
கோடைக்கால அந்தி முடிகிறது
இனி புதிதாக
பூப்பெய்திய
மழை இரவு
தானாக சிரித்தபடி
தரை இறங்கி வரக்கூடும்
இரயில் நிலைய வாயிலில்
அரசமரத்தின் கிளைகளில்
அனைத்தும் சொல்லி முடித்து
அதனதன் குஞ்சுகளுடன் கரும்பச்சையை கட்டியணைத்தபடி
கோடை வெக்கை குடித்த
காக்கைகளும் குருவிகளும் தூங்கத் துவங்கிவிட்டன
இந்த கோடைகாலம்
இன்றோ இன்னும் சில தினங்களிலோ
முடிந்து போகலாம்
எவ்வித குறையுமில்லாமல்
அவை அனைத்தும்
ஒரு மழைக்காலத்திற்குள்
இரகசியம் ஏதுமின்றி
இடம்பெயர்ந்து செல்லும்
நான் தான்
என் வாசலில்
சேற்றில் புதைந்தபடி
கிடக்க போகும்
மரமல்லியை நினைத்துக்கொண்டிருக்க வேண்டும்
என் வீட்டில் வளரும்
நாய்குட்டிகளுக்கு
தகுந்த இடம் பார்க்க வேண்டும்
மனைவியிடம் எல்லாவற்றிற்காகவும்
கூடுதலாக சண்டையிட வேண்டும்
மழைக்காலம் திரும்பி வரும்போதெல்லாம்
என்
இரகசியத்தின்
சுவர்கள் இற்று விழுவதை
தாங்க முடியாமல்
அவ்வபோது
அழவும் வேண்டும்
2.
எடுத்தெறிய எத்தனிக்கும்
எல்லா கல்லிலும்
எதோ ஒரு மோன சிலை
சட்டென்று
அதை தடவிப் பார்த்து
தரையில் மெல்ல விடுவித்து
செல்கிறேன்
3.
நான்
எனக்கென்று இருந்த ஒளியின் பாதைகளை மென்று தின்று விட்டேன்
கண்கள் இரண்டும் வெறும் பொந்துகளென
கொண்ட மிருகங்கள்
கொழுத்த கால்களுடன்
மந்தை மந்தையாக என் உச்சி மேட்டிலிருந்து
இறங்கி வருகின்றன
அவற்றின் கால் நகங்களில்
என் கருணை
கரும் சிவப்பான இரத்தமென சொட்டுகிறது
நான்
அந்த மிருகங்களில் ஒன்றென
மாற விரும்புகிறேன்
எல்லா பாவனைகளையும் கைவிட்டு
முழு மிருகமென