மிகிலிந்தேமிடி? (என்ன மிச்சம்?) என்ற நாவல் 

தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

ராகசஜலதி பிரசுரமான காலத்தில் அதாவது 1960 ஆகஸ்டில் ‘மிகிலிந்தேமிடி?’  என்ற நாவல் வந்தாலும் ஜெயந்தி பதிப்பகத்திலிருந்து 1976 ல் வெளிவந்த நூல் இப்போது கிடைக்கிறது.

மருத்துவமனையில் மரண படுக்கையில் இருந்த பெண் சுயசரிதையாக எழுதிய   அனுபவங்கள், தவறுகள், நினைவுகள் ஆகியற்றின் கதையே இந்த நாவல்.

செல்வம் அழகு இரண்டும் அமைந்த அந்தப் பெண் வாழ்க்கையை எவ்வாறு சரி செய்து கொள்ள வேண்டும் என்று தெரியாதவள் என்று தன்னைப் பற்றி ஒப்புக்கொண்டு பதினெட்டாவது வயதில் தன் வாழ்க்கை எவ்வாறு தொடங்கியது? எந்த முடிவுக்கு வந்தது என்பதைக் கூறுகிறாள். பதினெட்டு  வயதில் தன்னிடம் ஏற்பட்ட ஈர்ப்புகளுக்கும் அன்றைய மோதல்களுக்கும் மூலகாரணம், தான் விலைமாதர் வீட்டுப் பெண் என்பதால்தான் என்பது அவளுக்கு தெரியும். அவள் பெயர் வித்யா.

இன்டர்மீடியட் படித்து, இளஞர்களிடையே ஏற்படும் இயல்புகள் ஆசைகள் சினிமாக்கள் ஊர் சுற்றுவது, அதையும் மீறிய தொடர்புகள் என்று ஒரேயடியாக சொல்லிக் கொண்டே வந்து கலைமாதர் விட்டு பெண்ணானதால் உலகம் தன்னை சுலபமாக கிடைக்கும் பொருளாக பார்க்கிறார்கள் என்ற சந்தேகத்திற்கு உட்பட்டு அது குறித்து உயர்வாகவும் சொல்லிக்கொண்டு காலம் கழித்த வித்யாவின் வாழ்க்கையை இந்த நாவலில் பார்க்கிறோம். 

அழகே செல்வமாகக் கொண்டவள் என்ற சிறப்பு இருந்தாலும் சமுதாயத்தில் தாழ்வாக பார்க்கப்படுகின்ற குலத்தில் பிறந்தவள் என்ற தாழ்வு மனப்பான்மை அவளைப் பின்தொடர்ந்து கொண்டே இருந்தது. பிறருக்கு போகமளிக்கும் குலத்தில் பிறந்த பெண் திருமணம் செய்து கொண்டாலும் ஒரு ஆணையே  நம்பிக்கொண்டு வாழ்ந்தாலும் அவளுடைய கற்பு எப்போதும் சந்தேகப்படத்  தக்கது என்று எண்ணும் சமுதாயத்தில் வித்யா திருமணம் செய்து கொள்வதை   அவளுடைய தாய் விரும்பவில்லை. பெண் அனாவசியமாக கஷ்டங்களில் சிக்க கூடாது என்பது தாயின் அபிப்பிராயம். வித்யா தான் விரும்பிக் காதலித்த இளைஞனுக்கு தன்னை முழுவதும் அர்ப்பணம் செய்து கொண்டாள். அவனோடு திருமணத்திற்கு கனவு கண்டாள். ஆனால் அவனுடைய பெற்றோர் கொடுத்த அழுத்தத்தால் வித்யாவின் பிறப்புக்குக் காரணமான ஜமீன்தாருடைய தர்மபத்தினிக்குப் பிறந்த வாணிக்குக் கணவனாகிறான். அது அவள் மனதை கொந்தளிப்புக்கு ஆளாக்குகிறது. 

மருத்துவம் படித்தபோது அவளுடைய நட்புகள், சமுதாய நடவடிக்கைகள், தத்துவச் சிந்தனைகள் நாவலின் மற்றொரு முக்கியப் பகுதி.

பாரதியின் சினேகத்தால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், ஏழ்மையின் வேதனை போன்றவை தெரியவந்தன. அனாடமி தியேட்டரில் எலும்புக் கூட்டைப் பார்த்தபோது கடைசியில் இதுதான் மிஞ்சப் போகிறதா?  என்ற விரக்தி ஏற்பட்டது.

குலம் மதம் தேசம் காலம் வர்ணம், பண கர்வம், ஆண் பெண் வேறுபாடு போன்ற  எல்லாம் தத்தம் வழயில் போக, மீதி இருப்பது இந்த எலும்புக்கூடு தானா என்ற சிந்தனைக்கு ஆளானாள். 

மருத்துவப் படிப்பைத் தொடர்ந்துகொண்டே சினிமாத் துறையில் நுழைந்தாள். எத்தனை கிடைத்தாலும் தான் இஷ்டப்பட்டவன் கிடைக்காமல் போனதால் ஏற்பட்ட வேதனையையும் அதிருப்தியையும் சுமந்துகொண்டே வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வதற்கு அவள் செய்த முயற்சிகள் இந்த நாவலின் கதை அம்சத்தில் ஒரு பகுதி. வித்யா மருத்துவ படிப்பை முடித்து மருத்துவமனை திறந்து மருத்துவம் பார்ப்பது பற்றிய அனுபவங்களும் இந்த நாவலில் இடம் பெறுகின்றன.  

வித்யாவின் இன்டர்மீடியட் தோழி ஜானகியும் ராஜாவும் காதலித்தாலும் தந்தை பார்த்த மணமகனையே திருமணம் செய்து கொண்டாள் ஜானகி. மாமியார் வீட்டுக்குச் செல்லும் போது ஏன் இவ்வாறு செய்தாய் என்று கேட்டதற்கு நாம் பெண்கள் அல்லவா என்று கூறிவிட்டு சென்றாள் ஜானகி. அவள் மூர்ச்சை அடைந்து ஹிஸ்டீரியா வந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த தருணத்தில் வித்யா அவளைத் தன் ஹாஸ்பிடலில் சேர்த்து வைத்தியம் செய்தாள். இந்தக் காட்சி   ‘சிவரகு மிகிலேதி’ நாவலில் தயாநிதி சியாமளாவுக்குச் செய்த வைத்தியத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது. புச்சிபாபு, சியாமளாவின் அசாதாரணமான நடத்தைக்கு அழகில்லாமையே காரணம் என்று எழுதுகிறார். இங்கு லதா அதைப்பற்றி பிரத்தியேகமாக கூறாவிட்டாலும் காதல் இல்லாத காரணம் என்று நினைப்பது போல் தெரிகிறது.

