‘ஊர்வசியின் களிப்பு- புரூரவஸின் சலிப்பு’

இந்த இரண்டாம் காண்டத்தின் முற்பகுதி முழுவதும் நாம் காண்பது காதலர்களின் உள்ளப்போராட்டங்களைத்தான்! காளிதாசனின் நாடகத்தில் காணும் நிகழ்ச்சிகளை அரவிந்தர் நீக்கி விடுகிறார்.

காளிதாசனின் நாடகம் என்ன கூறுகிறது என்பதனை அரவிந்தர் கூறியவாறே அவருடைய ஆங்கில மொழியாக்கத்திலிருந்து சுருக்கமாகக் காண்போம்.

புரூரவஸிற்கு ஏற்கெனவே ஔஷினாரி (Aushinari) எனும் அரசி இருக்கிறாள். இவள் உஷினாரா (Ushinara) எனும் மன்னனின் மகள். இந்த அரசி புரூரவஸின் ஊர்வசி மீதான காதலைப் பற்றி அறிந்து பொறாமை கொள்கிறாள். வேதங்களும் புராணங்களும் கூறும் புரூரவஸின் கதையில் ஊர்வசியைத் தவிர வேறொரு பெண் கிடையாது! அக்காலத்தில் புனையப்பட்ட நாடகங்களில் இப்படி ஒரு பாத்திரம் தேவையாதலால் இது புனையப்பட்டுள்ளது எனக்கருத இடமுண்டு.

ஊர்வசியின் நினைப்பால் தன்னையிழந்து தவிக்கிறான் புரூரவஸ். புரூரவஸின் மீதான காதலில் ஆழ்ந்துள்ளாள் ஊர்வசி. தன் தோழி சித்ரலேகாவின் துணையுடன் மறைமுகமாக வந்து, தன் மீதான அவனது காதலைக் கூறுவதைக் கேட்கிறாள். சித்ரலேகாவின் சொற்படி அவன்முன் தோன்றவும் செய்கிறாள். ஆனால் காதலர்கள் பொழுதை இணைந்து கழிக்க இயலாதபடிக்கு தேவலோகத்திற்குத் திரும்ப அழைக்கப்படுகிறாள்.

தேவலோகத்தில் பரத முனிவரின் படைப்பான ஒரு நாடகம், ‘லக்ஷ்மியின் தேர்வு’ எனும் நடன நாடகம் அரங்கேற்றப்படுகிறது. லக்ஷ்மியாக நடனமாடும் ஊர்வசி, புரூரவஸின் நினைப்பாகவே காதலில் மயங்கியிருந்து ஒரு கட்டத்தில் புருஷோத்தமன் (விஷ்ணுவின் ஒரு நாமம்) எனக் கூறுவதற்குப் பதிலாக புரூரவஸ் என்று கூறிவிடுகிறாள். இது சம்பந்தமான நடப்புகள் காளிதாசனின் நாடகத்தில் மூன்றாம் பகுதியில் காணப்படுகின்றன. 

அரவிந்தரின் நீண்ட கவிதையின் கீழ்க்காணும் பகுதியில் இதன் விவரங்களைக் காணலாம்.

புராணத்தில் ஊர்வசி மட்டுமின்றிப் புரூரவஸும் ஒன்றல்ல, மூன்று சாபங்களை அடைகிறான். பரதமுனிவர் அவனை 55 ஆண்டுகளுக்கு ஒரு கொடியவனாக உலவுமாறு சபிக்கிறார். என்ன தவறுக்காக எனத் தெரியவில்லை! பாவம், பேராசை கொண்ட மன்னனாகவே அவன் சித்தரிக்கப்படுகிறான். ஊர்வசி மீதான சாபமே கதையின் முக்கியமான கருவாகிறது. 


