ஜீவன ஸ்ரவந்தி: தெலுங்கு இலக்கியங்கள்

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

1960ல் வெளிவந்த ராகஜலதி நாவலின் உள்ளே, இந்த நாவலின் எழுத்தாளர் லதா எழுதிய இதர நாவல்கள் என்ற தலைப்பின் கீழ் ஆறு நாவல்களின் பெயர்களை    குறிப்பிட்டிருந்தார்கள். அவற்றில் ஒன்று ஜீவன ஸ்ரவந்தி. மூன்று தலைமுறை வாழ்க்கையைச் சுற்றி இந்த நாவலின் கதை நகருகிறது.

1900 ம் ஆண்டு ராஜா பிறந்ததில் தொடங்கி அவனுடைய மகளுக்குத் திருமணமாகி அவள் ஒரு குழந்தைக்குத் தாயானதோடு கதை முடிகிறது. நாற்பது, ஐம்பது  ஆண்டு கால ஓட்டத்தின் மீது விரிவாக நடக்கும் கதை இது. ராஜாவுக்கு ஐந்து வயது, 1910, ஒத்துழையாமைப் போராட்டத்தில் படிப்பை விடுவது முதலான குறிப்புகள் மூலம் கதை நடந்த காலம் குறித்து எழுதி வந்த ஆசிரியர் பாரத தேசத்திற்கு சுதந்திரம் வந்ததைப் பற்றி குறிப்பிடவில்லை என்பதால் இந்தக் கதை 1947க்குள் முடிந்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.

ராஜா, ராஜாவின் தந்தை பிரசாதராவு, அவருடைய தந்தை கிருஷ்ணய்யா இவை மூன்று தலைமுறைகள். இந்த மூன்று தலைமுறை ஆண்களுக்கு பெண்களோடு இருந்த தொடர்புகளில் உள்ள தனித்தன்மையை அடையாளம் கண்டு அதைப்பற்றி விமர்சிக்கும் வெங்கட்ரத்தினம் ராஜாவுக்கு அத்தை மகன்.

1900 ல் இரு இளம் வயது மகன்களின் தந்தை கிருஷ்ணய்யா. பெரிய மகன் பிரசாதராவுக்குத் திருமணமானது. அவனுக்கு ஒரு மகளும் மகனும். இரண்டாவது மகன் படித்துக் கொண்டிருந்தான். திருமணமும் நடந்தது. கிருஷ்ணய்யாவுக்கு அந்த வயதிலும் வாழ்வில் சிருங்காரத்திற்கு முக்கியத்துவம் இருந்தது. மனைவி ராமம்மாவிடம் ஈர்ப்பும் காதலும் அதிக அளவு இருந்தாலும் கிருஷ்ணய்யாவுக்கு  சபாரஞ்சனி என்ற விலைமகளோடு சேர்ந்து வாழும் அளவுக்குத் தொடர்பு இருந்தது. அவளிடமும் காதலுக்கும் ஈர்ப்புக்கும் குறைவில்லை. அவளோடு அவனுக்கு இருந்த தொடர்பு குறித்து ராமம்மாவுக்குத் தெரியும். சபாரஞ்சனி அவனைத் தேடி வீட்டுக்கு வரும்போது சாதாரணமாக வரவேற்கிறாள். விருந்து  உபசாரம் செய்கிறாள். சபாரஞ்சனி அவனுக்குக் கட்டுப்பட்டு இருந்தாள். ஒரே  மகனை டாக்டருக்குப் படிக்க வைத்தாள். கிருஷ்ணய்யா மரணப் படுக்கையில் இருந்தபோது பார்ப்பதற்கு வந்து அவனுடைய பாதங்களிலேயே உயிரை விட்டாள்.

கிருஷ்ணய்யா, மனைவி ராமம்மாவோடும் சபாரஞ்சனியோடும் வாழ்ந்த  முறையை சுவையாக எழுதி அவனுடைய ரசிகத்  தன்மையையும் சாமர்த்தியத்தையும் பற்றிக் கூறுவது போல காட்சிப்படுத்திய முறையைப் பார்க்கையில், அப்படிபப்ட்ட வாழ்க்கை முறை ஏற்கத் தக்கதே. அதைப் பார்த்து பிறரும் அதுபோல் நடந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது.   மனைவியையும் காதலியையும் இரு கண்களாக பார்த்துக் கொண்ட உத்தமன் என்று அவனைப் பற்றி கூறி, வெங்கட்ரத்தினம் அவனைப் புகழ்கிறான்.

பிரசாதராவு தன் குலமல்லாத பெண்ணான பாஷா என்பவளைக் காதலிகிறான். அவளுடைய தந்தை தன் நண்பனுக்கு அந்தப் பெண்ணை திருமணம் செய்ய   தீர்மானித்துள்ளார் என்று தெரிந்து உள்ளுக்குள் மனம் வருந்துகிறான். அவளே வந்து, நான் உன்னைக் காதலிக்கிறேன். நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறிய போது, தைரியம் இல்லாமல் அவளை இழக்கிறான். பெற்றோர் பார்த்துச் செய்த திருமணத்திற்குக் கட்டுப்பட்டு சம்சாரம் செய்து குழந்தைகளுக்கு தந்தையாகிறான்.

