- ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப் பறவை – ஒரு பார்வை
- ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில்
- ‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’
- ஊர்வசி காதலில் கண்விழித்தாள்!
- ‘ஊர்வசியின் களிப்பு- புரூரவஸின் சலிப்பு’
- இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்
- அதிர்ஷ்டம் வாய்ந்த சுவர்க்கத்தின் துரதிர்ஷ்டம்!
- தனிமையின் பிடியில் புரூரவஸ்
- புரூரவஸ் செய்த பாவம் – அழகு, காதல்
- மாறாத பேரானந்தம்
காளிதாசனின் ‘விக்ரமோர்வசீயம்’ நாடகமானதால் நாடகத்தின் அவசியம் கருதி பல பாத்திரங்கள் இதில் படைக்கப்பட்டுள்ளனர். பலபேர் உள்ள மேடை ஒன்றுதான்
சுவாரசியமானதாக இருக்கும் அல்லவா? மன்னன் புரூரவஸுடன் ஒரு விதூஷகன் – ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் உள்ளதுபோல ஒரு Jester. அரசிக்கு ஒரு தோழி. யாரிடமாவது இவர்கள் (பாத்திரங்கள்) உரையாடினால்தானே இவர்கள் உள்ளங்களில் ஓடும் எண்ணங்களை நாடகத்தைக் காண்பவர்கள் புரிந்துகொள்ள இயலும்?
இவ்வாறு பல கதாபாத்திரங்களைக் கொண்டிலங்குகிறது காளிதாசனின் நாடகம். புரூரவஸ் விதூஷகனின் தூண்டுதலால் ஊர்வசிக்கு ஒரு காதல் கடிதம் வரைகிறான். அவளைச் சந்திக்கும்போது பரபரப்பில் அவளிடம் அதனைக் கொடுக்க மறந்துபோய் விடுகிறான். அதுவோ ஏற்கெனவே சந்தேகம் கொண்ட அரசி ஔஷினாரியின் கையில் சிக்கி விடுகிறது. கதையும் அந்த வழியில் சிறிது நகர்கிறது.
பரதரின் நாடகம் நடத்தப்பட்டதனையும் அது தொடர்பாக ஊர்வசிக்கு நேர்ந்ததையும் பரதரின் சீடர்களின் உரையாடல் வாயிலாக அறிகிறோம்.
கவிதையில் ஸ்ரீ அரவிந்தருக்கு மிகுந்த ‘எழுத்து – கருத்து – விளக்க’ சுதந்திரம் கிடைக்கிறது. நமக்கும் மிகவும் சுவையானதும் அதே சமயம் சிந்திக்க வைப்பதுமான ஒரு காதல் காவியம் கிட்டுகிறது.
ஒரு மாமேதையான மனிதரும், அற்புதமான கவிஞருமான அரவிந்தரின் சொற்சுவை செறிந்த உன்னதமான நீண்டதொரு கதைக்கவிதை, இயற்கை வளங்களை, பாத்திரங்களின் அதிதீவிரமான உள்ள உணர்ச்சிகளுடன் பின்னிப் பிணைந்து படைத்த அதீதமானதொரு உன்னதப் படைப்பு. அன்னார் இதனை எழுதியதன் நோக்கம் என்ன என நீண்டு சிந்திக்கத் தோன்றுகிறது.
இதனைப் பற்றிய சிந்தனைகளை முடிவில் தொகுத்து வாசகர்களின் பார்வைக்கு வைக்கலாம் எனக் கருதியுள்ளேன். சிறிதே பொறுத்திருக்க வேண்டுகிறேன்.
கவிதைப் பகுதியைக் கண்டபின், நமது உள்ளத்தை வருடும் சில பகுதிகளை மீண்டும் படித்துக் களிக்கலாம். புளகிதம் அடையலாம். வாருங்கள்!

