டகாஹாமா க்யோஷி: இலையுதிர் காலம் இன்னும் ஆழமாகிறது

1.

குறைப்பிரசவக் கோடையிரவு
கனவும் நிகழ்வும்
ஒரே விஷயங்கள் தான்

2.

இலையுதிர்கால வானம்
இரண்டாகப் பிளந்திருக்கிறது
இந்தப் பெரிய ஜப்பானிய ச்சின்க்வாபின்* மரக்கிளையால்

ஜப்பானிய ச்சின்க்வாபின் மரம்Japanese chinquapin tree – தெற்கு ஜப்பான் மற்றும் தென் கொரியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு வகை மரம். இது ‘பீச்’ (Beech) மற்றும் ‘ஓக்’ (Oak) மரவகைகளுடன் தொடர்பு கொண்ட, ஒரு நடுத்தர அளவிலான, ஆண்டு முழுமையும் பசுமையாக இருக்கும் மர வகை. பெரும்பாலும், காடுகளிலும், பள்ளத்தாக்குகளிலும், குறிப்பாக கடலுக்கு அருகிலும் இது வளரும். இது விதை வேகவைத்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. இந்த மரம் பட்டுப் போனால் அது ‘ஷிட்டாக்கி’ (Shitake) உட்பட பல காளான் வகைகள் வளர ஒரு ‘ஓம்புயிர்’-ஆக (Host) செயல்படுகிறது.

3.

சூரியனைப் பிடித்து வைத்திருக்கும்
தொலைதூர மலையை தரிசித்தபடி கிடக்கிறது
தரிசு நிலத்தின் பாழடைந்த வயல்

4.

வீழ்ந்த இலைகள் எரிகின்றன
வெதுவெதுப்பான இலையுதிர்காலத்தின்
இந்த ஒரு நாள் வரையறுக்கப்படுகிறது

5.

பௌலோவ்னியா மரத்தின்* ஒரு இலை வீழ்ந்துவிட்டது
விழும் போது அது
சூரியனைப் பிடித்துவிட்டது

பௌலோவ்னியா மரம் Paulownia tree – இது ஒரு வகைக் கடின மரம் (hardwood tree). இது ‘சைனா’ (China), தெற்கு மற்றும் வடக்கு ‘லாஓஸ்’ (Laos), ‘வியட்நாம்’ (Vietnam), கிழக்கு ‘ஏஷியா’ (East Asia) – குறிப்பாக ‘ஜப்பேன்’ (Japan) மற்றும் ‘கொரியா’ (Korea) ஆகிய இடங்களில் வளர்க்கப்படுகிறது.

6.

பனி மலை
ஒரு பெண் தன் முகத்தின் மேல்
அவசரமாகப் பூசிக் கொண்ட முகப் பூச்சுத் தூள் போல

7.

சோகமோ சந்தோஷமோ
தெரியவில்லை
அவள் அந்த ஆற்றில் தலைமுழுகுகிறாள்

8.

இறந்துவிட்ட ஒரு சாமந்திப் பூ
எனினும் அதில் எதுவோ
இன்னும் மிச்சம் உள்ளது அல்லவா

9.

நீ ஒரு வார்த்தை உதிர்க்கிறாய்
நான் ஒரு வார்த்தை உதிர்க்கிறேன்
இலையுதிர்காலம் இன்னும் ஆழமாகிறது

10.

இந்தப் பட்டாம்பூச்சி
எதையோ உண்ணும் சப்தம்
அவ்வளவு மௌனம்

11.

ஒரு ‘க்யோட்டோ’* பெண்
பாவப்பட்டவள்
‘செர்ரி’ மலர்கள்* பற்றிய எந்தப் பைத்தியமும் அற்று

க்யோட்டோKyoto – ஒரு காலத்தில் ஜப்பேனின் தலைநகரமாக இருந்த இந்த நகரம் ‘ஹொன்ஷூ’ (Honshu) என்ற தீவில் இருக்கிறது. இது ஏராளமான பாரம்பரிய புத்த கோவில்கள், தோட்டங்கள், ஏகாதிபத்திய (imperial) அரண்மனைகள், ஷின்டோ (Shinto) ஆலயங்கள் மற்றும் பாரம்பரிய மர வீடுகளுக்காகப் பிரபலமானது. கைசெகி’ (kaiseki) எனும் பல்வகை உணவுகள் பல முறை பரிமாறப்படும் ஒரு உணவு முறைமை மற்றும் ‘கெய்ஷா’ (geisha) எனும் ‘ஜியோன்’ மாவட்டத்தில் (Gion district) அதிகம் காணப்படும் பெண் பொழுதுபோக்காளர்கள் போன்ற பாரம்பரிய மரபுகளுக்கும் பெயர் பெற்றது இந்நகரம்.
செர்ரி மலர் cherry tree flower blossoms – செர்ரி மலர்களின் மலர்ச்சியை ஆண்டுதோறும் கண்ணுற்றுக் கொண்டாடுவது என்பது ஜப்பேனியப் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, கலை மற்றும் இலக்கியத்துடன் நெருங்கியத் தொடர்பு கொண்ட ஒரு மாபெரும் வருடாந்திர நிகழ்வு

12.

