அதிரியன் நினைவுகள் -18

This entry is part 18 of 22 in the series அதிரியன் நினைவுகள்

தமிழாக்கம் : நா.கிருஷ்ணா

பித்தகோரஸ், பிளேட்டோ போன்ற  ஒரு டஜன் அறிஞர்பெருமக்களும், எண்ணற்ற பல துணிச்சல் மிக்க மனிதர்களும் எனக்கு முன்பாக இந்த பூமியை வலம் வந்திருக்கலாம், ஆனால் ஒரு தேசாந்திரியே முழுச்சுதந்திரத்துடன் விரும்பியதைக் காணவும்,  சீரமைக்கவும், புதிதாக ஒன்றை படைக்கவும்  எஜமானர் நிலமையில் இருப்பது இதுவே முதல்முறை. அப்படியொரு வாய்ப்பு எனக்கு அமைந்தது உண்மையில் அதிர்ஷ்டம். செயல்பாட்டில், மற்றும் மனோபாவத்தில், இதுபோன்ற  இணக்கமானதொரு மகிழ்ச்சியைத்  திரும்ப உலகில் காண்பதற்குள் பல நூற்றாண்டுகள் கடந்துவிடும் என்கிற உண்மையையும் நான் உணர்ந்தவன்.  பலனாக, புத்தம்புது மனிதனாக, பிரம்மச்சாரியாக, ஒரு மிகத்தீவிர பிரம்மச்சர்ய உல்லிஸ்(Ulysse)1 ஆக, குழந்தைப்பேறின்றி, மூதாதையரென்று எவருமின்றி, எனக்குள் ஒர் இத்தாக்கியனாக(Ithaque) இருப்பதன்றி வேறு எதையுமே விரும்பாமல் இருப்பதன் நன்மையையும் அப்போதுதான் உணர்ந்தேன். அடுத்து, எந்தவொரு ஊரையும் முழுமையாக நான் சொந்தம் கொண்டாடியதுண்டா என்றால், இல்லை. அத்தகைய உணர்வுக்கு நான் என்றுமே ஆளானதில்லை, எனது பிரியத்துக்குகந்த ஏதன்ஸ் நகர விஷயத்தில் மட்டுமல்ல, உரோம் நகர விஷயத்திலுங்கூட இதுதான் உண்மை,  இதனை ஒருவரிடமும் இதுநாள்வரை நான் ஒப்புக்கொண்டதும் இல்லை. செல்லும் இடங்கள்தோறும் அந்நியன் என்கிறபோதும், பிறரிடமிருந்து வேறுபடுத்தப்பட்ட உணர்வு எனக்கிருந்ததில்லை.

சக்கரவர்த்தி என்ற வகையில் அது சார்ந்த பலவகையான பணிகளை நிறைவேற்றினேன்: இராணுவ வாழ்க்கையும் என்னைப் பொறுத்தவரை உடுத்த சௌகரியமானதொரு ஆடை, அப்படித்தான் எடுத்துக்கொண்டேன். சம்பிரதாய பயன்பாட்டில் அவதூறுகளும்,  அர்த்தமற்ற கேலிப்பேச்சுகளும் கொண்டவை காட்டுமிராண்டிகளின் மொழிகள், அவற்றின் தாக்கத்தால் சிதைந்த ஒருவித இலத்தீன்மொழியை இராணுவ முகாம்களில் பேசவேண்டியிருந்தபோது, எவ்வித சிரமுமின்றி மிக எளிதாகப் பழகிக்கொண்டேன். இராணுவப் போர்த்திற நடவடிக்கை காலத்தில் கனமான கவசங்களை உடலில் சுமக்கவும்,   இடதுகையில் கேடயத்தை ஏந்தும்போதெல்லாம் அதன் எடைக்கு நிகராக  உடலின் பிற பாகங்களில் வேறுசில உபகரணங்களைக்கொண்டு ஒருவித சமநிலையை ஏற்படுத்திக் கொள்ளவும் பழகிக்கொண்டேன். ஆட்சி நிர்வாகத்தின் வரவுசெலவு