தெய்வநல்லூர் கதைகள் – 6

This entry is part 6 of 10 in the series தெய்வநல்லூர் கதைகள்

எங்களது தெய்வநல்லூர் வரலாற்றிலே முதல்முறையாக நாங்களே சென்று ஒருவரை எங்கள் அணியில் சேரும்படி கேட்டது பிரேம்குமாரிடம்தான்.   ஆனால் அவர் எங்களுடன் சேர்ந்தது மிகவும்  நல்வாய்ப்பாக எங்களுக்கு அமைந்தது. காலை இடைவேளையின்போது பிரேம் எங்கள் குழுவில் இணைய சில நிபந்தனைகளை விதித்தார்.  அந்த நிபந்தனைகள் குறித்து நாங்கள் யோசித்து என்ன முடிவு சொல்கிறோமோ அதைப் பொறுத்தே அவர் இணைவதும், நடுநிலை வகிப்பதும் எனச் சொல்லிவிட்டார். மதிய உணவு இடைவேளையில் நாங்கள் பேசி முடிவெடுத்து மதிய வகுப்புகள் ஆரம்பிக்குமுன் அவரிடம் சொல்லிவிட வேண்டுமென்றும் சிறப்பு நிபந்தனையையும் விதித்தார். அன்னாரது நிபந்தனைகள் பின்வருமாறு:

  1. குழுவின் அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொள்ளுமாறு அவரை நிர்பந்தித்தல் கூடாது; அவரது விருப்பத்தின் பேரில் அவர் கலந்து கொள்வார் (நீங்களா உங்க இஷ்டத்துக்கு அங்க வா, இங்க வா ன்னு கூப்டுட்டு வரலைன்னா என்னை ஒண்ணும் சொல்லக்கூடாது; எனக்கு இஷ்டமானாத்தான் வருவேன். சரியா?)
  2. அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் சிறப்பு நிலைத் தகுதியோடு அணுகப்பட வேண்டும்; அவர் இல்லாத போது கூட்டங்கள் கூட்டப்பட்டாலும் அவர் அனுமதி இன்றி கூட்டத்தின் முடிவுகள் செயல்படுத்தப்படக் கூடாது  (நான் இல்லையேன்னுட்டு நீங்களா எதுவும் செய்யக்கூடாது; செய்யறதுக்கு முன்ன என்கிட்ட கேட்டுட்டுத்தான் செய்யணும்)
  3. குழுவினரின் நடை,உடை பாவனைகளில் அவரது சொல்லே கடைப்பிடிக்கப்பட வேண்டும் ( நாம் சேந்து வெளிய போம்போது இப்படிலாம் சட்டை  போட்டுக்காம வரக்கூடாது, நான் சொல்றாமாதிரிதான் டிரெஸ் பண்ணிக்கணும்)
  4. முடிவுகளை, ஆலோசனைகளை குழுவுக்கு சொல்லும் பணி மட்டுமே அவருடையது; அவற்றைச் செய்யும்படி பணிப்பொறுப்பு எதுவும் அவருக்கு வழங்கப்படக் கூடாது (ஏதாவது விஷயத்துல நான் ஒண்ணு சொன்னா நீங்கல்லாம்தான் செய்யணும், என்னைய செய்,செய்ன்னு நச்சு பிடிக்கக்கூடாது) 
  5. குழுவின் ஒட்டுமொத்த நன்மையைக் கருதி அவர் எடுக்கும் சிறப்பு முடிவுகளை எவ்வித எதிர்ப்புமின்றி குழுவின் உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் (நான் ஏதாவது சொன்னா நம்ம நல்லதுக்காதான் இருக்கும்ங்கறதால நான் சொன்னா எல்லாரும் கேக்கணும்) 
  6. மிக முக்கியமாக புதிய உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் தற்காலிக நீக்கம், நிரந்தர நீக்கம் ஆகியவை அவரது அனுமதியின் பேரில்தான் நடைபெற வேண்டும் (எனக்குத் தெரியாம யாரையும் நம்ம அணிக்கு  சேக்கறதோ, வெலக்கறதோ, பேசாம இருக்கறதோ கூடாது)

