ராகஜலதி என்ற நாவல்

தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

தென்னேட்டி ஹேமலதா- தொடர்ச்சி -3

லதாவின் நாவல் ‘ராகஜலதி’ யின் முதல் பதிப்பு 1960 ஆகஸ்டில் வந்தது. இந்த நாவலை   ‘விரக்தியடைந்த துரதிர்ஷ்டசாலிகளுக்கு’ சமர்ப்பணம் செய்துள்ளார்.

எதிர்பாராமல் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பாயும் இந்த ஈர்ப்புக்கு என்ன பொருள்? அலையின் பின் அலையாக ஓட்டமெடுக்கும் நுரையாக வாழ்க்கையில் சரியாக மூச்சு விடக் கூட முடியாமல் குறுக்கிடும் இந்த ராகஜலதியை யார் படைத்தார்கள்? இதற்குப் பொருள் என்ன? என்ற கேள்விகளோடு தொடங்குகிறது இந்த நாவல். இதன்  கதையம்சம் கபர்தி, ஆரணி, சூரியா ஆகியோரைச் சுற்றி விரிவடைகிறது.

தன் கடந்த காலத்தையும் சரசா என்ற விலைமாதோடு தனக்கு ஏற்பட்ட தொடர்பையும்  எண்ணிப் பார்த்த கபர்தி, “காதல் எதனால் ஏற்படுகிறது என்று எண்ணுகிறாய்?” என்று கேட்ட கேள்விக்கு பதிலாக நண்பன் ஆரணி, தன் கடந்த காலத்தை அவனுக்குக் கூறுவதன் வாயிலாக கதை விரிவடைகிறது. நாவலின் கதை உண்மையில் ஆரணியுடையதும் அவனுடைய நண்பன் சூரியாவுடையதும். அதைவிட ஆரணி கூறிய சூரியாவின் கதை என்று கூறலாம்.

ஆரணி, கோதாவரிக் கால்வாய்களின் மேல் மிதந்து உப்பு விற்கும் படகுகளில் வளர்ந்த அனாதைக் குழந்தை. படகோட்டிகளின் கருணையில் வளர்ந்தான். உப்புப் படகில் பிரயாணம் செய்த பண்டிதரின் உதவியால் படிப்பு அறிமுகமானது. அதன் மீது ஆசை பெருகியது. உப்புப் படகு வந்து நின்றது என்ற செய்தியைத் தெரிவிப்பதற்கு      கோதாவரிக் கரை கிராமத்திற்குச் சென்றபோது சூரியாவோடு அறிமுகம் ஏற்பட்டு அது நட்பாக வளர்ந்தது.

உப்புப் படகை விட்டு படிப்பதற்காக ராஜமுந்திரி சென்றபோது சூரியாவோடு சேர்ந்து அவனுடைய அறையில் தங்கினான். சூரியாவின் தாய் கனகாங்கியின் ஆதரவைப்  பெற்றான். சூரியா தன் தாயை ஏன் வெறுக்கிறான் என்று அவள் மூலமாகவே தெரிந்து கொண்டான். அவனுடைய வாழ்க்கை அதுவரைதான். திருமணமான மீனாட்சியுடனான சூரியாவின் சிநேகம், அவளோடு வீட்டை விட்டு வெளியே போவதில் தொடங்கி, சூரியாவின் வாழ்க்கையில் வந்த மாற்றங்களின் கதையாக வளர்ந்த இந்த நாவலின் கதையம்சத்தில் மீனாட்சியின் தம்பி நடராஜனின் வாழ்க்கைப் பரிணாமங்கள் முக்கியமான பகுதியை நிரப்புகின்றன. ஆரணிக்கு சூரியாவிடம் சந்தேகமில்லாத நட்பு இருந்ததால் அவன் பார்த்தோ அல்லது அவன் கூறிக் கேட்டோ அறிந்த விவரங்களோடு சூரியாவைப் பற்றி கூற முடியும். கூறினான் கூட. ஆனால் சூரியாவிற்கு நேரடி சம்பந்தம் இல்லாத, அதனால் ஆரணிக்குத் தெரிவதற்கே வாய்ப்பேயில்லாத நடராஜனுடைய வாழ்க்கைச் சம்பவங்கள், அவன் கூறும் கதையில் ஒரு பகுதியாக வருவது சற்று பொருத்தமற்றதாக உள்ளது.  

