
நிழலையே தலையணையாக
வைத்துத் தூங்கிக்கொண்டிருக்கிறான்
நடைபாதைப் பிச்சைக்காரன்.
எழுதியதை வெட்டிய பின்பும் தெரிந்து கொண்டே இருக்கிறது வார்த்தை எழுதியவன் கண்களுக்கு..
கண் தெரியாத சிறுமி
ஏற்றிய தீபம் காற்றில் படபடத்தது
கைகளைக் குவித்தார் கடவுள்
கைதியின் கடைசி ஆசை நிறைவேறியது
ஊஞ்சல் ஆடினான் தூக்குக் கயிற்றில்..
லாரியின் கீழே தூங்குகிறது நாய்
டீசல் டேங்கில்
“தினமும் என்னைக் கவனி “
மனமே!
குறைவாக இருப்பதை நினைத்துக் கவலை கொள்ளாதே
நீ பிப்ரவரி மாதம்.
வற்றிய தடத்தில்
நதி ஓடுகிறபோது
கரை மீண்டும் பிறந்து விடுகிறது.
பலனை எதிர்பார்த்தேனும் உதவி செய்வோம்
உதவியே செய்யாமல் இருப்பதற்கு அது மேல்தானே.
கூடவே இருந்து கொண்டு
முதுகில் குத்துகிறது
அரைஞாண் முடிச்சு.
இதயம் தாலாட்டை நிறுத்தியதும் நிம்மதியாய் உறங்கியது
பிணம்.
நத்தை தன் சொந்தங்களை
வாசலில் வைத்தே விசாரித்து அனுப்புகிறது.
தூரத்தில் இருக்கும்போது ரசித்தவன்
அருகில் சென்றதும் கால் கொண்டு மிதித்தான் நிலவை.
விடுமுறைக்காகக் காத்திருந்த மாணவனுக்குக் காரணம் தந்தன
தேங்கிய மழைநீரும் அரசுப்பேருந்தும்
எனக்கு ஏன் திருக்குறள் பிடிக்கும்
“அதிகாரத்தில் அடக்கமுடைமை” இருப்பதால்..
முன்பொரு நாளில் கண்ட கனவு
நிஜமாகவே நடந்தது
நேற்றைய கனவில்..
எல்லா ஆட்டங்களும் ஆடி,
கடைசியில் ஆம்புலன்ஸில் போகும்போதுதான் அடங்குகின்றன “ஐம்புலன்ஸ்”
வாழ்க்கை எனும் வளைந்த ஆணி, கேள்விக்குறியைப் போன்றது.
தட்டி நிமிர்த்தும்போதுதான்
அஃது ஆச்சரியக்குறியாக மாறுகிறது!
கைகட்டுவது அடிமைத்தனம் இல்லை
அது நம்மை நாமே கட்டிப்பிடிப்பது.
கோழிக்குஞ்சைக் காகம் தூக்கிச் செல்லும்போது
தானொரு பறவை என்பதை உணர்கிறது, தாய்க்கோழி.
பெரிய ஆசையெல்லாம் ஒன்றும் இல்லை
இறப்பதற்கு முன் உயிரோடு இருக்க வேண்டும்.
நான்கு டயர்களும் பஞ்சர் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது
தள்ளுவண்டி இட்லிக்கடை.
எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை.
நான் அப்படி இருப்பதற்குக் காரணமே கடவுள்தான் என்கிற நம்பிக்கை உண்டு.
பொதுப் பண்புத்தொகை நீ
குறிப்புப் பெயரெச்சம் நான்
உனக்குள் நான் வாழ்கிறேன்!
தூசி படிந்த இருக்கையில்
அமர உதவியது
“மூலம்” போஸ்டர்
பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில்
குயில்களின் கூட்டில்
காகங்களுக்குப் பாட்டு வகுப்பு
நிம்மதியாய் அழும்போது
இடையூறாய் வருகிறது
மூக்குச்சளி.
இளநீர் குடிக்கிறது எறும்பு
யாரோ குடித்துப் போட்ட
ஸ்ட்ராவுக்குள்..