காண்டம்-2

அந்த இளங்காலைப் போதில் மலைகளினின்றும் ஊர்வசி
மகிழ்வோடு வியந்தபடி சென்றாள்; பழையபடி
ஒரு அலட்சியமான ஒளிக்கீற்றாக வல்ல; ஏனெனில் முன்பறியாத
ஒரு கம்பீரமான நிர்ப்பந்தம், அவளுடைய அதீதமான வசீகரத்தையும்
தன்னிச்சையான அழகையும் ஆண்டது; பழகிய பொருள்கள்
வினோதமாகத் தெரிந்தன, அவளுடைய கண்களை மனிதப் பார்வையின்
மூடுபனி மூடியது. காதல் அவளுடன் கூடவே இருந்தது,
ஆனால் சுவர்க்கத்தினுடையதல்ல; அல்லது தனது பொன்னிறப் படுக்கையை
அப்சரஸ்களின் உயர்ந்துதாழும் மார்பினிடை அமைத்துக் கொள்ளும்
மதிப்பிற்குரிய சாச்வதமான விருந்தாளியாலும் அல்ல.
ஆனால் இது, அவள் காதலிப்பது, பரவசமான, வேதனைதரும்,
தன்னுள் லயிக்கும், ஒரு மேன்மையான மனிதத் தோற்றமே, 345
அதனை வியந்தவள் தன் நெஞ்சில் அதனை ஆழமாக ஒளித்தாள்.
அழிவற்றவர்களின் நடனத்தில் அவள் அசைந்தாலும், ஒரு அலைவீச்சு
அவளுடைய விரல்கள் சூரியக் கதிர்களைப் போன்று
சுவர்க்கத்தின் யாழினை மீட்டி ஒளிர்ந்தாலும், அல்லது புலர்காலையில்
சுவர்க்கத்தின் சுனைகளில் நீராட வெளியேசென்றாலும்
அல்லது தேவலோகத்து வனங்களில் உலவும்போதும்
அல்லது ஒரு பொன்மாலைப்பொழுதில்
அமைதியான மரக்கிளைகளில் மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தாலும்
அவள் செய்த சுவர்க்க சம்பந்தமான செயல்கள், அவள் நினைத்ததும்,
அவள் இருந்ததும் அதேபோல, இருப்பினும் மாறிவிட்டது.
ஒரு இன்பமான ஆயாசம் அவளின் செயல்களில்
அசைவுகளில்; அவளுடைய ஆனந்தமான இமை மயிர்கள் ஒரு
சுமைகொண்டது போல குவிந்தன; அவளுடைய தினசரி செயல்களும்
ஒரு சிலை வாழ்வையே நடிப்பது போன்றிருந்தது.
பேரரசர்களுடையதைப்போல ஏகமனதுடன் இல்லை. 360
இப்போது சுவர்க்கத்தின் பகல்கள் அமைதியாகச் செல்ல
அமைதியான வேனிற்காலமும் கடவுள்களிடையே,
சுவர்க்கத்தில் ஆடல்களும் பாடல்களும் அதிகரித்தன;
எண்ணிறந்த அழகில், மல்லிகை மலர்க்கிரீடங்களுடன்;
அடிக்கடி இந்திரனின் சபையில் இறப்பற்ற உயிர்கள் காண்பர் கூடியிருந்து
தெய்வீக நாடகங்களையும், சுவர்க்க சம்பந்தமான நடனங்களையும்.
இந்நுண்கலைகளும் உயர்வான நடிப்புகளும்
பூமிக்கு மட்டுமன்று, சுவர்க்கத்திலும் உண்டு அவற்றின்
வளமான பிரதிகள். ஆகவே, அன்றொருநாள்
தெய்வீகப் பார்வையாளர்கள் முன்பு அரங்கேற்றப்பட்டது
லக்ஷ்மியின் தேர்வு – நாட்டிய நாடகம். ஊர்வசியே அந்தப்
பெண்தெய்வத்தின், சமுத்திரக் குழந்தையின் பாத்திரத்தை, ஏற்றாள்
மேனகை வாருணியாக, மற்ற தேவமங்கையர்
