சங்கப்பெண்கவிகள்

This entry is part 2 of 2 in the series கவிதாயினி

பொன்னொளி

அள்ளூர் நன்முல்லையார் பாண்டிநாட்டை சேர்ந்த சங்கக்கவிஞர். சங்க கால அரசன் கொற்ற செழியனையும், அவனுடைய அள்ளூரையும் இவர் பாடல்கள் வழியே அறிகிறோம். இவர் பதினோரு பாடல்கள் இயற்றியுள்ளார்.

வேம்பின் கனிகளும்,  காடைகளும்,  வற்றிய சிறிய குளமும், நெல்லங்காடுகளும் உளுந்தஞ்செடிகளும், வள்ளைக் கொடிகளும், நெருஞ்சி மலர்களும், ஓணான்களும்,  முள்வேலிகளும், தாமரைக் குளமும்,  காரானும் நடமாடும் நன்முல்லையின் நிலமும்,  பொழுதுகளும் இந்தப்பாடல்களில் உள்ளன . இங்கு நிலமாக இருப்பதும்,  பனியாய் குளிர்வதும்,  வாடையாய் வீசுவதும், கலங்கிச் சேறாவதும், மலர்வதும்,  காய்ப்பதும்,  துவர்ப்பதும்,  கனிவதும் மனமே. 

சங்ககாலப் போரில் பகைநாட்டின் நீர்நிலைகள் மற்றும் வேலிஅரண்களை யானைகளை விட்டு அழிக்கும் வழக்கம் இருந்தது. சீறூரின் பெண் ஒருத்தி என்றோ யானைகளால் சிதைக்கப்பட்ட முள் வேலியை தினமும் காண்கிறாள். ஊரின் அழகு கெட்டு பாழடைந்து கொண்டிருக்கிறது. பயன்பாட்டில் இல்லாத நீர்த் தேக்கத்தை கடந்து செல்லும் போது அவள் மனம் பதைக்கிறது. ஒரு காலத்தில் பெண்கள் கூடிச் சிரித்து நீர் எடுத்துச்சென்ற குளம். ஊருக்கு வருபவர்களின் தாகத்தை தணித்து வெக்கையை குளிர்விக்கும் குளம் இன்று கலையிழந்து கிடக்கிறது. 

களிறுபொரக் கலங்கு கழல்முள் வேலி
அரிது உண்கூவல் அங்குடிச் சீறூர் [புறம்: 306] 

மனம் தாங்காத அவள் நடுகல்லாக நிற்கும் முன்னோர்களிடம் செல்கிறாள். ஊரை உயிர்ப்பிக்க ஓயாது விருந்தினர்கள் வர வேண்டும். நாட்டைத் திருப்பி அளிக்கக்கூடிய போர் வரவேண்டும் என்று  கேட்கிறாள். போர் வேண்டும் என்று கேட்பவள் கண்ட ஊர்  அவளில் விளைவித்த வெறுமை என்ன?

நாடுதரு விழுப்பகை எய்துக எனவே என்கிறாள். சிறந்த வழுவான பகையை எய்துக என்கிறாள். போரை அடையத்தக்க ஒன்றாக,   பெரும்பேறாக ஒரு பெண் நினைக்கும் அளவிற்கு அந்த ஊரின் நிலை என்னவாக இருந்திருக்கும்? இந்தப்பாடல் மூதின் முல்லைத் திணையை சேர்ந்தது. பெண்வீரத்தைப் பாடும் துறை மூதின் முல்லை எனப்படுகிறது. இப்பாடலில் இடையில் சில எழுத்துகள்  இல்லை.

