உறுதி

தமிழாக்கம் : கு. பத்மநாபன்

நான் சீக் ஃப்ரைட் லெஞ்ஜ் என்ற ஜெர்மன் எழுத்தாளரின் சிறுகதை ஒன்றை  வாசித்து ரொம்பநாட்கள் ஆகிவிட்டன. அந்தக் கதையின் பெயர் நினைவில்லாவிட்டாலும் பொலெரூப் என்ற ஊரில் நடைபெறும் அதன் சில நிகழ்ச்சிகள் மறப்பதற்கு இல்லை. பொலெரூப் நமது குமட்டா போல அல்லது மல்பெ போல கடற்கரையில் உள்ள ஒரு ஊர். அந்த ஊரைச்சேர்ந்த இரண்டு குடும்பத்தார் ஏறக்குறைய இருநூறு வருடங்களாக ஒருவருடன் ஒருவர்  பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் ஒரேமாதிரி வாழ்ந்துவந்தார்கள். அவர்களின் தோட்டம் துரவுகள் அருகருகே இருந்தன. அவர்களது பிள்ளைகள் ஒரே பள்ளிக்கூடத்துக்குப் போய்க்கொண்டு இருந்தனர். அவர்கள் செத்துப்போனவர்களைப் புதைத்துக்கொண்டு இருந்ததும் ஒரே மயானத்தில் தான். இரு குடும்பங்களின் பாரம்பரியப் பெயர்களும்கூட ஒன்று போலத்தான்: ஏதோ பெடெர்சென் என்று இருக்கவேண்டும். அவர்கள் யார் யார் என்று உங்களுக்குத்  தலைசுற்றாது  இருக்கட்டும் என்று நாம் இப்போதைக்கு ஒரு குடும்பத்தாரை தெற்கத்திய அப்பண்ணன் என்றும் இன்னொரு குடும்பத்தாரை மேற்கத்திய அப்பண்ணன் என்றும் அழைத்துக்கொள்ளலாம். 

அனந்தமூர்த்தி அவர்களின் மௌனி கதையிலும் ஒரு அப்பண்ண பட்டர்  வருகிறார். அவருக்கும் இந்தக் கதையில் வரும் அப்பண்ணனுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. 

`அந்த இரண்டு குடும்பங்களும் தங்களுக்கு இடையே ஒரேயொரு சொல்லையும் பகிர்ந்துகொள்ளவில்லை. ஏனென்றால் ஒரு குடும்பத்தாரின் பார்வையில் இன்னொரு குடும்பத்தார் கழிசடைகளாகவும்,  நாற்றம் பிடித்தவர்களாகவும்,  கேடுகெட்டவர்களாகவும் பட்டிக்காட்டு நாய்களாகவும் தெரிந்தார்கள். அவர்கள் ஒருவரையொருவர் முடிவும் முதலும் இல்லாது எப்போதும் கேவலப்படுத்திக்கொண்டு எவ்வளவு தீவிரமாக வெறுத்துக்கொண்டு இருந்தார்கள் என்றால், இரண்டு பக்கத்தவர்களும்  அவரவர் பெயர்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வெகுகாலம் முன்பே முடிவுசெய்து இருந்தார்கள். ஆனால் ஏன் மாற்றிக்கொண்டிருக்கவில்லை என்றால், அவர்கள் முதலில் மாற்றிக்கொள்ளட்டும்  என்று இவர்களும் இவர்கள் முதலில் மாற்றிக்கொள்ளட்டும் என்று அவர்களும் காத்துக்கொண்டிருந்தார்கள். அப்படியாக அந்த இரண்டு  குடும்பத்தாருக்கும் இன்னும் அப்பண்ணன் என்ற பெயரே ஒட்டிக்கொண்டு இருந்தது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவனுக்கு இன்னொரு குடும்பம் என்றால் அசிங்கம், அருவருப்பு. ஆதலால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன் இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்தவன் பெயரைச் சொல்லவேண்டிய போதெல்லாம் ஓநாய்கள், குள்ளநரிகள், கோவேறுகழுதைகள், பாம்புகள், கீரிகள், தவளைகள், தேள்கள், அட்டைபூச்சிகள், கொசுக்கள் என்று பல ஜீவராசிகளின் பெயர்களைப் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். சிலமுறை அவர்களுக்கு  ஒருவரையொருவர் அசிங்கப்படுத்த வேண்டும் என்று தோன்றியபோதெல்லாம்  எப்படிப்பட்ட வசவுகள் வெளிப்பட்டுக்கொண்டு இருந்தன என்றால், அந்த வசவுகள் சித்தாளருடைய  நாகப்பன் மேஸ்திரி மனசில் தோன்றிக்கொண்டிருந்த ஒருபயல், ரெண்டுபயல், பத்துபயல் என்ற அவைக்குரிய பணிவான வசவுகளாக இருக்கவில்லை. நமது காலத்தில் முகநூல் போன்ற இடங்களில் சிலர் எந்த கூச்சமும் இல்லாது எழுதிக்கொண்டிருக்கும்  அந்த வசவுகளை  எந்தப் பத்திரிகைக்காரர்களும் அச்சிடுவதில்லை எனவே நானும்  இங்கு எழுதுவதற்கில்லை. 