உணவு டெலிவரிக்குச் செல்லும் நபரின் தலைக்கு மேல்
கூகுள் மேப் இல்லாமல்
பறந்துகொண்டிருந்தது ஒரு காகம்
தன் குஞ்சுகளுக்கான உணவை டெலிவரி செய்ய..
கடவுள் எனக்குத் தூரத்துச் சொந்தக்காரன்.
அவனிடம் ஒட்டி உறவாடவும் முடியவில்லை
ஒரேயடியாகத் தள்ளி வைக்கவும் முடியவில்லை.
கடவுளும் ஒரு வாட்ச்மேன் தான்
ஒரு கதவை மூடி இன்னொரு கதவைத் திறக்கிறான்.
சோகங்கள் பழகிவிட்டதால்
திடீரென்று வரும் சந்தோஷப் பொழுது
சற்று வெறுப்பாய் இருக்கிறது..
தன் கஷ்டங்களை எல்லாம்
சொல்லி அழக்
கடவுளுக்கு யாருமில்லை..
எனக்கு வரம் கிடைத்தால் கடவுளுக்கு ஒரு கடவுளை உருவாக்கிக் கொடுப்பேன்.
சுருண்டிருக்கும்வரை கிழிபடுவதில்லை வாழையிலை.
இலைகள் கிழிபடாமல் வெளிவருவதில்லை வாழைக்குலை.
சும்மாவே இருப்பவனுக்கு
எந்தத் திசையில் இருந்து வீசினாலும் அது எதிர்க்காற்றுதான்..
குளத்தில் வழி மறந்த தவளைக்குக்
கலங்கரை விளக்கம் ஆகிறது
மரத்தில் விளையாடும் மின்மினி.
வயிற்றுப் பிழைப்புக்காகப்
பீடி சுற்றும் அம்மாவுக்கு
அப்பா பீடி குடிப்பது பிடிக்காது.
கடவுளை நினைப்பதற்கெனத் தனியாக நேரம் ஒதுக்குவதில்லை
கஷ்டத்தைக் கொடுப்பார்
அப்போது மட்டும் நினைத்துக் கொள்வேன்.
என்னவென்றே தெரியாது
ஒரு கழுதையின் வயசு.
வேலை தேடி அலையும்போதுதான் தெரிகிறது
ஏழு கழுதை வயசு.
உலகிலேயே புவியீர்ப்பு விசை அதிகமாக உள்ள இடம் எதுவென்று கேட்டால்,
பசியோடு நடந்து செல்பவர்களின் காலடி என்பேன்.
எப்போதும் யாரோ ஒருவரின் துணையைத் தேடிக்கொண்டேதான் இருக்கிறது தனிமை.
வயல்வெளிகளின் மேல் வந்துவிட்ட தார்ச்சாலைகளில் நாட்டு மாடுகள் சாணி போடுகின்றன
கார்களும் பைக்குகளும்
உழுதுகொண்டே செல்கின்றன
இன்றைக்காவது தெரிவார் “நம்பிக்கையில் பக்தன்”
இன்றைக்கும் வரப்போவதில்லை
“சலிப்போடு பூசாரி”
கண்ணீர் அஞ்சலிப்
போஸ்டரிலும் சிரித்துக்கொண்டே
இருக்கிறான் நண்பன்.
போலீஸ்காரர்களும்
சூழ்நிலைக் “கைதி”தான்..
வாடகைக்கு வீடு மாறும் போதெல்லாம்
பாட்டி தன் அடையாளத்தைப்
பழைய வீட்டில் பதித்துவிட்டு வருகிறாள்
முற்றத்தில் வெற்றிலைக் கறைகளால்.
காலம் வேகமாய்ச் செல்கிறது
இன்றை முந்த நினைக்கவில்லை
நாளை.
கோவிலுக்கு வழிபட வருவோரையும்
கடவுள்களாக மாற்றுகிறார்கள்
பிச்சைக்காரர்கள்.
சிறகுகள் நனைந்த பிறகும்
பறக்கிறது பறவை
சிறகு உலர்த்த.
ஒவ்வொரு கவிதையும் சிறப்பாக இருக்கிறது….
வாழ்த்துக்கள் சங்கர்…
அதிலும் புவிஈர்ப்பு விசை என்னை மிகவும் ஈர்த்தது…
நன்றி ப்ரோ…😊😊