மேலும் இந்த நாவலில் வரும் நடராஜனுடைய வாழ்க்கைக்கும், சாரதா என்ற புனைப்பெயரோடு நாவல்கள், சிறுகதைகள் எழுதிய நடராஜன் என்பவருடைய நிஜ  வாழ்க்கைக்கும் நெருங்கிய ஒற்றுமை தென்படுகிறது. நாவலில் வரும் நடராஜன் கூட எழுத்தாளனே. அவனுடைய புனைப்பெயர் நந்தினி. சாரதாவின் நாவல்களின் பெயர்கள் நன்மை –தீமை, அபஸ்வரங்கள் என்பவை. நாவலில் வரும் நடராஜன் எழுதிய நாவல்கள் நீதி –அநீதி, அபஸ்ருதிகள் என்பவை. இருவரும் வாழ்க்கைக்காக ஹோட்டலில் சர்வராக பணிபுரிந்தவர்களே. பசி, தரித்திரம், குடி, திருமண சம்பந்தமில்லாத பாலியல் உறவுகள், வியாதி, அற்பாயுளில் மரணம் போன்றவை இருவருக்கும் ஒன்றாகவே உள்ளது. விஜயவாடாவுக்கு அருகில் உள்ள தெனாலி என்ற நகரத்தில் வாழ்ந்து 1955 ல் மரணித்த நடராஜனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், அப்போதுதான் எழுத்துத் துறையில் அடி எடுத்து வைத்த லதாவை ஆழமாக ஈர்த்தாற்போல் தோன்றுகிறது. அது இவ்விதமாக ராகஜலதி நாவலின் கதை அம்சத்தில் ஒரு பகுதியாகிறது. . 

சமுதாய ஒழுக்க நெறிகளின் தாக்கத்திற்கு உள்ளான ஆண்- பெண் தொடர்புகளில் இருந்த மென்மை பற்றிய சிந்தனை இந்த நாவலில் முக்கிய இடம் வகிக்கிறது. 

ஆரணி அமலாபுரம் என்ற நகரத்தின் அருகில் கோதாவரிக் கரையில் கிடைத்த சிறுவன். சிந்தய்யா கூறிய “எந்தப் பெண் பெற்று தூக்கி எறிந்தாளோ தெரியவில்லை” என்ற பேச்சைக் கேட்டதுமே, “சிவ சிவா” என்று காதை மூடிக்கொண்டு, “ரத்தினத்தை போல் இந்தக் குழந்தையின் முகம் ஒளி வீசுகிறது. நல்ல வம்சத்தில்தான் பிறந்திருக்க வேண்டும்” என்ற பண்டிதரின் வாக்கியத்தை  வைத்துப் பார்க்கும் போது, ஆரணியை அனாதையாக்கிய ஆண் பெண் உறவில் இருக்கும் ஒழுக்க நெறியின் இலட்சணம் தெரிய வருகிறது.