ஆனால் பாஷாவின் மீது அந்தரங்கத்தில் இருந்த தீராத காதல் காரணமாக மனைவியை மனப்பூர்வமாக விரும்ப முடியாமல் போகிறான். மருமகள் இறந்த பின்பு வெங்கட்ரத்தினத்திடம், “பிரசாதராவு கூட மனைவியை காதலிப்பது போல் நடித்தானே தவிர அவள் மீது அன்பு செலுத்தவில்லை” என்று ராமம்மா கூறுவது அதனை திடப்படுத்துகிறது.

ராஜாவும் வராலு என்ற பெண்ணால் ஈர்க்கப்பட்டான். அவளோடு சேர்ந்து வாழ்ந்தான். ஆனால் பெற்றோர் தீர்மானித்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். அதோடு அவன் நிற்கவில்லை. புதிய புதிய பெண்களோடு அறிமுகமும் தொடர்பும் அவனுடைய பொழுதுபோக்காக இருந்தன. அவை அவனைக் குடிப் பழக்கத்தின் பக்கமும் போதை மருந்தின் பக்கமும் எடுத்துச் சென்று அவனுடைய வாழ்க்கையை அழித்தன.

தாத்தா, தாய்மாமா இருவரும் இறந்த பின்பு ராஜாவைப் பார்த்துக்கொண்டு அவனுடைய இறப்புக்குப் பிறகு அவனுடைய குழந்தையை வளர்த்து திருமணம் செய்யும் பொறுப்பை தோளில் சுமந்தவன் வெங்கட்ரத்தினம். இந்த மூன்று தலைமுறைகளின் வாழ்க்கை நாடகத்திற்கு தான் ஒரு பார்வையாளன் என்று எண்ணுகிறான் அவன். இந்த மூவரில் தாய்மாமன் மட்டும் அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று தீர்ப்பு கூட கொடுக்கிறான். பெண்களின் இன்பத்தை தந்தையும் மகனும் அனுபவித்தது போல அவன் அனுபவிக்க முடியாமல் போனான் என்றும் பழமைக்கும் புதுமைக்கும் இடையில் இருக்கும் பள்ளத்தில்  விழுந்து வாழ்க்கையை அர்த்தமில்லாமல் கடந்து விட்டான் என்றும் அவன் மீது அனுதாபப்பட்டான். இந்த பார்வையாளன் கதாபாத்திரத்தை அவன் எதற்காக ஏற்றுக் கொண்டானோ புரியவில்லை. அவன் ஒரு எழுத்தாளன் ஆனதாலா?    அப்படி ஒரு பதில் இருந்தால் அது திருப்திகரமானது அல்ல. அவன் அந்த பாத்திரத்தை ஏற்றதால் குடும்பத்தில் எதிர்கொண்ட மோதல்கள் கூட எதுவும் இல்லை.

தாய்மாமனும் ராஜாவும் தம் வாழ்க்கையை கதையாகவோ நாவலாகவோ எழுத வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அவனுக்குக் கூறி வருகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் இலக்கியம் ஆகக் கூடிய மோதல்கள் ஏதாவது இருக்கிறதா என்பது மற்றும் ஒரு கேள்வி. வெங்கட்ரத்தனம் தன்னால் செய்ய முடியாத வேலையை மகளைச் செய்யச் சொல்வதோடு நாவல் முடிகிறது.

ஆண்களின் சிருங்கார லீலைகளும், காதல் விவகாரங்களும் தோல்விகளும் இழப்புகளும் ஒரு பக்கம் இருக்க, அவற்றின் தாக்கம் பெண்களின் வாழ்க்கை மீது எவ்வாறு இருந்தது என்பதே உண்மையான கதையாகியிருக்க வேண்டிய விஷயம். அந்த உணர்வு ஆசிரியை லதாவுக்கு இருந்தாற்போல்தான் தெரிகிறது. கிருஷ்ணய்யாவின் மனைவி ராமம்மா, சிருங்கார பிரபந்தங்கள், இராமாயணாம், மகாபாரதம் எல்லாம் நன்றாகப் படித்தவள் என்றும் கணவன் என்றால் அவளுக்கு உயிர் என்றும் மகா ரசிகனான அவனுடனான வாழ்க்கை அவளுக்கு தினமும் புதுமையாக இருந்தது என்றும் அவனால் அவள் என்றுமே கஷ்டப்படவில்லை என்றும் ஆசிரியை எழுதுகிறார்.

நிதானமும் இறுமாப்பும் அவளுடைய முகத்திலும் நடத்தையிலும் இருந்தன என்று கூட கூறப்படுகிறது. ஆனால் கதையின் ஒரு பகுதியாக அந்த வம்சத்தாரின்  பொய் கௌரவத்தின் மீதும், ஆடம்பரத்தின் மீதும் அவளுக்கு எல்லையில்லாத   வெறுப்பு என்றும் சின்ன மகனுக்குத் திருமணமானால் வரப்போகும் மருமகளின்  துரதிருஷ்டத்திற்கு அவளும் பெரிய மருமகளான ராஜலக்ஷ்மியும் ரகசியமாக பெருமூச்சு விட்டார்கள் என்றும் கூறுகிறார் ஆசிரியை.

இந்த முரண்பாடான நிலைக்குக் காரணம் என்ன? “வெளிப்படையாகத் தெரியும் இந்த அமைதியான வாழ்க்கைக்கு அடியில் எத்தனை அமைதியின்மை கூடு கட்டிக் கொண்டிருந்ததோ. ஆனால் அந்த விஷயம் யாருக்கும் தெரிந்துவிடாமல் கவனமாக இருந்தார்கள்” என்று மாமியார் மருமகள் இருவரையும ஒரே இடத்தில், ஒரே அனுபவத்தில் நிறுத்திக் கூறிய சொற்கள், கதையானாலும் நிஜ வாழ்க்கையானாலும் பெண்களின் இதயக் கதவுகளை மூடி உள்ளுக்குள் இறுக்கமாக அழுத்தி வைத்த கவலை மூட்டைகளைத் திறக்கும் சாவியாக வேண்டும்.

