோ ஈடுபடுவதில்லை. அணிகளின் உறுப்பினர்களிடையே இருக்கும் தனிப்பட்ட உறவிலும் தடை சொல்வதில்லை. ஆகவே கிடாவும், உப்புக்கண்டமும் ஒன்றாக விளையாடியது உங்களுக்கு வியப்பளிக்க வேண்டாம். அன்று தனக்கு கைராசியான “சொட்டி” விடுவதற்கு வைத்திருக்கும் மூக்குப்பொடி டாங்கன் காயை பந்தயத்தில் கிடாவிடம் இழந்த சோகத்தில் இருந்த உப்புக்கண்டம் விளையாட்டுத் திறமையால் அதை உடனே மீண்டும் வெல்ல முடியாதவரானார். பயின்று வந்த பரம்பரை மரபார்ந்த விதிகளின்படி போதிய வெளிச்சம் இல்லாததால் அன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது. மறுநாள் தான் வருவதற்குள் கிடா வேறு எவரிடமாவது ஆட்டத்தில் மூக்குப்பொடி டாங்கனை இழந்துவிட்டால் என்ன செய்ய எனப் பதட்டமடைந்த உப்புக்கண்டம் அரங்கிற்கு வெளியே ஒப்பந்தம் ஒன்றை ( ஏல கடா, அது எனக்கு ராசியான சொட்டி காய்ல, அத மட்டும் திருப்பி கொடுத்துருல, மூணு மயில்கண்ணு காய் தாரேம்ல, கொடுத்துருல – உப்புக்கண்டத்தின் தழுதழுத்த குரல்) கிடாவிடம் முன்மொழிந்தார்.  மறுநாள் யோசித்து சொல்வதாகச் சொன்ன கிடா தற்காலிகமாக நாளை மாலை வரை மூக்குப்பொடி டாங்கனை பந்தயம் வைத்து ஆடுவதில்லை என மட்டும் உறுதி அளித்தார். காலையில் பிரேமிடம் இத்தகவல் சொல்லப்பட்டதும் பிரேம் சிவாஜியை மட்டும் தனியே அழைத்துச் சென்று மூன்றரை நிமிடங்கள் உரையாடினார். சிவாஜி திரும்பி வந்து கிடாவிடம் பதினாறு நிமிடங்கள் உரையாடினார். 

அன்றைய மாலையில் உப்புக்கண்டம் ஆவலுடன் ஒப்பந்தம் குறித்த இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கு வந்தபோது எளிதில் ஒப்பந்தத்துக்கு உடன்படாத கிடா அவர் தந்தையாரின் தனித்திறனான “ஒற்றை வீச்சில் இரட்டைத்தலைகள்” எனும் உத்தியைக் கடைப்பிடித்தார். அதன்படி உப்புக்கண்டத்தின் மூக்குப்பொடி டாங்கன் கிடாவால் வேறு எவருடனும் பந்தயமாக வைத்து ஆடப்படாது. தெண்டில் குழுவின் விதிமீறல்களில்   ஒன்றை  கிடாவிடம் ரகசியமாக வெளிப்படுத்தி கூடவே ஐந்து சாதாகாய்களையும் கொடுத்தால் மூக்குப்பொடி டாங்கனை கிடா திரும்பத் தந்து விடுவார். கிடா கருப்பசாமியின் உரைவீச்சுக்கு உப்புக்கண்டம் ஹக்கிம் தன் இரு தலைகளையும் இழந்த காதை இது என்க.   

