மிளகு அத்தியாயம்  நாற்பத்தொன்பது 

1605  ஹொன்னாவர்

”சதுர்முக பசதி. நான்கு வாயில் கோவில். பன்முக மெய்யின் உருவகம். உண்மை என்பது  ஆன்ம லயிப்பாக இருக்கலாம். உண்மை என்பது மனதில் நான் யார் என்று சதா கேட்டுத் தேடியடைவதாக இருக்கலாம். உண்மை என்பது உறவுகளின் நதிமூலம் தெளிவதாக இருக்கலாம். உண்மை என்பது, நட்பும் காதலும் காமமும் பாசமும் சென்றடையும் இறுதி நிலையாக இருக்கலாம். தேடிப்போய்த் திரும்ப வந்தடைந்த தொடக்கமாக இருக்கலாம். உண்மை என்பது எண்ணங்கள் உருவாக்கிய இலக்கியமும், ஓவியமும், சிற்பமும், கடவுளும் ஆக இருக்கலாம். உண்மையை அடைய நான்கில் எந்த வாயிலும் கடந்து சதுர்முக பசதிக்குள் போகலாம்”. 

நிர்மல முனிவரின் ஆன்மீகச் சொற்பொழிவுக்கு ஜெரஸோப்பாவில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

 ஜெரஸோப்பாவில் சென்னபைரதேவி ஒரு சமண சதுர்முக பசதியைக் கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறார். மிகப் பெரியதுமில்லை. ஆகச் சிறியதும் இல்லை. நான்கு பக்கமும் உள்ளே திறக்கும் வாசல் கதவுகள் அந்தக் கோவிலின் பிரார்த்தனை  மண்டபத்துக்கு யாரையும் வரவேற்கும்.

 கோவில் என்பதால் சிற்பமும், ஓவியமும், கட்டிடக்கலையின் உன்னதம் தொட்ட மண்டபங்களும், உயர்ந்த கோபுரங்களும், திருக்குளங்களும் இல்லை. தீர்த்தங்கரர்களான அறநாத், மல்லிநாத், முனீஸ்வரநாத் ஆகியோரின் திரு உருவச் சிலைகளும், வேலைப்பாடு அமைந்த விதானமும், கல்பாளம் மேவிய தரையுமாக மலர்ந்து நிற்பது சதுர்முக பசதி.  திரிலோக ஜீன சில்பாலயா என்று பெயர் சூட்டப்படும் பசதிக்கு. மூன்று உலகத்துக்கும் நெற்றித் திலகம் போன்ற, சமண சிற்பங்களின் ஆலயம் என்று அந்தப் பெயர் பொருள் கொள்கிறது.

ஜெரஸோப்பாவில் மட்டும் சதுர்முக பசதியா? ஹொன்னாவரிலும் கட்டினால் என்ன? இரண்டாவது தலைநகரம் இல்லையோ இந்த நகரம் என்று ஊர்ப் பிரமுகர்கள் சென்னாவைச் சந்தித்து உரிமையோடு முறையிட்டதுமே சரி என்று சொல்லி விட்டாள் சென்னபைரதேவி மிளகு மகாராணி. 

ரதவீதிக்குப் பின்னால், சரியாகச் சொல்லப்போனால் ரதவீதிக்கு இணைகோடாக, அதன் மேற்கே விரிந்திருக்கும் தறிக்காரர் வீதியில் ஏற்படுத்தப்படும் பிரார்த்தனைக் கூடம் அமைந்த கோவில் அது. ரதவீதியில் பெத்ரோ மாளிகைக்கு நேர் பின்னால் சதுர்முக பசதி எழுந்து நிற்கிறது. 

அடுத்த மாதம் கட்டுமான வேலைகள் எல்லாம் முடிந்து, தரையைக் கட்டிடவேலை எழுப்பிய தூசி  போக சுத்தம் செய்து, சுவருக்கு அடிப்படை வண்ணமும், மேலே   ஆகாய நீலமும் சீராகப் பூசி,   வழிபடப் பசதியின் கதவுகள் திறந்திருக்கும். வேலை சீரான வேகத்தில் நடந்தேறுகிறது.