மு மாரியப்பன், முட்ட ராமர் ஆகியோரால் கடுமையாக இந்த நிபந்தனைகள் நிராகரிக்கப்பட்டன.  ஆனால் ஈத்தக்குச்சி, டொம்ப்ளி ஆகியோர் உடனே சம்மதித்து பிரேமை உடனே சேர்க்க வேண்டுமென்றனர்.   நியூஸ் சந்திரன், டும்ரீக்கோல் இருவரும் நிபந்தனைகளை சற்று மாற்றியமைக்கலாம் என கருத்துரைத்தனர். நானும், சிவாஜியும் சிந்தித்தும் உடனே எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. காலை இடைவேளை முடிந்து வகுப்புக்குள் போனதும் தெண்டில்  கோஷ்டியாரின் கடும் கண்காணிப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதால் மதிய இடைவேளை வரை யோசிக்க நேரமிருக்கும் என முடிவு செய்தோம். எவ்வளவு யோசித்தும் முடிவுக்கு வர முடியவில்லை. மதிய இடைவேளை மணி அடித்ததும் யாருக்கும் வேறு எதுவும் தோன்றவில்லை, ஆனால் சேமியா மணி திடீரென ஒரு ஆலோசனை சொன்னான். 

(சேமியா மணி – பெயர்க்காரணம் – அன்னாருக்கு  ஐந்து வயதாயிருக்கையில் அவர் சித்தி கல்யாணத்திற்கு சென்று சிறப்பித்தபோது காணாமலானார். ராமர் கோவில் கருப்பனுக்கு இரு கிடாக்கள் செய்த உயிர்தியாகத்தில் பிறந்த பிள்ளை காணாமலானது குறித்து அவர் தாய் நியாயம் வேண்டினார். வெள்ளானைக்கோட்டை ஊர்க்காரர்கள் எண்திசையும் கடுகி  முடுகி  தேடுகையில்  திருமண விருந்தின் பின்விளைவாக ஊருணி சென்றிருந்த மணியின் தாத்தா திரும்பி வந்து நிகழ்வைக் கேள்வியுற்று சற்றே சிந்தித்த அவர் வெடித்த பலாவின் சுளையென மீசைக்குள் தெரிந்த வாய் விட்டு சிரித்து இருவர் தன்னைப் பின்தொடர ஆணையிட்டு “பொறவாசலில் சோறாக்குமிடத்திற்கு” வந்து இரண்டடி விட்டமும், மூன்றடி  உயரமும் கொண்ட சேமியா பாயாச வட்டைக்குள் பார்க்கும்படி சொன்னார். மூடியை மூடிக்கொண்டு வட்டைக்குள் இறங்கி அமர்ந்து ஒட்டியிருந்த சேமியா பாயாச மிச்சங்களை வேட்டையாடிக் கொண்டிருந்த “பாலுடைய  சேமியா பூசி எவர் உள்ளமும் கவராக் கள்வனென “ விளங்கிய மணி இவ்வாறாய் திரும்பக் கிடைப்பெற்றார். அன்றிலிருந்து தாத்தாவால் சேமியா என்றும் ஆச்சியால் சட்டி சொரண்டி எனவும் திருநாமங்கள் இருநாமங்களாகக் கிடைக்கப்பெற்றார்)  

