அதிரியன் நினைவுகள் – 16

This entry is part 16 of 22 in the series அதிரியன் நினைவுகள்

தமிழாக்கம்: நாகரத்தினம் கிருஷ்ணா

உரோமாபுரி என்பதை இனியும் உரோம் நகர் என்று மட்டுமே குறுகிவிடக்கூடாது.  ஒன்று அது இல்லாதொழியவேண்டும்  அல்லது குறைந்தது உலகின் பாதிபரப்பேனும் உரோமாபுரியாக அடையாளம் பெறவேண்டும். அந்தி சாயும் வேளையில் சூரியனால் இளம்சிவப்பு பொன் நிறத்தில் ஜொலிக்கும் நகரின் ஓடு வேய்ந்த கூரைகளும், மொட்டை மாடிகளும், தொகுப்பு குடியிருப்புகளும் நம்முடைய மன்னர்களின் காலத்தில் எதிரிகளிடமிருந்து பாதுகாக்க அரண்களால் சூழப்பட்டிருந்தன, இனி அந்நிலை மாறவேண்டும். ஏன் நானே கூட, இக் காவலரணில் ஒரு பெரும்பகுதியை ஜெர்மானிய கானகங்கள் நெடுகிலும், பிரித்தானிய சதுப்பு நிலங்களிலும்  எழுப்பியுள்ளேன். வெயில் காயும் நேரத்தில், வீதியொன்றின் திருப்பத்தில் நின்று கிரேக்கர்களின் மலைக்கோட்டையைக் காணும்போதெல்லாம், மிகக் கச்சித்தமாகவும் நேர்த்தியாகவும் அதனுள் கட்டி எழுப்பப்பட்ட   நகரம்  ஒரு பூத்த மலர்போலவும், அந்நகரத்துடன் இணைந்திருக்கும் மலை தண்டுடன் கூடிய புல்லிவட்டம் போலவும் தோற்றம் தரும். இழப்பீடற்ற அச் செடியை வரையறுக்க ‘ பூரணம்’ என்ற வார்த்தைமட்டுமே பொருத்தமானது. அப்பழுக்கற்ற  அவ்வடிவம் பெருவெளியின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில், கால அளவின் ஒரு குறிப்பிட்டத் தருணத்தில் முயன்று அடையப்பட்டிருக்கவேண்டும். அதன் வளர்ச்சிகும்  விரிவாக்கத்திற்கும்,  ஒரு செடிக்கு எப்படி விதை அடிப்படையோ, அதுபோல கிரேக்கமும்  இவ்வுலகின் இனவிருத்திக்கு தமது சிந்தனை விதைகளால் உதவியுள்ளது. மாறாக நமது உரோமாபுரி சிக்கலானது, வடிவற்றது, தன்னுடைய நதிக்கரை சமவெளியில் எவ்வித ஒழுங்கிற்கும் உட்படாமல் விரிந்து பரவி, இன்றைக்கு ‘அரசு’ என்று உருவெடுத்துள்ளது.  இந்த ‘அரசு’  மேலும் விரிவடையவேண்டும், பின்னர் இந்த பூமியை மட்டுமல்ல அதனுடன் பிணைக்கப்பட்ட அனைத்தையும் ஆட்டிப்படைக்கவேண்டும். ஏழுமலைகளோடு பிணைக்கபட்ட இச்சிறிய நகரத்திற்கு போதுமானவகையில்  நற்பண்புகள் இருந்தன, அவை இந்த உலகிற்கு ஏற்றவகையில் தனது கெடுபிடிகளைத் தளர்த்திக்கொள்வதும், பன்முகத் தன்மைக்கு மாறுவதும் அவசியம். உரோமாபுரியை ‘நிலைபேறுடைய நகரம்’  என அழைப்பதற்கு முதன்முதலாகத் துணிந்தவன் நான், ஆசிய வழிபாட்டு முறைகளின் தாய் தெய்வங்களுடன் அதிகளவில் ஒருங்கிணைக்கப்பட்டு இளைஞர்களையும், விளைச்சல்களையும் வயிற்றில் சுமக்கவேண்டும், தனது மார்பகத்தில் சிங்கங்களையும், தேன்கூடுகளையும் சேர்த்தணைத்துக் கொள்ளவேண்டும். எனக்கு அழிவில்லை, நிரந்தரம் என்று தெரிவிக்கும் மனித படைப்புகள் அனைத்தும் மாறிவரும் இயற்கைகூறுகளின் லயத்திற்கு