பப்பைரஸ்

மார்க் ஆண்டனி எப்படியாவது அவரது காதலியும் எகிப்திய பேரழகியுமான கிளியோபாட்ராவுக்கு ஒரு  திருமணப் பரிசை அளிக்க நினைத்தார்.  ஆனால்  செல்வச் செழிப்பில் இருந்த கிளியோபாட்ராவிடம் எல்லாம் இருந்தது. விலையுயர்ந்த ஆபரணங்களை அளிக்கவும் வாய்ப்பில்லை, ஏனெனில் சமீபத்தில்தான்  அவரால் பரிசாக அளிக்கப்பட்ட ஒரு மாபெரும் முத்தொன்றை வினிகரில் கரைத்து  அவள் அருந்தியிருந்தாள். 

 அத்தனை அளவுக்கதிகமான செல்வச் செழிப்பில் இருக்கும் தனது மனதுக்குகந்தவளைக் கவரும் பரிசொன்றை அளித்து எப்படியும் அவள் மனதை வெல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார் மார்க் ஆண்டனி.

  இரண்டாம்  யூமெனெஸ் அரசரின் ஆட்சியின் கீழிருந்த, சிறிய நகரமான பெர்கமம்  (தற்கால துருக்கி) அப்போது செழிப்பான, பெருநகரமாக மாறிக்கொண்டிருந்தது. சுமார் 2 லட்சம் மக்கள் தொகையுடன் அந்நகரம் அப்போதைய பண்டைய உலகின் பெருநகரமாயிருந்தது 

நகரின் மத்தியில் அரசரால்  உருவாக்கப்பட்ட  உலகின் இரண்டாவது பெரிய நூலகம் இருந்தது. (முதல் பெரிய நூலகம் அலெக்சாண்டிரியாவில் இருந்தது)அந்த நூலகத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல் தொகுப்புகள் அப்போது இருந்தன.

 அந்த நூலகத்திற்கு வருகை தரும் கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்களால் புதிய நூல் தொகுப்புக்கள் சேர்ககப்படுவதும் பழையவைகள் பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டும் மிக முக்கியமான ஒரிடமாக அது இயங்கிக்கொண்டிருந்தது.அனைத்து படைப்புக்களுமே அப்போது அரிய பொக்கிஷமென்று கருதப்பட்ட பப்பைரஸ் காகித சுருள்களாக பாதுகாக்கப்பட்டிருந்தன

 கிமு 42ல் அந்நகரம் ரோமானியர்களால் கைப்பற்றப் பட்டு, அந்த நூலகம் கொள்ளையடிக்கபட்டது

கிமு 43 ல் கொள்ளையடித்த அந்நூலகத்தின் 2 லட்சம் பப்பைரஸ் சுருள்களையும் தனது திருமணப் பரிசாக கிளியோபாட்ராவிற்களித்து அவர் மனம் கவர்ந்தார் ஆண்டனி என்கிறது வரலாறு

வரலாற்றை பல சமயங்களில் நூல்கள் மாற்றியமைத்திருப்பதை போலவே பாப்பைரஸ் காகித சுருள்கள் வாசிப்பின் வரலாறாகவும் இருக்கின்றன.

மாவீரன் அலெக்ஸாண்டர் சிறுவனாக இருக்கையில் உறங்கப்போகையிலும் அவரது தலையணைக்கடியில் பண்டைய கிரேக்க இதிகாசமான எலியட் எப்போதும் இருந்திருக்கிறது  இளம் பேரரசராக இருக்கையிலேயே ’இந்த பூமி முழுவதும் என்னுடையது,’ என்று பிரகடனப்படுத்திய அவர், பேரறிவும் தன்னுடையது என்று நம்பினார்

மிகச்சிறந்த வாசிப்பாளரான அவர் உலக நூல்களையெல்லாம் ஓரிடத்தில் சேமித்து வைக்க எண்ணினார்.  அக்கனவை நனவாக அவர் அதிக காலம் உயிருடன் இருக்கவில்லை

ஆனால் கிமு  3ம் நூற்றாண்டில் கிளியோபாட்ராவின் முன்னோடிகளான எகிப்தின் மன்னர்கள்,  உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அதுவரை எழுதப்பட்ட ஒவ்வொரு நூலையும் கண்டுபிடித்து மொழிமாற்றுவது, வாங்குவது  அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றபோது,  திருடுவதை கூட செய்தார்கள். இந்த பட்டியலில்  எஸ்கிலாஸ், சோபோகிளிஸ் மற்றும் யூரிபிடிஸ் ஆகியோர் இருந்தனர்.

