
ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரணம்
நேர்கோட்டில் பறக்காது
நெளிந்து வளைந்து பறக்கும்
ஒரு கவிதை
சுழலும்
மின்விசிறியில் மோதிச்
சிதறியது-
இரு வார்த்தைகளையே
சிறகுகளாகக் கொண்ட
அக்கவிதையின்
ஒரு வார்த்தை
பிய்ந்து விழ
பிய்ந்து விழாத மீதி
ஒரு வார்த்தையிலும்
அது சாகாத
கவிதையாய்த் தான்
தெரிந்தது-
ஆனால்
செத்திருந்தது
ஒரு வண்ணத்துப் பூச்சியாய்.
இமைக்காவல்
இமைகளைக்
காவல் வைத்தேன்.
ஆனாலும்
என் விழிகளுக்கு தெரியாத
என் விழிகள்
எனக்குத் தெரியாது
என்னைக் கண்காணிப்பது
போல் –
எச்சரிக்கையாய்
இருக்க வேண்டும்
என் கால்களின்
பயணத்தில்
நான்.
அச்சுறுத்தி விடமுடியும்
இரு கை ஓசை எதற்கு?
ஒரு கை ஓசையே போதும்
உன்னை அச்சுறுத்தி விட முடியும்.
*ஒரு கைப்பிடித் தூசி எதற்கு?
ஒரு விரல்நுனி தூசியிலே
உன்னை அச்சுறுத்தி விட முடியும்.
உன்னை அச்சுறுத்துவதற்கு
உன்னை அச்சுறுத்த வேண்டியின்றி
ஒன்றுமில்லாமல் நீ அச்சுறுதலிலேயே
உன்னை அச்சுறுத்தி விட முடியும்.
குறிப்பு: I will show you fear in a handful of dust-T.S. Eliot, The Waste Land
இராப் பயணம்
பாலத்தினடியில்
சலசலத்தோடும்
நதியின்
நெடும்பயணத்தோடு
பாலத்தின் மீது
தடதடத்தோடும்
இரயில் வண்டியின்
குறும்பயணம்
குறுக்கு வெட்டும் புள்ளியில்
தலைசுற்றிக் காலம்
தவிப்பதில்
என் தூக்கம் கலையும்
இராப் பயணத்தில்.
நிலவின் தனிமை
தனக்குத் துணையாய்த்
தானேயன்றிப் பிறிதில்லையாய்
ஊர்ப் பொட்டலின்
வாசலில்லா வாசலுள்
தனக்குத் துணையாய்
தானேயன்றிப் பிறிதில்லையாய்
நுழைந்த நிலவு
தவிக்கிறது
தன் தனிமைக்கு
பொட்டலின் தனிமை
துணையாயில்லாமல்-
தன் தனிமையோடு
பொட்டலின் தனிமை கூடி
தன் தனிமையின்
தனிமையாய்
பொட்டலின் தனிமை
விளக்கமாகி.
கண்ணாடிக்குள்
கண்ணாடிக்குள் தெரிகிறவன்
என்னைப் போலி செய்கிறான் –
நான் சிரித்தால் சிரிக்கிறான்.
நான் அழுதால் அழுகிறான்.
நான் சிரித்து அவன் அழுது
நான் அழுது அவன் சிரித்தாலாவது
அவனோடு சண்டையிடலாம்?
என்ன செய்ய அவனை?
கண்ணாடிக்குள் புகுந்து
இழுத்தெறியலாம் அவனை.
ஆனால் உலகில் அவன் உலவி-
கால்கள் நிலத்தில் பாவாமல்
தலைசுற்றி ஒளி வட்டத்தோடு-
உலகோர் நம்பத் தொடங்கி விட்டால்
என்ன செய்ய?
எப்படியானால் என்ன?
கண்ணாடிக்குள் புகுந்ததும் தான் தாமதம்-
கட்டித் தழுவினான் –
கண்ணாடி கல்லறையானது.
வெயிலே நிழலாய்
எங்கே போய்
அமர்வதென்று
அலமந்து
ஒரு பறவை
பறந்து போகிறது-
இராவில்
கயிறாகத் தெரியாது
அரவாகத் தெரியும் கயிறு
நடுப்பகலிலேயே
அப்படி தெரிகிறது
கண்ணிருள-
என் நிழலே
தான் தீப்பற்றி
எரிந்து போவோமோ
என்று அஞ்சுகிறது-
வெயிலுக்கொதுங்க
வெயிலே நிழலாயுள்ள
நெடுஞ்சாலை வெயிலில்-
அழிக்கப்பட்ட மரங்களின்
நிழலெல்லாம்
அடியில்
புதைந்து.