 மருத நிலத்தலைவன் ஒருவன் பரத்தையை தன் இல்லத்திற்கே அழைத்து வந்து உறவாடுகிறான். தலைவி தன் தந்தை இல்லத்தில் இருக்கிறாள். தோழி அவனிடம் நம்  கொட்டிலில் கட்டப் பட்ட காரான் எறுமை கயிற்றை அறுத்துக்கொண்டு வேலியைக் கடந்து சென்றுவிட்டது,  அது  வள்ளைக்கொடிகள் நிறைந்த குளத்தை கலக்கி,  தாமரையை உண்டு குளத்தையும் சேறாக்கி விட்டது என்கிறாள்.  தலைவியின் மனக் கலக்கத்தையும், அவர்கள் இல்லறத்தின் நிலையையும் உணர்த்த முயற்சி செய்கிறாள். பின் சலித்தவளாக,  பகைவரின் யானைப்படையை தன் ஔிறும் வாட்படையால் வென்ற கொற்றச்செழியனின் அள்ளூரில் விளைந்த நெற்கதிர்கள் போல,  அவள் கரங்கள் நெகிழ்ந்தாலும் நெகிழட்டும்,  நீ செல்,  உம்மைத் தடுப்பார் யார் என்கிறாள்.

ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க

சென்றி, பெரும நிற் றகைக்குநர் யாரோ

 [அகநானூறு 46]

குழந்தை பேற்றில் தந்தையில்லத்தில் இருக்கும் பெண்ணின் நலிவும்,  காய்த்து முற்றி சரிந்த நெற்கதிரின் சரிவும் ஒன்றே. ஊற்று நீர் ஊறி நிறையும் குளம் போல மெதுவாக துயரம் நிறைக்கும் பாடல் இது.

மலைசூழ்ந்த நிலத்தின் அருவிகளை, ஓடைகளை,  சரிவுப்பாதைகளை,  மலைவிலங்குகளைக் கடந்து தலைவியை காணவரும் குறிஞ்சி நிலத்தலைவனைச் சந்திக்க தலைவி மறுக்கிறாள்.

 பொழுதிடை தெரியிற் பொய்யே காமம் [குறுந்தொகை:32] என்று அவன்  சொல்கிறான். வகுத்த பொழுதுகளில் வருவது மட்டும் காதல் அல்ல. பிரிவு வந்தால் நான் உயிர் வாழமாட்டேன். ஆனால்  மடலேறி அவளை ஊர்தூற்றுதலுக்கு ஆளாக்குவதும்  எனக்குப்பழி என்கிறான். 

சங்கப்பாடல்களில் காதல் என்ற சொல் இல்லை. காமம் என்ற சொல் மட்டுமே உள்ளது.  பாடல்களுக்கு ஏற்ப நாம் பொருள் கொள்ள வேண்டும். இந்தப்பாடலில் பிரிவினால் உண்டாகும்  மனவாதையை தலைவன் சொல்கிறான். தலைவன் கூற்றாக உள்ள பாடல்களில் அரிதான காதல் உளநிலை கொண்ட பாடல் இது.

மலைநிலத்துத் தலைவி ஒருத்தி கூதிர் காலத்தில் தனித்து இருக்கிறாள். உறக்கம் கண்கூடாத அவள்,  வயல்களில் பனி இறங்குவதை இல்லத்தின் பலகணி  வழியே பார்த்துக் கொண்டிருக்கிறாள். உளுந்தஞ்செடிகளின் இலைகளில் பனி படர்ந்து செடிகள்  சோர்ந்திருக்கிறன. காய்கள் முற்றிய பருவம் வந்துவிட்டது. அவள் வளர்க்கும் காடையின் சிவந்தகால்களைப் போல உளுந்தஞ்செடியின் வேர்கள் மேலெழுந்து தெரிகின்றன. அவற்றை உண்பதற்காகக் கூட்டம் கூட்டமாக மான்கள் வருகின்றன. தலைவனின் பிரிவால் தன் மனஆழத்தில் உள்ள காதல் மேலெழுந்து துயர்கொண்ட தலைவி, 

மருந்து பிறிதில்லை அவர் மணந்த மார்பே [குறுந்தொகை 68]  என்று சொல்கிறாள். ஒரு வேளை இரவு முழுதும் பனிபடர்ந்து சோம்பியிருக்கும் இலைகளை,  தன் கதிர்களால் மலர்விக்கும் சூரியன் அதிகாலையில் வரக்கூடும்.

