
மார்ச் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையும் அதைத்தொடர்ந்து வந்த ஏழெட்டு நாட்களும் இப்படி இருந்திருக்க வேண்டும்.
மானஸாவின் சக-மாணவிகள் ஃப்ளாரிடாவின் கடற்கரைகளில் தங்கள் உடலின் பெரும்பகுதியை சூரியனின் வெம்மையான கதிர்களுக்கும் சபல மனமுடைய ஆண்களின் பசிப்பார்வைகளுக்கும் விருந்து படைக்க, பாரம்பரியத்தில் ஊறிய ஒருசில தோழிகள் பிறந்த வீட்டில் கையசைக்காமல் விருந்தினர் போல நடந்துகொள்ள…
அவளுடைய அலைபேசி காலன்டரில் வரிவரியாக நிரல்கள்.
சனிக்கிழமை புத்தக வெளியீடு அட்லான்ட்டாவின் ‘ஆக்னஸ் ஸ்காட் கல்லூரி’ நிழலில். முதல் பிரதியை இளம் வயதினருக்கான நாவல்கள் எழுதிய பெக்கி பெர்னாட் வாங்கி நூலின் சிறப்பை விவரிக்கிறார். ‘தலைமுறை இடைவெளியை க்ரான்ட் கான்யன் போலப் பெரிதுபடுத்தும் இக்காலத்தில் தன் தாயின் பெருமையைக் கலையுணர்வோடு சித்தரிக்கும் மானஸாவின் கதைகள் புது உலகுக்குப் பாலம். எளிய ஆனால் இழுத்துவைக்கும் நடை…’ அதைத்தொடர்ந்து மானஸாவின் நன்றியுரை. புத்தகத்தை வாங்கி அவளிடம் கையெழுத்துக்காக நீட்டும் வாசகர்கள். கையெழுத்துடன், ‘முதல் முயற்சியின் வரவேற்பு என் அடுத்த புத்தகத்துக்குத் தூண்டுதல்’, ‘உங்கள் ஆதரவை நினைவில் போற்றிவைப்பேன்’ போன்ற வாசகங்கள்.
அடுத்த ஐந்து நாட்கள். மயாமி, டல்லஸ், ஷிகாகோ, எல்ஏ, சான்ஃப்ரான்சிஸ்கோ நகரங்களுக்கு விமானப் பயணங்கள். விடுதிகளில் உணவு. புத்தகக்கடைகளில் கூட்டங்கள். நேர்காணல்கள். ஒவ்வொரு ஊரிலும் அவள் கையெழுத்திட்ட பிரதிகளை முழுவிலைகொடுத்து வாங்கும் ரசிகர்கள் ஐந்து பேர் இருந்தாலே அவளுக்குப் பெருமை.
கடைசியில் சியாட்டில். கங்காவின் கல்லூரித்தோழி இல்லத்தில் ஒருநாள்.
வெள்ளிக்கிழமை வீடு திரும்பி இரண்டு நாள் ஓய்வுக்குப்பின் மறுபடி ட்யுக் பல்கலைக்கழகம், வகுப்புகள், தேர்வுகள்.
அவளுக்குத் துணையாக அவள் தந்தை, அவர்கள் இருவரையும் குறிப்பிட்ட நேரத்தில் எல்லா இடங்களுக்கும் அழைத்துப்போக அலெக். எல்லாருக்கும் சேர்த்து எல்லா செலவுகளும் ஷார்ப்பரின் கணக்கில். மானஸாவின் பெருமையில் குறுக்கிடாமல் ஒதுங்கிநிற்க புத்தகத்தின் நாயகி கங்கா பிப்ரவரி நடுவிலேயே சென்னை சென்றுவிட்டாள். அவர்கள் பயணம் தொடங்கியபிறகே திரும்பி வருவதாக இருந்தாள்.
பரபரப்பான பயண நிரலின் முதல் வரி, வெள்ளிக்கிழமை காலை அட்லான்ட்டா. இரண்டு நாள் முன்னதாக அப்பயணத்துக்கு ஏற்பாடு செய்தபோது அலைபேசியில் அவள் தந்தையிடம் இருந்து வந்த தகவல்.
– புத்தக வெளியீட்டில் ஒரு சிக்கல் –
அச்சிடுவதில் தாமதமோ?
