தெய்வநல்லூர் கதைகள் – 5

This entry is part 5 of 10 in the series தெய்வநல்லூர் கதைகள்

கழுநீர் ஓடைத்தெருவின் அமைப்பை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். மேலபஜார், கீழபஜார் சந்திப்பில் மேற்கு நோக்கி வந்தால் இடக்கை பிரிவு கழுநீர் ஓடைத் தெரு. பிரிவில் திரும்பாமல் நேரே போனால் இடங்கை வகையறாவாக பத்து தெருக்கள் பிரிந்து ராஜபாளையம்- புளியங்குடி சாலையை அடையும். வலங்கைப் பிரிவு தெருக்களின் எண்ணிக்கை சற்று குறைவே எனினும் அவை தமக்கு அடுத்து ஊரின் பெரும்பங்கைக் கொண்டுள்ளன.  

கழுநீர் ஓடைதெரு இடங்கைப் பிரிவு என்று உங்களுக்குப் புரிந்துவிட்டதில்லையா? அதன் நேர் எதிரே பிரியும் வலங்கைப் பிரிவையும் நீங்கள் கழுநீர் ஓடைத் தெரு என எண்ணினால் நீங்கள் தெய்வநல்லூர் வந்ததே இல்லை என எங்களுக்குத் தெரிந்துவிடும். அது தைக்கா தெரு. அங்கிருந்து மேலபஜார் வழியே பஜார் சாலை சென்றடையும் கோட்டையூர் வரை இடங்கை, வலங்கை பிரிவுத் தெருக்கள் பெருமளவு முஸ்லிம்கள் இருக்கும் பகுதி. கோட்டையூர்க்கு வலப்பகுதி நாடாக்கமார் பகுதி. அதேபோல் ராஜபாளையம் சாலையின் மறுபுறத்திலும் நாடாக்கமார் அதிகம். இடையே டி.டி.ஏ துவக்கப்பள்ளி எனும் சர்ச்சும் பள்ளியும் இணைந்த ஒன்றும் உண்டு. இன்னொரு சர்ச் எனில் மந்தையைத் தாண்டி மாரியம்மன் கோவில் போகும் வழியில் வரும் பள்ளக்குடியில்தான் பார்க்க முடியும். மந்தை தாண்டி சாலையை ஊடறுத்துப் போகும்  ஓடையை பாலம் வழியே தாண்டினால் சாலையின் வலப்பக்கத்தே பெரிய மைதானம். அதைச்சுற்றி பாகைமானி போல் அரைவட்ட வடிவில் அமைந்த தெருக்கள் என பள்ளக்குடி அழகான குடியிருப்பு. நீங்கள் வழக்கமான வாசிப்பில் பள்ளக்குடி என்றதும் சாக்கடைகள் ஊடே ஓடி, பன்றிகள் திரிந்து என்றெல்லாம் முற்போக்கு வாசிப்பில் தொய்ந்தவராக இருப்பின் , ஐய, மன்னித்தருள்க. நீங்கள் தெய்வநல்லூர் குறித்து அறியாதவரே. 

ஓட்டு வீடுகளும், நேரான தெருக்களும், மாலையில் மைதானத்தில் கபடி, வாலிபால் முதலான இன்னபிற விளையாட்டுகளும் விளையாடப்பட்டு அப்போது ராதுகா பதிப்பகத்தால் வெளியிடப்படும் புத்தகங்களில் வரும் ரஷ்ய கிராமத்தின் சதுக்கமொன்றை நினைவுப்படுத்தும் இடம் அது. ஊருக்குள் சர்க்கஸ் வந்தால் முகாமிடும் இடமும் அதுதான். மைதானத்தின் மறுபக்கமாக சாலையின் இடங்கைப் பிரிவில் பெரிய அரசமரம் ஒன்றின் கீழ் அமைந்த பஞ்சாயத்து மேடை, பேருருவ விநாயகர் அமைந்த கோவில், கிணறு, கமலை. அப்படியே மேற்காக சாலையில் ஒரு கிலோமீட்டர் போனால் வரும் மாரியம்மன் கோவில்தான் தெய்வநல்லூரின் எல்லை. அதுவரை பாலம் தொடங்கி மாரியம்மன் கோவில் வரை இடப்பக்கம் முழுவதும் சாலையிலிருந்து மலை அடிவாரம் வரை வயல்களே. பெரும்பாலும் உரிமையாளர்கள் பள்ளர்குடி ஆட்களே. 

ஊருக்குள் இருக்கும் அமைப்பு கதை வளருங்கால் விளக்கப்படும் என்பதால் நாம் சம்பவங்களுக்குத் திரும்புவோம். தெண்டில் இந்த காலாண்டு விடுமுறையை மிகத்துல்லியமாகப் பயன்படுத்திக்கொண்டார். ( சிறுக்கிவுள்ள,  மூனாந்தண்ணி வரைக்கும் அயக்காம இதையே யோசிச்சிருக்காம்ல, கிடாவுக்கும், அமுக்கு டப்பாவுக்கும் கூட தெரியாம செஞ்சிருக்காம்ல – முட்ட ராமர்). தெண்டில் தான் பதுங்கியிருந்த நாட்களில் பள்ளி மாணவர்களிடையே ஒரு மாணவர்தொகைக் கணக்கெடுப்பு நிகழ்த்தியிருக்கிறார். தம் கோஷ்டியார் “செவ்வா சுத்து”க்குப் போனதுமே அவர்கள் பால் நம்பிக்கை இழந்துவிட்ட அவர் இம்முறை தானே களமிறங்கி தகவல்களைச் சேகரித்துள்ளார். அவர் சேகரித்த தகவல்கள் எம் குழுவினரின் பலவீனங்கள் குறித்தல்ல. ஏனெனில் அவை என்னவென்று குழும உறுப்பினராக அவரே அறிவார். அவர் தரவுகள் கூட்டி ஆய்ந்தது எம் குழுவின் மேல் பிற மாணவர்களுக்கு இருந்த அதிருப்தி (இவனுக காசே இல்லாம தெனோம் பண்டம் திங்காணுவ ), பொறாமை (பொம்பளப் புள்ளைகள்ட்ட இவனுக மட்டும் பேசுதானுவ), அச்சம் ( பள்ளிக்கு வெளியே சுனா கானா எனும் ஹிட்மேன் இருக்கும் குழு), அதிகார ஆசை ( நம்மள சேக்கவே மாட்டேங்காணுவ ) ஆகியவற்றை. எம் குழுவின் மேல் செயல்படும் இவ்வாறான அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியவற்றையே தம் பழிவாங்கலுக்கான ஆயுதங்களாக்கினார்.

