அதிரியன் நினைவுகள் -17

This entry is part 17 of 22 in the series அதிரியன் நினைவுகள்

பெண்களின் நிலை  விசித்திரமான மரபுகளால் தீர்மானிக்கப்படுகின்றன:  இம்மரபுகள் பாதுகாக்கப்பட்டவை அதேவேளை நெறிமுறைகளுக்கும் உட்பட்டவை,  பலவீனமாவை அதேவேளை சக்திமிக்கவை, இகழ்ச்சிக்குரியவை என்கிறபோதும் மிகுந்த மரியாதைக்குரியவை. பெரும் குழப்பத்திற்குரிய இவற்றின் உபயோகங்களில் இயற்கை உண்மைக்கு மேலாக சமூக உண்மை இருப்பது தெளிவு ; அன்றியும் எதிரும் புதிருமான இப்பண்புகளை, ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திக் காண்பதும் எளிதல்ல. ஆனால் எப்படி இருக்கவேண்டுமோ அதற்கு மாறாக எங்கும் இப்படியொரு களையவொண்ணாத குழப்பநிலை, மொத்தத்தில், இங்கு பெண்களும் தாங்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படி இருக்கவே விரும்புகிறார்கள், மாற்றத்தை விரும்புவதில்லை எதிர்க்கிறார்கள் அல்லது அம்மாற்றத்தை தங்கள் சொந்த நோக்கத்திற்காக, சொந்த நலனுக்காக மட்டுமே உபயோகிக்கின்றனர். பெண்களுக்கு இன்றுள்ள சுதந்திரம், பண்டைய காலத்தினும் பார்க்க மிகவும் சிறந்தது அல்லது  வளமான காலத்தின் சுலப வாழ்க்கைக்குரிய ஒர் அம்சம்சமாக இன்றது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்நிலையில் நேற்றைய அடிப்படையான உண்மைகளும், தவறான கணிப்புகளுங்கூட இவற்றால் அதிகம் பாதிக்கப்படவில்லை. உண்மையோ பாசாங்கோ எதுவாயினும், நமது இல்லறப் பெண்மணிகளுக்குத் தொடர்ந்து அளிக்கும் அதிகாரபூர்வ பாராட்டுகளும், கல்லறை வாசகங்களும் இப்பெண்களிடம் நமது குடியரசு எதிர்பார்க்கிற கடும் உழைப்பு, கற்புடமை, அடக்கம் ஆகிய பண்புகளைப்பற்றி மட்டுமே பேசுகின்றன. அன்றியும், உண்மையான இம்மாற்றங்கள் அல்லது அப்படி நம்பப்படுபவை சாமானிய மக்களிடம் நிரந்தரமாக காண்கிற ஒழுக்கம் சார்ந்த உரிமத்திலும், மேட்டுக்குடிகளிடம் எப்போதும் காண்கிற பாசாங்கு நாணத்திலும் போலி பயிர்ப்பிலும், எந்தவகையிலும் மாற்றத்தைக் கொண்டுவர இயலாத நிலையில், இவற்றின் ஆயுளை காலம்மட்டுமே தீர்மானிக்க முடியும்.   அடிமைகளைப்போலவே  பெண்களின் பலவீனமும் அவர்களுடைய உரிமைத் தகுதிப்பாட்டினைப் பொறுத்தது.  இவர்களுடைய வலிமை சிறு விவகாரங்களை வஞ்சம் தீர்த்துக்கொள்வதைப் பார்க்கிறேன், காரணம் அங்கே அவர்களுடைய ஆற்றலை வரம்பின்றி பிரயோகிக்க முடியும். வீட்டிற்கு வெளியே இப்படியிருக்க, உள்ளே அதிகாரம் செலுத்தாதப் பெண்களைக் காண்பது அரிது.  இங்கே அவர்களோடு சிற்சில சமயங்களில் கண்காணிப்பாளர், சமையற்காரர், அடிமைபோன்றோரும் சேர்ந்துகொள்கின்றனர். நிதிவிவகாரத்தில் பெண்கள் எப்போதுமே ஒருவகையில் பாதுகாவலர் என்கிற பொறுப்பிற்கு சட்டபூர்வமாக தங்களை ஒப்படைத்துக் கொள்கின்றனர். நடைமுறைச் சாட்சியத்திற்கு உதாரணம் சொல்லவேண்டுமெனில் உரோம் நகரின் புறநகர் பகுதியான சுபுரா(Subura) பகுதியிலுள்ள ஒவ்வொரு சிறிய கடையிலும் பறவைகள் அல்லது பழ விற்பனையாளன் மனைவி  கம்பீரமாக பணம்செலுத்துமிடத்தில் அமர்ந்திருக்கக் காணலாம். அத்தியானூஸ் மனைவி தங்கள் குடும்பச் சொத்துக்களை சாதுர்யமிக்க வணிகன் ஒருவனோடு சேர்ந்து நிர்வகிக்கிறாள். சட்டங்கள் நடைமுறைகளோடு முடிந்தவரை இசைந்திருக்கவேண்டும். பெண்களுக்கு நிர்வாகத்தில் பெரியஅளவில் சுதந்திரம் அளித்தேன், அதன்மூலம் தங்கள் செல்வத்தைப் பிறருக்கு ஆவணப்படுத்தவும் இயலும், தங்களுக்குரியதை மரபுரிமையாக பெறவும் முடியும். எந்தவொரு பெண்ணிற்கும் அவளுடைய இசைவின்றி மணம் செய்யக்கூடாதென வலியுறுத்தினேன், அவள் சம்மதமற்ற மணத்தின் பெயரால் நடக்கும் அசிங்கங்களும் பிறவற்றிற்கு ஈடானதுதான். மணம் என்பது மிகவும் முக்கியமான விவகாரம், அது பெண்களின் முழுமையான விருப்பத்துடன் நடைபெறுவதே நியாயமானது. 