காற்று வீசுகிறது
இறந்தவர் ஆன்மாவின்
வருகையை நான் உணர்கிறேன்

(வளரும்)

  • ஜப்பானிய ஹைக்கூவின் ஒரு அம்சம் அதன் விளக்கத்தை அதன் வாசகர்களுக்கு சமர்ப்பிப்பதாகும். ஹைக்கூ அதன் வாசகர்களை அதன் அர்த்தத்தை பல்வேறு வழிகளில் விளக்க அனுமதிக்கிறது. எனவே, ஜப்பானிய மூலத்திலிருந்து வேறொரு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஹைக்கூவில் அத்தகைய அம்சத்தைப் கிடைக்கச் செய்வது சற்று கடினம். மிகவும் தர்க்கரீதியான மொழிபெயர்ப்பு அசலின் அழகையும் உணர்வையும் மீட்டவோ மீட்கவோ கூட முடியாமல் தவிக்கும். மேலும், இரண்டு மொழிகளுக்கும் இடையே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன: இலக்கண அமைப்பு மற்றும் கவிதை ஒலிப்பு மட்டுமல்லாமல், தொடர்புடைய சொற்களின் பொருள் மற்றும் நுணுக்கத்திலும் கூட.
  • ‘சடோஷி கினோஷிடா’ (Satoshi Kinoshita) – க்யோஷி டகாஹோமோவின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் க்யோஷியின் ஒரு பிறந்த நாள ஆண்டு விழாவன்று எழுதிய குறிப்பு (2018.2.22)

~oOo~

ஆசிரியர் குறிப்பு

டகாஹாமா க்யோஷி (Kyoshi Takahama) – (22 February 1874 – 8 April 1959) – இயற்பெயர்: டகாஹாமா க்யோஷி (Takahama Kyoshi): தன் வாழ்நாளில் ஐம்பதாயிரம் ஹைக்கூக்கள் எழுதிய இவரை ‘நவீன ஹைக்கூவின் அரக்கன்’ (A GIANT OF MODERN HAIKU) என விளிப்பர்.

கியோஷி தகாஹாமா (தகாஹாமா கியோஷி) – [ஜப்பேனிய (அல்லது ஜப்பானிய) உச்சரிப்பில் டகாஹாமா அல்லது தகாஹாமா, இரண்டுமே சரி என்று தான் தோன்றுகிறது] – ஜப்பானின் ‘ஷோவா’ காலத்தில் (Shōwa era) செயல்பட்ட ஒரு ஜப்பானிய ஹைக்கூ கவிஞர். அவரது உண்மையான பெயர் தகாஹாமா கியோஷி; கியோஷி என்பது அவரது வழிகாட்டியும் புகழ் பெற்ற ஹைக்கூ கவிஞருமான ‘மசோகா ஷிகி’-யால் (Masaoka Shiki) அவருக்கு வழங்கப்பட்டப் புனைப் பெயர் (புனைவும் நிஜமும் பல சமயம் ஒன்று தான் என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் போல).

கியோஷி, இப்போது ‘மட்சுயாமா’ (Matsuyama) என்றழைக்கப்படும் நகரமான ‘எஹிம்’ (Ehime Prefecture) மாகாணத்தில் பிறந்தார். அவரது தந்தை, ‘இக்கெநௌச்சி மாசடாடா’ (Ikenouchi Masatada), ஒரு முன்னாள் சாமுராய் மற்றும் ‘ஃபென்சிங் மாஸ்டர்’ (fencing master – கத்திச் சண்டை விளையாட்டுக் கலை) மற்றும் பாரம்பரிய ‘நோ’ (Noh – ஒரு ஜப்பானியப் பாரம்பரிய நடன நாடகக் கலை) நாடகத்தின் ரசிகர் ஆவார். இருப்பினும், ‘மீஜி’ மறுசீரமைப்பால் (Meiji Restoration – 1868இல் நடந்த ஒரு அரசியல் புரட்சி – ஜப்பானிய ‘எடோ’ (Edo) மன்னராட்சி காலம் முடிவிற்கு வர வழி வகுத்தது), மாசடாடா தனது உத்தியோகபூர்வ பதவிகளை இழந்து ஒரு விவசாயியாக ஓய்வு பெற்றார். கியோஷி இதனால் ஒரு கிராமப்புற சூழலில் வளர்ந்தார். இது அவருக்கு ஏற்கனவே இருந்த இயற்கையின் மீதான ஈடுபாட்டை அதிகரித்தது. ஒன்பது வயதில், அவர் தனது பாட்டியின் குடும்பத்திலிருந்து ஒருவகை மரபுரிமையாகக், குடும்பப் பெயரான ‘தகாஹாமாவை’ப் பெற்றுக் கொண்டார். ‘கவாஹிகாஷி ஹெகிகோடோ’ (Kawahigashi Hekigoto – மேலும் ஒரு புகழ் பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் – ‘ஷிகி’ அவர்களின் முக்கிய சீடர்களுள் ஒருவர்) என்ற தன் வகுப்புத் தோழன் மூலம் அவர் ‘மசோகா ஷிகியுடன்’ பழகலானார்.