காலாண்டுத் தேர்வு முடிந்து ஒரு திங்களன்று நாங்கள் வகுப்புக்குள் நுழைந்தபோது எங்களுக்கு முதல் அதிர்ச்சி தாக்கியது. அங்கு அறிஞர் அண்ணா அணி என்ற பெயரில் இரண்டு காலண்டர் அட்டைகளை மூங்கில் வரிச்சால் பின்பக்கமாக இணைத்து நீளமாக ஆக்கி முழுவதும் வெள்ளைத்தாளால் ஒட்டப்பட்டு ஒரு பதாகை இருந்தது. அதுவரை வகுப்பில் மூன்று அணிகளே உண்டு. பெண்கள் தரப்பிலிருந்து “ஜான்சிராணி” அணி, பையன்கள் அணியிலிருந்து நாங்களே உருவாக்கி எங்கள் துணை அணியாக நடத்திக்கொண்டிருக்கும் “தமிழன்னை” அணி. முக்கியமான ஆளும் அணியாக எவ்வித எதிர்ப்புமின்றி அதுவரை செயல்பட்டுக்கொண்டிருந்தது எங்களது குழுவான “ஆசியஜோதி நேரு” அணி. எங்கள் அணியினர் எப்போதும் வீட்டுப்பாடக் குறிப்பேடுகளைச் சேகரித்தல், ஆசிரியர் அறையில் அவர் மேசைக்குக் கொண்டு செல்லல், அவர் திருத்த அருகிலிருந்து ஒவ்வொரு நோட்டாக பக்கங்களைத் திருப்பித் தருதல், மீண்டும் கொணர்ந்து மாணாக்கர்களிடம் ஒப்படைத்தல், வருகைப் பதிவேட்டை தலைமை ஆசிரியர் அறையிலிருந்து கொணர்தல் – மீள ஒப்படைத்தல், சாக்பீஸ் பெட்டிகளைப் பொறுப்பேற்று வரும் ஆசிரியர்கள் கேட்கையில் தருதல், ஆசிரியர் இல்லாத நேரங்களில் வகுப்பினை கண்ணின் மணியெனக் காத்தல், எங்கள் குழுவினர் அதிகமும் தவறு செய்திருக்கும் நாட்களில் பிரம்பினை மறைத்து வைத்தல், மண்பானைக் குடிநீரின் தரப்பரிசோதனை செய்தல், ஆசிரியருக்கு டீ வாங்கிவருதல் போன்ற வெறுங்காலால் இமயம் ஏறுவதொக்க பணிகளைச் செய்வோம்.

வகுப்பறைகளைத் தினமும் சுத்தம் செய்தல், ஆசிரியர் மேசை, நாற்காலிகளைத் துடைத்தல், நாளுக்கு இருமுறை குடிநீர் பிடித்து வந்து நிரப்புதல்,  ஒரு வகுப்பு முடிந்ததும் அடுத்த வகுப்பின் ஆசிரியர் வருவதற்குள் கரும்பலகையை சுத்தம் செய்தல், பெஞ்ச் டெஸ்க்குகளை மாதம் ஒரு முறை வெயிலில் காய வைத்து உள்ளே எடுத்து வந்து அடுக்குதல், வாரம் ஒருமுறை வகுப்பறையை ஒட்டடை அடித்து கழுவி விடுதல், செவ்வாய் வெள்ளிகளில் வகுப்பறை வாயிலில் கோலமிடல் மற்றும் ஆசியஜோதி அணியினரால் சொல்லப்படும் பிற பணிகள் ஆகிய எளிமையான பணிகளை பிற இரு அணியினரும் செய்து வந்தார்கள்.

இந்த நிலையில்தான் எங்கள் அனுமதி இன்றி எங்கள் கவனத்துக்கே வராமல் ஒரு அணி உருவாகியுள்ளது. முதல் அட்டை முழுவதும் அறிஞர் அண்ணாவின் படமும் அதற்குக் கீழே சிறிதாக வஉசி படமும் காயிதே மில்லத் படமும் இடம்பெற்றிருந்தன. அடுத்த இணைப்பு அட்டை முழுவதும் தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் பெயர்கள்.

தலைவர் – தெண்டில் மண்டை செந்தில், துணைத்தலைவர் – புல்தடுக்கி பெனியேல் எபனேசர் , உறுப்பினர்கள் – உப்புக்கண்டம் ஹக்கீம், யக்கா பாட்சா, கு கணேசன், மாமா என்ற மா மாரியப்பன், சோறுதின்னி பிரமநாயகம், ஓட்டைக்கை மந்திரமூர்த்தி, சிங்கி சரவணகுமார் , அரைக்குண்டி அருணாசலம் மற்றும் சிலர்.

பெயர்க்காரண இடைவேளை – புல்தடுக்கி பெனியேல் – மிகக் கெச்சலான உருவ அமைப்பு இருந்தாலும் விடுமுறை நாட்களில் தான் இரு பாம்புகளை வீட்டருகில் தனியாக அடித்ததாக சொன்னவர். அவர் வீட்டருகே இருக்கும் “நியூஸ்” சந்திரன் (செய்தித்தாள் வகுப்பிற்கு கொண்டுவரும் பொறுப்பினாலாகு பெயர் என அறிக) பாம்பைப் பார்க்க இவர் ஓடிவந்து கீழே விழுந்த உண்மையைச் சொல்ல இவருக்கு இப்பெயர் இடப்பட்டது.