அவருடன் தொடர்பு கொள்வதற்குமுன், ஷார்ப்பரின் ஏஞ்சல் டியாகோவிடம் இருந்து அழைப்பு.
“எப்படி இருக்கிறாய்? மனா!”
“நல்லபடியாக. நான்கு வகுப்புகளின் பாடங்கள் தலைக்குமேல். அனுபவித்து சாப்பிடக்கூட நேரம் இல்லை. நீ?”
“ஓ! ஃபைன்.” சம்பிரதாய பதிலைத் தொடரந்து, “வுஹான் கேள்விப்பட்டு இருப்பாய்.”
“அங்கே ஒருவித வைரஸ் சந்தை பிராணியிடம் இருந்து மனிதர்களுக்குத் தாவி…”
“இது இரண்டு மாதப் பழைய தகவல்.”
போகிறபோக்கில் காதிலும் பார்வையிலும் விழுந்த செய்திகள் தான் அவளுக்குத் தெரியும்.
“அது மிக வேகமாகப் பரவி வருகிறது. சியாட்டிலுக்கு வந்துவிட்டது. அந்த அச்சத்தில் வால்ஸ்ட்ரீட் ஏற்கனவே இறங்கத் தொடங்கிவிட்டது.”
அப்படியென்றால் ஆபத்தான நிலைமை.
“அதனால்…”
“ஒரு வார இளவேனில் விடுமுறையை வீட்டில் குடும்பத்துடன் அனுபவி!”
“புத்தகவெளியீடு…” அதிர்ச்சியில் குரல் ஒடுங்கியது.
“இலைகள் உதிரத்தொடங்கியதும். அப்போது எல்லாரும் ஆறு அடி தள்ளி நின்று…”
‘அதை இப்போதே செய்யலாமே’ என்று ஏனோ சொல்லத்தோன்றவில்லை.
அவள் தந்தை அழைத்தபோது,
“புத்தகம் வெளிவந்த பிறகு வைரஸ் மனிதனுக்குத் தாவியிருக்கக் கூடாதோ? அது கூட சரியில்லை. தாவாமலே இருந்திருக்கலாம்.”
“எனக்கும் அதே எண்ணம்.”
“இவ்வளவு ஏற்பாடுகளையும் தள்ளிப்போடுவதில் எவ்வளவு சிரமம்?”
“வியாபார நிறுவனங்களுக்கு இதெல்லாம் சாதாரணம்.”
“அச்சிட்ட பிரதிகள்?” என்று மானஸாவுக்கு இன்னொரு கவலை.
“இப்போ ஆயிரக்கணக்கில் அச்சிடுவது இல்லை. ஆரம்பத்தில் ஐநூறு. அது வேகமாக விற்றுப்போனால் இன்னும் ஒரு ஆயிரம்.”
புத்தகம் முந்தைய ஆகஸ்ட்டில் நிறைவுபெற்று பல இதழியலாளர்கள் கைகளை அடைந்தாலும் மார்ச் ஆரம்பத்தில் மற்ற ஊடகங்களின் போட்டி இராது என்று புத்தக வெளியீட்டை ட்யுக் இளவேனில் விடுமுறைக்கு ஏஞ்சல் தள்ளிப்போட்டு இருந்தாள்.
“இன்னொரு ஆறு மாசம்” என்றாள் நிலமையை ஏற்கும் குரலில்.
“சரி, நாங்க அட்லான்ட்டா வரப்போவது இல்லை. நீயும் இங்கே வர்றதுக்கு உன் டிக்கெட்டை மாற்றிவிட்டுத் தகவல் அனுப்பு.”
அப்படிச் செய்வது எளிதாக இல்லை. வெள்ளிக்கிழமை ஆர்டியு(ராலே-ட்யுரம்)வில் இருந்து காலை பதினோரு மணிக்குக் கிளம்பி, இரண்டு இடங்களில் (சின்சின்னாட்டி, லூயிவில்) மாறி பிஎன்ஏ(நாஷ்வில்) போய்ச்சேர இரவு ஒன்பதுக்கு மேல். ஒரு நாள் முழுக்க வீணாகும். பயணத்தை சில நாள் தள்ளிப்போடலாமோ? அதைத் தீர்மானிப்பதற்குள் அலைபேசியில் தகவல்.
இப்போது பேசமுடியுமா? – மந்தாகினி.
