உபநதிகள் – ஒன்பது

This entry is part 9 of 15 in the series உபநதிகள்

ங்கா ஆந்திரா அட்ராக்ஷனில் காரை நிறுத்தி இரண்டு கறியும் இரண்டு இனிப்பும் வாங்கிவந்தாள். அம்மாவைப் பார்த்ததும் மானஸாவுக்கு ‘ட்ரூத்-இன்’ கொடுத்த கசப்பு உணர்ச்சி மறைந்து விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த மகிழ்ச்சி. 

“சாதமும் ரசமும் பண்ணினா சாப்பிடலாம்.” 

அவற்றைச் செய்து முடிப்பதற்கும் பகீரத் வருவதற்கும் சரியாக இருந்தது. மானஸா சாப்பாட்டு மேஜையைத் தயார்செய்தாள். 

“உதவிக்கு யாராவது இருந்தா சௌகரியமாத்தான் இருக்கு.” 

அலெக்கும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் கல்லூரிக்குப் போய்விடுவான் என்கிற வருத்தம் அவளுக்கு. 

பிரதான சாப்பாட்டிற்குமுன், 

“மானஸாவின் முதல் செமிஸ்டர் வெற்றிகரமாக முடிந்ததற்காக..” என்று கங்கா சொல்ல, பாயசம் வைத்த மூன்று கிண்ணங்களைத் தட்டிக்கொண்டார்கள். 

திருத்தி வர்ணம்பூசிய நகங்களை மானஸா காட்ட, கங்கா கிறிஸ்மஸ் பாடல்களைப் புதுமெட்டில் பாடிய பதினோரு வயதுப் பையனைப் பற்றிச் சொல்ல, பகீரத், 

“நாள் முழுக்க ‘ஆப்ரி மில்’லில நடந்த ஏபிஏ (அமெரிகன் பார் அசோஸியேஷன்) மீட்டிங். கடைசி செஷன்ல பேசியவர் பெயர்..” ஆச்சரியத்துக்கு இடைவெளி கொடுத்து, “சஹாதேவன்” என்று முடித்தான். “லெக்சர் முடிஞ்ச பிற்பாடு அவரோட பேசினேன்.” 

“அவரும் ஸ்ரீலங்காலேர்ந்து வந்தவர். அவருக்கு ஒரு பெண், என் வயதில்” என்று அப்பாவின் ஆச்சரியத்துக்கு மேலே இன்னொரு மாடி கட்டினாள் மானஸா.  

“உனக்கு எப்படித் தெரியும்?” 

“சும்மா கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டேன்” என்று புன்னகைத்தாள். 

“அவரை வீட்டுக்குக் கூப்பிட்டிருக்கலாமே.”  

“கூப்பிட்டேன். நாளை வர்றதா சொன்னார்.”  

“மீட்டிங் முடிஞ்சதும் ஊருக்கு உடனே திரும்பிப்போகல போலிருக்கு.”  

றுநாள் காலை. 

சோம்பேறித்தனத்தை அனுபவிக்க வீட்டிற்கு வந்த மானஸாவும் எழுந்துவிட்டாள்.   

“ஹலோ! நான் சஹாதேவன். பகீரத் இருக்காரா?” 

“வெளியே போயிருக்கார். நான் கங்கா..”  

“இன்னைக்கி மாலை…”  

“பகீரத் உங்களைப்பத்தி சொன்னார். சந்தோஷமா வாங்க! எப்ப வேணும்னாலும்.” 

“அதுக்கில்ல. பகீரத் என்னை மட்டும் கூப்பிட்டார்னு நினைக்கிறேன். இப்ப என்னோட இன்னும் இரண்டு பேர். மதியமே ஒரு விடுதியில சந்திக்க முடியுமான்னு…”  

“முடியும்னு நினைக்கிறேன். அப்ப கூட எங்க வீட்டுக்கு எல்லாரும் வந்தாகணும்.”  

“நிச்சயமா. மதிய சாப்பாடுக்கு…”  

“கூல்ஸ்ப்ரிங்ல இருக்கற ஆந்திரா அட்ராக்ஷன். நான் ஏற்பாடு பண்றேன். பன்னிரண்டு மணிக்கு?”  

“கொஞ்சம் தாமதம் ஆகலாம்.”  

விடுதி வாசலில் காத்திருந்தபோது, முதலில் சஹாதேவன் ஒரு ‘ஊபர்’ ஊர்தியில் வந்து இறங்கினார். 

பகீரத் மனைவியையும் மகளையும் அறிமுகம் செய்தான். 

“அலக்நந்தா சின்னவன். கூப்பிடற பெயர் அலெக். இந்தியா போயிருக்கான்.” 

“உங்களைப்பத்தி வீட்டில சொன்னதும் அவங்களுக்கும் உங்களை சந்திக்க ஆசை. அதனால அட்லான்ட்டாலேர்ந்து கிளம்பி…” என்று சொன்னபோதே ஒரு சுபரு அவர்களைத் தாண்டிச்சென்றது. “இதோ வந்திட்டாங்க.”  

அவர்கள் சேர்ந்துகொண்டதும் இன்னொரு அறிமுகம். 

“பகீரத்.”

“கங்கா.”

“மானஸா.” 

“இது சிவரஞ்சனி.” 

கட்டம்போட்ட ரவிக்கையும் டீக் புடவையும் பாரம்பரியத் தோற்றத்தைக் கொடுத்தன.

“வணக்கம்.” 

“இது மந்தாகினி.”  

பெண் நளினமாக வணக்கம் தெரிவித்தாள். சராசரி உயரம். மாநிறம். செதுக்கியது போன்ற முகம். ஒப்பனை சற்று அதிகம் என்றாலும் தனித்து நிற்காமல் அவள் அழகுக்கு மெருகேற்றியது. கலையழகுடன் திருத்தி இடைவரை நீண்ட கூந்தல். இறுக்கமான சட்டை பான்ட்ஸில் கூட அநாவசிய கொழுப்பு எங்கும் வெளிக்காட்டவில்லை. மானஸாவுக்குக் கணநேரப் பொறாமை.  

“என்ன ஆச்சரியம்!” என்றாள் கங்கா.  

“எது ஆச்சரியம்?” 

“முதல் குழந்தை பெண்ணுன்னு தெரிஞ்சதும் நாங்க மந்தாகினி பேரைத் தேர்ந்தெடுத்தோம்.”  

“அது கங்கையின் ஒரு உபநதி” என்றான் பகீரத்.  

“பெயர் இவங்க வாயில நுழையுமான்னு சந்தேகம். குழந்தை பிறந்ததும் மானஸா மந்தாகினின்னு மாத்திட்டோம்.”  

“மானஸா மானஸரோவரத்தின் சுருக்கம்.” 

“இவ பொன்னியின் செல்வனில் வரும் ஈழத்து ராணி” என்றாள் சிவரஞ்சனி.

“ஆக.. இங்கே இரண்டு மந்தாகினி சஹாதேவன்கள். இதைவிட ஆச்சரியமான விஷயம் ஒண்ணு இருக்கு. அது …” என்று ஆவலைக் கிளறினார் சஹாதேவன்.  

“முதல்ல சாப்பாடு.”