உப்புக்கண்டம் ஹக்கீம் – உள்ளூர் மண்ணெண்னை விற்பனையாளரான யாசிர் அலியின் மகனான இவர் முன் ஒரு கயிற்றில் கட்டி உப்புக்கண்டத்தை தொங்கவிட்டு காஷ்மீர் வரை நடத்தியே கூட்டிச்சென்று விடலாம் என்பதாலும் வீட்டில் உப்புக்கண்டம் பொறிக்கப்படும் நாட்களில் அன்னார் பள்ளிக்கு வராமையாலும் இப்பெயர் பெற்றார்

யக்கா பாட்சா – வளைகுடா நாட்டில் பணிசெய்து வரும் கல்வத் இப்ராஹீம் அவர்களின் புதல்வனான இவர் அதிகமும் தன் இரு அக்காக்களால் வளர்க்கப்பட்டதால் ஆசிரியரிடம் பிரம்படி வாங்கையில் அனைவர் போலும் யம்மா என அலறாது யக்கா என்றே அலறுவதால் இது எதிர்வினையாகு பெயர் என்றறிக

கு கணேசன் – மண்பானை செய்யும் இவர் வருடந்தோறும் இருமுறை வகுப்பிற்கு குடிதண்ணீர் பானை கொணர்ந்து தருவார். அதிகமும் யாரோடும் பேசாத இவர் எப்பட்டமும் பெறா படிப்பாளி

மாமா என்ற மா மாரியப்பன் – பெயரே பட்டமாக அமைந்த தானாகு பெயர் உடையவர் 

சோறுதின்னி பிரமநாயகம் – உறவினரும், ஆசிரியருமான முத்துசாமி சார்வாள் வீட்டு விசேஷத்தில் அன்னார் வாங்கி உண்ட அளவைக் கண்டு ஆசிரியரால் பட்டமளிக்கப்பட்ட செயலாகு பெயர் இவருடைத்து என அறிக

ஓட்டைக்கை மந்திரமூர்த்தி – ஊருள் இனிப்புக் கடை நடத்திவரும் லாலா பிள்ளை என்ற வடிவேல் பிள்ளை குமாரரான இவர் எப்பொருளை எடுப்பினும் மூன்றுக்கு இரண்டு தரம் எனும் கணக்கில் கீழே போட்டுவிடுவதால் பெற்ற வினையாகு பெயர் 

 சிங்கி சரவணகுமார்-  திருவிழாக்களில், திருமண வீடுகளில் நாதசுர  கோஷ்டியில் எப்போதும் சிங்கியாருடனே (ஜால்ரா) ஒட்டிக்கொண்டு திரிவதாலும், தெண்டில் என்ன சொன்னாலும் ஆதரிப்பதாலும் இப்பெயர் கண்டார்

அரைக்குண்டி அருணாசலம் – பலசரக்குக் கடை அதிபரான சின்னையாப் பிள்ளையின் புதல்வரான இவர் அவர் தந்தையால் பெரிய ( வளர்ற புள்ள) அல்லது சிறிய ( 2 வருசந்தான ஆச்சு, தூரப்போடவா முடியும்?) டவுசர் அணிந்து வருவார். இடுப்பில் நிற்காமல் இறங்கியோ, முழு இடுப்புக்கும் ஏற முடியாமல் அரையில் அரையாடையாகவோ இவர் டவுசர்கள் அமைந்து அமருமிடத்தின் அரைவாசியை அனைவர் கண்ணுக்கும் விருந்தாக்கும் கவர்ச்சிக் கண்ணன் ( லோ வெயிஸ்ட் இன்று நாகரீகம் என்போர் இவர் முன் நாணி நிற்க வேண்டும்)

இந்த அதிர்ச்சியிலிருந்து எங்கள் அணி நிலைமீள சற்று நேரம் ஆகிவிட்டது. உளவுத்துறை, உள்கை முதலிய துறைகளை உச்ச வேகத்தில் முடுக்கி விட்டதில் ( நியூஸ் சந்திரன் புல்தடுக்கி பெனியேலை மிரட்டியது) விஷயங்கள் வெளியாகின. தென்டில்மண்ட செந்தில் நாங்கள் “ஊதா சுகுமாரி” ( எப்போதும் ஊதாப் பாவாடை அணிந்து ஊதாப்பூ எனும் டிசம்பர் பூ வைத்து வருவதால்)யிடம் பேசியபோதே எங்களுக்குத் தெரிந்திருக்கும் என யூகித்துவிட்டார். தனது கோஷ்டியும் பிரிந்து விட்டதால் கையறு நிலை எய்திய அவர் உடனே சமாளிக்க வேண்டிய சிக்கலாக சுனா கானாவையே நினைத்திருக்கிறார். அதனால்தான் எங்களிடம் எங்களுக்குத் தெரியும் என்பது தனக்கும் தெரியும் என்பதைச் சொல்லாமலே தொடர்ந்திருக்கிறார். இடையில் அம்மை போட்டதும் வீட்டில் இருந்த நாட்களில் அவர் தந்தையான ராமையாப் பிள்ளையின் சமீப செயல்பாடுகளை அவர் கூர்ந்து அவதானிக்க நேர்ந்தது. அதன் விளைவாக யோசித்தே தெண்டில் இதைத் திட்டமிட்டுள்ளார்.