கணவன் மீது அவளுக்கு உயிருக்குயிரான பிரியம் இருக்கலாம். ஆனால் அவன் மற்றொரு பெண்ணோடு பகிரங்கமாக தொடர்பு வைத்துக்கொண்டு வீட்டுக்கும் படுக்கை அறைக்கும் அவள் சுதந்திரமாக வந்து போகும் அளவுக்கு உரிமை கொடுத்ததைக் கண்டு ராமம்மாவின் மனம் துடித்திருக்காதா? ஆனால் கணவன் சிறந்த ரசிகன் என்பதால் அவள் அதைப் பாராட்டுகிறாள். சம்மதிக்கிறாள். அவள் தன்னுடைய பொறாமையை அடக்கி கொள்ள வேண்டும். அவனுடைய நடத்தையால் ஏற்படும் வேதனையை விழுங்க வேண்டும். அதனால் ஏற்படும் அமைதியின்மையை மறைத்து வைத்து எல்லாம் சுகமாகவே இருப்பதாகவும் வாழ்க்கைப் பயணம் நிம்மதியாக ஓடுவதாகவும் நடிக்க வேண்டும். இந்த நடிப்பின் உச்சகட்டமாக நிதானத்தையும் ராஜச குணத்தையும் தன் முகத்திலும் நடத்தையிலும் சதா காட்டிக்கொண்டே இருப்பதும் கணவனிடம் சிருங்காரத்தைக் காட்டி நடந்து கொள்வதும் அதன் மூலம், உனக்கு எத்தனை பேர் மேல் காதல்   இருந்தாலும் உன்னிடம் என் அன்பு குறையவில்லை என்று நிரூபித்துக் கொள்வதுமே குடும்பப் பெண்களின் வாழ்க்கையில் வேறு வழியில்லாத கட்டாய தர்மமாக காட்டப்படுகிறது.

அதேபோல் பிரசாதராவுக்கு பாஷாவோடு ஏற்பட்ட தொடர்பு, தந்தை கிருஷ்ணய்யாவுக்கு முழுவதாகத் தெரியாது என்று எண்ணுவதற்கு வழி இல்லை. அவளைப் பற்றிய பதற்றத்தில் தீவிரமாக ஜுரத்தில் விழுந்த மகனை, அந்த காரணத்தாலேயே படிப்பை விட்ட மகனை அவர் என்ன ஏது என்று ஆராயாமல் இருப்பது இயல்பாக இல்லை. தெரிந்து கூட ராஜலட்சுமியைத் தேர்ந்தெடுத்து    மகனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார் என்றால் அது வம்ச கௌரவத்திற்கும் குடும்ப மரியாதைக்கும் தொடர்புடையதாகவே இருக்கிறது. ஆணுக்கு வெளியில் எத்தனை தொடர்புகள் வேண்டுமனாலும் பகிரங்கமாகவோ ரகசியமாகவோ இருக்கலாம். ஆனால் குடும்பத்திற்கு வம்ச வாரிசுகளுக்கு குடும்பப் பெண் ஒருத்தி இருக்க வேண்டும் என்ற சமுதாய ஒழுக்க நீதி ராமம்மாவுக்குப் புரிந்திருந்தது. சபாரஞ்சனியோடு அவனுக்கிருந்த தொடர்பு பகிரங்கமாகவே நடந்தது. அவள் முப்பதாண்டுகளாக மனைவியை விட அதிகமாக அவனுக்கே கட்டுப்பட்டு இருந்ததை அவனுடைய சிறப்பாக உலகம் மதித்தது. வம்ச கௌரவமும் குடும்ப மானமும் எத்தனை பொய் என்பதும் எத்தனை பிரமை என்பதும் சற்றேனும் ஆலோசனை இருப்பவர்களுக்குப் புரியும். அதிலும் ராமம்மா நன்றாகப் படித்த பெண்மணி. விளைமகளானாலும் குடும்பப்பெண் என்று காட்டிக் கொள்வது மட்டுமே கௌரவத்தை அளிக்கும் என்று எண்ணும் சமுதாய இரட்டைப் பாலியல் ஒழுக்கத்தின் மீது வெறுப்புணர்வு அவளுடைய  அந்தரங்கத்தில் மறைந்து இருந்தது என்பதால்தான் அவளுக்கு சபாரஞ்சனியிடம் அசூயை ஏற்பட வேண்டிய தேவை இல்லாமல் போனது. தன்னைப் போலவே அந்த வீட்டுக்கு மருமகளாக வந்த ராஜலட்சுமியிடம் ராமம்மாவுக்கு அதனால்தான் இரக்கம் ஏற்பட்டது.

ராஜலட்சுமியும் தன் கணவன் பிரசாதராவின் மனம் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்தே இருந்தாள். அந்த விஷயம் தெரியாதது போலவும் அவன் தன்னைக் காதலிக்கிறான் என்பதை நம்புகிறாற்போலவும் நடித்துக் கொண்டே அவளுடைய வாழ்க்கை முடிந்து போயிற்று. அனைவரின் தேவைகளையும் பார்த்துப் பார்த்து செய்து வம்சத்தை வளர்ப்பதற்கு ஒரு மகனைப் பெற்று சிறந்த இல்லாளாகப் பெயர் பெறுகிறாள்.

