கடாரம் கொண்டான்

அமுதாவின் கணவன் இறந்து கொண்டு இருக்கிறான். ஒரு சில நொடிகளில் அவன் கதை முடியப் போகிறது. இத்தனைக் காலம் பேசமுடியாததை இப்போது பேசியே ஆக வேண்டும் போல அவன் உதடுகள் எதையோ கூற முற்படுகின்றன. அவன் பேச வருவதைப் புறக்கணித்து, அமுதா, உதடுகளை மறைத்து, நாசூக்காக நெடுநேரமாக அழுகிறாள்.  

அவர்களைச் சுற்றி நிறையப் பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு முகமும் தனித்தனியாக வேறுபட்ட துக்கங்களைப் பிரதிபலிக்கிறது.

ஒரு டாக்டர் எந்தவித சலனமுமின்றி வருகிறார். இறந்து கொண்டிருக்கும் அவன் வலது கண் இமையை உயர்த்திப் பார்க்கிறார். அதில் என்னவோ தெரிகிறது அவருக்கு. உதடுகளை உள்வாங்கி, அமுதா பக்கம் திரும்பி ஆழமாகப் பெருமூச்சு விடுகிறார்.

இதுதான் சாக்கு என்று அவளது தோளை நிறையத் தடவி, “சாரிம்மா.. இன்னும் கொஞ்ச நேரம் தான்.. சொந்தக்காரங்களுக்கு சொல்லிடுங்கம்மா” என்று கேனத்தனமாகக் கூறிவிட்டு நகர்கிறார்.

ஊர்ப்பட்ட சொந்தமும் போனவாரத்தில் இருந்தே பாத்ரூம் கூடப் போகாமல் கட்டிலைச் சுற்றித்தான் நிற்கிறது. இனிமேல் வரவேண்டும் என்றால் டீவி நியூஸில் சொல்லி வரவழைத்தால் தான் உண்டு.

அதற்கு இந்த இடம் தோதுப்படாது. ராஜாஜி ஹால் மாதிரி ஏதாவது வேண்டும்.

“அது போறுது போ… இதோ இதோன்னு இவன் போன வாரத்துலேருந்தே இழுத்துண்டு கிடக்கான்.. இந்த வாரமும் சாக மாட்டான் போலருக்கு. ஏதாவது ஒண்ணுன்னா எல்லா மோரக்கட்டையையும் ஒண்ணொன்னா காட்டிக் காட்டி .. இந்த மூஞ்சியெல்லாம் பாக்கலைன்னு யாரு அழுதா”

பாட்டிக்கும் மாதா கோவில் வெங்கல மணிக்கும் ஒரே குரல்.

எல்லோரும் சிரிக்கிறார்கள். ஊரெல்லாம் அழ வேண்டும் என்று மெனக்கெட்டுக் கூட்டம் கூட்டமாக அழு அழு என்று அழுது சீரியல் எடுத்தால், இங்கே கூட்டமாக சிரிக்கிறார்கள்.

“மொதல்ல டாக்டரை மாத்தணும். போனவாரமும் இந்த ஆள்தான் வந்து இதே மாதிரி சொல்லிட்டுப் போனான். ஒண்ணும் ஆகலை” என்று வருத்தப்பட்டாள் அம்மா.

“இல்லம்மா.. போன வாரம் வந்த டாக்டர் சின்னப் பையன்.. இவர் வேற” என்றாள் கணேசன் மனைவி.

ஒன்று மட்டும் நிச்சயம். எந்த டாக்டராலும் அமுதாவின் கணவனைக் கொல்ல முடியவில்லை.

கணேசன் போய் பாட்டியின் அருகில் அமர்கிறான். உடனே அவனது மூன்று வயது பெண் குழந்தை ஓடிவந்து அவன் மடியில் அமர்கிறது.

கணேசன் பாட்டியின் புஜங்களை வருடிக் கொடுக்கிறான்.

பாட்டி என்றால் நார்மடிப் பாட்டி இல்லை. நாகரீகப் பாட்டி. சுருக்கங்கள் இல்லாத ரவிக்கை அணிந்து இருக்கிறாள். காதில் வைரத்தோடு துலங்க கம்பீரமாக, தாத்தா போன இந்த பத்து வருடங்களில் ஓரிரண்டு சுற்றுகள் பெருத்தும் நிறத்தும் இருக்கிறாள்.

“ஏன் பாட்டி.. நீ நல்லவளாத் தான இருந்தே? ராமாயணம் வியாசர் விருந்துன்னு படி படின்னு படிச்சுண்டு இருந்தே.. இந்த கூட்டத்தோட சேர்ந்து இப்படிக் கெட்டுப் போயிட்டியே..”

“டேய்” என்று அதட்டினாள் அம்மா.