உமையொருபாகன் கோவிலில் ஓதுவாருடன் தகராறு ஆனதும் செயல் அலுவலர்  கோவிலில் பாட தன்னை அனுமதிக்காததால் ராமையா பிள்ளை வேறோர் திட்டம் செய்தார். அலுவலரிடம் அவர் புதிய மனு ஒன்றைக் கொடுத்த அன்று காலையில் தாம் தலைவராகவும், தம் மனைவி திருமதி. சிவஞானம் அம்மையார் செயலாளராகவும் இருந்து உருவாக்கிய “ஆளுடைப்பிள்ளை உழவாரப்பணிக் கழகம்” எனும் சைவ மறுமலர்ச்சி சீர்திருத்த அமைப்பின் சார்பில்  கோயிலில் உழவாரப்பணி செய்ய அனுமதிக்குமாறும் அதன் தலைவர் எனும் முறையில் கோவில் நித்ய கருமங்களில் ஒன்றுக்காவது கௌரவப் பொறுப்பினைத் தருமாறும் வேண்டியிருந்தார். சங்கரங்கோவில் வக்கீல் ஆவுடையப்பப்பிள்ளையிடம் குமாஸ்தாவாகப் பணிபுரியும் நயினார் பிள்ளை கைவரிசை இதில் உண்டு என ஓதுவார் அலுவலரிடம் ஐயம் எழுப்பினார். செயல் அலுவலர் செயல்பட முடியாமல் குழம்பினார். அதேவேளையில் ராமையா பிள்ளைவாள் தினமும் உஷத் கால பூசை, சாயரட்சை ஆகிய காலங்களில் தோன்றி தம் மனு மீதான பதிலென்ன எனக் கேட்டு அலுவலரைக் கதறடித்தார். ராமையா பிள்ளை வராத வேளைகளில் “அன்னோ முறைபோகி ஐயா முறையேயோ” என அலுவலர் ஆற்றாப்புலம்பல் சொல்லிப் பாடலானார்.  

மனு வடிவில் கோரிக்கை என்பதால் இதனை எவ்வாறு கையாள, அனுமதி கொடுத்து விடலாமா என செயல் அலுவலர் சிந்திக்கையில் ஓதுவார் மீனா மாமி சகிதம் அலுவலக அறைக்குள் நுழைந்தார். – “சார், மாமி ஒரு யோசனை சொல்றாங்க. பேசாம திருநவேலி ஆபீசுக்கு அனுப்பிட்டா என்ன?” என்றார். ஈ.ஓ (செஅ) யோசித்துவிட்டு “அங்கேருந்து அனுமதிக்கிறோம்னு வந்துடிச்சுன்னா” என்றார். மாமி “ மனுதான கொடுத்துருக்கார். அறநிலையத்துறை சட்ட அடிப்படையில் இதனை அனுமதிப்பதில் இருக்கும் சாதக,பாதக அம்சங்களைக் கருத்தில் கொண்டு அதிகாரி அவர்கள் இவ்விஷயத்தில் முடிவெடுத்துத் தருமாறு வேண்டிக்கொள்கிறேன்” ன்னு ஒரு வரி சேர்த்துடுங்கோ, அவர் லீகல் நு வந்தா மெட்ராஸ் அனுப்பிடுவார். வர்றச்சே பார்ப்போம் “ என்றார். செயல் அலுவலர் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே என மாமியை வாழ்த்தி மனுவை அனுப்பிவிட்டார். 

தம் மனு திருநாளைத் திரும்புவார் நிலையை அடைந்துவிட்டதை எண்ணி நெஞ்சம் கனன்ற ராமையா சார் அடுத்த கட்ட நடவடிக்கையை யோசிக்கும் அதே வேளையில் தெண்டில் மண்ட  அம்மையின் அருளால் இல்லத்தில் இருக்க நேரிட்டது. தந்தையின் பாணியில் அவரும் ஒரு போட்டி அமைப்பை நிறுவும் யோசனைக்கு வந்தார். பள்ளிக்கு வந்ததும் எம் குழுவோடு முரண்பட்டோர் அனைவரையும் கணக்கில் கொண்டு விடுமுறையில் அவர்தம் இல்லங்களுக்குச் சென்று பேசி பழக்கடை சந்திப்புக்கு தந்தையாருடன் சென்று புதிய அணி துவங்க கணபதி சாரிடம் அனுமதி பெற்று சம்பவத்தன்று எங்களுக்கும் முன்பாக பள்ளிக்கு வந்து தம் அணியின் கல்வெட்டை நிறுவிவிட்டிருக்கிறார். 

கணபதி சார்தான் வகுப்பாசிரியர் என்பது தெண்டிலாருக்குச் சாதகமாகப் போயிற்று. அதன்பின் கிட்டத்தட்ட இரண்டரை மாத காலங்கள் எங்களுக்கு இறங்குமுகமாகவே போயிற்று. எங்கள் குழுவின் ஈத்தகுச்சி எழுதாமல் விட்ட வீட்டுப்பாடத்தை வகுப்பில் எழுதி முடிக்கும்வரை காத்திருந்து அதன்பின் அவர் குறிப்பேட்டை வாங்கி ஆசிரியர் பார்வைக்குக் கொண்டுபோன நட்பின் இடுக்கண் களையும் செயல் விதிமீறலாக கணபதி சார் காதுக்கு தெண்டிலால் கொண்டுபோகப்பட்டது. அதிலிருந்து வீட்டுப்பாட குறிப்பேடு தொடர்பான அதிகாரங்கள் அறிஞர் அண்ணா அணியினர் கைகளுக்குச் சென்று விட்டன. சத்துணவு வரிசையில் நிற்கையில் ரகசியமாக ஊதா தன்னால் இனி உள்கையாக செயல்பட முடியாது என்றும் தெண்டில் தன்னை மிரட்டுவதாகவும், பண்டங்களை விட மானமே தனக்குப் பெரிதென்றும், இனி தன்னை நம்ப வேண்டாம் என்றும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டும் பணிவிடுப்பு எடுத்துக்கொண்டார். 

