போர்

1963 டிசம்பரில் ஒரு நாள்

பனியும் குளிரும் முழுமையாக வெண்மைக் கம்பிளியாக மூடி இருக்கும் வாஷிங்டன் சதுக்கத்தை கண்ணாடி வழி பார்த்தபடி செனட்டர் ரிச்சர்ட் ரஸ்ஸலிற்காக காத்திருந்தார் ஜான்சன். “அதிபர் அவர்களே!” என்ற குரல் கேட்டு திரும்பினார். ரஸ்ஸலை அணுகி கூன்விழுந்த தோள்மீது கைபோட்டு சோபாவில் அவர் அருகில் அமர்ந்து கொண்டார், தன் செயல்களில் ஒரு படபடப்பு இருப்பதை தெளிவாக உணர்ந்தார். ரஸ்ஸலின் வழுக்கை தலையில் வெண்மையாக பனியின் மென்துளி இருப்பதைக் கண்டு தட்டிவிட்டார் ஜான்சன். சாம் ரேபர்னிற்குப் பிறகு ரிச்சர்ட் ரஸ்ஸல் அவருக்கு மிக முக்கியமான வழிகாட்டி. இருவருக்குமே டி.சிக்கு புதிதாக தேர்வாகி வரும் புத்திசாலி இளைஞர்களுக்கு அதிகாரத்தின் ரகசிய வழிகளை கற்றுத் தருவதில் விருப்பம் கொண்டவர்கள். வேட்டையில் இரையை வேட்டைக்காரனை விட பொறிவைப்பவனே தீர்மானிக்கிறான் என்பதை காண்பித்துக் கொடுத்தவர்கள். அவர்களின் எதிர்பார்ப்பு குறைந்தபட்ச சுயஒழுங்குடன், போதும் என்ற மனநிலை இல்லாமல் கட்டற்ற அதிகார ஆசைகொண்டிருக்க வேண்டும் என்பதே. 

டெக்ஸாஸில் இருந்து கரடுமுரடாக வாஷிங்டனுக்கு வந்த ஜான்சனுக்கு முதலில் தன் படிப்பு, பின்புலம் சார்ந்து தாழ்வுமனப்பான்மை இருந்தது. பல இடங்களில் அது நெருடல்களாகவும், தெளிவின்மையின் சிக்கல்களும் வெளிப்படுவதை முதலில் ரேபரனும் அவர் மூலமாக ரஸ்ஸலும் அறிந்தனர். இருவருக்குமே ஜான்சனை பிடித்துப்போக முக்கியக் காரணம் அவர் தெக்கத்திக்காரன் என்பதே, மற்றபடி தேர்தல் அரசியலில் தொடர்வதற்கு தேவையான அனைத்துத் தகுதிகளும் அவரிடம் ஏற்கனவே இருந்தது. ரஸ்ஸலும், ரேபரனும் ஜான்சனுக்கு எந்த இடத்தில் உண்மையான அதிகாரமும், செல்வாக்கும் இருக்கிறது என்பதை காண்பித்துக் கொடுத்தவர்கள். இரவுணவு மேஜையில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும், அரசியல் படிக்கட்டுகளில் மேலேற எந்த காய்களை நகர்த்த வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தவர்கள். “பையா வெற்றியை என்றுமே கொண்டாடாதே அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடு” என்பதே ஜான்சனால் மறக்கமுடியாத அறிவுரை.

“கடவுளே! இப்படியா உனக்கு வாய்ப்பு வர வேண்டும்?”  எதிரில் மாட்டியிருந்த ஜார்ஜ் வாஷிங்டன் படத்தை பார்த்தபடி ரஸ்ஸல் கேட்டார். 

“டிக்1, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? சாம் என்னிடம் மீண்டும் மீண்டும் கூறுவது ‘உன்னை பற்றியே அதிகம் சிந்தித்து கொண்டிருக்கிறாய் பையா! நீ ஒன்றும் ஏப் லிங்கன் அல்ல, உனக்கான வாய்ப்பு வராமலே போகலாம் என்பதை மறந்துவிடாதே’ என்பார். இப்படியாவது வாய்ப்பு வந்ததே” 

“மெதுவாகப் பேசு லிண்டன். இந்த மாளிகையின் காற்றுக்கும் காதுகள் உண்டு என்பதை மறக்காதே” காலைத் தரையில் தட்டியபடியே கூறினார். 