“இந்த ட்யூப்லைட்டு வெளிச்சம் போற மாட்டேங்கறதுடா.. படிக்க முடியலை..”

நிறைய சீரியல் பார்த்து பாட்டி குழம்பியிருந்தாள். அநேகமாக அதே நடிகர்கள் அநேக சீரியல்களில் வருவதில் எல்லா கதைகளையும் ஒருமாதிரி கதம்பமாக ஞாபகம் வைத்து இருந்தாள்.

ஆனால் தாத்தாவை விட பாட்டி பரவாயில்லை. தாத்தாவுக்குக் கடைசி வரை மைக்கேல் மதன காம ராஜன் புரியவில்லை. அவருக்குப் புரிய வைக்கும் பெரிய பொறுப்பு கணேசனுக்குக் கொடுக்கப் பட்டது. கணேசன் மிகவும் மெனக்கெட்டு, கடைசியில் அவனுக்கும் புரியாமல் போய்விட்டது. பாட்டி தான் கணேசனுக்குப் புரிய வைத்தாள். 

‘அதுக்கு’ ஒரு இழவும் புரியாது என்று தாத்தாவை முயலவில்லை அவள்.

பாட்டி அழகாகக் கதைகள் சொல்வாள். பழைய கால அம்புலி மாமா கதைகளில் ஞாபகம் இருப்பதில் தன் கற்பனைகளை ஒட்டவைத்து பொங்கல் எரித்த குழம்பு போல் வித்தியாசமாக நிறைய சொல்லி இருக்கிறாள்.

பேத்திகள் யாரையும் விட்டு வைக்கவில்லை அவள். 

தற்போது ஓரிரண்டு பற்கள் போய்விட்டதில் நாக்கு லேசாகக் குழறுகிறது. ழகரமாகப் பேசுகிறது கூட அழகாகத்தான் இருக்கிறது.

பாட்டியின் புஜங்களை அமுக்கி விட்டான். சிறு மூங்கில் கழியில் துணிப்பை மாட்டின மாதிரி கூடாக இருந்தது.

“பாட்டி, நான் வேணும்னா உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா? இப்பிடி சீரியல் பாத்து அவிஞ்சு போயிண்டு இருக்கியே?”

“கதை சொல்றேங்கறயா? பரவால்லயே? என்ன கதை?”

பாட்டிக்கு காது லேசாகத்தான் கேட்கிறது இப்போது.

“உனக்குப் பிடிச்ச மாதிரி சரித்திரக் கதை சொல்றேன்”

“தரித்திரக் கதையா? யாரோட தரித்திரம்?”

“நான் வேற தனியா தரித்திரக் கதை சொல்லணுமா? அதான் டீவியத் திறந்தா மூலைக்கு மூலை  இருக்கே? சரித்திரக் கதை பாட்டி” என்று சத்தமாகச் சொன்னான்.

“சரித்திரக் கதையா? ராஜாராணிக் கதைன்னு சொல்லப் படாதோ?”

கணேசன் கொஞ்சம் யோசித்து, “ராஜாராணிக் கதை இல்லை.. வெறும் ராஜாக்கதைதான்..”

” பொன்னியின் செல்வனா?”

“ம்ம்ம்.. பொன்னியின் செல்வன் இல்லை… பொன்னியின் பேரன்னு வைச்சுக்கலாம்”

“ராஜேந்திர சோழன் கதையா?”

“இதெல்லாம் தெரியுமே உனக்கு? எங்க, தாத்தாவோட தாத்தா பேரு சொல்லு பாப்போம்”

“அதுகள்லாம் என்னடா பண்ணித்து ஞாபகம் வச்சுக்கறதுக்கு?”

கணேசன் பதறி, “அவங்கள்லாம் பித்ருக்கள் பாட்டி. மரியாதை இல்லாம பேசறியே”

“நானே இப்போ பித்ரு தான்.‌ அம்பது வயசாயிடுத்துன்னா எல்லாருமே பித்ரு தான்”

“பித்ரு இல்லை சத்ரு” என்று அம்மா சொல்வாள் என்று நினைத்தான். அம்மா மனைவியுடன் சீரியலில் மூழ்கி இருந்தாள்.

அதுசரி.. என்றான் கணேசன் அலுப்பாய்.

அதற்குள் அம்மா, “பேசறதுன்னா வாசலுக்குப் போயிடணும்.. இங்கே ஹால்ல உக்காந்து தொணதொணன்னு பேசப் படாது.. ஒரு மண்ணும் காதுல விழ மாட்டேங்கறது” என்று இரைந்தாள்.

அதற்குள் அடுத்த சீரியல் ஆரம்பித்து விட்டது.

படுக்கையில் கிடந்தவன் செத்துப் போய்விட்டானா என்று தெரியவில்லை. 