மருதநிலத்தலைவி ஒருத்தி தன் தலைவன் பரத்தை இல்லத்திற்கு சென்று வருகிறான் என்று அறிகிறாள். அதை அவனிடம் நேரடியாகக் கேட்க முடியாது. கேட்கமுடியாது என்பது பயத்தால் அல்ல.  தயக்கத்தால், ஆற்றாமையால், கண்ணீரால், கோபத்தால் ஆன மெல்லிய இடம் அது. இந்த நுணுக்கமான மனநிலை சங்கப்பாடல்களில் திரும்பத்திரும்ப பாடப்படுகிறது. தோழிக்குtஹ் தலைவியின் நலிவைக் காணமுடியவில்லை.  தலைவனிடம் கேட்டுவிட வேண்டும் என்ற துடிப்பு இருக்கிறது . அவளிடம் தலைவி என் அழகு கெட்டு, உடல் நலிந்து,  உயிர் போவதாக இருந்தாலும் அவரிடம் என் வருத்தத்தைச் சொல்லாதே என்கிறாள். இது ஒருவகையான தன்அழிவு. அதை அவன் முன்பு எடுத்து வைக்க அவள் கூசுகிறாள். தனக்கு தெரியும் என்பதைக் கூட  அவன் அறியக்கூடாது என்று நினைக்கிறாள். அவன் மீதுள்ள அன்பையும் அவளால் தூக்கி எறிய முடிவதில்லை. தோழியிடம்

நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி

 [குறுந்தொகை 93]

என்று சொல்கிறாள். தோழி அவனை மரியாதையாக நடத்த வேண்டும் என்று சொல்வதுடன் தன் மனதிற்குமே அவள் சொல்லிக்கொள்கிறாள்.

இது போன்ற பாடல்களில் வரும் உணர்வுநிலை ஊடல் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. இப்படிக் கூறுவதில் ஒரு புரிதல் பிழை உள்ளது. ஊடல் கூடலின் நிமித்தமே என்று நினைத்து தலைவியின் மனஆழத் துயரையும் கூட மேலோட்டமாக நாம் புரிந்து கொள்ளும் வாய்ப்பே அதிகம். இந்த ஊடல் பரத்தையின் நிமித்தம் நடக்கிறது என்றால் இதில் உள்ள உணர்வு நிலையை கூடலின் நிமித்தமாக கொள்ள முடியுமா, என்ற கேள்வியை நாம் கருத வேண்டும். சங்கப்பாடல்களில் உள்ள ஊடலிற்கும் கூடலிற்கும் பல பரிமாணங்கள் உள்ளன. அவை மனதின் பரிமாணங்கள் என்பதால் எல்லையற்றவை. ஊடல் கூடல் என்ற வார்த்தைகளுக்கான பொருளை விசாலமாக்கினால் இந்தப்பாடல்கள் இன்னும் இன்னும் விரிவு கொள்ளும்.

குறிஞ்சி நிலத்தலைவன் தலைவியை இரவில் அடிக்கடி சந்தித்துச் செல்கிறான். திருமணம் செய்து கொள்ளக் காலம் தாழ்த்திக்கொண்டே இருக்கிறான். தோழி கோபத்தில் தலைவனை ஏசுகிறாள். தலைவி தோழி மீது கோபம் கொண்டாலும், வார்த்தை தடித்துவிடும் என்று அஞ்சி, 

நகையென உணரேன் ஆயின்

என்னா குவை கொல் நன்னுதல் நீயே

 [குறுந்தொகை: 96] என்று கேட்கிறாள்.

அவனை நீ என்முன்பே தாழ்த்திப் பேசுவாயா என்ற கேள்வியும் இந்தப்பாடலில் உள்ளது. உன் சொற்களை விளையாட்டாய் நான் எடுத்துக்கொள்ளா விட்டால் நீ என்ன ஆவாய் என்கிறாள். தலைவியின் கோபத்தின் விளைவை தோழியைத்தவிர அணுக்கமாக அறிந்தவர் யார்? மேலும் அந்த கோபத்தை அறிந்தவள் என்பதால்  தன்னிடமே அந்தக்கோபத்தைத் திசைதிருப்பியும் இருக்கலாம். யார் அறிவார் தோழியை!

