காற்றினும் கடியது அலர்

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
恋すてふ
わが名はまだき
立ちにけり
人知れずこそ
思ひ初めしか

கனா எழுத்துருக்களில்
こひすてふ
わがなはまだき
たちにけり
ひとしれずこそ
おもひそめしか

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் ததாமி

காலம்: பிறப்பு தெரியவில்லை. 

இத்தொடரின் 30வது பாடலை (பிரிவினும் உளதோ பிரிதொன்று?) இயற்றிய புலவர் ததாமினேவின் மகன். ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களுள் இவரும் ஒருவர். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 36 பாடல்கள் பல்வேறு தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. இவை தவிர, ததாமி நோ ஷூ என்று இவரது பெயரிலேயே தனிப்பாடல் திரட்டு ஒன்றும் உள்ளது. ஷசெக்கிஷூ என்றொரு பாடல்தொகுப்பின் 1283ம் பாடல் இவரது மரணத்தைப் பற்றியதொரு குறிப்பைத் தருகிறது. பாடல் போட்டிக்காக இவர் இயற்றிய இப்பாடல் பரிசு பெறாததால் மனமுடைந்து உணவு உண்ணாமல் இறந்துவிட்டார் என்கிறது.

பாடுபொருள்: எவ்வளவு மறைத்தாலும் அலர் எழுந்துவிடுதல்.

பாடலின் பொருள்: என் காதலைப் பற்றி அலர் கிளம்பிவிட்டதே? நான் காதலித்துக் கொண்டிருப்பது பிறருக்குத் தெரிய வாய்ப்பே இல்லை என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்?

முந்தைய பாடலைப் போலவே நேரடியாகப் பொருள்தரும் இப்பாடலைக் கி.பி 946 முதல் 967 வரை அரசராக இருந்த முராகமியின் வேண்டுகோளுக்கேற்ப 960ல் அதே பாடல் போட்டிக்காக இயற்றியிருக்கலாம் எனக் கருதுகிறார்கள். மறைத்தாலும் மறையாதது காதல் என்பதால் அதனால் அலர் எழுந்துவிடுகிறது. ஆமாம், அந்தக் காலத்தில் காதலை ஏன் மறைக்க இத்தனை மெனக்கெடுகிறார்கள்? இசேவின் கதைகள் தொகுப்பும் கென்ஜியின் கதைகள் தொகுப்பும் இதற்குத் தரும் விடை காதலர்களுக்கு இடையேயான பதவி வேறுபாடு. காதலர்களில் ஒருவர் உயர்ந்த பதவியில் இருக்கும்போது அவரைக் காதலிக்கப் பலர் போட்டியிடுவதுண்டு. அதில் ஏதும் சிக்கல் எழாமலிருக்க மறைத்து வைக்கவேண்டியது அவசியப்படுகிறது. 

போட்டியில் இயற்றப்பட்ட பாடல்கள் இவ்விரண்டில் சிறந்தது எதுவெனத் தேர்ந்தெடுக்க நடுவர் சனேயோரி மிகவும் சிரமப்பட்டதாகக் கூறுகிறார். இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்ததாக இல்லை. இருப்பினும் இத்தொகுப்பின் 40வது பாடலான கனேமொரியின் பாடல் சிறந்த பாடலாக அறிவிக்கப்பட்டது. அதற்குத் தர்க்கரீதியான காரணங்கள் ஏதுமில்லை. கனேமொரியின் பாடலை அரசர் முணுமுணுத்துக் கொண்டிருந்ததுதான் காரணம். இதனாலேயே இவர் மனமுடைந்து இருக்கலாம் எனக் கருதுகிறார்கள்.

வெண்பா:

எள்ளல் வருமெனக் காதலின் செய்தியை
உள்ளம் மறைப்பினும் அய்யுற்று - உள்ளல்
அறியவே காதலர் யாரெனக் கேட்குமே
காற்றின் கடிய அலர்

உள்ளல் – எண்ணல்

Series Navigation<< காதல் மறைத்தாலும் மறையாததுமறவேன் பிரியேன் என்றவளே! >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.