கணேசன் பாட்டியை எழுப்பி விட்டான்.

குழந்தையை டெட்டி பியர் போல கைகளில் இடுக்கிக் கொண்டு வாசலுக்குப் போனான்.

வசதியாக அமர்ந்து கொண்டனர்.

குழந்தை மறுபடியும் மடியில் ஆடி ஆடி அமர்ந்து கொண்டாள்.

“என்ன கதைடா சொல்லப் போறே?”

 கடாரம் கொண்டான் என்றான் கணேசன்.

(2)

சுந்தரன் அலுப்பாக மாடிப்படி ஏறி உப்பரிகையை அடைந்தான். அதன் பலகணி வழியாக கீழே சிம்மாசனம் தெரிந்தது. 

இதோ அடுத்த வாரம் தேசாந்திரம் போயிருக்கும் சக்ரவர்த்தி ராஜேந்திர சோழ தேவர் வந்து விடப் போகிறார். தனக்கு அதில் அமரும் பாக்கியம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று பெருமூச்சு விட்டான். அதன் வேகத்தில் அங்கிருந்த திரைச்சீலை விலகி, ஆளுயரக் கண்ணாடி பளீரிட்டது.

சுந்தரன் தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டான்.

தலைப்பாகையை சரியாக்கும் போது அது நழுவி அவனது உள்வாங்கும் நெற்றி  தெரிந்தது. சமீப காலத்தில் இது வேகமாக விஸ்தரிக்கிறது. அகலமான தலைப்பாகை என்பதால் தானாக வழுக்குவதில்லை.

அரச கிரீடம் எப்படி இருக்குமோ?

அது தன் தலைக்குப் பொருந்தாமல் போய்விட்டால் என்ன செய்வது?

கிரீடத்தின் அளவை வைத்து அரசாளும் உரிமையை மாற்றி விடுவார்களோ? இப்பவே, தம்பி விக்ரமன் தலை நிறைய முடி வளர்த்து, பெரிய தலையுடன் வேண்டும் என்றே உலா வருகிறான். 

தலையை உத்தேசித்து அவனுக்குப் பதவியை  அளித்து விட்டால்?

தலைமைப் பொற்கொல்லனிடம் சொல்லி அதன் அளவை செப்பனிடச் சொல்ல வேண்டும். தலையை ஒன்றும் செய்ய முடியாது.

கிரீடத்தை மானசீகமாகத் தன் தலையில் சூட்டிக் கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டான் சுந்தரன்.

நல்ல வேளையாகக் கிரீடம் அவன் காதுகள் வரை மறைத்து விடும். என்றால் காதோரம் நரைத்திருக்கும் கேசத்தையும் மறைத்து விடும். வரும் ஆவணிக்கு நாற்பத்தெட்டு தான் ஆகப் போகிறது, அதற்குள் நரைத்து விட்டது. போகட்டும். இந்த உள்வாங்கும் நெற்றிதான் கவலையாக இருக்கிறது. இது இன்னமும் நீண்டு, சபையோர் முன் கிரீடம் வழுக்கிக் கொண்டு நழுவி விட்டால் மானபங்கம் ஆகிவிடும்.

மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கிரீடம் நழுவி விடாமல் கரகாட்டக்காரர்கள் மாதிரி அதிலேயே கவனமாக, அரியாசனத்தில்  நொடித்துக் கொண்டு அமர வேண்டும். கழுத்து வலிக்குமே என்று கவலை வந்து விட்டது அவனுக்கு.

அப்படியானால் ராஜாங்கம் எப்படி நடத்துவது?

இப்பவுமே சக்ரவர்த்தி இல்லாத இந்த இரண்டு வருடங்கள் ஒன்றும் சரியாக இல்லை என்று தலைமை அமைச்சர் நக்கலடிக்கிறார். துப்புரவுத் தொழிலாளி கூட மதிப்பதில்லை. மாளிகை முழுவதும் எங்கு பார்த்தாலும் ஒட்டடை.

இதற்கெல்லாம் காரணம் தன் பெயராகக் கூட இருக்கலாம்.

பதவியேற்ற உடன் முதல் காரியமாகப் பெயரை மாற்றி விட வேண்டும். ராஜாதிராஜன் என்று வைத்துக் கொள்ளலாம் என்று ஏதோவொரு மனைவி, தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது கூறியது ஞாபகத்திற்கு வந்தது.

 ராஜாதிராஜன் ராஜாதிராஜன் என்று இருமுறை கூறிக்கொண்டே, இடையில் கைவைத்துக் கொண்டு , வலது காலை உயர்த்தி அங்கிருந்த சிறு ஆசனத்தில் வைக்க மிகவும் பிரயாசைப் பட்டான்.

