- மார்க் தெரு கொலைகள் – 1
- மார்க் தெரு கொலைகள் -2
- மார்க் தெரு கொலைகள் -3
- மார்க் தெரு கொலைகள்- பகுதி 4
- மார்க் தெரு கொலைகள்- இறுதிப் பகுதி
தமிழாக்கம்: பானுமதி ந

டூபான் தொடர்ந்தார்: “அந்த நாடா இறந்த அந்த இருவரிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே, அந்த ரிப்பன், மால்டீஸ் கப்பலைச் சேர்ந்த ஒரு ஃப்ரெஞ்ச் கடலோடியினுடையது என நான் அனுமானித்து அந்த விளம்பரத்தை வெளியிட்டதில் எந்தக் கெடுதலையும் செய்யவில்லையே! அட, அப்படியே நான் தவறான ஊகத்திற்கு வந்திருந்தாலும், அந்தக் கடலோடி என்ன நினைத்துக் கொள்வார்?- நான் சில சூழல்களால், தவறாக வழி நடத்தப்பட்டு இப்படி ஒரு விளம்பரத்தைக் கொடுத்துவிட்டேன் என்று தானே எண்ணுவார்? அவை எத்தகைய சூழல்கள் என்றெல்லாம் அவர் கவலைப்படப் போவது இல்லை அல்லவா? ஆனால், நான் சரியாகச் செயல்பட்டிருக்கும் பட்சத்தில், மிகப் பெரும் முடிச்சின் மையத்தைத் தொட்டிருக்கிறேன். குற்றம் அவர் செய்த ஒன்றில்லை; கொலைகள் நடந்துள்ளன என்பதை அவர் அறிவார்; எனவே ஒரு ஃப்ரெஞ்சுக்காரர், இயல்பாகவே, அந்த ஒராங்-ஓட்டானைத் தருமாறு கேட்டு அந்த விளம்பரத்திற்குப் பதிலளிக்கத் தயங்குவார். ஆனால், அவர் மனம் ஒரு காரணத்தைச் சொல்லும்- ‘நான் குற்றம் செய்யவில்லை, எனது ஒராங்-ஓட்டான், எனது ஏழ்மை நிலையில் எனக்குக் கிடைத்த பொக்கிஷம்; ஆபத்து வருமோ என்று சும்மா அச்சம் கொண்டு நான் அதை ஏன் இழக்க வேண்டும்? அந்தக் கொடூரக் கொலைகள் நடந்த இடமும் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள போ டி புலானி (Bois de Boulogne) இடமும் ஒன்றுக்கொன்று வெகு தொலைவில் இருக்கிறது. அந்தக் குரங்கு நிச்சயமாக என் கை வசப்படும். ஒரு பயங்கர மிருகம், இந்தச் செயலைச் செய்திருக்கலாம் என எப்படி சந்தேகம் எழ முடியும்? சின்னதொரு துப்புக் கூட கிடைக்காத காவல் துறை! அப்படியே அந்த மிருகத்தை அவர்கள் கண்டுபிடித்தாலும், நான் அந்தக் கொலைகளைப் பற்றி அறிந்துள்ளேன் என்பதை அவர்களால் நிரூபிக்க முடியாது. அது மட்டுமல்ல, நான் அறிந்துள்ளேன் என்பதை வைத்து என்னைக் குற்றம் சாட்ட முடியுமா என்ன? அந்த மிருகம் என் உடமை என்று இந்த விளம்பரம் சொல்வதால், என்னைப் பற்றி அறிந்துள்ளார்கள் என்பது தானே அர்த்தம்? அந்த மனிதரின் இந்தப் புரிதல் எந்த அளவிலுள்ளது என்பதும் எனக்கு உறுதியாகத் தெரியாது. எனக்கு உடமையான ஒன்று, பெரு மதிப்பு வாய்ந்த ஒன்று, அப்படியே யாருக்கும் ஐயம் எழுந்தாலும், அந்த சந்தேகத்தை அந்த மிருகத்தின் மீது திருப்புவதற்கு இடமிருக்கையில், நான் ஏன் எனது உரிமையைப் பறி கொடுக்க வேண்டும்? என்னையோ, அந்தச் சனியனையோ யாரும் கவனிக்க வேண்டும் என்பதெல்லாம் என் கொள்கையல்ல. நான் அந்த விளம்பரத்திற்கு பதிலளிப்பேன்-ஒராங்-ஓட்டானை பெறுவேன்- இந்த அமளி-துமளியெல்லாம் ஓயும் வரை என் கண்காணிப்பில் வைத்திருப்பேன்.’