சேமியா சொன்ன ஆலோசனை எங்கள் குழுவின் தெய்வமான செண்பக விநாயகர் சம்பந்தப்பட்டது. பிள்ளையார் முன் சீட்டெழுதிப் போடுவதென்றும் முடிவு எதுவாயினும் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் சேமியா சொன்னது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குறிப்பாக தெண்டில் அணியிலிருந்து எங்கள் அணிக்கு மாறியிருந்த யக்கா பாட்ஷாவால்  பலமாக ஆமோதிக்கப்பட்டது. யக்கா பாட்ஷா எங்கள் அணிக்கு மாறிய கதை அடுத்து வரும். நேரம் மிகக் குறைவாக இருந்தபடியால் நான், சிவாஜி, சேமியா, மு மாரியப்பன் ஆகிய நால்வர் மட்டுமே கோவிலுக்குச் சென்று வருவது என முடிவு செய்யப்பட்டு  அவசர அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு புறப்பட்டோம். சிவாஜி மட்டும் சற்று தாமதமாக வந்தார். மு மாரியப்பன் கோபமடைந்தபோது “ஏல, அங்கன போயி குலுக்கி போட சீட்டு வேண்டாமால? அத எழுதி எடுத்துட்டு வாறதுக்குள்ள பொடு பொடுன்னு நிக்கயே” . சட்டைப் பையில் வைத்திருந்த இரு தாள்சுருட்டுகளில்  ஒரு தாளை எடுத்து பிரித்துக் காட்டினார் சிவாஜி. அதில் “பிரேம் வேண்டும்” என எழுதியிருந்தது. “இன்னொன்னுல பிரேம் வேண்டாம்னு எழுதிருக்கேன்” என எடுப்பது போல முயற்சித்து எடுக்காமல் கையில் உள்ள சீட்டை சுருட்டி உள்ளே வைத்தார். பாட்ஷா அவசரப்படுத்த நாங்கள் பாய்ந்து ஓடி பிள்ளையாரை அடைந்ததும் சிவாஜி அவசர அவசரமாக பாலும், தெளிதேனும் சொல்லிவிட்டு கையிலுள்ள சீட்டுகளை பிள்ளையார் முன் வைத்தார். இப்போது பிள்ளையார் எப்படி தேர்வு செய்வார் என குழப்பம் ஏற்பட வழக்கம்போல சிவாஜியே தீர்வையும் சொன்னார். “ரெண்டு சீட்டையும் பிள்ளையார் தும்பிக்கையில வைப்போம். எது மொதல்ல கீழ விழுதோ அத பிள்ளையார் சொன்னதா வைச்சுக்கிடுவோம். சம்மதமா?” வழக்கம்போல அனைவரும் சம்மதித்தோம். 

பிள்ளையாரின் துதிக்கை அவர் கை மோதகத்தோடு சேரும் இடத்தில் இரு துண்டுச் சீட்டு சுருள்களும் வைக்கப்பட்டன. அனைவரும் விலகி வந்து (ஏல, நம்ம மூச்சு பட்டு கீழ விளுந்துச்சுன்னா சேராது- மு மாரியப்பன்) 11 உக்கி போட ஆரம்பித்தோம். ஆறாவது உக்கியில் ஒரு சீட்டை பிள்ளையார் கீழே எடுத்துப் போட்டார். சிவாஜி நிதானமாக மு மாரியப்பனையே எடுத்து பிரிக்கச் சொன்னார். மு மாரியப்பன் பிரித்துப் பார்த்து எதுவும் பேசாமல் நீட்டினார்-“பிரேம் வேண்டும்” என இருந்தது. சற்று சுணக்கத்தோடு மு மா முடிவினை ஏற்றுக் கொண்டார். நேரம் கருதி பள்ளிக்குத் திரும்ப கிளம்பும் அவசரத்திலும் பிள்ளையார் எங்களிடம் தராமல்  நிராகரித்து தன் தும்பிக்கையில் வைத்திருந்த சுருளை மறக்காமல் எடுத்து பையில் போட்டுக் கொண்டார் சிவாஜி. பள்ளி வாசலில் இருந்த சாக்கடையில் அந்த பிரிக்காத சுருளை எறிந்தார். “அது எதுக்குல? அதத்தான் புள்ளையாரே வேண்டாம்னுட்டாருல்லா. அதான் அத தூர எறிஞ்சிட்டேன் வேணும்னு சொன்னத பத்திரமா வைச்சிருக்கேம்லா “– அவர் செய்கையை உற்றுப் பார்த்த மு மாரியப்பனிடம் சிவாஜி கூறியது.  இடைவேளை முடிய 5 நிமிடங்களே இருந்த நிலையில் வெற்றிச் செய்தியுடன் நாங்கள் பள்ளி புகுந்தோம். குழுவினர் ஒப்புக் கொண்டதும் சிவாஜியும், நானும் பிரேமிடம் சென்று சொன்னோம். பிரேம் அவரது நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டதால் எங்கள் குழுவில் சேர சம்மதம் தெரிவித்தபோது பள்ளி வகுப்புகள் தொடங்குவதற்கான மணி அடித்தது.” பாத்தியளவஞ்சரணும்தும் மணிடிக்கி. நல்லகுசுனம்தாம்லா – டொம்ப்ளி செல்வம் (பாத்தியளா, அவன் சேரணும்னதும் மணி அடிக்கி. நல்ல சகுனம்தாம்லா”). இவ்வாறாக பிரேம்குமார் எங்கள் ஆசியஜோதி அணியின் சிறப்பு உறுப்பினராக ஆனார். 