ஷிகியின் ஆலோசனையைப் புறக்கணித்து, கியோஷி, 1894இல் தன் பள்ளிப் பருவக் கல்வியை நிராகரித்து வெளியேறி எடோ கால ஜப்பானிய இலக்கியத்தைப் படிக்க ‘டோக்கியோ’ (Tokyo) சென்றார். 1895இல், அவர் ‘சென்மான் காக்கோ’வில் (’Senmon Gakkō தற்போதைய ‘வசேதா’ Waseda பல்கலைக்கழகம்) சேர்ந்தார், ஆனால் விரைவில் ‘நிஹோன்ஜின்’ (Nihonjin) எனும் இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இலக்கிய விமர்சகராகவும் பணியேற்று அந்தப் பல்கலைக்கழகத்தை விட்டும் வெளியேறினார். ஆனால் அங்கே பணிபுரியும் போது, ​​அவர் ஹைக்கூ கவிதையின் மாறுபாடுகளுக்கான சாத்தியக்கூறுகள் கொண்ட தன் முயற்சிகளைச் சமர்ப்பித்தார், ஒழுங்கற்ற எண்ணிக்கையிலான எழுத்துக்களைப் பரிசோதித்தார். 1897இல் திருமணம் செய்து கொண்டார். அவரது சந்ததியினரில் அவரது மகன், இசையமைப்பாளர், ‘டோமோஜிரோ இகெனோச்சி’ (Tomojiro Ikenouchi) மற்றும் கொள்ளு பேத்தி ‘செல்லிஸ்ட்’ (Cello எனும் பெரிய வகை ‘வயலின்’ (Violin) போன்ற ஒரு இசை வாத்தியம் வாசிப்பவர் Cellist) ‘கிறிஸ்டினா ரெய்கோ கூப்பர்’ (Kristina Reiko Cooper) ஆகியோர் பெயர் பெற்றவர்கள்.

1898 ஆம் ஆண்டில், கியோஷி, ஜப்பானிய ஹைக்கூ இதழான ‘ஹோட்டோடோகிசு’வை (Hototogisu) நிர்வகிக்க முன்வந்தார், இது முன்பு ‘ஷிகி’யின் ஆசிரியப் பொறுப்பில் இருந்தது.  கியோஷி அந்த இதழின் தலைமையகத்தை ‘மாட்சுயாமா’விலிருந்து (Matsuyama) ‘டோக்கியோ’விற்கு (Tokyo) மாற்றினார். ‘ஹோட்டோடோகிசு’வில், கியோஷி, ‘ஹெகிகோ’ (Hekigo) பள்ளியின் 17 அசைகள் எனும் பாரம்பரிய ஹைக்கூ முறையைப் பின்பற்றாத புதிய போக்குக்கு மாறாக, ஹைக்கூவின் பாரம்பரிய பாணியைக் கடைப்பிடித்தார்.

கியோஷி, ‘கிகோ’-வின் (kigo – ஒரு ஹைக்கூவில் இடம் பெற வேண்டிய ஏதேனும் ஒரு பருவத்தைக் குறிக்கும் வார்த்தை) குறியீட்டுச் செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். மேலும் அவர் பருவ வார்த்தைகளற்ற ஹைக்கூ மீதான நவீன போக்கை முற்றிலும் விலக்க முயன்றார். ‘ஹோடோடோகிசு’-வைத் திருத்தும் போது, அவர் ‘வகா’ (waka – ஒரு ஜப்பானியப் பாரம்பரியக் கவிதை வகை; வாகா என்பதன் நேரடி அர்த்தம் ஜப்பானியக் கவிதை என்பதாகும்; இதன் தற்போதைய மாற்றுப் பெயர் ‘தன்கா’ (Tanka) என்பதாகும்; இவ்வகைக் கவிதைகள் 5-7-5-7-7 என்ற அசைகள் கொண்ட அமைப்புடன் இயங்குபவை) சார்ந்த கவிதைகள் மற்றும் உரைநடை ஆக்கங்களைச் சேர்ப்பதற்கான வாய்ப்பு கொண்ட ஒரு இதழாக அதை விரிவுபடுத்தினார். இதனால் அந்தப் பத்திரிக்கை ஒரு பொது இலக்கியப் பெட்டகமாக மாறியது.