அந்தக் குடும்பங்களின் இருநூறு வருட அளவுப் பழமையான வெறுப்புக்கு உண்மையான காரணம் என்ன என்று கண்டுபிடிப்பது சுலபமா என்ன? ஓபிராயனின் காலத்தைச் சேர்ந்த ஒருவன் ஒருவனது வண்டிச் சக்கரம் களவுபோனது  என்ற காரணம் சொன்னால் இன்னொருவன் கோழிகள் திருட்டு போயின என்ற பதிலைக் கூறினான். இவற்றுடன் இருவர் நடுவே இருந்த ஒரு வேலி பிடுங்கப்பட்டது என்ற புகாரும் இருந்தது. என்னதான் காரணம் இருந்தாலும் அவ்வளவு வேறுபாடு தோன்றப்போவதில்லை என்று சொல்லுங்கள். நிஜமாக சுவாரசியம் ஏற்படுத்தும் செய்தி என்னவென்றால் இரண்டு குடும்பத்தாரும் தத்தம் பகைமைகளை நிலையாகத் தக்கவைக்க என்னவெல்லாம் செய்துகொண்டிருந்தார்கள் என்பதுதான். ஒரே ஒரு உதாரணம் கேளுங்கள்“: ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகைவர்களின் பெயரெடுத்தால் போதும், அந்தச் சூழலில் உடனிருக்கும் சின்னக்குழந்தைகள் கூட கழுத்தைச் சீவிவிடுபவர்களைப்போல முகத்தை வைத்துக்கொள்வார்கள். இன்னும் இடுப்பில் இருக்கும் குழந்தைகளும் நிறத்தின் தன்மையை மாற்றிக்கொண்டுவிடும். யாராவது ஒருவன் ஒரு மரத்திலிருந்து விழுந்து காயப்படுத்திக்கொண்டால் அவன் வீட்டார் இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த எவனாவது ஒருவன் காயப்படுத்திக்கொள்ளும்வரை விடுவதாக இல்லை. ஒரு வீட்டிற்குள் ஒரு மரப்பெட்டி வந்தால் இன்னொரு வீட்டுக்கும் அது  போன்ற பெட்டியே வந்துசேரும்.  நீங்கள் நம்பினால் நம்புங்கள் நம்பாவிட்டால் விடுங்கள், ஏழு வருடங்களுக்கு முன்பு, மேற்கத்திய அப்பண்ணன் வீட்டுப் பையன் ஒருவனுக்கு தொலைதூர ஊரிலிருந்து ஒரு பெண்ணைக் கொண்டுவந்து கல்யாணம் செய்தார்கள். கல்யாணம் நடந்துமுடிந்ததைத் தொடர்ந்து அவள் கொஞ்சம் நொண்டிக்கொண்டிருந்தாள் என முதலில் தெரியவந்தது  கிழக்கத்திய அப்பண்ணன் வீட்டாருக்கு. உடனே அவர்கள் வெவ்வேறு ஊர்களுக்குப் படையெடுத்து  கடைசியாக ஒரு நொண்டிச்சியையே தேடிப்பிடித்து தங்கள் வீட்டுப் பையன் ஒருவனுக்குச்  சம்மந்தம் முடித்தார்கள். இதெல்லாம் ரொம்ப அதிகம் என்று உங்களுக்குத் தோன்றலாம். யதார்த்த நிலைமை என்னவென்றால் அந்த இரு குடும்பங்களின் உறுப்பினர்களும் பரஸ்பரம் முகம் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற நிலைமை ஏதாவது வந்தால் முஷ்டியை   முறுக்கிக்கொண்டு, முகத்தை உம் என்று வைத்துக்கொண்டு, பல்லைக் கடித்துக்கொண்டு ஏய் என்றவாறு அவரவர் மூஞ்சியை வேறுபக்கம் திருப்பிக்கொள்வார்கள் அல்லது எல்லைகடந்த கோபத்தில் கொதித்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களைப் பார்த்து யாருக்கும் ஆச்சரியம் ஏற்படவில்லை. ஏனென்றால் தொடக்கம்முதல் எல்லோரும் அவர்களைப் பார்த்துக்கொண்டு இருந்ததே அப்படித்தான். 