~oOo~
காண்டம்-2 – கவிதை தொடர்கிறது
- ஆங்கில மூலம்: ஸ்ரீ அரவிந்தர்
- தமிழாக்கம் – மீனாக்ஷி பாலகணேஷ்
அவன் அந்த உதவாத அதிசயமான பகுதியில்
சிறிதுகாலம் தங்கியபோது, காலை மாலைநேர விண்மீன்கள்
அவன்மீது ஒளிர்ந்து மங்கின, அதீதமான
காரிருள் மலைகளின் நிசப்தமான தனிமையைப் பொதிந்தது;
பொலிவுடன் விளங்கும் நிலவொளியின் மௌனமும் குளிர்ந்த
விண்மீன்களும்
மலையுச்சியின் பிரகாசம் கொண்ட பகல்பொழுதும். 540
ஆனால் நாள் வளரும் சிறிது முன்பு அந்த தேவதையின் மோகத்தில்
கட்டுண்ட காவியத்தலைவன்
அதிகாலைப்பொழுதில் அழிவற்ற சிகரங்களில் ஏறி
மாலைவிழும்போதில் கீழே இறங்கி அங்கு படுத்தபடி
அற்புதமான ஆகாயத்தைப் பார்த்தபடி, ஆனால் தனது மென்மையான
சிறகுகளை
அவன் கண்களின்மீது விரித்து அசைக்கும் உறக்கத்தை அழைக்காமல்
கடவுளென ஆகிவிட்டதனால் உணவும் வேண்டியிராமல் இருந்தான்.
அவனது நீண்ட காத்திருத்தலின் ஏழாம் மாதத்தில்
சிகரங்களையோ மலையுச்சியையோ அவன் ஏறவில்லை ஆனால்
சுற்றியிருந்த நிசப்தத்தில் அசைவற்று அமர்ந்திருந்தான்
ஆழங்காண முடியாத பள்ளத்தை வெறித்தபடி. 550
ஆறுநாட்கள் அவன் அமர்ந்திருந்தான், ஏழாம்நாள் அவர்கள் வந்தார்கள்
ஊமையான பள்ளத்தாக்கிலிருந்து, சுவர்க்கத்தின் மூச்சென, ஒரு அசைவு,
நிலாக்கதிர்ப் பாதங்களால் சுவர்க்க மங்கையர்
மொட்டைப்பாறைகளிலும் ஒளியில் பளீரிடும் பனியிலும்,
பின் ஒளிகுறையும் அவற்றிலும், அவர்கள் கூந்தல் பாதியவிழ்ந்து
அரையில் உடுத்திய நுட்பமான ஆடை மனதை மயக்கவும்.
சுவர்க்கத்தின் நேர்த்தியான உருவங்கள் அமைதியாக
அவன்முன்பு வந்து சிறிது தூரத்தில் நின்றனர்,
சூரியக் கதிர்களுக்குக் காத்திருக்கும் மலர்கள்போல. அவன்
அசையவில்லை, குரலில்லாமல், காட்சியில் இணைந்து 560
உறங்கும் ஒருவன் தான் காணும் இனிய கனவின் முடிவைக் காண
அமர்ந்திருந்தான், அது கனவெனத் தெரிந்தும், அமைதியாக
அந்த மென்மையான பேரானந்தம் கலையவோ அன்று மறையவோ.
அப்போது தெய்வத் திலோத்தமை அவனருகே வந்தாள்
அவனது அமைதியான சிலைபோன்ற உருவின்முன்
அவளுடைய சகோதரியின் கரத்தைப் பற்றியபடி; ஏனெனில் அவள்
பின்தங்கி நின்றாள்
ஒரு பூவுலக மங்கை போன்றல்ல, கன்னங்கள் கண்ணீரில் நனைய,
இமைகள் கவிய, ஆனால் பொறுமையான மனிதர்கள் போற்றும்
உயர்வான ஆனந்தம் பின்னடைய, 570
சிறிது பிரமிப்பும், சிறிது சந்தேகமும், ஒளிவீசும் சுவர்க்கத்தினுள்
நுழைய ஏற்படும் பயமும், மிகவும் வெளிச்சமாக
இருந்தாற் போலிருந்தது; அதனால் அவள் அந்த ஆனந்தத்தினுள்
புகப் பயந்தாள்.