சுரீர் என்று முட்டி வலித்தது. வைத்தியரிடம் காண்பிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே காட்டி விட வேண்டும். முற்றிய பிறகு காட்டிப் பிரயோசனம் இல்லை.

அப்புறம், பாட்டனார் ராஜராஜ சோழ தேவருக்கு ஆன கதிதான் தமக்கும் நேரும்.

பாட்டனார் யாரோ பெயர் தெரியாத சிற்றப்பனுக்குப் பதவியை தியாகம் செய்ததை ஊரே மெச்சுகிறது. ஆனால், சொந்த மகனுக்கு அரியாசனம் தராமல் அதிலேயே அமர்ந்து வருடக்கணக்கில் எழுந்திருக்காமல் இருந்ததில் அவரை மூலநோய் தாக்கி விட்டது.

அதற்குப் பல வருடங்கள் முன்னால்,  ஒருமுறை, தன் தந்தையார் மன இறுக்கம் தீர வடதேசம் போய் வண்டி நிறையத் தாமிரப் பாத்திரங்களில் கங்கை நீரைக் கொண்டு வந்ததும், அவைகள் காற்றில் ஆவியாகாமல் இருக்க சிறுசிறு தாமிர பித்தளைச் செம்புகளில் அடைத்து பூசை சாமான்களோடு வைத்திருந்ததும் எவ்வளவு துல்லியமாக நினைவில் இருக்கிறது.

அப்போதும் கூட ஒரு துக்கிரி அமைச்சர் ஒருவர் தன் தந்தையார் முன் எகத்தாளமாக, சொம்பில் அடைத்த நீர் புழுத்துப் போகாதா என்று கேட்க, “அது கங்கை நீர்.. அது இமயத்தில் இருந்து வருவதால் அதில் புழுக்கள் வருவது இல்லை ” என்று கூறியதை எதிர்த்து வாதாட, அவர் நாவைத் துண்டிக்கச் சொல்லி தம் தந்தையார் கட்டளையிட்ட பின் தான் எகத்தாளங்கள் அடங்கின.

எல்லா சம்பவங்களுக்கும் மகுடம் சூட்டும் சம்பவம் ஒருநாள் நடந்தது.

தன் அத்தையார் சிறிய குந்தவை தேவி, ஆந்திர தேசத்தில் இருந்து நல்ல காரமான மாங்காய் ஊறுகாய் அனுப்பியதும், மகள் மீதான மிதமிஞ்சிய அன்பால் அதை சிவபிரான் காலடியில் வைத்து வணங்கி, ஆர்வ மேலீட்டால் அதை உடனே திறந்து, பெரிய சக்ரவர்த்தி ஒரு பெரிய விள்ளலை எடுத்து வாயிலிட்டு சுவைக்க, வந்தது விபரீதம்.

அதன் மிதமிஞ்சிய காரத்தால், ஏற்கெனவே மூலநோயால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்த பெரிய சக்ரவர்த்தி, புரைக்கேறி விக்கலில் தண்ணீருக்குத் தவிக்க, இளவரசரான தன் தந்தை பாய்ந்து சென்று அங்கே பூசையில் இருந்த, தான் பலவருடங்கள் முன்பு கொணர்ந்த கங்கைச் சொம்பு ஒன்றின் மூடியை வாளால் பிளந்து, அதை சக்ரவர்த்தியின் வாயில் ஊற்ற, அதில் இருந்த கிருமிகளால் கடுமையாகத் தாக்கப்பட்ட பெரிய சக்ரவர்த்தி அடுத்த சில மணி நேரங்களில் தன் தோல் முழுவதும் அரிப்பு நோயினால் பீடிக்கப்பட்டு, அது தீராமல் உடல் பூராவும் பரவி, ‘கிருமி கண்ட சோழனாக மக்கள் கண்களில் படாமல் தன்னை ஒளித்துக் கொண்டு, ஓரிரு வாரங்களில் மறைந்து போனார்.

அவர் கிருமியினால் இறந்ததால், அவர்கள் வழக்கப்படி அவர் பூதவுடலைப்  புதைக்காமல், எரியூட்டியதால் அவருக்கு நினைவு மண்டபம் எழுப்ப முடியாமல் போய்விட்டது.

நாள்பட்ட கிழவியான செம்பியன் மாதேவி போன்றவர்களுக்குக் கிட்டியது கூட பெரிய சக்ரவர்த்திக்குக் கிட்டவில்லை.

தன்னால் தான் தன் தந்தையார் இறந்து போய் விட்டார் என்று ஊர் தூற்றுமே என்று அஞ்சிய இளவரசர் பட்டமேற்றவுடன் வைத்தியர்களைக் கூப்பிட்டு, மூலநோய் முற்றி தோல் நோய் வந்ததாகக் கூற வேண்டும் என்று கட்டளை இட்டார்.