மொத்தத்தில் அந்த இரண்டு குடும்பங்களின் இடையே  முடிவற்ற மலைபோன்ற  ஒரு மௌனம் நிலவிவந்தது. . நாளுக்குநாள் பகைமையை அதிகரித்துக்கொண்டிருந்த அந்த மௌனம் ஒருநாள்  இல்லை ஒருநாள் உடையக்கூடும் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் அது தகர்ந்துபோக நேர்ந்தது என்று நான் சொன்னாலும் நீங்கள் நம்புவதற்கு இல்லை. அப்புறம் என்னன்னவெல்லாம் ஆயிற்று என்று இப்பொழுது கவனியுங்கள்.

உங்களுக்கு ஏற்கனவெ தெரிவித்தது  போல அது கடற்கரையில் இருந்த ஒரு ஊர்.  மழைக்காலத்தில் கடல் எப்படி  இருக்கும், அது எத்தனை பயங்கரமாக முழக்கமிடும், எவற்றை எல்லாம் கரையில் கொண்டுவந்து  ஒதுக்கும் என்று கண்ணாரப்பார்த்து அனுபவித்தவர்களுக்குத் தெரியும். இருக்கட்டும், அந்த ஊரைச் சேர்ந்த பலரும், தெற்கத்திய அப்பண்ணன், மேற்கத்திய  அப்பண்ணன் குடும்பத்தாரைப் போலவே போதுமான அளவு தோட்டம்துரவுகள் இருந்தாலும் அவ்வப்போது கொஞ்சம்  மீன்களையும் பிடித்துக்கொண்டு இருப்பார்கள். இருநூறு வருட நீண்ட மௌனம்  சலனமே இல்லாது தொடர்ந்துகொண்டிருக்கும்போதே ஒரு மாலைப்பொழுதில் தெற்கத்திய அப்பண்ணன் மற்றும் மேற்கத்திய அப்பண்ணன் ஆகியோர் கொஞ்சம் இவ்வளவு மீன்களைப் பிடித்துக்கொள்வதற்காக வலைகளுடன் படகுகளில் போயிருந்தார்கள். நிஜத்தைச் சொல்வதாக இருந்தால் இரண்டுபேரும் ஒரே நேரத்தில் கடற்கரையிலிருந்து புறப்பட்டு எங்கு மீன்கள் கிடைக்கும் என்று தோன்றியதோ அதுவரை போய் அவரவர் வலைகளைத் தண்ணீரில் இறக்கியிருந்தார்கள். மேகம் கவிந்து மிகவும் கீழாக தொங்கிக்கொண்டிருந்தது என்று தோன்றும் சாயங்கால வேளை,  ஆகாயத்தின் கீழ், அதே அளவு இருள் படர்ந்த,அசைவற்ற, ஒளிகுன்றிய கடல்,  அத்துடன் மூச்சைப் பிடிக்கும், உடம்பெல்லாம் வியர்க்கச்செய்யும் வெக்கையோ வெக்கைக் காற்றை எதிர்பார்த்து அவர்களின் உள்ளங்கள் படபடத்துக்கொண்டிருந்தன. எந்தக் கவலையும் இல்லாது ஓய்வாக இருக்கும் நாளாக அது இருக்கவில்லை என்று சொல்லுங்கள். இருவரும்,ஒருவர் இன்னொருவரைப் பார்த்து அது எத்தனை வருடங்கள் ஆயிற்றோ, கடலில் தாங்கள் முற்றாகத் தன்னந்தனியாக இருப்பவர்போல  நடந்துகொண்டார்கள். ரெண்டுபேரும் மெதுவாக துடுப்பு போட்டபடி அவரவர் வலைகளை பரப்பியிருந்த இடத்திலேயே அதிகநேரம் சுற்றுபோட்டார்கள்.  