ஆனால் அவள் சகோதரி, ஒளிவீசும் தனது கரத்தை நீட்டி:
“புரூரவஸ், நீர் வென்று விட்டீர் நான் உமது வாழ்வினுள்
ஒரு கனவைக் கொண்டுவரவில்லை, ஆனால் ஊர்வசியைத்தான்.”
அந்தப் பெயரைக் கேட்டதும் பலம்வாய்ந்த புரூரவஸ்
திடீரெனக் குருடாக்கப்பட்டவனைப் போல கால்களை
வீசியபடி எழுந்தான்;
அல்லது ஒரு அரிய கருத்து அல்லது சொல் மூளையில் உதிக்கும்போது
ஒரு கவிஞன் எவ்வாறு எழுந்து உரக்கக் கூவியழைப்பானோ 580
அதுபோல் – அவ்வாறு எழுந்து செவியுற்றான்.
தெய்வமங்கை திலோத்தமை மெல்லக் கூறுவாள்:
“ஆம், இளையின் மகனே, ஒருவன் மனிதன், மற்றவர்
சுவர்க்கத்து அப்ஸரஸ்கள், கடலின் பெண்மக்கள்,
இருப்பில் எல்லையற்றவர்கள், கடலைப் போன்று.
அவர்கள் எந்தத் தலைவனுக்கும் கட்டுப்படமாட்டார்கள்,
அல்லது ஒருமுகமாக
பிரபஞ்சத்தை வரம்புக்குட்படுத்துவார்கள், ஆனால் இனிய
காற்றைப்போல
சொந்தம் கொண்டாடப்படாத நீரைப்போல அழகான
பொதுமையான ஒளியைப் போன்று
கட்டுப்படுத்தப்படாத சரணடைதலில் தூய்மையாக இருப்பர்.
பூமியிலுள்ள பொறுமையான இயற்கையின் வழியில் 590
கடினவேலை செய்யும் விண்மீன்கள் மீதெல்லாம் நாங்கள்
உயர்வான சாகசங்களைச் செய்ய புனிதமான ஆவலை நிறைத்து
அவர்களைப் பேரானந்தத்தில் ஆழ்த்துவோம்; அதனால் அவர்கள்
அதீதமான படைப்பின் வேதனைக்கு உள்ளாவார்கள், இதயத்தை
உடைக்கும் கடினவேலைகளில் அவ்வப்போது வெறுமையான சமயங்களில்
அவர்கள் கரங்களிடையே உதயமாகும் எங்களது பொன்னிற
மார்பகங்கள்
அல்லது அவர்களிடையே அலைபோலத் தோன்றும்
எங்களது உணர்ச்சிமிக்க இருப்பு.
சுவர்க்கத்தில் எங்கள் ஒளிவிடும் கைகளாலும் உடல்
அணைப்பினாலும்
கடவுள்களைத் தழுவிக் கொள்வோம், மனிதர்களின் ஆத்மாக்களையும்
தழுவுவோம்.
காற்றுடனும் மலர்களுடனும் உரிமையை அறிவோம். 600
ஆனால் காற்றுடனும் மலர்களுடனும் நீர் எமக்கு என்ன வைத்துள்ளீர்?
ஓ! வெள்ளையாக உள்ளவரே, தாங்கள் தங்களுடைய மாசற்ற,
தனிமையான
உயர்ந்த ஸ்தானத்தைக் கொண்டு ஒரு விண்மீனைப்போல்
எப்பொழுதுமே காலையை நோக்கி நகர மாட்டீரா?