நமது கேடுகளில் ஒருபகுதி  கனத்த எண்ணிக்கையிலிருக்கும் வெட்கக்கேடான பணக்காரர்கள் அல்லது நம்பிக்கையை முற்றாக இழந்த வறியவர்களிடமிருந்து வருகிறது. அதிர்ஷ்டவசமாக, இந்த இரு துருவங்களுக்கும் இடையில் ஒரு சமநிலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.  பேரரசர்களும், விடுதலைப் பெற்ற அடிமைகளும் பெருஞ்செல்வத்தில் மிதந்த காலம் மலையேறிவிட்டது. திரிமால்ச்சியொவும்(Trimalcion), நீரோவும்(Néron) இறந்துவிட்டனர். ஆனபோதிலும், உலகின் பொருளாதாரத்தை அறிவுபூர்வமான முறையில் ஒழுங்கிற்குள் கொண்டுவர அனைத்தையும் சீரமைப்பது அவசியம். ஆட்சிக்கு வந்ததும்,  சக்கரவர்த்தியின் பொதுநிதிக்கு, நகரங்கள் தாமாக முன்வந்து அளிக்கும் பங்களிப்புகளை வேண்டாமென்று மறுத்தேன், என்னைப் பொறுத்தவரை இதொரு மறைமுகத் திருட்டு. “வருங்காலத்தில் நீயும்(மார்க் ஒரேல்) இதனைப் பின்பற்றவேண்டும்!”, தனிமனிதர்கள் அரசாங்கத்துக்கு செலுத்தவேண்டிய கடனை முற்றாக நீக்குவது ஆபத்தானது, போர்க்கால நிதி விவகாரத்தில்  பத்து வருடங்கள் கவனத்தை செலுத்தியபின் அதிலிருந்து  விடுபட்டு, முற்றிலும் வேறானதொரு சகாப்தத்தை துவக்குவது அவசியமாயிற்று. நமது பணமதிப்பு கடந்த ஒரு நூற்றாண்டாக  மிகவும் அஞ்சும்வகையில் சரிந்தது. இருப்பினும் நமது தங்கக் காசுகளின்  நாணய மாற்றுவீதம் உரோமாபுரியின் நிலைபேறுடைமை மதிப்பீட்டை கூட்டக் காரணமாயிற்று. இந்நிலையில்  அவற்றின் மதிப்பிற்கும், எடைக்கும் நிகரான பொருட்களைக்கொண்டு அப்பொற்காசுகளின் கணக்கை நேர்செய்வது நமது கடன். நம்முடைய நிலங்களில் விவசாயம் திட்டமிடலின்றி நடைபெறுகிறது. முன்னுரிமைபெற்ற மாகாணங்களன்றி, எகிப்து, ஆப்பிரிக்கா, டஸ்கனி, இவை தவிர வேறு சில பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் கோதுமை, திராட்சை முதலானவற்றை நன்கு பயிர்செய்யத் தெரிந்த  விவசாய சமுதாயத்தை வளர்த்தெடுக்க தெரியும். எனது அக்கறைகளில் தலையாயது இப்படியான விவசாய சமூகத்தின் முன்னேற்றத்திற்கு உதவுவதாக இருந்தது, அடுத்து இச்சமுதாயத்திலிருந்து  சிறந்த பயிற்சியாளர்களைத் தேர்வுசெய்து, அவர்களை விவசாயத்தின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறவர்கள், புதியமுறைக்குத் தயங்குகிறவர்கள், விவசாயத்தில் ஞானசூன்யமாக இருக்கிறவர்கள் ஆகியோருக்குப் போதிக்க அனுப்பிவைத்தேன். பொது சொத்தின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத பெரும் நிலவுடமையாளர்கள் தங்கள் விவசாயநிலத்தைத் தரிசாகப் போட்டுவைத்திருந்தது பெரும் பிரச்சனையாக இருக்க அதனை முடிவுக்குக் கொண்டுவந்தேன். அதன்படி, கடந்த ஐந்துஆண்டுகளாக விவசாயத்திற்கு உட்படுத்தாத  நிலங்கள் அனைத்தும் உழுதுப்பயிரிடும் விவசாயிக்குச் சொந்தமாயின. கணிமச் சுரங்கங்கள் பயன்பாட்டிலும் இம்மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  நமது செல்வந்தர்களில் பெரும்பாலோர் பெரும் நன்கொடைகளை அரசாங்கத்திற்கும், பொது நிறுவனங்களுக்கும், மன்னருக்குத் தனிப்பட்ட வகையிலும் வழங்குகிறார்கள். இப்படி அளிப்பவர்களில் ஒரு சிலர் நல்ல உள்ளத்தோடு வழங்கியபோதிலும், பெரும்பாலோர் ஆதாயம் கருதி