நல்ல வம்சத்தில் பிறந்த பிள்ளை துறக்கப்படுவது எனபது எப்போது நடக்கும்? அந்தப்  பிறவிக்குக் காரணமான ஆண் பெண் உறவு சமுதாயச் சட்டத்திற்கு எதிரானது. திருமணம் ஆகாமலே ஏற்பட்ட கர்ப்பம், வேறுபட்ட குல, மத, பிரிவைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பால் விளைந்த கர்ப்பம், விதவையான பெண் கருத்தரிப்பது ஒழுக்கக் கேடு, அதர்மம் என்று தீர்மானித்த சமுதாயத்தில் இவற்றை ஏற்க இயலாது என்பதால் தூக்கியெறிய வேண்டி வந்தது. கருக்கொலைக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால், பிறந்தவுடனே சிசுவை எங்கோ விட்டு விட்டு சமுதாயத்திற்கு ஏற்புடைய முறையில் வாழ்வதற்குத் தயாராவது நடக்கிறது.  அனாதைக் குழந்தைகள் இவ்விதமாக சமுதாயத்தின் அக்கிரமத்திற்கு நேரடி சாட்சிகளாக உள்ளனர். ஆரணி அவர்களின் பிரதிநிதி. 

ஆண் பெண் உறவுகள் தம்பதிகளாகவும் குடும்ப உறவாகவும் வளர்ச்சியடையும் போது   ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண், ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்று வாழ்க்கை முழுவதும் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்ற நீதியை சமுதாயம் வடிவமைத்தாலும், ஆண்களுக்காக குடும்பத்திற்கு வெளியில் விலைமாதர் அமைப்பு ஏற்பட்டது. குடும்ப ஒழுக்கத்தை எதிர்த்து விலைமாதர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் ஆண்கள் சமுதாயத்தில் பெறும் மரியாதை சற்றும் குறைவதில்லை. விலைமகளிர் மட்டும் ஆண்களை கெட்ட வழியில் இழுப்பவர்களாகவும் நேர்மையற்றவர்களாகவும் பார்க்கப்படுவது ஒரு முரண்பாடு.

விலைமாதர் எதிர்ப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்த அதர்ம இயல்பைக் கண்டறிந்து திரு. குரஜாட அப்பாராவு விலைமாதர்களிடம் காணப்படும் மனிதாபிமானக்  கோணத்தையும், சமுதாயத்தின் குரூர இயல்பையும் அடுத்தடுத்து காண்பித்து கன்யாசுல்கம் நாடகத்தை எழுதினார்.

சலம், கொடவடிகண்டி குடும்பாராவு, புச்சிபாபு போன்ற எழுத்தாளர்கள் அந்த சம்பிரதாயத்தை முன்னுக்கு எடுத்துச் சென்று சுத்திகரிக்கப்பட வேண்டிய சமுதாய ஒழுக்கம் குறித்து பிரமையில் வாழ்வது சமுதாயமே என்று தீர்மானமாகக் கூறினார்கள்.  அவர்களின் தொடர்ச்சியாக வந்த லதா, பாலியல் ஒழுக்கம் தொடர்பான கருத்துக்களை சர்ச்சைக்கு எடுத்து வந்து கதையம்சத்தைக் கட்டமைக்கிறார். 

ராகஜலதி நாவலில் சூரியாவின் அன்னை ஒரு விலைமாது. சமுதாயம் அவளை நேர்மையற்றவளாகவும் கீழ்த்தரமாகவும் பார்க்கிறது. உடலை விற்று வாழும் தாயின் பிள்ளையாக சூரியாவும் சமுதாயத்தில் தன் நிலை குறித்து வெட்கித் தலைகுனிகிறான். ஆத்திரமடைகிறான். அது தாயின் மேலும் பாட்டியின் மேலும் வெறுப்பாகவும் எதிர்ப்பாகவும் வெளிப்படுகிறது. அவர்களைத் தொலைவில் இருத்தி வைக்கிறது. ஆண் பெண் உறவு தொடர்பாக எந்த ஒழுக்க அமைப்பு கடைப்பிடிக்கப்படுகிறதோ அது சூரியா போன்ற குழந்தைகளின் மூளையையும் புத்தியையும் இதயத்தையும் சிதைக்கிறது. இயல்பான மானுட உறவுகளை அன்னியப்படுத்துகிறது. உண்மை நிலையைப் புரிந்து கொள்ள முடியாமல் பிரமையில் வாழும்படிச் செய்கிறது. அந்த பிரமையில் இருந்து அவனை வெளியே எடுத்தவள் மீனாட்சி.