அல்லது தங்கள் பூமியின் கங்கை உருண்டோடி வருவதுபோல
வீடுகளுக்கிடையேயும், மனிதனின் உணர்ச்சி மிகுந்த செயல்களாலும்,
மிகுதியான படகுகளையும், அவற்றின் வெண்மையான துடுப்புகளையும்
அவ்வனைத்து வாழ்க்கையினின்றும் தனிப்பட்டு, கடலை
நோக்கி மட்டுமே
வாழ்ந்தும், நீர் மனிதனின் பணிகளைச் செய்கிறீர்,
ஒரு வல்லமை பொருந்திய தேசத்தை உருவாக்கி, உயர்வான 610
தேவையான செயல்களைச் செய்து, ஆனால், அனைத்தும்
அசைவுகளால் தொடப்படாமல், தங்கள் ஆத்மாவிலேயே
தனித்து வாழ்ந்து
அழிவற்ற உச்சத்திற்குப் புனிதமாக ஏறுகிறீர்.”
ஆனால் அவனோ, பளீரிடும் கனவுகளால் குருடானவன்போல,
மெல்லக் கூறினான்:
“நான் எண்ணிய ஒருத்தி தூரத்தில் புனிதத்தையும்
வெண்மையையும் கடவுளிடம் உள்ள மனித ஆத்மாவையும்
பற்றிப் பேசினாள்.
என்னிடம் இவை ஒரு காலத்தில் இருந்தன, ஆனால் நான்
இப்போது காண்பது
பொன்னிறக் குழந்தையான வசந்தம், ஆடுகின்ற வயல்வெளிகள்
இவைகளே.
அழகானவைகள் ஊர்ந்து என்னருகே வருகின்றன.
நான் ஒரு பெண்ணின் அழகான மார்பகங்களைப் பற்றிக் கனவு
காண்கிறேன், 620
பனித்துளிகளைப் பார்க்கிறேன் பறவைகளைக் கண்டு மகிழ்கிறேன்
பாம்பின் முழுதும் சரியான சுருள்களை ரசிக்கிறேன்,
எரியும் மரங்களில் உள்ள நெருப்புடன் அழுகிறேன்,
தேவைப்படும் கரைகளுக்கு ஒரு நீரலையாக உள்ளேன்.
இவைகளை நோக்கி நகர்கிறேன் அவள் மார்பினிடம் நகர்கிறேன்
மாயமான கண்கள் எங்கு இவையனைத்தும் ஒரே கனவாக
உள்ளனவோ அங்கு.
ஒரு சிறு முகத்தை அவரது அனைத்துலகங்களையும்
விட நேசிக்கும் ஒருவனுக்கு
கடவுளால் என்ன தரவியலும் அல்லது அவரது புகழ்?”
அவனுடைய குரலொலியிலேயே அவன் கண்விழித்தான்.
அவனுடைய சொற்கள் முதலில்
கனவாக பலவீனமான அலைபோல இருப்பினும், திடீரென
நுரையாகின; 630
அவள் அங்கு நிற்பதனைக் கண்டான் அவனது பார்வை
வலுவானது; ஒரு அலைபோல அவளிடம் பெருங்காதல் கொண்டான்,
அவள் கண்களால் அவனை ஏற்றாள் பூமியானது
மழையை ஏற்பதுபோல. பளிச்சென்ற திலோத்தமை
அவர்களிடம் ஒரு உற்சாகமான கரையும் குரலில் சொன்னாள்:
“ஓ சந்தோஷமான காதலனே, ஓ அதிர்ஷ்டசாலியான
காதலிக்கப் படுபவளே,
இழப்பினால் நீங்கள் காதலை சுவர்க்கமயமாக்கிவிட்டீர்! இருப்பினும்
தெய்வங்கள் திரும்பப்பெற முடியாதவற்றைப் பரிசாகக் கொடுப்பதில்லை,
மிகப் பிரியமான மனிதர்களுக்கும்கூட உச்சமான பேரானந்தம்
நிபந்தனைகளற்றும் இல்லை, ஓ புரூரவஸ். 640
உன்னுடைய ஆழ்ந்த சந்தோஷம் அவள்மீது உனது ஆத்மா
உணரும் சிறு நடுக்கத்துடன், கவனமாக, பயத்தால் மறைக்கப்பட்டே
இருக்கும்.