இன்னுமோர் ஆயிரம் வராகனுக்குச் செலவுக் கணக்கு நீள வாய்ப்பு இருக்கிறது. சென்னபைரதேவி மகாராணியிடம் சொல்லியாகி விட்டது. இந்த வாரம் இறுதிக்குள் அளிக்க ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். 

ஜெரஸோப்பாவிலும், கோகர்ணத்திலும், பட்கல்லிலும் ஜீன சில்பாலயம், சிவன் கோவில், துர்க்கை கோவில் இப்படி ஒரே நேரத்தில் வழிபாட்டு ஸ்தலங்கள் எழுந்து கொண்டிருப்பதால், மிளகு ஏற்றுமதி ஆகி வரும் வருமானம் பெரும்பாலும் இந்த இனம் செலவுக்குப் போகிறது.  

ஏற்றுமதி வருமான வரியாக, தொழில் வரியாக என்றெல்லாம் விதித்த பணம் கருவூலத்துக்கு வந்து சேர்வதில் ஏற்பட்ட சிறு தாமதமும் அரசாங்கச் செயல்பாட்டை எங்காவது பாதிக்கிறது. வரி கொடுக்கச் சொல்லிக் கேட்டால் குடிமக்களுக்குப் பிடிப்பதில்லை. 

ஜெரஸோப்பா துறைமுகத்தில் அலைகளின் சீற்றம், பாறைக்கல்லால் கட்டப்பட்ட சுவர்களை அங்கங்கே வீழ்த்தியிருப்பதைச் சரியாக்க உடனடி மராமத்து வேலைகள் தேவைப்படுகின்றன. கோகர்ணம் நகரத் தெருக்கள் குண்டும் குழியுமாக அவற்றில் பயணம் செல்வதை அசௌகரியமான செயலாக்குகின்றன. ஹொன்னாவரில் புது சாக்கடை அமைப்பு இன்னும் பாதி நிறைவேறாமல் தெருவை ஒட்டி வெளியே சிதறியபடிதான் சாக்கடை ஓடுகிறது. அடுத்த மாதம் முதல் வாரம் எல்லா மிளகு ஏற்றுமதி வருமானமும் வந்து செலவு கையைச் சுடாமல் செல்லும். ஹொன்னாவர் சதுர்முக பஸதி கட்டுவதும் நிறைவடையும் அப்போது. வேலை நடக்கிறது.

அரசவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மகாராணியோடு பிரதானிகளும், அவையின் மற்ற உறுப்பினர்களும், செலவுக் கணக்கை விவாதித்துக் கொண்டிருந்தபோது நஞ்சுண்டய்யா பிரதானி தான் அந்த   யோசனையைத் தெரிவிக்கிறார் –

”திரிலோக திலக ஜீன சில்பாலய பசதிக்கு கடவுளை நம்பும் யாரும் நன்கொடை கொடுக்கலாம் தானே. நாம் பெத்ரோ துரையிடமும் கேட்கலாமே. அவருக்கு ஒரு பதவி உயர்வு வேறே வந்துள்ளதால் இறைத் தொண்டு ஆக சிறு காணிக்கை தர மாட்டேன் என்று சொல்வாரோ?”

பெத்ரோ துரையை மகாராணியை வந்து சந்திக்கச் சொல்லித் தாக்கீது அனுப்பலாமா என்று சந்திரப்ரபு பிரதானி ஆர்வத்தோடு கேட்க, மிளகு ராணி கையமர்த்துகிறாள். 

“நமக்குத்தான் பெத்ரோவின் காணிக்கை என்ற நிதி உதவி வேண்டியிருக்கிறது. அவரை ஆணை பிறப்பித்து இங்கே வரச்சொல்வது சரியில்லை. அவரை அவருடைய மாளிகையில், அலுவலகத்தில் போய்ச் சந்தித்துக் கோரிக்கை விடுப்பதே சரியான வழிமுறை” என்கிறாள் மகாராணி.