இந்தத் தருணத்தில் நாங்கள் படிகளில் காலடியோசையைக் கேட்டோம்.
“தயாராக இருங்கள் உங்கள் துப்பாக்கிகளுடன்” என்ற டூபான், “என்னிடமிருந்து சமிக்ஞை கிடைக்காத வரையில், அவற்றைக் காட்டவும் வேண்டாம், இயக்கவும் வேண்டாம்.” என்றார்.
வீட்டின் முன் வாசற்கதவு திறந்து வைக்கப்பட்டிருந்தது. கதவைத் தட்டாமலும், அழைப்பு ஒலியை எழுப்பாமலும் பல படிகளில் அந்த நபர் ஏறி வரும் அரவம் கேட்டது. ஆனால், இப்போது அவருக்கு ஏதோ தயக்கம். அவர் கீழிறங்கும் ஒலி கேட்டது. டூபான் வேகமாக கதவை நோக்கிச் சென்றார்- அதே நேரம் அந்த நபர் மீண்டும் மேலேறி வரும் அரவம் கேட்டது. இந்த முறை அவர் தயங்காமல், எங்கள் அறைக்கதவைத் தட்டினார்.
உற்சாகமாக அவரை உள்ளே வருமாறு அழைத்தார் என் நண்பர். பார்த்தாலே தெரிந்தது- அவர் ஒரு கடலோடி- உயரம், பருமன். வலுவான சதையுள்ள ஆண், முன்முயற்சியற்றது எனச் சொல்ல முடியாத ‘ஒரு கைபார்த்து விடுவேன்’ எனும் உடல் மொழி மற்றும் அமைப்பு, அவரது முகம், பெரும்பாலும் ஆதவனின் வெண்கதிர்களால் பாதிக்கப்பட்டிருந்தது, அதிலும் பாதி முகம் கன்னங்களிலும், மேலுதட்டின் மீதுமுள்ள பெரிய மீசையாலும், மறைந்திருந்தது. அவர் ஒரு பெரிய கருவேலந்தடி வைத்திருந்தார். அதைத் தவிர வேறு ஆயுதங்கள் இருப்பதாகத் தோன்றவில்லை. கொஞ்சம் வளைந்த அவர், ஃப்ரெஞ்ச் உச்சரிப்பில், (Neufchatelish- ந்யூ சேடலிஷ் போன்ற ஒலிப்பில் இருந்தாலும் பாரிசிய மூலம் தான் என்று கண்டு கொள்ள முடிந்தது) எங்களுக்கு ‘மாலை வணக்கம்’ சொன்னார்.
“அமருங்கள், நண்பரே, நீங்கள் ஒராங்-ஓட்டான் விளம்பரத்தைப் பார்த்து வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்; ஒன்று சொல்லவா- உங்கள் உடைமை, அழகான, மிகவும் மதிப்பு வாய்ந்த அந்த விலங்கு என்பதில் எனக்குப் பொறாமையாக இருக்கிறது. என்ன வயதிருக்கும் அவனுக்கு?”
தூக்க மாட்டாத சுமையைத் தூக்கி வந்தவர்கள் அதைக் கீழே போடும் போது பெறும் நிம்மதியைப் போல, வந்த நபர் பெருமூச்சு விட்டார்; ‘எனக்கு அதன் வயதைச் சொல்லத் தெரியவில்லை. நாலைந்து வயதிற்கு மேல் இருக்காது; அவன் இங்கே இருக்கிறானா?’
“இல்லை, அவனை இங்கே வைத்துக் கொள்ளும் வசதி இல்லை. அருகில் ரூ டு போர்க்கில், விலங்குகளின் காப்பகத்தில் இருக்கிறான். அவனைக் காலையில் நீங்கள் பெறலாம். நீங்கள் அடையாளம் காட்டுவீர்கள் தானே?”
‘நிச்சயமாக, சார்’
“அவனைப் பிரிவது எனக்கு வருத்தமாக இருக்கிறது.” என்றார் டூபான்.
‘ஒன்றுமேயில்லாததற்கு நீங்கள்தான் எத்தனை சிரமம் எடுத்துக் கொண்டுள்ளீர்கள்! எதிர்பார்க்கவே முடியாதது இது. அவனைக் கண்டுபிடித்து பராமரித்தற்காக நியாயமான ஒரு பரிசை உங்களுக்குக் கொடுப்பேன்.’