1908 ஆம் ஆண்டில், கியோஷி ஒரு முழு நீள நாவலைத் தொடங்கினார், ‘ஹைகைஷி’ ( ‘Haikaishi’ – ‘ஹைக்கூ குரு’ – The Haiku Master) என்ற தலைப்பில் இது தொடர் வடிவில் செய்தித்தாள்களில் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து ‘போன்ஜின்’ (‘Bonjin’ – “ஒரு சாதாரண நபர்”, 1909), மற்றும் ‘சாசென்’ (Chōsen – ஜப்பானிய மொழியில் இதற்கு, ஒரு பெயர்ச்சொல்லாகக் “கொரியா” என்றும், ஒரு வினைச்சொல்லாகச் “சவால்” என்றும் பொருள் வரும், 1912) ஆகிய நாவல்களை எழுதினார்.

1912-க்குப் பிறகு, அவர், ஹைக்கூ கவிதைகளின் மேல் தனது ஆர்வத்தைப் புதுப்பித்து, ஹைக்கூ உருவாக்கம் குறித்த வர்ணனைகளை வெளியிட்டார் – ‘சுசுமுபேகி ஹைக்கூ நோ மிச்சி’ (Susumubeki haiku no michi – “ஹைக்கூ செல்ல வேண்டிய பாதை” – The Path Haiku Ought to Take, 1915-1917). இருப்பினும், அவர் தொடர்ந்து சிறுகதைகளையும் எழுதினார், ஹோட்டோடோகிசு-வையும் திருத்தினார். மேலும் ‘ஃபுடாட்சு காக்கி’ (Futatsu Kaki – “இரண்டு பெர்சிமான்கள்” (பெர்சிமான் என்பது ஒரு பழ வகை) – “Two Persimmons”, 1915) என்ற மற்றொரு நாவலை எழுதினார். கூடுதலாக, அவர் பாரம்பரிய ‘நோ’ (Noh – இசை, நடனம் மற்றும் நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஜப்பானிய நாடக வடிவம்) திரையாடல்கள் மீது ஆர்வம் காட்டத் தொடங்கினார், சில புதிய நாடகங்களை எழுதினார். போருக்குப் பிந்தைய அவரது முக்கிய நாவல் ‘நிஜி’ (Niji – “வானவில்”, 1947) என்பதாகும்.

1954-ஆம் ஆண்டில், அவருக்கு ஜப்பானிய அரசாங்கத்தால் ‘Order of Culture’ (‘கலாச்சார மரியாதை’ எனப் பொருள்படும்) வழங்கப்பட்டது. இது கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் கலாச்சாரம் சார்ந்த முன்னெடுப்புகளுக்காக ஜப்பானில் வழங்கப்படும் ஒரு விருது. இவ்விருது பெருபவர்களுக்கு ஒரு வருடாந்திரத் தொகை அவர்கள் ஆயுள் முழுவதும் வழங்கப்படும்.

மேலும், கியோஷி தனது இரண்டாவது மகள் ‘ஹோஷினோ டாட்சுகோ’-வை (Hoshino Tatsuko) அவரது (மகளுடைய) சொந்த ஹைக்கூ பத்திரிகையான ‘தமாமோ’-வை (Tamamo) வெளியிட ஊக்குவித்தார்.

கியோஷி 1910-இல் தனது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காகவும் தனக்கான ஒரு புதிய தொடக்கத்திற்காகவும் ‘காமகுரா’-விற்கு (Kamakura – ஒரு ஜப்பானிய நகரம். இந்நகரம் 1185 முதல் 1333 வரை ஜப்பானின் தலைநகராகத் திகழ்ந்தது. இதே பெயரில் ‘காமகுரா’ காலம் என்று இந்த ஆண்டுகளைக் குறிக்கிறார்கள்.) குடிபெயர்ந்தார், மேலும் அவர் இறக்கும் வரை கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் அங்கு வாழ்ந்தார். அவரது கல்லறை காமகுராவில் உள்ள ‘ஜுஃபுகு-ஜி’ (Jufuku-ji) கோவிலில் உள்ளது. மரணத்திற்குப் பின் அவருக்கு ஜப்பானிய அரசாங்கத்தால் ‘புனிதப் பொக்கிஷம்’ – 1 ஆம் வகுப்பு (இது நீண்ட கால சேவைக்காக வழங்கப்படுகிறது) எனும் அரசு மரியாதை வழங்கப்பட்டது.

அடுத்த பகுதி

One Reply to “டகாஹாமா க்யோஷி: இலையுதிர் காலம் இன்னும் ஆழமாகிறது”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.