யார் போவது? நிச்சயம் மகாராணி இந்த விஷயமாக பெத்ரோ மாளிகைக்கு அவரைச் சந்திக்கப் போவது சரியாக இருக்காது. இளவரசர் நேமிநாதன் செல்லலாமா என்று அதிவீர் தளவாய் வினவுகிறார். 

சென்னா ஒரு நிமிடம் தொலைவில் வெறித்தபடி இருந்தாள். 

“அரசவை ஆலோசனைக் கூட்டத்தில் நேமிநாதன் கலந்து கொள்ளாத எத்தனையாவது கூட்டம் இது?” நஞ்சுண்டையா காதில் ரகசியமாகக் கேட்கிறாள் சென்னா. பதின்மூன்று.

நேமி விலகிக்கொண்டிருக்கிறான் இந்த கௌரவ அரசவைக் கூட்ட அழைப்பாளராகப் பங்கு பற்றும் சந்தர்ப்பங்களை வேண்டுமென்றே விலக்கி ஹொன்னாவருக்கோ, பட்கலுக்கோ சதா பயணத்தில் இருக்கிறான் அவன்.

ஆனாலும் அவன் பெயரை ஏதுமே நடக்காதது போல் அவை நடவடிக்கைகளில் சேர்த்துக் கொள்வது சம்பிரதாயமாகிக் கொண்டுள்ளது. இப்போதும் அதைக் கடந்து போக வேண்டியுள்ளது.  சென்னா செய்வாள்.

”நேமிநாதனிடம் அவர் திரும்பி வந்ததும் இது பற்றித் தெரிவிக்கிறேன்.  நேமி பங்கு பெறுவது இந்த அரசு சார்ந்த நடவடிக்கையை  எங்கள் சொந்த நிகழ்ச்சியாக்கி விடும் என்பதால் நான் நஞ்சுண்டையா பிரதானியையும், அதிவீர தளவாயையும், சதுர்முக பஸதி நிர்மாணக் குழுவையும் இந்தக் காரியத்துக்கு நியமிக்கிறேன்”. 

”பெத்ரோ துரை பதவி உயர்வு பெற்று அலுவல் பயணமாக கோழிக்கோடு சென்றிருக்கிறார். இப்போது வரும் முகம்தான்.  நாளை சந்திக்கலாம்” என்கிறார் நஞ்சுண்டையா பிரதானி.  

பெத்ரோ கோழிக்கோட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கிறார். மாலை நேரம் நீண்ட நிழல்களைப் பொன்நிற வெளிச்சத்தின் குறுக்கே எங்கும் பரத்திக் கொண்டிருக்கிறது.

வேகமாக நகரும் நான்கு சாரட்களில் நடுவில் பாதுகாப்பு அதிகமாக மிதமான வேகத்தில் போகும் மூன்று குதிரை ட்ராய்க்கா வாகனத்தில் எல்லா ஜன்னல்களும் சார்த்தி இருக்க, முன்னால் ரத சாரதியின் முதுகுக்கு நோக்கும் சாளரம் கடல்காற்றுக்குத் திறந்து அடித்து மூடித் திறக்க பெத்ரோ வந்து கொண்டிருக்கிறார். ஹொன்னாவர் இன்னும் இருபது கல் தூரம் தான். இரண்டு மணி நேரம் ஐந்து நாழிகை பயணம் பாக்கி இருக்கிறது.

முன்னால் போகும் வண்டிகள் வேகத்தை மட்டுப்படுத்த சாரட் ஓட்டிகள் குதிரைகளை நிற்கச் சொல்லிக் கூச்சலிடுவதைக் கேட்டு முன் சாளரம் வழியே ரத சாரதி தோளுக்குப் பின்னாலிருந்து பார்க்கிறார் பெத்ரோ. சாலையில் வழிமறைத்துக் கொண்டு கம்பீரமான ஆனால் தளர்ந்த ஆகிருதியான உடலும், அரச வம்ச தோரணைகளும், தூசி படிந்த ஆனால் நேர்த்தியாக ஒரு பத்து வருடம் முன் தையல் கலை மேதைகள் வெட்டித் தைத்த மிகக் கச்சிதமாகப் பொருந்திய உடுப்புமாக யாரோ நிற்கிறார்கள்.