மீனாட்சி, சிவன் கோயில் பூசாரி பூஷைய்யாவின் மனைவி. தன் தாயிடமிருந்து தப்பித்துக் கொண்டு அலைந்து சிவன் கோவிலில் மறைந்து கொள்ளும் சூரியாவுக்கு  அவளோடு உறவு ஏற்படுகிறது. அவள் பவித்ரமானவள். தன் தாயைப் போல கெட்டவள் அல்ல என்று நினைத்து அவளிடம் கௌரவத்தோடு பழகுகிறான்.

அறுபது வயது பூஷைய்யாவுக்கு பதினெட்டு, பத்தொன்பது வயதுள்ள மனைவி மீனாட்சி. மீனாட்சியை பாலக்காட்டில் இருந்து விலை கொடுத்து வாங்கி வந்து திருமணம் செய்து கொண்டார். பள்ளி இறுதித் தேர்வு எழுதிய பின் மீனாட்சியைப் பார்க்கச் சென்ற சூரியாவுக்கு அவளுடைய வாழ்க்கையின் கொடூரம் தெரியவந்தது. பசியும் ஏழ்மையும்   பெண்களை விற்பதற்கும் வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்வதற்கும்  காரணமாகிறது. பெண்களின் கற்பு பற்றிய கண்காணிப்புக்கும், அனுதின சந்தேகத்திற்கும் சர்வதிகாரங்களையும் அளிக்கும் ஆணாதிக்க இரட்டைக் கற்புநெறி, பெண்களின் வாழ்க்கையை இம்சையாக மாற்றுகிறது என்று அவனுக்குப் புரிந்த நேரம் அது.

பெண்மைக்கு ஏழ்மை துணையாகும்போது அவள் வாழ்வு எத்தனை கொடுமையாக மாறுகிறது என்று தெரிந்து கொண்ட வாழ்க்கை அனுபவம் மீனாட்சியுடையது. சூரியாவை விட ஆறு மாதங்களோ ஓராண்டோ பெரியவளான மீனாட்சியால், ‘இந்த  உலகில் உன் தாய் தவறு செய்து விட்டாள் என்று கவலைப்படுவதை விட கஷ்டம் வேறு இல்லை’ என்று நினைப்பது தவறு என்றும் உலகத்தை ஒரு முறை பிளந்து பார்த்தால் தென்படும் புழுக்களின் முன் உன் தாய் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறாள் என்றும் அவனுக்குச்  சொல்ல முடிந்தது என்றால் அந்த அனுபவத்தால்தான். உலகில் நடக்கும் பயங்கரங்களோடு ஒப்பிட்டால் உன்னுடைய தாய் எந்தப் பாவமும் செய்யாதவள். அவளை வெறுப்பதை நிறுத்து என்று கூறுவதிலும் அனுபவத்திலிருந்து பிறந்த புரிதலின் முதிர்ச்சி அவளிடம் வெளிப்படுகிறது. 

அதிகார வர்க்க அடக்கு முறையின் ஒழுக்க நீதிக்கு ஒப்புதல் அளிக்கும் சமுதாயத்தின் பிரதான ஓட்டம், அந்தத் தாயின் மகனாக அவனை அவமதித்தபோது, அடக்கு முறை ஒழுக்கம் கற்பித்த பிரமையில் தாயை வெறுத்த சூரியா, அது தலைகீழ் ஒழுக்க நீதி என்று மீனாட்சியின் மூலம் தெரிந்து கொண்டான். அன்றிலிருந்து உண்மையான மனிதனாக அவனுடைய மறுவாழ்வு தொடங்கியது.