அவளிடம் இருந்து தகவல்கள் வந்திருக்கின்றன – கடைசிக்காட்சி பிரமாதம். அம்ருதா எபிசோட் நான்கு நாளிலேயே முடிந்துவிட்டது. ஆசம், க்ரேட் என்று பதில் அனுப்பி மானஸா மற்ற வேலைகளைக் கவனிப்பாள். இப்போது அவளே மந்தாகினியை அழைத்தாள்.
“என்ன விஷயம்?”
“அக்கா! இந்த வாரம் உன் புக் ரிலீஸ்.”
“வைரஸ்னால ஆறு மாசம் தள்ளிப்போட்டுட்டாங்க.”
“ஓ! ஐம் சாரி, அக்கா!”
“என்னை விடு! உன் சீரிஸ் என்ன ஆச்சு?”
“அதை சொல்லத்தான் கூப்பிட்டேன். முடிந்த மாதிரி தான். சனிக்கிழமை மொத்தத்தையும் போட்டுப் பார்க்கப் போறோம். உன்னால..”
“கட்டாயம் வரமுடியும்.”
பழைய திட்டப்படி அட்லான்ட்டா.
அந்த செமிஸ்டர் தொடங்குமுன் மந்தாகினியின் வீட்டில் தங்கினாள். அதன் பாதியில் மறுபடி அதே இல்லம். சனிக்கிழமை விழித்ததும் வீட்டில் அமைதி. அது குலையும்வரை எண்ண அலைகள். ஏஞ்சலுடன் பேசியதும் வந்த ஏமாற்றம் விமான நிலையத்தின் வெளியே வண்ண ஆடையில் காத்திருந்த மந்தாகினியைப் பார்த்ததும் மறைந்து போனது. சஹாதேவனும் சிவரஞ்சனியும் கொடுத்த உபசரிப்பில் சொந்த வீட்டிற்கு வந்ததுபோலத் தோன்றியது. புத்தகத்தைப் பற்றிய பேச்சை யாரும் எடுக்கவில்லை. கடல்கடந்து வந்தாலும் சொந்தம் விடாது என்பது உண்மை தானோ?
சமையலறையில் சத்தம் எழுந்ததும் அவளும் எழுந்து அங்கே வந்தாள்.
“நல்லா தூங்கினியா? மானஸா!”
“யெஸ், மாம்!”
“எனக்கும் உன்னைப் பார்த்ததிலேர்ந்து பெண் மாதிரி பாசம். படிப்பெல்லாம் எப்படி போகுது?”
“நல்லபடியா.”
“சந்தோஷம்.”
“என் புத்தகத்துக்கு முன்னாடியே சீரிஸ் வந்தா ஆச்சரியப்பட மாட்டேன்.”
“மந்தாகினி சொன்னா. கவலைப்படாதே! ஆறு மாசம் ஓடிப்போயிரும்.”
சின்ன திரையரங்கு.
மானஸா, மந்தாகினி, அவள் பெற்றோர்கள், டிரெக்டர் அனந்த் கோஷ்.
பின்வரிசையில் பீச்-ஃப்ளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பலர்.
தயாரிப்பாளர் டேவிட் மோர்கன்,
“கலாவதி’ஸ் டிலெமா திட்டமிட்ட காலத்துக்கு முன்பே முடிவு பெற்றதற்கு இங்கே இருக்கும் பலரின் உழைப்பு காரணம். அனைவருக்கும் பொதுவான நன்றி! முழுத்தொகுப்பையும் பார்த்த பத்துப் பன்னிரண்டு ரசிகர்களின் மதிப்புரைகள் ஊக்கம் தருவதாக இருக்கின்றன. கலாவும் ஷானும் சந்திக்கும் காட்சி மட்டும் பாக்கி. மே மாதத்தில் விவசாயிகள் சந்தை தொடங்கிவிடும். ஒரு நிஜமான சந்தையிலேயே அதைப் படம்பிடிக்க ஆசை. செப்டெம்பர் பின் பாதியில் வாரம் ஒரு எபிசோட் வெளிவரப் போகிறது. இப்போது உங்கள் பார்வைக்கு…”
ஒவ்வொரு பகுதி முடிந்ததும் சிறு இடைவெளி. அதைப்பற்றி யோசிக்கவும் அடுத்த பகுதிக்கு அழைத்துப்போகவும். அறிமுக மற்றும் இறுதிப் பகுதிகள் இல்லாததால் ஒவ்வொன்றும் இருபத்திமூன்று நிமிடங்கள். முடிவில் டேவிட் மார்கள் மானஸாவின் பக்கம் கைநீட்ட அவள் எழுந்து அரங்கை நோக்கி நின்றாள்.
“ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் படித்து ரசித்திருக்கிறேன். அவருடைய ஒப்பற்ற கதாபாத்திரங்களுக்கு அக்காலத்து மேடை நடிகர்கள் எப்படி உயிர்கொடுத்தார்கள் என்று நமக்குத் தெரியாது. ஒளிப்பதிவு வரும்வரை அந்தக் கலைஞர்களின் சாதனைகள் நீரில் வரைந்த கோலங்கள். நான் எழுதிய வார்த்தைகளும் விவரித்த காட்சிகளும் வெறும் எலும்புக்கூடு. அவற்றை உயிருடன் பார்க்கும்போது நடிப்பு என்பது எப்படிப்பட்ட அருமையான கலை என்பதை உணர்கிறேன். நான் மந்தாகினியை சில மாதங்களுக்கு முன் சந்தித்து சிறிது நேரமே அவளுடன் பழகினாலும் அவள் என் தங்கை. உலக விவரம் தெரியாத சிறுபெண்ணாக விளையாடி, ஷானை சந்தித்தபிறகு இரண்டு பண்பாடுகளுக்கு நடுவில் தவித்து, கடைசியில் அவனுக்கு தன்னைச் சமர்ப்பிக்கும் கலாவதி இப்போது எனக்கு இன்னொரு தங்கை. இருவருக்கும் இடையே அவ்வளவு வித்தியாசம்! எப்படிப்பட்ட சாதனை!”
“நீ எழுதியதற்கும் படத்திற்கும் வித்தியாசங்கள்.”
“நான் கவனிக்கவில்லை. அப்படியே இருந்தாலும் அவை தரத்தை உயர்த்துகின்றன.”
கூட்டம் கலைவதற்கு முன் சிறு குழுக்களாகச் சேர்ந்து கனமற்ற உரையாடல்கள். மானஸா படத்தயாரிப்பில் பங்கெடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களின் பாராட்டுகளை சேகரித்தாள்.
முக்கியமாக, ஷானாக நடித்த இளைஞனிடம், அவன் பெயரும் ஷான் (டேவீஸ்) என்பதால்,
“நீ எந்த ஷான்?” என்று சந்தேகம் கிளப்பினாள். அவனும் பதிலுக்கு,
“எனக்கே மறந்துவிட்டது.”
“அந்த அளவுக்கு நீ நடித்திருக்கிறாய்.”
“தாங்க்ஸ், மானஸா! அடுத்த பருவத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.”
சற்று தனித்து நின்ற சமயம், பதின்பருவத்தைத் தாண்டாத ஒரு இளைஞன் மானஸாவைத் தேடிவந்தான்.
“நானும் ட்யுக் முதலாண்டு மாணவன். பிரதான பாடம் பொருளாதாரம். ‘ஏ பி ட்யுக் ஸ்காலர்’ என்பதால் உன்னை எனக்குத் தெரியும். நான் பெர்னி சான்டர்ஸ்” என்று கைநீட்டினான்.
அதை அழுத்திப்பற்றி,
“மதிப்புக்குரிய செனட்டரை சந்தித்ததில் பெருமைப்படுகிறேன்” என்று புன்னகைத்தாள்.
“ம்ம்.. அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றால் நாடு புதிய பாதையில் கால்வைக்கும். ஆனால் அப்படி நடக்கும் என்று தோன்றவில்லை” என்றான் வருத்தத்துடன்.
மந்தாகினியின் கலகல சிரிப்பு காதில் விழ,
“ட்யுக் ஸ்காலர் என்பதைவிட இப்படியொரு சீரிஸை எழுதியவர் என்பது தான் உன்னுடைய உயர்ந்த சாதனை” என்று உரையாடலைத் தொடர்ந்தான்.
“தாங்க்ஸ்! என் எண்ணமும் அதுதான்.”
“நான் உன்னைத் தேடிவந்ததற்கு இன்னொரு காரணம். எப்போது ஊருக்குத் திரும்பிப் போகிறாய்?”
“முடிந்தால் நாளை.”
“எதாவது திட்டம்?”
“இதுவரை இல்லை.”