“உண்மை தான், நன்றி டிக். நான் செய்யவேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. கென்னடியின் ஆட்கள் அபார புத்திசாலிகள், அவர்களுக்கு ஈடுகொடுக்க வேண்டும். அதுவே சற்று தயக்கமாக இருக்கிறது”

“ம்ம்.. ஒன்றை மறவாதே, அந்த அதிபுத்திசாலிகளால் தங்கள் உள்ளூர் தேர்தலில் கூட ஜெயிக்க முடியாது. அதனால் தேர்தல் வெற்றி சாத்தியமாக இருக்கும் வரை உன் பலம் குறையாது. சரியா?” 

தலை ஆட்டியபடி ஆமோதித்தார் ஜான்சன். இப்போது தன் உயரமும் வயதும் ரஸ்ஸலுக்கு மிக அந்நியமாக இருப்பதாக அவருக்குப்பட்டது. 

1964ன் முதல் மாதங்கள்

தேர்தல் ஆண்டில் வெளியுறவுக் கொள்கைகளைத் தொட வேண்டாம் என்ற எத்தனத்தில் இருந்தார் ஜான்சன். குறிப்பாக வியட்நாம், அதை பிடிக்காத வளர்ப்புநாய் போல உணவிட்டு தள்ளியே வைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தார். அதைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்ட பொழுது கூட  “உங்களுக்கு ஒரு ஒற்றைக் கண் மாமியார் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அவரின் ஒற்றைக்கண் நெற்றியின் நடுவே இருக்கிறது என்றால் அவரை கூட்டி நடுவீட்டிலா வைத்திருப்பீர்கள்?” என கேலியாக பதிலளித்தார். விஷயம் கை மீறுகையில் முடிவெடுக்க எவ்வளவு தாமதிக்க முடியோமோ அவ்வளவு தாமதித்தார். 

தெற்கு வியட்நாம்மில் இருந்து வரும் செய்திகள் பெரும்பாலும் நிலையான சூழலை வெளிப்படுத்தியதும் குறிப்பாக சைகான்னில்2 அமைதி நிலவியதும் அவருக்கு ஆறுதல் அளித்தது. நிலையான சூழல் என்றால் அமைதி அல்ல என்பது அவருக்குத் தெரியும். சின்னச் சின்ன சண்டைகள், கப்பற்படைப் பயிற்சிகள், சில இடங்களை வடக்கு வியட்நாம்மின் கொரில்லாத் தாக்குதலுக்கு இழந்து பின் மீட்பது என வழக்கத்திற்கு புறம்பாக சூழல் மோசமாகவில்லை. இருப்பினும் இவை அனைத்தும் ராணுவ அமைச்சகம் வடிகட்டி தெரிவு செய்து வெளியிடும் தகவல்கள் தான் என்ற பேச்சும், கடந்த ஆண்டு நடந்த ராணுவப் புரட்சியும் அவரை சற்று அமைதி இழக்கச் செய்தன. “கால்களுக்கு கீழே தரையை உறுதிசெய்யச் சொன்னால் இப்படி நம் காற்சட்டையை கழட்டிவிட்டார்களே” என்று ராணுவ அதிகாரிகளின் போர்ச்சுருக்க உரையின்போது அதிபர் கோபப்பட்டதாக சொல்லிக்கொண்டார்கள்.

வெளியுறவு விவகாரங்களில் இயல்பு நிலை நீடிக்க, அதை பயன்படுத்தி உள்நாட்டுக் கொள்கைகளின் திட்டமிடலில், செயலாக்கத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தினால் இந்த ஆண்டு அதிபர் தேர்தலில் தன்னால் வெல்ல முடியும் என நம்பினார். “நான் அமைதிக்கால அதிபராகவே இருக்க விரும்புகிறேன்” என தனக்கு தானே சொல்லிக் கொண்டார். 

1964 ஜூன் மாத இறுதியில் ஒரு நாள்

காலை களநிலவரச் சுருக்கத்தைத் தெரிவித்த ராணுவச் செயலாளர்  ராபர்ட் மெக்நமாரா “அதிபர் அவர்களே, எவருக்கும் கசப்பில்லாத, போருக்கு தயாரான ராணுவ ஆட்சி நிலவுகிறது என்ற பார்வையே ஹனோயை3 பின்வாங்கச் செய்யும். டியேமின் ஆட்சி ராணுவப் புரட்சியில் வீழ்ந்த பின் பௌத்தர்கள் கூட பெரிய எதிர்ப்பு காட்டவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே வடக்கு வியட்நாம் முன் இருப்பது இரண்டே சாத்தியங்கள் தான். ஒன்று தொடர்ந்து தெற்கில் கொரில்லா தாக்குதல் நடத்துவது, அதன் மூலம் அழிவுகளை சந்திப்பது அல்லது நம்முடைய பேச்சுவார்த்தை மேஜைக்கு வருவது” 

