
(1)
என்றும் போல்
அன்றும் சூரியன்
கிழக்கில் உதிக்காமல்
மேற்கில் மறையாமல்
என்றும் போலில்லாமல்
இல்லை.
(2)
இராவில்
என் விழிப்பில்
இராவின் நித்திரை
கலைந்திருந்தது.
(3)
நத்தை
மீது
நாரை-
யாத்ரீகனாகப்
பயணிக்க
வேண்டி-
(4)
யாருடையதுமாயில்லாத சொல்லில்
யாதுடையதுமாயில்லாத அர்த்தத்தில்
முழுதுமான மெளனம்.
(5)
இரை தேடுவதே
வாழ்வான பின்
குரைத்தாலென்ன?
கும்பிட்டாலென்ன?
(6)
சொல்-
வீசியெறியக்
கூர் திரும்பி வரும் கல்-
கவனம்.
(7)
ஜனனமும்
மரணமும்
சதா சுழற்றும்
குடை ராட்டின
ஜாலமா
ஜகம்?
(8)
திரிந்து பார்.
திரியாது
தங்கியிருந்து சேர்த்த
தூசியின் சுமை
தெரியும்.
(9)
வெகு உச்சியில்
மலைக் காட்டில்
தொலைவில்
தீ-
என் விழிகளில்
சுடரும்
தீபமாய்
அருகில்.
(10)
எப்படி
எப்போதும்
ஏற்கனவே
அம்பு விட்டிருக்கிறது
இந்த வில்-
வானவில்?
(11)
வழிதவறி வந்த
காட்டு யானை போல்
சாலையோரம்
நிற்கிறது முதுமரம்
தன்னந் தனியாய்-
சாலையைக் கடக்க
யோசித்துக் கொண்டே-
(12)
விழி மூடி
விழி திறக்க
நிகழ்ந்தேன்
நான்.
(13)
இரைச்சலில் போய்
ஒளிந்து கொள்கிறேன்,
மெளனத்தில் மனம்
பிறந்த மேனியாய்
ஒளியாமலிருக்க
முடியாமல்.
(14)
முதுமையின் கவலைகளை
இளமையின் நினைவுகளில்
ஈடேற்றி விடலாமென்று
நிறைவுறுகிறேன் நான்.
(15)
முடிவு செய்ய
முடியவில்லை
தொடக்கத்திலேயே
முடிந்து போவதை.
(16)
நீ-
இவனா?
அவனா?
உவனா?
நீ
எவன்?
என்
’நானி’ன்
உன்
’நான்’ –
(17)
நடுநிலவு-
நடுக்கடல்-
நடுவில் நான்
கரையிலிருந்து-
(18)
ஆசை காட்டும்
சபலம்-
புதருள்
ஒளிந்துள்ள
பாம்பு
வெளியேறப்
படமெடுக்கும்
நான்-
(19)
விழித்து நோக்கும்
எறும்பின் விழிகளுக்குள்
முறிந்து விழுந்து
தெரிந்திருக்குமோ
நெடுமரம்?
(20)
குன்றம்
கைதூக்கி விடப் பார்த்தும்
குப்புற வீழ்கிறது
குருட்டருவி
கைநழுவி!