 அக்காலத்து நூலகங்களில் பலர் கூடியிருந்து, ஒருவர் உரக்க வாசிக்க  பிறர் கூட்டமாக அதை கேட்கும் வழக்கம் இருந்தது இப்போதைய நூலகங்களில் கடைப்பிடிக்கப்படும் அமைதியான வாசிப்பு அன்று சந்தேகத்துக்கிடமாக கருதப்பட்டது

மல்பெரி காகிதத்தில் நூல்கள் ஏராளமாய் உருவாக்கப்பட்டதற்கு முன்பு  நைல் நதிக் கரையோரத்தில் வளர்ந்த நாணல் செடிகளிலிலிருந்து உருவாக்கப்பட்ட காகிதச்சுருள்களிலேயே பெரும்பாலான படைப்புக்கள் எழுதப்பட்டன

அத்தகைய காகிதச் சுருள் படைப்புக்கள் பேரரசர்களால் பொக்கிஷமாகக் கருதப்பட்டு பாதுகாக்கப்பட்டன அவற்றை கைப்பற்ற பலவிதமான முயற்சிகள் நடந்தன. போர்களில் அவையே முதன்மையாக கொள்ளையடிக்கப்பட்டன.  

விலைமதிப்பற்ற அவையே மார்க் ஆண்டனியாலும் காதல் பரிசாக அளிக்கப்பட்டது.

பாப்பைரஸின் கதை

 நைல் நதிக்கரையோரம் வளர்ந்த ஒரு எளிய நாணல் பயிர் எப்படி மனித குல நாகரீகத்தை மெல்ல மெல்ல  வளமாக்கி வடிவமைத்தது என்பதை அறிய நம் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி பயணம் செய்ய வேண்டி இருக்கிறது

 நூல்களின் வரலாறென்பது எழுத்து, காகிதம் அச்சுத்தொழில் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது

 இப்போது புத்தகம் என்று நாம் சொல்லும் இந்த வடிவத்துக்கு முன்னர் களிமண் கட்டிகள், தோல் அல்லது பப்பைரஸ் சுருள்கள் மற்றும் காகித அட்டைகள் ஆகியவற்றிலேயே எழுதபட்டது

 புத்தகம் எனப்படும் பல காகிதங்களின் தொகுப்பு முன்பு கோடெக்ஸ் (codex) எனப்பட்டது. அதன் பன்மை codices எனப்பட்டது.    அவ்வாறான பண்டைய கைகளால் தைக்கப்பட்ட  கோடெக்ஸ் காகித தொகுப்புக்கள் அரிய பொக்கிஷங்களாக இருந்தன.

பப்பைரஸ் நாணலின் தண்டுகளின் உள்ளிருக்கும் சதைப் பகுதி (marrow /pith)  நீரில் ஊறவைக்கப்பட்டு அழுத்தித் தட்டையாகப் பட்டு உலரச்செய்து பின்னர் வெட்டி எடுக்கப்பட்டு காகிதங்களாக்கப்பட்டது

பெரும்பாலும் அவை துவக்க காலங்களில்அரசவை குறிப்புக்கள் மற்றும் மதம் சார்ந்த புனிதமானவற்றை எழுதுவதற்கு மட்டுமே பயன்பட்டன

 பண்டைய எகிப்தில் பாப்பிரஸ் காகிதங்கள்  எகிப்தின் முதல் அரச வம்சத்திலேயே எழுதுவதற்கு பயன் பட்டிருக்கக் கூடும். எனினும் ஐந்தாம் வம்சத்தின் காகித ஆவணங்களே இன்று நமக்கு முதல் சான்றுகளாக கிடைத்துள்ளன.

