காளான்கள் வளர்கின்றன: டகாஹாமா க்யோஷி: ஹைக்கூ

தமிழாக்கம் : நந்தாகுமாரன்

13.

என்னைக் கடவுளென்று நினைத்து
எழும்பும் அலைகள் பாறையைக் கடிக்கின்றன
மங்கலான இரவு நிலவு

14.

இலையுதிர்காலக் காற்று
நீங்கள் காண்பதெல்லாம்
ஹைக்கூ

15.

நீயும் நானும்
காதற் போலிகள்
இலையுதிர்கால மாலை

16.

இலையுதிர்காலத் துவக்கம்
தோன்றியது
அதை வியந்தவன் பார்வையில்

17.

ஓரிரவின் மழை
வயல்களில் ஒப்பாரி
மூலிகைகளைப் பறித்தோம்

18.

கரையொதுங்கிய படகு
‘வில்லோ’ மரம்*
அதன் மேல் ஒரு நட்சத்திரம்

‘வில்லோ’ மரம் – Willow tree – ஒரு மர வகை

19.

தூசி படர்ந்த கல்லின் மீது
வீழ்கிறது
இலையுதிர்கால மழை

20.

தொட்டிலிலிட்ட என் குழந்தையை
ஆட்டிவிடுகிறேன்
காலுறை அணிந்த அவள் பாதங்களை முத்தமிட்டபடி

21.

நாம் இந்தப் பாதையில் தான்
செல்ல வேண்டும்
அந்தப் ‘ப்ளம்’ மலர்களைக் காண

‘ப்ளம்’ மலர்கள் – plum tree flowers

22.

அதீதத் தூக்கக் கலக்கம்
என்னை மொய்க்கும் ஒரு ஈயை
அடிக்கக் கூட முடியாமல் அப்படியொரு விலக்கம்

23.

மென்மையான நிலநடுக்கம்
புல் துளிர்விடுகிறது
பூமியின் மேல்

24.

பகல் நட்சத்திரம்
பார்வை கூசுகிறது
காளான்கள் வளர்கின்றன

குறிப்புகள் – இந்த ஹைக்கூ, ‘கொரோமோ’ நகரத்தின் (Koromo city) மக்களுக்கான ஒரு பிரியாவிடை அஞ்சலிக் கவிதையாக இயற்றப்பட்டது. அந்த நகரத்தின் மக்கள் க்யோஷி அவர்களுக்கு காளான்களைப் பிரியாவிடைப் பரிசாக அளித்தார்கள். போரின் விமானத் தாக்குதல்களிலிருந்து தப்பித்து, க்யோஷி, கொரோமோ-வில், மூன்று வருடங்கள் வாழ்ந்தார். ‘பகல் நட்சத்திரம்’ என்பது சூரியனைக் குறிக்கும் எனவும், காளான் என்பது ‘பூஞ்சை’ (fungus) என்பதும் யாருக்கும் உடனே புரியும். ஆனால் இந்த ஹைக்கூவில், ‘சூரியன்’ எனும் ஒரு மாபெரும் வாழ்வளிக்கும் விஷயத்தையும், ‘காளான்’ எனும் சிற்றுயிர்க் கிருமி அதில் வளரும் விதத்தையும் விதந்தோங்கும் பாங்கில் கிடைக்கும் ‘எதிர் அழகியல் சித்திரங்கள்’ (opposing imagery) தான் இதன் ‘மேற்கோள் மேன்மை’ (referential integrity).

25.

காலம் துளைக்கிறது
கோஸோகொடோஷியை*
ஒரு ஊசிக் கூர்மை கொண்ட குச்சியைப் போல

குறிப்புகள் – ‘யசுனாரி கவாபாதா’ (Yasunari Kawabata) எனும் இலக்கியத்துக்கான நோபல் வென்ற ஒரு எழுத்தாளருக்கு மிகப் பிடித்த ஹைக்கூ இது. இதில், ஒரு உருவகத்தின் தலைகீழ் விகிதம் அருமையாகப் பயன்படுத்தப்படுகிறது. ‘கொஸோகோடோஷி’ (‘Kozokotoshi) என்ற சொல் க்யோஷி உருவாக்கிய ஒரு ‘கிகோ’ (kigo = season word – ஒரு பருவத்தைக் குறிக்கும் ஒரு சொல்) – அது ஒரு புதிய வருடத்தைக் குறிக்கும் – அச்சொல்லின் ‘நேற்று’ என்பது பழைய வருடம் ‘இன்று’ புதிய வருடம் – ‘இந்த வருடம் ஒரு பழமையின் நீட்சி’ என்பதாக தொனிக்கிறது.

26.

ஈயடிக்கும் மட்டை
என் கையில்
எனக்கு எந்தப் பெரிய லட்சியங்களுமில்லை

(வளரும்)

முந்தைய பகுதி

2 Replies to “காளான்கள் வளர்கின்றன: டகாஹாமா க்யோஷி: ஹைக்கூ”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.