இசைந்து போகவேண்டும்,  நட்சத்திரங்களின் காலப் பிரமாணத்துடன் கலந்தியங்கவேண்டும். நம்முடைய உரோம், இவாண்டர் (Evander) காலத்து காடும் காட்டைசார்ந்த நகரமாக இருப்பதை இனியும்  அனுமதிப்பதற்கில்லை. கணிசமான அதன் எதிர்காலத்தின் ஒரு பகுதி   ஏற்கனவே கடந்தகாலமாக முடிந்துவிட்டது. குடியரசு என்ற பெயருக்கு இரையாகி அதற்குரிய பங்களிப்பையும் அளித்தாயிற்று. விழாக்கள் பண்டிகைகளென பித்துடனிருந்த ஆரம்பகால சீசர்களின் உரோம் இன்று அடக்கமாக இருக்க முனைகிறது. வேறுவகையான உரோம்களுக்கும் எதிர்காலத்தில் வாய்ப்புண்டு, அதன் தோற்றம் எப்படியிருக்குமென என்னால் தற்போதைக்கு கற்பனைசெய்ய இயலாது, ஆனால் அதன் உருவாக்கத்திற்கு பங்களிப்பேன். புராதன நகரங்கள் புனித தலங்கள் என்கிறபோதும், அவையெல்லாம்  கடந்தகாலத்திற்குரியவை என்பதுபோலவும்,  நிகழ்கால மானுடத்திற்கு உரிய மதிப்பீடின்றியும் அவை இருக்கும். அவற்றைக் காண்கிறபோது  தீபஸ் (Thèbes), பாபிலோன், டயர்(Tyr) போல துணுக்குகளாக சிதறிப்போகும் ஊழ்வினையை உரோமாபுரி தவிர்க்கவேண்டுமென நினைப்பேன். கற்களால் கட்டமைக்கபட்ட அதன் உடலின்று தப்பித்து ‘அரசு’, ‘குடியுரிமை’, ‘குடியரசு’  என்கிற பதங்களின் சேர்க்கையில் நிச்சயமானதொரு சாசுவதமாக அது வடிவெடுக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.  இன்னமும்  நாகரீகத்தை எட்டாத நாடுகளையும், ரைன், தான்யூபு  அல்லது  பட்டாவியன்( Battavian) கரையோரப்பகுதிகளில் வேலியிட்டு பாதுகாக்கபட்டிருக்கும் கிராமங்கள் ஒவ்வொன்றையும் காண்கையில் எனக்கு நாணற் குடிசையில்  சாணக்குவியல் இடையில் நம்முடைய  ரோமானிய இரட்டையர்கள், குடித்த ஓநாய்ப்பால் வாயில்வழிய உறங்கும் காட்சி நினைவுக்கு வரும்: இதுபோன்ற  பெருநகரங்கள் அனைத்தும் எதிர்காலத்தில் பல உரோமாபுரிகளாக உருவெடுக்கும். தேசங்கள் மற்றும் இனங்களின் ஸ்தூல உடல்கள், புவியியல் மற்றும் வரலாற்றின் விபத்துக்கள், கடவுள்கள் அல்லது முன்னோர்களின் மாறுபட்ட கோரிக்கைகள்  ஆகிய அனைத்தும் நமக்கு எப்போதும்  ஒன்றின்மேலொன்றாக காணவிருக்கிற உண்மைகள்,  அதேவேளை   மனித செயல்பாட்டின் ஒற்றுமைக்கோ, அறிவார்ந்த அனுபவத்தின் மெய்யறிவுக்கோ கேடிழைக்கக்கூடாதென்பதில் கவனமாக இருப்போம். சிறிய நகரமென்றாலுங்கூட  எங்கெல்லாம் மாஜிஸ்ட்ரேட்டுகள், வணிகர்கள் எடையை சரிபார்க்கவும், வீதியைச் சுத்தம்செய்து, விளக்கொளிக்கும் ஏற்பாடு செய்து;  ஒழுங்கின்மை, கவனக்குறைவு, பயம், அநீதி ஆகியவற்றை நிராகரிக்கவும்; வேண்டியபோது நியாயமான முறையில் சட்டங்களுக்கு விளக்கம் தரவும் முன்வருகிறார்களோ அவர்களால் உரோம் என்றேன்றும் நிலைத்திருக்கும். மனிதர்களின் கடைசி நகரத்திற்கு அழிவு ஏற்படுகிறபோது, அதுவும் அழியக்கூடும்.