“நான் கூட்டிப்போகிறேன்.”
எப்படி ஏன் என்ற கேள்விகள் மானஸாவின் முகத்தில்.
“என் பெற்றோர்கள் அக்கௌன்ட்டிங் நிறுவனம் நடத்துகிறார்கள். பூதாகாரமாக வளர்ந்துவிட்ட அட்லான்ட்டா பிடிக்காமல் போய்விட்டது. ப்ரென்ட்வுட்டில் வீடு வாங்கி இருக்கிறார்கள். சாமான்கள் போய்விட்டன. நாளை நாங்கள்.”
“சௌகரியமாகப் போய்விட்டது.”
“மந்தாகினி இடத்துக்கு வந்து உன்னை அழைத்துப்போகிறேன்.”
“தாங்க்ஸ்.”
மந்தாகினிக்கு எதிர்காலம் பற்றிய கனவுகள். கலாவதி நிச்சயம் நான்கு ஆண்டுகள் போகும். நடுவில் திரைப்படத்தில் நடிக்க அழைப்பு வரலாம். மானஸாவுக்கு மனதின் ஆழத்தில் சோகம். புத்தக வெளியீடு தள்ளிப்போட்டதாலா? கோவிட் எப்படி தினசரி வாழ்க்கையைப் பாதிக்கும் என்ற கவலையிலா? எதுவானாலும் மந்தாகினிக்காக முகத்தில் மலர்ச்சி காட்டினாள்.
மறுநாள் மதியம் அட்லான்ட்டாவில் இருந்து கிளம்பிய சான்டர்ஸ் குடும்ப ஊர்தியில் இன்னொரு பயணி.
திங்கள்கிழமை கங்கா இந்தியாவில் இருந்து திரும்பிவந்தாள். விமான நிலையத்தில் பகீரத்தைப் பார்த்ததும்,
“ப்ளேன் பறக்கற வரைக்கும் சென்னையிலயே தங்கணுமோன்னு பயந்துண்டே இருந்தேன்.”
“நல்ல வேளை! இன்னும் ஒரு வாரம் போனா நிலைமை தீவிரமாப் போயிருக்கும்.”
மானஸாவின் புத்தக வெளியீடு தள்ளிப்போனதைத் தெரிவித்து,
“அவ கொஞ்சம் டிப்ரெஷன்ல இருக்கா. நான் அந்தப் பேச்சையே எடுக்கறதில்ல.”
“நானும் அப்படியே செய்யறேன்.”
அந்த வாரம் முடிவதற்குள் அரசினர் பள்ளிக்கூடத்தின் எட்டாம் வகுப்பு ஆசிரியர் ஒருவருக்கு வைரஸ் ஜுரம். மாவட்ட கல்விக்கூடங்கள் மூடப்பட்டன. அலெக்கும் மானஸாவுடன் வீட்டில் தங்கினான்.
அடுத்த நாள் கல்லூரியின் இளவேனில் விடுமுறை இன்னொரு வாரம் நீட்டிக்கப்பட்டதாகத் தகவல்.
வியாழன் நினைக்கக்கூடாத ஒன்று. கல்லூரிகள் பங்குபெறும், மூன்று வாரங்கள் நீடிக்கும் கூடைப்பந்து போட்டிப்பந்தயங்கள் ரத்துசெய்யப் பட்டன. ‘மார்ச் மேட்னஸ்’ இல்லாமல் நிஜமாகவே பலருக்கு பைத்தியம் பிடிக்கப்போகிறது.
வெள்ளிக்கிழமை. கல்லூரி மூடப்பட்டு மீதி செமிஸ்டர் பாடங்கள் தொலைவழியே என்ற தகவல் வந்தது. மாணவர் விடுதிகள் மூடப்பட்டதால் அவள் தந்தை அவளையும் பெர்னியையும் அழைத்துப்போனார். தங்கள் சாமான்களை எடுத்துவந்தார்கள்.
பெற்றோர்கள் பாதுகாப்பில் இருந்து வெளியேறிய வயதுக்கு வந்த மானஸா அவர்கள் இல்லத்திற்கு வந்தால், ஒரு வாரம் மிஞ்சிப்போனால் ஒரு மாதம் மட்டுமே தங்குவதாக இருந்தாள். இப்போது குறைந்தபட்சம் மூன்று மாதங்கள்.
(தொடரும்)