அளிப்பவர்கள், ஆயினும் இவர்கள் அனைவருக்குமே ஏதோ ஒருவகையில் பலன்கள் இருந்தன. ஆனால், அவர்களின் தாராளத்தினை, அது வெளிப்படுத்திய ஆடம்பரத்திலிருந்து விடுவித்து வேறுவகையான வடிவங்களில் அவற்றை காணவேண்டுமென்பது என்னுடைய விருப்பம், அதன்பொருட்டு இதுநாள்வரை எப்படி தங்கள் பிள்ளைகளுக்கென ஒருவர் பாடுபட்டு சொத்துக்களை விவேகத்துடன் பன்மடங்காக பெருக்குகிறாரோ அதுபோல தான்சார்ந்த சமுதாயத்திற்காகவும் உழைக்கவேண்டுமென அவர்களுக்குப் போதித்தேன் . இப்படியொரு உணர்வுடனேயே நான் ஏகாதிபத்தியக் களத்தின் நிர்வாகத்தைக் கையிலெடுத்தேன். பேராசைக்காரன் ஒருவனிடம் கிடைத்த தங்கப்பானைக் கதையாக பூமிவிஷயத்தில் நடந்துகொள்ள எந்தவொரு மனிதனுக்கும் உரிமை இல்லை.

நமது வணிகர்கள் சிற்சில சமயங்களில் சிறந்த புவியியலாளர்களாகவும்,  சிறந்த வானியலாளர்களாகவும், நன்கு  கற்றறிந்த இயற்கை ஆர்வலர்களாகவும் இருக்கின்றனர். அதுபோல  மனிதர்களைப் புரிந்துநடக்கும் மனிதர் கூட்டத்தில் வங்கியாளர்களையும் நாம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இப்படியான தனித் திறமைகள் எங்கிருந்தாலும் அவற்றை நான் பயன்படுத்திக்கொள்வேன். ஆக்ரமிப்புகளுக்கு அல்லது அத்துமீறல்களுக்கு எதிராக ஒட்டுமொத்த  சக்தியையும் திரட்டிப் போராடியுள்ளேன். கப்பல் உரிமையாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு காரணமாக வெளி நாடுகளுடனான கட்டுப்பாடுகள் தளர்ந்து பரிவர்த்தனை பெருகியது, விளைவாக பேரரசு வசமிருந்த விலையுயர்ந்த கப்பல்களின் அநாவசிய செலவுகளை குறைக்க முடிந்தது. இத்தாலி ஒரு தீவு, தனக்கு வேண்டிய தானியத் தேவைகளைத் தாமே நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில், தனது வாழ்வாதாரத்திற்காக  கீழை நாடுகள் மற்றும், ஆப்ரிக்க இறக்குமதிகளை நம்புகிறது, அதன் பொருட்டு  கோதுமை தரகர்களைச் சார்ந்திருக்கவேண்டிய கட்டாயம். இச்சூழலில், இதிலுள்ள இடர்ப்பாடுகளிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள,  இத்தாலிய வணிகர்களை அரசாங்க அலுவலர்கள்போலப் பாவித்து, அவர்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டியிருந்தது. நமது பழையமாகாணங்கள் சமீப ஆண்டுகளில் வளம்பெற்றுள்ளன, இவ்வளத்தை மேலும் அதிகரிக்க முடியாது, இந்நிலையில்  இவ்வளம்  ஹெரோடெஸ் அட்டிக்குஸ்(Hérode Atticus) வங்கிக்கும், ஒரு கிரேக்க கிராமத்தின் எண்ணெய் வளம் அனைத்தையும் ஏகபோகமாகத் தன்பொறுப்பில் வைத்திருக்கும் ஒரு சிறிய ஊக வணிகருக்கும் மட்டுமே சொந்தமாக முடியாது,  அனைவரையும் அப்பலன் சென்றடைவது அவசியம். பானை வயிறுடனிருக்கும் ஓர் ஆபாச கூட்டம், ஒரு மதுக்கடை தவறாது, அங்கிருக்கும் சேவை மேசைகளில் முழங்கைகளை ஊன்றி, ஓயாமல் தங்களுக்கு ஒவ்வாத ஊர்அரசியலை கொச்சைப்படுத்திப் பேசுவதற்கென்றே நகரங்களில் கூடுகின்றது, இப்படித் திரளும் இடைத்தரகர்களின் எண்ணிக்கையைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளைக் கடுமையானவையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. பஞ்சக்காலங்களில் ஏற்படும் தாறுமாறான விலைவாசி உயர்வை,  அரசாங்க களஞ்சியங்களிலிருந்து தானியங்களை