அப்புறம் அவரவர்  வலைகளில் அகப்பட்டிருந்த  மீன்களை அவரவர் படகுகளின்  உள்ளே கொட்டிக்கொண்டு இருந்தார்கள். இதற்கிடையே ரொம்பநேரமாக பயமுறுத்திக்கொண்டிருந்த கருமேகங்கள் ஆகாயத்தை முற்றுகையிட்டன. சில நொடிகளில் கடல்மீது தென்பட்ட புயல் சின்னம் ஒன்று பயங்கரமாக சத்தமிட்டவாறு மழைத்துளிகளை சிதறடித்துத்  தண்ணீரைக் கலக்கியது. அலைகள் ஆள் உயரம் எழுந்தன. அந்த இருவருக்கும் புலப்படும் முன்பே கனமழை கொட்டத் தொடங்கியது: கடல் கடுமையான பேரிருளில் மூழ்கிப் போயிற்று. பேரலைகளின் அந்த வெள்ளம் அந்த இருவரது துடுப்புபோடும் திறமையை மட்டுமல்ல, அவர்களின் ஆற்றலையும் கூட சிதைத்துவிட்டது. இருவரும் துடுப்பு போட்டார்கள், போட்டார்கள், போட்டார்கள். முன்னாலும் பின்னாலும் தள்ளாடினார்கள். அவர்களது பயணத்தை நமக்கு எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரம்வரை நீட்டிக்கொள்ளலாம். பரஸ்பரம் ஆழமாக பகைமைபாராட்டிக்கொண்டிருந்த அந்த இரண்டு பேரையும் நாம் நமக்குத் திருப்தி ஏற்படும்வரை புயலில் விட்டுவிடலாம். பெருமழை அவர்களை அறையுமாரு செய்யலாம். நமது கற்பனை அலைகளுக்கு எல்லை ஏது? ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் இந்தக் கதையை முன்னெடுத்துச் செல்லவேண்டும். அதனால் மாபெரும் வெள்ளப்பெருக்குபோன்ற கடலும், அதன் பேரலைகளும் கடும் எதிரிகளின் படகுகளை ஒன்று மற்றொன்றின் மீது மோதுமாறு , தள்ளவேண்டும். அந்த பகைவர்கள் அந்த அமளிதுமளியில் எதிர்ப்படவேண்டும். அப்படியே நடந்தது என்று வைத்துக்கொள்ளலாம். இருவரில் ஒருவர்கூட எதிர்பார்த்திராதபடி  அவர்களது படகுகள் ஒன்றாக வந்து, ஒரே அலையில் மெலெழுந்து, ஒன்றுடன் மற்றொன்று மோதிக்கொண்டு,அந்த மோதலின் பாதிப்பைத் தாங்கிக்கொள்ள இயலாமல் தண்ணீரில் கவிழ்ந்துகொண்டன. 