கணக்குகள் அனைத்தும் ஒழுங்காகக்கையாளப்படுள்ளதா என்பதைச் சரிபார்க்கிற பணிக்கு அதிக நேரத்தை செலவிடவேண்டிய கட்டாயம் எனக்கு இருந்துள்ளது, இதுதான் என்றில்லை அது எங்கள் வசமிருந்த ஆசியப் பிரதேச கணக்குகளாகவோ அல்லது பிரிட்டானியா பகுதியைச்சேர்ந்த சிறு நகரமொன்றில் புதிய உடல்நல பராமரிப்பு இல்லத்தின் அதிகச்செலவு சார்ந்த  பிரச்சினையாகவோ இருக்கக்கூடும்.  நீதிபதி பணிகுறித்த சிக்கல்களை ஏற்கனவே நான் பகிர்ந்துகொண்டுள்ளேன். இவ்வாறு செய்கிறபோது, பிற மனிதர்களின் பணிகளிலும் எனது பணிகளின் சாயலை உணரமுடிந்துள்ளது, உதாரணமாக இல்லங்களுக்கு நேரில் சென்று நோயைக் குணப்படுத்த முனையும் மருத்துவர்;  சாலையைப் பழுதுபார்ப்பது,  தண்ணீர் குழாயை சரிசெய்வது  என்றிருக்கிற சாலைப் பராமரிப்பாளர்கள்; தன் கைவசமுள்ள சாட்டையை அதிகம் உபயோகிக்காமல் துடுப்புவலிக்கும் மனிதர்களை நாவாய்களில் ஊக்கப்படுத்துகிற கண்காணிப்பாளர்கள் ஆகியோரிடம்  எனது பணியில் காண்கிற அதே பிரச்சனைகளைக் கண்டிருக்கிறேன். தற்போது  எனது மாளிகையின்   திறந்தவெளிமாடியில் அமர்ந்தவண்ணம்,   என்னுடைய அடிமைகள் இலைகள், கிளைகளைக் கழித்து மரங்களை ஒழுங்குபடுத்துவது அல்லது  பூந்தோட்டக் களையெடுப்பில் ஈடுபட்டிருப்பது; குறிப்பாக எனது தோட்டக் கலைஞன் தனக்கேகேயுரிய ஞானத்துடன் இங்குஅங்குமாக நடப்பதை பார்ப்பது ஆகியவை எனது பணிக்குரிய நியமங்களை நினைவுபடுத்துகின்றன.

எனது பயணங்களில் நான் அழைத்துச் சென்ற கைவினைஞர்களால் எனக்குச் சிற்சில சங்கடங்கள் நேரும்: எனது பயண ரசனைக்கு ஈடான அவர்களின் பயணரசனை அக்குறையைத் தீர்த்துவிடும். மாறாக எனக்கு கற்றறிந்த ஞானவான்களிடம் சிக்கல்கள் எழுந்தன. எனக்கு மிகவும் இன்றியமையாதவரான பிளேகன்(Phlégon)2 வசம் வயதான பெண்மணிக்குரிய குறைகளைக் காண்பதுண்டு, ஆனால் எனது செயலாளர்களில் அவர் ஒருவரே நீண்டகால பணிக்குப் பிறகும் பாதிப்பின்றி செயல்பட்டவர், இன்றைக்கும் அப்படியே இருந்துவருகிறார். கவிஞர் புளோஸுக்கென்று(Florus)  லத்தீன் மொழியில் ஒரு செயலகத்தை  உரோமில் வழங்கியதுண்டு,  இருந்தும் அவர் சீசராக இருக்க விருப்பமில்லையென்றும் பதிலாக  சித்தியன் குளிரையும் பிரெத்தோன் மழையையும் சகித்துக்கொள்ளத் தயாரென்று எப்போதும்  புலம்பிக் கொண்டிருப்பார். நீண்ட நடைப்பயணமும் அவரைப் பொறுத்தவரை அர்த்தமற்றவை. என் பங்கிற்கு, ரோமானிய இலக்கிய