
தலைப்பு உங்கள் தலைக்குள் ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்துமேயானால், காமம் சார்ந்த கற்பனைகளை உற்பத்தி செய்யுமேயானால், கட்டுரையை படித்தபின் உங்களுக்கு ஏற்படும் ஏமாற்றத்திற்கு நான் பொறுப்பல்ல. தொடர்ந்து படிக்கும் மற்றவர்களுக்கு ஒரு இலகுவான கேள்வி. இதன் பதிலை நாம் கண்டடையும் போது கேள்வி, பதில் இரண்டுமே பளுமிக்கதாக மாறக்கூடும். உங்கள் அப்பாவை நீங்கள் முத்தமிட்டது உண்டா? இதென்ன அசட்டுத்தனமான ஒரு கேள்வி என்று தோன்றலாம். குழந்தைப் பிராயத்தில் உண்டு என்பது நாம் தரக்கூடிய சிறுபிள்ளைத்தனமான பதிலாக இருக்கலாம். எனவே கேள்வியை இன்னும் சற்று தெளிவாக்கலாம்…உங்கள் பால்யத்திற்குப் பின் எப்போதேனும் அப்பாவை முத்தமிட்டுருக்கிறீர்களா? நான் ஏன் இக்கேள்வியை கேட்கிறேன் என்பதை விளக்குவதற்கு முன், உங்கள் தந்தை இப்போது உங்களுடன் இருந்தால் உடனே சென்று முத்தமிட்டு வாருங்கள். வேறெங்கோ, எதன் பொருட்டோ, தள்ளியிருந்தால் அலைபேசியில் உடனே அழைத்து, முத்தமிடும் விருப்பத்தை தெரிவியுங்கள். இத்தகையதொரு செயலுக்கான தேவையையும் பயனையும் இக்கட்டுரையின் முடிவில் நாம் கண்டடைய முடியும் என்று நம்புகிறேன்.
கடமைகளை நிறைவேற்றுவதையே அன்பின் மொழியாக ஆண்கள் அடையாளம் காணும் வண்ணம் அவர்களின் உயிரியலும் மெய்யியலும் அமையப்பெற்றிருப்பது வரமா சாபமா? ஆதிகாலம் தொட்டு ஆணின் கதை அப்படித்தான் இருக்கிறது போலும். ஒரு ஆண், மற்றொரு ஆணிடம், புறவயமான அன்பின் வெளிப்பாடுகளை ஏன் அடையாளப்படுத்துவதே இல்லை? ஒரு ஆண் மற்றொரு ஆணிடம் காட்டும் அன்பின் பாதைகள் அவர்கள் இருவருக்கிடையில் நிகழும் தர்க்கரீதியான உரையாடல்கள் வழியிலான சிந்தனைப் பிணைப்பினாலும், ஒருவரின் முன்னேற்றத்தில் மற்றொருவரின் பங்கெடுப்பினாலுமே பெரும்பாலும் கட்டமைக்கப்படுவது ஏன்? அந்த இரண்டு ஆண்கள் அப்பா-மகன் என்ற உறவு நிலையில் இருந்தால்?.. “என்னுடைய நீட்சியே நீ” என்று தந்தை மகனின் இருப்பை அர்த்தப்படுத்திக் கொள்ள முயல்வதும், தன்னிருப்பின் காரணத்தை சுயமாக முன்னிருத்த தந்தையின் கருத்துக்கு எதிர்திசையில் மகன் பயணிப்பதுமாய் தலைமுறைகள் வந்து போய் கொண்டேயிருக்கின்றன…இந்த இரண்டு பார்வைகளுக்கும் இடையிலான தற்காலிக வெளி, தலைமுறை இடைவெளியாக சமூகத்தில் பொருள் பதிக்கிறது. ஏன் இது தற்காலிகமானது? இந்த இடைவெளியின் அதிகபட்ச தொலைவு மகனின் இளமைக்கும் தந்தையின் முதுமைக்கும் இடையில் உள்ள தொலைவே. அதன்பின், “என் நீட்சி நீ” என்னும் கருத்தாக்கம் மகனையும் ஈர்க்கிறது. காலத்தேரில் முன்னும் பின்னும் பூட்டபட்ட குதிரைகளாய் அவர்களை இயக்கவிட்டு, அந்த இயக்கங்களுக்கு “தலைமுறை இடைவெளி” என்று பெயரிட்டு தனது “உயிர் மேலாண்மை” யுக்தியை பறைசாற்றுகிறது காலம். தேர்கள் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன… குதிரைகள் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றன… வெவ்வேறு யுகங்கள் வெவ்வேறு தேர்கள் வெவ்வேறு குதிரைகள்…இயக்கம் ஒன்றே. வெவ்வேறு தலைமுறைகள் வெவ்வேறு அப்பாக்கள் வெவ்வேறு மகன்கள்…அவர்கள் அடைய முயலும் புள்ளி ஒன்றே…அவர்களின் தன்மையும் ஒன்றே…பேராத்மாவின் துளிகளே உயிர்கள் என்றால், அத்துளிகளில் ஒன்று நானென்றால், அதை விந்தாய் தந்தது தந்தையென்றால், அவராத்மாவின் துளி நானன்றோ? அது ஒரு ஆன்ம நீட்சி தானன்றோ?