அன்று மாலையே பிரேம் எங்கள் அழைப்பை ஏற்று குழுவின் சிறப்புக் கூட்டத்திற்கு வருகை தந்தார். பள்ளிக்கு அருகிலுள்ள சொக்கப்பனை மடத்தின் வாயிலில் சிறப்பு அவசரக் கூட்டம்.  தெண்டிலார் மற்றும் அவர் குழுவினரின் துரோக வரலாறும், குழுவின் முன்வரலாறும் அவருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. எவ்வித முகபாவனை மாற்றங்களும் காட்டாது பிரேம் எங்கள் வரலாற்றை கேட்டுக்கொண்டார். சொல்லி முடித்ததும் கேட்ட களைப்பில் அவர் கொண்டுவந்த பாட்டிலில் இருந்த நீரை அருந்தி வாய் துடைத்துக் கொண்டார். நியூஸ் சந்திரன் தனக்கும் “தண்ணி தவிக்கி” எனக் கேட்டபோது முதன்முறையாக சந்திரனை  வாயைத் திறக்கச் சொல்லி வாய்க்கு மிகச்சரியாக நாலரை அங்குல உயரத்தில்  பாட்டிலை சரித்து துல்லியமாக முக்கால் வாய் கொள்ளுமட்டும் நீரூற்றி விடையாற்றினார் பிரேம். சிவாஜி கண்களாலேயே என்னிடம் பெருமிதத்தைப் பறை சாற்றினார். பிரேம் தன் திட்டங்களைச் சொல்லுமுன் எங்கள் குழு தெய்வமான செண்பக விநாயகரை வணங்க வேண்டுமெனக் கேட்க அனைவரும் புடைசூழ புறப்பட்டோம்.  

போகும் வழியில் அவர் வீட்டிற்கு சென்று சொல்லிவிட்டு போகலாம் என்றார். அக்ரஹாரம் எப்போதுமே நாங்கள் கீழபஜாரிலிருந்து எங்கள் தெருவுக்கு வரும் பாதை. கீழபஜாரின் மேற்குப் புற பாதி வீதி மேலபஜார் என முன்பே சொல்லியிருக்கிறேன். சைவர்கள் அணியும் மூன்று திருநீற்றுப் பட்டையை நினைவில் கொள்ளுங்கள். ராஜபாளையம்-தென்காசி சாலை, கீழ/மேல பஜார், கீழத்தெரு ஆகிய மூன்றும் இந்த திருநீற்றுப் பட்டைகளைப் போல இணைகளாக நீண்டிருக்கும். குறுக்குவாக்கில் இந்த இணைவீதிகளை இணைக்கும் தெருக்கள் எண்ணிக்கை குறைந்தது 20 ஆவது இருக்கும். நடுவே பொட்டு வைத்தது போல உமையொருபாகன் கோவிலும், அதைச் சுற்றி ரதவீதிகளும். உமையொருபாகன் கோவில் எதிரே செல்லும் சாலை இலங்குளம்  கரையை ஒட்டி அப்படியே நெல்கட்டும்செவல் வழியே சங்கரன்கோவில் சென்று சேரும்.  கீழவீதியின் கடைசி ஒட்டாக நெல்கட்டும்செவல் சாலையை ஒட்டி அமைந்ததுதான் எங்கள்  நேரு நடுநிலைப் பள்ளி. ஆகவே அக்ரஹாரம் கீழத்தெருவை தொடும் கடைசியிலிருந்துதான் நாங்கள் பள்ளியிலிருந்து  அக்ரஹாரத்துக்குள் நுழைய முடியும்.  நாங்கள் எப்போதுமே அக்ரஹாரத்தைக் கவனித்ததில்லை. அங்கிருக்கும் பையன்களும் எங்களுடன் சேருவதில்லை. அவர்கள் ராஜபாளையத்துக்கோ, திருநெல்வேலிக்கோ படிக்கப் போவது வழக்கம்.       