அவள் இறந்த பின்பு ராமம்மா பேரனிடம் கூறிய சொற்கள் கவனிக்கத்தக்கவை. “இந்த வீணாப்போன வீட்டில் அவள் என்ன சுகபட்டாளோ அந்த இறைவனுக்குதான் தெரியும். இந்த வீட்டிற்கு மாடாய் உழைத்தாள். வீட்டில் எல்லோரும் பேசிய வார்த்தைகள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள். இன்னும் ஒன்று என்னவென்றால், பிரசாதராவு கூட அவள் மேல் அன்பு உள்ளது போல் நடித்தானே தவிர அன்பு செலுத்தவில்லை”.

அவர்களின் நடிப்பிற்குத் தகுந்தாற்போல் அன்பைப் பெற்றது போலவும் வாழ்க்கையின் நிறைவை அனுபவித்தது போலவும் பெண்கள் நடிப்பதன் மீதும்    வெளியில் தெரியும் குடும்ப கௌரவத்தின் மீதும் வெறுப்பு, ராமம்மாவுக்குகோ ராஜலட்சுமிக்கோ அவர்களின் மருமகளுக்கோ அல்லது வேற எந்த பெண்ணுக்குமோ ஏற்படுவதில் தவறு ஒன்றும் இல்லை என்று தோன்றுகிறது.

இவர்களின் வாழ்க்கையை இவ்வாறு சித்திரிப்பதன் மூலமும் அந்தரங்கங்களை வெளிப்படுத்துவதன் மூலமும் மருமகள்கள் அடக்கி வைத்துக் கொண்ட துயரங்களும் உள்ளத்திலிருந்து விடும் சாபங்களும் குடும்பத்தில் மேலே தெரியும் அமைதிக்கு பின்னால் மறைந்திருக்கும் வடவைத்தீ என்று நாவலாசிரியை லதா கூறுவது போல் உள்ளது.

சிறுவயதில் திருமணமான பெண்களையும் சிறுவயதில் கணவனை இழந்த பெண்களையும் அவர்களின் உடல் அலங்காரத்தின் மீதும் உண்ணும் உணவின் மீதும் கட்டுப்பாடு விதிக்கிறது சமுதாயம். குடும்ப கெளரவத்திற்குத் தீங்கு விளையும் என்று மறுமணம் செய்து கொள்வதைத் தடுக்கிறது இரட்டை பாலியல் ஒழுக்கம். இவ்விதம் குடும்பங்களில் அமல் செய்யப்படும் அடக்குமுறை பெண்களின் வாழ்க்கையை உள்ளுக்குள் இருந்து எத்தனை இம்சைக்கு ஆளாக்குகிறது என்பதையும் எத்தனை அற்பத்தனத்திற்கு கீழிறங்குகிறது என்பதையும் காட்டுவதற்கு ராஜலட்சுமியின் மகள் பூர்ணாவின் வாழ்க்கையை நாவலின் கதையோட்டத்தில் ஒரு பகுதியாக்குகிறார் லதா.

பூர்ணாவுக்குத் தலையை மொட்டை அடிக்க வேண்டும் என்று கூறிய பாட்டி  உறவுள்ள வைதேஹம்மாவின் கழுத்தை நெரிக்கப் போன ராஜா, அதன் பிறகு  என்றுமே அவளுடைய வாழ்க்கையில் சுகமோ அமைதியோ கிடைத்ததா என்பது பற்றி யோசித்தது போல் தெரியவில்லை. மறுமணம் செய்யும் சாகசத்தைச் செய்ய இயலாத தந்தை, அவள் ஊர் சுற்றுவது குறித்து கேள்வி கேட்க இயலாமல் போனார். முதலில் வெங்கடரத்தினத்தின் புகழ்ச்சிக்கும் அன்புக்கும் கொடுத்துவைத்த பூர்ணா கடைசியில் அவனுடைய இகழ்ச்சிக்கு ஆளாக வேண்டி வந்தது என்றல் அது அவளாக செய்துகொண்ட தீவினை என்று தோன்றினாலும் அந்த திசை நோக்கி அவளை நடத்தியது துஷ்ட சமுதாய சம்பிரதாயங்களே என்று நாம் அடையாளம் காண வேண்டும்.

நீலி நீடலு (நீல நிழல்கள்) என்ற நாவல்

நீலி நீடலு என்ற நாவலும் ராகஜலதி நாவலின் உள்ளே குறிப்பிடப்பட்ட லதாவின் ஆறு நாவல்களில் ஒன்று.

இந்த நாவலை எழுத்தாளர் சலத்திற்கு சமர்ப்பணம் செய்ததாகத் தெரிகிறது. ஆனால் அதன் அடுத்த பதிப்பில் எதனாலோ அதனைக் காணவில்லை. (சூடு, 2013, சாகித்ய பிரசுரம்). வெளிநாட்டில் படித்து வந்து உள்நாட்டில் தேசத்தின் தலைநகரமான டெல்லியில் உயர் பதவி பெற்று எஸ்.ஆர் திரிவேதியாக மாறிய திருவேதுல சீதாராம சாஸ்திரி எட்டு ஆண்டுகளுக்கு முன் குடித்தனம் செய்ய வந்து இரு பிள்ளைகளுக்குத் தாயான மனைவிக்கு, இப்போது படிப்பில்லாத, நாகரிகம் அறியாத மனுஷி என்ற அடையாளத்தைக் கொடுத்து, தனக்கு ஏற்றவள் அல்ல என்று கிராமத்தில் விட்டுவருவதில் இருந்து நீலி நீடலு நாவலில் கதை தொடங்குகிறது.