உச்சக்கட்டமாக தெண்டில் கணபதி சாரிடம் தான் விநாயகர் அகவலை முழுவதும் மனனம் செய்துவிட்டதாகவும் இனி வாரம் ஒருமுறை திங்கள் காலை முதல் வகுப்பில் (சார், உங்க பேரும் விநாயகர் சாமி பேரும் ஒண்ணுதான. திங்க கெழம மொத பீரியடு உங்க பீரியடுதான சார். அன்னைக்கு மட்டும் இத வகுப்புல சொல்லட்டுமா சார்? – பாகும் பருப்பும் கலந்த தென்டிலாரின் குரல்) சொல்வதாக அனுமதி பெற்று அதற்குப் பகரமாக வகுப்பைக் கண்காணிக்கும் பணியையும் எங்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டார்.

பிற மாணவர்கள் எங்கள் நிலை கண்டு வருந்தினாரேயன்றி அவர்களை எதிர்த்து எதுவும் செய்யவில்லை. நாங்கள் அடிப்படையில் சில நன்மைகளை வகுப்புக்குச் செய்திருந்தது அனைவருக்கும் தெரிந்திருந்தது. சிலவற்றை சொல்வதானால், எங்கள் வகுப்பின் குறிப்பேடுகள் அனைத்தும் அட்டையிடப்பட்டவை- அட்டை போட முடியாதவருக்கு எம் குழு சார்பில் ஈத்தகுச்சி அட்டை போட்டுத் தருவார், சிவாஜி தலைமையில் இயங்கிய குழு முந்தைய ஆண்டு மாணவர்களைப் பிடித்து அவர்கள் புத்தகங்களை வாங்கி எம் வகுப்பில் புத்தகம் வாங்க இயலாதோருக்கு வழங்குவது, தேர்வு நேரங்களில் வைத்து எழுத காலண்டர் அட்டைகளை எம் குழு இல்லாதோர்க்குக் கொடுத்து வாங்கி வைப்பது, சு மாரியப்பன் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும் விடைத்தாள்களின் காதில் ஓட்டையிட்டு நூல் கட்டுவது, தண்ணீர்ப் பானையில் இட மாதம் ஒருமுறை வெட்டிவேர் (மு மாரியப்பன் சகாயம் – அன்னார் தண்ணீர் அருந்த வரிசையில் நிற்கவேண்டாம்) இடுவது —- இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். மாணாக்கர்களுக்கு இது தெரிந்திருந்தாலும் எங்கள் சார்பாக அவர்கள் எதுவும் செயலாற்றவில்லை. இதை உணர்ந்ததும் அறிஞர் அண்ணா குழுவினர் எல்லை மீறலாயினர். ஜான்சிராணி அணியினரின் உணவுப் பண்டங்கள் மொத்தமாகக் கொள்ளையிடப்பட்டன. எதிர்ப்பு தெரிவித்தவர்களின் குறிப்பேடுகளில் மைக்கறைகள் ஏற்படுத்தப்பட்டன. பிற மாணவர்களுக்கு நாங்கள் ஆற்றும் உதவிகள் தடுக்கப்பட்டன. உதவிகளைப் பெறுவோர் மிரட்டப்பட்டு எங்களிடமிருந்து விலக்கப்பட்டனர்.  இடையில் நானும், சிவாஜியும் தென்டிலாருடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தச் சென்றோம். எங்கள் குழுவில் அதிகமும் ஏற்கப்படாத முடிவெனினும் தலைமை மீது நம்பிக்கை வைத்து குழு எங்கள் இருவரையும் அனுப்பியது. ஆனால் தெண்டில் மண்டையார் நல்லோர் கை தேன்பாலும் வஞ்சகர்க்கு நஞ்சே என நிரூபித்தார். உடன்படிக்கைக்கு நாங்கள் முன்வைத்த ஒப்பந்த ஷரத்துகள் எள்ளி நகையாடப்பட்டன.  தான் உடனிருக்கும்போதே தன் திருட்டைக் கண்டுபிடித்தும் தன்னை எதுவும் செய்யமுடியாத எம்மை தெண்டில் மண்டையார் தம் குழு முன்னர் கோழை எனக் கூறினார். நான் சொல்லவிந்து நிற்க சிவாஜி வெகுண்டு அன்று சுனா கானா வைத் தடுத்தவனே நான்தான், இல்லையேல் தெண்டில் மண்டையார் மாற்றுத்திறனாளி ஆகியிருப்பார் என்றார். நாங்கள் அவமதிக்கப்பட்டு இன்று போய் நாளை வரப் பணிக்கப்பட்ட இராவணன் எனத் திரும்பினோம். ஆசியஜோதி அணியினர் அதிகாரம் இழந்து மக்கள் பரிதாபத்தை மட்டுமே பெற்று நின்ற கொடுங்காலமும் தெய்வநல்லூர் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது. 

எங்கள் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோற்கும்தோறும் அவர்கள் விதிமீறல்கள் அதிகமாயின. ஏறத்தாழ நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்ட பொழுதில் அரையாண்டுக்கு பத்து நாட்கள் இருக்கையில் எவரும் எதிர்பாரா வண்ணம் தெய்வநல்லூர் வரலாற்றில் ஒரு திருப்பமான வருகை நிகழ்ந்தது. ஒரு புதன்கிழமை காலையில் கணபதி சாரின் வகுப்பு நடக்கையில் வாசலில் அவர் தோன்றினார். “சார், உள்ளே வரலாமா?” எனக் கேட்க வகுப்பு மட்டுமன்றி கணபதி சாரும் உறைந்தார். என்னளவு உயரமும், எங்களை இன்னும் மங்கலாக்கும் வெளிர்மஞ்சள் நிறமும், சிறுகீற்று நீறு துலங்கிய நெற்றியும், சிரிப்பும்-சிடுசிடுப்பும் சமமாய் கலந்த முகமும், படிய வாரிய முடியும், எந்த கிழிசலும்,ஒட்டும் இலாத டவுசர்-சட்டையும், புழுதி அறியா காலில் செருப்பும், தோளில் மாட்டிக்கொள்ளும் பையுமாக அவர் நின்றது காரணம் கொண்டு யாரும் உறையவில்லை. ஆனால் வகுப்பிற்குள் அதுவரை அப்படி அனுமதி கேட்டு நுழைவதில்லை யாரும். படியேறி சாரைப் பார்த்து “இளிச்சமானிக்கு “ அல்லது தலையைக் குனிந்த வண்ணம் விடுவிடுவென இருக்கைக்குப் போவதே வழக்கம். ஆகவே இந்த அனுமதி கோரல் எங்களை மட்டுமன்றி சாரையும் சற்று திகைக்க வைத்தது. 