பொ.யு.  2400க்கு முந்தியது என கருதப்படும் ஐந்தாம் வம்சத்தின் மூன்றாம் அரசரான நெஃபெரிர்கரே காகாயின் (Neferirkare Kakai) அரசு கணக்குவழக்கு ஏடொன்று பப்பைரஸ் காகித பயன்பாட்டின் முதலாவணமாக நமக்கு கிடைத்திருக்கிறது’

கூராகச் செதுக்கப்பட்ட  நாணல் குச்சிகளும், பறவை இறகுகளுமே எழுதுகோல்களாகப் பயன்பட்டன. எகிப்தின் எழுத்துவடிவமான hieratic, எனப்படும் புனித எழுத்து வடிவங்களுக்கும், சித்திரங்களாக வரையப்பட்ட அல்லது பொறிக்கப்பட்ட செதுக்கப்பட்ட எகிப்திய எழுத்து வடிவமான hieroglyphic,  ஆகிய இரண்டிலும் பப்பைரஸ் காகித சுருள்களே பயன்பட்டது 

பப்பைரஸ் செடி,  காகிதத்துக்கெனவே நைல் நதிக்கரையோரம் ஏராளமாக  சாகுபடி செய்யப்பட்டது.  பப்பைரஸ் நாணலிலிருந்து காகிதச் சுருள்கள் உருவாக்கப்பட்டு, பண்டைய எகிப்திலிருந்து ரோம் மற்றும் கிரேக்கத்துக்கு ஏராளமாக ஏற்றுமதியாகின. 

பப்பைரஸ் நூல்கள் எனப்படுபவை பல சுருள்தாள்கள் நீள வாக்கில் இணைக்கப்பட்டு ஒன்றிணைந்த சுருள்களின் தொடர்ச்சியாக இருந்தன. அவை சில சமயங்களில் 10 மீ க்கும் அதிகமான நீளம் கொண்டிருந்தன. மூன்றாம் ராம்ஸேஸின் வரலாறு  என்னும் பப்பைரஸ் நூல் சுமார் 40 மீ நீளம் இருந்தது எகிப்திய கல்லறைகளிலிருந்து இவ்வாறான பல பப்பைரஸ் காகித சுருள் நூல்கள் கிடைத்திருக்கின்றன

பண்டைய பல நாகரீகங்களில் பப்பைரஸ் தாள்களே வரிவசூல் விதிகள், அரசாங்க ஆவணங்கள், சட்ட சரத்துக்கள் ஆகியவை ஆகியுஅவற்றை எழுத பயன்படுத்தப்பட்டன.

குச்சிகள் இருபுறமோ அல்லது ஒரு புறம் மட்டுமோ இணைக்கப்பட்டு, சுருளின் இருமுனைகளும் பிடித்துக்கொள்ளப்பட்டு சுருள்  வாசிக்கப்பட்டது. எழுதப்பட்ட பப்பைரஸ் சுருள்கள் உலர்ந்து போகாமல் இருக்க குழல்களில் அடைக்கப்பட்டன.

இலக்கிய படைப்புகள் பொதுவாக கோடெக்ஸ் வடிவத்தில் தைத்து இணைக்கப்பட்டு புழக்கத்தில் இருந்தன.பொ.யு. 10ம் நூற்றாண்டில்தான் பப்பைரஸ் காகிதங்களின் கெட்டித்தாள்களில் புத்தக அட்டைகளும் உருவாக்கபட்டன.

கடவுளுக்கு அளிக்கப்படும் பரிசாகவும் பப்பைரஸ் செடிகள் அப்போது இருந்தன. பண்டைய எகிப்தின் அரசியல் சின்னமாகவும்  பப்பைரஸ் நாணல்கள் இருந்தன. வடக்கு எகிப்தில் தாமரையுடன் இணைக்கப்பட்ட கொத்தான பப்பைரஸ் நாணல் அரசியல் சின்னமாகவும் இருந்தது

அரசியல் மதம் சமூகத்தொடர்புகளோடு இவற்றிற்கு  ஆன்மீக அந்தஸ்தும் பண்டைய எகிப்தில் இருந்தது. சில கோவில் சுவர் சித்திரங்களிலும் கல்லறைகளிலும் பப்பைரஸ் நாணலின் சித்திரம் வரையப்பட்டிருக்கிறது. இவை இறப்பிற்கு பின்னரான  வாழ்வின் குறியீடாகவும் கருதப்பட்டன.