“நல்லது” என்ற என் நண்பர், “என்ன பரிசைக் கேட்கலாம் என நான் சிந்திக்க வேண்டும். ஆம், இதுதான் சரி, மார்க் தெரு கொலைகள் பற்றி நீங்கள் அறிந்துள்ள அத்தனை விவரங்களையும் என்னிடம் சொல்வதுதான் சிறந்த பரிசாக இருக்கும்.” இந்தக் கடைசி வரிகளை மிகக் குறைந்த தொனியிலும், மிக அமைதியாகவும் சொன்ன என் நண்பர், அதே அமைதியுடன் கதவைத் தாழிட்டு அதன் சாவியை தன் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டார். சிறிதும் படபடப்பின்றி தன் மார்பிலிருந்து துப்பாக்கியை எடுத்து மேஜையின் மீதும் வைத்தார்.
வந்த நபரின் முகம் கருஞ்சிவப்பானது; எழுந்தவர் தன் தடியை எடுத்தார்; ஆனால், அடுத்த நொடியே தன் இருக்கையில் நடுங்கிக் கொண்டே, மரணத்தின் உருவமாக அவர் சரிந்து அமர்ந்தார். ஒரு வார்த்தையும் அவர் பேசவில்லை. நான் அவருக்காக இரங்கினேன்.
“என் நண்பரே, எதற்கு இத்தனை பதட்டம்?” என்று கனிவோடு சொன்ன டூபான், “நாங்கள் உங்களுக்கு ஒரு கெடுதலும் செய்ய மாட்டோம்; ஒரு கனவானுக்கும், ஃப்ரெஞ்சுக்காரருக்கும் உரிய மரியாதையை நாங்கள் தருவோம். உங்களைக் காயப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. மார்க் தெருவில் நடந்த வன்முறை கொலைகளைப் பொறுத்த வரையில் நீங்கள் அப்பாவி தான்; ஆனால், உங்களை அதில் சம்பந்தப்படுத்தும் சூழல்களை மறுப்பதற்கில்லை. நான் சொன்னதிலிருந்து இதைப் பற்றிய தகவல்கள் எனக்குக் கிடைக்கும் வழிகள், நீங்கள் கனவிலும் நினைக்க முடியாத வழிகள், என்னிடம் உள்ளன என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். தவிர்க்க முடிந்திருக்கக் கூடிய எதையும் நீங்கள் செய்யவில்லை; உங்களைக் குற்றம் சாட்டக்கூடிய எதையும் செய்யவில்லை; தண்டனையின்றி திருடக்கூடிய வாய்ப்பிருந்தும் நீங்கள் களவாடவுமில்லை. நீங்கள் எதையும் மறைக்க வேண்டிய தேவையேயில்லை. மாறாக, நன்னடத்தை உள்ளவராக நீங்கள் எதையும் மறைக்காமல் சொல்வதுதான் சிறப்பு. ஒன்றும் அறியாத ஒரு மனிதர், இந்தக் கொலைகளுக்காக, சிறையில் இருக்கிறார். உங்களால் குற்றவாளி யாரென்று சொல்ல முடியும்.”
நிலையைப் புரிந்து கொண்ட அந்தக் கடலோடி பெருமளவில் சுதாரித்துக் கொண்டார்; ஆனால், முன்னர் காட்டிய கெத்து குறைந்து விட்டது.
சில வினாடிகளுக்குப் பிறகு அவர் சொன்னார்: ‘ கடவுள் எனக்கு உதவட்டும். இந்த விவகாரத்தில் நான் அறிந்தவற்றைச் சொல்கிறேன்; நான் சொல்வதில் பாதியைக் கூட, (அப்படி எதிர்பார்ப்பது என் முட்டாள் தனம் தான்) நீங்கள் நம்புவீர்கள் என நான் எதிர்பார்க்கவுமில்லை; ஆனாலும், நான் நிரபராதி என்ற எண்ணமே நான் இறக்க நேரிட்டாலும், எனக்குப் பெருமை தருவது என்பதால் சொல்கிறேன்.’