சுவர்க்கத்தின் மற்ற பெருமைமிக்க தெய்வங்களாக. 375
ஆச்சரியமும் இனிமையும் நிறைந்த நாட்டிய நாடகங்கள் அவை;
நிலாக்கதிர் முகங்கள் பலத்தையும் போர்களில் பங்குகொண்ட
பெரும் உள்ளங்களின் அமைதியையும் நடித்தன,
அச்சிறு கைகள் சித்தரித்தன – கவரப்பட்ட பிரதேசங்களின்
பயங்கரமான சாட்சியங்களையும் உலகை உலுக்கிய வல்லமையையும்.
பின்பு ஒரு பொன்னான சிறிய கையசைப்பில்
மேனகை போர்புரியும் அமைப்பினைப்போல்
பாதி மூடிய விழிமயிர்களுடன் இருந்து அவனைப்போல்
எங்கு அமைதியான, நிரந்தரனான மேகத்தைப்போன்ற விஷ்ணு
கையில் சக்கரத்துடன் அமர்ந்து அவளுடைய ஒளிமயமான சகோதரியிடம்
கூறினானோ:
“சமுத்திரத்தின் மகளே, சகோதரியே, யாருக்காக சுவர்க்கமே
ஏங்குகிறதோ, நீஅவர்களது அதிகாரத்தை மதிப்பிட்டும்
எப்போதுமுள்ளதும் அவர்களின் பயங்கரமானதுமான அழகினை ஆராய்ந்தும்
அவர்களது மகிழ்ச்சிதரும் பெயர்களைக் கேட்டும் உள்ளனை.
தைரியமாகச் சொல், கேட்டுக்கொண்டிருக்கும் இவர்கள் முன்பு,
அனைத்துக் கடவுள்களையும் விடவும் பூமியை விடவும், 390
சுவர்க்கத்தின் நீரூற்றுக்களை விடவும்,
யாரை நீ மிகவும் விரும்புகிறாய்? ஊர்வசி,
சிந்தனையில் விரிந்து எங்கோ நோக்கும் கண்களுடன், கூறினாள்
தொலைவிலிருந்து வரும் குரலில்: “அரசன் புரூரவஸ்.”
காற்று இலைகளூடே சலசலத்துச் செல்வதுபோல், சென்றது
ஒரு பலமான சிரிப்பின் அலை அக்கடவுள்களின் கூட்டத்தில்,
ஒரு மகிழ்ச்சியான வேனிற்கால ஓசை. ஆனால் களிப்பினால் அன்று.
பரதர், சுவர்க்கத்தின் புகழ்வாய்ந்த நாடகாசிரியர்,
அவருடைய அரிய கலைப்படைப்பு பாழாக்கப்பட்டும் அதன் வசீகரம்
நாசமாக்கப்பட்டதும் நுட்பமாகப் படைக்கப்பட்ட காட்சிப் புனைவுகள்
சிதைக்கப்பட்டதும் கண்டு உணர்ச்சிவசப்பட்டு:
“சுவர்க்கத்தின் தூய புனிதத்தினுள் நீ மானிடத்தின்
மூச்சுக்காற்றினைக் கொண்டுவந்துள்ளதனால்,
உன் அழகிய வடிவை எதற்காகக் கடவுள் படைத்தாரோ அந்தக்
காரணத்தை நீ மற்ற சிந்தனைகளுக்காக மறந்து விட்டதனால்
உனது இங்கேயான இருப்பு பிரிக்கப்பட்ட ஆன்மாவின் 405
மனிதத் தவறுகளை பூமியிலிருந்து கொண்டுவந்துள்ளது,
எனது இந்த அரிய படைப்பைப் பாழாக்கியது, ஊர்வசீ,
உனது உள்ளத்து விருப்பப்படியே நடக்கட்டும் என நான் சாபம் கொடுக்கிறேன்.
சுவர்க்கத்தின் பொழில்களிலிருந்தும் பொன்னிறச் சோலைகளிலிருந்தும்
நாடுகடத்தப்பட்டு நீ, நிலசம்பந்தமான கங்கை, துயரமிகு கம்பீரமான
மலைகள் அல்லது சச்சரவு நிறைந்த நகரங்கள் இவற்றில்
உனது காதலை அனுபவிப்பாயாக, ஆனால் இங்கு
