
“எனக்கு பயமாக இருக்கிறது, மிஸ்டர் டிரைவர்”
“என்னை கிரிஸ் என்றே கூப்பிடு, அர்ஜுன். நீங்கள் இன்னும் ஆங்கிலேய ஆதிக்க மன நிலையிலிருந்து இன்னும் விடுபட இல்லை போலிருக்கிறது. உனக்கு ஒன்று தெரியுமா? எனது மூதாதையர் கூட இங்கிலாந்தில் தான் வசித்து இருக்கிறார்கள். டிரைவர் என்ற குடும்பப் பெயரினால் அவர்கள் யாருக்கோ குதிரை வண்டி சாரதிகளாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.”
கிரிஸ்ஸின் பூர்விகம் குறித்து ஆராய்ச்சி செய்யும் மன நினைவில் அர்ஜுன் இல்லை.
“என்னால் இதைத் தொடர முடியாது. மிஸ்ட்…. மன்னிக்கவும், கிரிஸ். எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப் போய் விடலாம் என்று தோன்றுகிறது”
கூபர்டினோவின் குளிர் அறையிலும் அர்ஜுனுக்கு லேசாக வியர்த்தது.
“கவலைப் படாதே, அர்ஜுன். முதலில் நீ என்ன செயலி (App ) ஆக்க போகிறாய் என்று சொல்”
“நான் உருவாக்கும் செயலி இந்திய யோகா முறையையும் சீன டாய்-சீ முறையையும் கலந்து பயிற்றுவிக்கும்”
“அப்படியா? மனித நல்வாழ்வு மற்றும் மேம்பாடு களத்தில் போட்டிகள் அதிகம் தான். இப்போது யார் வேண்டுமானாலும் மன நிறை தியானம் என்று செயலி துவங்கி விடுகிறார்கள். உன் செயலி குண்டலினி சொல்லிக் கொடுக்குமா?”
அர்ஜுன் வியப்பாக கிரிஸ்ஸை பார்த்தான். சிலிக்கான் பள்ளத்தாக்கின் முதலீட்டாளர் குண்டலினி பற்றி கேட்டது வியப்பாக இருந்தது.
“குண்டலினியா? உனக்கு குண்டலினி பற்றி தெரியுமா?”
கிரிஸ் சிரித்தான்.
“எனக்கு தெரிந்தது எல்லாம் பண முதலீடு மட்டும் தான். இப்போது அமெரிக்காவில் பலர் குண்டலினி பற்றி பேசுகிறார்கள். அதை எப்படி லாபகரமாக மாற்றுவது என்பது தான் என் நோக்கம்”
“இல்லை. இப்போதைக்கு என் செயலியில் குண்டலினி இல்லை. எப்படியும் நான் எல்லாவற்றையும் விட்டு விடப் போகிறேன். நீ சொல்வது சரி தான். இந்த களத்தில் போட்டிகள் அதிகம் என்று தெரிந்து தான் இறங்கினேன். ஆனால் இப்போது எனக்கு துரோகம் நடந்து விட்டது. அதை தான் என்னால் தாங்கி கொள்ள முடியவியில்லை “
“துரோகமா? யார் செய்தது?”
“என்னுடைய புத்தொழில் (startup) நிறுவனத்தில் பணியாற்றிய சுயோ சிங். என்னடைய செயலியின் முக்கிய குறியீடுகளை எடுத்துக்கொண்டு இப்போது எனக்கு போட்டியாக இன்னொரு புத்தொழில் நிறுவனத்தை தொடங்கி உள்ளான்”
“நீ சட்ட ரீதியாக அவனை அணுக முடியும்”
“உங்களுக்கு தெரியாதது இல்லை. சட்ட ரீதியான தீர்வு அவ்வளவு எளிது அல்ல”
கிரிஸ்ஸுக்கும் அது தெரியும். மௌனமாக தலை அசைத்தான்.
“அது மட்டுமல்ல. என்னுடைய நிறுவனம் தொடங்கும் ஆர்வத்துக்கு வித்திட்டவர்கள் எனது பேராசிரியர்கள் பாட்டர் மற்றும் ஷாந்துஜா. சொல்லப்போனால் அவர்கள் இருவரும் என் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் கூட அங்கத்தினர்களாக இருந்தனர். இப்போது அவ்விருவரும் கூட சுயோவுடன் சேர்ந்து விட்டனர்”
“மேலே சொல்”
“சொல்வதற்கு என்ன இருக்கிறது? என்னால் அவர்களை எதிர்த்து போட்டி போட முடியாது. அதை சொல்லி விட்டு போகலாம் என்று தான் வந்தேன். என்னுடன் நேரம் செலவிட்டதற்கு வந்தனம்”
“அர்ஜுன். நீ தளர்ந்து விட்டாய். நீ இந்திய மேலாண்மைக் கல்லூரியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளாய் என்பதை மறந்து விடாதே. நீ இங்குள்ள மூன்று பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசனை கூறி உள்ளாய். எல்லாவற்றையும் மறந்து விட்டாயா?”
