உள்ளிருத்தல்

அன்று பேங்கிலிருந்து மூன்றாவது நோட்டீஸ் வந்தது. கடன் தொகை என்.பி.ஏ ஆகி மேலும் முப்பது நாட்கள் ஆகிவிட்டதாகவும் சுந்தரம் அண்ட் சன்ஸ் இருக்கும் கட்டிடம் பேங்கின் பெயரில் அடமானம் இருப்பதாகவும் ஜப்தி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. நோட்டீஸை அது வந்த கவரிலேயே வைத்து கையில் எடுத்துக்கொண்டு கடையின் பிரம்மாண்ட ஷட்டர்கள் மூடப்பட காத்திருந்தேன். கடைத்தெரு அப்படியே தான் இருக்கிறது என்று தோன்றுமளவுக்கு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருக்கிறது, பூமி சுழல்வது போல பூமி சூரியனை வலம் வருவது போல மெல்ல நிகழும் இந்த மாற்றங்களின் நுண்ணிய அசைவுகள் புலனாவதில்லை. கடைக்கு எதிரில் பலாப்பழ வண்டிக்காரர் இன்னும் நின்று கொண்டிருக்கிறார்.முருகேசன் அவர் பெயர். சீசனுக்கு ஏற்றார் போல் அவர் தள்ளுவண்டி நிறைந்திருக்கும். பன்ருட்டி சென்று வாரமொரு முறை பலாப்பழம் கொண்டு வருகிறார். பகல் முழுதும் ஊருக்குள் தெருத் தெருவாக சென்று விடுவார். மதியம் மூன்று மணியிலிருந்து அவரை சுந்தரம் அன்ட் சன்ஸ் எதிரில் பார்க்கலாம். இந்த சீசன் முடிந்தால் வாழைப்பழத்திற்கோ அல்லது ஒரு ஜூஸ் கடையாகவோ மாற்றிவிடுவார். என்னைப் பார்த்ததும் புன்னகைத்தார். ஒரு பத்து சுளையை செய்தித்தாளில் கட்டி என்னிடம் நீட்டினார். நான் வாங்கிக்கொண்டேன்.

‘என்ன மணி என்ன மொகம் வாட்டமா இருக்கு?’

‘ஒன்னுமில்ல முருகு’

‘பெரியய்யா எப்டி இருக்காரு?’

‘நல்லா இருக்காரு.. நான் பாத்தே ஒரு வாரமாச்சு’

‘இப்டிக் கட பக்கம் வரத ஒரே அடியா நிறுத்திட்டாரே’

‘என்னமோ புதுசா சொல்லுற….ஆறு வருஷம் மேல ஆச்சு அவர் கடப் பக்கம் வந்து’

முருகேசன் அமைதியாய் உதட்டை கீழ் நோக்கி இழுத்த படி தரையைப் பார்த்து குதிங்காலில் நின்று பாத்தை மேல் உயர்த்தினார்.

‘என்ன முருகு..  செருப்பு கடப் பக்கமா புதுசா ஒரு பலாப்பழ வண்டி நிக்கிது போலருக்கே.. வியாபாரம் கொறையிதா’

‘ம்ம்ம்.. ரெண்டு குடும்பம் சாப்டும் அவ்ளோதான்’ என்று சிரித்தான் முருகேசன்.

‘பசங்க என்ன பண்றானுங்க’

‘ஏதோ எஞ்சினியரிங்க் படிக்கிறேன்னு போறான்.. ஃபெயிலாய்ட்டே இருக்கான்னு சொல்றாங்க… பாப்பம்… சரி மணி அப்ப நான் வரேன்.. பெரியய்யாவப் பாத்தாக் கேட்டதா சொல்லு’ என்று முருகேசன் நகரவும் கடைப்பையன் சாவியை கையில் கொடுக்கவும் சரியாக இருந்தது.