அதைப்பற்றி மூச்சுக்கூட விடாமலிரு.
சாமர்த்தியத்தால் அமைதிக்கான இடங்களை நிறுவினோர்
எவரோ, அவர்கள் தங்கள் வழியில் நின்று வாழ்கிறார்கள்
புகழ்வாய்ந்த உலகின் விதிக்கப்பட்ட பாடுபடும் வேலைகளால்.”
அவர் நிறுத்தினார் அங்கு கடவுள்களின் அமைதிமட்டுமே இருந்தது.
பின் இந்த்ரன் விடையிறுத்தான், புன்னகைத்தபடி, இருப்பினும்,
மகிழ்ச்சியாக அல்ல:
“பரதரே, ஆகாயமான சுவர்க்கத்தின் பகுதிகளிலிருந்து
சுவர்க்கவாசியான ஒருவரை காலவரையறையின்றி நாடுகடுத்த முடியாது;
அது நன்மைக்கல்ல; அது விதிக்கப்பட்டது. நீர் இன்பமயமான
சோலைகளினின்றும், புனல்களினின்றும், நாடுகடத்தும் இவளுடைய 420
புன்னகைகளை நமது சுவர்க்கம் இழக்கும் அன்றோ?
புனல்களிலும் சோலைகளிலும் அவளால் மகிழ்ச்சி உண்டாவது
ஒரு ரகசியம் அல்லவே?அவளுடைய காதலை நீர் சோதித்தீரா?
தங்களது கலைப்படைப்பு அதனால் வீணானதால்
உலகை நீர் அழிக்கிறீர்களா?”
பரதர் விடையிறுத்தார், பெருங்கவிஞர் அவர்:
“எனது வாயால் ஒருமுறை கொடுக்கப்பட்ட சாபம்
மாற்றப்பட முடியாதது. விதிகளும் பாடல்களில் பிறக்கின்றன.
ஆனால் எல்லைகளைப் பற்றி நீர் பேசுவதனால் இயற்கையாக அவளுக்கு
வகுக்கப்பட்டுள்ள, அவள் மகிழ்ச்சியுடன் உலவும் கால எல்லையும் பிரிவும்
இயற்கை அதன் எல்லையை வகுத்துள்ளது, அதனால் அதன்
விதிவசமான முடிவுகள் தவிர்க்கவியலாதவை. ஏனெனில் விதி,
மங்கலான அதன் இருப்பு, இயற்கையாக உண்டானது 435
அதன் விளைவுகளை மாற்றமுடியாது. அவள்
கங்கையின் புனிதமான கரைகளில் உலவட்டும்.
அவளது தேசப்பிரஷ்டத்தை அவள் அங்கு கழிக்கட்டும்
பழமைபோல் பூமியைச் சீர் செய்ய, அவளது இனிய மாற்றத்தினால்.
சுவர்க்கமும் பொலிவுற்று வளரும் இன்னும் அழகாக, அவளுடைய திரும்பிவரும்
ஆனால் மாறிவிட்ட பாதங்களால்,- மாறிவிட்டாலும்
இன்னும் அழகாக, காருண்யத்தினால். ஏனெனில் அவள்
மென்மையாக ஒரு அன்னையின் கன்னங்களுடன் வருவாள்
நாணச்சிவப்பான திருமணக் கரங்களுடனும், மனிதனால் ஆசிர்வதிக்கப்பட்டும்
வெம்மையான களிமிகுந்த பூமியின் தொடுதலாலும்.”
அவர் கூறவும் ஊர்வசியும் அந்தப் பேச்சற்ற இடத்தினின்று
கடவுள்களின் சிந்தனைவாய்ந்த முன்னிலையினின்று
காற்றுவீசும் சுவர்க்கத்தின் மதியத்திலிருந்து விடைபெற்றாள். பசிய,
பெயரறியாத பழங்களைச் சுமந்து தாழ்ந்த தான் நன்கறிந்த மரக்கிளைகளின் கீழாக
ஆனந்தமான புல்தரைகளின், அருமையான மலர்களின், 450
அலைந்துதிரியும் நடைபாதைகளின் ஊடாக அவள் சேர்ந்தாள்
பவித்ரமான கங்கையை அது கற்களின்மீது ஓடுமிடத்தை;
அங்கு வேனிலின் கரையிலிருந்து கீழாக இறங்கி
ஒரு சிறுபொற்கரத்தால் நிர்வாணமான முழங்காலின் மீதுவரை
ஆடையைப் பிடித்தவாறு, அழகாக, ஒளி ஊடுருவும் அந்த நதியைக்
கடந்தாள், சுவர்க்கத்தின் வாயில் ஊடாக, உலகை நோக்கிச் செல்லும் சரிவில்
சிறிது தாமதித்தபடி. பின் கீழே நோக்கினாள்
ஏக்கம் நிறைந்த கண்களால் எல்லையற்ற வெளியை.
அவள்பின் நின்றன பச்சைநிற அழகான சிகரங்கள்
கானகத்தின் உச்சிகள் சிலிர்த்தபடி நீலநிறத் துடிப்புடன்
அமைதியான மேகங்களற்ற உயரங்களில் நடுங்கியவண்ணம்.
சுவர்க்கம் அவள்பின் இருந்தது, ஆனால் அவள்
அந்த சாஸ்வதமான ஆனந்தத்தின் இருப்பிடத்தை நோக்கினாளில்லை. 465
சூரியக்கதிர்களின் கீழாக அவள் பனியில் உயர்ந்தெழுந்த மலைகளை
வெறித்து நோக்கினாள், உலகின் வெறுமையான கம்பீரமான மலைகள்,
கன்னிமையுடனான பரந்த வனங்கள், குழந்தைகளான பெரும் அருவிகள்
வீரமுள்ள காலையின் சரித்திரமும், அடங்காத கலையின்
ராக்ஷஸத் தோற்றமும் கொண்ட இளமையான நகரங்கள்,
அவை இருக்கும் பிரம்மாண்டமான குன்றுகள்.
இவற்றை மகிழ்ச்சியான கண்ணிமைகளின் அடியினின்று பார்த்தாள்.
அவள் பார்க்கும்பொழுது திலோத்தமை வந்தாள்,
பளிச்சென சுவர்க்கத்தினின்று, அவளுடைய அமைதியான கையைப் பற்றினாள்,
மென்மையாக முணுமுணுத்தாள், “சகோதரி, நாம் போகலாம், வா.”
கீழே காத்துக்கொண்டிருக்கும் உலகை நோக்கி அவர்கள் சென்றனர்,
அப்பொன்னனைய மங்கையர், ஊமையாகிப்போன பள்ளத்தாக்குகளிலும்
பத்ரிகேஸ்வரைக் கடந்தும், சப்தமற்ற பனியினூடே
சப்தமின்றி வந்தாள் புரூரவஸிடம் ஊர்வசி.
ஏனெனில் இளையின் இருப்பிடத்தில் புரூரவஸ் தங்கியிருக்கவில்லை, 480
மகிழ்ச்சியான ஆடவரின் கூட்டத்திலும் கூட,
ஆனால் எல்லையற்ற, தனிமையான குன்றுகளில்.
ஏனெனில் அவன் ஒளிபொருந்திய செதுக்கப்பட்ட அதிகச்சுமை தாங்கும்
கட்டிட அரண்மனைத் தூண்களையும், சுவர்களையும்
கண்டு சலிப்புற்றான், அந்த நீளமான தெரு
யோசித்துக் கட்டப்பட்ட பரந்த கோயில், அந்தப் பெருமைவாய்ந்த
தூய இடத்தை
ஒலியால் காக்கும் கணீரென ஒலிக்கும் தாளங்கள்;
போரில் ஒலிக்கும் மனிதரின் காலடிச் சப்தங்கள், அரசர்களின் கூட்டங்கள்,
கூரான ஆயுதங்களின் மின்னல் ஒளிகள், ரதங்களின் குதூகலமான
பாய்ச்சல்கள், வேதங்களின் கம்பீரமான ஓதல்கள்
வர்த்தகர்களின் பிரகாசமான கடைகள், சப்தமிடும் தறிகள்
தனதான இசையை ஒலிக்கும் கொல்லனின் சுத்தியல்,
பொறுமையாக ஏரினை உழும் திடகாத்திரரான ஆடவர்
சலிக்காமல் பயங்கரமான மூச்சிரைத்தபடி அந்த மதியத்தில்.
இவற்றாலெல்லாம் அவன் சலிப்புற்றான் நரகம் எனும் 495
அரசபதவி, அதன் அதிகப்படியான இரும்பனைய உழைப்பு,
ஒரு கரத்தால் குடிகளின் சுகங்களைப் பாதுகாத்தல்,
இன்னொரு கரத்தால் ஓய்வற்ற எதிரியைத் தோற்கடித்தல்,
சமமான நியாயங்களை வழங்கும் கஷ்டங்கள்
கருணையுடன் நன்மைதரும் பணிகளை கடினமான அதிகாரத்துடன்
இணக்கமாகச் செய்தல்; ஒரு தந்தையின் முகம்,
ஒரு மனிதனின் இதயம், எஃகு போன்ற கரைக்கமுடியாத
அன்புள்ள சக்தி; உறக்கமற்ற இரவுகளின்பின்
பெரும் சன்மானத்திற்காக பெரும் உழைப்பைத் தருதல்,
அடிக்கடி வரும் தோல்விகள், பெருத்த வெற்றி,
மக்கள் காட்டும் அன்பின் பரிசான இனிய குரல்கள்.
ஒருகாலத்தில் அவனுடைய வாழ்வாக இருந்த இவற்றை,
அவன் இப்போது விரும்பவில்லை. அவனது விருப்பத்தை
அவை தக்கவைத்துக் கொள்ளவில்லை, உயிரோடும் இல்லை.
கடந்தகாலத்தின் வெளிறிய பெருத்த பிசாசுகள்
வருத்தந்தரத் தக்கதான பிடிவாதத்துடன் அவனை மறைத்தன,
இளஞ்சூடான வாழ்க்கையினின்றும் எதிர்காலத்தினின்றும் 510
தொலைதூரப் பொன்னிற சூரிய ஒளியிலிருந்து.
அதனால் அவன் இதயத்திலும் சிந்தனை நிறைந்த கண்களிலும்
குளிர்ந்த பனியில் ஒரு வெளிச்சம் தென்பட்டது, நாணம் இருந்தது கிழக்கின்
கன்னிமை மௌனத்தில், புயல் மெல்ல உயரும் கண்ணிமைகளில். ஆகவே
அவன் இளையின் அந்த நகரத்தையும் சமவெளிகளையும் விட்டுச் செல்கிறான்,
எங்கிருந்து பலமுள்ள சலனத்துடன் கங்கை கிழக்குநோக்கி வீரத்துடன்,
இளமையுடன், ஓடுகிறாளோ, கடினமான நாடுகளின் வேகமான தாய்,
ஆர்வத்துடன் வங்க விரிகுடாவில் தனது ஆவேசமான ஓட்டத்தை,
வயதை அடையாமல் இருக்கிறாளோ அங்கு.
அவன் குளிரான வடக்கை நோக்கிப் பயணித்தான், கடுமையான
மலைகளைத் தாண்டி, வடக்கே பத்ரிகேஷ்வரையும் தாண்டி
அவனது புனித யாத்திரையின் ஆறாம் மாதத்தில்
கடினமான ஒரு அமைதியான பிரதேசத்திற்கு வந்தான்
ப்ரம்மாண்டமான குவியலான ஒரு பிரதேசத்துள் 525
குப்புறப்படுத்துள்ள தொலைதூர மலைகள், பெரும் சிகரங்களை
அடக்கி வைத்துள்ள பெரும் முடிவற்ற பனிகள்,
பனி படர்ந்த பள்ளங்கள், பனி படர்ந்த சிகரம், பனி
விடாமுயற்சியுடன் படரும் சுவர்க்கத்தின் வடிவங்கள்,
தொலைதூர ஒளிரும் பள்ளத்தாக்குகளும், கொந்தளிப்பான பாறைகளும்,
கரிய, வெட்டப்பட்ட எடுப்பான ராட்சஸ செங்குத்துச் சரிவுகளும்
துணிகரமான சர்வத்திலும் வியாபித்த வெண்மை; கடைசியில்
ஏதோவொரு ரகசிய உலகிற்குள் செல்லும் ஒரு மாயமான பெரும்பள்ளம். 534