மனிதாபிமானம், மகிழ்ச்சி, சுதந்திரம் (Humanitas, Félicitas, Libertas)  என் ஆட்சிகால நாணயங்களில் காணக்கூடிய இந்த அழகான வார்த்தைகளை, உருவாக்கியவன் நானில்லை.  கிரேக்க தத்துவஞானிகள் மொத்தபேரும், அதேபோல பண்பாடுகளில் ஊறிய எல்லா ரோமானியரும் உலகிற்கு  அளிக்கும் தங்களைப்பற்றிய பிம்பம், நான் உலகிற்கு அளிக்கும் பிம்பத்தை ஒத்ததுதான். அநீதியானதொரு சட்டத்தை திராயான் ஒருமுறை எதிர்கொள்ள நேரிட்டது, அச்சட்டம்  மிகவும் கடுமையானதாகவும்  இருந்தநிலையில், காலத்தின் இயல்பிற்கு அது பொருந்தாது, எனவே அதை நடைமுறைபடுத்த இயலாதென அவர் கூச்சலிட்டார், அதனை நானும் காதில் வாங்கியிருக்கிறேன். ஒரு தத்துவஞானியின் குழப்பமான கனவாகவோ அல்லது ஒரு நல்ல இளவரசனின் சிறிது  தெளிவற்ற அபிலாஷையாகவோ இருந்துவிடக்கூடாதென நினைத்து, காலத்தின் தன்மைக்கேற்ப எனது அனைத்து செயல்களூடாக முதன்முதலில் மனமார அதற்குக் கீழ்ப்படிந்தவன் அனேகமாக நானாகத்தான் இருக்கவேண்டும்.  எனக்கென்று வாய்த்த பணி  இன்னமும் உருப்பெறாமல் இருக்கிற ஒரு பருப்பொருளை அதனுடைய  தெளிவற்ற நிலையினின்று  விடுவிப்பதோ  அல்லது பிணமான அதன்மீது  படுத்து உயிர்ப்பிப்பதோ அல்ல, மாறாக ஓர் உலகை மிகவும் கவனத்துடன் திரும்பச் சீரமைக்கிற பணி, இத்தகையதொரு காலத்தில் என்னை உயிர்வாழ அனுமதித்த கடவுள்கள் மொத்தபேருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறேன். உதாரணங்களை அளிக்கின்ற வகையில் நம்முடைய கடந்தகாலம் போதுமான அளவுக்கு நீண்டதாக இருக்கிறதே அன்றி, நம்மை  அழுந்த நசுக்கும் வகையில் பாரமானதல்ல என்பதால் எனக்கு மகிழ்ச்சி. நம்முடைய தொழில் நுட்பங்கள் எந்த  அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளதெனில் நகரங்களின் சுகாதாரமும், மக்களின் வாழ்க்கையில் வளமும் எளிதாகியுள்ளன, உபரியின் விளைவு, மனிதனிடம் உபயோகமற்ற உடமைகளைக் குவித்துவிடும் என்கிற அபாயம் இதிலில்லை,  மரங்கள் அவற்றின் மிகுதியால் கொஞ்சம் களைப்படைகின்றன, எனினும்  சில சுவையான பழங்ளைக் கொடுக்கின்ற திறன் தொடர்ந்து அவற்றுக்கு உண்டு, நம்முடைய கலைகளும் அத்தகையவை.  நமது மரியாதைக்குரிய, விளங்கிக்கொள்ளவியலாத சமயங்கள், தம்முடைய ஒட்டுமொத்த பிடிவாத நெறிமுறையிலிருந்தும், காட்டுமிராண்டித்தனமான சடங்கிலிருந்தும் விலகிக்கொண்டு, மனிதனும் பூமியும் கண்ட  புராதன கனவுகளுடன் மர்மமான முறையில் நம்மை ஒன்றிணைப்பதோடு, உண்மைகளின் சார்பற்ற விளக்கத்தையோ, மனிதர் நடத்தைக்குறித்த நம்முடைய பகுத்தறிவு பார்வையையோ அது தடுப்பதுமில்லை, இப்படியொரு சூழல் எனக்கு மகிழ்ச்சியைக்க் கொடுத்ததது. இறுதியாக, மனிதநேயம், சுதந்திரம், மகிழ்ச்சி என்ற இவ்வார்த்தைகள், அபத்தமாக சிலவேளைகளில் பயன்படுத்தபட்டப் போதிலும்  இதுவரை மதிப்பிழக்கவில்லை என்பதும் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