அன்று சாவியை கொடுக்க வீட்டிற்குச் சென்ற போது இரண்டு மகன்களும் இல்லை. மூத்த மருமகளிடம் சாவியைக் கொடுத்தேன். பெரியவர் மகன்களோடு இல்லை. தன் பழைய வீட்டிலேயே மனைவியுடன் இருக்கிறார். அன்று அவரைப் பார்த்தே ஆக வேண்டும் போலிருந்தது. ஸ்கூட்டரை நேராக பழைய வீட்டிற்கு விட்டேன். உள் கூடத்தில் விளக்கு எரிந்தது. கதவு தாழ்ப்பாள் இடவில்லை. உள்ளே சென்றபோது அம்மா பாய் விரித்துக்கொண்டிருந்தார். பெரியய்யா படுத்து விட்டிருந்தார்.

‘வா மணி’ என்றார். அம்மா லேசாகத் தலை அசைத்தார்.

‘நல்லா இருக்கீங்களாயா?’

‘ம்’ என்பது போல் தலை அசைத்துவிட்டு ‘என்ன இந்த நேரத்துல?’

எனக்குத் தயக்கமாகத்தான் இருந்தது. பெரியவர் வியாபார விஷயங்களிலிருந்து விலகிக்கொண்டு பன்னிரெண்டு வருடம் மேலாகிறது. ஆனாலும் விஷயம் கைமீறி விடும் போல் தோன்றியதால் ‘இல்லய்யா.. பேங்க் நோட்டீஸ் வந்திருக்கு’

‘மணி மணி..இங்க பார். உனக்குப் புரியல.. என் புள்ளைக்களுக்கு புரிஞ்சுதோ இல்லியோ எந்த விஷயத்துக்காகவும் வந்து என்னப் பாக்குறது இல்ல. நான் விலகிட்டேன் மணி. விலக விருப்பம் இல்லன்னா அந்த கடையோடையேதான் கிடந்திருப்பேன்…. நான் விலகியாச்சு. விலகுன பிறகும் மூனு தடவ வேற வேற சிக்கலோட வந்த… ஒவ்வொரு முறையும் திரும்ப கடைக்கு வந்து சரி பண்ணி வெச்சேன்… அவ்ளதான் முடியும் மணி… என்னோட எல்ல இவ்ளவுதான்,.. என் சக்தி இவ்ளவுதான்… இதுக்கு மீறி எங்கிட்ட ஏதுமில்ல… இதுக்கு மீறுன விஷயங்கள் மேல ஆசையும் இல்ல பாத்துக்க….’

அன்று எதுவும் பேசவில்லை நான். போய்விட்டு வருவதாய் சொல்லிவிட்டு கிளம்பினேன். அம்மாள் உடன் வந்து  வழி அனுப்பினாள். ஒவ்வொரு கூடமாய் லைட்டை போட்டுக்கொண்டு வந்தாள். பின் ஒவ்வொன்றாய் அணைத்துக்கொண்டு உள் சென்றாள். வெளிச்சத்தின் எல்லையைக் கடந்து அவள் உள் நுழைந்த போது அவள் குதிங்கால் கடைசியாய் மஞ்சளாய் தெரிந்தது. நான் சற்று நேரம் அந்த வீட்டு வாசலிலேயே நின்றேன்.