ராஜாவைக் காதலித்தாலும் பெண்ணானதால் அந்த எண்ணத்தை மனதின்   மூலைக்குத் தள்ளிவிட்டு பெரியவர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் செய்து கொண்ட ஜானகிக்கு அங்கு அன்பு கிடைக்கவில்லை. கணவனின் பாலியல் நோய்களால் அவளுக்கு சம்சார வாழ்க்கையே இல்லாமல் போனது. அந்த வெறுமை அவளை ஹிஸ்டீரியா நோயாளியாக மாற்றியது. தன் மருத்துவமனையில் சேர்த்து வெளியில் இருந்து ராஜாவைப் பாடல்கள் பாடச்செய்து அதனை ஜானகியிடம் சேர்த்து ஜானகியின் உடல் நலமடைவதற்கு உதவினாள் வித்யா. 

காக்கை உட்கார பனம்பழம் விழுந்தாற்போல ராஜாவை எதிர்கொண்ட பதற்றமான   சூழ்நிலையில் ஜானகியின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைத்து அவள் நலமடைந்து தேறினாள்.

தயாநிதியைப் போலவே வித்யாவும் கற்பில்லாத பெண்ணாக அவதூறுக்கு ஆளாவதையும் மருத்துவமனையை நடத்த முடியால் மூடிவிட வேண்டி வந்ததையும் பார்க்கிறோம். 

இளமையின் உத்வேகத்தைத் தாள முடியாமல் கலைமாதர் குலத்தில் பிறந்த பெண்ணாக வித்யா, உலகத்தின் குறைந்த பார்வையில் இருந்தும் சந்தேகத்தில் இருந்தும் தப்பித்து கொள்ளும் முயற்சியில் தனிமைப்பட்டு வாழ்க்கையில் மிச்சம் என்ன இருக்கிறது என்று கேட்கிறாள். தனக்குத்தானாக வாழவதற்காகச் செய்த தனிமைப் போராட்டத்தில் தோற்றுப் போய் அனுபவங்களையும் ஞாபகங்களையும் அசைபோட்டபடி தவிப்பதும், உயிரை விடுவதுமே நடக்கிறது.

பத விஹீன என்ற நாவல்

1961 ஜூனிலிருந்து அக்டோபர் வரை ஆந்திரபிரபாவில் தொடராக வந்த ‘பத விஹீன’ (பாதை தவறிய) என்ற நாவலில் லதா, பெண்ணுக்கு பதிவிரதைத் தன்மையைவிட உயர்ந்தது எதுவும் இல்லை என்று கற்றுக் கொடுத்த கலாச்சாரம் பெண்களுக்குக் கொடுக்கும் கர்வத்தையும் அவர்களுடைய வாழ்க்கை மீது அதுவே பாரமாகி அவர்களை அழிக்கும் முறையையும் நிரூபித்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்.  அப்படிப்பட்ட பெண்களுக்கு பிரதிநிதியாக விஜயாவை மையமாகக் காட்டி இந்த   நாவலை நடத்துகிறார். விஜயா அநீதியும் புனிதமற்றதன்மையும் பிடிக்காதவள்.   வெறுப்பவள்.

விஜயாவின் கணவன் ஜெயப்பிரதராவு. விஜயா அவனை நேசித்து ஆராதித்து வந்தாள். கணவனுக்கு வேலை போய் ஒரு பைசா வருமானம் இல்லாத ஏழ்மையில் வீட்டில் ஏதோ ஒன்றை விற்று, ஏதோ ஒரு வேலை செய்து அவனுடைய பசியை எவ்வாறு தீர்ப்பது என்று தவிக்கிறாள். தான் பசியோடு   இருந்து அவனுக்கு உணவு கொடுக்கிறாள். அதுவே தன் தர்மம் என்று எண்ணுகிறாள். இந்த தர்ம நிர்வாகம் அவளுக்குத் தெரியாமலே அவளில் ஒருவிதமான கர்வத்தை வளர்க்கிறது. அது எப்படிப்பட்டது என்றால் கணவனுக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்க முடியாத அளவுக்கு. மைத்துனன் உறவுள்ள நாகேஸ்வர ராவு பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு தோட்டம் வாங்கி அதன்  நிர்வாகத்தை அண்ணனுக்கு அளித்தபோது பெண்களிடம் மோகம் உள்ள அவன், அவள் அழகில் மயங்கி கையைத் தொட்டபோது அவள் தன் கையைச் சுட்டுக் கொண்டாள்.

அப்படிப்பட்ட விஜயா கணவன் வீட்டில் இல்லாத சமயத்தில் ஜுரத்தோடு உதவியற்ற நிலையில் படுத்திருந்தபோது வந்த அதே நாகேஸ்வரராவு கையால் தூக்கிச் சென்று அவளை மருத்துவமனையில் சேர்க்கிறான். மேல் மருத்துவத்திற்காக விஜயவாடாவுக்கு அனுப்பினார்கள். மூன்றாம் நாள் அவன் அங்கிருந்து சென்று விடுகிறாள். 

அவள்மீது மரியாதை கொண்ட தம்பி போன்ற போன்ற ஜெகன்நாதம், சில நாட்கள் சிறையில் இருந்து வெளிவந்த அவளுடைய கணவன். அவளை மருத்துவமனையில் சேர்த்த நாகேஸ்வரராவு மூவரும் அவளுக்காக தேடிக்கொண்டே இருந்தார்கள். இறந்துவிட்டாளோ என்று கூட சந்தேகப்பட்டார்கள்.

இறுதியில் விஜயவாடா துர்கா கோவிலில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த அவள் சிவானந்த சுவாமியின் அறிவுரைப்படி கணவனுக்காக நூஜிவீடு என்ற இடத்துக்குச் செல்கிறாள். அவன் மறுமணம் செய்து கொண்டான் என்று அறிந்து அவர்களுடைய வாழ்க்கையில் கொந்தளிப்பை ஏற்படுத்த விரும்பாமல் திரும்பிச் சென்று விடுகிறாள். இறுதி நேரத்தில் மீண்டும் வந்து முன்பு கூறியது போலவே கணவனின் கைகளில் மரணிக்கிறாள் என்பது இந்த நாவலின் கதை. 

பவித்திரமாக வாழ்வது நல்லதுதான். ஆனால் புனிதமாக இல்லை என்பதற்காக சிலரை வெறுப்பதும் அவமதிப்பதும் சரியானது அல்ல என்பது லதாவின் அபிப்பிராயம். 