தான் மேற்கொண்ட செயல் முடித்து பாலை நிலத்தின் வழியே தலைவன்  ஊருக்குத் திரும்புகிறாள். தலைவன் தேர்ப்பாகனிடம் பேசிக்கொண்டே காட்டு மிருகங்கள் நடமாடும் ஒலிகளைக் கவனித்தபடி இருக்கிறான். ஆனால் மனம்  எப்போதே தலைவியிடம் சென்று விட்டது.

 கிராமங்களில் வேகமாக வந்தேன் என்பதை ‘மான் வேகம் மயில் வேகத்துல வந்தேன்’ என்று சொல்வதுண்டு. மான், தன் கால்களால் காட்டை அளக்கிறது. ஆனால் மனம் ‘தன் நினைப்பால்’ நொடியில் தூரங்களை கடக்கிறது. அதையே மனோ வேகம் என்கிறார்கள். மனதிடம் தோற்றுப்போன தன் கைகள் கொண்ட தவிப்பை, 

அஞ்சுவ தறியா தமர்துணை தழீஇய

நெஞ்சுதப் பிரிந்தன் றாயினும் எஞ்சிய

கைபிணி நெகிழின்அஃ தெவனோ [குறுந்தொகை :237]

என்கிறான். இங்கு மனதிற்கு எதுவும் தடை இல்லை. அவளைத் தொட்டுணர முடியாத கைகளுக்குத்தான் நோய். தொடி நெகிழ்தல் தலைவிக்கு என்றால் தலைவனுக்கு கைகளே பிணியாகின்றன. 

சேய அம்ம இருவாம் இடையே

மாக்கடல் திரையின் முழங்கி  

அவன் கடக்கும் காட்டைப் பசியால் கர்ஜித்து அலைவுறுத்தித் தழும்பும் புலிபோலவே,  அவனும் காட்டிற்கும் வீட்டிற்கும் இடையில் உள்ள தொலைவால்,  பிரிவால் துன்புறுகிறான்.

“நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே..”[குறுந்தொகை: 202]

அஞ்சிய மனம் கொண்ட முல்லைநிலைத்தலைவி மிக சன்னமான குரலில் தன் நெஞ்சில் கைவைத்து அவன் வரும் பாதை பார்த்துச் சொல்வதைப் போன்றுள்ளது.  தன் மனதை ஆற்றுப்படுத்த முடியாதவளாக ஒரே சொல்லை மீண்டும்  சொல்கிறாள். சில நேரங்களில் சொல்லில் என்ன இருக்கிறது என்று தோன்றும். அது போன்று இந்தத்தலைவி ஒரே ஒரு உவமை சொல்கிறாள்.

புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்

கட்கின் புதுமலர்முட் பயந் தாங்

மலரும் போது மஞ்சள் சிறு மலரான நெருஞ்சி காய்க்கும் போது குத்தும் முள்ளாகிறது என்கிறாள். 

புன்செய் நிலத்தின் தடங்களில் சின்னஞ்சிறு இலைகள், சின்னஞ்சிறு மஞ்சள் மென் மலர்கள் கொண்டு படர்பவை நெருஞ்சிச்செடிகள். நெருஞ்சிக்குப் பெயரே சிறு நெருஞ்சி இல்லையா? அவளுடைய காதலும் அது போன்றது. இங்கு அவள் படரும் நிலமாக இருப்பது அவன் நெஞ்சம். புன்செய் நிலம் கடினத்தன்மையானது. நெருஞ்சிக்கு சிறிதளவு நீரே போதுமானது. இந்தப்பாடலின் தலைவன் கொஞ்சம் கல்நெஞ்சனாக இருந்திருக்கலாம். சிறு ப்ரியமே தான் தழைக்கப் போதுமானது என்கிறாள். அவனுடையஅந்த பொன்மஞ்சள் பூ போன்ற ப்ரியம், காலத்தால் சலிப்பாக,  அன்றாடத்தில் முள்ளாக மாறிக் கொண்டிருக்கிறதே என்று  தலைவி அஞ்சுகிறாள். 

இனிய செய்தங் காதலர்

இன்னா செய்தல் நோமென் நெஞ்சே

என்று மூன்றாவது முறையாக நோம் என் நெஞ்சே என்று  சொல்லி முடிக்கிறாள். இதில் தலைவி தன் வளைக்கரம் மெலியும் என்றோ,  இடை துவளும் என்றோ,  பசலை படருமென்றோ சொல்லவில்லை.  உன்னால் என் மனம் நோகும் என்றே மறுபடி மறுபடி சொல்கிறாள்.