அதன் முன் கூடம்தான் முதலில் கடையாய் இருந்தது.நான் சொல்வது அறுபது வருடம் முன்பு. இந்த வீடு அப்போது ஓட்டு வீடல்ல. கீற்றுக் கூரைதான். பெரியவர் சோம சுந்தரத்துக்கு,  பக்கத்தில் இருக்கும் கிராமமான கதம்பனூர்தான் சொந்த ஊர். அவர் அப்பா  ஊரிலேயே ஒரு மளிகைக் கடை வைத்திருந்தார். தன் பதினெட்டு வயது கடந்த பின் மளிகைக்கடையில் தங்காது திருச்சிற்றூர் வந்தார் சோம சுந்தரம். துணி வியாபாரத்தில் இருந்த தன் மாமாவோடு சேர்ந்துகொண்டு வியாபாரம் பழகினார். பின் இருபதாவது வயதில் தனியாக ஊர் ஊராகச் சென்று துணி வியாபாரம் செய்தார். திருச்சிற்றூரில் பிரபலமான இரண்டு கல்யாணத் தரகர்கள் மற்றும் அங்கிருந்த நான்கு கல்யாண மண்டபங்களில் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். கல்யாணம் நிகழ இருக்கும் வீடுகளில் முதலில் ஆஜராகி புடவைகளைத்  தான் தருவித்துக் கொடுப்பதாய் பேசுவார். அப்படி நிகழ்ந்த ஒரு கல்யாணத்திற்கு முதன்முதலில் காஞ்சிபுரத்திலிருந்து பட்டுப் புடவை தருவித்துக் கொடுத்தார் சுந்தரம். மணப்பெண்ணும் அழகு. அவள் வெள்ளை நிறத்துக்கு சிவப்பு நிற சேலை அவ்வளவு எடுப்பாக இருந்தது. பார்த்தவர் எல்லாருமே எங்கு வாங்கியது என கேட்கத் தவறவில்லை. அப்பொழுது பிரபலமானது சுந்தரம் புடவைகள். கல்யாணம் என்றால் சுந்தரம்தான் என்றாகியது. திருச்சிற்றூரின் அரண்மனை அரசுடமை ஆக்கப்பட்டிருந்தாலும் அங்குதான் ஒரு பகுதியில் அரச வம்சம் வசித்து வந்தது. அரசரின் மகன்கள் படித்து வெளிநாட்டில் இருந்தனர். ஒரு மகளை அப்பொழுதே மெட்ராஸ் அனுப்பி எம்.ஏ படிக்க வைத்திருந்தார். அவளுக்குத் திருமணம். பெரியவர் பல முறை அக்கதையை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். 

‘கல்யாணத் தரகு விசுவநாதன் இருக்கானே அவன்தான் போற போக்குல சொல்லிட்டு போனான் ‘என்ன சோம சுந்தரம்.. ராஜா வீட்டு கல்யாணத்துக்கும் நானே புடவ குடுக்குறேன்னு கேக்க வேண்டிதானே’ ன்னு, அன்னக்கி ராத்திரி எனக்கு தூக்கமில்ல. பொரண்டு பொரண்டு படுக்குறேன். காலைல விடியிறப்ப முடிவு பண்ணேன் ‘போயி கேட்டுர்ரதுன்னு. என்ன நடக்கும். விதி பெருசா ஓடிட்டு இருக்கு. யார எங்க தள்ளும் யாருக்குத் தெரியும்.  பாறைல மோதுமா இல்ல அப்டியே தூக்கி கரைல போடுமா யாருக்குத் தெரியும். காலைல குளிச்சு கோயிலுக்குப் போய் அப்பா காசி விசுவநாதா நீதான் கதீன்னு கும்பிடு போட்டு நேரா அரண்மனைக்கு நடந்தேன். இப்ப வேணா அவங்க ராஜாவ இல்லாம நாட்ட ஆளாம இருக்கலாம். ஆனாலும் ராஜ வம்சம் தானே. பணிவா போய் நிக்கிறேன். நல்ல ஆஜானுபாகுவான தோற்றம் அவருக்கு. தயங்கித் தய்ங்கி கேக்குறேன். கேட்டா நம்ப மாட்ட மணி. உடனே ஒத்துக்கிட்டார். அறுபத்திரெண்டு புடவ வேணும்னு சொல்றார்.  ஒத்துக்கிட்டேன். அப்புறந்தான் சேதி தெரியுது. கல்யாணத்துக்கு நல்ல நாள் வர மாசம் விட்டா ஆறு மாசம் கழிச்சுதான் இருக்குன்னு. அதான் ஏற்பாடு வேகம் வேகமா நடந்திருக்கு. நான் கேக்கவும் ஒத்துக்கிட்டாரு. அது மட்டுமில்ல சூர்யவிலாஸ் மளிகக்காரங்க வீட்டு கல்யாணத்துக்கு வந்திருக்காரு. அன்னக்கி ராஜாவே கேட்ருக்காரு எங்க புடவ வாங்கினீங்கன்னு. வெளிய வந்து சந்தோஷம் மெல்ல வடியவும் கொஞ்சம் கொஞ்சமா பதற்றம் வருது. அறுபத்திரெண்டு புடவ வேணும்னா நான் கையில ஒரு முன்னூறு புடவையாவது கொண்டு காட்டணும். அதுவும் இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம். ஊருக்கு போறேன். அம்மாவோட நகையெல்லாம் வாங்கி அடமானம். அப்டியும் பத்தல. காஞ்சிபுரத்துல சிவசாமின்னு  ஒருத்தர். அவர்கிட்டதான் என் மாமா இருவது வருஷத்துக்கும் மேலா சேல வாங்குறார். மாமா கிட்டேந்து கடுதாசி வாங்கிட்டு போனேன். அவர் பெரிய மனசு பண்ணி கடனுக்கு குடுத்தார் சேலைகள. அடுத்து மைசூர் போனேன். அங்கேந்து பட்டு தருவிச்சேன். விசாரிச்சு விசாரிச்சு மைசூர்லேந்து ஒரு முப்பது கிலோமீட்டர் தூரத்துல கொடியாலான்னு ஒரு ஊரு. அங்க கம்பது  மனேன்னு பரம்பரையா பட்டு நெய்யிறவங்க.  அங்க வாங்குனேன் கொஞ்சம் புடவ. அங்கேந்து கிளம்புறப்ப பாத்தேன் ஒரு புடவைய. அதுதான் இந்த நாலு வருஷத்துலேயே நான் பாத்த அழகான புடவ. தேவலோகத்த சேந்தது அது. மனுஷ உடம்புக்கு பொருந்தாதுன்னு தோணுது.  கையில திரும்பி வர இருந்த காச கூட போட்டு வாங்கினேன். என்ன தைரியம் தெரியல. அத்தனைக்கும் மனப்பெண்ணுக்கு புடவ எங்கிட்ட கேக்கப்படல. ஆனாலும் அந்த புடவைய வாங்கினேன். அன்னக்கி ரயில்ல திரும்பி வரப்ப திருட்டுத்தனாமாத்தான் வந்தேன். அடுத்தநாள் ஊர் வந்து சேந்து அரண்மனைக்கு பெரிய மூட்டைய தூக்கிட்டு போய் காட்டுறேன். நான் கொண்டு போனது முன்னுத்து நாப்பது பொடவ. எம்பத்து மூனு பொடவ வாங்கினாங்க. மணப்பெண்ணு யாருன்னு தெரிஞ்ச்சிருச்சு. அந்த பொண்ணு கிட்ட காட்டுனேன் கம்பதுமனேல எடுத்த பொடவைய. பாத்ததுமே அந்த பொண்ணு அமைதி ஆகிட்டா. அந்த இடமே அமைதி ஆகிட்டு. கல்யாணத்து மேடைல இந்த புடவைய கட்டிகிட்டுத்தான் மணப்பெண் நின்னா. எனக்கு மனசு நெரம்பிப் போச்சு’

அதன் பின்தான் சுந்தரம் புடவை வெகு பிரபலமானது. அக்கம் பக்கம் கிராமங்களில் சுந்தரம் கதையாகவே ஆகிப் போனார். நம்ம ஊருக்கு வண்டியில வந்து புடவை விற்பவர்தான் ராஜா வீட்டு திருமணத்திற்கு புடவை குடுத்தார் என்று. அதிலிருந்து சோமசுந்தரம் ஊர் ஊராக தேடிச் சென்றது போக இவரை தேடி மக்கள் வரத் துவங்கினர். வீட்டில் இருந்தே ஆகவேண்டிய கட்டாயம்.சிறு கீற்றுக்கூரையுடன் ஆரம்பிக்கப்பட்டது, பின் ஆறு மாதத்தில் அந்த நிலத்தை வாங்கினார்.  அங்கு ஒரு ஓட்டு வீடு கட்டப்பட்டது. திண்ணையை ஒட்டி ஒரு தடுப்புடன் புடவைக் கடை. வீட்டிற்கு முன் புறம் ‘சுந்தரம் புடவைகள்’ என சந்தன நிறப் பின்புலத்தில் சிவப்பு நிற எழுத்துக்களில் ஒரு போர்ட். சுந்தரம் புடவைகள் ஒரு கடையாக நிலைகொண்ட ஆண்டில்தான் நான் வேலைக்குச் சேர்ந்தேன். நான்தான் முதன் முதலில் இவரிடம் வேலைக்குச் சேர்ந்தது. அதன் முன்பு வரை கணவனும் மனைவியும்தான் பார்த்துக்கொண்டனர் வியாபாரத்தை. 