திண்ணைகளில் உட்கார்ந்திருந்த சில தாத்தாக்களும், பாட்டிகளும் எங்கள் குழுவை முகம் முழுக்க கேள்விக்குறியாக மாற்றியபடியே பார்த்துக்கொண்டிருந்தனர். வீதியின் துவக்கத்தில் கீழபஜார் துவங்கும் இடத்தில் அக்ரஹாரம் ஆரம்பிக்கும் வீதிக்கு நடுவே ஒரு பிள்ளையார் கோவில். இவர் எங்கள் செண்பக விநாயகர் போல மரத்தடி மேடையில் காக்கை, குருவி, ஆடு,மாடுகளுடன் ஒட்டி உறவாடாமல் ஒரு ஓட்டு முகப்பு, சிறிய மண்டபம், அதைத் தாண்டி சிறிய ரெண்டாங்கெட்டு. அதன் பின் கருவறையில் வீற்றிருக்கிறார். ஒரு விமானமும் உண்டு. அந்த கோவிலுக்கு பக்கவாட்டில் உள்ள அடுத்த வீடுதான் பிரேம் வீடு.           

அவர் வீட்டுத் திண்ணை மூங்கில் அழி போடப்பட்டு அதில் பெயிண்ட்டும் அடிக்கப்பட்டிருந்தது. நாங்கள் எப்போதும் போல வாசற்படியிலேயே நின்று கொண்டோம். யார் வீட்டிற்குப் போனாலும் வாசல்படியில் நின்று அவன் பெயரை  “சங்கூதி” கந்தன் பண்டாரத்துக்கு போட்டியாக கூவுதல், அகவுதல், ஊளையிடுதல், கதறுதல் ஆகியவை  கலந்த பல “தல்”களில்  அழைப்போம். “கொள்ளிமுடிவானுவ, வந்துட்டானுவளா- இனி இவனும் குண்டி கருக்க தெருப்பொறுக்கிட்டு திரியப் போறான். மதியம் சோத்துக்கு வரலைன்னா கால ஒடச்சு அடுப்புல வச்சிறுவேன்” என்ற ஆசியை அவ்வீட்டாரின் மூத்த குடிமக்களிடம் பெற்றுக்கொண்டு அவனுடன் சேர்ந்து ஓடுவதுதான்  வழக்கம். ஆனால் நாங்கள் முதல் சந்திப்பிலேயே பிரேம் வீட்டில் மூன்று அதிர்ச்சிகளை சந்தித்தோம். திகைப்பூட்டும் இனிய அதிர்ச்சிகள். பின்னாட்களில் அதிர்ச்சியூட்டும் அதிர்ச்சிகளையும் சந்தித்தோம். முதல் தவணை அதிர்ச்சிகள் பட்டியல் (ஒவ்வொரு அதிர்ச்சிக்கும் 25 சதமானம் அதிர்ச்சி விகிதம் அதிகரிப்பு என்பதையும் கருத்தில் கொள்க)- 