ஓவல் அலுவலகத்தின் அதிபர் மேஜைக்கு எதிரில் காகிதக்கற்றைகளுடன் கால்மேல் கால் போடு அமர்ந்திருக்கும் ராபர்ட் மெக்நமாராவின் தலையும் கழுத்தும் முதுகுடன் இணைந்து தரைக்கு தொண்ணூறு டிகிரி கோணத்தில் இருப்பதாய் பட்டது. “இருப்பினும் நாம் தயாராக இருக்க வேண்டும் சார். நாம் என்றும் வரலாற்றுச் சரியின் பக்கம் நிற்பவர்கள், ஆதலால் நாம் பின்வாங்குவதோ, வீழ்வதோ ஏற்றிக்கொள்ளவே முடியாது. எப்படியாவது நாம் வென்றே ஆக வேண்டும்”. தன் மேஜையில் இருந்து நகர்ந்து அதிபர் மெக்நமாராவின் இந்த சொற்களின் மொத்த பொருளையும் உள்வாங்குவது போல் இருந்தது. குறைந்து வரும் முடியை நடு வகிடெடுத்து, கண்ணாடி அணிந்தும் கூர்மை குறையாத கண்களைக் கொண்ட மெக்நமாராவைப் பற்றி ராணுவ அமைச்சக வட்டாரங்களில் இவ்வாறு சொல்வார்கள் “நான் யாருக்கும்(அதிபர் உட்பட) இரண்டாமவன் அல்ல என்ற திமிர், அறையில் ஒலிக்கும் அதிகாரக் குரல் தன்னுடையதாக இருக்க வேண்டும் என எத்தனிக்கும் துணிச்சல், உண்மைகள் எங்கிருந்தாலும் சுருண்டு வந்து என் காகிதங்களில் அமர்ந்து கொள்ளும் என்ற செருக்கு இம்மூன்றின் சரிவிகித கலவை தான் மெக்நமாரா”. 

வலது கையை மேஜையில் ஊன்றி இடப்பக்கம் சற்று சாய்ந்து “பார்ப்போம்” என்றார் ஜான்சன்.

1964 ஆகஸ்ட் மாத முதல் நாட்கள்

டா நன்ங் கப்பற்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சர்வதேச கடற்பகுதியில் போர்ப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த மேட்டாக்ஸ் மற்றும் சி டர்னர் ஜாய் என்ற இரு கப்பல்களை வடக்கு வியட்நாம் படகுகள் தாக்கியதாக முதற்கட்ட செய்திகள் தெரிவித்தன. ஆட்கள் மற்றும் பொருட்சேதம் எவ்வளவு என்பது இன்னும் தெளிவாகவில்லை. “இந்த அரிசிவயல் தாயோளிகளுக்கு என்ன வேண்டுமென தெரியவில்லையே” என அதிபர் கத்தியதாக செய்திகள் வெளியாயின. வெள்ளை மாளிகைக்கு வெளியே பத்திரிகையாளர்கள் அதிகாரபூர்வ தகவல்கள் எந்நேரம் வெளிவரும் என காத்திருந்தனர்.

ஓவல் அலுவலகத்தில் அதிபரின் ஆலோசகர் மக்ஜார்ஜ் பண்டி, உள்துறை செயலாளர் டீன் ரஸ்க் மற்றும் ராபர்ட் மெக்நமாரா என மூவரும் அதிபரை சந்திக்க மேஜைக்கு அருகில் சோபாவில் அமர்ந்து காத்திருந்தனர். அவர்களுக்குப் பின் மூன்று தொலைக்காட்சிகளில் செய்திகள் ஓடியபடி இருந்தன. தன் பான்ட் ஜிப்பை சரிசெய்து கொண்டே நுழைந்தார் ஜான்சன், மூவரும் ஒருமித்து எழுந்து “சார்” என்றனர்,  தலையசைத்து ஏற்றுக் கொண்டார்.

“சார், வடக்கு வியட்நாம் தங்கள் தரப்பை தெளிவாக்கி விட்டனர். இதற்கு அமெரிக்கா பின்வாங்கினால் எந்த இடத்தில் வந்து நிற்போம் என சொல்ல முடியாது.” அதிபரை இது சீண்டும் என தெரிந்தே சொன்னார் மெக்நமாரா.