வாழ்க்கையின் மகிழ்ச்சியை விரும்பியே அவருக்குத் தாரைவார்த்தேன், ஒவ்வொரு மாலையும் வார்த்தைகளை, குறிப்பாக ஒரேவிதமான சொற்களை பரிமாறக்கொள்ளவும்,  ஒரேவிதமான கொசுக்கடிகளுக்கு ஆளாகவும் நேரிட்ட நாங்கள் சந்தித்த உணவகங்களும் அதிலொரு பகுதி. சுவெட்டோனியோ(Svetonio)விற்கு  ஆவணக் காப்பகத்தின் பொறுப்பாளர் பதவியை வழங்கியிருந்தேன். இதனால் அவர் மூலம், சீசர்களின்(உரோமானிய மன்னர்களின்) சுயசரிதைகளை எழுதத் தேவையான ரகசிய ஆவணங்களைப் பரிசீலிக்க வாய்ப்பு கிடைத்ததது. டிரான்கில்லோ(Tranquillo) என்று மிகவும் பொருத்தமான புனை பெயர் கொண்ட இந்த புத்திசாலி மனிதர் ஒரு நூலகத்திற்கென்று பிறப்பெடுத்த மனிதராகக் கற்பனைசெய்து பார்க்கப்பட வேண்டியவர்: அவர் உரோமில் தங்கியிருந்தார், பின்னர் என்மனைவியின் வேண்டப்பட்டவர்களில் ஒருவரானார்.  என் மனைவி அங்கம் வகிக்கும் சிறிய பழமைவாதிகள் கூட்டம் ஒன்றுண்டு, அவ்வப்போது ஒன்றுகூடி உலகின் நடைமுறை வாழ்க்கையை விமர்சனம் செய்வது அவர்களின் வழக்கம். இக்குழுவினரை அவ்வளவாக நான் விரும்புவதில்லை. டிரான்க்கில்லோவிற்கு கட்டாயப் பணிஓய்வை வழங்கினேன், பயனாக மோன்ட்டி சபினி (Monti Sabini) மலைத்தொடரில் அவருக்குச் சொந்தமான சிறுகுடிலில் தங்கி திபேரியஸ்(Tibérius)3 இழைத்த குற்றங்கள் பற்றிய கனவுகளில் அமைதியாக காலத்தைக் கழித்தார். 

வோரினோ(Favorinus d’Arles)4 சில காலம் கிரேக்கமொழியில்  செயலகத்தை வைத்திருந்தார்: குரலில் மென்மை, குள்ளமான  மனிதர், நேர்த்தியும் அவரிடம் போதாது.  நான் சந்தித்த மனிதர்களில் மிகவும் பொய்யானதொரு ஆசாமி; இருவருமாக மோதிக்கொள்வதுண்டு, இருந்தும் அவருடைய புலமையில் மயங்கியதுண்டு. தமது உடல்நலம்குறித்து அவரடையும் பதற்றம் எனக்கு வேடிக்கையாக இருக்கும், கள்ளக்காதலியிடத்தில் ஒரு காதலன் காட்டும் அன்பிற்கு நிகரானது உடல் விஷயத்தில் அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறை.  அவருடைய இந்து வேலைக்காரன் கிழக்கிலிருந்து பெரும் பொருட்செலவில் தருவிக்கப்பட்ட அரிசியைக்கொண்டு உணவைத் தயாரித்தான்.   