இரண்டுபேரில் ஒருவருக்குக்கூட நீச்சல்தெரியவில்லை என்று  வைத்துக்கொள்ளுங்கள். அந்த சந்தர்ப்பங்களில்  நீச்சல் தெரியாதவர்கள் என்ன செய்வார்களோ அதையே அவர்களும் செய்தார்கள். அப்படியென்றால் ஒருவர் மற்றொருவரை என்ன ஆனாலும்,விடுவதாக இல்லை என்று கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள். இரண்டுபேரும் ஒன்றாக மூழ்கினார்கள், ஒன்றாக மூச்சைப் பிடித்துக்கொண்டார்கள், ஒன்றாகத் தண்ணீரைக் குடித்தார்கள். ஒன்றாக மேலே மிதந்தார்கள். ராட்சச உருவம்கொண்ட அலை ஒன்று பரஸ்பரம் தழுவிக்கொண்டிருந்த அந்த இரண்டுபேரையும் பலப்பல மீட்டர்கள் தூரத்துக்கு சுமந்து செல்லத் தொடங்கியது. அலைமேல் அலை வந்து அவர்களை கரையருகே கொண்டு சென்றுகொண்டிருக்க அவர்கள் எப்படி இருமினார்கள், மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினார்கள், மூடியைப்போல சுற்றினார்கள் என்ற கதையைச் சொல்பவர் யார்? இருவரும் திடீரென்று கரையேறி,   மிதந்து, தங்களை விழுங்கவிருந்த கடலிடமிருந்து விடுவித்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டே கடைசியில் தப்பித்துக்கொண்டுவிட்டோமே என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறு  கரையேறினார்கள் என்று நாம் இந்தக் கதையிலேனும் சொல்வது நல்லது.  களைத்துப்போயிருந்த இருவரும் ஒருவரையொருவர் நெருங்கி உட்கார்ந்தார்கள். இருநூறு வருஷ மௌனம் கலைந்து கிழக்கத்திய  அப்பண்ணன் முதன்முதலாக “கைய்யில வந்த மீனு வாய்க்கு வாய்க்கல” என்றான். அதற்கு மேற்கத்திய அப்பண்ணன் ” உம், கைய்ல வந்த மீனு வாய்க்கு வாய்க்கல,  என்று பதில் கொடுத்தான். இருவர் மனசிலும் அவர்களுக்கு பிரியமாக இருந்த கானேமீன் குழம்பு பளிச்சிட்டது. இரண்டுபேரும் உதட்டைச் சப்பு கொட்டிக்கொண்டு அவரவர் ஜேபியில் கையைப் போட்டு ஒவ்வொரு குப்பியை வெளியே எடுத்தவர்கள் இன்னும் ஏதேதோ பேசினார்கள். அவை என்னவாக இருக்கலாம் என்று உங்களுக்கு மனதில்பட்டவாறு நீங்களே  கற்பித்துக்கொள்வது நல்லது. 

சரி, நாம் இப்போது கொஞ்சநேரம் காத்திருக்கவேண்டும்;அவர்களின் பாட்டில்கள் காலியாகும்வரை காத்திருக்கவேண்டும்.முதலில் அவர்கள் அந்த பாட்டில்களை பரஸ்பரம் மாற்றிக்கொண்டார்கள் என்று சொல்வது சிறந்தது. அப்புறம்  உள்ளங்கைகளைப் பலமாக தேய்த்துக்கொண்டார்கள், கைகளைத் தட்டினார்கள், உடம்பைச் சூடேற்றிக்கொண்டார்கள், இன்னும் இன்னும் பொங்கிக்கொண்டிருந்த கடலினை உற்றுப்பார்த்தார்கள். கொஞ்சநேரம் கழித்து காலியான பாட்டில்களை கடலில் எறிந்தார்கள், யாரோ எந்தக் காலத்திலோ சேர்ந்து பாடிக்கொண்டிருந்த பாடலை நினைவுபடுத்திக்கொண்டு சத்தமாகப் பாடினார்கள், கைகளை அவ்வப்போது பிடித்துக்கொண்டு கரையிலிருக்கும் கரடுமுரடான பாறைகள் மீது     நடந்தவாறு ஊரை நோக்கி மெதுவாக அடியெடுத்துவைக்க ஆரம்பித்தார்கள்.  அப்போது அவர்கள் எந்த  போதையில் இருந்தார்களோ அல்லது  அவர்களுக்குக் கடலோடு போராடி நடக்க இயலாதவாறு  களைப்பாக இருந்ததோ,  தெரியாது.  ஆனால் ஊரின்  நுழைவாயில்வரை ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக்கொண்டு, தோளோடுதோள் உரசிக்கொண்டு போனார்கள் என்று தெரியும். அந்த நுழைவாயிலில்  திடீர் என்று பரஸ்பரம் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அப்போது மேலேறியிருந்த அவர்களது  புருவங்கள்  கீழ் இறங்கவில்லையாம், பற்கள் நறநற என்றனவாம், கண்கள் நெருப்பைக் கக்கிக்கொண்டிருந்தனவாம், உதடுகள் இறுகிக்கொண்டனவாம், தசைகள் பொங்கிக்கொண்டிருந்தனவாம், குரலில் புலியின் முழக்கம் கேட்டதாம். மறுநொடியே கிழக்கத்திய அப்பண்ணன் பன்றி என்று முனகினான்;  மேற்கத்திய அப்பண்ணன் கோவேறுகழுதைப்பயலே என்று கர்ஜித்தான். உடனே ஒருவனுக்கு தெற்குபக்கமும்,  மற்றொருவனுக்கு மேற்கு பக்கமும் போய்விடுவதே  சிறந்தது என்று பட்டது. 