ஓராண்டிற்கு நீ அவளை மலையுச்சிகளின்மீது அறிவாய்,
தனிமையான குன்றப்பரப்புகளின் மீதும்
பனியால் மூடிய பிரதேசங்களின் மீதும்; இன்னுமோர் ஆண்டிற்கு
அடர்ந்த பசிய காடுகளிலும் சுதந்திரமான
வாழ்வில் சூரிய ஒளியிலும், சுந்தரமான நீரோடைகளிலும்
நீ அவளுடன் மகிழ்வாய்; இன்னும் ஓராண்டிற்கு எங்கே
சுறுசுறுப்பான மனிதர்களின் காலடிகள் இடையறாது
செல்கின்றனவோ,
மனிதர்களின் அழகிய சிந்தனைகளுக்கு அவளைப் பழக்குவாய். 650
நீண்ட நாட்களுக்கு ஒரு சட்டத்திற்குபட்டு
அவளை உனக்காக வைத்துக்கொள், ஓ அரசே; ஏனெனில் மனிதனும்
அப்சரஸும் ஒருமித்து வாழவியலாது; இருவரும் அறிய வேண்டியது:
ஒரு பரவசத்தில் அவள் கண்ணுக்குத் தெரியாமல் போக
அவன் ஒரு புரியாத உடலும் மாயமான ஆத்மாவும்.
நீ நிர்வாணமாக உள்ளபோது அவளுக்கு அறிவிக்காதே,
ஓ கன்னி இளையின் மகனே, ஒரு போதும் காண்பிக்காதே
உனது உடலை வெளிச்சத்தில் நிர்வாணமாக அவள் கண்களுக்கு,
தினம் என்பது உமது சாமர்த்தியத்தில் உதிக்க வேண்டாம்,
மனிதர்களில் தனித்தவனே.” அவள் விலகினாள் அவர்களைவிட்டு, 660
வெளிச்சமாக சூரிய ஒளிக்குள், மதியத்தினுள் மறைந்தாள்.
அரசன் புரூரவஸ் காலத்தில் உறைந்து நின்றான்,
பெருத்த காற்றிற்கும், இடிக்கும் முன்னால் உள்ள பெருத்த
அமைதியான
நிலையில்; பின் அவனுடைய எல்லா அங்கங்களிலும் இளமை
பிரவகித்தது; பூமியின் அழகும் இதமான வெப்பமும் பரவின,
அவள் அவனுடைய விருப்பப்படி தனியளாக விடப்பட்ட மகிழ்வும்.
அவன் நகர்ந்து அவளிடம் வந்தான். அவள், ஒரு இலை
பக்கத்து மரங்களின் வேகமான காற்றில், நடுங்கினாள்
நாணத்தில். ஆனால், அதீதமான ஆனந்தம் பொங்கும் கடல்
விரைந்து வந்து விழுங்கிடும் பொன்னிற மணலைப்போல் 670
பெருத்த சப்தத்துடன் சந்தோஷமான புரூரவஸ்
அவளைப் பற்றியிழுத்துத் தனது மார்பில் பரவசத்துடன்
அணைத்தான்,
பற்றிக்கொண்டு நடுங்கிச் சிலிர்த்தான். அவளுடைய
தலைமயிர்
அவிழ்ந்தது, காற்று அதைப் பற்றியிழுத்து புரூரவஸின்
தோள்களின்மீது அலைபாய வைத்தது
அவனுடைய கன்னங்கள்மீது ஒரு மென்மை. அவள், மிதமிஞ்சிய
உணர்ச்சியில்
பெருமூச்சுடன், புரியாத முனகல்களுடன் கிடந்தாள்,
ஒரு மெல்லிய மரம் கடந்து செல்லும் புயலில் பாதி காண்பதுபோல்,
அவள் மூடப்படாத கரங்கள் அவன் கழுத்தைப் பிணைத்தபடி,
அவள் கன்னமும்
பொன்னிறக் கழுத்தும் திரும்பியபடி, பெருத்த ஆயாசம் 680
அவள் பெரிய கண்களில் அவர்களுடைய ஆனந்தத்தால்
விளைந்த பிரமிப்பில்.