உப்புக்கண்டம் தன் டாங்கன் காய் மீதிருந்த மையலால் கூடுதல் தகவலாய் சொன்னது தெண்டில் கோஷ்டியாரும் எங்களை உளவு பார்ப்பது. பிரேம் விநாயகர் அகவல் விஷயத்தில் தன்னைத் தோற்கடித்தபோதே தெண்டில் அவரைக் கட்டம் கட்டி விட்டார். ஆனால் ஆசிரியர்களிடம் பிரேம் எடுத்த நற்பெயர் எனும் கேடயத்தின் முன் தெண்டிலாரின் அம்புகள் முனை முறிந்து விட்டன ( எலே செந்திலு,  பிரேம் வீட்டுப்பாட நோட்டை எங்கல? கையெழுத்து போடல்லன்னா வீட்டுக்கே வந்துல்லா கேப்பான் – பிரேமின் வீட்டுப்பாட குறிப்பேட்டை மறைக்க முயன்றபோது முத்துசாமி சாரால் முனை முறிக்கப்பட்ட படலம்). அதைத் தொடர்ந்து செந்திலாரும் பிரேம் போலவே பாடங்களில் சந்தேகம் கேட்க ஆரம்பித்தார். ஆனால் பல நேரங்களில் அது மயிலாடக் கண்ட கோழி கதையாயிற்று. ( ”ஏல மூதி, ஆஸ்பத்திரி சுவத்துல செவப்பா வரைஞ்சிருக்கது செங்கோண முக்கோணமான்னா  கேக்க, ஆக்கங்கெட்ட கூவ, கேக்காம்பாரு கேள்வி” – கணித ஆசிரியை யோகாம்பாள் டீச்சர்). வழக்கமாக தண்ணீர் பானைக்கு வரிசையில் நிற்கையில் வேண்டுமென்றே தன் அணியினரை வரிசையில் எங்களுக்கு முன்னால் நிற்கவைத்து எங்களைத் “தண்ணி தவிக்க” விடும் வேலையும் பிரேமிடம் நடக்கவில்லை, அவன் தனியாகத் தண்ணீர் கொண்டுவந்து விடுவதால்.    ஆசியஜோதி அணியினர் பிரேமை நெருங்குவதை குறிப்புகளால் உணர்ந்த தெண்டில் சிங்கி (சரவணகுமார்), ஓட்டக்கை (மந்திரமூர்த்தி) ஆகியோரை அனுப்பி பிரேமை நடுநிலை வகிக்குமாறு மிரட்டி வரச் சொல்லியிருக்கிறார். இங்குதான் ஓட்டக்கை ஓட்டவாயாக மாறிய விதி விளையாடல் நடந்தது. 

பிரேம் முதலில் செந்தில் அணியில் இணைவதாகவே இருந்திருக்கிறார். காரணம் அவர்கள் தெண்டில் தலைமையில் உமையொருபாகன் கோவிலுக்கு வெள்ளி தோறும் செல்லும் வழக்கத்தில் இருப்பதும், தெண்டில் கொண்டுவரும் திருநீறை அவர்கள் அணியினர் அனைவரும் தினமும் காலை நெற்றியில் அணிந்து கொள்வதும் அவரைக் கவர்ந்திருந்தது. ஆனால் ஓட்டக்கை அதன் காரணத்தை பறைசாற்றியதும் பிரேம் ஆர்வமிழந்து விட்டிருக்கிறார் – “அது பைரவர்ட்ட  வச்சி வாங்கிட்டு வந்த திருநூறு , அத வச்சிக்கிட்டோம்னா நம்மள எந்த நாயும்  வெரட்டாது,கடிக்காது.” அடுத்ததாக, சிங்கி சொன்ன நடுநிலை ஒப்பந்தத்துக்கான முக்கிய ஷரத்து பிரேமை விலக்கம் கொள்ள வைத்து விட்டிருக்கிறது – “பொம்பளப் புள்ளயள்ட்ட இருந்து எடுக்க பண்டத்துல ரெண்டுநாள் மட்டும் ஒனக்கும் பங்கு உண்டு.” இவை இரண்டையும் விட அக்ரஹாரத்திலிருந்து வரும் மீனா மாமியிடம் ஓதுவார் சொல்லிய தகவலாலும் பிரேம் வெள்ளியன்று தனியே கோவில் செல்வதிலிருந்து அவர் அம்மாவால் தடுக்கப்பட்டிருந்தார் (இந்த ராமையா வெருவாக் கெட்ட வேலையா பண்றான் பாருங்க மாமி, அவம் பையன் ஸ்கூல் பசங்கள வெள்ளிக் கெழமையான கோவிலுக்குக் கூட்டிட்டு வந்து சுண்டல் வாங்கித் தாறான். சரி போறாம்னு விட்டா, அவங்கல்லாம்  சங்கத்து உறுப்பினர்கள்ங்காம். 11,12 வயசுப் பயலுவ சங்கத்தக் கண்டானுவாளா, சுண்டலக் கண்டாணுவளா – ஓதுவார் கோமதிநாதப் பிள்ளையவர்கள் கோவில் அறநிலையக் குழு உறுப்பினரான மீனா மாமியிடம் அளித்த அலுவல் சாரா வாய்மொழி புகார் : சாட்சி – தல விருட்சமான புளிய மரத்தின் தென்மேற்குக் கிளை). 

 பிரேம் எங்கள் ஆசியஜோதி அணியில் இணைந்தபோதே இனி பண்டங்களை சுங்கமாகப் பெறும் பணி கூடாதென்றார். மு மாரியப்பன் கோஷ்டியாருக்கு அதிலும் பிரேம் பேரில் வருத்தம். ஆனால் நாங்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றி தலைமைப் பொறுப்புக்கு வந்ததும் அதற்கொரு தீர்வு செய்வதாகவும் பிரேம் வாக்களித்திருந்தார்.  ஆகவே சுங்கப் பண்டப் பிரசினை ஒரு தற்காலிகத் தீர்வுக்கு உட்பட்டிருந்தது. 

தெண்டில் கோஷ்டியாரின் முறைகேட்டை அம்பலப்படுத்துவதற்கு முன்னர் ஒரு முக்கியமான ஆளை அறிமுகம் செய்ய வேண்டியிருக்கிறது. ஆறாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுக்கு சற்று முன்னர் வந்து சேர்ந்த பிரேம் போலவே முழு ஆண்டுத் தேர்வுக்கு மூன்று மாதங்கள் இருக்கையில் பள்ளியில் வந்து சேர்ந்த அம்மையார் சங்கீதா. எங்கோ மெட்ராஸ் போன்ற வெளிநாடுகளில் இருக்கும் பெண்கள் வைத்துக்கொள்ளும் பெயரில் ஒரு “புள்ள” எங்கள் வகுப்பில் என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. அதுவரை ரமா, வித்யா, ஜெயா, கலா ஆகிய பெயர்களையே நவநாகரிக பெயர்களாகக் கொண்டிருந்த நாங்கள் அதிர்ச்சியும், பெருமையும் ஒருசேர அடைந்தோம். பெயரில் மட்டுமல்லாமல் செயல்பாடுகளிலும் சங்கீதா தசநாகரிகமாக இருந்தார். நாகர்கோவிலை சொந்த ஊராகக் கொண்ட மலையாளக் குடும்பம் என்பதாலும், தந்தையார் மின்வாரிய அதிகாரி என்பதாலும் அம்மையார் “மேனி ஒளி மான” விளங்கினார். பிரேமை விட மஞ்சளும், சிவப்பும் கூடிய நிறத்தில் மானுட பிறவி ஒன்று தெய்வநல்லூர் தெருக்களில் நடமாட முடியும் என்பதை சங்கீதா நிரூபித்தருளினார். எட்டாம் வகுப்பு அண்ணன்கள் மட்டுமல்லாமல் கோவிலுக்கு அருகே தள்ளியிருந்த மேல்நிலைப்பள்ளி பெரியண்ணன்களும் எங்கள் வகுப்புக்கு அருகில் நடமாட ஆரம்பித்த ரகசியம் அப்போது எங்களுக்குப் புதிதாக இருந்தது. யோகாம்பாள் டீச்சரும், பாலகனி டீச்சரும் சங்கீதாவின் தலைப்பின்னலை இழுத்துப்பார்த்து, பின்னலை அவிழ்த்து கை விட்டளைந்து சோதித்த ரகசியத் தகவல் பாண்டியம்மாளால் பரவியது. சுருக்கமாக சொன்னால் சங்கீதா எதுவும் செய்யாமல் “சும்மா இருத்தலும் அம்மாபொருளென “ அறிந்தவராக அமைந்துதன்  முயற்சிகளால் பிரேம் பெற்ற சிறப்பிடத்தை வெகு எளிதாகப் பெற்றார். அவர் அருகில் அமர “பொட்டப்புள்ளகளிடம்” நிலவிய கடும்போட்டி கண்டு பிரேம்   எரிச்சலுற்றார். சங்கீதா பாடங்களில் சந்தேகம் கேட்பதில்லை என்றாலும் வகுப்புத் தேர்வுகளில் பிரேமுக்கு கடும் போட்டியாளராக இருந்தார். தான் முயன்றும் முடியாத இடத்துக்கு சங்கீதா சென்ற நேர்த்தி தெண்டிலார் கவனத்தை ஈர்க்கவே சங்கீதாவுக்கு அவர்கள் அணியினரால் சிறப்புக் கவனம் தரப்பட்டது. அதில்தான் முறைகேட்டை உப்புக்கண்டம் கண்டறிந்து வந்து சொன்னார்.     

உப்புக்கண்டம் சொன்ன விதிமீறலை சரியாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமெனில் வீட்டுப்பாடக் குறிப்பேடுகளை ஆசிரியர்கள் திருத்திக் கையெழுத்திடும் பணியில் முன்பு எங்கள் அணியினர் வசம் இருந்த, தற்போது தெண்டில் கோஷ்டியாரிடம் இருக்கும் பங்கு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் வீட்டுப்பாடக் குறிப்பேட்டைத் திருத்தும் பணி எவ்வாறு வழமைக்கு வந்தது என்ற மறைக்கப்பட்ட வரலாறையும் தெரிந்து கொள்ள வேண்டும். 

(தொடரும்)

Series Navigation<< தெய்வநல்லூர் கதைகள் – 6தெய்வநல்லூர் கதைகள் -8 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.