அன்றிலிருந்து அந்த இரண்டு குடும்பங்களின் இடையே வேறுபடுத்த இயலாததும்,  மர்மமானதும், பொருள் பொதிந்ததும் மட்டுமல்ல அதே அளவு துயரமானதும் ஆகிய பிறிதொரு மௌனம் நிலைபெற்று இருக்கிறது. அவர்களை மீண்டும் இருநூறு வருட பகைமை ஒன்று சிறைவைத்திருக்கிறது. காரணங்களைத் தேடுவதில் அவ்வளவு ஒன்றும் ஆர்வம் காட்டாத ஊர்க்காரர்களுக்கு அவர்கள் அவ்வாறு இருப்பதே வழக்கம் என்று ஆகியிருக்கிறது. இதுவரையிலும் இந்தக் கதையை வாசித்த உங்களுக்கும் அப்படித்தான் இல்லையா? 

*****   

  .     

குறிப்புகள் 

இந்தச் சிறுகதையில் அனந்தமூர்த்தி என்று குறிப்பிடப்படுவது யு. ஆர் அனந்தமூர்த்தி அவர்கள்தான் என்பதை ஊகித்திருக்கக்கூடும். சித்தாளர் என்பது எஶ்வந்த சித்தாளர் என்ற எழுத்தாளரைக் குறிக்கிறது. இவர் எழுதிய நாவல் ஒன்று  ஒரு பெண் கதையாகிறாள் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

எஸ். திவாகர் 

எஸ் திவாகர் பெங்களூர் மாவட்டம் சோமத்தனஹள்ளியில் பிறந்தார். தேவனஹள்ளியிலும் பெங்களூரிலும் கல்வி. கர்நாடகப் பல்கலைக்கழகத்தில் பட்டம். பல்வேறு இதழ்களில் செய்தியாளர், துணையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர்க்குழு ஆலோசகர்  உள்ளிட்ட பணிகள்.  1989 முதல் 2005வரை  சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத்தூதரகத்தில்  பணி. சிறுகதை, கவிதை, விமர்சனம், பத்தி எழுத்து, கட்டுரை, வாழ்க்கை வரலாற்று எழுத்துகள், மொழிபெயர்ப்பு என பல்வேறு களங்களில் பங்களிப்பவர். காப்ரியல் கார்சியா மார்க்கஸ், தாமஸ்மன் முதலிய புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார். நோபல் பரிசுபெற்ற எழுத்தாளர்களின் 50 சிறுகதைகளைக் கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார். அமெரிக்காவின் அய்யோவா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தும் எழுத்தாளர் கூடுகையில் 2002ஆம் ஆண்டில்  பங்கேற்றார். இந்திய அரசின் பண்பாட்டுத்துறை சார்பில் சீனியர் ஃபெலோஷிப் நல்கை, கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ விருது,    கர்நாடக சாகித்ய அகாதெமி விருது, குவெம்பு பாஷாபாரதி விருது ஆகியவை இவர் பெற்ற விருதுகளில் முதன்மையானவை.    மாஸ்தி என்று அறியப்பெறும் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், சிவராமகரந்த் உள்ளிட்ட முதன்மையான கன்னட எழுத்தாளர்களின் பெயர்களில் வழங்கப்பெறும் விருதுகளையும்  பெற்றுள்ளார்.   

கு. பத்மநாபன் 

இவர் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பத்தில் அமைந்துள்ள  திராவிடப் பல்கலைக்கழகத்தில்  பணியாற்றுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.