மனித நிலையை மேம்படுத்தும் முயற்சிகள் எதுவாயினும் அதற்கு மானுடம் தகுதியற்றது என்பதுபோல, அதற்கு எதிராக ஓர் ஆட்சேபனை இருக்கவே செய்கிறது. எனினும் அதனை எளிதாக ஒதுக்குகிறேன்.  கலிகுலாவின்(Caligula) கனவு நனவாகாமல் இருக்கும் வரை,  அவருடைய கத்திக்கு முழு மனித இனமும் ஒற்றைத் தலையாக உருமாறி பலியாவதற்கு சாத்தியமில்லை என்கிற உண்மை நீடிக்கும்வரை; அவற்றை சகித்துக்கொள்ளவும், கட்டுக்குள் வைத்து, நமது நோக்கத்திற்கு இசைவாக அவற்றை நன்கு உபயோகித்துக்கொள்ளவும் முடியும், அதாவது அனைவரின் நலனிற்கும் உகந்த வகையில்.  எனது செயல்முறை என்பது என்னை நானே  வெகுகாலமாக தொடர்ந்து அவதானித்ததின் பலன்களை அடிப்படையாகக் கொண்டது. தெளிவான புரிதல் எனக்கு எப்போதுமே நம்பிக்கை அளித்திருக்கிறது, நயத்தக்க அனைத்துப் பண்புகளும் என்னை வென்றுள்ளன, மகிழ்ச்சியில் திளைக்கும் நேரங்களிலெல்லாம் விவேகியாக இருந்துள்ளேன். சந்தோஷம் உபத்திரவம் தரும், சுதந்திரம் பலவீனப்படுத்தும், மனிதாபிமானமோ, எவர்மீது அது காட்டப்படுகிறதோ அவரை பாழ்படுத்திவிடும் என்றேல்லாம்  மனிதர்கள் கூறுகிறபோது,  உண்மையிலேயே நல்லெண்ணத்துடன்  அவற்றைத் தெரிவித்திருந்ததாலும் அவற்றை நான் சரியாக காதில் வாங்குவதில்லை. அவர்கள் கூற்றில் உண்மை இருக்கலாம், ஆனால் அது, இதுதான் உலகம் என்கிற நிலையில், அடுத்துவரும் வருடங்களில் ஒருவன், மிதமிஞ்சிய அளவில் உண்ணப்போகிறான் என பயந்து, தற்போது பட்டினியால் வாடும்  அம்மனிதனுக்கு  உணவிட மறுக்கும் செயல். பயனற்ற அடிமைத்தனங்களை முடிந்தவரை குறைத்துக்கொண்டு, தேவையற்ற துரதிர்ஷ்டங்களைத் தவிர்க்கமுடிந்தாலும்     அசலான கேடுகளான மரணம், முதுமை, தீராத நோய்கள், பரஸ்பர நலனில் அக்கறைகொள்ளாத அன்பு, துரோகத்திற்குரிய நட்பு, நமது திட்டங்களை விட பரந்துபட்ட மற்றும் நமது கனவுகளை விட மந்தமான ஒரு சராசரி வாழ்க்கை என்ற பெயரில்; சுருங்கக்கூறின் இயற்கையின் தெய்வீகக் கூறுகள் விளைவிக்கும் அனைத்து இடர்பாடுகளும், மனிதனின் தீரமிக்க நற்பண்புகளை விடாமல் தம் பிடியில் வைத்திருக்க நீண்ட வரிசையில்  காத்திருக்கின்றன.