துரதிர்ஷ்டவசமாக, இக்கீழைத் தேச சமையல்காரர் கிரேக்கத்தை மிக மோசமாகப் பேசியதோடு, அவருக்குப் பிறமொழிகளில் உரையாடவும் போதாது, காரணம் அவற்றில் சொற்ப வார்த்தைகள் மட்டுமே அவருக்குத் தெரியும், விளைவாக  அவர் தனது பிறந்த  நாட்டின் அற்புதங்களைப் பற்றி எதையுமே என்னிடம் தெரிவித்ததில்லை. பவோரினோ தனது வாழ்க்கையில் மூன்று அரிய விஷயங்களைச் சாதித்திருப்பதாக பெருமிதத்துடன் தெரிவிப்பது வழக்கம்: பிறப்பில் ஒரு கொலுவா(Gaulois), ஆக இருந்தும் எந்தஒரு மனிதரைக்காட்டிலும்  எப்படித் தம்மால் ஒரு ஹெலெனிஸ்ட்டாக(கிரேக்கப் பண்பாட்டை நேசிப்பவராக) மாற முடிந்தது; பெரிதாய் சொல்லகூடிய பின்புலத்திலிருந்து வந்த மனிதரில்லை, இருந்தும் தம்மால் சக்கரவர்த்தியுடன் ஓயாமல் சண்டைபிடிக்க முடிந்தது, இவ்விவகாரத்தில் எவ்வித சிராய்ப்புமின்றி  வெளியில்வந்தது, அத் தனித்தன்மை முழுமையாக எங்கனம் தமது பெருமைக்குரியதாக மாறியது என்பதே அவை மூன்றும். தவிர உடல்உறவில்  பலவீனமான மனிதரென்று அவருக்குப் பேர், இருந்தும் பெண்களிடம் பேணிய தகாத உறவின் பொருட்டு தொடர்ந்து அபராதத்தைச் செலுத்தினார். மாகாணப்பகுதிகளில் அவருக்கென்று பெண்  அபிமானிகள் இருந்தனர், அவர்களால் அவருக்கு அவ்வப்போது பிரச்சனைகள் வந்தன என்பதும் உண்மைதான், அதிலிருந்து பல முறை அவரை வெளியிற்கொண்டுவர வேண்டியிருந்தது. இச்சம்பவங்களால் நான் சோர்வடைந்தேன், பின்னர் அவரிடத்திற்கு யூடெமஸ்(Eudéme de Rhodes) வந்து சேர்ந்தார். ஆனால், மொத்தத்தில், ஏதோ ஒருவகையில் எனது காரியங்களும் அவர்களால் நடந்தேறின. நண்பர்கள் மற்றும் ஊழியர்கள் அடங்கிய இச்சிறிய குழுவின்மீதான மரியாதை பயண காலத்தில் நிலவிய சற்று பிரச்சனைகளுக்குரிய உறவுகளின் அடிப்படையில்  தப்பிப்பிழைத்தது, அதற்கான காரணத்தை கடவுள் மட்டுமே அறிவார்; விசுவாசத்தைக்காட்டிலும்  அவர்களின் விவேகம் இன்னும் என்னை வியக்க வைக்கிறது. எதிர்கால சூயெட்டோனியஸ்களுக்கு (Suetonius)6  என்னைப் பற்றிய தகவல்களை சேகரிக்க மிகக் குறைவான ஆதாரங்களே கிடைக்கும். என் வாழ்க்கையைப் பற்றி பொது மக்கள் அறிந்ததெல்லாம், நானே தெரிவித்தவை. எனது நண்பர்கள் எனது அரசியல் மற்றும் பிற ரகசியங்களை பாதுகாத்துவந்துள்ளார்கள். நானும்  அவ்வப்போது சரிநிகராக உதவி செய்துவந்தேன்  எனக் கூறுவதுதான்  நியாயமானதாக இருக்கும். .