சூரியாவிடம் நட்பும் காதலும் அதிகமாகி, துயரமான நேரத்தில் தனக்கு ஆதரவளித்தவன்  என்ற நம்பிக்கையோடு அவனை அருகில் அழைத்து அவனுடைய துணையால் அமைதி பெறுகிறாள் மீனாட்சி. அதே நேரம் அவன், கல்லூரித் தோழி கிருஷ்ணஹரியிடம் ஏற்பட்ட அன்புக்கும் தன்னிடம் உள்ள பொறுப்புக்கும் இடையில் நசுங்கிப் போவதையும், மனப்போராட்டத்தில் உள்ளதையும் கவனித்து அவனுடைய வாழ்க்கையில் இருந்து விலகுவதற்குத்  தீர்மானிக்கிறாள். பூஷைய்யா காலமானதை அறிந்த பின் அவருடைய விதவையாக வாழ்வதற்குத் தீர்மானித்து தலையை மொட்டை அடித்துக் கொண்டு காசிக்கு சென்று விடுகிறாள் மீனாட்சி. இயல்பான கோரிக்கைகளை சகஜமாக தீர்த்துக் கொள்ளும் வழியில்லாத சமுதாய ஒழுக்கத்தின் மீது மீனாட்சி அறிவித்த எதிர்ப்பு இது.

தன் வெளியேற்றத்தால் கிருஷ்ணஹரியும் சூரியாவும் நெருக்கமாவார்கள் என்று மீனாட்சி நினைத்தாள். ஆனால் திருமணமாகாமல் மீனாட்சியோடு அவன் சேர்ந்து இருந்ததைக் குற்றம் சாட்டி, ஊழலில் பிறந்து ஊழலில் வளர்ந்த மனிதன் செய்த ஊழல் செயல் என்று  தீர்ப்பு கொடுத்து அவனுடைய குலத்தை வெறுத்து அவனிடம் இருந்து விலகி விடுகிறாள் கிருஷ்ணஹரி. அவள் அதிகார வர்க்கத்தின் சமச்சீரற்ற ஒழுக்க நீதிக்குப் பிரதிநிதி. 

ஆனால் நாவல் முடிவடையும் போது இருவரும் கிருஷ்ண பக்தர்களாக ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து வாழ்வது சற்று விசித்திரமாகத் தோன்றுகிறது. காதலுக்கும், விரும்பும் மனிதனோடு உறவு கொள்வதற்கும், சேர்ந்து வாழ்வதற்கும் தடையாக உள்ள சம்பிரதாய கருத்துக்களையும் உணர்ச்சி வேகங்களையும் எதிர்க்கும் புத்தி கூர்மை இன்றி விரக்தியடைந்தவர்களின் இறுதி இலக்கு பக்தி மார்க்கமே என்பது ஆசிரியரின் எண்ணமாக இருக்கலாம். சூர்யா கூட ஒரு விதமாக விரக்தி அடைந்தவனே ஆனாலும் ஆண் என்பதால் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகி உள்ளுக்குள் வேதனையை அனுபவித்து சமுதாயத்தோடு சமரசம் செய்து கொள்வதைப் பார்க்கிறோம்.

நடராஜனுடைய வாழ்க்கையிலும் பாலியல் உறவுகள் முக்கியமானவையாகவே உள்ளன.  ஏழ்மையிலும் வாழ்க்கைக்கு ஆதரவு இல்லாத நிலையிலும் இருந்த அவனுக்கு திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு, துணிவு இரண்டும் இல்லை. ஆனால் உடல் தன் விருப்பத்தைத் திருப்தி செய்யும்படி கேட்டது. அதனால் மூன்று பிள்ளைகளுக்குத் தாயான ஒரு விதவையோடு உறவு வைத்துக் கொண்டான். அந்த விதவையின் அண்ணன் ஏழ்மையால் அவளையும் அவளுடைய குழந்தைகளையும் வைத்துக் காப்பாற்ற இயலாமல் ஏழ்மையைக் காரணம் காட்டி, அவளை பிள்ளைகளோடு சேர்த்து துரத்தி விட்டான். அவர்களின் பொறுப்பை நடராஜன் மிக இயல்பாக ஏற்றுக் கொண்டான். நீயே கதி என்று வந்த பெண்ணை வைத்துக் காப்பாற்றும் நேர்மை அவனுக்கு இருந்தது. வேறு யாரும் தன்னை இத்தனை தூரம் காதலிக்க மாட்டார்கள் என்றும் இத்தனை நன்றியோடு இருக்க மாட்டார்கள் என்றும் தெரிந்த யதார்த்தப் பார்வை அவனுடையது.

