மிளகு  அத்தியாயம்   நாற்பத்தெட்டு   

2001   அம்பலப்புழை,மங்களூர்

அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அதிகாலை ஐந்து மணிக்குச் சுறுசுறுப்பாக தரிசனம் அளித்துக் கொண்டிருந்தான். 

ஐந்து மணி காலை எல்லாம் ஒன்றுமே இல்லை இவனுக்கு. உறங்கினால் தானே புதுசாக விழிக்க. விடிகாலை அல்லது நடுராத்திரி கழிந்த  மூன்று மணிக்கு மேல்சாந்தியையும், தந்த்ரியையும் எழுப்பி விடுவான் இவன். 

இந்த பூஜாரிமார் கோவில் தெப்பக்குளத்தில் ஒரு சம்பிரதாயத்துக்காக நீராடி, கோவில் பரப்பில் அருவி போல் மிதமான சூட்டோடு வெந்நீர்   பிரவகிக்கும் நவீனமான குளிமுறியில், என்றால் குளியலறையில், கால்கேட் பற்பசையால் தந்தசுத்தி செய்து மைசூர் சந்தன சோப் தேய்த்து நீராடுவார்கள். 

சில சமயம் நன்றாக மழை பெய்யும்போது அல்லது கோடை காலத்தில் குளம் வற்றி பாசி மிதக்கத் தண்ணீர் கொஞ்சம் போல சிறுக்கும்போது, இன்னும் நுண்ணிய சம்பிரதாயபூர்வம் குளத்து நீரை ஒரு சிறு பாத்திரத்தில் எடுத்து வந்து அதைச் சிரசில் ஊற்றிக்கொண்டு அடுத்து இவர்கள் குளிமுறி ஸ்நானம் செய்வது வழக்கம். 

இவனுக்கு திருக்குளத்து நீரைக் குடங்களில் துணி சுற்றி வடிகட்டி வைத்து நாள் முழுவதும் திருமஞ்சனம் செய்விப்பது வழக்கமாகப் போனது. இவனுக்கு கோல்கேட் பற்பசையும், ஷவரில் வெந்நீரும் விலக்கி வைக்கப்பட்டவை. 

குளித்து முடித்ததும் காலை மூன்றரை மணிக்கு சூடும் சுவையுமான காப்பி பானம் செய்ய இவனுக்குக் கிட்டாது. காலை ஐந்து மணிக்கு துளசி இலையும், கற்பூரமும், ஏலக்காயும் ஊறிய குளிர்ந்த நீரில் ஸ்நானம் முடித்து பாலும் சோறும் நெய்யும் ஆராதனையாக இவனுக்கு அளிக்கிறார்கள். 

நடுப்பகல் வரை இவனுக்கு அவ்வப்போது சிறு கிண்டியில் பால் தரப்படுகிறது. குடிக்க இல்லை, குளிக்க. 

அப்புறம் சற்று நேரம் ஸ்ரீகிருஷ்ணன் அதிகாரம்தான். தினசரி நடுப்பகலுக்கு அம்பலப்புழை பால்பாயசம் இவனுக்கு நைவேத்தியம் ஆகிறது. பொன் நிறத்தில் பாலும் நெய்யும் சர்க்கரையும் தேங்காயும் கலந்து மர அடுப்பில் காய்ச்சப்படும் பாயசம் நாள் தவறாமல் இவனுக்கு உணவு.

”பகல் வரைக்கும் இங்கே இருந்தால் தான் பால் பாயசம் கிடைக்குமா?” வசந்தி தெரிசாவைக் கேட்டாள். 

“இதுக்காகன்னு கோவில் வாசல்லே காத்துண்டிருக்க முடியுமா?” 

திலீப் ராவ்ஜி சிரித்தார். ”என் அத்யந்த சிநேகிதன் கஜானன் மோதக்குன்னு ஒரு மராட்டிக்காரர் இந்த அம்பலப்புழை பால் பாயசத்துக்கு சொத்தையே எழுதி வைப்பார், இருந்தால். ஆனாலும் என்ன, வருஷம் ஒரு தடவை பம்பாய்லே இருந்து வந்து என்னையும் ஸ்ரீகிருஷ்ணனையும் பார்த்து குசலம் விசாரிச்சு ரெண்டு நாள் என்னோடு தங்கி இருப்பார். லிட்டர் கணக்கா அம்பலப்புழை பால் பாயசம் வாங்கி இந்த ரெண்டு நாளில் அவரும் குடிச்சுண்டே இருக்கறதோடு எனக்கும் அகல்யா இருந்தபோது அவளுக்கும் வாய் நிறைய வயறு நிறையச் சாப்பிடக் கொடுப்பார். இப்போ கூட போன மாசம் வந்திருந்தார். நானும் அவரும் தான்”. திலீப் ராவ்ஜி மௌனமானார்.  

கோவில் கிழக்கு வாசல் கடைகள் ஐந்து மணிக்கே திறந்து சுறுசுறுப்பாக ஆராதனைப் பொருட்களை பிரம்புத் தட்டுகளில் வைத்து விற்றுக் கொண்டிருந்தன. திலீப் ஹோட்டல் பணியாளர்கள் நான்கு பேரை அந்த நேரத்திலேயே குளித்து மடி வஸ்திரம் அணிந்து சந்தனக் கீற்று நெற்றியில் துலங்க நிறுத்தி வைத்திருந்தார். அர்ச்சனைப்  பொருள், பால், பழம், புஷ்பாஞ்சலிக்கு பூக்கள், என்று எல்லாம் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்ய அவர்கள் பொறுப்பு எடுத்துக் கொண்டார்கள். 

அம்பலப்புழை வந்துட்டு பாயசம் சாப்பிடாமலா என்று தில்லியில் அக்கம் பக்கத்து மலையாளிகள் கேட்டுப் புச்சமாகப் பார்ப்பதைத் தவிர்க்க அந்த அமிர்தத்தை ஒரு மடக்காவது எப்பாடு பட்டாவது வாங்கி அருந்திப் போக வசந்தி தீர்மானித்திருந்தாள் போல திலீப்புக்குத் தோன்றியது. 

“கவலையே படாதீங்க, தெரிசாம்மா வீட்டிலே பகல் பனிரெண்டு நாற்பது நிமிஷத்துக்கு அதாவது ஸ்ரீகிருஷ்ணனுக்கு இங்கே படைத்து பத்து நிமிஷத்திலே உங்களுக்கு பால் பாயச பிரசாதம் வந்து சேர்ந்திடும்” என்று நல்ல வார்த்தை சொன்னார் அவர். 

பாயசம் குடிக்கலாமே என்று சங்கரன் வசந்தியிடம் சொன்னபடி முகத்தைத் துடைத்துக் கொண்டார். அதிகாலையிலும் அவர் முகம் வியர்த்திருந்தது. 

வெளிப்பிரகாரம் சுற்றி உள்ளே போகும்போது சங்கரா சங்கரா என்று சத்தம் தாழ்த்தி யாரோ அழைத்தது காதில் பட சங்கரன் நின்றார். மற்றவர்களும் நின்றார்கள். 

ஆஜானுபாகுவாக ஆறடிக்கு கம்பீரமாக, மலையாளி ஸ்திரி போல  பட்டு அணிந்து, தலை குளித்து ஆற்றி, ஜெயம்மா நின்றிருந்தாள். 

ஊடகச்  செய்தி நிர்வாக நிறுவனத்தின் ஓய்வு பெற்ற தலைமை செயல் இயக்குநர் பிடார் ஜெயம்மா.  நாற்பது வருட நட்பு சங்கரனோடு. ஜெயம்மா பற்றி சங்கரன் அவர்கள் இருவரோடும் 1960-களில் மாலைக் கல்லூரியில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த நண்பர்களிடம் வேடிக்கையாக விநியோகிக்கத் தயாரித்த அறிக்கை இப்படிப் போகும் –

பிடார் ஜெயம்மா குரல் கணீரென்று ஆட்சி செய்யும். அந்தக் குரலில் பேட்டி எடுக்க ஆரம்பித்தால் பிரதம மந்திரி கூட வெகு வினயமாக, தலைமை ஆசிரியை முன்னால் நிற்கிற பள்ளிக்கூடப் பிள்ளை போல் எழுந்து நின்று பதில் சொல்வார். சில இளைய மந்திரிகள் ஜெயம்மா ஏதாவது கேட்டால் ஒரு தடவை வாய்க்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டு பதற்றம் குரலில் வராமல் இருக்க முயற்சி செய்து தோற்றபடி பதில் சொல்வது உண்டு. பிரதமரின் மகளுக்கு நெருங்கிய சிநேகிதி. பத்திரிகை வட்டாரத்தில் சுவாரசியமான ஆனால் பிரசுரிக்க முடியாத செய்திகளை பத்திரிகைக்காரர்கள் பேசியும் கேட்டும் சந்தோஷப்படும் போது ஜெயம்மா சொன்னதாக ஒரு சொல் சேர்த்தால் அதன் நம்பகத்தன்மை வெகுவாக உறுதிப்பட்டு விடும்.

உலகச் செய்திகளை தினசரி அலசி ஆகாசவாணியில் நல்ல இங்கிலீஷில் நடுநிலைமையான நியூஸ் அனாலிசிஸ் கொடுக்கிற முற்போக்குக்குக் கொஞ்சமும் குறையாத மடி ஆசாரம்.

 கன்னடப் பிரதேசத்தில் மலைப் பகுதி நகரமான பிடார் ஊர்க்காரி. எந்தக் காலத்திலேயோ சோழ மகராஜாவிடமிருந்து தப்பித்து ராமானுஜாச்சாரியார் கன்னட நாட்டில் போயிருந்தபோது கூடப்போன தமிழ் அய்யங்கார்களின் வம்சத்தில் வந்தவள் அவள். தமிழா கன்னடமா என்று உறுதி செய்ய முடியாத மொழியில் பேசினாலும் அநேகமாக அபிநயமும் கூடவே சேர்ந்து வருவதால் புரியாமல் போகாது.

இன்னும் ரெண்டு மூணு பாரா வரும் வியாசம் அது. சங்கரனுக்கு நினைவு வந்தவரை மனதில் நினைத்துப் பார்த்தார்.  நினைக்கவே மனதுக்கு இதமாக, திடமாக இருந்தது சங்கரனுக்கு.

”என்னடா சங்கரா எதுக்கு மூஞ்சியை தூக்கி வச்சுண்டு நிக்கறே. சந்தோஷமா இருடா”. 

சங்கரன் தோளில் தட்டி ரகசியம் பேச ஜெயம்மா முற்பட முன்னால் போய்க் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் சப்த கோலாகலங்களைச் செவியோர்த்துத் திரும்பிப் பார்த்துப் போனார்கள்.

வசந்தி ஜெயம்மாவின் கையைப் பற்றியபடி நடந்தாள். 

“ஜெயா அக்கா, உங்களை மங்களூர்லே வச்சு உங்காத்துலே வந்து பார்க்க நினைச்சிருந்தோம். It is a pleasant surprise you have come here”. 

“நானும் நீங்க வர்றதுக்கு காத்திருக்க முடியாம புறப்பட்டு வந்துட்டேன்” என்றாள் ஜெயம்மா. ”அதற்காக மங்களூர் வராமல் தப்பிக்க முடியாது” என்று கூட்டிச் சேர்க்கவும் செய்தாள். 

”இங்கேயும் பக்கத்திலேயும் எல்லா கோவிலும் ஒரு நாள்லே தரிசனம். அப்புறம் மங்களூர் உங்களோடு”. 

வசந்தி சொன்னது ஜெயம்மாவுக்கு இஷ்டம். 

“ஜெயம்மா யூ என் ஐ கேண்டீன் தோசை நினைவு இருக்கா?” 

சங்கரன் கேட்க, குழந்தை போல் அவர் கன்னத்தைத் தட்டி இருக்குடா நன்னா என்றாள் ஜெயா. 

”தயவாயி ஸ்ரீகோவிலில் நிசப்தத பாலிக்குக” என்றபடி ஒரு கிழவர் சந்தன அபிஷேகம் செய்து கொண்டதுபோல் வாசனையடிக்க மெல்லச் சொல்லியபடி கடந்து போனார். 

சங்கரன் உதட்டில் விரல் வைத்து விளையாட்டாக ஜெயம்மாவிடம் சைகை காட்டினார். அவர் இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் வழக்கமான உணர்ச்சி வெளிப்படுத்தி சாதாரணமாகப் பேசிச் சிரித்திருப்பது வசந்திக்கும் சாரதாவுக்கும் ஒரே போல் நிம்மதி கொடுத்தது. சீக்கிரம் சங்கரன் உடலும் மனமும் சரியாகி விடும் என்று நம்பிக்கை பற்றிப் படர்ந்தது இருவருக்கும். 

கர்ப்ப கிருஹத்தில் இருந்து திரை சற்றே விலக்கி வந்த  தந்த்ரி அர்ச்சகர் யார் பேரில் அர்ச்சனை என்று கேட்க, திலீப் ராவ்ஜி சங்கரனைக் காட்டினார். 

“வரூ! ஏது நக்‌ஷத்ரம்? பார்ய ஆராணு? குடும்பாங்ஙங்ஙள் பெயரும் நக்‌ஷத்ரவும் பறையுவில்” என்று தடதடவென்று அடுக்கினார். தெரிசா, வசந்தி காதில், ஒய்ப்ஃப கூப்பிடறார் என்றாள். ஒரு வினாடி கூட யோசிக்காமல் வசந்தி ‘சாரதா, நீயே அவரோடு இரேன்” என்ற போது கோவில் மணி முழங்க ஆரம்பித்தது. முதல் தடவையாக சாரதா ஏற்றுக்கொள்ளப்பட்ட நிமிடம் அது.

திரை விலகியபோது மஞ்சள் நிறத்தில் எரியும் தீபங்களும், உயர்ந்து ஐந்து முகம் திரி கொளுத்தி நல்ல எண்ணெயும் சுகந்தமான தேங்காய் எண்ணெயும் சந்தனமும் சேர்த்து மணக்க ஸ்ரீகிருஷ்ணன் இங்கே சிரித்தபடி நின்றான். 

சாரதா சங்கரனின் கைகளைச் சேர்த்து மார்புக்கு நேரே நீட்டி வணங்க வைத்து அச்சுதம் கேசவம் சொல்லுங்க என்றாள் மிக மெதுவாக. 

சத்தம் அதிகமாக்கி தரையில் அமர்ந்து இருகையும் ஊன்றி சங்கரன் அச்சுதம் கேசவம் சொன்னார். 

சத்தம் அதிகமாக, யாரோ முணுமுணுக்க, திலீப் ராவ்ஜி மிக சுருக்கமாக அவரிடம் சொன்னது – ”போன மாசம் ஆப்கானிஸ்தானுக்கு ஹைஜேக் ஆன ப்ளேன்லே இருந்த ஹோஸ்டேஜ். இப்போதான் பேசறார். கொஞ்சம் பொறுத்துக்கணும். உயிரோட விளிம்புக்கு போயிட்டு திரும்பினவர்”. 

அதற்கு அப்புறம் சங்கரன் குரல் உயர்த்த சந்நிதியில் ஒரு கண்ணும் அவர்மேல் ஒன்றுமாக சக பக்தர்கள் வழிபட்டு இருந்தார்கள். 

திலீப் ராவ்ஜி, அவர் நண்பர்களிடம், முக்கியமாக பிஷாரடி வைத்தியரிடம் கலந்தாலோசித்து ஸ்ரீகிருஷ்ணனுக்கு வரிசையாக அபிஷேகங்களை ஏற்பாடு செய்திருந்தார். 

களப ஆராதனை என்ற சந்தன அபிஷேகத்தில் தொடங்கியது சங்கரனின் உயிர் காத்ததற்கான நன்றியாக.  அடுத்துப் பால் அபிஷேகம் ஆனது. பெரிய பாத்திரங்களில் நிறைத்த பாலை உயர்த்திப் பிடித்து ஸ்ரீகோவில் பணியாளர்கள் மெல்ல சரிக்க, ஸ்ரீகிருஷ்ணனை பசும்பால் தாரையாக மேலே வழிந்து பெருகி நின்றது. தண்ணீர் ஸ்நானம் இவனுக்கு அடுத்தபடி. 

தொடர்ந்து பஞ்சாமிருதம் அபிஷேகம். ”இது பழனி முருகனுக்கு செய்யற அபிஷேகம். மாமனுக்கும் மருகனுக்குக் கொடுக்கற பஞ்சாமிர்த மரியாதை” என்றார் திலீப் ராவ்ஜி அங்கே குழுமியிருந்தவர்கள் ரசித்துத் தலையசைக்க. 

மறுபடி தண்ணீர்க் குளியல். அடுத்து புது மஞ்சளை விழுதாக அரைத்துப் பூசி மஞ்சள் அபிஷேகம். சுத்தமான நீரால் திருமஞ்சனம் செய்வித்தல் அடுத்தது. ஸ்ரீகோவிலும் பிரகாரமும் சந்தன வாசத்தில் மூழ்கி இருக்க, களப அபிஷேகம் அடுத்து, தொடர்ந்து தூய்மையான தண்ணீரால் மஞ்சனம். அடுத்து மல்லிகை, ஜவந்தி, முல்லை, கனகாம்பரம், ரோஜா மலர்கள் கூடை கூடையாக உயர்த்திச் சொரிந்து ஸ்ரீகோவிலையே பூவிதழ்களாலும் நல்ல மலர் மணத்தாலும் மூழ்கியிருக்கச் செய்து புஷ்பாபிஷேகம். 

அர்ச்சனைகள் தொடங்கியதும் திலீப் ராவ்ஜி ஸ்ரீகோவிலுக்குள் வந்து நின்ற பிஷாரடி வைத்தியரைத் தலையசைத்து வரவேற்றதை தெரிசா கவனித்தாள்.

வெளி மண்டபத்தில் எல்லோரும் கூட்டமாக வந்து புகைப்படத்துக்கு நிற்பது போல் ஒரு நிமிடம் நின்றார்கள். புகைப்படமே தான். திலீப் ராவ்ஜி ஏற்பாடு செய்திருந்த புகைப்படக்காரர் சடசடவென்று கேமிராவில் அவர்களை அடக்கினார். சங்கரனையும் வசந்தியையும் பிஷாரடி வைத்தியருக்கு அறிமுகப்படுத்தினார் திலீப்.

பிஷாரடி ஒரு நிமிடம் கண் மூடி யோசித்துப் பிறகு சொன்னார் – ”சங்கரன் சார். உங்க தாத்தா பெரிய சங்கரன் உங்க பாட்டி பகவதிக்குட்டியம்மாளை கல்யாணம் செய்துக்கிட்டது அம்பலப்புழையிலே தான். அந்த தினம் இன்னிக்குத்தான். நேற்றுதான் பழைய மருத்துவ டயரிக் குறிப்புகளைப் பார்த்துட்டிருந்தேன் வீட்டிலே. இந்தத் தேதியும் மற்ற விவரமும் நினைவு வந்தது”. 

சங்கரன் திரும்ப உணர்ச்சிவசப்பட்டார். கோவில் வெளி மண்டபத்தில் குஞ்சன் நம்பியாரின் ஓட்டந்துள்ளல் நிகழ்ச்சிக்கு வாசித்த மிழவு என்ற பெரிய முரசு வைத்த மேடைப் பக்கம் நின்று ரகுபதி ராகவ ராஜாராம் உணர்ச்சிகரமாகப் பாடினார். 

பிஷாரடி வைத்தியர் முக மலர்ச்சியோடு சொன்னார் – ”இன்னும் சில மாதங்களில் இவர் சாதாரணமாகி விடலாம். மனதில் ஏற்பட்ட கலவரமும் உயிர் பயமும் மெல்ல வடிந்து கொண்டிருக்கிறது” 

வசந்தி பின்னால் திரும்ப் சந்நிதானத்தில் பார்த்து கும்பிட ஜெயம்மா, ”சங்கரா, பாரு உனக்கு இனி நல்ல காலம் தானாம். எது ஒண்ணு விஷயமாகவும் நீ கவலைப் படாதே. இத்தனை பேர் உனக்காக இருக்காங்க. தைரியமா இரு” என்று உரத்த குரலில் பொறுப்போடு பேசும் தொனியோடு நல்ல வார்த்தை சொன்னபோது எல்லோருக்கும் ஆசுவாசம்.

ஜெயம்மாவையும் பிஷாரடி வைத்தியரையும் அவரவர்களே மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து கொண்டார்கள். லண்டனில் ஓய்வு பெற்று கௌரவப் பணியாற்றும் ப்ரபசர் பிஷாரடி மேல் ஜெயம்மாவுக்கு உடனடி மதிப்பு ஏற்பட்டது. ஜெயம்மா மேல் தெரிசாவுக்கும் நல்ல இணக்கம் உண்டானது. 

தெரிசாவை அவள் சங்கரனுக்கு என்ன உறவு என்பதை ஒரு மாதிரி ஊகித்திருந்தாள் ஜெயம்மா. திலீப் பழைய தமிழ்ச் செய்யுளைச் சொன்னார் – ’கற்றாரை கற்றாரே காமுறுவர். நிறைகுடமாகக் கற்றுத் தேர்ந்தவர்களை அவர்களைப் போல் கற்றவர்களே இனம் கண்டு அன்பும் மரியாதையும் அளிப்பார்கள்’. அந்த உரைக்கு இன்னொரு உரையாக எளிய இங்கிலீஷ், தமிழ் சேர்த்து இன்னொரு முறை சொன்னார் திலீப் ராவ்ஜி. 

ஜெயம்மா பக்கத்தில் இருக்கப்பட்ட கோவில்களைத் தரிசித்து வர ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தாள். 

“போய்  ராத்திரி ஏழு மணியை ஒட்டித் திரும்பி வந்தால், வேணாம், பத்து மணி ஆகலாம். நாளைக்கு காலையிலே சந்திக்கிறேன்” என்றாள். 

அவளுக்கு நடாஷா இருந்த மூன்று நட்சத்திர ஹோட்டலில் தள்ளுபடி கட்டணத்துக்கு திலீப் ராவ்ஜி ஏர்கண்டிஷன் அறை நிமிஷத்தில் ஏற்பாடு செய்து கொடுத்து விட்டார்.

ஜெயம்மா காலைப் பலகாரம் சாப்பிட அவள் தங்கப் போகும் ஹோட்டலுக்கே நேரே இட்டலி, வடை அனுப்பி வைப்பதாக திலீப் ராவ்ஜி சொல்ல, தீர்க்காயுசாக இருங்க சார் என்று வாழ்த்தினாள் ஜெயம்மா.

புறப்படும் முன் ஜெயம்மா வசந்தியை அருகில் கூப்பிட்டுச் சொன்னாள் – ”சங்கரன் ரொம்ப ரொம்ப மனசு நொறுங்கிப் போயிருக்கான் பாவம். மனத் திடம் திரும்ப வர. அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் நிச்சயம் கைகொடுப்பான். அதோடு கூட ஒண்ணு. நான் வெளிப்படையா சொல்றேன் வசந்தி. நீ இவனோட இந்த நிலைக்கு பழகிண்டிருக்கே. பார்த்தேன். அது நல்லது. இவன் மூத்திரம் போகணும்னாக் கூட  நீதான் குஞ்சாமணியைப் பிடிச்சுப் போக வைக்கணும். இன்னும் கொஞ்ச நாளுக்கு நீதான் அவனுக்கு எல்லாம். கூட அந்த பொண்ணு சாரதா தெரிசா, அவளையும் அவளுக்கு முடிந்தால், சங்கரனைப் பார்த்துக்க உன்னோடு இருக்கச் சொல்லு. அவா தொடர்பு எங்கேயோ extra marital affair ஆக ஆரம்பிச்சு, எங்கேயோ போயிட்டிருக்கு., அதுவே நல்லதுக்குத்தான். அவளும் வரட்டும். The more the merrier.. கவனிச்சுக்கோ சங்கரனை”

பிஷாரடி திலீப் ராவ்ஜியிடம் சொன்னார் ”நீங்க எல்லோரும் என்னோடு என் வீட்டுக்கு வரணும். பழைய குடும்ப ஏடுகளையும் கனமான பழைய காகிதங்களையும் அவசியம் பார்க்கணும். கொஞ்ச நேரம் தான். வாங்க”

போகிற வழியில் ஜான் கிட்டாவய்யர் சைவ உணவகத்தில் எல்லோரும் காலைப் பலகாரம் கழித்து பக்கத்தில் தான் பிஷாரடி வைத்தியர் வீடு என்பதால் நடந்தே போகத் தீர்மானித்தார்கள். சங்கரன் நிறைவாகச் சாப்பிட்டதில் வசந்திக்கும் தெரிசாவுக்கும் ஓர் ஆறுதல்.

 சாப்பிட்டு விட்டு ஹோட்டல் வாசலுக்குப் போனபோது வசந்தி தெரிசாவிடம் காய்கறி நறுக்கும் நீள ஆளோடியில் பூட்டி வைத்திருக்கும் ஒரு பழைய கதவைக் காட்டி ஏன் பூட்டி வச்சிருக்கு என்று கேட்டாள். 

அது வந்து என்று தெரிசா மென்று முழுங்க, ”அதுவும் உங்க எல்லோருக்கும் பாத்தியப்பட்டது” என்றார் பிஷாரடி வைத்தியர்.  கூட்டமாக அனைவருக்கும் ஆர்வம் அதிகமானதே தவிர குறையவில்லை. பிஷாரடி வைத்தியர் வீட்டுக்கு உடனடியாக அவரோடு போக ஆவல் ஏற்பட்டிருந்தது அனைவருக்கும். ஆனால் சங்கரன் உடல் இன்னும் அவரோடு இணங்கவில்லை.

சங்கரன் உறக்கம் வருது என்று தரையில் படுத்து நித்திரை போக முற்பட்டார்.  வசந்தியும் தெரிசாவும் அவரைக் கைத்தாங்கலாக தெரிசாவின் காரில் ஏற்றி தெரிசா வீட்டுக்கு அழைத்துப் போய் உறங்க வைத்தார்கள்.  

அவர் விழித்ததும் எல்லோரும் சந்திக்கலாம் என்று பிஷாரடி வைத்தியர் சொன்னதை எல்லோருமே ஆர்வத்தோடு கேட்டார்கள். திலீப் ராவ்ஜிக்கு மிளகு உற்பத்தியாளர் –வர்த்தகர் கவுன்சில் வேலை இருப்பது நினைவு வந்தது. அந்தக் கூட்டத்தை நாளை வைத்துக்கொள்ளலாம். ஃபோன் செய்து தள்ளிப் போட்டார். அப்பா பரமன் வீட்டில் குளித்து காலை பசியாறியதையும் உறுதி செய்து கொண்டார். இனி ஒரு முழு நாள் பிஷாரடி வைத்தியரோடு.

சங்கரன் அரை மணி நேரம் புரண்டு படுத்து அரைகுறை உறக்கத்தில் இருந்தார். கோவில் சந்நிதியில் மஞ்சள் நிற சந்தன மணம் வீசும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க, தூரத்தில் வெடிவழிபாடு நடக்கும் ஓசை பெரிதாக வர ஏதோ பிதற்றியபடி விழித்துக் கொண்டார். 

வசந்தி உடனடியாக சங்கரனின் அரைக்கட்டில் கை நுழைத்து குழந்தையைப் பரிசோதிக்கிறது போல் தடவிப் பார்த்தாள். மூச்சா போகலே என்று தெரிசாவிடம் சிரித்தபடி சொன்னாள். 

அடுத்த பதினைந்தாவது நிமிடம் தெம்பாக ஆளுக்கொரு குவளை ஃபில்டர் காபி குடித்து விட்டு திலீப் ராவ்ஜி காரிலும் தெரிசாவின் புதுக் காரிலும் பிஷாரடி வீட்டுக்குப் போனார்கள். நடக்கிற தூரம் தான். என்றாலும் நடக்க சோம்பல். எல்லோருக்குமான அலைச்சல் சம்பந்தமான அலுப்பு அது.

பிஷாரடி வைத்தியர் வீட்டில் அவருடைய தொண்ணூறு வயதான தாயார் நாராயணி வாரஸ்யார் அம்மா எல்லோரையும் வரவேற்றாள். பிஷாரடி வைத்தியர் விசாலமான ஹாலில் பத்தமடை பாய் விரித்து உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் பனை ஓலை ஏடுகளும், காகிதங்கள் அடுக்கிய மரப் பெட்டிகளும் திறந்தபடி இருந்தன. பிஷாரடி அவற்றை ஆர்வத்தோடு வாசித்துக் கொண்டிருக்கிறார் என்பது புலனானது.

அங்கே பிஷாரடி வைத்தியர் அருகே சக்கர நாற்காலியில் ஒரு முதுபெரும் கிழவர் உட்கார்ந்திருந்தார். எல்லோருக்கும் நமஸ்காரம் என்று இருகை குவித்து வணங்கினார் அவர்.   

“எங்கப்பா பரமேஸ்வரன் நூற்றுப்பத்து வயசு”. திலீப் ராவ்ஜி சொன்னார். 

எல்லோரும் வந்த காரியத்தை மறந்து பரமன் என்ற பரமேஸ்வர அய்யரையே பார்த்தபடி இருக்கிறார்கள். நான் தான் அவரை வரச்சொன்னேன் என்றார் பிஷாரடி வைத்தியர்.

நாராயணி வாரஸ்யர் அம்மா நாரிங்கா ரசம், என்றால், எலுமிச்சை சாறும், வென்னீரும் தேனும் இஞ்சிச் சாறும் கொஞ்சம் போல் கலந்து வேலைக்காரியிடம் கொடுத்தனுப்பிய பானத்தை அமிர்தம் அமிர்தம் என்று பரமனில் தொடங்கி வந்திருந்த எல்லோரும் ரசித்து அனுபவித்துப் பருகி குரலை சரிப்படுத்திக் கொண்டார்கள். பிஷாரடி வைத்தியர் ஒரே மடக்கில் குடித்துச் சிரிக்கிறார்.

அவர் பேச ஆரம்பித்தார். மற்றவர்கள் மிகுந்த கவனத்தோடு கேட்டார்கள் – ”இன்னிக்கு ஒரு கல்யாண நாளின் ஆண்டு விழான்னு சொன்னேன் நினைவிருக்கலாம். ஆமா, அம்பலப் பரம்பில் வைத்துச் சொன்னதுதான்.

”நம் சங்கரன்.. சின்னச் சங்கரன் சாரோட தாத்தா பெரிய சங்கர அய்யர் அம்பலப்புழை பகவதிகுட்டி அம்மாளைக் 1875-ம் வருஷம் கல்யாணம் செய்துகொண்ட நாள் இது.  பெரிய சங்கரன் மனைவி பகவதிகுட்டி அம்மா அம்பலப்புழை கல்யாண சமையல்காரர் குடும்பம். பகவதிகுட்டியம்மாவோட சகோதரர் கிட்டாவய்யர், கிறிஸ்துவராகி ஜான் கிட்டாவய்யர் ஆனார். அவரோட கொள்ளுப்பேரன் மகள் தான் சாரதா தெரிசா.

”பெரிய சங்கரனுடைய மாமன் வைத்தியநாத அய்யரின் மகன்கள் நீலகண்டய்யன் மற்றும் மகாலிங்கய்யன். நீலகண்டய்யரோட மூத்த மகன் மாநில அமைச்சராக இருந்த கிருஷ்ணன் நீலகண்டன். இளைய மகன் பரமேஸ்வர ஐயர். இங்கே இருக்கார் அவர். அவரோட மகன் தான் திலீப் ராவ்ஜி. 