ஒன்றை நிர்மாணித்தல் என்பது பூமியின் ஒத்துழைப்போடு மனிதர் ஆற்றும் செயல், ஒருபோதும் மாற்றியமைக்க இயலாத மனிதர் அடையாளமொன்றை இயற்கை நில அமைப்பில் கட்டியெழுப்புதல். நகரங்களின் வாழ்வில் நிகழும் மெதுவான மாற்றத்திற்கு மனிதர் அளிக்கும் ஒருவகையான  பங்களிப்பு. ஒரு பாலம் அல்லது நீரூற்றுக்கு பொருத்தமான இடத்தைக்    கண்டுபிடிக்கவும், ஒரு மலைப்பாதைக்கென மிகச் சிக்கனமான அதே நேரத்தில் மிகத்தூய்மையான வளைவை அமைக்கவும் மிகுந்த கவனத்துடன் நாம் திட்டமிடவேண்டியிருக்கிறது. மெகாரா(Megara) நகரத்திற்குச் செல்லும்  சாலையை  விரிவாக்கம் செய்யப்போக  ஸ்கைரோனியன் செங்குத்து பாறைகளுடன்கூடிய நிலப்பரப்புத் தோற்றம் நிரந்தரமாக மாறியது; நீர்த்தேக்கங்களும், இராணுவப் புறக்காவல் நிலைகளும் நிறைந்த ஆதினுபோலிஸ்(Antinoupolis)ஐ  செங்கடலுடன் இணைக்கும்  செப்பனிடப்பட்ட பாதைகளைக்கொண்ட சுமார் இரண்டாயிரம் விளையாட்டுத்திடல்கள் மனிதர் நடமாட்டமற்றவையாக இருந்த ஆபத்தான சகாப்தம் மாறி, அது இன்றொரு  பாதுகாப்பான பகுதி. ஆசியாமைனரைத் சேர்ந்த திரேதா(Troade) பிரதேசம் நெடுக கால்வாய் வெட்ட வேண்டியிருந்தது, அதற்கு ஆசியாவிலிருந்த ஐந்நூறு நகரங்களின் ஒட்டுமொத்த வருவாயையும் செலவிடநேர்ந்தது என்கிறபோதும், அச்செலவை அதிகமெனச் சொல்வதற்கில்லை; ஆப்ரிக்க கார்தேஜில்(Carthage) வெட்டப்பட்டக் கால்வாயின் வருவாய், பியூனிக்(Punic) போர்களினால்7 ஏற்பட்ட செலவினங்களைத் திரும்ப அளித்தது. கோட்டைக் கொத்தளங்களை  எழுப்புவதும் ஒன்றுதான் அல்லது நீர்தேக்க அணைகட்டுகளை நிர்மாணிப்பதும் ஒன்றுதான், இரண்டிற்கும் வேறுபாடில்லை. நீரணைக்கும், பேரரசுக்கும் பாதுகாப்பிற்கு  வேண்டிய அடித்தள கோட்டினைக் கண்டுபிடிப்பதென்பது; அணைக்கு அலைகள் மூலமாகவும், பேரரசுவிற்கு காட்டுமிராண்டிகளின் மூலமாகவும் சாத்தியமுள்ள தாக்குதல்களை அடக்குவதற்கும், தடுத்து நிறுத்தவும், சிதறியோடச்செய்யவும் ஏதுவானதொரு புள்ளியைக் கண்டறியும் ஒருவித முயற்சி. வளைகுடாக்களில் துறைமுகங்களை அமைப்பது, அவற்றின் வளத்தைப் பெருக்கும் ஒருவகை  வழிமுறை.  நூலகங்கள் பொதுகளஞ்சியங்களைப்போல, அவற்றின் கட்டுமானம் நமது மூளையின் குளிர்கால பற்றாக்குறையை சமாளிக்க உதவும், ஆயிரம் முரண்பாடுகளுக்கிடையிலும், அத்தேவைக்கான அறிகுறிகளை என்னால் உணரமுடிந்தது. நான் நிறைய புனரமைப்புப்  பணிகளில் ஈடுபட்டுள்ளேன்: அது வேறொன்றுமல்ல காலத்துடன் ஒத்துழைப்பது, குறிப்பாக கடந்தகால அம்சத்துடன்; அதன் உணர்வைப்புரிந்து, திருத்தி அமைத்திருக்கிறேன்; நீண்ட எதிர்காலத்தின்பொருட்டு, ஓர் இடையீடாக இப்பணியைச் செய்தேன் ஒருவகையில் இப்பணி, ஊற்றின் இரகசியத்தைக் கற்களின் அடியில்  கண்டறிதலைப் போன்றது. 

நமது வாழ்க்கை குறுகியது: நமது காலத்திற்கு முந்தைய நூற்றாண்டுகளாயினும் சரி, இனி வரவிருக்கும் நூற்றாண்டுகள் என்கிறபோதும் சரி இரண்டையுமே நமக்கு முற்றிலும் அந்நியமானவை என்பது போல ஓயாமல் அவை குறித்து பேசிகொண்டிருக்கிறோம்; இருப்பினும், எனது கற்கள் விளையாட்டினைக்கொண்டு அவற்றை என்னால் நெருங்கமுடிந்தது. நான் வலுவூட்டிய இச்சுவர்களில், இவற்றோடு தொடர்பிலிருந்து, பின்னர் மறைந்துபோன மனிதஉடல்களின் வெப்பம் இன்றும் அங்கிருக்கின்றன.  அதேபோல இதுவரை பிறந்திராத மனிதர் கைகள் இந்நெடுவரிசைப் பெருந்தூண்களை எதிர்காலத்தில் தழுவக்கூடும். எனது மரணத்தைப்பற்றி, குறிப்பாக இன்னொருவரின் மரணத்தைக்குறித்து நான் எவ்வளவுக்கெவ்வளவு  அதிகமாக தியானம் செய்தேனோ, கிட்டத்தட்ட அதே அளவிற்கு அழிவற்றதொரு அமரத்துவத்தை நம்முடைய உயிர் வாழ்க்கையில் சேர்க்க முயற்சித்தேன். உரோமை பொறுத்தவரை கட்டுமானத்திற்கு நிலைபேறுடைய செங்கல்லிற்கு முன்னுரிமை கொடுத்தேன். விளைவாக ஒரு கோட்டையாக, திறந்தவெளி அரங்காக, கல்லறையாகக் காட்சிதருவதை நிறுத்திக்கொண்டபோதிலும் அக்கட்டமைப்பு  ஒரு மலைபோல நின்றது. தனது  பிறந்த மண்ணுக்குத் திரும்பும் அதன் கண்ணுக்குப் புலப்படாத சிதைவும், முடிவும் மிக மெதுவாகவே நடைபெறும். கிரேக்கத்திலும், ஆசியாவிலும் அசலான பளிங்குக் கற்களைப் பயன்படுத்தினேன், நேர்த்திமிக்க அப்பொருள், வெட்டப்பட்டு நமது கைக்குவந்தபின்பு, மனிதர் அளவிற்கு எதிர்பார்க்கும் நீளஅகலத்திற்கு ஏற்றார்போல உருமாறும் நம்பகத் தன்மைக்குரியது, காலத்தால் சிதைவுற நேர்ந்தாலும், ஒர் ஆலயத்தின் மொத்தவடிவமும் உடைந்த நெடுவரிசைத் தூண்களின் ஒவ்வொரு துண்டிலும் உயிர்வாழும். 

கட்டிடக் கலைஞர் விட்ருவியஸ் (Vitruvius) நான்கே நான்கு வழிமுறைகளை மட்டுமே கையாண்டிருப்பார், ஆனால் நமக்கு நம்பிக்கை தரும்  சாத்தியக்கூறுகளின் எண்ணிக்கை உண்மையில் கட்டிடக்கலையில் அதிகம். ஸ்வரங்களின் சேர்க்கையில் என்ணற்ற இசைக்கோர்வைகளைக் கட்டமைப்பதுபோல, கற்பாளங்களை இணைத்து விதவிதமாக கட்டுமானங்களை நம்மால் நிர்மாணிக்கமுடியும். உரோம் நகரில் பாந்தியன்(Panthéon)8 ஆலயத்தை நிர்மாணிக்கும் விஷயத்தில், நிமித்திகர்கள், கோடங்கிகள் என்றிருந்த பண்டைய எட்ரூரியா(Etruria) நகரின் காலத்திற்கே திரும்பப் பயணித்தேன் எனலாம். மாறாக வீனஸ் தேவதை ஆலயத்தின் கருவறைக்கோ, அயோனியா(ionia) மரபில் சூரிய ஒளியில் ஜொலிக்கும் வட்டவடித் தோற்றம் தேர்வுசெய்யப்பட்டது. சீசர் மரபிற்கு வித்திட்ட, காண்போரை இன்பத்தில் ஆழ்த்தும் வீனஸ் தேவதையைச்  சுற்றிலும் வெள்ளை மற்றும் இளஞ் சிவப்பில் பெருந்தூண்கள். அவ்வாறே ஏதென்ஸ் சமவெளியில் எழுந்துள்ள ஒலிம்பியன்(Olympéon) ஆகட்டும், மேட்டுப்பாங்கான பகுதியில் அமைந்திருக்கிற பார்த்தீனன்(Parthenon) ஆகட்டும் இரண்டுமே தோற்றத்தில் ஒன்றுக்கொன்று இளைத்தவை அல்ல, குறிப்பாக அமைதியின் முன் மண்டியிடும் முனைப்பிலும், அழகின் காலடியில் வெளிப்படுத்தும் பிரம்மிப்பிலும்.  