அந்த நபர் சொன்ன விவரணைகளை நான் இப்போது சொல்லப் போவதில்லை. அவர் சொன்னதின் சாராம்சம் இதுதான். அவர் இந்தியத் தீவுக் கூட்டங்களுக்கு பயணம் செய்தார்; அவரையும் சேர்த்து அவருடன் வந்த சில கடலோடிகள், போர்னியோ தீவின் உட்பகுதிக்கு உல்லாசமாகச் சென்றனர். அவரும், அவரது நண்பரும் அங்கே ஒரு ஓராங்-ஓட்டானைப் பிடித்தனர். அந்த நண்பர் இறந்து போனார்; இந்தக் குரங்கு இவரது ஏகபோக உடைமையாகியது. வழிப்படுத்த முடியாத முரட்டுத் தனங்கள் நிறைந்த அந்த விலங்கை பல இடர்களுக்கிடையில், பாரிசில், தன் வீட்டில் பாதுகாப்பாக பூட்டி வைத்தார். அண்டை அயலார் சற்று விலக்கமாகப் பார்க்கக்கூடும் என்பதால் தனியாகவே வைத்திருந்தார். அதன் காலில், ஒரு காயம்- கப்பல் ஏறும் போது ஏற்பட்ட ஒன்று. அந்தப் புண் ஆறியவுடன் அதை விற்று விடலாம் என நினைத்தார்.
கடலோடிகள் கொண்டாடிய உல்லாசங்களில் கலந்து கொண்டு இரவில், இல்லையில்லை, அதிகாலையில், வீடு திரும்பிய அவர் தன் படுக்கை அறையில் அது இருப்பதைப் பார்த்தார். அருகிலிருந்த கழிவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்று நினைத்திருந்த அது, கதவை உடைத்துக் கொண்டு, அவரது படுக்கை அறைக்கு வந்திருக்கிறது. அது வெறுமனே அந்த அறையிலில்லை- கையில் நுரையுடன் கூடிய சவரக் கத்தி- கண்ணாடி முன் அமர்ந்து சவரம் செய்து கொள்ளும் முயற்சியில் இருந்தது; அது தன் எஜமானன் சவரம் செய்து கொள்வதை கழிவறையின் சாவித்துளையின் வழி முன்னர் பார்த்திருந்திருக்கிறது. ஆங்காரம் மிகுந்த அந்தப் பிசாசின் வசம், ஆபத்துத் தரும் கருவியை பார்த்ததும், அது அதைக் கையாளும் விதத்தைப் பார்த்ததும், முதலில் கை கால் ஓடவில்லை அவருக்கு. வலுவான வண்டிச் சவுக்கைக் கொண்டு, அதன் ஆவேச, கோபத் தருணங்களில் அவர் அதை வழிக்குக் கொண்டு வந்திருக்கிறார். அந்தச் சாட்டையை பார்த்தவுடன், ஒராங்-ஓட்டான் அறைக்கதவின் வழியே தாவி, படிகளின் மூலம் தெருவில் ஓடியது.
அது சரியான வால்; அவருக்கோ விரக்தி; கையில் சவரக் கத்தியுடன் ஒடும் அது, சிறிது நின்று தன்னைப் பின் தொடர்பவருக்கு சைகைகள் காட்டி, பின் அவர் சற்று நெருங்கி வருகையில், போக்கு காட்டி ஓடிவிடும். இந்த துரத்தல் வெகு நேரம் தொடர்ந்தது. தெருக்கள், அதிகாலை மூன்று மணி என்பதால், அமைதியாக இருந்தன; மார்க் தெருவின் பக்கவாட்டில் இருந்த ஒரு சந்தினுள் நுழைந்த அது, ஒரு வீட்டு மாடியின் விளக்கொளியால் கவரப்பட்டது. அந்த விளக்கு ஒன்றுதான் எரிந்து கொண்டிருந்தது, நகர சாலை விளக்குகளைத் தவிர. அந்த ஒளி திருமதி எஸ்பன்யேவின் அறையில், நாலாவது மாடியில் திறந்திருந்த ஜன்னலின் வழியே தெரிந்தது.
அந்த வீட்டைத் தேடி ஓடிய அது, அந்த இடி தாங்கியை பற்றிக் கொண்டு கன வேகத்துடனும், கணிக்க இயலா சுறுசுறுப்புடனும் மேலேறி, அந்த ‘ஷட்டரை’ப் பிடித்தது; சுவற்றிற்கு எதிராக முழு ஜன்னல் கதவினைத் திறந்து, படுக்கையின் தலைப் பகுதியில் குதித்தது. இத்தனையையும் அது ஒரு நிமிடத்திற்குள்ளாகவே செய்துவிட்டது. அந்தப் பலகணியையும் அறைக்குள் நுழைந்தவுடன் காலால் உதைத்து திறந்துவிட்டது.