எனக்கு சட்டங்களில் நம்பிக்கை இல்லை, ஒப்புக்கொள்கிறேன். அவை மிகவும் கடுமையாக இருக்குமெனில் நாம் மதிப்பதில்லை, அதாவது சில  நியாயமான காரணத்தை முன்னிட்டு. அவ்வாறே மிகவும் சிக்கலாக இருப்பின்  நைந்திருக்கும் சட்டமென்கிற இழுவைவலையின் ஓட்டைகளைப் பயன்படுத்தி சாதுர்யத்துடன் தப்பிக்க நமது மானுடமும் அறிந்திருக்கிறது. புராதன விதிமுறைகளிடத்தில் நாம் கொண்டிருக்கும் அபிமானத்திற்கும் மனிதர் இதயத்தில் குடிகொண்டுள்ள ஆழமான பரிவுக்கும் தொடர்புள்ளது. அதேவேளை இதுபோன்றவை, நீதிபதிகளின் செயலின்மைக்கு உந்துசக்தியாக அன்றி தலையணையாக மாறவும்  வாய்ப்புண்டு. சமூகத்தின் நடமுறையோடு இணக்கமற்ற காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள், தம்மைத் திருத்திக்கொள்ள கடும்பிரயத்தனம் செய்தன, அப்படித் திருத்திக்கொள்ள முயன்றவைகளில் உந்துசக்திக்குரியவையும் இடம்பெற்றன.   நமது தண்டனைச் சட்டங்களில் பெரும்பாலானவை, நல்லவேளை  அதிர்ஷ்டவசமாக, குற்றவாளிகளில் ஒரு சிறிய பகுதியினரை மட்டுமே  தொடுகின்றன.  மிகக் கணிசமாகவும், இதுதான் என தீர்மானிக்கமுடியாதவகையிலும்  பல பிரச்சனைகள் நம் சமூகத்தில் உள்ளன,  அவற்றுக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்வதற்கு நெகிழ்வுத்தன்மைகள் நமது குடிமுறை சட்டங்களுக்கு அவசியம், ஆனால் அதற்கான வாய்ப்புகள்  ஒருபோதும் இல்லை. நம்முடைய பழக்கவழக்கங்களில் ஏற்படும்  மாற்றத்தின் வேகத்துடன் ஒப்பிடுகிறபோது, சட்டங்கள் பின்தங்கியே உள்ளன. கால அளவில் சட்டங்கள் நம்முடைய நடைமுறை பண்பாட்டுடன் இசைந்து செல்வதில் ஏற்படும் தாமதம் ஆபத்தானது, அதே வேளை நடைமுறை பண்பாட்டை சட்டங்கள் முந்த நினைப்பது அதைவிட ஆபத்தானது. ஆயினும்கூட, இந்த அபாயகரமான கண்டுபிடிப்புகள் அல்லது காலாவதியான நடைமுறைகளிலிருந்து, மருத்துவத்தைப் போலவே, சில பயனுள்ள சூத்திரங்கள் இங்கும் அங்கும் அவ்வப்போது வெளிப்படவே செய்கின்றன. கிரேக்க தத்துவவாதிகள் மனிதர் இயல்பை ஓரளவிற்கு கூடுதலாக விளங்கிக்கொள்ள நமக்கு போதித்தனர்; நம்முடைய சிறந்த சட்டவல்லுனர்களும், சமூகநடைமுறைக்கு இசைவான திசையில் சில தலைமுறகளாக  பணியாற்றி வருகின்றனர். இச்சீர்திருத்தங்களில் ஒரு பகுதியை நடைமுறைக்கு கொண்டுவந்ததில் எனக்கும் பங்கிருக்கிறது, இன்றும் நீடித்திருப்பவை அவை மட்டுமே.  