புஷ்பா என்ற பெண்ணோடு காதல், திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை, ஒருவனுக்கு மனைவியாகி ஒரு மகனுக்கும் தாயான சஞ்சல் என்பவள் மீது மோகம் இரண்டுக்கும் இடையில் தவித்து இறுதியில் எதையுமே பெற முடியாமல் ஒரு பயங்கரமான சந்தர்ப்பத்தில் அவனும் – மகனுக்கு ஏற்றவளாக   மருமகளைத் தயார் செய்ய வேண்டும் என்று மாமனார் அவளைப் படிப்பதற்காக  மதராசுக்கு அனுப்பிய போது, கணவன் தனக்குக் கிடைக்க மாட்டான் என்ற மன வேதனையும், குழந்தைகளை விட்டு இருக்க முடியாத தாய்ப் பாசமும் சேர்ந்து மானசிகமாக பலவீனமாகி, மூர்ச்சை அடைந்து ஸ்ரீராம தியானத்தில் ஈடுபட்டு, அனைத்திற்கும் அப்பாற்பட்டு ஆன்மீகப் பாதையில் பிரவேசித்த ஒரு அற்புதமான சந்தர்ப்பத்தில் அவளும் – இணை கோடுகளாக மீந்து விடுவதை சித்தரிக்கிறது இந்த நாவல்.

காதல், ஈர்ப்பு, மோகம், அழகை ஆராதிப்பது எல்லாம் தற்காலிகங்களே தவிர உலகியல் ஈர்ப்புகளின் பின் சென்று விழுவது வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கும் என்று இந்த நாவலில் எச்சரிக்கிறார் லதா.

ஆணும் பெண்ணும் ஒன்றாகச் சேர்ந்து நல்ல விதமான வாழ்க்கை நடத்துவதே திருமணம். அதுவே உண்மை என்று கிளப் டான்ஸர் சிதாரா மூலம் கூறச் செய்த லதா, அந்த உண்மைக்கு மாறாக நடந்து கொண்டால் இனம் தெரியாத ஏதோ நீல நிழல் பரவி வாழ்க்கை கரி படிந்ததாகவும் பொருளற்றதாகவும் மாறிப் போகும் என்று குறிப்பிடுகிறார்.

வாரிஜா என்ற நாவல்

ராகஜலதி நாவலின் உள்ளே குறிப்பிடப்பட்ட மற்றொரு நாவல் வாரிஜா. இதுவும்  1960 ல் பதிப்பானது. பெண்கள் வாழ்வின் மேல் கொண்ட ஆசைகளையும் உடல் மற்றும் மனதின் பதற்றங்களையும் உற்சாகத்தையும் அவை உள்ளத்திலும் வெளியிலும் ஏற்படுத்தும் கொந்தளிப்புகளையும் பல்வேறு கோணங்களிலிருந்து ஆராய்வதும் நாவலின் கதை பொருளாக எடுத்துக் கொள்வதும் நாவலாசிரியை லதாவுக்கு மிகவும் விருப்பமானதாக உள்ளது.

அதிலிருந்து கட்டமைக்கப்பட்டது வாரிஜா என்ற நாவல். வாரிஜா என்ற பெண்ணின்  வாழ்க்கை இந்த நாவலுக்கு முக்கியமான கதைப்பொருள். வாரிஜாவைப் பற்றி கேள்விப்படும் கதைகளுக்கு விளக்கம் எழுதியவர் ராமலக்ஷ்மி என்ற எழுத்தாளர். அவர் வாரிஜாவின் வாழ்க்கையை கதையாகக் கூட எழுதினார். அந்த விதத்தில் ராமலக்ஷ்மியும் இந்த நாவலில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வருகிறார். அவர் லதாவைத் தவிர வேறல்ல. வாரிஜாவோடு கூட மேலும் பல பெண்களின் அனுபவங்களையும் நாவலில் ஒரு பகுதியாக்கியுள்ளார். நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கும் அங்கிருந்து மீண்டும் நிகழ்காலத்துக்குமாக நகர்ந்து கதை வடிவம் எடுப்பதைப் பார்க்க முடிகிறது.

ராமலட்சுமியின் மூலம் வாரிஜாவை அறிமுகம் செய்து வாரிஜாவின் நினைவுகளில் இருந்து இறந்த காலத்தை அசைத்து நிகழ்காலத்தில் மோகன்ராவுக்கும் அவளுக்கும் இடையில் சங்கீதம் தொடர்பாக ஏற்பட்ட ஈர்ப்பு பல மோதல்களுக்குப் பிறகு எவ்வாறு தீர்வு கண்டது என்பதே கதையின் கரு. வாரிஜாவின் தாய் சம்பிரதாயமான உயர் குலத்தைச் சேர்ந்த இல்லாள். இரு மகன்களின் தாய். பலவந்தமான ஈர்ப்புக்கு ஆளாகி குடும்பத்தை விட்டு  வேறொரு மனிதனோடு செல்கிறாள். விரைவிலேயே அவன் அவளை விட்டுச் சென்று விடுகிறான். அஸ்ஸாம் தேயிலை தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக தனிமையில் வாழ்கிறாள். தேயிலைத் தோட்டத்திற்கு உத்யோகியாக வந்த ஒரு   பிரெஞ்சு துரையால் ஈர்க்கப்பட்டு அவன் விருப்பத்திற்கு இணங்கி சகஜீவனம் செய்ததன் பலனாகப் பிறந்த பெண் வாரிஜா. தந்தை வைத்த பெயர் வர்ஜீனியா. தாய் அழைப்பது வாரிஜா,. தாய் மீது மகளுக்கு வெறுப்பு.

தந்தையின் மரணத்திற்குப் பிறகு அவர் கொடுத்த சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு மதராஸ் வந்த பின்பு நடக்கும் வாரிஜாவின் வாழ்க்கையே இந்த நாவலில் கதை.

அவளை அங்கு ஈர்த்த ஆணின் பெயர் சாஸ்திரி. கொஞ்சம் ஒழுக்கமும் சீலமும் குறைந்த பெண் என்று தெரிந்தாலும் அவளிடம் கௌரவத்தையும் நட்பையும் ஆழ்ந்த அன்பையும் வளர்த்துக் கொண்டான். உயர்குலப் பெண்ணுக்கும் பிரெஞ்சு ஆணுக்கும் பிறந்த வாரிஜாவுக்கு, இந்து சமூகம் கொடுக்கும் இடம் என்ன என்பது குறித்து தாழ்வு மனப்பான்மை அந்தரங்கத்தில் வேதனை செய்தது. அதுவே அவளை தனக்குத்தானே ஒரு மகா பிரச்சனையாக  எண்ணும்படிச் செய்தது.

ஆணும் பெண்ணும் இயல்பான உடல் வாஞ்சைகளின் தீவிரத்தைக் குறித்து தவறு, சரி என்று தீர்ப்பு கூறுவது சரியானது அல்ல என்பது அவனுடைய பார்வை. அவளுடனான உரையாடலில் அதனை வெளிப்படுத்தி அவள் அந்த மகா பிரச்சனையிலிருந்து சற்று வெளியே வருவதற்கான பலத்தை அளித்தான் சாஸ்த்ரி. அவனுடைய முன்னிலையில் அனுபவத்திற்கு வந்த பாதுகாப்பு அவனை விட்டுப் பிரிந்திருக்க முடியாது என்பதாக அவளை மாற்றியது. அப்படிப்பட்ட மனிதனான சாஸ்திரியிடம் கூறாமலே திடீரென்று இரவோடு இரவாக மதுராசை விட்டு எதனால் சென்றாள்? அதற்கு பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் பதில் கிடைக்கிறது. தாய் இறந்தபோது இவர்கள் உன் அண்ணன்மார்கள் என்று பெயர்கள் எழுதி அனுப்பிய கடிதத்தில் சாஸ்திரியின் பெயர் இருந்ததால் அவன் அவளுக்கு சகோதரன் ஆகிறான். ஒரு பெரிய பாவம் செய்வதிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காகவே விலகிச் சென்றாள். 

விஜயவாடாவில் ஒரு பெரிய சங்கீத வித்வானான மோகனராவுக்கும் அவளுக்கும் ஏற்பட்ட ஈர்ப்பைச் சுற்றி அதன் பிறகு கதை விரிவாகிறது. அவன் பாடுவதும் இவள் கேட்பதும் இவள் சொல்லித் தருவதும் அவன் நடனம் ஆடுவதுமாக அவர்கள் இருவரின் பொழுது போனது. சாஸ்திரியை விட்டு வந்தாலும் அவனோடு கொண்டிருந்த நட்பு மோகன்ராவோடு நெருக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்கும் தடையாக ஆனது. சாஸ்திரியும் வேண்டும். மோகன்ராவும் வேண்டும். யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற போராட்டத்தில் ஒரு தீர்மானத்திற்கு வர முடியாத நிலையில் அவள் பட்ட வேதனை சாமானியமானது அல்ல. மோகன்ராவு வாரிஜாவை ஆழாமாக விரும்பினாலும் அவளிடம் நெருக்கம் காட்ட முடியாமல் போனன். சாஸ்திரி மீது வாரிஜாவுக்கு இருந்த விருப்பம் பற்றித் தெரிந்தாலும் அவனாக அவளிடம் உரிமை எடுத்துக் கொள்ள முடியாமல் போனான். ஆனால் அவள் இல்லாமல் தனக்கு வாழ்க்கை இல்லை என்பது போல வருத்தப்பட்டான். அந்தச் சூழ்நிலையில் ராமலக்ஷ்மி அவனைக் கடிந்து கொண்டு, “வாரிஜா யாரைத்  தேர்ந்தெடுக்கிறாள் என்பது அல்ல பிரச்சனை. மூன்று பேரும் சேர்ந்து வாழ்வதற்கு ஏன் முயற்சி செய்யக் கூடாது?” என்று எரிச்சலோடு வினவுகிறாள்.  திருமணம் ஆகி மனைவி உள்ள மோகன்ராவோடு வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வதற்கு வாரிஜா தயாராக இருந்தபோது அவளை மற்றொரு ஆணோடு  பகிர்ந்து கொள்வதற்கு மோகன்ராவ் ஏன் தயங்கவேண்டும் என்பது ராமலட்சுமியின் தர்க்கம். ஆணுக்கு எத்தனை பெண்களோடு வேண்டுமானாலும் உறவு இருக்கலாம். அதனை இயல்பாக சமுதாயம் எடுத்துக் கொள்ளும். ஆனால்   பெண்ணுக்கு மட்டும் ஒருவனுக்கு மேல் மற்றொரு வேறொரு ஆணோடு ஒரே சமயத்தில் சம்பந்தம் வைத்துக் கொள்வதை எண்ணிப் பார்ப்பதைக் கூட விரும்புவதில்லை. இந்த இரட்டை ஒழுக்க நீதியை லதா 1960 ம் ஆண்டிலேயே சவால் செய்ததை கவனிக்கலாம்.

