லாவண்யா கவிதைகள்

முருகன் அருள்

முருகபக்தரும்
முன்கோபியும்
கெட்டவார்த்தைப் பிரயோக
சிரோன்மணியுமான
என் உறவினர் ஒருவர்
எதிரிலிருப்பவர் மனதில் நினைப்பதை
எக்ஸ்ரே செய்து சொல்வார்.
எல்லோரும் திகைத்துப் போவோம்.
நெருக்கமான சிலருக்கு
பின்வரும் நாட்களில்
என்ன நடக்குமென்று முன்னமே சொல்வார்.
அவர் சொல்வது சொன்னபடி நடந்தது
பலரின் அனுபவம்.
எப்படிச் சொல்கிறீர்களெனக் கேட்டேன்.
எல்லாம் முருகன் அருள் என்றார்.
எனக்கும் முருகன் அருள் வேண்டும்
என்ன செய்யவேண்டும் நானெனக் கேட்டேன்.
வீட்டைச் சுத்தமாக வை.
முருகனை மையத்தில் வையென்றார்.
வீட்டைப் பளிங்குபோல் செய்தேன்.
முருகன் சிலையை நடுவில் வைத்தேன்.
ஜவ்வாதும் சந்தனமும் பூசிக்கொண்டேன்.
கெட்டவார்த்தை பேசிப் பார்த்தேன்.
முருகன் அருள் கி்ட்டவில்லை.


பசலை

செய்தித்தாள் படிக்கும் பாவனையில்
இருவரும் அருகமர்ந்து உரசிக்கொண்டு
அருந்தும் காபியின் சுவை, மணம்
தனியளாய் இருக்கையில் தெரியவில்லை.
மஞ்சள் மாலை கருக்கும் சமயம்
இடமிருந்து வலமிருந்து
புதுப்புடவை மல்லிச்சரம் முகப்பூச்சு
உதட்டுச்சாய கச்சிதங்களை
காட்டும் கண்ணாடி வெளிச்சம் பாராமுகமானது.
பத்துநாட்களில் மெலிந்துபோனேனாம்.
பணிப்பெண் கண்ணடித்து கேலி செய்கிறாள்.
பணிநிமித்த உன் தொலைவால்
ஒருநாள் ஒரு யுகமாகிறது.
ஜன்னல் வாசம் செய்யும்
புறா கேட்கிறது தினமும்
சரசத்தில் பேராசைக்காரன்
எப்போது வருவானென்று

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.