ஆனால் தலைமை வைத்தியர் “மூல நோயினால் தோல் நோய் வர வாய்ப்பில்லை இளவரசே” என்று கூறவும், ராஜேந்திர சோழ தேவர் உடனே ஒரு யாரங்கேயை விளித்து, “மூலநோயினால் தோல் நோய் வர வாய்ப்பில்லை என்று எழுதப்பட்ட ஓலைச்சுவடியை மேற்படி வைத்தியர் மூன்று நாழிகைக்குள் கொண்டு வந்து காண்பிக்காவிட்டால், அவரது மூலாதாரத்தை சிதைத்து விடுமாறு ஆணையிட, பயந்து போன எல்லா வைத்தியர்களும் ஒன்று சேர்ந்து, மூலநோயினால் தோல் நோய் என்ன தோல் சீவின நோய் கூட வர வாய்ப்புள்ளது” என்று அலறியதும் கூட இன்று போல் இருக்கிறது.

ஆனாலும் பெரிய சக்ரவர்த்தி ஊர்க்கண்களில் படாமல் ஒதுங்கி “கிருமி கண்ட சோழனாக”த் தன்னை மறைத்துக் கொண்ட போதும் மறக்காமல் அரியாசனத்தைத் தூக்கிச் சென்றதுதான் தன் தந்தையின் இனம் புரியாத கோபத்திற்குக் காரணம் என்று இப்போது புரிகிறது சுந்தரனுக்கு, மன்னிக்கவும், ராஜாதிராஜனுக்கு.

அது மட்டும் இல்லாமல், கிருமி கண்ட சோழனாக மறைந்த பெரிய சக்ரவர்த்தி, கங்கை நீர் உண்டதால் இறந்ததை மக்கள் அறியும் முகமாக, குடந்தையை அடுத்த இவ்விடத்தில் அவர் நினைவாக ஒரு மாளிகையும் ஒரு சிவாலயத்தையும் நிர்மாணித்து, “கங்கை கொன்ற சோழபுரம்” என்று அதைத் தன் தலைநகரமாகவும் மாற்றினார் ராஜேந்திர தேவர்.

காலப்போக்கில் கிருமி கண்ட சோழன் என்ற அவப்பெயர் நீங்கி கங்கை (நீர்) கொன்ற சோழராக பெரிய சக்ரவர்த்தி மாறியதுதான் எவ்வளவு பெரிய ராஜ தந்திரம்?

முடியாமல் விந்தி விந்தி உப்பரிகையில் இருந்து மேல் தளத்திற்கு ஏறினான் ராஜாதிராஜன்.

காததூரத்தில் வானளாவ நிமிர்ந்து வாவா என்றது சிவாலயத்தின் விமானம். பெரிய தேவரின் தஞ்சை விமானத்திற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அது சதுரமான கோபுரம். இது உருளை. ஆனாலும் கம்பீரம் குறையவில்லை.

தனக்கு ஆயுள் இருந்து அரியணை ஏறினால், அதற்கப்புறமும் ஆயுள் இருந்தால், இந்த மாதிரி ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

ஏழெட்டு காததூரம் வரை நீண்டது பார்வை. தஞ்சைத் தரணியைப் போல செழிப்பான இடம் இல்லை இது. 

காவேரிப்பாசனம் குடந்தையை ஒட்டியே முடிந்து விடுகிறது. அதற்காகக்தான் சக்ரவர்த்தி கோயிலை ஒட்டி ஒரு நீர்நிலையை உருவாக்கி வருகிறார். அது முடிவடைந்து விட்டால் ஊர் கொஞ்சம் செழிப்பாக மாறும்.

வெகுதூரத்தில் பெரிய அளவில் தூசி எழும்பி நெருங்கி வருவது போலத் தெரிகிறது.

சாளுக்கியன், சக்ரவர்த்தி இல்லாத நேரத்தில் படையெடுத்து வருகிறானோ? 

அதனால் என்ன? தந்தை இல்லாத நேரத்தில் தன் தோள்வலியைக் காண்பிக்கும் நேரம் வந்துவிட்டது.

நிஜமாகவே அவனுக்கு இடது தோளில் வலி இருக்கிறது. 

சேச்சே.. அதைப் போய் சாளுக்கியனிடம் காண்பிக்க அவன் என்ன வைத்தியனா?

வாள்வலி என்று தன்னை திருத்திக் கொண்டான் அவன்.

கீழே மெதுவாக இறங்கி, அமைச்சரை அழைத்து விபரத்தை சொல்ல, அவர்கள் எல்லோரும் பதறி, விக்ரமனை அனுப்பலாம் என்று முடிவெடுத்தனர்.

சுந்தரனுக்கும் தன் உடல் நிலையை உத்தேசித்து அது சரிதான் என்று தோன்றினாலும் தன் கடந்த கால பராக்ரமங்களை நினைவு கூறி, தானே தலைமை தாங்கி நடத்தப் போவதாக அறிவித்தான்.

முரசு கொட்ட, ஆளாளுக்குக் கூடி ஆயுதங்களை எடுப்பதற்குள் மேற்படி படை கோட்டை வாசலுக்கே வந்து விட்டது.

பார்த்தால் சக்ரவர்த்தி. தன் அயல் தேச யாத்திரையை முடித்து விட்டு, முன்னதாகவே திரும்பி விட்டார்.

சக்ரவர்த்தி பத்திரமாகத் திரும்பியதும் ஊரே அல்லோலகல்லோலப் பட்டது.

கேளிக்கைகள். விருந்துகள்.

சக்ரவர்த்தி தன்னுடன் நிறைய பாறை வண்டிகளில் கூடை கூடையாக எதையோ கொணர்ந்திருந்தார்.

கரும் பச்சையில் கரடு முரடாக சற்றே பெரிய அளவில் ஏதோ காய்கள்.

வந்த உடனேயே சக்ரவர்த்தி அமைச்சரவையைக் கூட்டினார். மற்ற முக்கியஸ்தர்களும் பங்கு பெற்றனர்.

தன் நீண்ட நாள் கனவான கப்பல் ப்ரயாணம் நல்ல படியாக முடிந்தது என்றும் திரும்பும் வழியில் கடாரத்தில் இறங்கி இளைப்பாறியதாகவும் கூறினார்.

தமது மகன்களில் ஒருவரை கடாரத்து இளவரசிக்கு மணமுடிக்கும் பேச்சு வார்த்தை நல்ல படியாக முடிந்ததில், கடாரத்தின் மன்னர் மகிழ்ந்து கப்பல் நிறைய, அந்த தேசத்தின் விவசாய அற்புதமான, நமது தேசத்து நார்த்தங்காய்க்கு சமமான காய்களையும் விதைகளையும் முன்பணமாகத் தந்ததாகக் கூறினார்.

அதற்குள் அமைச்சர்களில் ஒருவர் அவசரப்பட்டு அந்தக் காயொன்றைக் கடித்துப் பார்க்க அதன் காரமான புளிப்பை எதிர்பாராத அவர் முகம் அஷ்டகோணலாக மாறியது.

சக்ரவர்த்தி அவரைக் கோபித்து, இந்தக் காய் சமையலுக்கானதல்ல என்றும் தயிர்சாதம் உண்ணும்போது தொட்டுக் கொள்ள உபயோகப்படும் ஊறுகாய் வகையை சார்ந்தது என்றும் கூறினார்.

தொடர்ந்து அதை எங்கு பயிரிடுவது என்று விவாதம் நடந்தது.

அது ஊறுகாய் வகையை சார்ந்தது என்பதால் அதற்கு கடல்சார் உவர்ப்பு நிலங்கள் உகந்தது என்பதும், திருக்கண்ணபுரம் தாண்டிக் குடமுருட்டி கடலில் கடக்கும் இடத்தில் அதைப் பெரிய அளவில் பயிரிடுவது என்றும் தீர்மானம் செய்யப் பட்டது.

இப்போது சக்ரவர்த்தி ஒரு முக்கியமான நடவடிக்கை எடுத்தார். அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன், சரித்திரத்தையே புரட்டிப் போட்டது.

சக்ரவர்த்தி மெதுவாக மேற்படி காய்கள் பயிரிடப்படும் இடம் “கடாரம் கொண்டான்” என்று இனிமேல் அழைக்கப் பட வேண்டும் என்று ஆணையிட்டார்.

அவையோர் ஒருக்கணம் துணுக்குற்றனர்.

மூத்தவரான தலைமை அமைச்சர் மட்டும் துணிவை வரவழைத்துக் கொண்டு குரலைத் தாழ்த்தி “மன்னா, மன்னிக்கவும்.. அவ்விதம் அழைப்பதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளனவே” என்றார்.

“பீடிகை போடாமல் என்னவென்று கூறுங்கள் “

“முதலாவது, கடாரம் கொண்டான் என்றால் கடாரத்தை வென்றவன் என்று பொருள் படுகிறதே”

“ஏன், கடாரத்தில் இருந்து காய், அதாவது கடாரங்காய் கொணர்ந்தவன்” என்றும் கூறலாமே?

“அதெப்படி மன்னா.. அதற்கு நேரடியாக கடாரங்காய் கொணர்ந்தவன் அல்லது உங்கள் திருப்திக்காகக் கடாரங்காய் கொண்டான்” என்று கூறுவது தானே போதிக்கப்பட்ட நேர்மை.

“நேர்மையா?” மன்னர் பெரிதாக சிரித்தார். காய் என்ற இரண்டு எழுத்துக்களை விடுவிப்பதால் நேர்மை பழுதடைந்து விடுகிறதோ?

“அப்படித்தான் நல்லுலகம் கூறும் கொற்றவரே”

“பாரதத்தில் யானையைக் கொன்று விட்டு அசுவத்தாமனைக் கொன்றேன் என்று பொய் கூறி யுத்தம் வென்றது, யானை என்ற இரண்டு எழுத்துக்களை மறைத்ததால் அல்லவோ? அந்த யுத்தத்தைத் தாங்கள் பல நூற்றாண்டுகளாக தர்மயுத்தம் என்று வேறு கொண்டாடுகிறீர்கள். யானை என்ற இரண்டு எழுத்திற்கு காய் என்ற இரண்டு எழுத்து சரியாகி விட்டது எனக்கு. உமக்கு?”

“ஆம்.. எங்களுக்கும்” என்று ஒரு கூச்சலே எழுந்தது. 

மன்னர் சிரித்துக் கொண்டே அடுத்தது என்ன என்று வினவினார்.

“மன்னா, நாம் இங்கே கடாரத்தை வென்றோம் என்று எழுதிக் கொண்டது கடாரத்தில் தெரிந்து விட்டால் யுத்தம் மூளும் அபாயம் உண்டு”

“அதெப்படி அவர்களுக்குத் தெரியும்? நாம் நமது சரித்திரத்தில் தானே எழுதப் போகிறோம். அவர்கள் ஊரில் போய் அவர்கள் சரித்திரத்தில் எழுதப் போவது இல்லையே?”

“இன்று இல்லாவிட்டாலும் என்றைக்கோ தெரிய வந்தால்?”

“ஒரு போதும் தெரிய வராது”

“எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள் மன்னவரே?”

“அனுபவம் தான்.. ஒருத்தரை நமக்குப் பிடித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்.. அவர்களை உயர்த்த வேண்டி, என்ன மாதிரியான பொய்களையும் கட்டுக்கதைகளையும் அவிழ்த்து விடலாம்.. மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.. மாறாக, பிடிவாதமாக அந்தப் பொய்களை பொய்கள் தான் என்று தெரிந்தும் நம்புவார்கள்”

“அப்படியா சொல்கிறீர்கள்?”

“ஆமாம் “

“ஆனால், நமது திருத்தப்பட்ட சரித்திரத்தைப் படிப்பவன் நம்மை அறியாதவன் அல்லது வேண்டப் படாதவனாக அல்லவா இருப்பான்?”

“அவன் ஒருக்காலும் படிக்க மாட்டான் “

“எப்படி சொல்கிறீர்கள் அரசே”

“இதில் பெரிய சித்தாந்தம் ஏதுமில்லை..

நம்மாட்கள் நம் சரித்திரத்தையே படிப்பதில் ஆர்வம் இல்லாதவர்கள்.. யாரேனும் சாகித்திய கர்த்தாக்கள் நம்மைப் பற்றி ஏதேனும் புனைந்துரைக்கும் புனைவுகளை சுவாரஸ்யமான நடையில் சொன்னால் அது உண்மையென்று நம்பிவிடும் அப்பாவிகள்.. நம் சரித்திரத்தையே படிப்பதில் ஆர்வம் காட்டாதவன் அடுத்தவன் சரித்திரத்தை ஏன் படிக்கப் போகிறான்? இது உலகம் முழுதும் பொருந்தும்.”

“மன்னா.. அப்படி என்றால் நாம் வேல், வாளெல்லாம் ஏந்தாமல் பல நாடுகளை வெல்லலாம் போலிருக்கிறதே”

“ஆம்.. அதைத்தான் நானும் சொல்கிறேன் “

இப்போது வாயடைத்துப் போயிருந்த ஒரு இளவயது அமைச்சர் எழுந்து நின்றார். அவருக்குத் தலைமை அமைச்சர் உத்யோகம் மீது நெடுநாளாக ஒரு கண்.

என்ன என்று கண்களால் வினவினார் சக்ரவர்த்தி.

“பார் புகழும் வேந்தே.. ஒரு விண்ணப்பம் “

“கூறுங்கள் “

“நமது தலைநகரைத் தாங்கள் அற்புதமாக நிர்மாணித்து கங்கை கொன்ற சோழபுரம் என்று அழைக்க ஆணையிட்டு பல வருடங்களாக நடந்து வருகிறது.”

“ஆம்.. அதற்கென்ன? நன்றாகத் தானே போய்க் கொண்டு இருக்கிறது?”

“இல்லை.. அதை சற்றே மாற்றி கடாரம் கொண்டான் போல கங்கை வென்ற சோழபுரம் என்று மாற்றினால் என்ன?”