சிட்டி என்ற கதாபாத்திரத்தின் நோக்கம் கூட அந்த அபிப்பிராயத்தின் நிரூபணமே.  ஜகன்னாதம் திருமணம் செய்ய நினைத்த பெண் சிட்டி. அவள் தன் தந்தைக்கு எதிரியான ஒருவனின் மகன் முரளியைக் காதலித்து அவனோடு ஓடிப்போகிறாள். பெற்றோரிடமிருந்து விலகுகிறாள். முரளி தந்தையின் சொல்லைத் தட்டிவிட்டு தன்னைத் திருமணம் செய்யும் சாகசம் செய்ய மாட்டான் என்று தெரித்தும், தன்னை அலட்சியம் செய்து அவனைக் காதலிக்கும் வாஸந்தியின் பின்னால் அலைகிறான் என்று தெரிந்தும், அவன் புறமிருந்து பார்த்து திருமணம் செய்து கொண்டு சுகப்படட்டும் என்று நினைத்தாளே தவிர தவறா சரியா என்ற முடிவுக்கு இறங்கவில்லை. அவள் மன்னிக்கத் தெரியாத உலகத்தை நினைத்து வருந்துகிறாள். பெண்களின் வாழ்வில் தவறான அடியெடுத்து வைக்காலாம். அதற்காக அவர்களை விலைமாதர் என்று முத்திரை குத்துவது சரியாயனதல்ல என்பது அவளுடைய அபிப்பிராயம். மன்னிக்க கற்றுகொண்டான் என்பதால்தான் ஜகன்னாதம், முரளி வாசந்தியை திருமணம் புரிவதற்குத் தரயரான நிலையில் தனிமையில் ஜுரத்தால் அவதிப்பட்ட சிட்டியின் பொறுப்பை ஏற்கிறான். நாகேஸ்வர ராவு மருத்துவமனையில் சேர்த்த மூன்றாம் நாள் அவள் அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டாள் என்று தெரிந்த போது பெண்ணுக்கு பதிவிரதைத் தன்மையை மிஞ்சியது எதுவும் இல்லை என்று கற்றுத்தந்து இறுதியில் இந்த நிலைக்கு எடுத்து வந்துவிட்டது உலகம் என்று ஜகன்னாதம் எண்ணுகிறான். பெண் வீட்டை விட்டு வெளியே வரும் மிக அவசியமான சூழ்நிலையை ஏற்படுத்தும் சமுதாயம், ஆணுக்கு இருப்பதுபோல் பெண்ணுக்கு திரும்பிவரும் வழியை ஏன் மூடிவிட்டது என்று கவலைக்குள்ளாகிறான். பெண்கள் ‘பத விஹீனர்கள்’ (பாதை தவறியவர்கள்) ஆகிறார்கள் என்று ஜகன்நாதம்   வேதனைப்படுகிறான். விஜயா போன்ற பெண்கள் மரணிக்கும் நேரத்திலாவது தாம் சேரவேண்டிய இடம் கணவனின் பாதங்களே என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து, மரண சமயத்தில் கணவனின் சந்நிதிக்கு வந்து மரணித்த விஜயாவின் கதாபாத்திரத்தைக் காண்பித்து கவனிக்கச் சொல்கிறார் லதா 

பிரியமான பெண்ணை அடைவதே வாழ்க்கையாக இருந்த நாகேஸ்வர ராவு, நண்பர்களான டாக்டர், சினிமா விநியோகஸ்தர் பாலச்சந்தர் மூவரும் வாழ்க்கையில் தாமும் தம் தேவைகளுமே மையமாக ஆஸ்தி, புகழ் இவற்றோடு கூட பெண் சுகத்தையும், பெண்களோடு தொடர்பையும் விரும்புகிறார்கள். பெண்கள் குறித்தும் பெண்களின் பதிவிரதைத் தன்மை குறித்தும் தான் அபராதம் செய்கிறேன் என்ற எண்ணத்திற்கு நாகேஸ்வரராவு உள்ளாவதைப் பார்க்கிறோம். நானா என்பவள், பாலச்சந்தரிடம் வாழ்க்கை என்றால் சம்பாதிப்பது, சுகப்படுவது இவை மட்டுமே அல்ல. ஆணும் பெண்ணும் உலகியல் பொருட்களை சம்பாதிப்பதற்குக் காட்டும் உற்சாகத்தையும் மோகத்தையும் விட்டுவிட்டு ஒருவருக்கு ஒருவர் என்று வாழ வேண்டும் என்று கூறுவதற்கு முயற்சிக்கிறாள். 

லதா இந்த நாவலில் சிவானந்த சுவாமியைக் கூட ஆண், பெண் உறவுகள், ஒழுக்கம், ஒழுக்கமின்மை போன்றவற்றிற்கு விளக்கமளிப்பவராக காட்டுகிறார். இயல்புக்கு மாறான மத வேற்றுமைகள், பாவம், புண்ணியம், நீதி, அநீதி போன்ற குழப்பங்கள் காரணமாக ஆண் பெண்களிடையே இயல்பான வளர்ச்சி அடக்கப்படுகிறது என்கிறார். தன் புனிதத்தை நிலைநிறுத்திக் கொண்டு பதிதர்களிடம் இரக்கத்தோடு இருக்கவேண்டும் என்றும் அடுத்தவர் தவறு செய்தார் என்ற அபிப்பிராயம் கர்வத்தையும் அதிகாரத்தையும் கொடுக்கும் என்றும் அப்போது புனிதத்திற்கு மதிப்பில்லாமல் போகிறது என்றும் விஜயாவுக்கு போதிக்கிறார். மதம் மனிதனின் வாழ்க்கையைக் குழப்பினால் மனிதனின் உளளம் கல்லாக மாறுகிறது என்று சுவாமி வேதனைப்படுகிறார். அவ்விதமாக லதா, மனிதன் மதத்தை விட, ஒழுக்க நிபந்தனைகளை விட இயல்பான மனிதாபிமான உணர்வுகளோடு வாழவேண்டும் என்று விரும்புகிறார்.

திரகபடின தேவதலு என்ற நாவல்

திரகபடின தேவதலு (எதிர்த்த தேவதைகள்) ஒரு அதீத கற்பனைக்கதை. இந்த நாவலின் பதிப்புக் காலம் தெரியவில்லை ஆனால் கதை நடந்த காலம் 1957 என்று உள்ளிருக்கும் சாட்சிகள் சொல்கின்றன. உதயலட்சுமியின் மரணத்தோடு தொடங்குகிறது நாவல். 1858 ஜூன் 30 ல் அவள் பிறந்ததாக ரேடியோவில் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கூறுவதில் இருந்து தொடங்கி அவளுடைய வாழ்க்கைக் கதையாக நகர்கிறது இந்த நாவல். மரணித்த போது அவளுக்கு தொண்ணூறொன்பது வயது என்று கூட நாவலில் கூறப்படுகிறது. அதாவது அவள் மரணமடைந்தது 1957 ஆக இருக்க வேண்டும். அதனால் கதை அங்கிருந்து தொடங்குவதாகக் கொள்ள வேண்டும். ஆனால் அது அங்கு தொடங்கினாலும் கடந்தகாலத்திற்குப் பயணித்து மீண்டும் அங்கு வந்து முடிகிறது. அவள் இறந்ததற்குப் பின் ரேடியோவில் ஒலிபரப்பான இறுதி அஞ்சலி நிகழ்ச்சியைக் கேட்கும் அன்பான சீடன் சுகர்னோவின் பார்வையில் இருந்து கதை மலர்கிறது. 