தாயை நலமாக பார்த்துக் கொள்ள முடியாமல் போகிறேனே என்றும் வயிறு நிறைய  சோறு போட முடியாமல் போகின்றேனே என்றும் உள்ளத்தில் வேதனைப்படும்  உண்மையான மனிதன் அவன். தன் தாய்க்கு வரதராஜனோடு சம்பந்தம் இருக்கிறது என்று தெரிந்தாலும் அதனை அவனால் சகஜமாகவே எடுத்துக் கொள்ள முடிகிறது. அவனுக்கு நோய் ஏற்பட்டு தாயைத் தன்னால் இனிமேல் பார்த்துக் கொள்ள முடியாது என்ற விஷயம் புரிந்த போது அதனையும் இயல்பாகவே ஏற்று, வரதராஜனிடம் தாயை அழைத்துச் செல்லும்படி கூற முடிகிறது அவனால். தேவைகளைப் பற்றியே தவிர ஒழுக்கமின்மை பற்றி யோசிக்கும் நேரமோ வாய்ப்போ இல்லாத இணையான உலகம் ஒன்று இந்த சமுதாயத்திலேயே இருக்கிறது என்று இந்த சந்தர்ப்பம் தெளிவுபடுத்துகிறது.

மனைவி மீது கணவனாக வாழ்நாள் முழுவதும் அதிகாரம் காட்டும் ஆண், தன்னுடையது என்று எண்ணிய பெண்ணின் மீது பாலியல் ஆதிக்கம் காட்டும் ஆண், மனைவி மீது  சந்தேகத்தையும், தன் அதிகாரத்தில் உள்ள பெண் மீது ஆசைப்படும் ஆண் மீது  பொறாமையையும் போட்டியையும் வெளிப்படுத்துவதும் உலகில் அடிக்கடி தென்படுகிறது. 

நடராஜனும் சரி, வரதராஜனும் சரி தாயை வைத்துக் காப்பாற்றுவது பற்றி மீதி உள்ள அனைத்து விவகாரங்களையும்  பேசுவது போலவே பேசிக் கொள்வது எதனால் சாத்தியமாகிறது? நடராஜன் பெண்ணை ஒரு சொத்தாகப் பார்த்து, அந்த சொத்துக்குத் தான் சொந்தக்காரன் என்று எண்ணாததால் அது சாத்தியமாகிறது. வரதராஜன் கொஞ்சம் வசதியானவன். ஆனாலும் திருமணம் ஆகாத ஒரு பெண்ணுக்குப் பிறந்த ஆண் பிள்ளையாகப் பெற்ற அனுபவத்தாலும் தாயின் பாலியல் அடிமைத்தனம் பற்றிய ஞாபகங்களாலும் பெண்ணை சமுதாயம் தீர்மானித்த பாலியல் ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்டுப் பார்ப்பதை பழக்கப்படுத்திக் கொண்டான் என்பதால் அது சாத்தியாமாகிறது. 