அந்தத் திடீர் மரியாதையால் நிலைகுலைந்த சார் “வா தம்பி” என அன்பொழுக அழைத்தார். தன் செருப்பை வகுப்பறைக்குள் அணியாமல் ஓரமாகக் கழற்றி வைத்து விட்டு உள்ளே அவர் நுழைந்த நொடியில் கணபதி சார் நாற்காலி கீழ் விட்டிருந்த தம் செருப்பை நோக்கிக் கூசினார் என்பது அவர்தம் பெயர்கொண்ட கடவுளின் வாகனமென அவர் முகம் மாறியதிலிருந்தே உய்த்துணர முடிந்தது. மண்மகள் அறியா தன் வண்ணச் சீரடியை வலக்காலால் அவர் எடுத்து வைத்து வகுப்பிற்குள் நுழைந்தார்.

ஆசிய ஜோதியாகிய எங்கள் அணியினர் நம்பிக்கை இழந்திருந்த காலத்தில் ஒரு புது வரவாய் வகுப்பிற்குள் வந்தவர்தான் பிரேம்குமார் என்ற பிரேம். வகுப்பினுள் வந்த நாளில் எவராலும் வரவேற்கப்படவில்லை. சொல்லப்போனால் எங்களுக்கு முதலில் அவரது செயல்பாடுகள் எரிச்சலூட்டின.

வகுப்பிற்குள் நுழைந்ததுமே கணபதி சார் அருகில் சென்று “வணக்கம் சார், என் பேர் பிரேம்குமார். எங்கப்பா பேர் சீதாராமன். திருநவேலில படிச்சிட்டுருந்தேன் சார். அப்பா போஸ்ட் ஆபீஸ்ல வேலை பாக்கறார்.  அப்பாக்கு சங்கரங்கோயில் ட்ரான்ஸ்பர் ஆயிருக்கு. இது சொந்த ஊருன்னு இங்கே வந்துட்டோம் சார். இன்னைக்கு நல்ல நாள்னு அட்மிஷன் போட்டாச்சு. அப்பா ஹெட்மாஸ்டர் ரூமில இருக்கார். நான் க்ளாசுக்கு வந்துட்டேன் சார்” என பேசி முடித்தார். கணபதி சாரும், நாங்களும் மீண்டும் ஒருமுறை உறைந்து மீண்டோம். ஆசிரியரிடம் மாணவர் அப்படி நீளமாகப் பேசிய சம்பவம் அதற்கு முன் எங்கள் கண்முன் நடந்ததில்லை. 

கணபதி சார் ராமனைக் கண்ட தசரதனை ஒத்து “வெரி குட், போய் உக்கார்ப்பா” என்று சொல்கையில் பியூன் மாரிமுத்து அண்ணன் வந்து கணபதி சாரை தலைமை ஆசிரியர் அழைப்பதாகச் சொன்னார். அவர் சென்றதும் அதுவரை மேசை அருகில் நின்ற பிரேம் நேரே முதல் பெஞ்சுக்கு வந்தார். நாங்கள் இருந்த இப்போது தெண்டில் மண்டையார் இருக்கும் இடம் அது. சரியாக தெண்டில் அருகில் வந்து நின்று அவர் சிரிப்பதற்கு பதில் சிரிப்பு செய்யாமல் “கொஞ்சம் தள்ளி உக்காரு, “ என்றார். அவர் அனுமதிக்கும் காத்திராமல் பையை டெஸ்கின் மேல் வைத்தும் விட்டார். வரிசையில் அடுத்து அமர்ந்திருந்த ஹக்கீம் வெகுண்டெழுந்து “உன் எடம்னு எழுதியா வச்சிருக்கு?” என்றார். பிரேம் அவரைப் பார்க்காமலேயே “ஹெச் எம் சார்தான் இந்த இடத்துல உக்காரச் சொன்னார்” என்றதுமே எங்களுக்கே நம்ப இயலா விரைவில் அவருக்கு இரண்டாள் இடம் சட்டென உருவாகி விட்டது. 

அமர்ந்ததும் தெண்டில் இடமாக ஐந்து நொடிகளுக்கு முன்னிருந்த பெஞ்சின் மேற்பரப்பில் அவர் வைத்திருந்த குறிப்பேட்டை கைக்குழந்தையின் ஆய்த்துணியைத் தூக்கும் பாவனையில் இடக்கை விரல்நுனிகளால் பற்றித் தூக்கி அகற்றினார்.  பெஞ்சின் கீழ்பகுதியில் தன் பையை வைக்குமுன் வாயால் உள்ளே ஊதி சுத்தம் செய்தார். நேர்பின்னால் அமர்ந்திருந்த சிவாஜியிடம் திரும்பி “இப்ப என்ன பீரியட்?” 

“வரலாறு” என்றார் சிவாஜி. தன்னிடம் பேசிவிட்ட பெருமை அவர் முகத்தில் தெரிந்தது. “உன் பேரென்ன?” என்றார் பிரேம். “சா. கணேசன்” என்று அவர் சொல்லுமுன்னரே பெனியேல் “சிவாஜி” என்று உரக்க அறிவித்தார். சிவாஜி பெனியேலை முறைக்க பிரேம் “ ஓ, சிவாஜி கணேசனா ? எனக்கு அவரைப் பிடிக்கும்” என்றார். அச்சொல்லால் அன்று கொலையாவதிலிருந்து புல்தடுக்கி காப்பாற்றப்பட்டார்.