சாஸ்திரியை விரும்பினாலும் அவனோடு சேர்ந்து செல்ல முடியாமல் போராடிக் கொண்டிருந்த வாரிஜா, மோகன்ராவ் மரணத்தின் எல்லைக்குச் சென்றபோது    அவன் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்பதை அறிகிறாள். தம் இருவருக்கும் இடையில் சங்கீதம் ஒரு பலமான பாலம் என்று உணர்கிறாள்.  தனக்காக சாக வேண்டும் என்ற எண்ணிய மோகன்ராவுக்கு தன் அனைத்தையும் அர்ப்பணித்து கொள்வதற்காகவாவது அவன் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற தீவிரமான ஆசையோடு வீணையில் மோகன ராகத்தை ஆலாபனை செய்கிறாள்.  “மோஹன மூர்த்தியின் கலைச் சேவையில் வாரிஜா தன் வாழ்க்கையைத் திரும்பப் பெற்றாள்” என்று கூறுகிறாள் ராமலக்ஷ்மி.

சாஸ்திரியின் தோழிகளாகவோ உறவாகவோ நோயாளியாகவோ வேறு சில பெண்கள் இந்த நாவலில் பாத்திரங்களாக வருகிறார்கள். ஆண் பெண் ஈர்ப்பும்  உறவும் பன்முகத்தன்மையோடும் ஒவ்வொன்றும் தனித்தன்மையோடும்    இருக்கிற அதே அளவு, அவை தர்க்கத்திற்கும் சமுதாய ஒழுக்கத்திற்கும் அப்பாற்பட்டும் இருக்கிறது என்பதை இந்த பாத்திரங்கள் மூலம் நிரூபிக்கும் வேலையை இந்த நாவல் செய்கிறது.  அவர்கள் இருவரிடமும் அனுதாபத்தோடு  நடந்து கொள்கிறான் சாஸ்திரி. நடத்தை கேட்டவள் என்று எந்தப் பெண்ணும் மறுக்கப்படக் கூடாது என்பது அவனுடைய அபிப்பிராயம். அதற்கேற்பவே அவன் நடந்து கொள்கிறான். பெண்மையும் தாய்மையும் பெறவேண்டிய பெண்ணை   அவன் சந்தேகப்படவில்லை. அவமதிக்கவும் இல்லை. அவர்கள் அவ்வாறு ஆவதற்குப் பின்னணியில் இருக்கும் காரணங்களை அனுதாபத்தோடு புரிந்து கொள்வதற்கு முயற்சிக்கிறான். சிறு வயதில் தன்னையும் வீட்டையும் விட்டுச் சென்ற தாயின் ஒழுக்கத்தைப் பற்றி உலகம் அளித்த தீர்ப்பைத் தாங்கிக் கொண்டு நிற்பதற்குத் தேவையான உயர்ந்த பண்பாட்டை அவன் அவ்விதமாக வளர்த்துக் கொண்டான் என்று எண்ணத் தோன்றுகிறது.

உயர்சாதிப் பெண்ணுக்கும் பிரஞ்சு ஆணுக்கும் பிறந்த வாரிஜா, தன் பிறப்பு தகாத உறவால் ஏற்பட்டது என்ற தாழ்வு மனப்பான்மைக்கு ஆளான போது அவளோடு வாதிடுவதிலும், அவளுடைய தாயின் நடத்தையை அவளுடைய தேவையைக் கொண்டு புரிந்து கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும் என்று குறிப்பிடுவதன் மூலமும் மனிதர்கள் மீது தீர்ப்பளிக்கும் சமுதாய ஒழுக்கம் விசாலமானதாக இருக்க வேண்டும் என்று அபிப்பிராயப்படுவதன் மூலமும் சாஸ்திரி அந்த பண்பாட்டை வெளிப்படுத்துகிறான்.

பெண்களின் நடத்தை பற்றியும் அவர்களுடைய தொழில் பற்றியும் தீர்ப்பு அளிப்பதை விட்டு நோய்க்கான காரணங்களை ஒரு மருத்துவனாக கண்டுபிடித்து அவர்களுடைய பிரச்சினையில் உள்ள தனித்தன்மையை அடையாளம் கண்டு நட்போடும் இரக்கத்தோடும் வழிகாட்டும் வேலையை அவன் இயல்பாக ஏற்றுக்கொண்டான். சேவை மனப்பான்மை அதிகமாக இருந்த நர்ஸ் காத்யாயனியை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவள், சுதந்திரமாகத் திரிபவள்  என்று அவமதித்து விலக்க முடியாமல் போனான். அவளோடு சினேகம் செய்தான். அவளுடைய கவலைக்கு காரணம் தாய்மையிலிருந்தும் பெண்மையிலிருந்தும்   வஞ்சிக்கப்பட்டதே என்று அறிந்து அவளை அந்த தீய பழக்கங்களிலிருந்து    காப்பாற்ற வேண்டும் என்று தவிக்கிறான். அவனிடம் அன்பு காட்டி அவள்  அவனிடம் ஆசையைத் தூண்டிவிட்ட தருணத்தில் அவளை மகிழ்விக்கும் நோக்கத்தில் அவளுக்கு நெருக்காமானான். அது அவளிடம் வாழ்வின் மீது ஆசை ஏற்படுத்தி அவன் எத்தனை எடுத்துச் சொன்னாலும் விடமுடியாயாத குடிப்பழக்கம் போன்றவற்றை அவளாகவே விட்டுவிடுவதற்கு வழிவகுக்கிறது. அவள் மீண்டும் திருமணம் செய்து கொண்டு தாய்மையைப் பெறுகிறாள்.