காற்றில் அலைந்த அவள் கூந்தலின் நடுவே அவர்களுடைய
முகங்கள் சந்தித்தன.
அவனுடையதாகிவிட்ட அவளுடைய இனிமையான அங்கங்களுடன்
குழப்பத்துடன் அவனது துடிக்கும் இதயத்தில் எதிர்நின்ற
அவள் மார்பகங்களை உணர்ந்தபடி சுவர்க்கத்தின் பெருவிருப்பான
அவளுடைய அற்புதமான இதழ்களை அவன் முத்தமிட்டான்.
அலைகள்மோதிக் கப்பலுடைந்து கரைசேர்ந்த இருவர்போல
அவ்விருவரும் ஒருவரையொருவர் பற்றிக்கொண்டிருந்தனர்.
பின் வலிமையுள்ள புரூரவஸ், கடவுள் போலும் கண்களைக் கொண்டவன்
அவளுடையவற்றை நோக்கி, உணர்ச்சிமிகுதியால் நடுங்கும்
குரலில் கூறினான்:
“ஓ அன்பே, கஞ்சத்தனமான, உனது செறிவான, மகிழ்ச்சிக்குரலில்
என்னைக் காதலிக்கிறேன் என ஒரு சொல், ஒரே சொல் கூறாயோ.” 690
ஊர்வசியும், தன் தெய்வத்தன்மையை இழந்து,
அவன் மார்பில் அவனது காதலில் கட்டுண்டு, முனகினாள்
தனது சிறைப்பட்ட மார்பகங்களினின்று, “என் தலைவா, என் அன்பே!”
~oOo~
இனி சில சொற்பிரயோகங்களின் அதிசயத்தைக் காணலாமா?
முதல் 20 வரிகள் காதலில் கட்டுண்டவன் (அவன் மாமன்னனேயாயினும்) எவ்வாறு உலக சிந்தனை அற்றுப்போய், தனது உலகத்தில் சஞ்சரிக்கிறான் என்பதனை அருமையாக விளக்குகிறது. (548 வரை.)
545ம் வரியில், ‘கடவுளென ஆகிவிட்டதால்’ எனும் சொற்றொடரை அனாயாசமாக எடுத்தாண்டிருக்கிறார் அரவிந்தர். காதல் எனும் உணர்வு, அதுவும் தன்னையிழந்து, உணவு, உறக்கம் ஒன்றின்றி அதனால் உண்டாகும் மோனநிலை ஒருவனைக் கடவுள் நிலைக்கு உயர்த்திவிடும் என்கிறாரா அல்லது புரூரவஸைக் கடவுள் நிலைக்கு உயர்த்தியது என்கிறாரா? இதன் பொருளை இன்னும் சிறிது ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
கனவுக்கும் நினைவுக்கும் இடைப்பட்ட நிலையில் புரூரவஸ் இருப்பது மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. வரிகள் 560-565.
தான் விரும்பியது கிட்டிய ஊர்வசி கண்களில் நீருடன் நிற்பது கவின்மிகு நிகழ்வு. வரி 568.
அடுத்து அப்ஸரஸ்களின் தன்மையை திலோத்தமை விளக்குவது சிந்திக்கத்தக்கது. அவர்கள் தேவர்களுக்கும் கடவுள்களுக்கும் கட்டுப்பட்டவர்கள் என்றெல்லாம் கூறி, அவர்களுடனான உறவில் கவனமாக இருக்க வேண்டுமென சூட்சுமமாக அறிவிக்கிறாள். மனிதர்களின் வாழ்வையும் செயல்களையும் மிக உயர்வாகப் போற்றுகிறாள் திலோத்தமை. வரிகள் 609-613.
“நீர் மனிதனின் பணிகளைச் செய்கிறீர்,
ஒரு வல்லமை பொருந்திய தேசத்தை உருவாக்கி, உயர்வான தேவையான செயல்களைச் செய்து, ஆனால், அனைத்தும்
அசைவுகளால் தொடப்படாமல், தங்கள் ஆத்மாவிலேயே
தனித்து வாழ்ந்து
அழிவற்ற உச்சத்திற்குப் புனிதமாக ஏறுகிறீர்.”
ஆச்சரியமேயல்ல, மானிடனான புரூரவஸிற்குத் தன் காதலொன்றே உயர்வாகத் தெரிகிறது. புரூரவஸ் – ஊர்வசி இடையேயான காதலை, ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வதனை, ஒரேயொரு அழகான சொற்றொடரால் காட்டிவிடுகிறார் அரவிந்தர்.
“அவள் கண்களால் அவனை ஏற்றாள் பூமியானது
மழையை ஏற்பதுபோல.” (633-34)
“இழப்பினால் காதலை சுவர்க்கமயமாக்கிவிட்டீர்கள்.” எதனை இழந்தனர் இதனை அடைய? மீண்டும் நாம் சிந்திக்க வேண்டும். அவள் தனது தெய்வத்தன்மையை (தற்காலிகமாக) இழந்தாள்; அவன் தனது மனித குணங்களை இழக்க முற்பட்டான். தன்னையே இழப்பதுதான் உண்மையான மானிடக்காதல். மற்றவர்களின் காதலல்ல என நாம் இனிமேல் காண்போம். (This is a profound statement).
இதுவே ஒரு கவிஞரின் அற்புதமான திறமை, முத்திரை! இதிலிருந்து நாம் மீண்டெழுவதற்குள் காதலர்களின் தனித்த உலகை, அவர்கள் ஆனந்திப்பதனை, அவர்களது அந்தரங்கத்தை, கவிநயத்துடன், மிகுந்த மரியாதையுடன், விரசத்தைத் தொடாமல் வர்ணிக்கிறார். இந்தப் பெருந்தன்மைக்குத் தலைவணங்கத் தோன்றுகிறது. கூறவேண்டியதைக் கூறாமல் விடாது, ஆனால் கருணையும் கண்ணியமும் மிகுந்த வர்ணனைகளால் கவிதையைக் காவியமாக்கியுள்ளார் அரவிந்தர் எனும் பெருங்கவிஞர்.
ஒரு நாடகத்தில் இது இயலுமா என எண்ணத் தோன்றுகிறது. (மன்னிக்க வேண்டும்! இது என் சொந்தக் கருத்து! நான் கவிதைகளில் லயிப்பவள்; நாடகங்கள் எனக்கு இரண்டாம் பட்சம் தான்.)
மற்ற புராணங்களில் ஊர்வசியின் கூற்றாகக் கூறப்படும் நிபந்தனைகள் இங்கு திலோத்தமையின் வாயுரையாகக் கூறப்படுகின்றன.
இதன்பின் ஒவ்வொரு காதலனும் தான் அன்புகொண்டவளின் வாய்மொழியாகக் கேட்க விழையும் சொற்களை புரூரவஸும் கேட்பதைக் கூறுவதுடன் இக்காண்டம் முடிவுறுகிறது.
படித்து ஆனந்தியுங்கள்.
நானும் மொழியாக்கத்தின்போதுதான் கவிதையின் போக்கை அறிகிறேன்; ஆச்சரியத்தில் ஆழ்கிறேன்; ஆனந்தப்படுகிறேன்!!
ஸ்ரீ அரவிந்தர் இக்க(வி)தையின்மூலம் நம்மை எங்கே அழைத்துச் செல்கிறார் என அறிய நானுமே ஆவலாக உள்ளேன்.
(தொடரும்)