விலங்குத்தோல்களில் எழுதும் முறை பரவலாக  புழக்கத்துக்கு (parchment) வரும் வரையில் பப்பைரஸ் தாள்களின் ஏற்றுமதியும் உபயோகமும் வெகு பரவலாயிருந்தது

எகிப்திய தொன்மத்தில் பப்பைரஸ்

எகிப்தின் பல தொன்மங்களுடன் பப்பைரஸ் நாணல் தொடர்பு கொண்டிருக்கிறது அவற்றுள் மிக பிரபலமானது ஓசிரிஸ் மற்றும் இஸிஸ் தொன்மம், 

பண்டைய எகிப்தின் வளமை, விவசாயம், இறப்பு மற்றும் மறுவாழ்வின் கடவுளான ஓசிரிஸ் (Osiris) அவரது சகோதரன் ’செத்’-தினால் கொல்லப்பட்டபோது, அவரின் மனைவியும்  எகிப்தின் பெண் தெய்வமுமான ஐஸிஸ் (Isis) அவர்களது குழந்தை ஹோரஸை (Horus) பாப்பிரஸ் நாணல் புதர்களுக்குள் ஒளித்து வைத்து காப்பாற்றியதாகச் சொல்கிறது அந்த தொன்மக்கதை.

காகிதங்களின் வரலாறு

சீனாவில் 2ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை பட்டையான விலங்கு எலும்புகளில், சிப்பிகளில், மரக்கட்டைகளில் ஆவணங்கள்  எழுதப்பட்டன.  

 சீனாவின் முதல் நூலான ஜியான்ஸ் (jiance அல்லது jiandu) பிளக்கப்பட்டு  அழுத்தி தட்டையாக்கப்பட்டு உலர்த்தி சணலும் பட்டுநூலும் இணைக்கப்பட்ட இளம் மூங்கில் சுருளில்  எழுதப்பட்டிருக்கிறாது

ஹான் வம்ச அரசவையிலிருந்த , ஆணுறுப்பு நீக்கப்பட்ட அடிமையான, காய் லுன் (Cai Lun) என்பவரே சீனாவில் மல்பெரி மரப்பட்டைகளிலிருந்து  முதல் காகிதத்தை  உருவாக்கியவராக கருதப்படுகிறார்.

 6ம் நூற்றாண்டில் சீனாவில் காகிதங்கள் கழிவறைத் தாள்களாக பெரிதும் பயன்பட்டன. பொ.யு.  618–907ல் தாங் வம்ச ஆட்சியில்  பலமுறை மடிக்கப்பட்ட காகிதங்களில் தேயிலைத்தூள் வாசம் போகாமல் பொதிந்து வைக்கப்பட்டது. பொ.யு. 960–127ல் சான் வம்ச ஆட்சியில்தான் காகித கரன்சி புழக்கத்தில் வந்தது

அக்காலத்தில் ஒருமுனையில் மட்டும் இணைக்கப்பட்டு அக்கார்டியன் இசைக்கருவிகளைப்போல உருவாக்கப்பட்ட  (concertina-style) பப்பைரஸ் தாள்களில் புத்த மத நூல்கள் உருவாகின. இவை பொதுவாக வண்ணத்துப்பூச்சி  நூல்கள் (Butterfly books) என அழைக்கப்பட்டன

மெசோஅமெரிக்காவில் கற்றாழை நார்களில், விலங்குத்தோல்களில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு கொண்டிருந்தன. இந்நூல்கள் மரப்பெட்டியில் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டன. 3ம் நூற்றாண்டில் இருந்து 8ம் நூற்றாண்டு வரை இவ்வகை நூல்களில் வானியல் கணக்கீடுகள், மத ரீதியான நாட்காட்டிகள், கடவுள்களை பற்றிய கருத்துக்கள், அரசர்களின் கொடிவழிகள், வரைபடங்கள் மற்றும் அஞ்சலிக்குறிப்புக்கள் எழுதப்பட்டிருந்தன. கோவில்களில் பாதுகாக்கப்பட்ட இவற்றில் ஆயிரக்கணக்கானவைகள் ஸ்பானிஷ் படையெடுப்பில் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.