விடுதிக்குள் ஆறு பேருக்கான மேஜை தயாராக இருந்தது. சாப்பாட்டுத் தட்டுகளை நிரப்பிக்கொண்டு அமர்ந்ததும், 

“ஆச்சரியத்தை இப்ப சொல்லுங்க!”  

“என் ஐயாவுக்கு கிட்டத்தட்ட தொண்ணுறு வயசு. அவரும் அம்மாவும் டொரான்ட்டோ பக்கத்தில இருக்காங்க. நேத்து மாலை அவர்கிட்ட இந்த மாதிரி பகீரத் சஹாதேவன்னு ஒருவரை சந்திச்சேன். அவரோட அம்மா ரமாவும் அப்பா சஞ்சயனும் குண்டுவீச்சில இறந்துட்டாங்கன்னு சொன்னேன். அப்படியான்னா அவர் நமக்கு சம்பந்தப்பட்டவர்னு சொன்னார். எப்படின்னு கேட்டேன்.”  

கங்காவுக்கும் பகீரத்துக்கும் அதே கேள்வி. 

“பெரிய குடும்பத்தில என் அப்பப்பாவும் சஞ்சயனின் ஐயாவும் அண்ணன் தம்பி. சின்னவர் சின்ன வயசிலயே வீட்டிலேர்ந்து கொழும்புக்கு ஓடிப்போனதால தொடர்பு விட்டுப்போயிரிச்சுன்னு சொன்னார்.” 

“உங்க ஐயாவுக்கு இங்கிருந்தே வணக்கம்” தெரிவித்தான் பகீரத். 

“இந்த விஷயம் தெரிஞ்சதும் சிவரஞ்சனியும் மந்தாகினியும் உங்களைப் பார்த்தே ஆகணும்னு வந்துட்டாங்க.”   

“இவ்வளவு நெருங்கிட்டோம். நீங்க ரெண்டுநாள் தங்கிட்டுப் போகணும்” என்றாள் கங்கா.  

சஹாதேவன் யோசித்தார். 

“நாளைக்கு திரும்பிப்போகலாம்” என்றாள் சிவரஞ்சனி.  

கடைசியில் பெரியவர்களுக்கு காப்பி. 

“பில் வரட்டும். நான்தான் கொடுப்பேன்” என்றார் சஹாதேவன். 

“அது வராது” என்று சிரித்துக்கொண்டே எழுந்தாள் கங்கா. 

ரவேற்பறையில் பெண்கள் ஒரு சோஃபாவிலும் ஆண்கள் இன்னொன்றிலும் காலத்தின் பின்னோக்கிப்போக, மானஸாவின் அறையில் இளையவர்கள் எதிர்காலத்தை நோக்கினார்கள். 

“மந்தாகினி! நீ அசாதாரண அழகு” என்று மனம்விட்டுச் சொன்னாள் மானஸா. அவள் தன்னைவிட பல மாதங்கள் இளையவள் என்று தெரிந்ததும் அவளைத் தங்கையாக ஏற்றுக்கொண்டாள்.  

“தாங்க்ஸ்! நான் யார் என்று தெரிகிறதா?” என்று இடையை வளைத்து, தலையை இலேசாகத் திருப்பி, மேல்வரிசை பற்கள் மட்டும் தெரிய புன்முறுவல் செய்தாள்.   

“இல்லையே.” 

அதற்காக ஏமாற்றம் அடையாமல், உடலை சாதாரண நிலைக்குக் கொண்டுவந்து,  

“நீ ‘மர்டோக் மிஸ்டரி’ பார்க்கறது உண்டா?” 

“கனேடியன் டெலிவிஷன் ப்ரோக்ராம் தானே? கேள்விப்பட்டு இருக்கேன். பார்த்தது இல்ல. துப்பறியும் கதைகள் பக்கமே நான் போவது கிடையாது.”  

“நானும் தான். மர்டோக் தொடரில் ஒரு எபிசோட். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ப்ரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்த சீக்கிய சமுதாயத்தைப் பத்திய கதை. பதினேழு வயசுப்பெண்ணைக் கொள்ளைக்காரங்க கடத்திட்டுப் போயிடறாங்க. எப்பவும்போல மர்டோக் அவளை விடுவிச்சுட்டு வருவார். அந்தப் பெண்ணின் கேரக்டர்ல நான் நடிச்சேன்.”  

அழகும் கவர்ச்சியும் வார்த்தைகளுக்குத் தகுந்த முகபாவமும் நிறைந்த அவள் தோற்றத்தின் காரணம் மானஸாவுக்குப் புரிந்தது.  

“உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படித்தபோதே பல நாடகங்களில் நடிச்சிருக்கேன். சின்ன வயசிலே, சறுக்கு மரத்தில விழுந்து அடிபட்டதைச் சொல்லும்போது கூட நல்ல முகபாவம் காட்டுவேனாம். அம்மா சொல்வாங்க. நீயும் அப்படித்தானே. பல வருஷமா எழுதிட்டு இருக்கே. ‘இலக்கியகர்த்தாவுக்கு ஒரு நிருபம்’ போட்டியில் நாடு முழுவதுக்கும் சிறந்த கடிதம் என்கிற பரிசு. அது எவ்வளவு பெரிய விஷயம்!”  

முதல்முறை சந்திக்கப்போகும் ஒருத்தியைப் பற்றி மந்தாகினி விவரம் சேகரித்தது மானஸாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

“நேத்திக்கி அப்பா உங்க குடும்பத்தை பத்தி சொன்னதும் உன்னை கூகில்ல தேடினேன். அதில கிடைச்சது எல்லாத்தையும் காரில் வரும்போது ஒரு தடவை படிச்சிட்டேன். தெளிவான ஆனா அழுத்தமான நடை. எந்தப் பிரச்சினையை எடுத்துக்கொண்டாலும் எல்லா விவரங்களும் தெரிந்துகொண்டு எழுதுகிறாய். முக்கியமா, வாசிப்பு முடிந்ததும் அதைப்பத்தி யோசிக்கணும்னு ஒரு தூண்டுதல் இருக்கு. மார்ச்சில் வரப்போற உன் புத்தகத்தில் இருந்து உன் தம்பியின் நீச்சல்போட்டிக் கதை கிடைத்தது. நல்ல கற்பனை!”  

“அதில் முக்கால்வாசி நிஜம். உன் ஈ-மெய்ல் கொடு! புத்தகம் முழுவதையும் உனக்கு அனுப்பறேன்.”  

குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் மட்டுமே என்றால் இருவரும் பெண்களாகவோ, இல்லை பையன்களாகவோ இருந்தால் நல்லது என்று பொம்மி ஆன்ட்டி சொல்லக் கேட்டிருந்தாள். மானஸாவுக்கு அது சரியெனத் தோன்றியது. அலெக்கை அவள் கேலி செய்தாலும், அவன் அக்காவின் சாதனைகளுக்குப் பெருமைப்பட்டாலும் ஒரு தங்கைபோல் ஆகுமா? மந்தாகினியை இழுத்து இறுக்கக் கட்டிக்கொண்டாள். 

“நீ ஒரு நல்ல ரசிகை. உன் பாராட்டு என்னை இன்னும் எழுத ஊக்குவிக்கும்.” 

அணைப்பு பிரிந்ததும், 

“செவானி மலையைத் தாண்டினப்பவே நீ எழுதினது அத்தனையும் படிச்சு முடிச்சுட்டேன். அப்புறம் இங்கே வர ஒரு மணி. அப்பத்தான் இந்த ஐடியா தோணித்து.” 

“அது என்னது?” 

“சொல்றேன். முதலில்.. உன் அடுத்த ப்ராஜெக்ட்?” 

“புராண காலத்தில் நடக்கிறபடி ஒரு புனைவு. துண்டு துண்டா இருக்கு. கோடை விடுமுறையில் தான் ஒண்ணு சேர்க்கணும்.” 

“அது வரைக்கும்…”    

“ஒண்ணும் செய்யறதா இல்ல. நீ?”  

“ஆறு அத்தியாயத்தில் ஒரு தொடர்படம். ஒவ்வொன்றுக்கும் இருபத்திமூன்று நிமிடங்கள். அம்மாவும் நானும் போட்ட அவுட்லைன் ‘பீச்-ஃப்ளிக்ஸு’க்குப் பிடித்துவிட்டது. பிரதான கேரக்டர்களுக்கு ஆட்கள் தேர்வு செய்தாகிவிட்டது. அட்லான்ட்டாவில் மற்ற ஏற்பாடுகளும் விரைவில் முடிந்துவிடும்.”

அதற்காகத்தான் மந்தாகினியின் குடும்பம் டொரான்ட்டோவில் இருந்து தெற்கே இடம்பெயர்ந்து இருக்க வேண்டும். 

“ஸ்க்ரிப்ட்டுக்கு ஒரு பெண் கனடா எழுத்தாளரை ஏற்பாடு செய்தோம். அவள் எழுதின முதல் எபிசோட் அவளுக்கே திருப்தி இல்ல. அடுத்ததா முதல் தலைமுறை இந்திய எழுத்தாளர். அவருக்கு கதாநாயகியின் பிரச்சினை புரியாததால், அதுவும் சரிப்பட்டு வரல. இன்னும் இரண்டு வயது போனால் என்னால் இப்படிப்பட்ட ரோலில் நடிக்க முடியாது. அருமையான வாய்ப்பு கைநழுவிப் போய்விடுமோன்னு பயம்மா இருக்கு.”  

நடிகை ஆயிற்றே. மந்தாகினி பார்வையில் அச்சம். அதை அழித்து ஒரு பணிவான விண்ணப்பம். 

“என்னை அப்படி பார்க்காதே!” 

“ப்ளீஈஈஸ்! உனக்கு எல்லா தகுதியும் இருக்கு. உன் இங்க்லீஷ் பிரமாதம். டீன் பாஷை அத்துப்படி. ஒண்ணுரெண்டு தமிழ் வார்த்தைகளை அங்கங்கே தூவணும். கதையின் முக்கிய பாத்திரம் போல நீயும் இரண்டாம் தலைமுறை தமிழ்ப்பெண்.”   

“வர்ணனைகளுடன் கதைசொல்வது வேற, நாடகத்துக்கோ திரைப்படத்துக்கோ ஸ்க்ரிப்ட் எழுதறது வேற. உரையாடல் கத்தியில் வெட்டின மாதிரி இருக்கணும். பாத்திரங்களின் மனநிலையை நடிப்பு வழியாகத்தான் காட்டமுடியும். ஆசிரியர் நடுவில புகுந்து இவள் இப்படின்னு விவரிக்க முடியாது. எதிர்காலத்தில எதிர்பாராத விதமா என் நாவல் ஒண்ணு பிரபலம் ஆகி யாராவது அதை ஸ்க்ரீன்ல போடணும்னு ஆசைப்பட்டால், பொறுப்பானவர் கையிலே விடறது என் திட்டம்.” 

“முயற்சி செய்து பார்க்கறதில உனக்கு என்ன நஷ்டம்?”  

“தவறிக் கீழே விழுந்தால்..”  

“நான் தாங்கிக்கொள்வேன்.”  

“அதுக்கு நான் பத்து பவுன்ட் இளைக்கணும்” என்று மானஸா வயிற்றை இறுக்கிக்கொண்டாள். 

“இங்கே பார்! இது உன் திறமைக்கு சவால் மட்டுமல்ல, எனக்கு நீ சரியான நேரத்தில் செய்யும் பெரிய உதவி” என்று மறுப்பு சொல்லமுடியாத நிலையில் மானஸாவை வைத்தாள்.  

“சரி. எப்போ வேணும்?”  

“நாளைக் காலை, எப்படி?” என்று சொல்லிவிட்டு, “வேடிக்கைக்குத்தான்” என்பதைச் சேர்த்தாள் மந்தாகினி. “புது வருஷத்துக்கு அப்பறம் தான் வேலை ஆரம்பிக்கும்.” 

“இது ஒரு பொறுப்பான வேலை. இதுவரை நான் கால்வைக்காத நிலம். செய்கிறேன்னு சொல்லிட்டு பாதியில் நான் பின்வாங்க முடியாது. இதில உன் தொழில் வாழ்க்கையின் எதிர்காலமே அடங்கியிருக்கு. என்னால முடியாவிட்டால் நீ உடனே வேற யாரையாவது தேடிக்கலாம். அதனால…”  

“அதனால..”  

“கதையைச் சொல்! ஒரேயொரு காட்சியை நான் ஒரு நாளில எழுதித்தருவேன். அது பிடிச்சிருந்தா முழுவதையும் இந்த விடுமுறையில் முடித்துக்கொடுப்பேன்.”   

“நீ தான் சமயத்தில கைகொடுத்த அக்கா!” என்று மானஸாவின் கையைப் பிடித்து நீட்டி அதில் முத்தம் பதித்தாள். 

“மானஸா!” 

“அப்பா கூப்பிடறாங்க.” 

சாப்பாட்டு மேஜையைச் சுற்றி ஆறுபேர். நடுவில் கங்கா தயாரித்த தேநீர், சிவரஞ்சனி கொண்டுவந்த முறுக்கு வகைகள். 

“இரண்டு மந்தாகினி பொடிச்சிகளும் மூச்சுவிடாம அப்படி என்ன பேசினீங்க?” என்று சந்தோஷத்துடன் கேட்டாள் சிவரஞ்சனி. 

“நான் முதலில் ஆரம்பிக்கிறேன். மந்தாகினி ஒரு பிரபல நடிகை.”  

“அப்படியா? ரொம்ப சந்தோஷம்” என்றான் பகீரத்.  

“இனிமேலதான் ஆகணும்” என்றாள் அவள் அடக்கத்துடன். தந்தையிடம், “ஆனா அக்கா ஏற்கனவே நிறைய சாதித்து இருக்கிறாள், அப்பா! அவள் எழுதிய கட்டுரைகள் பல பத்திரிகைகளில் வந்திருக்கு. அவளுடைய முதல் புத்தகத்தை ஷார்ப்பர் பிரசுரம் செய்யப்போறாங்க” என்றாள். 

“பகீரத்தைவிட எனக்கு அதி சந்தோஷம்” என்றார் அவர் போட்டிக்குரலில். 

“முக்கியமான விஷயத்தை மறந்திட்டேனே. ‘பீச்-ஃப்ளிக்ஸ்’ மினி-சீரிஸுக்கு ஸ்க்ரிப்ட் எழுத சரியான ஆள் கிடைக்காம தவித்துக்கொண்டு இருந்தோமே. அக்கா எழுதித்தர்றதா சொல்லிட்டா” என்று கூப்பிய கைகளை இரண்டாகப் பிரித்தாள். 

“அப்பாடா! பெரிய கவலை விட்டது.” 

“மந்தாகினி மட்டுமா, அவளுக்கு ஸ்க்ரிப்ட் எழுதி மானஸாவும் பிரபலம் ஆகப்போறா” என்றான் பகீரத். தன் பெண் தொலைக்காட்சித் தொடருக்கு திரைக்கதை எழுதுவது அவனுக்குப் பிடித்திருந்தது. அத்தொடர் சமுதாயத்தின் பல மூலைகளை எட்டும். அவள் பெயர் ஊடகங்களில் அடிபடும். புதிய வாய்ப்புகள் அவளைத்தேடி வரும். வணிக ஒப்பொந்தத்தில் மானஸா கையெழுத்திடுமுன் அதை அவன் சரிபார்ப்பான். சன்மானம் குறைவாக இருந்தாலும் கதையும் கதாபாத்திரங்களும் மானஸாவின் முழு உரிமை. 

“கடல் கடந்து வந்தாலும் அக்கா தங்கை பந்தம் விட்டுப்போகுமா?” என்று முடித்தாள் சிவரஞ்சனி. 

தைப்பதைத் தொடர்வதற்கு பெற்றோர்கள் குடும்ப அறைக்குப் போனார்கள். கொறிப்பதை நிறுத்திவிட்டு, 

“பெண் வயதுக்கு வருகிற கதை. ஆனா குடும்ப ரகசியம், மன அதிர்ச்சி, பெற்றோர்களின் மணமுறிவு, துணையில்லாத தாய், வன்புணர்ச்சி போன்ற மாமூல் விஷயம் எதுவும் அதில கிடையாது” என்றாள் மந்தாகினி. 

“வெரி குட்! எனக்கும் அம்மாதிரி கதைகள் நிறையப் படிச்சு அலுத்துவிட்டது. அந்த வகை நான் எழுதுவதாகவும் இல்லை.” 

“பண்பாட்டிற்கும் தனிமனிதர்களுக்கும் உள்ள உறவு தான் கதையின் இழை.” 

“நான் படிக்கிற சோஷியாலஜி உதவி செய்யுமான்னு பார்க்கலாம்.” 

“சமூகவியல் மட்டுமில்ல உன் எல்லா படிப்பும் உதவும். நான் எந்த சிறப்பு வகுப்பும் எடுக்கல. எடுத்ததிலும் உன்னைமாதிரி ட்யுக் யுனிவெர்சிடி வருந்திக் கூப்பிடற அளவுக்கு நல்லா செய்யவும் இல்ல.” 

“உன் தொழிலுக்கு உலகப்பாடம் தான் முக்கியம்.” 

“அடடா! நாம இதுவரைக்கும் சந்திக்காம போயிட்டமே” என்று மந்தாகினி வருத்தத்துடன் தலையசைத்தாள்.  

“சரி, கதையைச்சொல்!” 

“இந்தியாவிலேர்ந்து அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் குடியேறின முதல் தலைமுறை… அதன் ஒரு கோடியில், அந்நிய மண்ணில் கால் வைத்ததும் பழகிய பண்பாட்டைப் பறக்க விடுகிறவர்கள். அதற்கு எதிர்ப்பக்கத்தில் தொழிலின் தேவைக்கு மேல் எந்த மாற்றத்தையும் ஏற்காதவர்கள். இரண்டுக்கும் நடுவில் பலஅளவுகளில் சமரசம் செய்கிறவர்கள்.” 

மானஸாவின் மனதில் அவள் அறிந்த முந்தையத் தலைமுறை இந்தியர்களின் ஊர்வலம். பொம்மி, அவள் தாய்…  

“என் அம்மா இரண்டாவது ரகம். தினம் பூஜை செய்தபிறகு தான் சமையல். அதுவும் சாதம் பருப்பில் இருந்து, தானே காய்களை வெட்டித்திருத்தி.. பொதுவாக வெளியில் சாப்பிட மாட்டாள். தமிழ் மிக நன்றாகத் தெரியும். தாத்தாவின் தமிழ்க்கதைகளை சீராக்கிப் பிரசுரிப்பது அவள் வேலை. அத்துடன் டொரான்ட்டோ தமிழ் இணையத்தில் கட்டுரைகள் கதைகள் தகவல்கள் நிரப்புவதும் அவள் தான். எல்லா பண்டிகைகளையும் சம்பிரதாயப்படி கொண்டாடுவாள். நவராத்ரியின்போது ஒன்பது படிகளில் பொம்மைகள். கடையில் வாங்கியவை தவிர அவளே கையால் செய்தவை. தினம் சினேகிதிகளை அழைத்து தேவி பாராயணம்.”  

அதுபோன்ற எதையும் கங்கா செய்தது இல்லை. பின்னிய கூந்தலும் இயற்கைப் புருவங்களும் நாஷ்வில் வந்த ஒரு சில வாரங்களில் காணாமல்போய் விட்டன. அவள் புடவை கட்டி மானஸா பார்த்தது இல்லை.  

“என் அம்மாவிடம் இப்போது மிச்சம் இருப்பது மாதத்துக்கு ஒருநடை கோவில், சிரமம் இல்லாத தென்னிந்திய சமையல், கொஞ்சம் பேச்சுத்தமிழ்.” 

“ஆண்களின் அதிகார உலகத்துக்கு உன் அம்மா தினம் போகவேண்டும். என் அம்மாவுக்கு அந்த மாதிரி கட்டுப்பாடுகள் கிடையாது.” 

“இருந்தாலும், அவள் கனடாவில் வாழ்வதால் அதன் பண்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆகிறது, இல்லையா?”  

“உண்மைதான். என் கதையில் அதற்கும் இடம் உண்டு.” 

“சூழலின் பரவலான பண்பாட்டுக்கு மாறியதால் தான், ஒரு வெள்ளை ஆணுடன் சரிசமமாக என் அம்மாவால் சண்டைபோட முடிந்தது.”  

“அதுவும் சரி. இரண்டாவது தலைமுறையின் கதை வேற. இங்கேயே பிறந்ததால் பாஸ்தா, ர்ர், பொறித்த கோழிக்குஞ்சு, பெப்பரோனி பீட்ஸா இதெல்லாம் பழக்கமாயிடும். காதில் சோழிகளை மாட்டிக்கொண்டு எப்போதும் கேட்பது பாப் ம்யுஸிக். இந்தியப் பண்பாட்டைப் பற்றி அதிகம் தெரியாது. பெற்றோர்களும் சொல்லித்தருவது இல்லை. மிஞ்சிப்போனால், கோவிலுக்குப் போகும்போது உடலை மறைக்கும் ஆடை அணிய வேண்டும், பள்ளிக்கூடம் முடிக்கிற வரைக்கும் ஆண்களோடு ஓர் எல்லைக்குமேல் போகக்கூடாது என்ற கட்டுப்பாடுகள்.”    

“பையன்களுக்கு அது கிடையாது.”  

“அமெரிக்கர்களுடன் சேர்ந்து மற்ற இந்திய நண்பர்களும் மேற்கத்திய பண்பாட்டை தலையில் சுமத்துவார்கள்.”   

“பொதுவாக விளையாட்டில் போட்டிபோட வலிமை இல்லாததால் படிப்பில் முழு கவனத்தை ஈடுபடுத்த வேண்டும்.”  

“அந்த எதிர்பார்ப்பும் நான் பார்த்திருக்கிறேன். என் வளர்ப்பு வித்தியாசம். பிறப்பதற்கு முன்னாடியே அப்பா அம்மா தாத்தா பாட்டி ஸ்ரீலங்காலேர்ந்து வந்துட்டாங்க. ஒன்றாக ஒரே வீட்டில். குடும்பம் என்றால் என் கணக்கில் மூன்று தலைமுறைகள்.”  

மானஸாவின் தாத்தா பாட்டி மூன்று தடவை அவர்களுடன் தங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு தடவையும் ஏழெட்டு வாரங்கள். பெரிய வீடு பாதியானது போலத் தோன்றும். தாத்தாவின் பூஜைப் பாத்திரங்களைக் கையால் அலம்ப வேண்டும். அலெக்குடன் குளியலறையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். பாட்டியின் சமையலில் காரம் புளி அதிகம். கிளம்பிப்போனதும் அம்மாவுக்கு வரும் நிம்மதி. 

“அப்பப்போ அகதி யாராவது ஒரு மாசம் போல எங்களுடன் வந்து தங்குவாங்க. ஏழுமலையும் அவர் பெண் அம்ருதாவும் கிட்டத்தட்ட ஒரு வருஷம். அம்ருதா மாதிரி ஒரு சிரிச்ச முகத்தை பார்க்கமுடியாது. எந்த சின்ன விஷயமும் அவளுக்கு ஆச்சரியம். எந்த வேலையும் விளையாட்டு. எந்தப்பொருளையும் தூக்கியெறியப் பிடிக்காது.” 

சீரிஸில் ஒரு அத்தியாயம் அம்ருதாவுக்கு. 

“எனக்கு எல்லா பண்டிகையும் அத்துப்படி. சுமார் இருபது பதார்த்தங்கள் சமைப்பேன். தமிழ் நல்லாவே தெரியும். தாத்தாவின் எல்லா கதைகளையும் படிச்சு ரசிச்சிருக்கேன். அவர் தேர்வுசெய்து கொடுத்த தமிழ் நாவல்களை வாசிச்சு இருக்கேன். பரதநாட்டியத்தில அரங்கேற்றம் நடந்திருக்கு. உச்சரிப்பு தடுமாறினாலும் பாரதியார் பாடல்களைப் பாடுவேன்…”  

அவற்றையெல்லாம் செய்யாதது தவறோ என்ற எண்ணம் தனிமர வாழ்க்கையை ஆதரிக்கும் சமுதாயத்தில் வளர்ந்த மானஸாவுக்கு எழுந்தது. அதை ஈடுசெய்ய ஒரேயொரு வழி தான். மந்தாகினியின் ஆன்மாவைத் தழுவி அணைப்பது போல அவளை நீண்ட நேரம் உற்றுப் பார்த்தாள். பிறகு மிக நிதானமாக, 

“கனடாவில் வளரும் வரை ஒரு இளம் பதின்பருவப் பெண்ணின் வாழ்க்கை தமிழ்ப் பண்பாட்டில் ஒரே சீராக நடக்கிறது. யூ.எஸ்.ஸுக்கு இடம் பெயர்ந்ததும் சூழலின் கட்டாயம். அவளுக்குத் தன் பண்பாட்டை மாற்றிக்கொள்வதா வேண்டாமா என்கிற தர்மசங்கடம்.”  

“உன் கற்பனைத் திறமையைக் கேட்கணுமா? உடனே பாய்ன்ட்டுக்கு வந்துவிட்டாய். ‘கலாவதி’ஸ் டிலெம்மா’ தான் கதை. உன்னைக் கண்டுபிடித்தது என் அதிருஷ்டம்.”   

ஞாயிற்றுக்கிழமை மதியம் சஹாதேவன் குடும்பம் கிளம்பிப்போனதும் மானஸா அவள் அறையின் சோஃபாவில் சாய்ந்து யோசித்தாள். முதல் புத்தகத்தில் அவள் சித்தரித்த கங்காவுக்கும் அவளுடைய தாய்க்கும் அதிக வித்தியாசம் இல்லை. ஆனால் கலாவதி மந்தாகினியையும் தாண்டிய கதாபாத்திரம். அவளை உருவாக்குவது தான் படைப்பு இலக்கியம். அவளால் முடியுமா? 

கலாவதி வயதுக்கு வருவதைக் கொண்டாடும் வைபவம். குழந்தைப்பருவம் முடிந்து பொறுப்பான பெண் ஆனதைக் குறிக்கும் மைல்கல். அது பண்பாட்டின் ஒரு முக்கிய அங்கம். அதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. சில மாதங்களுக்கு முன், சங்கமிக்கு நடந்ததுபோல, முதல் காட்சியில் கலாவதியை அலங்கரித்து, பெண்கள் பாட்டுப்பாடி… 

கலாவதியின் தர்மசங்கடம் நிவர்த்திக்கப்படுவதுடன் தொடர் முடிகிறது. 

எதை முதலில் எழுதுவது?  

எழுத்துப்பட்டறையில் லின்ட்ஸி சொன்னதை மறக்காமல் கணினித் திரையில் ஸ்க்ரிப்ட் பக்கத்தை உருவாக்கினாள். கூரியர் 12 புள்ளி எழுத்துரு… 

றுநாள் ஊர்திகள் இரண்டும் கிளம்பும் சத்தத்தில் மானஸா விழித்தாள். அலைபேசியை எடுத்தபோது மந்தாகினியிடம் இருந்து, ‘எப்படி போகிறது?’ 

பதில் தகவல் இடாமல் அவளை அழைத்தாள். 

“மந்தாகினி! நான் எழுதியதை உன் பார்வைக்கு அனுப்பப்போறது இல்ல.” 

“என்ன அக்கா இது?” 

“கவலைப்படாதே! முடிச்சப்பறம் மொத்தமா அனுப்பறேன்.” 

“உன்மேல் உனக்கு நம்பிக்கை வந்திருக்கு. நான் சொன்னேன் இல்ல?”

“அதுக்கு ரொம்பவே நன்றி! சீரிஸின் கடைசி பகுதியை முதலில் எழுதினேன். என் படைப்புக்கு என்னிடம் ஒரு அளவுகோல் இருக்கு. அதுக்கு நீளம் அதிகம். அதன்படி மிக நன்றாக அமைந்திருந்தது.” 

“எனக்கு இப்பவே படிக்கணும் போல இருக்கே.” 

“விடுமுறை நாட்களை அனுபவி! நான் நேற்று இரவே முதலில் இருந்து எழுத ஆரம்பிச்சுட்டேன். புது வருஷம் பிறக்கும்போது முழு ஸ்க்ரிப்ட் உன் கையில் இருக்கும்.” 

“சந்தித்த இரண்டு நாளைக்குள் நம் இருவரின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட திருப்பம்!” 

கிறிஸ்மஸ் தினத்தின் காலை. 

கூரையை எட்டும் பிளாஸ்டிக் மரத்தின் அடியில் இருக்கும் பெட்டிகளின் அலங்காரக் காகிதத்தை வேகமாகக் கிழித்து மறைந்திருக்கும் பரிசுகளை வெளியே கொண்டுவர சிறுவயது மானஸாவும் அலெக்கும் போட்டிபோட்டு சீக்கிரமே எழுந்திருப்பது வழக்கம். 

“எனக்கு நைகி நீச்சல் ஆடை.”

 “ஆஹா! ஐ-ஃபோன் 6.” 

இந்தத் திருநாளில் அவன் ஆனந்தமாகத் தூங்க, மானஸா நான்கு மணிக்கே விழித்தாள். ஒரு பரிசுக்கு ஆசை. அது பௌதிகப்பொருள் அல்ல. 

பத்து நாட்களுக்கு முன்னால் எழுதத் தொடங்கியபோது இருந்த வேகம் முந்தைய தினம் திடீரெனக் குறைந்து கிட்டத்தட்ட நின்றுவிட்டது. இன்னும் இரண்டரை எபிசோட் பாக்கி. முடிந்ததாக நினைத்த சில பகுதிகளைப் படித்தபோது அவற்றை எழுதியபோது கிடைத்த மனநிறைவு திரும்ப வரவில்லை. 

கலாவதியைப் பாதியில் கைவிட மனம் ஒப்பவில்லை. அவளுடைய தன்னம்பிக்கையை மட்டுமல்ல மந்தாகினிக்குக் கொடுத்த வாக்குறுதியையும் காப்பாற்றியாக வேண்டும். மானஸா எழுதுவதை நிறுத்திவிட்டால் வரும் விடுமுறை வாரம் மற்றவளுக்கும் நரகம். 

பெற்றோர்களின் அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அவள் மெல்ல எழுந்து அம்மாவுடன் சமையலறைக்கு வந்தாள். விளக்கு எரித்தபிறகுதான் கங்கா மானஸாவின் முகத்தைக் கவனித்தாள். வருத்தத்தின் காரணத்தை ஊகிப்பதில் சிரமம் இல்லை. சின்னத்திரைத் தொடருக்கு ஒரு மாதத்திற்குள் ஸ்க்ரிப்ட் எழுத மானஸா ஒப்புக்கொண்டபோது பெருமையுடன், பதின்பருவத்தைத் தாண்டாத அவளால் அனுபவமிக்க எழுத்தாளர்களே கைவிட்ட காரியத்தை சாதிக்க முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது. அதுவரை மானஸா நேரம்கழித்து எழுந்தால் முந்தைய இரவில் நிறைய பக்கங்கள் நிரம்பியிருக்கும் என்கிற திருப்தி. 

இந்த அதிகாலையில் அவள் எழுந்ததற்குக் காரணம் நிச்சயமாக வெற்றுத்திரை. ஆயிரக்கணக்கான பக்கங்களை நிரப்பியவர்களையே கீழேதள்ளி வேடிக்கை பார்க்கும் அதற்கு மானஸா எம்மாத்திரம்?  

உயர்ந்த கோப்பை நிறைய காப்பி நிரப்பி இருவரும் மேஜையில் அமர்ந்தார்கள். 

உட்கார்ந்துவிட்ட கற்பனைக் குதிரையைத் தட்டியெழுப்பி ஓட்ட…

“யாரையாவது உதவி கேட்டுப்பார்!”  

நாடகம் அல்லது திரை அனுபவம் உள்ள யாராவது படித்துப்பார்த்து வழிகாட்டினால் நல்லது. அப்படி மானஸாக்கு யாரைத் தெரியும்? 

“கட்டுரைன்னா டீச்சர் மோலி மால்னரைக் கேட்கலாம். இது ஸ்க்ரிப்ட் ஆச்சே?” என்றாள். 

“அப்படின்னா.. ப்ரென்ட்வுட் ஸ்கூலின் ட்ராமா க்ளப் போடும் நாடகங்களை டிரெக்ட் பண்ணும் மித்ரா சந்திரன்..” 

“அந்தப் பெயரை விவர அட்டைகளில் பார்த்திருக்கிறேன்.” 

“அவர் மிக நல்ல மாதிரின்னு பொம்மி சொல்லியிருக்கா.”  

“நேரடியாகப் பழக்கம் இல்லையே.”  

“எதுக்கும் கேட்டுப்பாரேன்!”  

கங்கா தேடிக்கொடுத்த தொலைபேசி எண்ணில்.. 

“ஹலோ!” பெண்ணின் குரல்

“நான் ஒரு ஆரம்ப எழுத்தாளர். மித்ரா சந்திரனுடன்…”  

“ஒரு நிமிஷம்.” 

ஒருசில வினாடிகளுக்குள்,  

“நான் மித்ரா!”  

“ஹலோ மித்ரா! நான் ரேவன்வுட் பள்ளிக்கூட மாணவி என்றாலும் சென்ற ஆண்டு நீங்க தயாரித்த ‘பனிமழையில் ஒரு நாள்’ பார்க்க வந்திருந்தேன். எல்லா விதங்களிலும் அது பிரமாதம்.” 

“நிச்சயம் அதைச்சொல்ல நீ இந்நாளில் இந்நேரத்தில் அழைத்திருக்க முடியாது” என்று கேலி கலவாத வேடிக்கை குரலில் சொன்னதால் மானஸாவும் சிரித்தாள்.  

“உண்மை தான். நான் ஒரு பதின்பருவ எழுத்தாளர்.”  

“பெயர்..”  

“மானஸா சஹாதேவன்.”  

“உன் கட்டுரைகளைப் பார்த்திருக்கிறேன்” என்பதைக் கேட்டு அவளுக்குத் தயக்கம் குறைந்து தைரியம் வந்தது. 

“அப்படித்தான் ஆரம்பித்தேன். இப்போது ஒரு சங்கடம்.”  

“ம்ம்.. சொல்!”  

தூரத்து உறவு மந்தாகினிக்காக ஸ்க்ரிப்ட் எழுத ஒப்புக்கொண்டதை விவரமாகச் சொன்னாள். அவனும் ஆர்வத்துடன் கேட்டான். 

“என் திறமையின் எல்லையைத் தொட்டுவிட்டேன். உங்களுக்கு உரையாடல் நடிப்பு வழியாகக் கதை சொல்வதில் நிறைய அனுபவம்.”  

“நிறைய என்று சொல்வதற்கு இல்லை.” 

“நிச்சயம் என்னைவிட அதிகம்.”  

“எழுதிய பகுதிகளை அனுப்பு! வாசித்து என்னால் உதவ முடியுமா முடியாதா என்று சொல்வேன்.”  

“தாங்க்ஸ்!” 

காலை நேரம் நிதானமாகப் போனது. எப்போது மித்ராவைக் கூப்பிடலாம்? 

பிற்பகல் அவனே அழைத்தான். 

“மானஸா! நாம் எங்கே சந்திக்கலாம்?” 

“நான் உங்களைத் தேடி வருவது தான் நியாயம்.” 

“நாங்கள் ஊரைவிட்டுத் தள்ளி இருக்கிறோம்.” 