இந்தோனேசியாவின் பழமையான வரலாற்றையும் அதில் முக்கியமாக டச்சுக்காரர்களின் அரசாட்சியில் அந்த நாட்டு மக்கள் முக்கியமாக டச்சு வந்தேறி அரசர்களின் வாஞ்சைகளைத் தீர்க்கும் கருவியாக பெண்கள் வாழ்ந்த கொடூரமான வாழ்க்கையையும் விவரிக்கும் பின்னணியில் பெண் பிறப்பே விரும்பக் கூடாதது என்ற நிலையில் பிறந்த ஹெலெனா என்ற பெண்ணின் வாழ்க்கையில் நேர்ந்த மாற்றங்களை இந்த நாவலுக்கு கதையம்சமாகச் செய்துள்ளார் லதா. ஹெலெனா இரண்டு மாத சிசுவாக இருந்தபோது அவள் தாய் டச்சு வீரர்களின் கூட்டு வன்முறைக்கு ஆளாகி மரணித்த பின், படிப்பு எழுத்து எதுவுமின்றி வளர்ந்து பால்யம் கழிந்தது. ஐம்பது வயதான டச்சு அதிகாரியின் ஆசையைத் தீர்க்கும் கருவியாக மாறி அந்த ஹிம்சையான வாழ்க்கையைத் தாள முடியாமல் இந்தோனேஷியாவில் இருந்து ஓடிப் போன ஹெலெனா அறிந்தது, மனிதனில் இருக்கும் அசுர குணத்தையே. ராட்சசனை அடக்கி அதிகாரம் செய்யவேண்டுமென்றாலும் மனிதனாக மாற்ற வேண்டுமென்றாலும் அதீத மானுட சக்திகள் வேண்டும் என்று எண்ணி அவற்றைப் பெறுவதற்கு திபெத் செல்வது அவளுடைய பயணத்தில் முதல் கட்டம். அங்கிருந்து எங்கு செல்வது என்ற தெளிவு இல்லாத அவளுடைய வாழ்க்கைப் பயணத்தின் சில துண்டுகளைக் காட்டுகிறார் லதா.

காசியில் சர்கஸ் கம்பெனியில் சேருவது இரண்டாவது கட்டம். அவள் விரும்பிய அதீத மானுட சக்திகள் அவளுக்குக் கிடைத்தன என்பது அங்ககங்கு நிரூபணம் ஆகிறது. அந்த அதீத சக்திகளோடு ஓராண்டுக்குப் பின் பாரிசில் உலக அமைதிக்காக நடந்த ஆன்மீகவாதிகளின் மாநாட்டில் கலந்து கொள்கிறாள். எழுத்தாளர் ஆகிறாள். அதன் பின் இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வரும் சமயத்தில் ஒரு விமானத்தில் பயணித்து விபத்தில் பாரத தேசத்தின் ஆந்திர பிரதேஷில் மன்யம் என்ற காட்டுப் பகுதியில் சிக்குவது மற்றொரு கட்டம். அங்கு அவளுக்கு அல்லூரி ராமராஜுவோடு தொடர்பு ஏற்படுகிறது. அவர் அவளை சீதா என்று அழைப்பதும் அதே பெயரோடு சேர்ந்து அவர் சீதாராமராஜு ஆனார் என்பதும் குறிப்பு. ராமராஜுவின் மரணத்திற்கு முன்பே அவள் மீண்டும் திபெத்துக்கும் அங்கிருந்து மதுராவோடு சேர்ந்து ஹைதராபாத்துக்கும் வருகிறாள். அவர்கள் அங்கு சேரும்போது பிளேக் வியாதி பரவியிருந்தது. அதன் பின் ஹோம் ரூல் லீகில் ஒரு கேந்திர சங்கத்தை ஏற்பாடு செய்து பாரத சுதந்திர போராட்டத்திற்கு உதவி செய்கிறாள். அவளுடைய சேவைகளுக்கு பலனாக சுதந்திர பாரததேசத்தில் குடியுரிமையும் உதயலட்சுமி என்ற பெயரும் அவளுக்குக் கிடைத்தன. அவள் விஜயவாடாவில் ஸ்திரப்பட்டு மரணமடையும் வரை அங்கேயே இருந்தாள். ஹைதராபாத் மிரர் பத்திரிகையின் எடிட்டர் லட்சுமி, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி இவர்கள் இருவரும் அவள் வாழ்க்கையைத் தொட்டுப் பிரிந்து போய்க் கொண்டிருந்தனர். லட்சுமி நடத்தும் கடிதப் போக்குவர்த்துகளின் மூலம் பெர்னாட்ஷாவைக் கூட இதில் கதாபாத்திரமாக்கியுள்ளார் லதா. இவை எல்லாம் அவருடைய பாண்டித்தியத்தை தெரிவிப்பவையாக இருக்கலாம். ஆனால் அந்த மயக்கத்தில் அவர் கொடுத்த கதையோடு இணையாத விஷயங்களும் சந்தர்பமில்லாத செய்திகளும் பல. 

இந்தோனேஷியாவில் ஹெலெனாவாகப் பிறந்து பாரத தேசத்தில் உதயலட்சுமியாக இறந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை மூலம் லதா என்ன சொல்ல வருகிறார்? பாலியத்தில் எதிர்கொள்ளும் விபரீதமான அனுபவங்கள் மனிதர்களிடம்  தீவிரமான உணர்வுகளைக் கிளறுகின்றன. எந்த வழியிலாவது முன்னும் பின்னும் பார்க்காமல் ஓடும் தைரியத்தை அளிக்கின்றன. அதீத மானுட சக்திகளை சாதிக்க வேண்டுமென்ற ஹெலெனாவின் ஆசைக்குக் காரணம் அதுவே. ஆனால் அதுவே அவள் நம்பிய ஆதரிசமா என்றால் அல்ல. அப்போதைக்கபோது அந்த வளையத்திலிருந்து மீளுவதற்கு பிரயாசைப்படுகிறாள். போராடுகிறாள். 

இந்த இரட்டை உணர்வு, அவளுடைய ஆளுமையில் பாலியல் விருப்பங்களின் விஷயத்திலும் தெரிகிறது. அழகிலும் கௌரவத்திலும் திருப்திப்பட வேண்டிய இயல்பான இளைமையின் உற்சாகம் கொடூரமாக சிதைந்த அனுபவம் அவளுடையது. டச்சு அதிகாரியோடான மூன்று மாத பாலியல் தொடர்பு அவளிடம் பயத்தையும் வெறுப்பையும் அருவருப்பையும் ஏற்படுத்தின. சைதன்ய நிலையில் அவள் உடல் தொடர்பகளிடம் மறுப்பைக் காட்டுகிறாள். ஆனால் இளமையின் இயல்பான ஈர்ப்புகள் வெளியிலிருந்து வரும் தூண்டுதல்கள் உடலில் நிகழும் இரசாயன மாற்றங்கள் அவளை உடல் வாஞ்சியின் திருப்திக்குத் தூண்டுகின்றன. 

ஆத்மாக்களை வரவேற்று, வேதாந்தம் போதித்து வாழ்கின்ற வாழ்க்கை முழுமையான அங்கீகாரத்தோடும் விருப்பத்தோடும் செய்வது அல்ல. நம்பிச்  செய்வதும் அல்ல. அதன் அழுத்தத்தை தாங்கிக் கொள்வதற்கு சிகரெட் குடிக்க ஆரம்பித்தாள். மது அருந்தினாள். போதை மருந்துக்கு அடிமையானாள். விருப்பம், விருப்பமற்றது, மோகம், வெறுப்பு போன்ற இரட்டைகளின் இடையில் நடந்த அமைதியற்ற வாழ்க்கை அவளுடையது. அதனால்தான் இத்தனை ஓட்டத்திற்கு பிறகும் இத்தனை அனுபவங்களுக்குப் பிறகும்’ மிகிலிந்தேமிடி?’ (மிச்சம் உள்ளது என்ன?) மக்களை மோசம் செய்து வாழ்வது மட்டும்தானா? என்று தடுமாற்றமடைகிறாள். நாவல் முடியும் போது உதயலட்சுமியின் வாய் மூலமாக இவையெல்லாமும் இத்தனை நாட்களாக மக்களை மோசம் செய்த முயற்சியே என்று தோன்றும் அளவுக்கு கூறச் செய்கிறார் ஆசிரியை. ஆனால் அதீத சக்திகளின் சாதனைக்கு நடக்கும் வாமாசாரங்களும் பயங்கரமான ‘கராள’ நிருத்தியங்களும் யதார்த்தம் என்பது போல நாவலின் கதையம்சம்  முழுவதையும் கட்டமைத்தபடி வந்த லதாவின் உத்தேசமும் பிரயோஜனமும்   என்ன என்ற ஐயத்திற்கு இடமில்லாமல் போகவில்லை.

நிஹாரிகா என்ற நாவல்

நிஹாரிகா என்ற நாவலிலும் ‘சிவரகு மிகிலேதி’ என்ற நாவலைப் போலவே தாய் செய்த பாவம் பிள்ளைகளின் வாழ்க்கையில் ஏற்படுத்திய கொடுமைகளே  முக்கிய அம்சம்.

‘சிவரகு மிகிலேதி’ என்ற நாவலில் கற்பு குறித்த அவதூறைச் சுமந்த தாய் நாவலின் ஆரம்பத்திலேயே இறந்து போகிறாள். அந்த தாயின் மகனாக அவமானங்களைத் தோளில் சுமந்தவன் மகன்.

இந்த நாவலில் தாய் உயிரோடுதான் இருக்கிறாள். அவளுடைய வாழ்க்கையைப்  பின்தொடர்ந்து வந்த அவதூறின் நிழல் குழந்தைகளின் வாழ்க்கை மீதும் பரிகாசம் செய்கிறது. கற்பில்லாதவள் என்ற அபவாதம் பின்தொடர்ந்ததால் சாரதா தேவிக்கும் அவள் கணவனுக்கும் இடையில் நித்திய போராட்டம் நடக்கிறது. அந்த  மோதல்களின் இடையே நசுங்கிய குழந்தைகளில், மகன் சின்னபாபு படிப்புக்காக வெளியில் சென்று சற்று மன விசாலத்தை பழக்கப்படுத்திக் கொண்டு தாயை அவளுடைய கோணத்தில் இருந்து புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்கிறான்.

சுயநலவாதியாகவும் பவித்திரமாகவும் வாழ்கின்ற தந்தை, சுயநலமும் இல்லாமல் பவித்திரமும் இல்லாமல் வாழ்கின்ற தாய் இவர்கள் இருவரின் வாழ்க்கை மார்க்கங்களில் எது நல்லது? எது அன்று? என்று பகுத்தறிவோடு ஆராய்கிறான்.   மகள் அருணா அவ்வாறல்ல. முழுவதுமாக தாயை வெறுக்கிறாள். அத்தகைய தாயின் மகளான உன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்கிறான் அவளுடைய காதலன். தாயின் கற்பு தன் வாழ்வின் வளர்ச்சிக்கும்  விருப்பங்களுக்கும் தடையாக ஆனது என்பதால் அருணா தாயை வெறுப்பதோடு மட்டுமின்றி, அந்த துவேஷத்தில் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறாள்.

‘சிவரகு மிகிலேதி’ என்ற நாவலிலும் தாயின் அதிருப்திகள், வெளியில் கொண்ட  தொடர்புகள் இவற்றின் பின்னணியில் தந்தை அவளை துவேஷிப்பதும், பெரிய மகன் அவளை வீட்டிலிருந்து வெளியில் துரத்த வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதும், தயாநிதி ஒருவன் மட்டுமே அவளைப் பற்றி இரக்கத்தோடு ஆலோசிப்பதும் கதைக் கருவின் ஒரு பகுதியாவதைப் பார்க்கிறோம்.

இந்த நாவலில் சின்னபாபு ஓரளவுக்கு தயாநிதி போன்றவனே. ஆனால் அந்த நாவலில் தாய்க்கு இல்லாத குரலும் புத்திகூர்மையும் இந்த நாவலில் தாய்க்கு உள்ளன. சொத்துக்காகவே தன்னைத் திருமணம் செய்து கொண்டு சுயநலத்தாலும்  கீழான ஆலோசனைகளாலும் குடும்பத்தையும் தன் வாழ்க்கையையும் களங்கம் செய்த கணவன் அளித்த அதிருப்தியில் வாழ்ந்த அவளுடைய வாழ்க்கையின் ஆசைகளுக்கு ஆதரவாக நின்றவன் எதிர்பாராமல் சந்தித்து சிநேகத்தைப் பகிர்ந்த   சேஷகிரி. அவன் அவளுடைய முதல் கணவன்.

அவளுக்காக வீட்டுக்கு வந்து போய்க்கொண்டு இருந்தான். படுக்கையறைக்கு   வரக்கூடிய அளவு உரிமை கொண்டிருந்தான். செய்யக் கூடியவை, செய்யக்கூடாதவை என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவான். சுய ஒழுக்கத்திற்கும், சுகம் கொடுக்கும் எந்த பாவத்தையும் செய்யலாம்… ஆனால் ரகசியமாக செய்ய வேண்டும் என்ற உலக நீதிக்கும் இடையில் போராடுகின்ற அழுத்தத்தைத் தாங்குவதற்காக குடிப்பானே தவிர அவன் செய்த பாவம் வேறு எதுவுமில்லை என்று மகளிடம் அவள் சொல்லுவதை கவனிக்க முடிகிறது.