நான்கு சாரட்களும் நிற்கின்றன. குதிரைகள் சேணம் அசையத் தலை குலுக்கும் சத்தம் வெட்டவெளியில் நிரம்புகிறது. நிறுத்தியவர் யாரென்று ரத சாரதிகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். மௌனமாக கையில் லகான்களைப் பற்றிப் பிடித்தபடி பெத்ரோ இருந்த சாரட்டைப் பார்க்கிறார்கள். நிற்கணுமா போகலாமா என்று அவர்களால் முடிவு செய்ய முடியாது. பெரிய இடத்து தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.

பாதை மறித்து நின்றவர் கடகடவெனச் சிரித்து நமஸ்காரம் என்றபடி பெத்ரோ துரையோடு கை குலுக்க வலது கரம் நீட்டுகிறார். பெத்ரோ இருகை கூப்பியபடி   கீழே இறங்குகிறார்.

”மகாமன்னர் வீரநரசிம்ம மஹாராஜவ்வரே, நமஸ்காரம்” என்று வணக்கம் சொல்லியபடி நிற்கும் பெத்ரோவை எட்டி முன்னால் போய்த் தொட்டுத் தழுவிக் கொள்கிறார் வீரு. உள்ளால் அரசி அப்பக்காவின் கணவரும் பன்கடி அரசருமான வீரு என்ற வீர நரசிம்மர்.  

கைகொடுத்து அவரையும் ரதத்தில் ஏறவைத்துத் தானும் ஏறிக்கொள்கிறார் பெத்ரோ. சாரட்கள் நகர்ந்து ஓட ஆரம்பிக்கின்றன.   

”போம் தியா சின்ஹொர் கவுடின்ஹோ. கோமோ வோசே எஸ்தா” ஆப்த நண்பரிடம் நலம் விசாரிப்பது போல் பெத்ரோ துரையின் முதுகில் தட்டி போர்த்துகீஸில் வீரு பெத்ரோவிடம் கேட்கிறார். கேட்டதை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்து கொங்கணியில் சொல்லி சந்தோஷமாகச் சிரிக்கிறார் பெத்ரோ – காலை வணக்கம் திரு கவுடின்ஹோ. நலமா

“வீர நரசிம்மர் பகடி பேச இந்த முழு மூடன் பெத்ரோவைத் தேர்ந்தெடுக்க ஏது காரணம் அறிகிலேன். இது காலை இல்லை, மாலை என்பதையும் நான் கவுடின்ஹோ  இல்லை, பெத்ரோ என்பதையும் வீர நரசிம்மருக்குச் சொல்லத் தேவையில்லை. எனினும் ஒரு முறை சொல்லி விட்டு அடுத்த கேள்விக்குப் பதில் – நான் மிக நன்றாக இருக்கிறேன். தாங்கள் நலம் தானே?”

வீரு அப்படியா என்று கேட்டுவிட்டு, போர்த்துகீஸ் மொழியிலும் ஒவ்வொரு பெயருக்கும் அர்த்தம் இருக்குமில்லையோ. உங்கள் பெயருக்கு என்ன பொருள் என்று கேட்க, பெத்ரோ என்றால் எனத் தொடங்குகிறார் இமானுவெல் பெத்ரோ. இல்லை, கவுடின்ஹோ என்றால் என்ன அர்த்தம் சிநேகிதரே என கேட்கிறார் வீரா. கவுடின்ஹோ என்றால் மேய்ச்சல் நிலம். பெத்ரோ என்றால் கருங்கல். அப்படியா, நீங்கள் எப்போது கருங்கல் ஆவீர்கள் எனக் கேட்கிறார் வீரு. கஸாண்ட்ரா கூட இருக்கும்போது என்று மனதில் நினைத்துக் கொள்கிறார் பெத்ரோ.