நடராஜன் சர்வராக பணி செய்த ஹோட்டல் ரூமில் எதிர்பாராமல் சந்தித்த நந்திதா, உன்னைக் காதலிக்கிறேன் என்று கூறியபோது, அவளுடைய படிப்பு, செல்வம் போன்றவை தம் உறவுக்குத் தடையாக இருக்கும் என்ற நடைமுறை அறிவோடு அதனை  நிராகரித்தான். ஆனாலும் உள்ளத்தில் அவளைத் தன் காதலுக்கும் வழிபாட்டிற்கும் உரியவளாக நிலைநிறுத்திக் கொண்டான். எத்தனை தூரம் என்றால், அவளோடு வாழ முடியாவிட்டாலும் அவளுடைய முன்னிலையில் சாக வேண்டும் என்று எண்ணும் அளவுக்கு அவளைக் காதலித்தான். உடல்நிலை சரியில்லாமல் அவளைத் தேடிக்கொண்டு அவன் செய்த பிரயாணம் இந்த நாவலில் நீளமாக வர்ணிக்கப்படுகிறது. அது தீராத கோரிக்கையாகவே முடிந்தது. அந்த விஷயம் தெரிந்த அவள் திருமணமான பிறகு கூட நடராஜன் மரணித்த தினத்தன்று ஏதாவது ஒரு புண்ணிய தலத்திற்குச் சென்று அன்னதானம் செய்யாமல் இருக்க மாட்டாள்.

ஆணோ பெண்ணோ யாராயிருந்தாலும் இருவரிடையே அன்பு துளிர்த்து விட்டால், சக ஜீவனமாக அதனை மலர விடாத ஒரு வித எதிர்மறை சமுதாய அதிகாரத்தின் காரணமாக வாழ்க்கை துயரமயமாக ஆகிறது என்று காட்டுவது ஆசிரியரின் நோக்கமாகத் தெரிகிறது. அந்த நிலையில் திருமணம், குடும்பம் போன்றவை சரியாக நடப்பது போல் தோற்றமளிப்பது கூட ஒரு பிரமையே என்றும் இந்த நாவல் குறிப்பிடுகிறது.

இந்த நாவலில் மற்றொரு அம்சம் ஜாதி, குலம் போன்றவை. ஜாதி, குல வேறுபாடுகள் மனிதர்களில் ஏற்படுத்தும் காயங்கள் மிகவும் அதிகம். பிறர் மேல் ஆதிக்கத்தை சாதிப்பதற்கு மனித அகம்பாவம் கொள்ளும் ஏக்கம் இந்த நாவலுடைய கதையம்சத்தில் ஒரு பகுதியாக உள்ளது.

சூரியா, கனகாங்கிக்கு ஒரு உயர்குலத்தவன் மூலமாகப் பிறந்தான் என்று தெரிவிக்கிறது நாவல். அதன் பின்னால் ஒரு பெரிய கதை உள்ளது. அவன் நாட்டியக் கலையில் வல்லவன். அவனிடம் தன் மகள் கனகாங்கிக்கு நாட்டியத்தில் பயிற்சியளிக்க வேண்டும் என்று அவள் தாய் சிம்ஹாசலம் விரும்பினாள். ஆனால் நியம நிஷ்டையோடு கூடிய அந்த பிராமணன் ஒரு விலைமாதுவுக்கு நாட்டியம் சொல்லித் தர மாட்டேன் என்று மறுத்து விட்டான். 

அதன் பிறகு ஏரியில் விழுந்து அடித்துச் செல்லப்பட்ட தன் மகனை சிம்ஹாசலம் காப்பாற்றினாள் என்ற நன்றியோடு கனகாவுக்கு நாட்டியம் சொல்லித் தருவதற்கு அவன் சம்மதித்தான். கலையை கற்றுத் தரும்போது கூட தான் ஒரு பிராமணன் என்பதை    அவன் மறக்கவில்லை. கனகாங்கியின் கை விரல் பட்டுவிட்டால் கூட ஏதோ தீட்டுப்பட்டது போல் குளித்து விட்டு வருவான். அதனால் வேண்டுமென்றே அடிக்கடி அவனைத் தொடுவாள் அவள்.  சும்மா சும்மா குளிக்க முடியாமல், நாட்டியப் பயிற்சி முடிந்த பிறகு ஒரேயடியாக குளிப்பதை வழக்கமாகக் கொண்டான். 