அடிக்கடி மீறப்படும் எந்தவொரு சட்டமும் மோசமானது: வெறுப்புக்கு ஆளாகும் முட்டாள்தனமான ஒரு சட்டத்தின் நிலமை பிற நியாயமான சட்டங்களுக்கும் பரவக்கூடுமென அஞ்சி  அதனைத் திரும்பப் பெறுவதோ அல்லது பதிலாக வேறொன்றைக் கொண்டுவருவதோ, சட்டத்திற்குப் பொறுபேற்கிற மனிதர்களின் கடமை.  தேவையற்ற சட்டங்களை கவனமாகத் தவிர்ப்பது எனது நோக்கம்,  அதாவது விவேகத்துடன் தீர்மானித்த, எண்ணிக்கையில் குறைந்த வலிமையான சட்டங்கள்.  பிறப்பித்திருந்த பழைய ஆணைகள் அனைத்தையும் மனிதகுலத்தின் நலனைக் கருத்தில்கொண்டு மறு பரிசீலனை செய்யவேண்டிய தருணம் வந்திருப்பதாக நான் உணர்ந்தேன்.

ஸ்பெயினில், தாரகோனாவுக்கு(Taragone)  அருகில், ஒரு நாள் நான் பாதியில் கைவிடப்பட்ட சுரங்கப் பணியை தனியாகப் பார்க்கச் சென்றிருந்தபோது, ​​இந்த நிலத்தடிப் பகுதியில் ஏற்கனவே நீண்ட ஆயுளைக் கழித்திருந்த ஒர் அடிமை, கத்யுடன் என்மீது  பாய்ந்தான். அக்கொலைவெறி பாய்ச்சலில் நியாயமும் இருந்தது, தனது நாற்பத்து மூன்று வருட அடிமைவாழ்க்கைக்கு பேரரசரை வஞ்சம் தீர்த்துக்கொள்வது அவன் நோக்கம்.  அவனை எளிதாகக் கையாண்டு,  நிராயுதபாணியாக்கி, என்னுடைய மருத்துவரிடம் ஒப்படைத்தேன், அவனது கோபமும் தணிந்தது, பழைய நிலைமைக்குத் திரும்பினான்,  அவன்  உணர்வில் பிறமனிதர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவனில்லை என்பது ஒருபுறமிருக்க, விசுவாசத்தில் பெரும்பாலான மனிதர்களினும் பார்க்க உண்மையாளனாக இருந்தான். என்னைத் தாக்கமுயன்றதற்கு, பதிலுக்கு காட்டுமிராண்டித்தனமாகச் சட்டத்தை  பிரயோகித்திருந்தால், அதேஇடத்தில் அவன் கொல்லபட்டிருப்பான், அதனைத் தவிர்த்தால்  எனக்குப் மிகவிம் பயனுள்ள ஒரு ஊழியனாக மாறினான். பெரும்பாலான மனிதர்கள் இவனை ஒத்தவர்கள், அதிகம் கீழ்ப்படிந்து பழகியவர்கள். அவர்களுடைய நீண்ட   உணர்ச்சியற்ற மரக்கட்டை வாழ்க்கையில் அவ்வப்போது   தடாலடியாக  கிளர்ச்சிகள் குறுக்கிடும், ஆனால் அவற்றினால் எவ்விதப் பயனும் அவர்களுக்கு கிடையாது. அறிவு பூர்வமாக புரிந்து கொள்ளப்பட்ட சுதந்திரத்திலிருந்து கூடுதல் பலனைப் பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை  தெரிந்துகொள்ள நானும் விரும்பினேன்,  மேலும் இதுபோன்றதொரு சோதனை முயற்சி ஏன் பல முடிமன்னர்களை ஈர்ப்பதில்லை என்பது குறித்தும் எனக்கு வியப்பு. கணிமச் சுரங்கங்களில் உழைக்கவென்று  தண்டிக்கபட்ட  இக்காண்டுமிராண்டி என்னைப் பொறுத்தவரை நம்மிடம் பணிசெய்யும் மொத்த காட்டுமிராண்டி அடிமைகளுக்கும்  நல்ல உதாரணம்.  இம்மனிதனை நான் நடத்தியதுபோல ஒட்டுமொத்த பிற அடிமைகளையும் நடத்துவது இயலக்கூடியதுதான்,  அன்பின் வலிமையால் இன்னலிழைக்காத மனிதர்களாக அவர்களை   மாற்றமுடியும், எப்போதெனில் அவர்களிடமிருந்து ஆயுதத்தைப் பறித்த கரம், தம்மைக் காக்குங் கரம் என்கிற உண்மையை அவர்கள் உணரும் பட்சத்தில். இவ்வுலகின் உதார குணமின்மையே பெரும்பான்மையான மக்களின் அழிவுக்குக் இன்றுவரை காரணமாக இருந்துவருகிறது.  ஸ்பார்த்தா (Sparte), எலட்மக்கள்(Hilotes)  ஜீவித்திற்கு கருணைகாட்டியிருப்பின் அவளும் நீண்டகாலம் உயிர்வாழ்ந்திருக்க முடியும். அட்லஸ்  ஆகாயத்தின் சுமையை தாங்குவதற்கு தன்னால் ஆகாதென ஒரு நாள் மறுத்தால் பூமி நடுங்குகிறது. கணிமச் சுரங்கத்தில் கண்டதுபோன்ற  வெளியிலிருக்கிற காட்டுமிராண்டிகளிடமும் உள்ளே இருக்கிற அடிமைகளிடமும் எந்த உலகை அவர்கள் தூரநின்று மதிக்கவும், அண்டிநின்று ஊழியம் செய்யவும் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோமோ,  அந்த உலகின் மீது கோபத்துடன் பாய்கிறார்கள், அதனால் எவ்விதபலனும் அவர்களுக்கில்லை என்பதைத் தெரிந்தே செகிறார்கள், அவ்வாறான தருணங்களை முடிந்தவரை தள்ளிப்போடவும், இயலுமெனில் தவிர்க்கவும் விரும்பினேன். மிகவும் தாழ்த்தப்பட்ட உயிரினங்கள், நகரங்களின் கழிவுகளைச் சுத்தம் செய்கிற அடிமைகள், நாட்டின் எல்லைகளில் பசியுடன் திரியும் காட்டுமிராண்டிகள் என ஒருவர் தவறாது அனைவரும் வலிமைபெறும் உரோமை ஆர்வத்துடன் காண வேண்டும் என்று விரும்பினேன்.

உலகின் அனைத்து தத்துவங்களும் அடிமைத்தனத்தை ஒழிக்க முடியும் என்பதை  நான்  சந்தேகிக்கிறேன்.  தத்துவங்கள் அதிகபட்சமாக செய்யக்கூடியது ஒன்றுதான், அது அடிமைத்தனம் என்கிற பெயரை மாற்றுவது. நமது  அடிமை புத்தியினும் பார்க்க மோசமான அடிமை வடிவங்களை என்னால் கற்பனை செய்துபார்க்க முடியும். கற்பனை வடிவம் கபடதாரியென்பதால் மனிதர்களை முட்டாள்களாகவும், கிடைப்பதில் திருப்தி அடையும் எந்திரங்களாகவும்  உருமாற்றுவதில் வெற்றிகாண்பது முதலாவது நோக்கம், விளைவாக அவர்கள் கைக்கட்டி சேவகம் செய்கிறபோதும், தாம் சுதந்திரமாக இருக்கிறோமென நினைப்பார்கள், இது சரிவராது என்கிறபோது, இரண்டாவதாக  செய்யக்கூடியது இம்மனிதர்களிடமிருந்து ஓய்வையும், மனிதர்க்குரிய இன்பங்களையும் விலக்கி வைத்து பதிலாக   காட்டுமிராண்டி இனங்களின்  போர்க்குணத்திற்கு சரிசமமாக, செய்யும் வேலையில் வெறித்தனமான மோகத்தை உண்டாக்குவது. மனதின் அல்லது மனித கற்பனையின் இந்த அடிமைத்தனத்திற்கு மாறாக  இன்றைக்கும் நான், நமது நடைமுறை அடிமைத்தனத்தை விரும்புகிறேன். எது எப்படியிருந்தாலும், ஒரு மனிதனை இன்னொரு மனிதனின் தயவில் நிறுத்தும் கொடூரநிலையை,  சட்டத்தால் கட்டுப்படுத்தப்படவேண்டும். ஓர் அடிமை தனக்கென்று  உருவாக்கிய குடும்பமென்று ஒன்றிருக்கிறபோது, அக்குடும்பத்தோடு அவனுக்குள்ள பந்தத்தைக் கணக்கிற்கொள்ளாமல் விற்பனைக்குரிய அநாமதேயப்பண்டமாக அவனைப் பார்ப்பதையும்;   வெறுக்கத்தக்க அப்பணடத்தின் சாட்சியத்தை நீதியரசர் ஒருவர் பதிவுசெய்கிறபோது சத்தியப்பிரமாணத்தின் கீழ் அதைச் செய்வதில்லை, சித்திரவதைக்கு உட்படுத்திச் செய்தார், அவ்வாறு செய்வதையும்; அவமானகரமான மற்றும் ஆபத்தான பணிகளைச் செய்யச்சொல்லி அம்மனிதனை வற்புறுத்துவதையும்; விபச்சார இலங்களுக்கும் கிளாடியேட்டர் பள்ளிகளுக்கும் அவன் விற்பனைச்  செய்யப்படுவதையும் தடைசெய்தேன். அடிமைத்தனத்தில் இன்பம் காண்கிற மனிதன், அதனைச் சுயமாகச் செய்யட்டும்: அவ்வாறு செய்கிறபோது, தொழிலை நன்றாகவும் செய்வான். விவசாயப் பண்ணைகளில் மேலாளர்கள் தங்கள் பலத்தைப் பிரயோகித்து அடிமைகளை தகாதமுறையில் நடத்துகிறார்கள் என்பது தெரியவர, அங்கும் முடிந்தவரை அடிமைளிடத்தில் சுதந்திர காலனிமக்களை நியமனம் செய்திருக்கிறேன்.  நம்மிடம் சொல்லப்பட்ட சம்பவங்களில் போசனப் பிரியர்கள் தங்கள் இல்லப்பணியாளர்களை ஒருவகை விலாங்குமீன்களுக்கு இரையாக்கும் கதைகள் ஏராளம். ஆனால்  ஒவ்வொரு நாளும் எது நடந்தால் நமக்கென்ன என்றிருக்கும் மனிதர்கள் கண்முன்னே கல்மனம் படைத்தவர்கள் சர்வ சாதாரணமாக இழைக்கும் கொடிய குற்றங்களுடன் ஒப்பிடுகிறபொழுது; ