
திரும்புதல்
திரும்பிப்
பார்த்தபடியே
பயணிக்கிறது
பாதை
திடீரென இடையில் நீர்கல் விழ
மொத்த பாதையும் மூழ்கிப்போனது
பிறகென்ன
எல்லா கற்களும்
வட்டத்தை நோக்கியே
சுற்றுகின்றன
*
நீர் கல் விழுந்த இடங்கள்
பூமியெங்கும் இருக்கின்றன
விழுந்தவையெல்லாம்
அலையலையாக துடித்துக் கொண்டிருக்க
கடல் தன்னை
ஒளியாகத் திரும்பிப்
பார்த்தது.
வாழ்தல்
இரண்டு நாட்களாகப்
பார்த்துக்கொண்டே இருக்கின்றன
காய்கள் பழுத்து வீழ்வதை
ஓர் இலை மட்டும்
தானும் பழமானது
இனி
காற்றின் மெல்லிய
அசைவுப்போதும்
*
இலைகளுதிரும் காலத்தில்
தனித்துவிடப்பட்ட மரத்தின் சுவடுகளிலிருந்தே
வரையத் தொடங்குகிறேன்
ஒரு மரத்தை
பிறகொரு காட்டை
பின்
தானாய் கண் விழித்தது
ஆயிரமாயிரம் சிலந்தி வலைகளால்
பின்னப்பட்டிருந்த காலை
°
பிரதி தானா?
பிரபஞ்ச ஒவ்வொன்றும்
ஆகாயஒளி தேடி படர்ந்தக்கொடியில்
நட்சத்திரங்கள் முட்களாய் பூக்கத் தொடங்கின
பச்சையாக கனத்த ஈரம் காய்ந்துபோக
எங்கும் வியாபித்திருந்தன
நட்சத்திர முட்கள்
காடு காடு என்று
ஆவேசமாகத் திரிந்த ஒன்று
யாவற்றையும் ஒதுக்கிவிட்டு
நடையாய் செல்கிறது
நீர் விலகி
நதி வளைதல் போல்
அந்த ஒற்றை
பாதையில்.
*
காடுகளில் களைகளென்று
எதுவும் கிடையாது.
வாழ்தலின் வழி முறையில் பழுத்து விழுவதே சிறந்தது வாழ்த்துக்கள் நன்றாக இருக்கிறது
நன்றி
நன்றி…