அந்த தீபாவளி இன்னும் நினைவுள்ளது. 1962. அதுகொண்ட கூட்டம். வீடு நிரம்பி வழிந்தது. தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பு இன்னும் இரண்டு பேர் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.  ஒரு மூலையில் வேஷ்டிகள் வாங்கி வியாபாரத்துக்கு வைக்கப்பட்டது. சமாளிக்க முடியாத அளவு கூட்டம். இரவு பன்னிரெண்டு வரை வியாபாரம் ஆனது. தீபாவளி அன்று தூங்கியே கழித்தது எனக்கு நினைவுள்ளது. அவ்வளவு அசதி. அந்த தீபாவளி முடிந்து ஒரு மாதத்தில் ராஜ வீதியில் ஒரு பெரிய நிலத்தை வாங்கினார். அதில் எழுப்பப்பட்டது சுந்தரம் டெக்ஸ்டைல்ஸ். புடவை பிரபலம் என்றாலும், ஆண்களுக்கு குழந்தைகளுக்கு தனித்தனியாகப் பிரிவுகள். புடவைகளை பிரித்து அடுக்குதலில் துவங்கி மெல்ல ஒட்டு மொத்த கணக்கு வழக்குகளை பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருந்தேன். இருபதுக்கும் மேல் ஊழியர்கள் உண்டு. மரக்கதவுடன் கூடிய பெரிய வாயில் இருந்தது. மக்கள் வந்த வண்ணமிருந்தனர். போட்டிக்கு ஆள் யாரும் இல்லை. பெருகிக்கொண்டே இருந்தது தொழில். அடுத்த படியாக வேறு தொழிலிலும் முதலீடு செய்யும் அளவு கையிருப்பு சேர்ந்தது. இல்லையெனில் அடுத்து உள்ள பெரிய ஊர்களில் கிளை துவங்கலாம். ஆனால் பெரியவர் ‘போதும்’ என்றார். ஏன் என கேட்கத் துணிவில்லை எனக்கு. அவர் மனைவி கேட்டார் ‘ஏன் போதும்கிறீங்க?’ என்று.

‘இதுக்கு மேல பெருகி என்ன பண்ணனும்? இப்ப இருக்குறதே கூட நம்ம கட்டுப்பாடையெல்லாம் கடந்து தன்னிச்சையா நடக்கக்கூடிய எடத்துக்கு வந்துட்டு தொழில். ஆனாலும் லகான் கைல இருக்குன்னு சொல்லாம். கட்டுப்பாடில்லாம போறதுக்கும் கட்டுப்பாட்டுக்கும் நடுவுல ஒரு புள்ளி. போதும்னு தோணுது’ என்றார். புதிதாக விரிவாக்கம் செய்யாததாலேயே வேறு துணிக்கடைகள் வந்தன. ஆனாலும் லாபம் வளர்ந்த வண்ணம்தான் இருந்தது. 

சுந்தரம் டெக்ஸ்டைல்ஸ், சுந்தரம் அன்ட் சன்ஸாக மாறியது 2001ல். சோம சுந்தரம்  வெறும் ஐயாவிலிருந்து பெரியய்யாவாக மாறியது அதற்கு இரண்டு வருடம் முன்பு. இரண்டு மகன்களும் ஒரு மகளும் நிர்வாகத்தில் ஈடுபடத் துவங்கினர்.  அவர் வெளியான காலத்தில் வேலையை விட்டு நின்றவன்தான் முருகனும். பின் பலாப்பழ வண்டி வைத்துக்கொண்டான். கேட்ட போது ‘அவரே நின்னுட்டாரு… இனிமே  நமக்கு என்ன… ‘ அவ்ளவுதான் முருகுவின் பதில்.

ஐம்பது வருடத்திற்கும் மேலாக ஈட்டிய பெயர். ஒரு குறையும் இல்லாமல் வியாபாரம் நடந்தது. 2001ல் பெரியய்யா முழுவதுமாக வியாபாரத்தை தன் மக்களிடம் ஒப்படைத்துவிட்டார். ஒரு நாள் அப்படியாக வீட்டுக்குச் சென்றவர் கடைப்பக்கம் பெயருக்குக்கூட வரவில்லை. இதற்கிடையில் மூன்று மாடிகளுடன் கூடிய ஒரு வீடு கட்டப்பட்டிருந்தது. வியாபாரத்தை ஒப்படைத்த நாளிலேயே பழைய வீட்டிற்கு மனைவியுடன் சென்றார் பெரியவர். யாரும் வரிந்து அழைக்கவுமில்லை. நாற்பது லட்சம் பணம் வங்கியில் இருந்தது. அதிலிருந்து வரும் வட்டி ஜீவனத்துக்கு.  வீட்டை இன்னும் இருந்த நிலங்களை மகள் மற்றும் மகனுக்கு எழுதி வைத்துவிட்டார். அவ்வப்போது நான் போவதுண்டு வீட்டிற்கு. ஈஸி சேரில் படுத்தபடி புத்தகம் வாசித்துக்கொண்டிருப்பார். தினம் தவறாமல் காசி விசுவநாதர் ஆலயத்தில் காணலாம்.

தொழிலை மேலும் பெருக்கும் திறமை மகளுக்கு உண்டு. ஆனால் கடவுள் சித்தம் வேறு. அவள் சிறு வயதில் விபத்தில் இறந்தாள். மகன்களுக்கு இருக்கும் வியாபாரத்தை நடத்திச் செல்லும் திறமையுண்டே தவிர விரிவாக்கத்துக்கெல்லாம் திறமை போதாது. தகராறு மூண்டது இருவருக்கிடையில். இளையவனுக்கு புதுக்கிளை துவங்க ஏற்பாடானது. ஆனால் அவன் மறுத்து ஹோட்டல்தான் துவங்குவேன் என நின்றான். இரண்டு முறை பெரியவர் அழைத்துப் பேசி சரி செய்தார். அடுத்து அவரும் ஒதுங்கிக் கொண்டார்.

‘தப்பு இருக்குறது கணக்கு வழக்குல இல்ல… மனுஷ இயல்புல. அத மாத்துறது கஷ்டம். ஸ்ரீகுண்டம் ராஜா வீட்டு கல்யாணத்துக்கு ஒரு பைசா கைல இல்லாம புடவ ஸ்டாக் எடுத்து வியாபாரம் பண்ணிடலாம். ஆனா மனுஷ இயல்ப மாத்த முடியாது. ஒரு விஷயத்த முழுசா புரிஞ்சுதான் அதுல ஈடுபடனும்னா அது ஆகாத காரியம். எதுவுமே புரியாமலும் இரங்கக்கூடாது. புத்தியினால புரிதல நெருங்குன பிறகு அத பத்தி ஒரு பிடி கெடச்ச பிறகு இரங்கனும். அனுபவம் முழுசாக்கும் புரிதல. என் பிள்ளைகள் எதையுமே புரிஞ்சுக்காம கால விடுறானுங்க. அவனுங்களுக்கு ஒரு குருட்டு தைரியத்த வளந்த சூழல் குடுத்துருக்குன்னு நினக்கிறேன் ‘

கண்ணுக்கு முன்தான் மூழ்கிக்கொண்டிருந்தது. நான் அழுததுண்டு.  ஆனால் பெரியவர் சற்றும் சலனமற்றிருந்தார். ஈஸி சேரும் கையில் ஒரு புத்தகமும் காசிநாதர் ஆலயமும்.