அர்ஜுன் முகம் சற்றே தெளிந்தது.
“அது சரி தான். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவது வேறு. நாமே செய்வது வேறு. எனக்கு சுயோவின் நிறுவனத்தை எதிர்க்கும் தைரியம் இல்லை என்பது நிஜம். எனது பேராசிரியர்கள் வேறு உள்ளனர். எனக்கு தோல்வி நிச்சயம்”
“அர்ஜுன். நீ பாதிக் கிணறு தாண்டி விட்டாய். நீ ஆரம்பித்ததை முடி. நான் உனக்கு துணை நிற்கிறேன்”
“நல்லது. என்ன நிறுவனத்தின் இயக்குனரின் ஒருவராக சேர்ந்து விடுகிறாயா?”
“அது என்னால் இயலாது. என்னால் நேரடியாகப் பங்கேற்க முடியாது. நான் உனக்கு ஒரு வழி நடத்தும் ஆலோசனகனாக மட்டுமே செயல் பட இயலும்”.
“என்னிடம் என்ன இருக்கிறது அவர்களை வீழ்த்த?”
“நான் இருக்கிறேன். ஒரு நிறுவனம் சந்தையில் வெற்றி பெறுவதைத் தீர்மானிப்பது நான் தான். நீ வெற்றி தோல்வி பற்றி கவலைப் படாமல் உன் கடமையை செய். முடிவை நான் பார்த்து கொள்கிறேன் “
“நீயா? நீ ஒரு முதலீட்டாளன். அவ்வளவு தான். உன்னுடைய முதலீடு முக்கியமானது தான். அதை மறுக்க இயலாது. ஆனால் அதை மட்டும் வைத்து ஒரு நிறுவனம் வெற்றி பெற்று விடுமா?”
கிரிஸ் சிரித்தான்.
“பல பேர் அப்படி தான் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். முதலீடுகளில் பலவகை உண்டு. அந்த காலம் மாதிரி மனைவியின் தாலியை அடகு வைத்து, உனது கார் கொட்டகையில் புத்தொழில் தொடங்க முடியும். சில சமயம் அது வெற்றி பெற்று ஒரு கோடி ஈட்டி ஒற்றைக் கொம்பு (unicorn) நிறுவனமாக வளரலாம். இல்லாவிடில் மக்களிடம் முறையிட்டு கூட்ட நிதி சேர்க்கலாம். அடுத்த வழி தேவதை முதலீட்டார்களை (angel investors ) முதல் சுற்று முதலீடு கேட்பது. பெரிய தொகையானால் முதலீட்டார்கள் கூட்டமைப்பை (syndicate ) அணுகலாம். அந்த மாதிரி பல கூட்டமைப்புகள் குழுமத்துக்கு நான் தலைவன். இப்போது உலகம் முழுவதும் அதிர்வலைகளை எதிர் படுத்திக் கொண்டிருக்கும் செயற்கை அறிவு தேடல் நிறுவனங்களுக்கும் நான் தான் முதலீட்டாளன். அதனால் எந்த ஒரு நிறுவனத்தையும் ஆக்கவும் அழிக்கவும் என்னால் இயலும்”
அர்ஜுன் வாயடைத்து போனான். கிரிஸ்சின் உண்மை தோற்றம் அச்சத்தையும் ஆச்சர்யத்தையும் ஒரு சேர தூண்டியது.
“நிஜமாகவே? அப்படியென்றால் என்னை போன்ற ஒரு சிறிய புத்தொழில் தொடங்குபவனைப் பார்க்க என் சம்மதித்தாய்? நன்றி, மிக்க நன்றி”
“ருக்கு தான் உன்னைப் பார்க்க சொன்னாள் நீ அவளுக்கு தூரத்துச் சொந்தம் என்று. உனக்குத் தான் இந்திய மனைவிகள் பற்றி தெரியுமே? உன்னை பார்க்காவிட்டால் எனக்கு பன்னீர்-வெண்ணை-மசாலா இரவு உணவுக்குக் கிடைக்காது”
கிரிஸ் கண்ணடித்தான்.
“நன்றி. இப்போது நான் என்ன செய்வது?” அர்ஜுன் கொஞ்சம் தெளிவடைந்து இருந்தான்.
“நீ உன்னுடைய செயலியை கொஞ்சம் மாற்றினால் போதும். நீ முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது மக்கள் முட்டாள்கள். அவர்களுக்கு திறன் பேசியின் (smart phone ) துணை இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்ற ஒரு மாய பிம்பத்தை நாம் உருவாக்க வேண்டும்.”
“எப்படி?”
“ சாப்பிடுவதற்கு ஒரு கலோரி கவுண்டர். நடப்பதற்கு ஒரு பெடோ மீட்டர். நண்பர்களுடன் வெட்டி அரட்டைக்கு பதிலாக வாட்சப். தூங்குவதற்கு ஒரு இசைச் செயலி. பக்திக்கு ஆன்மீகச் செயலி. மூச்சு விடுவற்கு ஒரு செயலி. தியானத்துக்கு ஒரு செயலி. படிப்பதற்கு, விளையாடுவற்கு, காணொளி பார்ப்பதற்கு எதற்கும் தேவை செயலி. சுருக்கமாக 24 மணி நேரமும் ஒருவர் செயலிகள் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். “
“ஆனால் ஏற்கனவே நிறைய செயலிகள் இருக்கின்றனவே?. எப்படி போட்டி போடுவது?”
“அதனால் உனது செயலியின் பாதையை கொஞ்சம் மாற்ற வேண்டும். அதனுடன் செயற்கை அறிவு சாதனம் ஒன்றை இணைக்க வேண்டும். உன்னுடைய செயலி ஒருவருக்கு முழுமையான அறிவுரை கூற வேண்டும். ஒருவர் “நான் சந்தோஷமாக இருப்பது எப்படி?” என்று கேட்டால் அதற்கு கேள்வி கேட்பவரின் நிலைமைக்குத் தக்கவாறு அவர் என்ன சாப்பிட வேண்டும், எப்போது தூங்க வேண்டும், எவ்வளவு உடல் பயிற்சி செய்ய வேண்டும், எந்த விதமான தியானம் செய்ய வேண்டும் என்று பதில் கொடுத்து, எல்லாவற்றுக்கும் ஒரு கூட்டான செயலி அமைத்து தர வேண்டும்.”
அர்ஜுன் உற்சாகம் அடைந்தான்.
“அருமையான ஆலோசனை. செயற்கை அறிவுடன் கூடிய கூட்டுச் செயலி! இது ஒன்று மட்டுமே போதும். இது சவாலான ஒரு வேலை தான். நான் ஏற்றுக் கொள்கிறேன்”
“பொறு. ஒரு முக்கிய விஷயம். மக்கள் எதையும் பிரபலங்கள் சொன்னால் தான் கேட்பார்கள்”
“நான் ஒரு கிரிக்கெட் வீரரை அணுகவா? அவர்கள் தான் விளையாடுவதை விட விள்ம்பரங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்”
” வேண்டாம். நீ சுவாமி அடிதடியானந்தாவுடன் கூட்டு சேர வேண்டும்.”
“அடிதடியானந்தாவா? அவர் இயற்கை வழக்கை முறையை அல்லவா போதிக்கிறார்? அவர் தன் பக்தர்களை எந்தச் செயலியையும் உபயோகப் படுத்தக்கூடாது என்று தானே சொல்கிறார்? “
கிரிஸ் சிரித்தான்.
“உன்னுடன் கூட்டு சேர்ந்தவுடன் உன் செயலி மட்டும் அதற்கு விதி விலக்கு என்று சொல்வார். உனது செயலி மட்டும் தான் உண்மையான யோகா சொல்லித்தருகிறது என்று அவர் தன் பக்தர்களிடம் கூறுவார்.”
அர்ஜுனுக்கு இப்போது கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது.
எழுந்து நின்றான்.
“உனது அறிவுரைக்கு நன்றி, கிரிஸ். நீ என் கண்களைத் திறந்து விட்டாய். . இப்போது தான் எனக்கு புரிந்தது எல்லாவற்றையும் நடத்துபவன் நீ என்று. நான் உனக்கு ஒரு கருவி. அவ்வளவு தான். நான் என் கடமையை செய்கிறேன் . வெற்றி தோல்வி பற்றி நான் கவலைப் படப் போவதில்லை”
அர்ஜுன் புன்னகையோடு கை குலுக்கி வெளியே சென்றான்.
***
பின் குறிப்பு:
புத்தி சாலியான சொல்வனம் வாசகர்கள் பகவத் கீதைக்கும் இந்த கதைக்கும் உள்ள ஒற்றுமையை கண்டு பிடித்து இருப்பார்கள் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. ஆனால் அவர்களுக்கு தெரியாதது, இந்த நவீன மஹாபாரதத்தில் சுயோவின் நிறுவனத்திற்கும் முதலீடு செய்து இருப்பதும் கிரிஸ் தான் என்று.