- ஜப்பானியப் பழங்குறுநூறு
- துயரிலும் குன்றா அன்பு
- உனக்காக உறைபனியில்
- நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்
- கடவுளும் காணா அதிசயம்
- கனவிலேனும் வாராயோ?
- எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?
- உயிரையும் தருவேன் உனைக்காண
- நீ வருவாயென!
- மலைவளி வீழ்த்து தருக்கள்!
- துயர் கூட்டும் நிலவு
- செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை
- ஊற்றுநீர் அன்ன தூய இதயம்
- குளிரில் தனிமை கொடிது
- வெண்பனியா வெண்மலரா?
- பிரிவினும் உளதோ பிரிதொன்று?
- நிலவு ஒரு பனியாகி
- மலையாற்றின் இலையணை
- சக்குராவின் சலனம்
- நீண்ட வாழ்வே சாபமோ?
- மனித மனமும் மலர் மணமும்
- கோடைநிலா எங்கே?
- கொடிவழிச் செய்தி
- புல்நுனியில் பனிமுத்து
- காணும் பேறைத் தாரீரோ?
- இறை நின்று கொல்லுமோ?
- சொல்லாத காதல் எல்லாம்
- காதல் மறைத்தாலும் மறையாதது
- காற்றினும் கடியது அலர்
- மறவேன் பிரியேன் என்றவளே!
- காதல்வலி விதைக்கும் வெறுப்பு
- தேடலும் மறத்தலும்

மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
しのぶれど
色に出でにけり
わが恋は
物や思ふと
人の問ふまで
கனா எழுத்துருக்களில்
しのぶれど
いろにいでにけり
わがこひは
ものやおもふと
ひとのとふまで

ஆசிரியர் குறிப்பு:
பெயர்: ஆளுநர் கனேமொரி
காலம்: பிறப்பு தெரியவில்லை. கி.பி 990 வரை வாழ்ந்தார்.
இத்தொடரின் 15வது பாடலை (உனக்காக உறைபனியில்) இயற்றிய பேரரசர் கோக்கோவின் கொள்ளுப்பேரன். ஆனால் பட்டம் சூட்டத் தகுதி வாய்க்காத மனைவியின்வழி வந்ததால் அரசவை அதிகாரியாகவும் ஓய்வு பெறுவதற்குச் சற்றுமுன்பு சுருகா மாகாணத்தின் ஆளுநராகவும் பதவி வகித்தார். சமகாலத்தில் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு கவிஞராகவும் இவர் திகழ்ந்தார். ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களுள் பத்துக்கும் மேற்பட்ட செய்யுள்களை இயற்றியுள்ளவர்கள் அறுவர் மட்டுமே. அவர்களுள் கனேமொரியும் ஒருவர். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 87 பாடல்கள் பல்வேறு தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. இவை தவிர, கொசென்ஷூ தொகுப்பில் யாரென்று தெரியாதெனக் குறிப்பிடப்பட்டுள்ள 3 பாடல்கள் இவருடையதாகலாம் என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.
பாடுபொருள்: எவ்வளவு முயன்றும் அகத்தின் காதல் முகத்தில் வெளிப்படுவதைத் தடுக்க இயலாதது.
பாடலின் பொருள்: நான் சொன்னாலன்றி என் மனதுள் இருப்பதை யாரறிய முடியும் என எண்ணி என் காதலை யாரிடமும் சொல்லாமலிருந்தேன். ஆனால் யாரைக் காதலித்துக்கொண்டிருக்கிறேன் எனப் பிறர் கேட்டவுடன் தெரிந்தது எவ்வளவு முயன்றாலும் காதலை மட்டும் மறைக்க முடியாதென்று.
நேரடியாகப் பொருள்தரும் இப்பாடலைக் கி.பி 946 முதல் 967 வரை அரசராக இருந்த முராகமியின் வேண்டுகோளுக்கேற்ப 960ல் இயற்றியிருக்கலாம் எனக் கருதுகிறார்கள். அந்தக்காலத்தில் நம் சங்கப்பலகை போன்று அரசவையில் தரப்பட்ட தலைப்பில் செய்யுள் இயற்றும் போட்டிகள் அவ்வப்போது நடப்பது வழக்கம். பேரரசர் முராகமியின் அரசவையில் புலவர்கள் அழைக்கப்பட்டு அரசருக்கு இடமும் வலமும் வரிசையாக அமரவைக்கப்பட்டு ஒவ்வோர் இணையாக ஒரே தலைப்பில் பாடல் புனையக்கூறி இரண்டில் சிறந்த பாடலைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்துவந்தது. அவ்விரண்டு பாடல்களையும் பல்வேறு நுழைவாயில்களில் இருக்கும் திரைச்சீலைகள் இரண்டிலும் எழுதி வைக்கும் வழக்கமும் இருந்தது.
இத்தொடரின் 40 மற்றும் 41ம் பாடல்கள் இதுபோல் அரண்மனையில் ஒரு நுழைவாயிலின் இடது மற்றும் வலது திரைச்சீலைகளில் எழுதப்பட்டிருந்தன. இவ்வாறு திரைச்சீலைகளில் எழுதப்படுவது புலவர்களுக்குக் கிடைக்கும் பெரிய அங்கீகாரமாகக் கருதப்பட்டது. இத்தொடரின் 39வது பாடலும் (சொல்லாத காதல் எல்லாம்) இதே கருத்துடைய பாடல்தான் என்றாலும் போட்டியில் இயற்றப்படாததால் திரைச்சீலைகளில் இடம்பெறவில்லை போலும். 39, 40, 41 ஆகிய 3 பாடல்களுமே அரண்மனைக் காதலில் வாழ்க்கைச் சக்கர இலக்கணத்தின் ஆரம்பநிலையில் இயற்றப்பட்ட பாடல்களே ஆகும்.
வெண்பா:
மறைப்பின் கிடக்கை வெளித்தெரியா தென்றே
குறைத்து நினைந்தேன் துகிலின் – கறையெனத்
தெள்ளெனத் தென்படக் கண்டேன் மறைப்பின்
மறையாது காதலே என்று