“ஆஹா.. ஆஹா..” என்றார் மன்னர்.

ஆனால், தலைமை அமைச்சர் ஒப்புக்கொள்ளவில்லை. அவருக்கு இளம் அமைச்சரின் நோக்கம் தெரியும்.

“அது நேரடியாக மக்கள் மனதில் நம்மைப் பற்றிய பழியுணர்ச்சியை ஏற்படுத்தி விடும்.. நாம் அவர்களை ஏமாற்றுவது அவர்களுக்குத் தெரியக் கூடாது “

“அதுவும் சரிதான் “

இப்போது இளம் அமைச்சர் தன் வாய்ப்பை விடுவதாக இல்லை.

“மன்னா.. ஆனாலும் இப்போதைய பெயர் தங்கள் மாண்பினை உயர்த்துவதாக அமையவில்லை என்பது என் கருத்து “

தலைமையும் தயாராக இருந்தது.

“அப்படியானால் வென்ற என்பதற்குப் பதில் கொண்ட என்று மாற்றி விடுவோம். ஒருவிதத்தில் நம் மன்னர் தானே கங்கையை செம்புகளில் கொணர்ந்தவர்.. அவர் பெயரிலேயே மூன்றெழுத்தான செம்பை மறைத்து, கங்கை கொண்ட சோழபுரம் என்று மாற்றுவோம்.”

இப்போது பாட்டி இடைமறித்தாள்.

“கணேசா.. நீ இட்டுக் கட்டினது போறும்.. ஆதிகாலத்துலேருந்து கப்பல்கள்ல படையெடுத்துப் போய் பல நாடுகளை ஜெயிச்சு இருக்கோம்னு சொன்னது பொய்யா?”

“அது தெரியாது பாட்டி.. ஆனா நான் ஒண்ணு கேக்கறேன்”

“கேளு”

“ஒரு கப்பல்ல எவ்வளவு பேரு போக முடியும்? அந்தக் காலத்துல கத்தி கபடாவோட முப்பது நாப்பது பேர் போகலாமா? அதுவும் எவ்வளவு நாள் போக முடியும்? சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க? அதுவும் உன்னை மாதிரி ஆளுங்கன்னா மடிசமையல் வேற தனியா சமைக்கணும்.. குமுட்டி, ஈயச்சொம்பெல்லாம் எடுத்துண்டு போகணும்”

“நான் என்னிக்குடா மடிச்சமையல் கேட்ருக்கேன் தடிப்பயலே.. அது அந்த தடிச்சி, எங்க மாமியார்க்கெழவி காலத்தோட போயாச்சு “

“சரி.. சாதா சமையலே ஆகட்டும்.. கடலா இருந்தா பசிக்காதா? சுமாரா ஒரு இருபது கப்பல்ல ஐநூறு பேர் ஆஞ்சு ஓஞ்சு போயி ஒரு நாட்டுல எறங்கினா, கத்தியைத் தூக்கிண்டு சண்டைக்கா போக முடியும்? தட்டை ஏந்திண்டு தயிர் சாதமாவது போடுடாப்பான்னு தானே கேக்க முடியும் “

பாட்டியின் முகபாவம் கணேசன் சொன்னதில் இருந்த உண்மையை ஏற்றுக் கொண்ட மாதிரி தான் இருந்தது.

“ஏண்டா.. அப்படீன்னா நாம கடல் கடந்து கடாரம்லாம் ஜெயிக்கலையா? 

வெறும் கடாரங்காயை வாங்கிண்டு வந்து புருடா விட்ருக்கான்களா?”

“பின்னே.. நீ மத்த நாட்டையெல்லாம்  ஜெயிச்சது அவன் ஊரு ஹிஸ்டரில இருக்க வேண்டாமா?”

“இருக்கணும் தான்.. அதையெல்லாம் யார் படிச்சிருக்கப் போறாங்க? அது சரி, அப்போ கரிகாலன் இமயத்துல புலிக்கொடி நாட்டினது?”

“நிரூபிக்க முடியாத எதுவுமே உடான்ஸ்தான்.. கரிகாலன் போனது தான் போனான்.. புலிக்கொடியை நாட்டறதுக்குப் பதிலா ஒரு புளிய மரத்தை நட்டுட்டு வந்திருந்தா அதோட ஏதாவது ஒரு வித்து இப்பவும் இருந்திருக்கும்..”

“அடப்போடா கணேசா.. கடைசீல பொசுக்குனு போயிடுத்துடா.. கடாரம் கொண்டான்னு கதை சொல்லி ஏமாத்திட்டானே கடங்காரன்”

“அது கடங்காரன் இல்லை பாட்டி.. கடாரங்காய்” என்றாள் குழந்தை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.