பெண்ணுக்கு ஒரு விதமாகவும் ஆணுக்கு ஒரு விதமாகவும் பொருந்தும்  இரட்டைப் பாலியல் ஒழுக்க நீதி பற்றிய உணர்வு சேஷகிரி, சாரதா இருவருக்கும் இருந்தது. திருமணம் ஆகி இரு குழந்தைகளுக்கு தந்தையான அவனுக்கு சாரதாவோடு இருந்த தொடர்பு அவனுடைய மனைவிக்கும் குழந்தைகளுக்கும் உறவினர்களுக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் அவர்கள் அவனைக் குறை கூறவில்லை. அதனை அவனுடைய ஆதிக்கமாகவே எண்ணினார்கள் என்று சேஷகிரி புரிந்து கொண்டான். ஆனால் சாரதா ஒரு பெண் ஆனதால் அவனோடு உறவு கொண்ட அவளைத் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகியது என்று அவன் வருந்தினான். குழந்தைகளின் வெறுப்புக்கு ஆளான அவள் பட்ட மனவேதனையை நினைத்து அவன் பரிதவித்தான். சேஷகிரி என்பவன் யார்? அவள் அவனை எவ்வாறு சந்தித்தாள்? என்பது பற்றிக் கூறுகையில், “ரங்கூனில் தந்தை செய்த திருமணத்தால் அவன் என் கணவன் என்று தெரிந்து கொண்டேன். அன்றிலிருந்து நான் விலைமகளாக உணர்கிறேன். இரு மனைவிகள் உள்ள கணவன் பவித்திரமானவன். இரு கணவர்களின் மனைவி பவித்திரமானவள் அல்ல. இந்த உலகத்தில் உள்ள நியாய சூத்திரங்கள் இந்த லட்சணத்தில் உள்ளன. இதில் விசித்திரம் என்னவென்றால் அவன் என் கணவன் மாத்திரமே அல்ல என் காதலன் கூட. இந்த துயரமான வாழ்க்கையில் எனக்குள்ள ஒரே அன்பான உறவு அவன்” என்கிறாள். அவ்விதமாக அவளும் இரட்டை ஒழுக்க மதிப்புகளைப் பற்றி   வினா எழுப்புகிறாள்.

குடும்பங்கள், ஆண், பெண் தொடர்புகள், கணவன் மனைவி உறவுகள் அனைத்தையும் ஒரே அச்சில் போட்டு, இவ்வாறு இருக்க வேண்டும், இவ்வாறு இருக்கக் கூடாது என்று தீர்மானிப்பது வீண் முயற்சி என்பது லதாவின் எண்ணம். அவை ஆண் பெண்களின் நடத்தையைப் பொறுத்தும் சூழ்நிலையைப் பொறுத்தும் மாறுபடும் என்று இந்த நாவலில் பல ஜோடிகளின் மூலம் காட்டுகிறார் லதா.

பெண்ணை மோசம் செய்து அதிகாரம் செய்யும் ஆண்கள், அன்புக்காக ஏங்கி  தன்னை முழுவதும் அர்ப்பணம் செய்து காதலை கொடுப்பதில் எத்தனை எதிர் அடி வாங்கினாலும் மீண்டும் மீண்டும் முயற்சித்துப் பயணம் செய்யும் பெண்கள்,   கணவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் சிலர், அதிகாரம் செய்யும் சிலர், குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள், கணவன் எத்தனை இம்சை செய்தாலும் பொறுத்துக் கொண்டு புன்னகை சிதறாமல் மனிதாபிமானம் மறையாமல் சம்சாரம்  செய்யும் பெண்கள்… இவ்வாறு பலவகை உலகம் இந்த நாவலில் தென்படுகிறது. 

கணவனிடம் இருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்கு சுதந்திரத்தையும், கணவனைக் காதலிப்பதற்கு அடிமைத்தனத்தையும் எவ்வாறு உபயோகித்துக் கொள்வதென்று புரியவில்லை என்று ராஜலட்சுமியின் வாயிலாக கூறச் செய்த சொற்கள் ஆலோசிக்க வேண்டியவை.

சுதந்திரம், அடிமைத்தனம் என்ற இரண்டு வேறுபட்ட சக்திகளின் இடையில் ஏற்படும் மோதலில் பெண்கள் எங்கு செல்வது என்று தீர்மானிக்க முடியாத ஒரு தடுமாற்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதையும் குறிப்பிட்டுக் காட்டும் இந்த நாவலில் லதா, பெண்ணின் முன்னேற்றத்திற்கோ பின்வாங்குவதற்கோ அனுபவமே வழி என்ற புரிதலை காட்டுவதைப் பார்க்கிறோம்.

உயர்சாதியைச் சேர்ந்த சாரதாதேவியின் தாத்தா ஒரு ஆபத்தான சூழ்நிலையில் ஹிந்து மத வெறுப்பை வளர்த்துக் கொண்டு கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து மாமிசம் கூட தின்றபோது அந்த தாழ்வு நிலையைப் பார்த்து வருத்தப்படுகிறாள்  பாட்டி. குல மத பிரஷ்ட நிலை அடுத்த தலைமுறைக்குத் தொடராமல் இருப்பதற்காக, “இந்த வீட்டில் பிறந்தவர்களுக்கு திருமணத்தை தடை செய்து,    வம்சமற்றுப் போகட்டும்” சபித்து விட்டு இறந்து போகிறாள் என்று ஒரு கதையைப் படைத்து சாரதாவின் வாழ்க்கை மாற்றங்களுக்கு பொருந்தும்படியாகச் செய்ததைத் தவிர அதிகப்படியாக இந்த நாவலில் அதிகம் சாதிக்கக்கூடிய பிரயோஜனம் எதுவும் தென்படவில்லை.

அது மட்டுமல்ல. “உலகத்தை எதிர்த்து வாழ்க்கை நடத்துவது கத்தி மேல் நடப்பது போன்றது என்று உணர்ந்தேன். இந்த எதிர்ப்பு ஆவேசத்தைக் கிளறுகிறது. அந்த ஆவேசத்திற்கு உள்ளானவர்களைப் பற்றி அவதூறுகளையும் பிரச்சாரம் செய்கிறது. ஆனாலும் நீண்ட நாட்கள் அச்சம் கொள்ளாமலே வாழ்க்கையை தள்ளி கொண்டு வந்தேன். ஆனால் இறுதியில் மூச்சு விட முடியவில்லை” என்று கூறி இக உலகைத் துறந்து கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து நன்னாக மாறுவதற்கு சாரதா தேவி எடுத்துக்கொண்ட முடிவோடு லதா நாவலை முடிப்பதில் சாரதாவை மததோடு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்து அவளுக்கு சமுதாய அந்தஸ்தை விளைவிப்பதைத் தவிர வேறு பிரயோஜனம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அது அற்பமானதும் அனாவசியமானதும் கூட என்றே தோன்றுகிறது.

மஹா நகரம்லோ ஸ்திரீ என்ற நாவல்

மஹா நகரம்லோ ஸ்திரீ 1969ல் எமெஸ்கோ பிரசுரமாக வந்தது. ஒரு சொல் என்ற பெயரில் எழுதிய முன்னுரையில் புச்சிபாபு இந்த என் நாவலைப் படிக்கவில்லையே என்று வருத்தமாக உள்ளது என்கிறார் லதா.

கலைஞர்களின் வாழ்க்கையை விட கதைப்பொருள் வேறு இல்லை என்று அவர் கூறுவது வழக்கம் என்றும் அவருடைய அறிவுரையின்படியே தான் சினிமா துறையை மையமாகக் கொண்டு இந்த நாவலை எழுதினேன் என்றும் கூறுகிறார் லதா.

அவர் குறிப்பிட்ட புச்சிபாபு ‘சிவரகுமிகிலேதி’ என்ற நாவலை எழுதியவர்.   ரேடியோவில் உத்தியோகிகளாக அவர்கள் இருவருக்கும் இடையில் நட்புக்கும் உரையாடலுக்கும் வாய்ப்புகள் அதிகம். அந்த விதமாக அல்லது அவருடைய அறிவுரையை ஏற்று இந்த நாவலை எழுதினார் போலுள்ளது. 1967 ல் புச்சிபாபு  மரணம் அடைந்தார். அதனால் முழுமையடைந்த இந்த நாவலை அவர் பார்க்க முடியாமல் போனதற்காக லதா வருந்துகிறார்.