”சின்னச் சங்கரன் சாருடைய மனைவி வசந்தலட்சுமி என்ற வசந்தி”. 

பிஷாரடி சொல்லும்போது சங்கரன் குறுக்கிட்டு அவங்க அப்பா சாஸ்திரிகளாக இருந்தார் தில்லியிலே. மெஸ் வச்சு நடத்தினார் என்றார். இதை அவசியம் சொல்லணுமா என்று வசந்தி உதடு சுழித்துச் சொன்னாள்.

”சின்னச் சங்கரன் சாரோட இன்னொரு பெண்டாட்டி சாரதா தெரிசா. இதை இதுவரை வெளிப்படையாக சொல்லலே. இனி கணக்கிலே எடுத்துக்கலாம்”.

 வசந்தி சொல்ல மற்றவர்கள் மௌனமாக அவளையே நோக்குகிறார்கள். சங்கரனைப் பார்க்கவில்லை.

”ஆக நீங்க எல்லோரும் ஏதோ விதத்தில் உறவு முறையில் தொடர்பு உள்ளவங்க. உங்க மூதாதையர் பற்றி ஒரு நாலஞ்சு தலைமுறை செய்தியாவது அம்பலப்புழை பகவதிக்குட்டியம்மாள் குடும்பம் மூலம் என் மூதாதையர் மருத்துவம் பார்த்த குறிப்புகளிலே சேர்ந்து வந்திருக்கு. என் அம்மா நாராயணி வாரஸ்யர் அம்மாள் கவடி நிரத்து, என்றால், சோழி குலுக்கிப்போட்டுப் பார்த்து சொன்னது என்னன்னா உங்க எல்லோரோடும் தொடர்பு கொள்ள கொஞ்சம் நாளாக யாரோ முயற்சி செய்தபடி இருக்காங்க. அவங்க உடம்போட இருக்கப்பட்டவங்களா, அல்லது ஆவி ரூபமா தெரியாது. 

”பகவதிகுட்டியம்மாவின் மூத்த சகோதரர் குப்புசாமி அய்யரோட மகன் மகாதேவய்யர் குடும்பத்தோடு மங்கலாபுரம் போனபோது காணாமல் போய்ட்டார். காலம் என்ற பரிமாணத்திலே அவங்க முன்னும் பின்னும் அலைக்கழிக்கப் பட்டு நல்லடக்கம் ஆக வெகுநாளாச்சு. அவரோட ஒரே மகள் குஞ்ஞம்மிணியம்மா தெரிசா சாரதா அம்மா ஹோட்டலில் காய் நறுக்கும் ஆளோடிக் கோடி அறையில் உடலில்லாமல் அடங்கியிருக்காங்க. பூட்டு போட்டு பூட்டி வைத்த அறை அது. அதே போல் காலத்திலே குறுக்குவெட்டிப் போன யாரோ இந்தப் பெரிய குடும்பத்தோடு எப்படியாவது தொடர்பு ஏற்பட முழுமுனைப்பாக இருக்காங்க. அவங்க யார், ஏன் தொடர்புக்கு ஆர்வம் காட்டறாங்க இதெல்லாம் நீங்கதான் எனக்குச் சொல்லணும். கடந்த மூணு மாசத்திலே நீங்க ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது விநோதமாக ஏற்பட்டுதா, கொஞ்சம் யோசித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்க” 

பிஷாரடி வைத்தியர் நீளமாகப் பேசி நிறுத்தினார். 

”அசுரவித்து விதைச்ச மாதிரி ஒரு ராத்திரியிலே மிளகுக்கொடி வீட்டை சுற்றி வளர்ந்தது என்னால் மறக்க முடியாத அசம்பாவிதம்” என்றாள் தெரிசா.

மிளகு வாடை தீர்க்கமாக அந்த வீட்டைச் சூழ்ந்தது.

 ஏதோ சத்தம் வாசலில் கேட்டது. பிஷாரடி வாசலுக்குப் போய்ப் பார்த்துவிட்டு, மிளகு வாடை சல்யம் தொந்தரவு மறுபடியும் ஆரம்பம் என்றார். வாசல் நிலையைப் பிடித்து நின்றபடி வந்திருந்தவர்களிடம் சொன்னார் – அது யார் அந்த சின்னப் பையன். மிளகு மூட்டை மூட்டையாக அடுக்கிய இடத்திலே இவன் என்ன பண்றான்? ஓ கதவு சாத்தியிருக்கு.

சங்கரன் உட்கார்ந்தபடியே உறங்கத் தொடங்கியிருந்தார்.

Series Navigation<< மிளகு – அத்தியாயம்  நாற்பத்தேழு மிளகு அத்தியாயம்  நாற்பத்தொன்பது  >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.