சற்று  நியாயமான விநியோகம் செய்வதால் கட்டுப்படுத்த முடிகிறது, ஆனால் இவ்விஷயத்தில் குறிப்பாக உற்பத்தியாளர்களைப் பெரிதும் நம்பியிருந்தேன், அதுபோல திராட்சைரசத்திற்கு கொலுவா(Gaulois) மக்களையும், மீன்களுக்கு போந்த்தெ யூக்ஸின் (Pont Euxin -இன்றைய கருங்கடல்) மீனவர்களையும் நம்பினேன். இம்மீனவர்களின் அற்ப வருவாயை கவியார்  மீன்களின் கருச்சினைகள் மற்றும் கருவாடு இறக்குமதியாளர்கள் விழுங்கிக்கொண்டிருந்தனர், தவிர இந்த ஏழை மீனவர்களின்   உழைப்பிலும், எதிர்கொண்ட அபாயத்திலும் இலாபமடைந்தும் அவர்கள்தான். மகிழ்ச்சியான எனது வாழ்நாட்களிலொன்று  ஆர்க்கிபெலாகோ(Archipelago) என்கிற தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த மீகாமன்களுக்கு இட்டக் கட்டளையினால் கிடைத்தது, அவர்களைத் தங்களுக்குள் ஒன்றிணைந்து, நகரக் கடைக்காரர்களிடம் நேரடியாக தங்கள் வர்த்தகத்தைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். வேறெப்போதும் இப்படியொரு  பயனுள்ள அரசனாக இருந்த உணர்வு எனக்கில்லை. 

பெரும்பாலும், அமைதி என்பது ஒரு இராணுவத்திற்கு இரண்டு யுத்தங்களுக்கு இடையில் வாய்க்கும் பதற்றத்தோடுகூடிய செயலின்மைக் காலம்; இச்செயலற்றதன்மை அல்லது ஒழுங்கின்மைக்கு மாற்று, எதிர்கொள்ளவிருக்கும்  யுத்தமொன்றிற்கு  வேண்டிய ஆயத்தங்களைச் செய்தலும், பிறகு சம்பந்தப்பட்ட யுத்தத்தில் பங்கேற்றலும் ஆகும். இந்த நடைமுறைகளை நான் உடைத்தேன்; இப்படியொரு அமைதி நிலையிலிருக்கிற இராணுவத்தை சுறுசுறுப்புடன் வைத்திருக்க என்னிடம் பலவழிமுறைகள் இருந்தன, அவற்றிலொன்று, நமது சைன்ய கோட்டங்களுக்கு தொடர்ந்து செல்வது. படைகள் பரவலாக முகாமிட்டு  அல்லது  ஓரிடத்தில் குவிக்கப்பட்டு எப்படி இருந்தாலும்;  அவ்விடம் சமதளமோ அல்லது  மலைப்பகுதியோ, நட்டநடு பாலைவனமோ அல்லது காட்டின் விளிம்போ எதுவாயினும் அவர்களெக்கென்றிருந்த பாதுகாப்பு கோட்டங்கள், போர்த்திற செயற்பாடுகளுக்கான களங்கள், பிற குடில்கள் இவற்றுக்கிடையில் வேறுபாடுகளில்லை. குறிப்பாகப் பனிப்பொழிவைத் தாங்கிக்கொள்ளும் வகையில்கொலேன்(Cologne) பகுதியிலும், மணற்புயலை எதிர்கொள்ளப்போதுமான ஆப்ரிக்க லம்பாயெசிஸ்(Lambaesis) பகுதியில் அமைத்துக்கொண்ட  படைமுகாம் கூடாரங்களுக்கிடையில் பேதமில்லை. இவையன்றி உபயோகமற்ற பொருட்களுக்கென்று கிட்டங்கிகள் இருந்தன, அவ்வாறான பொருட்களை விற்பதற்கும் பின்பு அனுமதிக்கப்பட்டது; அதுபோல படைமுகாம்களில் அதிகாரிகளுக்கென சிறுகூடமொன்றிருந்தது, அங்கு அதிகாரிகள் கூடுகிறபொழுது நாட்டின் சக்கரவர்த்தி என்கிறவகையில் நான் கலந்துகொள்வேன்,  அந்த அதிகாரிகள் வட்டமும், மேலே சொல்லபட்ட கிட்டங்கியும் கூட ஒன்று போலவே இருந்தன. ஆனாலிந்த ஓர்முகத்தன்மை வெளியில் மட்டுமே, இப்படைக் குடில்களும், பிறவும் பதிலீட்டுக்குரியவை, அதாவது இதற்குள்ளிருக்கும் மனிதர் கூட்டம் ஒவ்வொருமுறையும் அதிகாரிகளைத் தவிர பிறமனிதர்கள் வேறாக இருக்க வாய்ப்புண்டு. பல்வேறு இனப்பிரிவைச் சேர்ந்த இவ்வீரர்கள் அவரவர் சிறப்பு அம்சங்களையும்; தனித்துவமான ஆயுதங்களையும்; காலாட்படை, குதிரைப்படை, விற்படை ஆகியவற்றிற்குரிய மேதைமையையும் நமது இராணுவத்திற்கென பங்களிப்பு செய்கிறவர்கள். இந்த வேற்றுமையில் ஒற்றுமை அம்சத்தை திரும்பவும்காண எனக்கும் வாய்ப்பு கிடைத்தது, எனது பேரரசின் குறிக்கோளும் இதுவே.   படை வீரர்களுடைய போர் முழக்கங்களையும்,    அணிவகுப்பு கட்டளைகளையும் அவர்களுடைய மொழியில் இருப்பதற்கு அனுமதித்தேன்; காட்டுமிராண்டி மனிதர்களை வென்று, சிறைபிடித்திருந்த பெண்களை நம்முடைய வீரர்கள் மணமுடிக்க அனுமதித்து,   அவர்களின் குழந்தைகளை சட்டப்பூர்வ பிரஜைகளாக்கினேன். அவ்வகையில் முகாம் வாழ்க்கையின் காட்டுமிராண்டித்தனத்தை மென்மையாக்க முயற்சித்தேன், தவிர அப்பாவியாகவிருந்த எளிய  மனிதர்களை மனிதர்களாக  நடத்தினேன். அவர்கள் முறையாக செயல்படுவது குறைவதற்கு வாய்ப்புண்டென்கிற அச்சம் தலைகாட்டியபோது  அவர்கள் பாதுகாப்பில் சில பிரதேசங்களை ஒப்டைத்தேன். இராணுவத்திற்குப் பிராந்திய அடையாளங்களை கொடுக்கவும் நான் தயங்கவில்லை. நமது ஒவ்வொரு குடிமகனும் தனக்குரிமையான நிலத்தையும் பண்ணையையும் தற்காத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக நமது குடியரசின் ஆரம்ப காலத்தில் இருந்ததுபோன்றதொரு குடிமக்கள் படையை பேரரசு முழுக்க திரும்ப ஸ்தாபிப்பேன் என்ற நம்பிக்கையும் என்னிடத்தில் இருந்தது.  நமது படைப் பிரிவில் குறிப்பாக தொழில்நுட்பத் திறனை வளர்க்கவும் கடுமையாக உழைத்தேன்; நாகரீகத்தின் ஒர் உந்துசக்தியாகவும், குடிமுறை வாழ்க்கையின் மிக நுட்பமான சாதனங்கள் தேய்ந்திருக்க அதற்கு வலுசேர்க்கும் வகையிலும்  மெல்ல மெல்ல அதனுடன் பொருந்துகிற ஆப்புக் கட்டையாகவும் இராணுவ மையங்களைப் பயன்படுத்த எண்ணினேன், காடு, வனப்பாலை(steppe), சதுப்பு நிலங்கள் முதலான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், நவ நாகரீகத்தில் தோய்ந்த நகரமக்களுக்கும் இடையில் ஓர் இணைப்பாகவும்;   காட்டுமிராண்டிகளுக்கு ஓர் ஆரம்பப்பள்ளியாகவும், கிரேக்க கல்விமான்கள், உரோமின் சுகமான வாழ்க்கைக்குப்பழகிய இளம் குதிரைவீரர்கள், ஆகியோருக்குச் சகிப்புத்தன்மையையும் பொறுப்புணர்வையும் போதிக்கிற பள்ளியாகவும்  இராணுவம்  மாறியது.  வாழ்க்கையின் வேதனை பக்கங்களை மட்டுமின்றி, அதன் எளிதான தந்திரமிக்க பக்கங்களையும்  தனிப்பட்ட முறையில் அறிந்தவன் நான். சிறப்பு சலுகைகள் ரத்து செய்ய்யப்பட்டன; அதிகாரிகளுக்கு அடிக்கடி விடுப்பு வழங்குவது  தடை செய்யப்பட்டது; முகாம்களில் அவர்களுக்கென்று விருந்து கூடாரங்கள், இன்பமாக பொழுதுபோக்கும் மண்டபங்கள், மிகவும் செலவு பிடித்த தோட்டங்கள் இருந்தன, அவற்றையெல்லாம் அகற்றச் செய்தேன். அதுபோல உபயோகமற்று  சில கட்டிடங்கள் இருந்தன, அவை   மருத்துவ மனைகளாகவும், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் இல்லங்களாகவும் மாற்றப்பட்டன. மிகவும் இளம் வயதில் படைக்கு வீரர்களைத் தேர்வு செய்வது, முதியவயதுவரை அவர்களை படையில்  வைத்திருப்பது என்கிற வழக்கு  இருந்தது. இந்நடைமுறை இலாபகரமானதென்றாலுங்கூட மிகவும் கொடூரமானது, எனவே இவற்றையெல்லாம் ஒழிக்கவேண்டியிருந்தது. « அகஸ்ட்டஸ்(Auguste) ஒழுங்குமுறை »  நூற்றாண்டின் மனிதநேயத்தில் பங்கேற்க வேண்டும்.

சக்கரவர்த்திகளாகிய நாம் சீசர்கள் என்பதைக் காட்டிலும் அரசு ஊழியர்கள் என்பதைக் கவனத்திற்கொள்ளவேண்டும். ஒருமுறை தன் குறையைத் தெரிவிக்க பெண்ணொருத்தி வந்திருந்தாள், அதனை முழுமையாக கேட்க இயலாதென்றேன்,  தன்னுடைய   குறையைக் கேட்க நேரமில்லை என்றால், நாட்டை ஆளவும் எனக்கு நேரம் போதாதெனக் கத்தினாள். அவளுக்கு நான் தெரிவித்த காரணம் முறையான பதிலல்ல.  ஆயினும், நேரம் எனக்குப்  போதவில்லை என்பது உண்மை. பேரரசு வளர வளர,  அதிகாரத்தின் விதவிதமான அம்சங்கள் அனைத்தும்  நிர்வாகத்தின் தலைமைக் கரங்களில் குவிகின்றன அவசரகதியில் இயங்கவேண்டிய இந்த மனிதன் தம்முடைய பணிகளில் ஒரு பகுதியை பிறரிடம் ஒப்படைக்க வேண்டிய  அவசியம் உள்ளது; அவனது மேதைமையென்பது மேலும்மேலும், அவனைச் சுற்றியுள்ள நம்பிக்கைக்குரிய ஊழியர் ஒருவரைச் சார்ந்தது ஆகிறது. குளோடியஸ்(Claude) அல்லது நீரோ செய்த மிகப்பெரியகுற்றம் பொறுப்பின்றி தங்களுடைய அடிமைகளையும், அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சுதந்திர மனிதர்களையும் எஜமானரின் பிரதிநிதிகள், ஆலோசகர்கள், முகவர்கள் பொறுப்பினை சுயமாக எடுத்துக்கொள்ள அனுமதித்து நடமாட விட்டதாகும். புதிய அதிகாரத்துவத்தின் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது, அவர்களுக்குப் பயிற்சி தருவது, பின்னர் எந்தப் பணிக்கு யார்பொருத்தம் என்பதைக் கண்டறிந்து முடிந்தவரை பணிக்குரிய திறமைசாலிகளை நியமிப்பது; அரசு நிருவாகத்தின் பொருட்டு சார்ந்திருந்த இந்த  நடுத்தர வர்க்கத்திற்கு உபயோகமான வேலைவாய்ப்புச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித்தருவதென என் வாழ்க்கை மற்றும் பயணங்களின் ஒரு பகுதி கழிந்தது. நாட்டின் நிருவாக அலுவல்களைக் கவனிக்கிற இராணுவத்தின் இந்த ஒருபகுதியினர் விஷயத்தில் ஆபத்தைக் கண்டேன்,  இரத்தினச்  சுருக்கமாக ‘நிர்வாக மரபுகளில் மாற்றத்தைக் கொணராத அமைபு’ என இத்துறையை சுருக்கமாக அழைக்கலாம். பல நூற்றாண்டு உபயோகத்திற்கென பூட்டப்பட்ட  இதன் பற்சக்கரங்கள் நாம் கவனமாக இல்லாவிட்டால் சிதைந்துவிடும்; இயக்கத்தை நிறுத்தாமல் சரி செய்வதும், தேய்மானத்தை அனுமானித்து உரிய நேரத்தில் பழுது பார்ப்பதும் எஜமான்  பொறுப்பாகும்.  வாரிசுகள் தேர்வுக்கு சக்கரவர்த்திகளாகிய நாம், காலவரையற்ற கவனத்தை எடுத்துக்கொண்டாலும்  பெரும்பாலானவர்கள் சராசரி ஆட்சியாளர்களாகவே இருக்கிறார்கள்,  நூற்றாண்டுக்கு ஒரு முறை இவர்களில் ஒரு பைத்தியக்காரனும் ஆட்சி செய்ய வாய்ப்புண்டு,  என்பதே அனுபவம். நெருக்கடியான சமயங்களில், இந்த நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அலுவலகங்கள் அரசாங்கத்தின் அத்தியாவசிய பணிகளைக் கவனிக்கவும்; விவேகத்திற்குரிய இரு பேரரசர்களுக்கிடையில் உருவாகும் தற்காலிக வெற்றிடத்தை (சிற்சில சமயங்களில் மிக நீண்ட காலத்திற்கு) இட்டு நிரப்பவும் வேண்டியுள்ளது. சில பேரரசர்கள் யுத்தத்தில்வென்ற காட்டுமிராண்டிகள் பின்தொடர வலம்வருவார்கள், அக்காட்டுமிராண்டிகள் கழுத்து, பிற காட்டுமிராண்டிகளின் கழுத்தோடு சங்கியோடு இணைந்த வளையங்களால் பிணைக்கப்பட்டிருக்கும். என்னோடு வருகிறவர்கள் வேறுவிதம், அவர்கள் என்னால் பயிற்றுவிக்கபட்ட உயர்மட்ட  அரசு ஊழியர்கள். அரசு ஆலோசனக் குழுவிற்கு, நான் நன்றி தெரிவிக்கவேண்டும், காரணம் அதில் இடம்பெற்றிருப்பவர்கள் உதவியினால் உரோமாபுரிக்கு வெளியே ஆண்டுகள் பலவாக தங்குவதற்குச் சாத்தியப்படுகிறது, அப்படியே நேர்ந்தாலும்  ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு செல்லும் சந்தர்ப்பங்களில் உரோம்நகரில் தங்க நேரிடும், அப்போது அதிவேக செய்திப்பரிமாற்றங்கள் ஊடாக எனது ஆலோசகர்களுடன்  தொடர்புகொள்வேன், ஆபத்தான காலங்களில் தொலைவிளக்கக் குறியீடுகளூடாக (sémaphore) அவர்களோடு தகவல் பரிமாற்றம் செய்துகொள்வதுண்டு. இந்தஆலோசனைக்குழுவினரே அரசாங்கத்தின் அடுத்தக் கட்ட நிர்வாகிகளுக்கு வேண்டிய பயிற்சியை அளிக்கும் பொறுப்பையும் ஏற்கின்றனர். எனது பணியின் நேர்த்தி அவர்களுடைய திறமையைச் சார்ந்தது. ஒழுங்கமைந்த அவர்கள் பணி,  அதிக கவலைகளின்றி என்னைப் பிற பணியில்  கவனம்செலுத்தவும்,  மரணத்தைக்கூட  கவலையின்றி ஏற்கும் வகையில் இருந்தது.

இருபது ஆண்டுகால ஆட்சியில், குறைந்தது பன்னிரெண்டு ஆண்டுகள் நிலையாக ஓரிடத்தில் தங்காமல் அங்குமிங்குமாக இருந்திருப்பேன் :  ஆசிய வணிகர்களின் மாளிகைகள் ; கிரேக்க விவேகிகளின் இல்லங்கள் ; நீச்சல் குளங்கள், நீராவிக் குளியறைகள் என்றிருக்கும் கொலுவாக்களின் ரோமானிய குடியிருப்புகள் ; சிறுகுடில்கள், பண்ணை வீடுகளென  நிலையின்றி பல இடங்களில் எனக்குத் தங்க நேர்ந்துள்ளது.  தவிர அவை மெல்லிய கூடாரமாகவோ, கித்தான் துணியில்  கயிறுகள்கொண்டு உருவாக்கிய குடில்களாகவோ இருப்பின் மிகுதியாக எனக்கு விருப்பம்.  என்னைப் பொறுத்தவரையில் நீர்சார்ந்த உறைவிடங்கள் நிலம்சார்ந்த குடியிருப்புகளுக்கு  எவ்விதத்திலும் குறைந்தவை அல்லை.  தரையில் எழுப்பிய குடியிருப்புகளோடு ஒப்பிடுகையில் நாவாய்களும் வேறுபட்டவை அல்ல. அதிலும் என்னுடைய நாவாய்களில் உடற்பயிற்சிக் கூடம், நூலகம் இரண்டுமிருந்தன. எந்தவொரு உறைவிடத்துடனும்  நிலையாய் பிணைத்துக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை, அந்த உறைவிடம் நகரக்கூடியது என்கிறபோதும். சிரியாவைச் சேர்ந்த கோடீஸ்வரரின் உல்லாசக் கப்பல் என்றாலும், சிறிய கப்பல்கள், கப்பற்படையின் அதிவேக நாவாய்கள் அல்லது கிரேக்க மீனவர் ஒருவரின் சாதாரணப் படகு எதுவென்றாலும் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் இதுபோன்றவற்றில் நான் எதிர்பார்க்கும் ஒரே சௌகரியம் வேகம், எனவே அதற்குச் சாதகமாக இருக்கக்கூடிய அனைத்தையும் விரும்புவேன். இது தவிர பயணத்திற்கு சிறந்த குதிரைகள், சௌகரியமான சாரட் வண்டிகள், குறைவான பெட்டி படுக்கைகள், நிலவும் தட்பவெப்பத்திற்குரிய ஆடைகள், தேவைக்குறிய பொருட்கள் என்றிருந்தால் போதுமானது.  