தலைவன் பிரிந்து செல்லும் போது அவனைத் தடுக்காத உறவுகள் மீது தலைவி மனத்தாங்கலில் இருக்கிறாள். தலைவனுக்கு எந்த காரணத்தாலோ தாமதமாகிறது.  நாட்கள் செல்லச்செல்ல பிரிவால் வாடும் அவள் மீது கரிசனம் கொள்ளும் உறவுகளையும் தோழியையும் பார்த்துத் தலைவி நான் கொண்ட துன்பத்தை எங்ஙனம் அறிந்தது இந்த ஊர் என்கிறாள். அந்த அளவிற்கு மென்மையானவர்களா இவர்கள் என்ற கேலியும் இதில் உள்ளது.

…………….உரனழிந்து

ஈங்கியான் தாங்கிய எவ்வம்

யாங்கறிந் தன்றிவ் வழுங்க லூரே [குறுந்தொகை: 140] என்கிறாள்.

வேதின வெரிநின் ஓதிமுது போத்து 

ஆறுசெல் மாக்கள் புட்கொளப் பொருந்தும்

சுரனே சென்றனர் காதலர்

கருக்கரிவாள் போன்ற முதுகை உடைய ஓணான்கள் எதிர்ப்படும் பாலை வழியே அவர் சென்றுள்ளார். அரிவாள் என்று சொல்லாமல் கருக்கரிவாள் என்கிறாள். கருக்கரிவாள் என்பது சிறிய வளைந்த ரம்பம் போன்ற அமைப்புடையது. தன் நிலை கருக்கரிவாளால் அடித்தண்டுடன் அறுக்கப்படும் கதிரை ஒத்தது என்று சொல்லியிருக்கலாம் அல்லது அத்தனை கூரிய பிரிவை அவன் உணரவில்லையா என்றோ,  பிரிந்து சென்ற அன்று அவனைத் தடுக்காத உறவுகள் அந்தக்  கூர்மையை உணராதவர்கள் இன்று உணர்ந்தார்களோ என்றும் நினைத்திருக்கலாம். சங்கப்பாடல்களில் உவமைகள் பாடலின் உயிர்நாடி. அந்த அரிவாளைப் பிரிவாக நாம் கற்பனை செய்யமுடியுமானால் பாடலின் உணர்வு நிலை வாசிப்பவருக்கு கைவரும். 

இப்படி இன்னும் எத்தனை சொற்களால் சொல்லிப்பார்ப்பது பிரிவின் துயரை. 

உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை

வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்

புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்உகிர்ப்

பொலங்கல ஒருகாசு ஏய்க்கும்

நிலங்கரி கள்ளியங் காடு இறந் தோரே

[குறுந்தொகை 67]

தலைவன் பிரிந்து சென்ற காலத்தில் தலைவி முற்றத்தில் பழுத்திருக்கும் வேம்பை பார்க்கிறாள். அவர் செல்லும் பாலை நிலத்திலும் வேம்பு பழுத்திருக்கும் காலம் இது தானே? என்று தோழியிடம் கேட்கிறாள். கிளி அந்த வேப்பம்பழத்தை கொத்தி தின்பதற்கு வாயில் வைக்கிறது. இந்தக்காட்சி பொன்ஆசாரி தாலிநாணில் பொற்காசைக் கோர்ப்பதை நினைவுபடுத்துகிறது. அவர் சென்ற வழியில் இதே போல கிளிக்கூட்டம் பழுத்த மரங்களில் அமரும்தானே, அதைக் கண்டாவது என் நினைவு வருமா? கேட்கிறாள். மேலும் இந்த உறவு என்னும் பொன்பழத்தை பற்றியிருக்கும் வள் உகிர் (கூரிய நகம்) என்பது பிரிவன்றி எது?

இந்த பொன்மஞ்சள் பழங்களைப் போன்று உவமைகள் ஔியுடன் கனிவதை ஒவ்வொரு பாடலிலும் காணமுடிகிறது. 