“அதிபர் அவர்களே, இன்னும் மேலதிக தகவல்கள் வந்தபின் நம் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கலாம்” என்றார் ரஸ்க். மெக்நமாரா சட்டெனெ திரும்பி அவரை முறைத்தார். 

“ராணுவ அதிகாரிகள் காலையும் மாலையும் வந்து குண்டு மழை பொழிய வேண்டும் என்கிறார்கள். இந்தச் செய்தி வெளிவந்து மக்கள் முன் நான் பலவீனமாக தெரியக் கூடாது” என ரஸ்க்கை பார்த்தபடி பதிலளித்தார் அதிபர். 

“சார், நம்மிடம் இருப்பது நவீன ஆயுதங்கள் மற்றும் போர்முறை, அப்படி இருக்க கொரில்லா யுத்தத்தால் நம் பலத்தை சோதிக்கலாமே ஒழிய வெல்ல முடியாது. தாக்குதல் எங்கு எப்படி என்பது நம்முடைய தெரிவில் தான் இருக்கிறது” என்றார் மெக்நமாரா

இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் அதிபரும், மெக்நமாராவும், பண்டியும் குறியாக இருப்பதாகப் பட்டது. ரஸ்க் தயங்கினார், இருந்தும் அவர் பெரிய மறுப்பேதும் சொல்லவில்லை. அதிபர் முடிவெடுக்க தாமதிப்பார் என தெரிந்து, மெக்நமாரா பண்டியின் பக்கம் பார்த்தார். 

“சார், நாம் வின் பகுதியில் உள்ள அவர்களின் கச்சா எண்ணெய் சேமிப்புகளையும், அரிசி கிடங்குகளையும் வான்வழி தாக்கி அழிக்கலாம். அதிலிருந்து அவர்கள் மீள ஆறில் இருந்து பன்னிரண்டு மாதங்கள் ஆகும். நாம் காலாட்படை இதில் நேரடியாக தலையிட வேண்டாம்” என்றார் பண்டி.

“அப்படி செய்யும்பட்சத்தில் வடக்கின் தலைமை ஒன்று தன் ஊடுருவலை குறைத்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். இரண்டு இதில் ஏற்படும் பொருளாதார நெருக்கடியில் நம்முடைய பேச்சுவார்த்தை மேஜைக்கு வரும். அப்போதும் நாமே முடிவெடுப்பவர்களாக இருப்போம்” என்று பட்டியலிட்டார் மெக்நமாரா.

“ம்..ம்.. பார்ப்போம்” என்றார் அதிபர்.

மறுநாள் அதிபர் ஜான்சன் சற்று தாமதித்தே எழுந்தார். தன் அறையின் மேற்கு பக்கத்திலிருந்த குளியலறையின் கண்ணாடி முன் நின்றார். நல்ல உறக்கம் அவர் முகத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைத்திருப்பதுபோல் பட்டது. இடதுகைப் பக்கம் இருந்த சிகிரெட் டின்னில் இருந்து ஒரு சிகிரெட்டை எடுத்தபடி வலக்கையை பார்த்தார், இன்னும் நிகோடின் கறை படிய துவங்கவில்லையென்பது ஆறுதலாக இருந்தது. தனக்குப் பிடித்த சில பத்திரிகையாளர்களை காலையுணவிற்கு வெள்ளை மாளிகைக்கு அழைத்திருப்பது நினைவுக்கு வந்து மெல்லிய புன்னகை ஓடியது, கண்கள் உள்ளிழுத்து நெற்றிச் சுருக்கங்கள் இளகின. 

“ஹோசிமின்னின் குடுமியை அறுக்க சிலர் நினைத்திருக்க நான் அவன் குஞ்சாமணியை அறுத்தெறிந்து விட்டிட்டேன். இனி ஒழுங்காக ஆட்டிக் கொண்டு பேச்சு வார்த்தைக்கு வருவார்கள்” என்று சிரித்தபடி நினைத்துக் கொண்டார்.

1 – ரிச்சர்ட் என்பதை சுருக்கமாக டிக் (Dick) என அழைப்பது அமெரிக்க வழக்கம். ஆபிரகாம் ஏப் சுருங்குவது போல. 

2 – சைகான் அன்றைய தெற்கு வியட்நாம் தலைநகர்.

3 – ஹனோய் அன்றைய வடக்கு வியட்நாம் தலைநகர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.