ஆண்ட்டனஸ்(Antinous) கோட்டங்கள், கோபுரங்கள், மந்திராலயங்கள் அனைத்துமே உயிர்வாழ்க்கை-மரணம் இரண்டையும் பிணைக்கும் மர்மப்பாதையொன்றின் நினைவுச் சின்னங்கள், சொல்லவொண்ணா துயரம், மகிழ்ச்சி இரண்டிற்கும்  இடம்தரும் இப்புனிதத் தலங்கள், இறந்தவர் உயிர்த்தெழவும் பிற  பிரார்த்தனைக்கும் இடமளித்தன. இழந்த எனது மனிதர்க்காக நான் படும் வேதனைக்கென்று என்னை அர்ப்பணித்துக்கொள்ளும் இடங்களும் இவைதான். டைபர் நதிக்கரையில் உள்ள எனது கல்லறை, அப்பியன் பெருவழியில்(Appian way) உள்ள பழங்கால கல்லறைகளின் சாயலிலும், பரிமாணத்திலும்  பிரம்மாண்டமான மறு ஆக்கமாக உருவெடுத்துள்ளது.  டெசிஃபோன்(Ctesiphone), பாபிலோன் போன்ற நகரங்களில்  மனிதர்கள்  கோள்களை நெருங்க முடிகிற அளவிற்கு உயர்ந்த மாடிகளும்,  ஓங்கிய  கோபுரங்களுமுண்டு,  அவற்றை எனது கல்லறை நினைவூட்டும். எகிப்திய இறுதிச் சடங்குமுறை புதைத்த இடத்தில் அல்லாது வேறு இடங்களில் இறந்தவர் நினைவாக செனோடாப்(Cénotaphe) வகை  ஸ்தூபிகள், ஸ்பிங்க்ஸ்கள் (Sphinxes) அமைத்துகொள்ள வழிவகுத்தது, ஆனால் ஒருபோதும் போதுமானவகையில் துக்கத்தை அனுசரித்திராத மனிதருக்கு உரோமாபுரியில் எகிப்திய இவ்வழிமுறை தெளிவற்ற விரோதமான ஒரு போக்கு.

தொடரும்…..


  1. Odyssèus – உல்லிஸீஸ் அல்லது ஒடிஸி கிரேக்கத் தொன்மக் கதைகளின்படி இத்தாக் (Ithaque) தீவின் புகழ்பெற்ற தலைவன்.
  2. Phlégon அடிமையாக இருந்து, அதிரியனால் சுதந்திரம் பெற்றவர். கிரேக்க எழுத்தாளர் மற்றும் வரலாற்றாசிரியர்.
  3. Tibérius (BC42-AD37) – இரண்டாவது ரோமானிய சக்கரவர்த்தி 
  4. Favorinus (80 -160AD) உரோமானிய கிரேக்க மொழி ஆசிரியர். இவர் ஒரு Sophistம் ஆவார். தத்துவம், அரசியல், வரலாறு, மொழியென பல பொருள்களில் பாண்டித்தயம் பெற்ற ஆசிரியர்களுக்கு sophist எனப்பெயர். 
  5. Gaulois மேற்கு ஐரோப்பிய Gaule என்கிற பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்கு Gaulois எனப்பெயர். இன்றைய பிரெஞ்சு மக்களின் மூதாதையர்.
  6. Suetonius (69 – 122AD) ரோமானிய வரலாற்றாசிரியர்
  7. பியுனீக் போர்கள் உரோம் மற்றும் கார்த்தீசிய மக்களுக்கிடையே கிமு 264 முதல் கிமு 146வரை நடந்த யுத்தங்கள். 
  8. Panthéon பொதுவில் இப்பெயருடைய ஆலயம் பண்டைய கிரேக்கத்தில் அனைத்துகடவுள்களுக்குமான வழிபாட்டிடம்.
Series Navigation<< அதிரியன் நினைவுகள் -17அதிரியன் நினைவுகள் -19 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.