என்னதான் தெண்டில் மண்டையாரை பிரேம் மிரட்டினாலும் எங்களுக்கு அவர் மீது சிறு விலக்கமே இருந்தது. அவரது செயல்பாடுகள் அவ்வாறானவை. -நாங்கள் தண்ணீர் குடிக்கையில் அண்ணாந்து வாய் நிறைய ஊற்றிக் கொண்டு கன்னங்களை உப்பச் செய்து முழுக்கொள்ளளவை எட்டியதும் தலையை நேர்மட்டத்துக்குக் கொண்டுவந்து “கொருளுக்” எனும் சப்தத்துடன் தொண்டை வழியே உள்ளே அனுப்பி அம்முயற்சியால் பிதுங்கிய கண்களை மறுபடி சரியாக்கி மறுவாய்க்கு அண்ணாந்து என்று தாகம் தணிக்கையில் இவர் வந்து வாயிலிருந்து நான்கு இன்ச் உயரத்தில் டம்ளரை சரித்து தலையை அசைக்காமல் நேரே தண்ணீர குடல்சென்று சேருமாறு ஒரே ஒழுக்கில் குடித்து விட்டு நகர்வது

 -டவுசர் பைக்குள் சிறு துணி ஒன்றை வைத்திருப்பது, தண்ணீர் அருந்தியதும் அதால் வாயை ஒத்தி எடுப்பது. 

-உட்காரும்போதும், நடக்கும்போதும் எங்கள் மேல் பட்டுவிடாமல் கவனமாக இருப்பது

-மதிய உணவுக்கு வீட்டுக்குப் போய்வரும்போது மீண்டும் ஒருமுறை முகம் கழுவி தலைவாரி வருவது

-எந்தத் தயக்கமும் இன்றி பெண்களிடம் நேரடியாகப் பேசி பணி ஏவுவது ; அவர்களும் “இளித்துக்கொண்டு” செய்வது

-தன் பொருட்களை எவரும் தொட அனுமதிக்காதது (அழுக்குக் கையோட நோட்டைத் தொடாதடா ) 

-நாங்கள் தின்னும் பண்டங்களை டீயில் விழுந்த ஈயைப் பார்ப்பது போல் பார்ப்பது (இதெல்லாம் க்ளீனா இல்ல, எனக்கு வேண்டாம் – சிவாஜியின் நல்லுணர்வு முன்னெடுப்பு முயற்சியாக கொடுத்த பனங்கிழங்கை மறுத்தபோது)

– வீட்டிலிருந்து ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்து வருவது, அதை யாருக்கும் கொடுக்காமல் இருப்பது

-மிக முக்கியமாக அதுவரை இல்லாத வாடிக்கையாக ஆசிரியர்கள் பாடம் நடத்துகையில் அதிலிருந்து சந்தேகங்கள் எழுப்புவது; பல ஆசிரியர்களும் அதற்காகப் பாராட்டுவது

எங்களால் அவரைப் புரிந்து கொள்ளவே இயலவில்லை. எங்களை சற்றும் அவர் மதிப்பதில்லை என்பது எங்களுக்குப் புரிந்தாலும் சிவாஜி சொல்படி அமைதி காத்தோம் –“ ஏல, அவன் திருனவேலில படிச்சிட்டு வந்துருக்கான், நம்மள வில்லேஜுன்னு நெனக்கான். அந்த பீத்தலு கொறைய கொஞ்ச நாளாவும். காலையிலயும், சாயந்திரமும் ஒரு அண்ணன் கூட சைக்கிள்ள வாரான். எங்கருந்து வாரான்னு போய் கேட்டாலும் எதுவும் சொல்ல மாட்டேங்கான். அரைப்பரிச்ச முடியட்டும். அவனே வழிக்கு வருவான் “- சிவாஜியின் உளப்பகுப்பாய்வு அறிக்கை.

நாங்கள் மூன்று நாட்களில் இவர் நமக்கு சரிப்பட மாட்டார் என எண்ணிக்கொண்டிருக்கையில் அந்தத் திங்களன்றே நாங்கள் அவரை பாராட்டும்படியான சம்பவம் ஒன்றைச் செய்தார். வழக்கம்போல திங்களன்று காலையில் “தெண்டில் மண்டையார்” விநாயகர் அகவல் ஓத ஆரம்பித்தார். ஆனால் “குண்டலி அதனில் கூடிய “ என்று சொல்லும்வரைதான் வழக்கமான திங்களாக இருந்தது. தெண்டில் செந்தில் “குண்டலி அதனில் கூடிய அசைவை” என்று தன் குரலால் வகுப்பிலுள்ள ஊர்வன, பறப்பனவற்றை துரத்திக்கொண்டிருக்கையில் கணபதி சாரும் வியக்கும்வண்ணம் பிரேமின் வலக்கை மேலே உயர்ந்து நாகம் போல் நின்றது.

 கணபதி சார் “ இதுலயுமாடே சந்தேகம்? அவன் சொல்லி முடிக்கட்டும். பாப்போம் என்ன?”

பிரேம் எழுந்தார் – “சார், தப்பா சொல்லக்கூடாதுல்ல சார். அதான் திருத்தம். சந்தேகம் இல்லை சார்”

இம்முறை அண்ணனை தம்பி மீறினார் – “எதுல தப்பு? எங்கல தப்பு விட்டேன்? உனக்குத் தெரியுமால இது ?– தெண்டிலார் கணபதிசார் இருப்பதையும் மறந்து விட்டது போல் சீறினார்.

பிரேம் கணபதி சாரிடம் மட்டுமே பேசினார் – “ சார், குண்டலி அதனில் கூடிய அஜபை “ ன்னுதான் சார் வரணும். இவன் தப்பா அசைவை ங்கறான் சார்”

“ஏல, எங்கப்பா சொல்லிக்கொடுத்தது இது? உனக்கு ரொம்பத் தெரியுமோ?”- தெண்டில் நிலையிழக்க ஆரம்பித்தார்.