அதன் பிறகு அவனாகவே அவளைத் தொடும் நிலை ஏற்பட்டது. பயிற்சி முடிவடைந்த பிறகு குரு தட்சணையாக தாய் அனுப்பிய பட்டு வஸ்திரங்களைக் கூட அவன் வாங்க    மறுத்தான். அவனுடைய வீட்டிற்குச் சென்று நமஸ்காரம் செய்து விட்டு வரும்படி தாய் அனுப்பிய போது சென்ற கனகாவின் அழகில் மயங்கி அவளை அருகில் அழைத்து அணைத்ததன் பலனாக சூர்யாவைக் கருத்தரித்தாள். அவனை வசமாக்கிக் கொண்டேன் என்ற கர்வம் கனகாங்கிக்கு ஏற்பட்டது. உயர்குலத்தின் மீது தன் ஆதிக்கம் அது என்று அவள் எண்ணினாற்போல் தெரிகிறது. ஆனால் அவன் அதனை அவமானமாகவே கருதினான். அதனால் சன்னியாசம் ஏற்று ஊரைவிட்டுச் சென்றுவிட்டான். அதனால் மகன் தன்னை வெறுக்கிறான் என்ற விஷயம் தெரிந்த அவள் ஆரணியிடம், “துவேஷம் உன் ரத்தத்திலேயே உள்ளது” என்று கூறுகிறாள். அது குல வேறுபாட்டால் வந்த வெறுப்பே தவிர வேறில்லை. 

தன் வீட்டில் பிராமணக் குழந்தை பிறந்தது பிறக்கப் போகிறது என்று அறிந்த சிம்ஹாசலம் மிக கர்வம் கொண்டாள். அந்த பிள்ளையை மடி, ஆசாரத்தோடு வளர்த்தாள் என்பது கவனிக்கத்தக்கது. அதாவது உயர் ஜாதி ஆதிக்கத்தைப் பற்றிய ஒப்புதல் எத்தனை தூரம் பரவியிருந்தது என்பதை இது காட்டுகிறது.

நடராஜன் வசித்த குடிசையின் அருகில் வேறொரு குடிசையில் பத்து பாத்திரம் தேய்த்து வீட்டு வேலை செய்யும் சின்னம்மா என்ற பெண் வசித்து வந்தாள். நடராஜன் தனியாக வியாதியோடு படுத்த படுக்கையாக இருந்த போது குடிசையைப் பெருக்கி அவனுடைய துணிமணிகளை துவைத்துக் காயவைத்து உதவி செய்தாள். தேநீர் தயாரித்து எடுத்து வந்து கொடுத்தாள். அவள் கர்ப்பவதியாக இருந்தாள். அவள் எதிர்பார்த்த பிரதிபலன் தன்  வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு பிராமணனான நடராஜனின் ஆசிகள் வேண்டும் என்பதே. அதை அறிந்த நடராஜன் ஆச்சரியப்பட்டு, தன் பிராமணத்துவம் குறித்து சிந்திக்கத் தொடங்கினான். என் பெற்றோரை விட ஒழுக்கமற்ற வாழ்க்கை என்னுடையது. ரத்தத்திலேயே பவித்திரம் இல்லாத என்னுடைய ஆசீர்வாதத்திற்கு பலன் எங்கே இருக்கப் போகிறது? என்று எண்ணிச் சிரித்தான். பிராமண தேஜஸ் பற்றிய ஒரு கர்வம் பிராமண அழிவு பற்றிய திகில் இரணடுமே லதாவுக்கு இருந்ததோ என்று தோன்றுகிறது இந்த நாவலைப் படிக்கும் போது.  

அடுத்த நாவலில் மேலும் பார்ப்போம்.

Series Navigation<< தென்னேட்டி ஹேமலதா- பொது உலக பரிச்சயம் அல்லது மேதமை பிரபஞ்சம்மிகிலிந்தேமிடி? (என்ன மிச்சம்?) என்ற நாவல்  >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.