இந்தக் கடலோடிக்கோ, மகிழ்ச்சியும், குழப்பமும். அந்த விலங்கு இப்போது எங்கும் தப்பிச் செல்ல முடியாது; தானே வலைக்குள் மாட்டிக் கொண்ட அது இந்த இடிதாங்கி வழியாகத்தான் இறங்க வேண்டும்; அப்போது அதைப் பிடித்து விடலாம். ஆனால், இந்த மிருகம் வீட்டினுள் என்ன செய்யுமோ என்ற கவலையும் உடனுக்குடன் அவருக்கு வந்தது. இந்த நினைப்பு வந்தவுடன், அவர் அந்த இடிதாங்கியில் சுலபமாக ஏறிச் சென்றார்- ஒரு கடலோடிக்கு இதெல்லாம் பெரிய விஷயமில்லை. அவர் அந்த பலகணியின் இடது பக்கம் வரை வந்துவிட்டார். ஆனால், அது மனிதன் தாண்டக்கூடிய அகலத்தை விட அதிகமானது. அவருக்கு மூச்சு அடைத்தது- அவரால் அந்த அறையின் உட்புறத்தைப் பார்க்க முடிந்த உயரத்திற்கு வந்தார் அங்கே அவர் கண்ட அந்தத் திகில் காட்சி… அப்பா, அவர் பிடி நழுவியது போல உடல் சில்லிட்டது. அந்த அலறல்களும், சப்தங்களும் தான் அக்கம்பக்கத்தாரை துயிலில் இருந்து எழுப்பியது. இரவு உடையில் இருந்த திருமதி. எஸ்பன்யேவும், அவரது மகளும், சக்கரம் பொருந்திய இரும்புப் பெட்டகத்தை அறையின் நடுப்பகுதிக்குக் கொண்டு வந்து, அதனுள்ளே சில காகிதங்களை அடுக்கிக் கொண்டிருந்தனர். அந்தப் பெட்டகம் திறந்திருந்தது- அதிலிருந்த சில பொருட்கள் தரையில் இருந்தன. அவர்களின் முதுகுப்புறம் ஜன்னலை நோக்கி இருந்திருக்க வேண்டும். இந்தக் குரங்கு உள் நுழைந்ததற்கும், அலறல்களுக்கும் இடையே சில மணித்துளிகள் இருந்ததால், அதை அவர்கள் முதலில் உணரவில்லை. பலகணி திறந்து மூடுவதை அவர்கள் காற்றின் விளையாட்டு என எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இந்தக் கடலோடி பார்க்கையில், அந்த வானரம், திருமதி. எஸ்பன்யேவின் கூந்தலைப் பற்றியது- அவர் தலையை விரித்து வாரிக்கொண்டிருந்தார் அப்போது. நாவிதர் செய்வது போல அந்த மாதுவின் முன்னர் சவரக் கத்தியை அது ஆட்டியது. அந்தப் பெண்ணோ மூச்சுப் பேச்சில்லாமல் குப்புற மயங்கி விழுந்தார். அந்தக் குரங்கு தன் தலையிலிருந்து முடியை வேரோடு பிடுங்கும் வலி தாளாமல் அந்த மாது கூச்சலிடவும், அதுவரை வேறு நோக்கங்கள் எதையும் காட்டாத அது, கடுங்கோபம் கொண்டு தன் வலுவான கரத்தால், ஒரே இழுப்பில் அந்த மாதுவின் தலையை கிட்டத்தட்ட உடம்பிலிருந்து பிய்த்தது. பெருகும் இரத்தம் அதன் வெறியை மேலும் அதிகமாக்கியது; கண்களில் அனல் பறக்க, நறநற வென்று பற்களைக் கடித்துக் கொண்டு, அந்த முதியவளின் மகளின் உடலில் ஏறி, தன் கூர் நகத்தால் அவரது தொண்டையை இறுக்கி, அவர் இறக்கும் வரை தன் பிடியை விடாதிருந்தது. வெறி கொண்ட கண்களால் சுற்றுமுற்றும் பார்த்த அது, படுக்கையின் தலைமாட்டுப் பகுதியை திகில் நிரம்பிய விழிகளால் பார்த்துக் கொண்டிருக்கும் தன் எஜமானரை கண்டுவிட்டது. அவரைப் பார்த்தவுடன் அதன் கோபாவேசம், அந்த பயங்கர சவுக்கின் நினைவால், பயமாக மாறியது. தன்னை இந்தப் பயங்கரத்திற்காக அவர் தண்டிக்கப் போகிறார் என்ற அச்சம்; எனவே, அது, செயல்களை மறைக்கப் பார்த்தது; நடுங்கிக் கொண்டே இங்குமங்கும் அலைந்த அது, கட்டிலிருந்து படுக்கையை கீழே இழுத்துப் போட்டது; அறைக்கலன்களை உடைத்தும், வீசியும் எறிந்தது. முடிவாக, அந்தப் பெண்ணின் உடலை, புகைப் போக்கியில் தாறுமாறாக நுழைத்தது. பிறகு, அந்த வயதான மாதுவின் உடலை வேகமாக ஜன்னலின் வழியே வீசியது.