ரோமானியர்கள் மெழுகு தடவிய மரத்தகடுகளில் நாணல் புல் எழுதுகோலால் (stylus) எழுதினர். இவை pugillares  எனப்பட்டன. அப்படியான பல மெழுகுத்தகடுகள் ஒன்றிணைக்கப்பட்டு நூல்களாகின. கோடெக்ஸ் என்னும் சொல்லின் பொருள் மரக்கட்டை என்பதால் இந்த வடிவங்களிலிருந்தே கோடக்ஸ் என்னும் சொல் புழக்கத்தில் வந்திருக்கலாம் என் கருதப்படுகிறது. இவை தினசரிக் கணக்குகள் எழுதவும், கல்விக்கூடங்களில் கற்பித்தலுக்கும்  பெரும்பாலும் உபயோகப்பட்டன.

பப்பைரஸ் புழக்கத்தில் இருக்கையிலேயே விலங்குத்தோல்களில் எழுதுவதும் பரவலாகியது. 

விலங்குத்தோல் எழுதும் தாள்கள் பலநாட்களுக்கு நீடித்துழைக்கும் என்பதால் பப்பைரஸ் தாள்களை  காட்டிலும் அவை விரும்பப்பட்டன. எழுத்துக்களை அழித்து மீண்டும் எழுதவும் தோல் தாள்களில் வசதி இருந்தது, இளம் கன்றின் தோலில் செய்யப்பட்ட வெலம் (Vellum) எனும் தாள் அப்போது மிக விரும்பப்பட்டதாகவும்,மிக அதிக விலை கொண்டதாகவும் இருந்தது

பப்பைரஸ் சுருள்களின் தொகுப்பு லத்தீன மொழியில் சுருள், சுழல்,  வட்டச் சுழற்சி என்னும் பொருள் கொண்ட சொல்லான வாலுமென் “volumen”  என குறிப்பிடப்படுகிறது. 

பப்பைரஸின் பல நூல்களின் தொகுப்புக்கு லத்தீன மொழியில்  லீபோரம் என்றும் (librorum) ஒற்றை சுருளின் நூல் வாலூமினிஸ் (voluminis) என்றும் அழைக்கப்படுகிறது,

8 ம் நூற்றண்டில் மத்திய ஆசியாவிற்கு சீனாவின் மல்பெரி காகிதங்கள் அறிமுகமாகின. பின்னர் உலகின் பல்வேறு நாடுகளிலும் மரவுரி உள்ளிட்ட பல தாவரங்களிலிருந்து பெறப்பட்ட காகிதங்கள் உருவாக்கும் முயற்சிகள் நடந்தது. 10ம் நூற்றாண்டின் இறுதியில் விலங்கின் தோல் தாள்களும் புழக்கத்தில் இல்லாமல் ஆனது

காகிதத் தயாரிப்பு இயந்திர மயமாக்கப்பட்டதும் நீர் ஆற்றலால் இயங்கும் பல காகித ஆலைகள் உருவானதும், ஸ்பெயினில் கைகளால் உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த பலவகையான  காகிதங்களையும் பப்பைரஸின் தயாரிப்பையும்  உபயோகத்தையும் முற்றிலும் நிறுத்தியது

பின்னர் இத்தாலியில் 13ம் நூற்றாண்டில் பலமடங்கு பெருகிய காகித தயாரிப்புத் தொழில், விலங்குத்தோல் உள்ளிட்ட அனைத்துவகை பண்டைய தாள்களின் உபயோகத்தை உலகெங்கிலும் அடியோடு நிறுத்தியது.  மனித நாகரீகத்தின் ஒரு சாட்சியாக பப்பைரஸ் பல்லாண்டுகாலம் விளங்கியது. பல நாகரீகங்களின் வரலாற்றையும் அது பதிவு செய்தது.

தோற்றம்

பப்பைரஸின் தோற்றம் பண்டைய எகிப்தில்  பொது யுகத்திற்கு  சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னராக இருந்திருக்கும் என கருதப்படுகிறது. பண்டைய எகிப்தியுர்களே பப்பைரஸ் நாணலின் தண்டின் உள்ளிருக்கும் பஞ்சுபோன்ற மென்மையான பகுதி உலர்த்தி அழுத்தப்பட்டபிறகு எழுதும் தாளாக மாறும் என்பதை கண்டறிந்திருந்தார்கள்.அதன் பொருட்டேஅச்செடியை அவர்கள் நைல் நதிக்கரையோரம் ஏராளமாக சாகுபடி செய்தனர்.

தாவரவியல்

சைப்பரேசி குடும்பத்தை சேர்ந்த சைபரஸ் பப்பைரஸ் என்னும் நாணல் வகைச்செடியே பப்பைரஸ் எனப்படுகிறது (Cyperus papyrus) இதற்கு காகிதச் செடி என்றும் வழங்கு பெயருண்டு. செடியும் காகிதமும் இரண்டுமே பப்பைரஸ் என அழைக்கப்பட்டன.

எகிப்தில் பப்பைரஸின் வழங்கு பெயர் செழித்து வளர்வது, பசுமை என்னும் பொருள் கொண்ட வாட்ஜி என இருந்தது. (Wadj) பப்பைரஸ் நாணல் அறுவடை செய்யப்பட்ட்டு உலர்த்தி சுருள்களாக்கப்பட்ட பின்னர் அவற்றின் பெயர் தூய அல்லது திறந்த என்னும் பொருள் கொண்ட  djema என்றிருந்தது 

புல் வகையை சேர்ந்த இந்த செடி முக்கோண வடிவில் நீளமான கணுக்களற்ற   இளம்பச்சை தண்டுகளைகொண்டிருக்கும். சுமார் 15 அடி உயரம் வரை வளரும் இவை நீர் நிரம்பிய சதுப்பு நிலங்களில் செழித்து வளரும். தண்டுகள் சுமார் 6 செமீ அகலம் கொண்டிருக்கும். கூரான இலைகளும் கொத்தான இளம் பச்சை மலர்க்குவைகளும் கொண்டிருக்கும் இவை மிக அழகிய தோற்றம் கொண்டவை.

தற்போது பப்பைரஸ் நாணல் அலங்காரச் செடியாக மட்டுமே உலகில் வளர்க்கப்படுகிறது.

60 செமீ உயரம் வரையே வளரும் பப்பைரஸின் குட்டை வகையான C. isocladus அல்லது C. papyrus ‘Nanus’ தொட்டிகளில் வளர்க்கப்படுகிறது.

முக்கிய நூல்கள்

  • துரின் பப்பைரஸ் (Turin Papyrus) என்பது பண்டைய எகிப்து அரசர்களின் கொடிவழிகள் எழுதப்பட்ட பப்பைரஸ் தாள்களினால் உருவாக்கப்பட்ட ஒரு நூல். இது இரண்டாம் ராம்ஸேஸ்”ஸின் காலத்தில் அவரது வழிகாட்டுதலில் உருவக்கப்பட்டது. தற்போது இத்தாலியின் துரின் நகரில் எகிப்து அருங்காட்சியகத்தில் இது பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இதுவே இன்றுவரையிலும் எகிப்திய அரசர்களை குறித்த மிக விரிவான தகவலடங்கிய நூலாக கருதப்படுகிறது. இந்நூலில், அரசர்களின் பெயர்கள் மட்டுமல்லாது அவர்களின் ஆட்சிக்காலம், வரலாறு போன்றவைகளும் மிகச் சரியாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது.
  • எகிப்தின் மருத்துவக்குறிப்புக்கள் அடங்கிய நூலான 110 பக்கங்கள் கொண்டிருக்கும்  ஏபர்ஸ் பப்பைரஸ் (Ebers Papyrus)  20 மீ நீளமுள்ள சுருளாக கிடைத்தது.
  • இறந்தவர்களின் நூல் எனப்படும் எகிப்தின் Book of the Dead,  பப்பைரஸ் தாள்களில் எழுதப்பட்டிருக்கிறது, மரணத்துக்கு பிறகான உலகில் என்ன செய்யவெண்டும் என்பதற்கான மந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளும் இந்நூலில் விளக்கமாக எழுதப்பட்டிருக்கிறது

பப்பைரஸ் தாளில் சிவப்பு மற்றும் கருப்பு இயற்கை சாயங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. பெரும்பாலும் சிவப்பு தீய ஆவிகளை, சாத்தானை, தீமையை குறிக்கும் எழுத்துக்களுக்கு பயன்பட்டது. 