இளமையில் ஒரு விசித்திரமான மானசீக நிலையில் தன்னை விட  முப்பத்திரண்டு வயது பெரியவனான ஒரு மனிதனின் ஈர்ப்பில் விழுந்து அவனோடு கூட வீட்டை விட்டு ஓடிகிறாள் நீலா என்ற பெண். அவன் ஆஜாத் ஹிந்து ஃபௌஜில் சேர்கிறான். தேசபக்தியோடு அன்றி தன் மகன் அதில் சேர்ந்தான் என்பதற்காகத் தானும் அங்கு சமையல்காரியாகச் சேர்ந்த ஐம்பது வயதுப் பெண்ணுக்காக ஆஜாத் ஹிந்து பவுஜில் அவன் சேர்ந்தான் என்று தெரிந்து   தனிமைக்கு உள்ளான நீலாவின் கதை மற்றொன்று.

நேதாஜியின் பட்டாளம் சிதைந்த பின்னர் அவனோடு கூட தேசத்திற்குத் திரும்ப வந்தாள். ஆனால் அவனைத் திருமணம் செய்து கொள்வதற்கு அந்தப் பெண் தடையாக இருந்தால் அந்த பெண்ணின் மரணத்திற்குப் பிறகு அவன் சன்னியாசம் ஏற்கப் போகும் போது எழுதிய கடிதத்தின் உதவியோடு நீலா ஒரு இன்ஜினியரிடம் பர்சனல் செகரட்டரியாகச் சேர்கிறாள். தனிமையோடு செய்யும் போராட்டத்தில் பல நட்புகள் செய்து அவதூறுகளை மூட்டை கட்டிக்கொண்டு டிபி வியாதியோடு மருத்துவமனையில் சேர்கிறாள். அவள் காதல் கிடைக்காத நோயால் அவஸ்தைப்படுகிறாள் என்று அறிந்த சாஸ்திரி அவளுக்கு காதலை அளிக்கும் செயலைத் தான் செய்ய இயலாமல் போய் விட்டதற்காக வருந்தி அவளுடைய மரணத்திற்குத் தானே பொறுப்பு என்று துயர் கொள்கிறான்.  பெண்கள் ஆசைப்படும் காதலும் அனுதாபமும் கிடைக்காமல் போவதே பல நோய்களுக்குக் காரணம் என்பது அவனுடைய உறுதியான அபிப்பிராயம்.

வாரிஜா நாவலைப் படிக்கும்போது நிறைய சந்தர்ப்பங்களில் புச்சிபாபு எழுதிய ‘சிவரகு மிகிலேதி’ (இறுதியில் மிகுந்தது) என்ற நாவல் நினைவுக்கு வருகிறது. “தாய் செய்த பாவம் பிள்ளைகளைத் துரத்தும் போது, அவர்கள் என்ன செய்வார்கள்?” என்ற உணர்வு அந்த நாவலைப் போலவே இந்த நாவலிலும் முக்கியமான கருத்து.

வாரிஜாவிடம், அது தாயிடம் கொண்ட வெறுப்பாக வெளிப்பட்டது. சாஸ்திரியின்  விஷயத்தில் அது தாய் மீது வழிபாடாக வடிவம் எடுக்கிறது. பெண்கள் அனைவரும் தயவோடும் கருணையோடும் பார்க்கப்பட வேண்டியவர்கள். இரக்கத்தோடு புரிந்து கொள்ளப்பட வேண்டியவர்கள் என்ற புரிதலை அவனுக்குக் கொடுத்தது. அது பெண்களின் மேல் ஆராதனையாக மாறியது. அவ்விதமாக சாஸ்திரி ‘சிவரகு மிகிலேதி’ என்ற நாவலில் வரும் தயாநிதியை நினைவுபடுத்துகிறான். அழகில்லாமல் இருப்பது ஒரு நோய் என்று ‘சிவரகு மிகிலேதி’ நாவலில் உள்ள தயாநிதி எண்ணுவது போல சாஸ்திரி காதல் இல்லாமல் இருப்பது ஒரு நோய் என்று எண்ணுகிறான். அந்த நாவலைப் போலவே தாய் செய்த பாவம் பிள்ளைகளைத் துரத்துவது என்ற பிரச்சனையை விவாதித்து அதற்குத் தீர்வு காண இயலாமல் போன இலக்கியப் படைப்பாக ஹாம்லெட் நாடகத்தின் குறிப்பு வாரிஜா நாவலிலும் உள்ளது.

லதா எழுதிய 1960 ல் வெளியான மற்றுமொரு நாவல் ‘மிகிலிந்தேமிடி’. அதுவும் ‘சிவரகு மிகிலேதி’ நாவலையே நினைவுபடுத்துகிறது.

தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.