இவற்றுக்கெல்லாம் மிகப்பெரிய ஆதாரமாக எனக்கு இருந்தது ஆரோக்கியமான உடல்:  இருபது லீகுகள்(lieue) தூரம் கட்டாய நடை பயணம் என்பது எனக்கு பிரச்சனையே அல்ல, உறக்கமில்லாத இரவுகளை சிந்தனைக்கான அழைப்பாக மட்டுமே பார்த்தேன். ஒருசில மனிதர்களே நீண்டகால பயணத்தை விரும்புகின்றனர் காரணம் இதுபோன்ற பயணங்கள் நமது பழக்கவழக்கங்களுக்கு இடையூறாக அமையும், நம்முடைய முன்முடிவுகளை ஆட்டம் காணச்செய்யும். ஆனால் நானோ, தவறான அபிப்ராயங்களுக்கு இடம்தரக்கூடாது என்பதற்காகவும், சில பழக்கவழக்கங்களைத் தவிர்க்கவேண்டியும் கடுமையாக உழைத்தேன். இதமான சுகத்தைத்தரும் மென்படுக்கைகளை மெச்சுபவனாக இருந்தேன், அதுபோல நிலத்துடன் நேரடித் தொடர்பு, அதன் நறுமணம், ஒவ்வொரு புவி படிமத்திலும் நிலவும் சீரற்ற தன்மை ஆகியவை  எனக்கு விருப்பமானவை. உணவுகளில் எதையும் ஒதுக்கியதில்லை, அது பிரிட்டிஷ் வகை தினைக்கஞ்சியாகவும் இருக்கலாம் அல்லது ஆப்பிரிக்க தர்பூசணியாகவும் இருக்கலாம், இரண்டுமே ஏற்றவை. ஒருநாள் ஜெர்மானிய மக்களில் ஒரு பிரிவினர் உண்டுமகிழ்கிற பாதி அழுகிய பறவையை சுவைக்க முற்பட்டு வாந்தி எடுக்க நேர்ந்தது,  இருந்தபோதிலும் நான் முயற்சிசெய்தேன் என்பது இங்கு முக்கியம். காதல் விஷயங்களில் சிலவற்றில் பிடிவாதம் காட்டியபோதிலும், அங்குங்கூட வழக்கமான நடைமுறைகளை தவிர்க்க விரும்பினேன். எண்ணிக்கை, பகட்டு என்கிற இரு விஷயங்களிலும் வரைமுறைக்குட்பட்டு எனது பரிவாரம் இருந்தபோதிலும், உலகிடமிருந்து நான் சிறிது தனிமைமப்பட அது காரணமானது; எனவே என்னுடைய இயக்கமும் நடமாட்டமும் தங்கு தடையின்றி இருக்கவேண்டும் அதைபோல பிறர் என்னை எளிதாக அணுகவும்  வேண்டும் என்பதற்காக உரியவற்றை செய்தேன். உரோமாபுரிக்கு வெளியே, மாகாணங்கள் நிருவாக அளவில் எனது கவனத்திற்குரியவை – உதாரணத்திற்கு பிரிட்டானியாவின் பாறை சிம்மாசனமும், டேசியாவின் குறுவாள் சின்னமும் தனிப்பட்டவகையில்  நான் தேர்வு செய்தவை – இருந்துங்கூட இவைகளெல்லாம் நிழலுக்கு ஒதுங்கவென்று நான் தேடும் காடுககள், எனது தாகத்தைத் தணிக்கும் கிணறுகள், நான் தங்க நேரும் இடங்களில் தற்செயலாக சந்திக்கும் நபர்கள் அல்லது தெரிந்த முகங்கள் (ஒருசில சமயங்களில் அவை  நேசிக்கக் கூடியவையாகவும் இருக்கக்கூடும்) ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் வேறுபட்டவை. இப்பூமிக்கு உரோமாபுரி வழங்கியிருக்கிற பெருவழிச் சாலைகளின் ஒவ்வொரு மைல் கல்லையும் நன்கு  அறிந்திருந்தேன். உரோம்  இப்பூமிக்கு வழங்கிய மிகவும் அழகானதொரு பரிசென்றுகூட  இவற்றைச் சொல்லமுடியும். ஆனால் மறக்கவியலாத தருணமெது தெரியுமா,  சாலைமுடியுமிடத்தில் உள்ள பைரனீஸ் அல்லது ஆல்ப்ஸ் மலையின் சரிவுகளின்  பிளவுண்ட பாறைகளை ஒவ்வொன்றாகக் கடந்து அவற்றின் உச்சியை அடைந்து அங்கிருந்து  விடியலைப் பார்க்கும் தருணம்.  

தொடரும்…..

Series Navigation<< அதிரியன் நினைவுகள் – 16அதிரியன் நினைவுகள் -18 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.