பிரேம் மீண்டும் “சார், தப்பு யார் சொன்னாலும் தப்புத்தான சார். இவன் அப்பா சொன்னா சரியாயிடுமா சார்”

கணபதி சார் குழம்பிப் போனார். தான் படித்த புத்தகத்தில் அவ்வாறு இருப்பதாக தெண்டில் தம் தரப்புக்கு சாட்சி சேர்த்தார். மறுநாள் தான் அதைக் கொணர்ந்து காட்டுவதாகவும் சொன்னார். பிரேம் சற்றும் குறையாமல் அப்புத்தகமே தவறு என்றும் இவர் சரியான புத்தகத்தை வாசிக்க வேண்டுமென்றும் சொன்னார். 

கணபதி சார் இறுதியாகக் கேட்ட கேள்விக்கு பிரேம் அளித்த பதில் விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது மட்டுமன்றி புதிய மாற்றத்துக்கும் வழிவகுத்தது. 

“சரிடே, இவன் சொல்லுதது தப்புன்னா எது சரி? அதைச் சொல்லு”

“சார், குண்டலி அதனில் கூடிய அஜபை ன்னு வரணும் சார். அஜபை சிவ தாண்டவம். ஔவைக்கு விநாயகர் சிவதாண்டவம் காட்டிருக்காரில்லையா, அதான் சார் இது.” மெல்லத் திரும்பி தெண்டிலிடம் “ எங்க தாத்தா சொல்லிருக்கார். நான் தினோம் வீட்ல சொல்லுவேன்” என்றார் பிரேம். தெண்டில் மண்டையார் அணுஆயுதம் வீசப்பட்ட ஜப்பான் போல சொல்லிழந்து நின்றார்.

கணபதி சார் தலைக்கு ஒரு அடி மேலே சிட்டுக்குருவிகள் பறப்பதை உணர்ந்தார். வேகமாக சூழல் உணர்ந்து “வெரிகுட் டே பிரேம், கரெக்டா சொல்லிட்டயே, இனுமே நீயே திங்கள் காலையிலே வகுப்பிலே சொல்லணும். என்ன?” என்று தீர்ப்பெழுதி முடித்தார். 

அன்று காலை இடைவேளையில் எங்கள் குழுவின் தலைமை உறுப்பினர்களுடன் அவசரக் கூட்டமும், மதிய இடைவேளையில் பிற உறுப்பினர்களுடன் வெகு அவசரக் கூட்டமும் கூட்டப்பட்டது. சிவாஜி உறுதிபடச் சொல்லிவிட்டார் –ஆசியஜோதி அணியில் பிரேம் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். இணையாவிட்டால் இணைக்கப்படுவதற்கான முயற்சிகளை குழு எடுத்தாக வேண்டும். அவரது முன்பின்னான நடவடிக்கைகளை அதிகமும் கண்டுகொள்ளாது அவரது மதிநுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். அவருக்காக குழும விதிகளில் சில சலுகைகளும், தளர்வுகளும் அனுமதிக்கப்பட வேண்டுமெனில் அதை உயர்மட்ட குழு தீர்மானிக்கும். பிற உறுப்பினர்கள் குழுவின் நன்மையைக் கருதி ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் தீர்மானம் மு மாரியப்பனின் முனகலான எதிர்ப்புக்குக்கிடையே ஒத்த கருத்துடன் நிறைவேறியது. இணைப்புக் குழு ஒன்று உடனே உருவாக்கப்பட்டு ( சிவாஜி, நியூஸ் சந்திரன், நான்) ஐந்து நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது. 

அன்று மாலை பள்ளி முடிந்ததும் சிவாஜி தன் முதல் முயற்சியைத் தொடங்கினார். “பிரேம், காலையிலே சாமிப்பாட்டு அழகா சொன்னெடே… நீ சொன்னதுதான் கரெக்டு… அவன் எப்பவும் தப்பாதான் சொல்லுவான்..”

பிரேமுக்கு சிரிப்பும் சிடுசிடுப்பும் கலந்தே வரும். பாராட்டிற்குப் புன்னகை செய்த மூன்று நொடிகள் மறைவதற்குள் கேட்டார் –“ அதெப்படி உனக்குத் தெரியும்? நீயும் வீட்ல சொல்லுவியா?”

சிவாஜி இம்முறை கவனமாக இருந்தார். – “எங்க பிள்ளையார் கோவில்ல ரேடியோல போடுவாங்கல்ல , அதுல கேட்டேன்…ஆனா, நான் தப்புன்னு சொன்னா செந்தில் சார்கிட்ட என்னை மாட்டி விட்ருவான் “

“ஏன் அப்டி செய்யறான்?”

“அது நாளைக்கு சொல்றேன்.” என்று சிவாஜி மெல்ல விஷயத்திற்கு வந்தார். “உங்க வீடு எங்க இருக்கு?”….

பள்ளி முடிந்து பத்து நிமிடங்களில் பிரேமை அழைத்துப் போக சைக்கிளில் யாரும் வரவில்லை. அவர் அன்று நடந்தேதான் வீட்டிற்குப் போனார். பிரேம் தெருமுனை திரும்பும்வரை ஆவலுடன் காத்திருந்தோம். தெருமுனை வரை அவருடன் சென்ற சிவாஜி திரும்பி எங்களிடம் வந்தார். “கண்டேன் சீதையை” என்ற அனுமனின் முகத்தை ஒத்த முகம் கொண்டு அகம் விம்ம குரல் பம்ம “ஏலே,அவன் நம்ம கூட சேர்ந்துருவான். நம்ம அணிக்கு வாரத நாளைக்கு சொல்லுவானாம் “

எங்களுக்கு அப்படி ஒருவர் யோசித்து சொல்வதெல்லாம் புதிது. ஆனால் சிவாஜி மேற்கொண்டு சொன்னவற்றை கேட்டுக்கொண்டிருந்ததால் இவ்விஷயம் பெரிதாகப் படவில்லை.   

(தொடரும்)

Series Navigation<< தெய்வநல்லூர் கதைகள் -4தெய்வநல்லூர் கதைகள் – 6 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.