சாந்தோக்ய உபநிடதம் தரும் ஒரு நுண்ணிய கருத்தை இதனுடன் இணைத்து நாம் சிந்தித்தோமேயானால்….
ஸ்வேதகேதுவுக்கு ஒரு சந்தேகம். ஆன்மா என்றால் என்ன? தன் தந்தை உத்தாலகரிடம் கேட்கிறான். அவனை ஒரு அத்திப்பழத்தை எடுத்து வரச்சொல்லி அதை பிளக்கச் சொல்கிறார். அதனுள் இருக்கும் விதையைக் காட்டி அதையும் பிளக்கச் சொல்கிறார். விதைக்குள் ஏதுமில்லை. ஏதுமற்ற விதைக்குள் மறைந்திருக்கும் மரம் போல் கண்ணுக்குத் தெரியாமல் எங்கும் வியாபித்திருக்கிறது பேராத்மா, அதுவே அண்டத்தின் ஆத்மா. அதுவே சத்தியம். அதுவே நீயும் கூட என்கிறார். ஸ்வேதகேதுவுக்கு குழப்பமாய் இருக்கிறது. மேலும் தெளிவுபடுத்த வேண்டுகிறான். ஒரு குடுவைக்குள் இருக்கும் நீரில் உப்பை போடச் சொல்லிவிட்டு நாளை வந்து பார் என்கிறார். மறுதினம் அவனை மேலே உள்ள நீர், நடுவாக உள்ள நீர் மற்றும் அடியில் உள்ள நீரை எடுத்து அருந்தச் சொல்கிறார். அனைத்திலும் உப்பு கரிக்கிறது. ஸ்வேதகேது “நீரில் இருந்த உப்பு என் வாயில் இன்னும் இருக்கிறது தந்தையே” என்கிறான். இது போலத்தான் பேராத்மாவின் இருப்பு உனக்குள் இருக்கும். அதுவே நீயாவாய் என்கிறார் உத்தாலகர்.
பலயுகம் கடந்தது… உத்தாலகரின் நீட்சியான தந்தைகளில் ஒருவர் தன் இறுதி நாட்களை மருத்துவமனையில் கடந்து கொண்டிருந்தார். அவரின் மகன் அவரிடமிருந்து கைமாற்றப்படும் நீட்சியின் அடுத்த தலைமுறையின் சான்றாக என்னுருவில் நின்றிருந்தான்…
பின்னிரவு ரவுண்ட்ஸ் வந்த தலைமை டாக்டர், “we tried our best… sorry” என்று சொல்லிவிட்டு நகர்ந்த பின் நான் செய்து முடிக்க வேண்டிய முக்கியமான வேலை ஒன்று இருந்தது. எப்படிச் செய்வது என்று தெரியவில்லை. அப்பாவின் உயிர் இயக்கங்களின் அலகுகளை காண்பிக்கும் கருவியிலிருந்து அவ்வப்போது ஒலிக்கும் பீப் சத்தத்தைத் தவிர்த்து அமைதியாக இருந்தது அறை. நீந்திக் களைத்து தொட்டியின் அடியில் துடுப்புகளை மட்டும் அசைத்தபடி அமர்ந்திருக்கும் தங்க மீனின் செவுளின் மெல்லிய அசைவுபோல் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது அப்பாவின் நெஞ்சுக் கூடு. கதவைச் சாத்திவிட்டு ஆஸ்பத்திரியின் நீண்ட வராண்டாவில் மெல்ல நடக்கத்துவங்கினேன். எவ்வாறு செய்து முடிப்பது?
செவிலியர்கள் மேசையின் மேல் தலைசாய்த்துத் தூங்கத் துவங்கியிருந்தனர். வாயிலை அடைந்து சாலையைச் சற்று நேரம் பார்த்தபடி இருந்தேன். வெறிச்சோடியிருந்தது சாலை. பாதைகள் போக்குவரத்துக்கு மட்டும்தானா? வெறுமையின் பாதையின் அங்கம்தானே? சாலைக்கும் மருத்துவமனை வாயிலுக்கும் இடையே நின்றிருந்த செங்கொன்றை மரம் அந்த இரவின் சிவப்பை எனக்கு நினைவுறுத்தியபடி இருந்தன. தரையெங்கும் பரவியிருந்தன பூக்கள். யாரிடமும் தனக்கென எதையும் எதிர்பாராமல் பூப்பதொன்றே பூவின் தன்மை என்பதால்தான் அவை சத்தமின்றி பூக்கிறதோ…! தந்தையர் அனைவரும் சத்தமின்றி தன்னைச் சார்ந்தவர்களுக்காக பூத்து உதிரும் பூக்களோ? எவ்வாறு செய்து முடிப்பது?