அதை நிரூபிப்பது போல், விளம்பரப் பலகைகள் இல்லாத குறுகலான தெருவில் மானஸா திரும்பியதும் வலப்புறம் ஒரு சிறு வீடு. அதைச்சுற்றிலும் பரந்த நிலம். குளிர்காலம் என்பதால் தரை தெரிந்தது.  

சரளைக்கல் பாதையில் காரை நிறுத்தி நடந்தாள். வீட்டு வாசலில் அவளுக்காகக் காத்திருந்த மித்ராவின் கல்லூரி மாணவத் தோற்றத்தைப் பார்த்து கதையின் இளமையைப் புரிந்துகொள்வான் என்ற நம்பிக்கை.  

“ஒரு பகல் பொழுதுக்குள் படித்ததற்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல.” 

“மாளவிகா கிட்ட சொல்!” என்று அவன் திரும்பினான். 

மானஸா அதைச் செய்வதற்கு முன், கதவைப் பிடித்து நின்ற மாளவிகாவே, 

“மந்தாகினியும் நீயும் சந்திச்சதைக் கேட்டு எனக்கு ஆச்சரியம். அந்த சந்திப்பின் முடிவில் எதிர்பாராத ஒப்பொந்தம் ஒரு அதிசயம். நீ இன்னும் இரண்டு வாரத்தில எழுதிமுடிக்கணும், இல்லையா? அதனால மித்ராவை உடனே வாசிக்கச் சொன்னேன்.”  

வரவேற்பு அறையில் எங்கு பார்த்தாலும் செடிகள் கொடிகள். ஒரு மேஜையைச் சுற்றி அமர்ந்தார்கள். அதன் மேலும் ஒரு பூங்கொத்து ஜாடி. நிஜமான இலைகளும் மலர்களும். 

“இங்கே பக்கத்தில அக்ரிகல்சர் சென்டரில் எனக்கு வேலை. நீ என்ன படிக்கிறே?” என்றாள் மாளவிகா.  

“ட்யுக்கில் முதல் வருஷம். இப்போதைக்கு பயாலஜி மேஜர்.”  

“அப்ப, நீ என் பக்கம்.”  

“ஊகும்! மானஸா என் பக்கம். இது ஆரம்ப கால எழுத்து இல்லை” என்று மித்ரா அச்சிட்ட காகிதங்களைக் காட்டினான்.  

“இன்னும் எழுதி முடிக்கலயே.” 

“முடிக்க வச்சுடறேன்.”  

அவள் அதுவரை சந்தித்திராத அபூர்வ மனிதர்கள். அவர்களைக் கதாபாத்திரங்களாக ஆக்கினால் எப்படி இருக்கும்? 

“கதையின் தீம், கலாவதியின் கேரக்டர் இரண்டும் பிடிச்சிருக்கு.”  

“மந்தாகினிக்கும் சேர்த்து நான் பாராட்டை வாங்கிக்கறேன்.”   

“ஆனா.. திருத்தங்கள் செய்யலாம்.”  

“எனக்கும் அந்த எண்ணம்.” 

“அம்ருதா திடீர்னு கதையில் நுழைகிறாள். ஒரு அறிமுகம் இருந்தால் நல்லது.”  

மானஸா கண்களை மூடி யோசித்தாள். பிறகு அவற்றைத் திறந்து, 

“இது எப்படி? முத்தையா குடும்பம் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு அகதிகள் முகாமிற்கு சேவை செய்யப்போவதுடன் இரண்டாவது எபிசோட் முடிகிறது. அடுத்ததில்.. அங்கே அம்ருதாவையும் அவள் தந்தையையும் சந்திக்கிறார்கள். அம்ருதாவின் இடது கையில் இருந்து துப்பாக்கி குண்டை எடுத்தபோது முழங்கைக்குக்கீழே வெட்டப்பட்டதாக அவள் தந்தை தெரிவிக்கிறார். அதைக் கேட்டு கலாவதி மிகவும் வருந்துகிறாள். புதுவாழ்வு தர அவர்களை முத்தையா குடும்பத்தினர் தங்களுடன் அழைத்துவரத் தீர்மானிக்கிறார்கள்.” 

“வெரி குட்! அதற்குப் பொருத்தமாக கதையின் காலத்தை சில ஆண்டுகள் முன்னுக்குத் தள்ள வேண்டி இருக்கும்.”  

“அது ஒன்றும் சிரமம் இல்லை.”   

“மீதிக்கதையைத் தொய்வு இல்லாமல் கொண்டுபோக கலாவதி ஷான் இருவரின் சந்திப்பும் உரசலும்.”  

“அது அடுத்த இரண்டு பகுதிகளில்.”   

முகத்தில் மிகையான புன்னகையுடன் மித்ரா,

“நீ தப்பா எடுத்துக்காட்டா ஒன்று சொல்வேன்.” 

“நான் மாணவி, நீங்க ஆசிரியர். எது சொன்னாலும் ஏற்றுக்கொள்வேன்.” 

“பொதுவா நம்ம வாழ்க்கையை டெம்ப்ளேட்டா வச்சுத்ததான் கதைகள் எழுதறோம்.” 

“அதிலும் என்னை மாதிரி கற்றுக்குட்டியா இருந்தா…” 

“அது மட்டும் போதாது. அமெரிக்க புறநகர் தனித்துவம் இல்லாத இடம். அதில் வேர் விடாத போராட்டங்கள், கொள்கை இல்லாத மனிதர்கள், ஆழமில்லாத உணர்ச்சிகள். அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த நான் அதன் எல்லைகளைத் தாண்டி கற்பனை செய்ய மிகவும் சிரமப்பட்டேன். நீயும் உன் எண்ணங்களின் கட்டை அவிழ்த்து அவற்றை மேலே பறக்கவிட வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத எத்தனையோ பெண் வயதுக்கு வரும் கதைகளில் இதுவும் ஒன்றாக ஆகிவிடும். கலாவதி வளர்ந்தது நமக்குத் தெரிந்த ப்ரென்ட்வுட் இல்லை. இலங்கைத் தமிழர்கள் ஒருவித பாசப்பிணைப்புடன் அமைத்துக்கொண்ட சமுதாயம். அதை நீ கதையில் கொண்டுவர வேண்டும்.” 

அவள் எழுதிய பகுதிகளை மறுபடி படித்தபோது ஏன் திருப்தி தரவில்லை என மானஸாவுக்குப் புரிந்தது. 

“நீங்கள் கொஞ்சம் வழிகாட்டினால்…”  

“ஆரம்பத்தில் கலாவதி வயதுவந்ததைக் கொண்டாடும் காட்சியை எடுத்துக்கொள்வோம். விருந்துக்கான சாப்பாட்டை ஒரு விடுதியின் சீருடை அணிந்த பணியாட்கள் கொண்டுவந்து வைக்கிறார்கள். அதைவிட விருந்துக்கு வந்த ஒவ்வொருவரும் ஒரு பாத்திரத்தை எடுத்துவருவது போல காட்டுவது சிறப்பு.”      

“மாற்றிவிடுகிறேன்.” 

“அம்ருதா ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப்போரில் சிக்கியவள். தமிழ்நாட்டின் அகதிகள் முகாமில் அவதிப்பட்டவள். வந்துபோகும் பாத்திரமாக இல்லாமல் அவள் பங்கை இன்னும் அதிகரிப்பது நல்லது.”  

“அவள் உலக நோக்கை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன்.” 

“கடைசியா.. பிரதான பாத்திரத்தின் முக்கியமான பிரச்சினை தீர்ந்ததாகக் கதையை முடிப்பது எனக்குப் பிடித்தமானதாக இல்லை. வாழ்க்கையில் எதுவுமே முடிவுக்கு வருவது கிடையாது. அரைமனதுடன் நிலமையை ஏற்றுக்கொண்டு திருப்தி அடைகிறோம். கலாவதி பண்பாட்டை மாற்றிக்கொள்ளத் தீர்மானித்தாலும் அதில் அவளுக்கு முழு சமாதானம் இல்லை எனக் காட்டினால் இயற்கையாக இருக்கும்.” 

“அதுவும் சரி.” மாளவிகாவைப் பார்த்து,”உங்க உதவியும் எனக்கு இருந்தா நல்லது. கதாநாயகனின் குடும்பம் ஒரு பண்ணை நடத்துவதாக அமைத்திருக்கிறேன்.”   

புதிய ஆண்டின் முதல் சனிக்கிழமை. 

விடைபெற மித்ராவின் இல்லத்துக்கு மானஸா வந்தாள். விடுமுறையின் முடிவு வருத்தத்தைத் தரவில்லை. சாதித்த பெருமை. 

கதவைத்திறந்த மாளவிகாவிடம், 

“மந்தாகினியின் அப்பா என்னை அட்லான்ட்டா அழைத்துப்போக வந்திருக்கார். அங்கே ஒரு கொண்டாட்ட விருந்து. அங்கே இருந்து ட்யுக்.” 

“கலாவதி ஷானை முதல்முறை சந்திக்கிற காட்சி எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு – இயற்கையா ஆனா அதே சமயத்தில ரொமான்டிக்கா.”  

“கதாநாயகனைக் காட்டிக்கொடுத்த உங்களுக்கு தாங்க்ஸ்!” 

“வந்து உட்கார்! மித்ரா அம்மாவோட பேசிண்டு இருக்கான். இதோ வந்துவிடுவான்.”  

“உட்காருவது இருக்கட்டும். மாளவிகா! நீங்க தான் மித்ரா மனசை மாற்றணும். உங்களுக்கே தெரியும், கலாவதியின் ஸ்க்ரிப்ட் முழுக்க அவருடைய உள்ளீடு இருக்கு. அது மட்டுமில்ல, தினம் காலை, முந்தைய தினம் நீ எழுதினதை அனுப்புன்னு அவர் கிட்டேர்ந்து ஒரு தகவல் வரும். அதுக்காக இருபது பக்கமாவது எழுதிய பிறகுதான் தூங்கினேன். க்ரெடிட்டில் அவர் பெயரையும் சேர்ப்பது தான் நியாயம். நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். அவரை அசைக்க முடியல.” 

“இந்த விஷயத்தில அவன் சொல்வது சரி. இது உன்னுடைய முதல் புனைவு, சரியா?” 

“சரிதான். வரப்போகும் புத்தகம் அம்மாவைப்பற்றி. அரைகுறையாக நிற்கும் கதையில் புராண பாத்திரங்கள்.” 

“கலாவதி உன் சிருஷ்டியில் உருவானவள். மற்றவங்களுக்கு அவள் ஒரு கற்பனை பாத்திரம். உனக்கு அவள் உயிருள்ள பெண். மானஸாவின் ஓர் அங்கம். இப்போது நீ அப்படி நினைக்காமல் இருக்கலாம். ஆனால், முதல் முத்தம் முதல் காதல் போல, முதல் படைப்பும் ஒரு கலைஞருக்கு ஸ்பெஷல். எவ்வளவு காலம் ஆனாலும், ‘கலாவதிக்கு இப்போ இருபத்தைந்து வயசு இருக்குமா? அவள் எப்படி இருப்பாள்? எப்படி நடந்துகொள்வாள்?’ என்ற கேள்வி உன் மனதைவிட்டுப் போகாது. ‘ஒன் நைட் இன் ரெய்ன்ஸ்டார்ம்’ என்ற நாடகத்தின் தயாரிப்பில் அவன் பிரமாதமாக ஒன்றும் செய்யாவிட்டாலும் காதம்பரி மித்ரா ரெண்டு பெயரும் இருக்கு. அதனால தன் பெயரை சேர்க்க வேண்டாம்னு மித்ரா சொன்னதுக்கு அடக்கம் காரணம் இல்ல. கலாவதிக்கும் உனக்கும் தனிப்பட்ட உறவு. அதில் நுழைய அவனுக்கு விருப்பம் இல்லை.”   

மறுத்துப்பேச முடியாமல் மானஸா ஊமையானாள். 

றுநாள் மாலை. மந்தாகினியின் இல்லத்தில் விருந்து. அதற்கான தயாரிப்புகளை முடித்த அவள் பெற்றோர்கள் ஆடைமாற்றியபோது..

“ஸ்க்ரிப்ட் பிரமாதம் அக்கா! முழுவதையும் ஒரே மூச்சில் படிச்சேன்” கலாவதியைப் போல பட்டு பாவாடை சட்டையில் மந்தாகினி. 

“நான் உருவாக்கி யிருக்கும் கலாவதிக்கும் உனக்கும் நிறைய வித்தியாசங்கள்.”  எழுதியபோது என்ன தின்கிறோம் என்று கவலைப்படாத மானஸாவுக்கு விரியும் நீண்ட ஆடை கைகொடுத்தது.

“கவனித்தேன்.” 

“இப்போது அவள் உன் திறமைக்கு சவால்.”  

“மூன்றே வாரத்தில் எப்படி முடிந்தது?” 

“எழுத ஆரம்பித்ததும் கலாவதியின் உலகில் ஆழ்ந்துபோயிட்டேன். அம்மா அப்பாவுடன் ஒருசில வார்த்தைகள். இந்தியாவில் இருந்து திரும்பிய அலெக்குக்கு ஹாய் அவ்வளவுதான். மற்ற நேரமெல்லாம் மனதில் கலாவதி கலாவதி கலாவதி. கலைப்படைப்பின் உக்கிரத்தை முதன்முதலாக அனுபவித்தேன். உனக்கு நன்றி!” 

“நமக்குள்ள எதுக்கு நன்றி யெல்லாம்?”

வாசல் மணி ஒலித்தது. 

மந்தாகினி வந்தவரை அழைத்துவந்தாள். 

“இவர் தான் கலாவதியை இயக்கப்போகும் அனந்த் கோஷ்.” 

“மிஸ்டர் அனந்த் கோஷ்! இப்போதே சொல்லிவிடுகிறேன். இது என் முதல் முயற்சி. செமிஸ்டர் ஆரம்பித்ததும் நான் கலாவதியை மறந்துவிடுவேன். அனுபவப்பட்ட  நீங்கள் காட்சிகளில் எந்த மாற்றமும் செய்யலாம். என்னைக் கேட்க வேண்டும் என்பது இல்லை.” 

(தொடரும்)

Series Navigation<< உபநதிகள் – 8உபநதிகள் – அத்தியாயம்: பத்து >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.