பாப்பிரஸ் தாள் உருவாக்கும் முறை

பிளைனி பப்பைரஸிலிருந்து காகிதம் உருவாக்கும் முறையை விளக்கமாக எழுதியிருக்கிறார்.

முதலாக, பப்பைரஸ் நாணல்கள் அறுவடை செய்யப்படும். தண்டின் வெளிப்புற தோல் சீவி எடுக்கப்பட்டு  உள்ளிருக்கும் பித் எனப்படும் மென்மையான வெள்ளைப்பகுதி தேவையான அளவுக்கு வெட்டி எடுக்கப்படும்.

இவை அடுத்தடுத்து  ஒன்றின் மீது ஒன்று தொட்டுக்கொள்ளும்படி வைக்கப்பட்டு நன்கு அழுத்தப்படும். இப்படி உருவான ஒரு அடுக்கின் மீது அதே போன்று மற்றொரு அடுக்கும் வைக்கப்படும்.

இந்த இரு அடுக்குகளும் நன்கு  சுத்தியலால் அடித்து அழுத்தப்பட்டு வெயிலில் உலர்த்தப்படும்.

தண்டுகளில் இயற்கையாக இருக்கும் கோந்து போன்ற  சுரப்பு உலர்கையிலேயே இருதாள் அடுக்குகளையும் நன்கு ஒட்ட வைத்துவிடுகிறது

 20 இத்தகைய  உலர்ந்த தாள்கள் ஒட்டித் தைக்கப்பட்டு பப்பைரஸ் நூல் என்னும் சுருளாக்கப்பட்டன.

பண்டைய எகிப்தில் பப்பைரஸ் காகிதம் எழுதுவதற்கு மட்டுமல்லாது கயறு, செருப்பு, படகுகளின் பாய், ஆடைகள் மற்றும் கூடைகள் பொம்மைகள் ஆகியவற்றைச் செய்யவும் பயனபட்டது.  பப்பைரஸின் வேர்க்கிழங்கு எகிப்தியர்களில் விருப்பமான உணவாகவும் இருந்திருக்கிறது .

பொம்மைகள் தாயத்துகள் ஜன்னல் திரைச்சீலைகள் ஆகியவைகளும் பப்பைரஸ் தாள்களிலிருந்து செய்யபட்டன.

எகிப்தின் வறண்ட சூழல் பெரும்பாலான பப்பைரஸ் தாள்களை அப்படியே பாதுகாத்து வைத்திருந்தது.எகிப்து பிரமிடுகளில் கல்லறைகளில் இருந்து கிடைத்த பப்பைரஸ் சுருள்களை ஆராயவென்றே உருவானாதுதான்  papyrology,  என்னும் பப்பைரஸ் தாளுக்கான பிரத்யேக துறை.

 எகிப்தின் மிக முக்கியமான அகழ்வாய்வு பிரதேசமான Wadi al – Jarf ல்  பல  எகிப்தியலாளர்கள் 1832 லிருந்து நடத்திய ஆய்வுகளில்  பப்பைரஸ் சுருள்கள் சேதமின்றி கிடைத்தன. அவற்றின் வழியே எகிப்திய நாகரீகத்தை  மேலும் அணுகி அறிந்துகொள்ள முடிந்தது

இவ்விடத்தில் கிடைத்த எகிப்தின் 4ம் வம்சத்தை சேர்ந்த பப்பைரஸ் சுருள்களே உலகின் மிக பழமையான பப்பைரஸ் ஆவணங்கள்.முறையாக பாதுகாக்கப்பட்ட பப்பைரஸ் சுருள்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னரும் சேதமின்றி கிடைத்திருக்கின்றன.

மெல்ல மெல்ல குறைந்து வந்த பப்பைரஸின் உபயோகம் மல்பெரி காகிதம் புழக்கத்துக்கு வந்திருந்த கிமு  9ம் நூற்றாண்டில் முற்றிலும் இல்லாமல் ஆனது. 

2000 வருடங்களுக்கு முன்பு எழுதும் தாளாக உலகெங்கிலும் புழக்கத்தில் இருந்த பப்பைரஸ் இப்போது ஒரு சில சிறப்பு ஓவியங்கள் மற்றும் குறிப்புக்களுக்காக மட்டும் உபயோகத்தில் இருக்கிறது.

பப்பைரஸ் என்னும் சொல்லில் இருந்தே காகிதத்துக்கு ஆங்கிலச்சொல்லான பேப்பர் வந்தது. பப்பைரஸென்னும் கிரேக்க சொல்லுக்கு pa-per-aa, பெரிய வீடு என பொருள். துவக்க காலங்களில் அரசவை உபயோகத்துக்கென அரண்மனைகளிலிருந்து மட்டும் பப்பைரஸ் தாள் உருவாக்கப்பட்டதால் இப்பெயர் உருவானது.

பாப்பிரஸ் தற்போது

கிழக்கு இத்தாலியில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் கரிக்கட்டைக்களாயிருக்கும் சுமார் 1800 பப்பைரஸ் சுருள்களில் எழுதப்பட்டிருப்பது என்னவென்று அறியும் முயற்சியில் ஏராளமான ஆய்வாளர்கள் தற்போது ஈடுபட்டிருக்கிறார்கள். அச்சுருள்களை சேதமடையாமல் விரித்து தருபவர்களுக்கு 10 லட்சம் டாலர்கள் பரிசென்றும் அறிவிக்கபட்டிருக்கிறது (Herculaneum Papyri ). 

1477ல் யோஹன் ஹெரால்ட் (Johannes Herolt ) என்பவர் எழுதிய ‘’sermones discipuli de tempore et de sanctis’’என்னும் நூல் 9 பவுண்டு எடை கொண்டிருந்தது. அதை ஒரு மேசையின்மீது வைத்துத்தான் வாசித்திருப்பார்கள். இன்றோ தொடுதிரையில் ஒரு நிமிடத்தில் நூல்கள் நம் முன்னே ஒளிர்கின்றன. செயற்கை நுண்ணறிவின் எல்லா சாத்தியங்களையும் நாம் வாசிப்பிலும் எழுத்திலும் அனுபவிக்கிறோம்.இன்னும் அனுபவிக்கவிருக்கிறோம்

அச்சு நூல்களுக்கு இணையாக தற்போது மின் நூல்களும் மின் சஞ்சிகைகளும் புழக்கத்தில் இருக்கின்றன. 2000த்தில் வந்த மின் வாசிப்பிலும், 2007ல் வந்த அமேஸானின் கிண்டிலும் வாசிப்பில் மிக முக்கியமான மைல்கற்கள். இனி மின் தாள்களும் e-ink  எனப்படும் காகிதத்தாள் போன்ற தோற்றம் தரும் தொடுதிரைகளும்  கூட புழக்கத்துக்கு வரவிருக்கின்றன.

பண்டைய எகிப்தின் பப்பைரஸ் சுருள்கள் களிலிருந்து  e-reading எனப்படும் மின் வாசிப்பை கிண்டிலில், அலைபேசியில் வாசிப்பவர்களும்  குரல் நூல்களில் ஒருவர் சொல்லச் சொல்ல கேட்டுக்கொள்வதுமாக வாசிப்பின், எழுத்தின் பயணம் பல  நூற்றாண்டுகளை கடந்து பல மாற்றங்களுக்குள்ளாகி  பரிணாம வளர்ச்சி அடைந்து நம்மிடம் வந்துள்ளது. 

ஸ்பானிஷ் வரலாற்றாய்வாளரும் எழுத்தாளருமான Irene Vallejo  2-22ல் எழுதியிருக்கும்’’Papyrus, The Invention of Books in the Ancient World‘’ என்னும் நூல் இன்னும் விரிவாக பப்பைரஸின் பயணத்தை பேசுகிறது,

பப்பைரஸின் உபயோகம் இப்போது இல்லாமலிருக்கலாம் எனினும் அதன் முக்கியத்துவம் எப்போதும் மக்களால் நினைவு கூறப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.