  1.  பிரேம் எங்களை உள்ளே அழைத்து திண்ணையில் உட்கார்ந்திருக்கும்படி சொன்னது ( என்னல இவன், நம்மளல்லாம் உள்ள வா, உக்காருங்கான், கோட்டியால இவனுக்கு, பெரியவங்களத்தான  வாங்க, இரிங்கன்னு சொல்லணும் – யக்கா பாட்ஷா) 
  2. பிரேம் உள்ளே போன இரு நிமிடங்களில் அவன் அம்மா அவனுடன் திண்ணைக்கு வந்து புன்னகை பூத்த முகத்துடன் எங்களை வாங்கோடா பசங்களா என்று சொல்லி எங்கள் பெயரையெல்லாம் கேட்டது ( பதட்டத்தில் மு மாரியப்பன் எழுந்து கைகளைக் கட்டிக்கொண்டு  மு மாரியப்பன் டீச்சர் என தன்னறிமுகம் சொன்னதற்கு பிரேம் அம்மா புன்னகை இன்னும் பெரிதானது- அவங்மா பள்ட்ட டீர்சோல (அவங்க அம்மா பள்ளிக்கூட டீச்சரால ? – டொம்ப்ளி செல்வம் ஐயப்பாடு ))   
  3. அவர் அம்மா எங்களிடம் பேசிய பொழுதில் பிரேம் உள்ளே போய் வேறு டவுசர்-சட்டை மாற்றிக் கொண்டு வந்தது. நாங்கள் காலையில் அணிவது மறுநாள் காலை குளிக்கும்வரை மாற்றப்படாது என்பதாலும் இருக்கும் இன்னொரு ஆடையும் துவைக்கப்பட்டிருக்கும் என்பதாலும்  ஒரு நாளில் இருமுறை ஆடைகளை மாற்றும் ஆடம்பரம் எங்களுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது (ஏல, இவன் என்னல காக்கிசட்ட கமலஹாசன் மாதிரி நாளுக்கு நாலு மட்டம் டிரஸ் மாத்துதான் – அமுக்குடப்பா )

பிரேம் அம்மா ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து தம்ளருடன் வைத்து “எச்சப் பண்ணாம குடிங்கோ” என்றார். நியூஸ் சந்திரன் தான் எங்கள் அணியின் தண்ணி தவிக்கி என்பதால் அவன் வேகமாக தம்ளரைக் கையில் எடுத்துவிட்டு அம்மா சொன்னது புரியாமல் கண்களை மூடி மூடித் திறந்தான். “சப்பி குடிக்காம தூக்கி குடிக்கணும், என்ன?” என்று பிரேம் சொன்னதும்தான் புரிந்தது. பிறகு பிரேமேதான் எங்களுக்கு அண்ணாந்து குடிக்கையில் மூச்சைப் பிடித்துக் கொள்வது எப்படி என்றும் சொல்லிக் கொடுத்தது. 

செண்பக விநாயகர் கோவிலுக்குச் சென்றதும் பிரேம் தோப்புக்கரணம் போட்டு தலையைக் குட்டிக் கொண்டு எங்களுக்குப் புரியாமல் எங்கள் கீழத்தெரு சேனை விநாயகர் கோவில் அய்யர் சொல்வதைப் போல என்னென்னமோ சொல்லி கும்பிட்டார். பக்கத்திலுள்ள பட்டியல் கல் குழியில் கொட்டப்பட்டிருந்த திருநீறை எடுத்து ஒரு கீற்று போல நெற்றியில் வைத்துக்கொண்டார். அதன் பின்னர்தான் தெண்டில் கோஷ்டியின் மீதான தன் திட்டத்தை எங்களுக்கு கொஞ்சமே கொஞ்சம் போல சொன்னார்- “ அவங்க எப்டி நீங்க தப்பு பண்ணத கண்டுபிடிச்சு உங்களை மாட்டி விட்டாங்களோ அதே போல அவங்க செய்யற தப்பையும் நாம கண்டுபிடிச்சு அவங்கள மாட்டி விடணும். அதனால இனிமே அவங்க என்ன செய்யறாங்கன்னு வாட்ச் பண்ணனும்”

“வாட்ச்” என்பதை மணி பார்த்தல் எனும் பொருளில் மட்டுமே கேட்டுப் பழகிய எங்களுக்கு அச்சொல்லின் பொருளையும் பிரேமே விளக்க நேரிட்டது.    நாங்கள் வழக்கமாக செய்வதைப் போல கண்காணிப்பதில்லை அவர் திட்டம். கண்காணிப்பை பல படிகளாகப் பிரித்தார். ஒவ்வொன்றையும் ஒவ்வொரு உறுப்பினரிடம் வேலையாகக் கொடுத்தார். சிவாஜியால் மட்டுமே அவர் மொத்தமாக ஏதோ செய்கிறார் என உய்த்தறிய முடிந்தது. பிற அனைவருமே “நாங்க இத மட்டும் செஞ்சாப் போதுமா?” என ஐயத்துடன் வினவினர். பிரேம் அவர் சொன்னவற்றில் அதிகக் கேள்விகள் கேட்டால் பதில் சொல்வதில்லை.