”உங்கள் வீட்டை நிர்வகிக்கும் இளம்பெண் மரியா பேரழகி என்று அத்தனை வண்டிக்காரர்களும் பேசுகிறார்கள். உம் மாளிகைக்கு இந்த பன்கடி அரசரை விருந்து வரச் சொல்லுங்களேன். அவரே நேரில் நிச்சயப்படுத்திக் கொள்ளட்டும். வரலாமா?” என்றார் ஒரு நிமிடம் சும்மா இருந்து விட்டு, வீரு. 

பெத்ரோ தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார். பேரழகி தான். வண்டிக்காரர்கள் பேசினால் அது பற்றி பெத்ரோ எதுவும் செய்ய முடியாது. ஆனால் மரியா? மரியா பெத்ரோவைக் கல்யாணம் செய்து கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்து, பெத்ரோ கழுத்தில் இரும்புச் சங்கலி மாட்டி வைத்திருக்கும் பிராணி அதிபர். 

சரிதானே, ஏன் தலையில் கை வைத்து அமர்ந்திருக்கிறீர்கள் என்று சாதுவாக விசாரிக்கிறார் வீரு. ஒன்றுமில்லை, மரியா என்பது என் மனைவி பெயர். உடனே வீரு கேட்கிறார் – ”என்னது, வீட்டு நிர்வாகம் செய்யும்   அந்த அழகிய பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு விட்டீர்களா? எத்தனை அழகான பெயர் அவளுக்கு! மரியா ஓ மரியா”  

”சின்ஹோர் எல்லோருக்கும் தான் பெயர் இருக்கும். என் மனைவி பெயர் மரியா”. 

”நான் சரியாகத்தான் சொன்னேன். உங்கள் மனைவி மரியா பேரழகி தானே?”. 

ஆமாம். ஆமாம் ஆமாம் என்று பெத்ரோ புலம்பினார். அவருக்கே சந்தேகம் மரியா யார் பெயர் என்று.

அவரிடம் கஸாண்ட்ரா பெயரை ஒரு தடவை சொல்லி வைத்தால் இன்னும் இரண்டு நாளில் தன் பேச்சில் அவளை பெத்ரோவின் மாமியார் ஆக்கியிருப்பார். கஸாண்ட்ராவை மாமியாராக்கினால், மாமியாரை என்ன செய்வார்? மாமியாரை அடுத்த வீட்டுக்காரியாக்கி பெத்ரோவோடு தொடர்பு கொள்ள வைத்திருப்பார் என்று நினைக்க பெத்ரோவுக்குப் பிடித்திருந்தது.  அப்போது கஸாண்ட்ரா? அவள் ஸாமுரினோடு முயங்கிக் கிடப்பாள். வேண்டாம். நிற்கட்டும் மனது.

”வீரு மகாராஜ், வாகனம் அனந்தம் உங்கள் கண்ணசைவுக்கு இருக்க தாங்கள் பெருவழியில் தனித்து பின்மாலை வெய்யிலேற்று நடந்து வந்து கொண்டிருப்பதன் காரணம் நான் அறியலாமா?” பெத்ரோ கேட்டார். 

“அது வேறேதுமில்லை. மதுசாலை திறக்க ஆறுமணி ஆகும். அதுவரை என்ன செய்யலாம் என்று யோசிக்க யாரோ சொன்னார்கள் கவுடின்ஹோ பிரபு வரும் பாதை இது. வரும் நேரம் இது என்று. காத்திருக்காமல் நடந்து கொண்டிருக்க முடிவு செய்தேன்”. 

“கவுடின்ஹோ வருவாரென்று பெத்ரோவை வழியில் நிறுத்தினால் என்ன அர்த்தம் மதிப்புக்குரிய மகாராஜா அவர்களே?”

“ஐம்பது அல்லது நூறு வராகன் கௌடின்ஹோ கொடுத்தால் என்ன பெத்ரோ கொடுத்தால் என்ன, நாளை திருப்பி விடுவேன்” என்றார் வீரு. 

பெத்ரோ மௌனமாக இருந்தார். அப்பக்கா சௌதாவின் அறிவும், நிர்வாகத் திறமையும் எங்கே அவருடைய கணவரான இந்த வீருவின் ஐம்பதுக்கும் நூறுக்கும் அலைந்து காசு தேடி, மது குடிக்கும் வெறி எங்கே. 

ரதவீதியில் சாரட் திரும்ப, பதிலேதும் சொல்லாமல் குப்பாயத்தில் இருந்து இருபது வராகனை எடுத்து நீட்டினார் பெத்ரோ. வீரு நன்றி சொல்லி வாங்கிக் கொண்டு இறங்க முற்பட்டார். அப்போது பெத்ரோவிடம் சொன்னார் –

”நேமிநாதனின் மனைவி ரஞ்சனா தேவி நல்ல குலத்தில் பிறந்து வாக்கப்பட்டவள். அவளை உங்களுக்கு தாரை வார்க்க வந்தால் வேண்டாம் என்று சொல்லித் திருப்பி அனுப்புங்கள். அந்த அக்னி உம்மை சுட்டுப் போடும்”.

வீரு சாரட்டை விட்டு இறங்கி ரதவீதியின் கூட்டத்தில் கலந்தார்.

பெத்ரோ வீட்டு வாசலில் வழக்கத்துக்கு மாறுதலாகக் கூட்டம் கூடி நிற்பதைக் கண்டார். கஸாண்ட்ரா ”நான் சொல்வதைக் கேளுங்கள்” என்று திரும்பத் திரும்பச் சொல்வது காதில் விழுந்தது. அவளுக்கு முன்னால் அதிகாரத்தோடு நின்று கொண்டிருந்த நாலைந்து பேரை வெறுந்தடியர்களாக ரதவீதியில் சுற்றிவரப் பார்த்திருக்கிறார் பெத்ரோ. என்றால், இவன்கள் இங்கே என்ன செய்கிறார்கள்?

”நீங்க வீட்டுக்குள்ளே என்ன வேணும்னாலும் செய்யுங்க, மாட்டுக்கறியைத் தின்னுட்டு மாட்டு எலும்பை, அதுலே ஒட்டின மாமிசத்தை எல்லாம் சமண வசதிக்குள்ளே ஏன் எறியறீங்க” ? 

”நாடு விட்டு நாடு பிடிக்க வந்துட்டு எங்க பிரார்த்தனைக் கூடத்தை அசுத்தப்படுத்தறதை நீங்க வேறே எல்லா ஊரிலேயும் செஞ்சுக்கிட்டிருக்கீங்க. இங்கே இல்லாம இருந்தது. இப்போ வந்திருக்கு”.

”மகாராணி அறுபது வயசு, எண்பது தொண்ணூறுன்னு குடுகுடு கிழட்டு வயசானவங்களா அரசாட்சி செய்ய வந்தா இதுக்கு மேலே உடம்பு இடம் கொடுக்காது. பிள்ளை கிட்டே ஆட்சி மாற்றவும் மாட்டேன்னு பிடிவாதம். கஷ்டப்படறது ஜனங்கள் தான்”.

குரல்கள். ஒன்றிரண்டாக ஒலித்து முகத்தைக் காட்டாமல் ஓய்கின்றன.

 கஸாண்ட்ரா அமைதியாகச் சொன்னாள் – ”சமண பிரார்த்தனை மண்டபம் பெத்ரோ துரை மாளிகைக்கு பின்னால் இருக்கு, உண்மைதான். ஆனால் இங்கே இருந்து எதையும் தூக்கி எறிஞ்சு அங்கே விழ வைக்க முடியாது. காம்பவுண்ட் சுவர் அங்கேயும் இருக்கு இங்கேயும் இருக்கு. சாய்வாக இறங்கின கூரை வசதியோட மண்டபத்தை நாலு பக்கத்திலும் மூடுது”

”பாருங்க இந்தப் பொண்ணு உள்ளே போய் பசதி எங்கே எப்படி சுவர், ஜன்னல், கூரை இருக்குன்னு தெரிஞ்சுண்டு வந்துட்டா. பகல்லே ஆள் அரவம் வெய்யில் காரணம் கம்மியான நேரத்திலே பசதிக்குப் போய் மாட்டு மாமிசம் எறிஞ்சது அவ தான்”. 

“ஆமா அவளாத்தான் இருக்கும். சென்னாராணிக்கு பெத்ரோ துரை ரொம்ப வேண்டியவங்க அதான் கண்டுக்காமல் விட்டுடறாங்க”.

”போடலேன்னா வேறே எப்படி மாட்டு மாமிசம் அங்கே போயிருக்கும்?”

”கொஞ்சம் நான் சொல்றதைக் கேளுங்க. மாட்டு மாமிசம் பசதிக்குள்ளே எப்படிப் போச்சு? நிச்சயம் மனுஷங்க செய்ய முடியாத காரியம் அது. றெக்கை இருக்கற காக்கையோ கழுகோ நாரையோ குயிலோ இந்த வீட்டுக் கொல்லையிலே இருந்து கொத்தி எடுத்து சாப்பிடக் கொண்டு போகும்போது அங்கே அலகு நழுவி விழுந்திருக்கலாம். அங்கே அமைதியா உட்கார்ந்து சாப்பிட்டுப் போகலாம்னு வாயில் மாமிசத்தோடு பசதிக்குப் பறந்தது அங்கே விரட்டினதும் போட்டுட்டு ஓடியிருக்கலாம். இதிலே காக்கா தவிர மற்ற பறவைகளை நாம் இங்கே பார்க்கறது அபூர்வம். சமையலறைக்கு வெளியே சுற்றி சுற்றி வர்ற காக்காதான் இப்படி இங்கே எடுத்து அங்கே கொண்டு போய்ப் போட்டிருக்கும். காக்கா செய்ததுக்கு நான் என்ன பண்ண? வேணும்னா வாளியிலே தண்ணி எடுத்து வந்து வசதியைக் கழுவி விட்டுடறேன். அதைச் செய்ய முடியும். அதுக்கு மேலே கேக்காதீங்க”. கஸாண்ட்ரா தீர்மானமாகச் சொன்னாள்.

அவள் பெத்ரோவை சைகை செய்து மாளிகை உள்ளே போகச் சொன்னாள்

”சின்ஹோர், இது நீங்க தலையிட வேண்டாத விஷயம். நான் கவனிச்சுக்கறேன், பிரயாணக் களைப்பு தீர ஓய்வெடுங்கள்” என்றாள்.

நஞ்சுண்டய்யா தலையில் இருப்பதிலேயே நீளமான குல்லா அணிந்து கூட்டம் கூடிய பெத்ரோவின் மாளிகை வாசலுக்குத் தட்டுச் சுற்று வேட்டியில் வந்து சேர்ந்தார்.

அவரைப் பார்த்ததுமே அங்கே இங்கே என்று கூட்டம் கலைய ஆரம்பித்தது. சாயந்திரம் வீட்டுக்கு, அதுவும் இதுவும் வாங்க கடைவீதி வந்த அரச ஊழியர்கள் எதற்கு வம்பு என்று கிளம்பினார்கள். அரண்மனை, கோட்டை வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள், ’இவர்கள் கண்ணில் பட்டால் அமைதிப்படை, ஆன்மிகம் பரப்பும் படை இப்படி   ஏதாவது அமைப்பில் ஒண்ணரை காசு மதிப்பு கூட இல்லாத பதவி கொடுத்து தெருவில் அலையச் சொல்வார்கள்’ என்று பிய்த்துக்கொண்டு கிளம்பினார்கள். இளைஞர்களுக்கு இந்த கிழட்டு ராஜ்ஜியத்தில் ஆர்வம் ஏதுமில்லை.

”பெத்ரோவையும் அவர் வீட்டில் பணிப்பெண்ணையும்   எனக்கு நன்றாகத் தெரியும்”. நஞ்சுண்டர் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். வைப்பாட்டிக்கிளி வாழ்க என்று யாரோ குரல் எழுப்ப பலத்த சிரிப்பு.

நஞ்சுண்டர் தொடர்ந்தார்-

”பெத்ரோவும் அவர் வீட்டிலிருப்பவர்களும்  இப்படி மாமிசத்தை விட்டெறிந்து கலவரத்தை உண்டாக்கக் கூடியவர்கள் இல்லை. தற்செயலாக காக்கை பறந்து மாமிசத்தை வசதியில் போட்டிருக்கும். அதைப் பொருட்படுத்த வேண்டாம். தற்போது கலைந்து போங்கள்” என்றார். கும்பல் மெல்லக் கலைந்தது.

இதெல்லாம் நடந்து ஒரு வாரம் கழித்து ஜெரஸோப்பா பவழக்கார வீதி சமண பிரார்த்தனை மண்டபத்தில் சமண பிரசாரகர் சோமேந்துநாதர் சொற்பொழிவு அவை நிரம்ப நடந்து கொண்டிருக்கிறது. பிரசாரகர் பேசுகிறார் – 

“போன மாதம் பிரார்த்தனை மண்டபத்தை பெரும்பான்மை வைதீக மதத்தினர் அடித்து நொறுக்கி தீர்த்தங்கரரின் நாசியை உடைத்தார்கள். நாம் மௌனமாக இருந்தோம். போன வாரம் புதியதாகக் கட்டப்படும் வசதி முழுக்கக் கட்டாமலிருக்கும்போதே மாமிசத் தாக்குதலை எதிர்கொண்டது. நான்கு தீர்த்தங்கர் சிலாரூபங்கள் மேலும் பசுமாமிசம் விழுந்து தரையில் படிந்து துர்நாற்றத்தைக் கிளப்பி உள்ளே வந்தவர்களை விரட்டுகிறது. அரண்மனைக்கு மிளகு விற்பது தான் குறிக்கோள். போர்த்துகல்லுக்கு எவ்வளவு மிளகு விற்பனையாகுமோ அவ்வளவுக்கு அரசாங்கமும் செழிக்கும். போர்த்துகீசியர்கள் நினைத்தால் எங்கே வேண்டுமானாலும் நிலம் வாங்கி பயிர் செய்யலாம். வியாபாரம் செய்யலாம். மதம் வளர்க்கலாம். மாமிசத்தை சமண வசதியில் விட்டெறியலாம். நாம் சிறுபான்மை. சும்மா இருப்பதே நமக்கு விதிக்கப்பட்டது. எத்தனை நாள் கஷ்டப்படப் போகிறோம். நமக்கு இது விதிக்கப்பட்டதுதானா?”

இல்லை இல்லை என்று ஒரு பெரிய கூட்டம் குரல் எழுப்பியது இரவின் கனத்தோடு கூடுதல் ஆழமும் பூடகத் தன்மையும் அளித்தது.

அதே இரவில் ஹொன்னாவர் ரோகிணி இனிப்பு அங்காடி மாடியில் ரோகிணியும் நேமிநாதனும் பழக்கடை அருகதேவனுக்கு நானூறு வராகன் கொடுத்து இப்போதைக்கு போதும், பிரித்துக் கொடுங்கள் என்றார்கள்.

”அடுத்த மாமிசத் தாக்குதல் ஜெரஸப்பா கணபதி கோவில்லே இன்னும் ஒரு வாரத்தில் என்றான் நேமி அருகதேவனிடம். 

”அதுக்கு முன்னாடி மாட்டு மாமிசம் எப்படி இருக்கும்னு பார்த்துக்குங்க. இப்போ மாதிரி ஆட்டுக்கறியை வீசி ஒப்பேத்த முடியாது”.

”அது வரும் திங்கள். புதன்கிழமை கோகர்ணம் புது பசதியிலே, மாமிசம் வேண்டாம். நரகலை சட்டியிலே வச்சு போடுங்க. அதுக்குத்தான் நூறு வராகன் கூடுதல் தரேன்” நேமிநாதன் சொல்லியபடி மூக்கைச் சுளித்தான் பகடியாக.

ரோகிணியும் நேமிநாதனும் சத்தமில்லாமல் சிரித்தார்கள்

Series Navigation<< மிளகு  அத்தியாயம்   நாற்பத்தெட்டு   மிளகு  அத்தியாயம்  ஐம்பது >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.