தாயின் கற்பு குறித்த அபவாதம் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து வேதனைப்படுத்தும் உலகத்தில் எதிர்த்து நிற்பது என்ற அம்சத்தை லதா தன் நாவல் கருப்பொருளில் விதவிதமாக கையாள்வதைப் பற்றி புச்சிபாபு என்ன நினைத்திருப்பார் என்பது ஆர்வமான கேள்வி. ஆனால் அவர் டைரியில் எங்கும் லதாவைப் பற்றியோ அவருடைய படைப்புகளை பற்றியோ விமர்சனம் எதுவும்  தென்படவில்லை. லதா சிவரகுமிகிலேதி நாவலை வம்சி பதிப்பாக எடுத்து வருவோம் என்று கேட்டு புச்சிபாபுவுக்கு எழுதிய கடிதம் ஒன்று மட்டுமே கிடைக்கிறது. பதிப்புப் பணி நடந்தாற்போல் தெரியவில்லை. அது வேறு விஷயம்.

இந்த நாவலில் கூறப்படும் மகாநகரம் ஹைதராபாத். விஜயவாடாவுக்கு அடுத்து    லதாவுக்குப் பிரியமான நகரம் ஹைதராபாத். பல நாவல்களில் கதை நடக்கும் இடமாக அது வந்துள்ளது. ஏராளமாக ஹைதராபாத் நகர வரலாற்றையும் கலாச்சாரத்தையும் விவரிப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம். முக்கியமாக ஹைதராபாத்தில் 1920 –30 காலத்தில் வந்த ப்ளேகு வியாதி அவருடைய அநேக நாவல்களின் கதை பொருளில் ஒரு பகுதியாக வந்துள்ளது. 

வேறு வேறு பின்னணிகளில் இருந்து வந்த மூன்று பெண்களின் வாழ்க்கையை கதைப்பொருளாகக் கொண்டு ‘மகாநகரத்தில் பெண்’ என்ற இந்த நாவலை எழுதியுள்ளார். ஹைதராபாத் நகரத்திற்கு முதலில் இருந்த பெயர் பாக்கிய நகரம். தன் காதலியான பாகமதி என்பளின் பெயரில் முஹம்மது குலீ குதுப்ஷா நிர்மாணித்த புதிய தலைநகரம் இது. இந்த மஹாநகரத்தோடு பெண்களுக்கு   முதலில் இருந்தே அற்புதமான விசித்திர சம்பந்தம் ஒன்று இருக்கிறது என்கிறார் லதா. நவாபுகளின் காதல் வரலாற்றைக் கூறியபடி ஆதிகாலத்தில் இருந்தே பெண்ணுக்கும் அந்த பெரு நகரத்திற்கும், நகரத்தில் உள்ள அநேக மாளிகைளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிக் குறிப்பிடுகிறார். காதலுக்கும், காதலிக்கும், மதுவுக்கும் நவாபுகளின் அரசாட்சியில் இருந்த முக்கியத்துவம் ஹைதராபாத் நகர கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகிவிட்டது என்று கூறுகிறார். ஹைதராபாதைத் தலைநகராகக் கொண்டு  ஆந்திர மாநிலம் ஏற்பட்ட பின் ஹைதராபாத் அனைவருக்கும் ஒரு வசீகரமாக ஆனது என்று கூடக் கூறுகிறார் லதா. அந்த ஆகர்ஷணத்துக்குக் காரணம் பர்மிட் சம்பாதிப்பதில் இருந்து உத்தியோகங்கள், பிரமோஷன்கள் வரை தலைமைச் செயலகத்தை மையமாகக் கொண்டு செய்து கொள்ள வேண்டிய பணிகள், பெறவேண்டிய நன்மைகள் பல என்று லதா அடையாளம் கண்டு கூறுகிறார்.

1956 க்குப் பிறகு ஹைதராபாத் ஏற்படுத்திக் கொண்ட வளர்ச்சியில் நடந்த நீதி, அநீதி போன்றவை கூட லதாவின் பார்வையில் இருந்து தவறவில்லை.  முன்னேற்றம் அடைகின்ற நகரங்கள் உயிர் வாழ்வதற்காக பலரை ஈர்க்கும்.  அவர்களில் பெண்களும் இருப்பார்கள். ஏதோ ஒரு விதமாக மேலும் மேலும்  வளர வேண்டும் என்று நினைக்கும் வர்க்கங்களில் ஒரு பகுதியாக பெண்கள் தம் உடலை மதுவாக வைத்துச் செய்யும் முயற்சிகள், பெறும் ஏமாற்றங்கள் போன்றவை ‘மஹாநகரம்லோஸ்திரீ’ நாவலின் கருப்பொருளாக அமைந்தன. 

வாரங்கலில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்ந்து சிறுவயதில்   பக்கத்து வீட்டு பெரியவரின் வன்முறைக்குப் பணிந்துபோய் அதன் பிறகு ஆண் பெண் உறவில் உள்ள சுகத்திற்குப் பழக்கமாகி கட்டுப்பாடற்ற தொடர்புகளை   ஏற்படுத்திக் கொண்டு பெற்றோர் இறந்த பின்பு அண்ணாவின் அடக்குமுறையைத்  தாங்க முடியாமல் ஹைதராபாத் வந்து சேர்ந்து சின்ன உத்தியோகத்தில் தொடங்கி அறிமுகங்களை வளர்த்து சினிமா நடிகையாகி, பின்னர் அதில் சலிப்பு ஏற்பட்டு தேவையானவர்களின் ஆதரவைப் பெற்று பாடல் பாடும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்ட சாவித்திரி இந்த நாவலில் வரும் ஒரு பெண். சிறு வயதிலேயே திருமணம் ஆகி கிராமத்து விவசாயியான கணவனுடைய வேலை பிடிக்காமல் ஹைதராபாத் வந்து தன் ஹை ஸ்கூல் படிப்பைக் கொண்டு ஒரு வேலையை சம்பாதித்து ரேடியோ நாடகங்களில் நடித்தபடி எழுத்தாளராகி புதுப்புது  அறிமுகங்களோடு சினிமாவுக்கு பாடல், கதைகள் எழுதும் சிந்தாமணி மற்றொரு பெண்.

விசாகப்பட்டினம் சமுத்திரத்தில் மீன்களை வாங்கி விற்று கடலில் இருந்து கடத்தல் பொருட்களை சேர்க்க வேண்டிய இடங்களில் சேர்த்து போலீசில் பிடிபட்டு அவன் உதவியால் ஒரு செட்டியார் வீட்டில் வேலைக்குச் சேர்ந்து    அவரை ஈர்த்து அவரால் ‘எங்கி’ என்ற செல்லப் பெயரால் அழைக்கப்பட்டு அவருக்கு நெருக்கமாகி சினிமா எடுக்க வேண்டும் என்று அவரை உற்சாகப்படுத்தி விசாகப்பட்டினத்தில் இருந்து மதராசுக்கு முகாம் மாற்றி வெங்கடேஸ்வரியாக பெயரையும் மாற்றிக்கொண்டு சினிமாவில் கதாநாயகியாக வெற்றி பெற்று ‘விபுலா’ என்ற பெயரோடு ஸ்திரப்பட்ட ‘அப்புலு’ என்பவள் மற்றொரு பெண். 

பணம் படைத்த வீராசாமியின் மனைவி ஏழை வீட்டு வெங்கம்மா. கணவன் சொத்தை எல்லாம் தீய பழக்கங்களுக்கு செலவு செய்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சாலையில் வெங்கம்மா நினைவிழந்து விழுகிறாள். யாரோ ஒருவன் காப்பாற்றி மதராசு அழைத்துச் செல்கிறான். அவனுடைய அறிவுரைப்படி எதிர்காலத்தை நோக்கி சினிமாவில் நுழைந்து விமலாவாக நிலைபெற்ற ஒரு பெண்ணும் ஹைதராபாத் நகரத்தில் இருக்கிறாள். விபுலா அவளைத் தன் குரு என்று குறிப்பிடுகிறாள். சாவித்திரியும் சிந்தாமணியும் நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்தவர்கள். 

ஆனால் விபுலாவாகப் பெயரை மாற்றிக் கொண்ட அப்புலம்மா மிகவும் தாழ்ந்த, சிரமப்படும் வர்க்கத்திலிருந்து வந்தவள். கருவாட்டைத்  தீயில் சுட்டுத் தின்று கஞ்சி குடித்து வேலைக்குச் செல்லும் ஆண்கள், சோறு இல்லாவிட்டாலும் சுருட்டு பிடிக்கும் பெண்கள், மீன் எலும்புகளை பிடுங்கித் தின்னும் குழந்தைகள், இருபத்து நான்கு மணி நேரமும் சண்டை போட்டுக்கொள்ளும் ஆண்களும் பெண்களும், எந்நேரமும் எல்லோரையும் திட்டிக் கொண்டிருக்கும் கிழவர்கள், நோய், பசி, அழுக்கு, ஏழ்மை இவற்றின் இடையில் வாழ்ந்த வாழ்க்கை அது. மூன்றாவது மனைவியாக ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு உப்புக் கருவாடு விற்று, கடத்தல் வியாபாரத்தில் வேலை செய்து, உடம்பை விற்று வாழ்ந்தால் ஒழிய கஞ்சித் தண்ணீர் கிடைக்காது என்கிற வாழ்க்கை அவளுடையது. அங்கிருந்து செட்டியாரின் உதவியால் சினிமா நடிகையாக வளரக் கூடிய அளவுக்கு புத்திசாலித்தனமும் வாழ்வின் மாயங்களும் அந்த அனுபவத்தால் பெற்றவையே.  அனைவரையும் விட மிகக் கீழான நிலையில் இருந்து வந்த விபுலா அனைவரையும் விட அதிகமாக வளர்ச்சி அடைத்தது எதனால் என்றால்  அனைவரையும் விட அதிகமாக அவள் வாழ்க்கைக்கு அருகில் இருந்ததால் தான் என்று ஆசிரியை கூறுவதை கவனிக்க வேண்டும்.

சாவித்திரி, சிந்தாமணி, விபுலா மூவரும் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்    இடத்தில் மற்றொருவருக்கு இடம் ஏற்படுத்திக் கொடுத்து நட்புக்கும் வலிமைக்கும்   எடுத்துகாட்டாக நின்று மூன்று பேரும் சேர்ந்து ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு ஆதரிசமாக வாழ்ந்தார்கள். வாய்ப்புகளுக்காக போட்டி, பிரயோஜனங்களுக்காக ஒற்றுமை, தொடர்புகளை முடிவு செய்யும் சக்தி எல்லாம் கொண்டவள் விபுலா. ஆனால் வாழ்வும் பாதுகாப்பும் ஐயத்திற்கிடமாகும் போது சுயநலத்தோடு அவரவர் பிரயோஜனத்திற்காக அவரவர் வேலை செய்தார்கள். வாழ்க்கை என்ற மாளிகையில் ஏறுவதற்கு ஏணிப்படியாக பலரை உபயோகித்தார்கள். ஏறி வந்த படிகளை மறந்து போனார்கள். 

பம்பாய் சினிமா மாயையில் சிக்கி ஏமாந்து திவாலா ஆன விபுலா உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தனிமையை அனுபவித்த போது, சிந்தாமணி ஹைதராபாதிலிருந்தும் சாவித்திரி மதராஸில் இருந்தும் கடன் வாங்கி விமான டிக்கெட் எடுத்து பறந்து வந்தார்கள். விபுலாவின் கையைத் தம் கையில் வைத்துக்கொண்டு ஆறுதல் கூறினார்கள். உனக்கு நாங்கள் இருவரும் உள்ளோம். பயப்படாதே என்று நம்பிக்கை அளித்தார்கள். 

“நம்மை நாம் பஜாரில் விற்றுக் கொண்டாவது சரி மூச்சுவிட்டு வாழ்வதில் சுகம் இருக்கிறது” என்று சிந்தாமணி கூறுகிறாள். “தைரியத்தை இழந்தால் அழிந்து போவோம். வாழ்வதற்குப் பொய் சொல்வோம். அநியாயம் செய்வோம். மீதி இருக்கும் கொஞ்சம் சுதந்திரத்தையும் மகாநகரத்தில் அடகு வைத்தாவது உயிரோடு இருப்போம்” என்று சாவித்திரி விவரமாகக் கூறுகிறாள். 

பொறாமையும் சுயநலமுமாக நடந்து கொண்ட அந்த மகா நகரத்துப் பெண்கள்   மனிதாபிமானத்திற்கு இன்னும் அந்நியர்கள் அல்ல என்று கூறுவதற்கான அடையாளங்கள் இந்த குரல்கள்.

“மகிழ்ச்சியாக இருக்கும்போது ஒருவரை ஒருவர் வெறுத்தாலும் கஷ்டத்தில்  அன்பு செலுத்துவோம்” என்று உன்னதமான வாழ்க்கை மதிப்புகளை கொடியாகப்   பறக்க விடுவது என்பது மகா நகரத்தில் பெண்களுக்கு சாத்தியமானது என்றால் அது சுதந்திர வாழ்க்கையின் மேல் இருந்த ஆசையால்தான். 

Series Navigation<< ராகஜலதி என்ற நாவல்இது துளசிவனம் என்ற நாவல் >>

One Reply to “மிகிலிந்தேமிடி? (என்ன மிச்சம்?) என்ற நாவல் ”

  1. இவ்வளவு நாவல்களையும் கதைகளையும் படித்து விமரிசிப்பதற்கு ஏகப்பட்ட பொறுமையும் நேரமும் வேண்டுமே எப்படித்தான் எழுதிய முடிகிறதோ! மொழிபெயர்ப்பாளர் தேர்ந்தெடுத்து வழங்கி வரும் படைப்புகள் மிகவும் ரசிக்கத் தக்கதாய் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.