இரு காதலர்களின் பிரிவு அவர்கள் உள்ளங்களிலும் வாழ்விலும் ஏற்படுத்தும் வெறுமை, தனிமை, வாழ்க்கையின் மீதான வெறுப்பு, சலிப்பு, பற்றின்மை என அனைத்தும் இத்தனை நுட்பமாக, பொறுமையாக வேறெந்தக் கவிஞனாலும் விவரிக்கப்பட்டுள்ளதா என நான் அறியேன். முன்பே கூறியபடி, கம்பன் அழகாக சீதை, இராமன் இவர்களின் தாபத்தையும், சேக்கிழார் பெருமான், ஆம் அவரேதான் – சுந்தரர் பரவையார் இடையே ஏற்பட்ட காதலையும் அழகுற விவரித்துள்ளதைப் படித்தோர் அறிவர்!

‘ஆனால் இது, அவள் காதலிப்பது, பரவசமான, வேதனைதரும், தன்னுள் லயிக்கும், ஒரு மேன்மையான மனிதத் தோற்றமே,’ எனத் தொடங்கி அடுத்த 15 வரிகளுக்கும் மேலாக அவளுடைய நடவடிக்கைகள் அடைந்த மாற்றத்தை அழகாக விவரிக்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

'ஒரு இன்பமான ஆயாசம் அவளின் செயல்களில்
	அசைவுகளில்; அவளுடைய ஆனந்தமான இமை மயிர்கள் ஒரு 
	சுமைகொண்டது போல குவிந்தன; அவளுடைய தினசரி செயல்களும்
	ஒரு சிலை வாழ்வையே நடிப்பது போன்றிருந்தது.
	பேரரசர்களுடையதைப்போல ஏகமனதுடன் இல்லை.'			360

அருகேயிருந்து கண்ட சங்ககால தோழியைப்போல், புலவனின் கவித்துவம் ததும்பும் கவிதை வரிகள் இவை. உள்வாங்கிப் படித்தால், காதலை ஒரு அழகான, அதிசயமான உணர்வாக மதித்தால், இதோடு ஒன்றிப் போய்விடலாம். வழிமொழியலாம்.

இதில் ‘மானிடக்காதல் உணர்வுகள் சம்பந்தப்பட்டது. புறத்தோற்றம் ஒரு கருவியே!’ எனும் பொருள் தொக்கி நிற்பதனையும் உணரலாம்.

'உனது இங்கேயான இருப்பு  பிரிக்கப்பட்ட ஆன்மாவின்			405
	மனிதத் தவறுகளை பூமியிலிருந்து கொண்டுவந்துள்ளது,'

மனிதத்தவறுகள் என்கிறார் பரதமுனி. தேவர்கள் தவறே செய்யமாட்டார்களோ என்ன?! ஊர்வசி தன் காதலை அனுபவிக்க கங்கை, துயரமிகு மலைகள், சச்சரவு நிறைந்த நகரங்கள் என பூமிக்குச் செல்லுமாறு சபிக்கப்படுகிறாள். சுவர்க்க வாழ்வு என்ன எனக் கேட்கத் தோன்றுகிறது. முள்ளிருப்பதனால்தான் ரோஜாவின் அருமை உயர்வாகத் தெரிகிறது. அதுபோல, இன்பமும் துன்பமும் நிறைந்ததே உலகவாழ்க்கை! இது அப்பெரிய கற்றுணர்ந்த முனிவர்களுக்குத் தெரியவில்லை என ஸ்ரீஅரவிந்தர் கூறுவதுபோல எனக்குத் தோன்றியது.

ஊர்வசியின் பூமியை நோக்கிய பயணம் அவளால் உற்சாகமாக ஒரு சிறுமியின் ஆனந்தத்துடன் மேற்கொள்ளப்படுகிறது- இதுவே ஸ்ரீ அரவிந்தரின் விளக்கம்.

சுவர்க்கம் அவள்பின் இருந்தது, ஆனால் அவள்
	அந்த சாஸ்வதமான ஆனந்தத்தின் இருப்பிடத்தை நோக்கினாளில்லை.	465

உற்சாகமாக தன் பயணத்தைத் தொடர்கிறாள். அனைத்தையும் ஆச்சரியமும் வியப்பும் மகிழ்ச்சியும் பொங்க நோக்குகிறாள்.

இது இவ்வாறிருக்க புரூரவஸ் அவளையே எண்ணி ஏங்குவதனையும் பலப்பல சொற்றொடர்களில் காதலின் வீச்சையும், அலைக்கழிக்கும் ஏக்கத்தையும், அவன் தனது அரச கடமைகள் ஒரு சுமையாகிப் போனதெனக் கூறுவதன்மூலம் புரிய வைக்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

தனிமையை நாடிச்செல்லும் காதலனாக, என்ன செய்வதென்று தெரியாத நிலையில் தத்தளிக்கும் ஒரு சாதாரண மானுடனாக அவனைக் காட்டுகிறார். கதை தெரியாவிடில் அவன் நிலைமைக்கு நாம் மிகவும் வருந்துவோம். இருப்பினும் வருந்தாமலிருக்க இயலவில்லை.

தொடர்ந்து பார்ப்போம்.

Series Navigation<< ஊர்வசி காதலில் கண்விழித்தாள்!இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.