அந்த சிதைந்த உடலுடன் அது ஜன்னலருகே வரும் போது, திகைத்துப் போய், பயம் கொண்டு, அவர் அந்த இடிதாங்கியிலிருந்து வழுக்கிக் கொண்டே இறங்கினார். தன் வீட்டை நோக்கி, இந்தக் கொலைகளின் பின்விளைவுகளை நினைத்து வேகமாக ஒடிப் போனார். அந்த விலங்கின் நிலை, மற்ற எதுவுமே, அவரது கவனத்தில் இல்லை. படிகளில் ஏறி வந்த அக்கம்பக்க நபர்கள் கேட்டதெல்லாம், பயமும், திகிலும் கலந்த இந்தக் கடலோடியின் குரலும், மற்றும் அந்த மிருகத்தின் கொடூரமான சலசலப்புச் சத்தங்களும் தான்.
இதற்கு மேல் எனக்குச் சொல்வதற்கு என்ன உள்ளது? கதவு உடைபடும் முன்னர் அந்த ஒராங்-ஓட்டான், அந்தக் கம்பியின் வழியே தப்பித்திருக்கும். ஜன்னலின் வழி வெளிச் செல்லும் போது அது அதை மூடியிருக்கலாம்.
அதன் உடமைக்காரரான அந்தக் கடலோடியே அதைப் பின்னர் பிடித்துவிட்டார். ஜடா(ர்)ன் டெ ப்ளேனெசிடம் நல்ல விலைக்கும் விற்று விட்டடார். காவல் அலுவலகத்தில், நாங்கள் நடந்தவைகளைக் கூறியவுடன், லெ பான் விடுதலை செய்யப்பட்டார். அந்தக் காவல் அதிகாரி, என் நண்பரிடம் இணக்கமானவர் தான்; ஆனாலும், தன் வருத்தத்தை அவரால் மறைக்க முடியவில்லை. ‘அவரவர் வேலையை அவரவர்கள் செய்ய வேண்டும்; எல்லோரும், எல்லாவற்றிற்குமான உரிமைகளை எடுத்துக் கொள்கிறார்கள்’ என்று கிண்டலாகச் சொன்னார்.
“அவர் பேசட்டும்; கதைக்கட்டும்; அது அவரது மனவருத்தத்தைப் போக்கும். அவருடைய கோட்டையில் நான் அவரை வென்றிருக்கிறேன் என்பதே எனக்கு நிறைவைத் தருகிறது. அவரது அறிவில் வாசமில்லை-தலை உள்ளது- உடம்பில்லை-லாவெர்னா (தப்பிச் செல்லும் சாதுர்யம்- விலாங்கு மீனைப் போல நழுவுதல்) கடவுளைப் போல. அல்லது பன்னாமீனைப் போல தலைகளும், தோற்பட்டைகளும் மட்டும் இருக்கின்றன. அவர் நல்லவர்; அவர் ஒரு குற்றத்தை தன் சாதுர்ய திறமையால் கண்டு பிடித்து, புத்திசாலி என்ற பெயர் வாங்கியவர்! நான் சொல்வது ‘இருப்பதை மறுக்கவும், இல்லாததை விளக்கவும்’ அவருக்கல்லவோ முடியும்?
“The Murders in the Rue Morgue” by Edgar Allan Poe: Annotated – JSTOR Daily