அறைக்குத் திரும்பி அப்பாவின் அருகில் அமர்ந்தேன். காலம் நிசப்தமாக எங்கள் இருவரையும் பார்த்தபடி இருந்தது. எவ்வாறு செய்து முடிப்பது? நானும் தந்தையும் மனதளவில் அணுக்கமாகவே இருந்தாலும் இதோ இந்த நொடியின் பொருளில் அத்தகைய புரிதல்கள் உதவுவதாக இல்லையே…எவ்வாறு செய்து முடிப்பது?
அவரின் கைகளைப் பற்றிக்கொண்டு, “உன்னை நான் நேசிக்கிறேன். உன் நீட்சிதான் நான்” என்று சொல்லி விடலாம். ஆனால் தொடுவுணர்வு இழந்து விட்ட அவரிடம் அச்செய்தி சென்று சேருமா? அவரின் காதருகே சென்று சத்தமாக “உன்னை நான் நேசிக்கிறேன்.. உன் நீட்சிதான் நான்” என்று சொல்லி விடலாம். நினைவிழந்த நிலையில் இருப்பவரின் செவி வழியே அச்சத்தம் மனதில் சேருமா? மெல்ல அவரின் முகத்திற்கு மிக அருகில் சென்றேன். அப்போது நான் நான்காம் வகுப்பு என்று நினைவு. திருச்செந்தூர் கடலில் என்னை முக்கித் தூக்கிய அவரின் கழுத்தை, பயத்தில் கத்தியபடி கைகளால் கட்டிக்கொண்டதில் இருவரின் கன்னங்களும் உரசியபின், இன்றுதான் மீண்டும் இத்தனை நெருக்கம். அவரின் நெற்றியில் ஏராளமான சுருக்கங்கள். அதில் பல என் பொருட்டு ஏற்பட்டவையாக இருக்கக்கூடும். எவ்வாறு செய்து முடிப்பது?
இனியும் தாமதிக்க நேரமில்லை. இனியும் தாமதித்தால் அர்த்தமில்லை. உபநிடத காலத்தில் உத்தாலகர் போடச் சொன்ன உப்பு என் உமிழ்நீரிலும் ஏறியிருக்கும் அல்லவா? உதடுகள் மெதுவாக நடுங்குவது போலிருந்தது. முத்தத்திற்கான முகாந்திரமாக இருக்கலாம். அழுகைக்கான ஆயத்தமாகவும் இருக்கலாம். இரண்டின் கலவையாகவும் முடியலாம். குழந்தைகளுக்கும், காதலியருக்கும், மனைவியருக்கும், அம்மாக்களுக்கும் என அனைவருக்கும் அளிக்கப்படும் முத்தங்கள் அப்பாக்களுக்கு மட்டும் அரிதான ஒன்றாவது ஏன்? அப்பாவின் இமைகளும் என் இமைகளும் ஒன்றை ஒன்று தொட்டு விடும் அருகாமையை அடைந்து விட்டிருந்தன… அன்றைய தினம் எரியக் காத்திருக்கும் சிதையின் அகவெம்மை தாங்காமல், யுகயுகமாய் கெட்டித்துப் போயிருந்த பனிப்பாளங்களின் துகள் ஒன்று உருகி ஓடத் துவங்கியிருந்தது…
உணர்வு பூர்வமான கட்டுரை/கதை
முன் பதிவின் தொடர்ச்சியாய் விட்டுப்போனவை….
முத்தம் என இங்கு குறிப்பது நன்றி உணர்தல். இது கதையாக வடிக்கப்பட்டிருந்தாலும் நிதர்சனமான உண்மை – இருக்கும்போது உணர்வதில்லை, சென்ற பின் நினைவு கூறுகிறோம்.
அப்பாவின் கடைசி தருணத்தில் “நான் என்ன கொடுத்தேன்” என்ற சுய பரிசோதனை மன போராட்ட வலியின் வெளிபாடாவே பார்க்கிறேன்.
விபரம் அறியாத சிறு பிராயத்துடன் அப்பாவின் அரவணைப்ப சுகம் நிலத்தடி நீர் போல் தெரியாமலேயே வாழ்க்கை நகர்ந்து விடுகிறது. கண்டிப்பெனும் திரையால் மறைத்திருக்கும் அன்பு வெளிப்படும் தொலைவாய் இருப்பதால் இருபுறமும் தொலைத்தே விடுகிறோம். கடைசி வரை தயக்கம் நீக்க என்ன ஒரு போராட்டம். சுயத்தை இழக்க அகந்தை விடுவதில்லை.
நெகிழ வைக்கும் வரிகளின் ஊடே சிறந்த அநுபவத்தை கடத்தியதற்கு பாராட்டும் ற
நன்றியும் பலப்பல….👍👏🙏