பேங்க் நோட்டீஸ் வந்ததிலிருந்து இரண்டு மாதத்திற்கு வேலை செய்பவர்களுக்குக் கூட சம்பளம் குடுக்க முடியவில்லை. எனக்கும் சம்பளம் இல்லை. மேலும் கடன் ஏற்பாடானது. கோடி மயிலிறகை வைத்தால் அச்சு முறியும் , பத்து பாறாங்கல்லை வைத்தாலும் முறியும். பத்தாவது கல்லாக ஒரு பெருங்கடன் ஏற்பாடானது. இந்த ராஜ வீதியில் எத்தனையோ பேர் வருகிறார்கள் போகிறார்கள், அவர்களுக்கெல்லாம் இது வெறும் கடை. அதனோடே கிடந்து உழன்று எழுந்த எனக்குத்தான் வலி எல்லாம். ஆனாலும் பெரியவர் எப்படி இவ்வளவு லகுவாக வெளியே போய்விட்டார். இப்போது கூட நான் வெளியேறலாம். ஆனால் என்னால் முடியாது. அதுபற்றி யோசனைகூட கிடையாது. அபிமன்யு மாதிரி மாட்டிக்கொண்டுவிட்டேன். ம்ஹூம் அப்படியல்ல அபிமன்யுவுக்கு வெளியேற வழியில்லை. எனக்கு வெளியேற சித்தமில்லை. இப்போது தோன்றுகிறது பெரியவரின் ஸ்தூல உடல் மட்டும்தான் வியூகத்துக்குள் வந்து போனது போலும். சூட்சும உடல் காசிநாதர் ஆலயத்திலெயோ வேறெங்கேயோ இருந்துள்ளது.

 போன வாரம் ஒரு நாள் சொல்லி விட்டார். அவர் மட்டும்தான் இருந்தார் வீட்டில். வாசலில் டாக்ஸி நின்றிருந்தது. கடையில் வேலை பார்த்த பையன்தான். இப்போது டாக்ஸி ஓட்டுகிறான். உள்ளே சென்ற போது ஈஸி சேரில் அமர்ந்திருந்தார். அம்மா இல்லை. உட்காரும்படி கை காண்பித்தார்.

‘அவளயும் கூப்டேன். வர முடியாதுன்னுட்டா. சரி பிள்ளைகளோட இருன்னு அனுப்பி வெச்சேன் இப்பதான். காலைல பேங்க்ல போய் இருந்த நாற்பது  லட்சம் எஃப்.டிய இவ பேர்ல மாத்துனேன். மாசம் மாசம் வட்டி வரும். எந்த காரணத்த கொண்டும் பணத்த உன் மகன்க கிட்ட கொடுத்துடாதன்னு சொன்னேன். இந்த வீடு இருக்கு பார். அத நீ பாத்துக்க. உன் பேர்ல எழுதி வைக்கிறதா சொல்லிருக்கேன். நிலம் பெருசு. கடத்தெருல இருக்கு. எல்லாம் மூழ்கிப் போனா குடு. இது மத்து மாதிரி. பிடிச்சு கர சேருரது அவனவன் திறம. நான் காசிக்குக் கிளம்பிட்டேன். ஆறரைக்கு ட்ரெயின். கங்ககைய பாத்துட்டே மெல்ல இருந்துட வேண்டியதுதான் மித்த நாள’

காலியான வீடு போன்ற ஒரு வெறுமையை உள்ளுக்குள் உணர்ந்தேன். ஆனால் எதுவும் சொல்லவில்லை. பையை எடுத்து காரில் வைத்தேன்.கார் தெருக்கோடி சென்று மறைவது வரை நின்றிருந்தேன். பின் அவ்வீட்டைப் பார்த்தேன். குறைந்தது எழுவது வருடம் பழைய வீடு. எழுவது வருட வாழ்க்கைகள் அந்த சுவரில் ஊரிப்போயிருக்கும். கதவை சாத்திப் பூட்டினேன். என் ஸ்கூட்டரை சுந்தரம் அண்ட் சன்ஸ் முன் நிறுத்தியபோது முருகுவின் பலாப்பழ வாசனை அடித்தது. தூரத்தில் ரயில் ஓசை கேட்டது.காசி வண்டியாகத்தான் இருக்க வேண்டும்.

One Reply to “உள்ளிருத்தல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.