இந்தப்பாடல்கள் அனைத்திலும் காதலின் நுண்ணிய தளங்களை தொட்டு,  பெண் நெஞ்சின் அலைவுகளை நன்முல்லை எழுதியிருக்கிறார். திருமணத்திற்கு முன்னும் பின்னுமான தலைவனின் மாற்றங்களும்,  அதனால் உண்டாகும் தலைவியின் கலக்கமும் இப்பாடல்களில் உள்ளது.

இந்தப் பாடல்களுக்கெல்லாம் ஒருபடி மேலே சென்று , 

குக்கூ என்றது கோழி அதன் எதிர்

துட்கென் றன்றுஎன் தூயநெஞ்சம் [குறுந்தொகை: 157] என்று தலைவி பதறுகிறாள்.

அதிகாலையில் கோழி குக்கூ என்று முதல் குரல் எழுப்பும் பொது இணையாக தலைவி மனம் ‘துட்கென்று’ பதறுகிறது. படபடக்கும் இதயத்தின் ஓசை. அந்தி பிரிவிற்குரியது என்றால் அதிகாலை இழப்பிற்குரியது.  அதனாலேயே தலைவி துட்கென்றது என் தூய நெஞ்சம் என்கிறாள். 

பொருள்வயப்பிரிவு காரணமாக பயணத்திற்கான அதிகாலையாக இருக்கலாம். அன்றாடப்பொழுதின் பிரிவையா தலைவி ‘துட்கென்றது’ என்று சொல்வாள்?

காதலர்ப் பிரிக்கும்

வாள்போல வைகறை வந்தன்றால்

காதலரைப் பிரிக்க வாள் போல வந்தது வைகறை என்கிறாள். இங்கே பிரிவு எத்தனை கூர்மையான வலியாக சொல்லப்படுகிறது. இத்தனை பதட்டமும்,  வலியும் வாழ்வின்  நிலையின்மை முன் ஏற்படக்கூடியது. அந்த அன்று தலைவன் போருக்கு கிளம்பிச் செல்கிறானோ என்னவோ. நிச்சயமற்ற அதிகாலை. 

மறுநாள் என்பது எத்தகைய சுபச்செய்தி

இருத்தலின் பாதம் புறப்படும் இடத்தில் வெறுமை இருக்கும்.

இயற்கை பஞ்சமுக நாகம்.

அதன் அகத்தை அறிய சோதனைக்கோல்

கண்டறியக்கூடுமோ.

தீயின் மௌனம் குரல்களால் ஆனது.

ஊமை வெயில் உளறும்.

எனது அகத்தின் புன்னகை அசையா தீபச்சுடர்.

தொட்டுணரமுடியாத ஒன்றின்

ஆவித்தைல வாசனையை அறிபவன் யார்

தேன்மொழிதாஸ்

அகத்தை அறிய சோதனைக்கோல் கண்டறியக்கூடுமோ தோழி?

பிரிவு அன்பை துலக்கி வைக்கிறது. அதனாலேயே சங்கப்பாடல்கள் அதிகமும் பிரிவைப் பேசுவதன் மூலம் காதலை ஔி கொண்ட பொன்மஞ்சள் மலராக்குகிறது, பொன்மஞ்சள் கனியாக்குகிறது. நன்முல்லை தன் பாடல்கள் மூலம் மலர்த்தத் துடிப்பது அதைத்தான்.

(தொடரும்…)

கட்டுரைக்கு உதவிய நூல்கள்:

  • திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புகழகம்: சங்கத் தமிழ் புலவர் வரிசை : 5 பெண்பாற்புலவர்கள். 
  • புலியூர்கேசிகள் உரைகள்,  சங்கஇலக்கியம் பத்துப்பாட்டு எட்டுத்தொகை உரைவிளக்கங்கள்_ அறிஞர். ச.வே.சுப்ரமணியன்
  • தமிழ்விக்கி: தமிழ் பெண்எழுத்தாளர்கள்
Series Navigation<< இற்றைத் திங்கள் அந்நிலவில் -1

One Reply to “சங்கப்பெண்கவிகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.