தெண்டில் குழுவின் முக்கிய உறுப்பினர்களான தெண்டில், புல்தடுக்கி, உப்புக் கண்டம் ஆகியோர் நேரடியாக உளவறியப்பட வேண்டும் என்றார் பிரேம். அதன்படி புல்தடுக்கியை சேமியாவும், உப்புக் கண்டத்தை மு மாரியப்பனும், தெண்டிலை நானும் உளவறிய வேண்டும். அவர்கள் தண்ணீர் நிரப்பும் பணியை யக்கா பாட்ஷாவும், சாக்பீஸ் கொடுப்பதை டும்ரீக்கோலும் உளவறிய வேண்டும். வகுப்பறை சுத்தம் செய்யும் பணி இப்போது எங்கள் அணிக்கு வந்திருப்பதால் அதில் ஏதேனும் வித்தியாசமாகத் தென்பட்டால் தன்னிடம் சொல்ல வேண்டுமெனவும் அந்தப் பொறுப்பை நியூஸ் சந்திரனிடமும் கொடுத்திருந்தார். முக்கியமாக வீட்டுப்பாட குறிப்பேடுகளை அனைவரிடமும் பெற்று ஆசிரியர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை தெண்டில் கோஷ்டியார் செய்வதைக் கண்காணிக்கும் பணி சிவாஜிக்கு ஒதுக்கப்பட்டது.   கிட்டத்தட்ட 3 வார காலங்கள் நாங்கள் தினமும் அவர்கள் செய்வதைப் பற்றி பிரேமிடம் அறிக்கை சமர்பித்தோம். அவ்வப்போது நாங்கள் எதுவுமே நடக்கவில்லையே என முணகும்போது அவர் எங்களை 3 நொடிகள் முறைத்து, 1 நொடி புன்சிரித்து பொறுமை காக்கச் சொல்லுவார். 

இந்த மூன்று வார காலங்களில் பிரேம் எங்களுக்கு நெருக்கமாக ஆகிவிட்டார் என்பதால் அவர் எனுமிடத்திலிருந்து அவன் எனும் உரிமை மிக்க படர்கை அவனுக்கு அளிக்கப்படுகிறது. என்னதான் நெருக்கமானாலும் அவ்வப்போது பிரேம் தன்னை நிரூபித்துக் கொண்டே இருப்பான். எங்களிடம் நெல்லிக்காய் வாங்கித் தின்னுமளவு அவன் நெருங்கி வந்தாலும் கடிக்கப்பட்ட அரை நெல்லிக்காயை ஏற்பதில்லை. கொடுக்கப்பட்ட முழு நெல்லிக்காயையும் கைக்குட்டையால் எங்கள் முன்பே அழுந்தத் துடைத்து ஊதி அதன் பின்னரே தின்பான். அவன் பாட்டிலில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்கும் சலுகையை எங்களுக்குக் கொடுத்திருந்தாலும் உதட்டில் படாமல் குடிக்கவும், அவ்வப்போது அதனை பானையிலிருந்து நிரப்பித் தருவதாகவுமான நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டியிருந்தது. பிரேம் நிபந்தனைகளற்ற சலுகைகள் எதையும் தருவதில்லை. 

இந்தச் சூழலில்தான் எங்கள் நடவடிக்கைகளும் தெண்டில் மண்ட குழுவினரால் கவனிக்கப்படும் தகவலும் எங்களை வந்து சேர்ந்தது. அவர்களும் ஆயத்தங்களில் ஈடுபட்டு வந்த ரகசியம் வெளிவந்ததும் ஆட்டம் ஆரம்பமாகியது.

Series Navigation<< தெய்வநல்லூர் கதைகள் – 5தெய்வநல்லூர் கதைகள் – 7 >>

One Reply to “தெய்வநல்லூர் கதைகள் – 6”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.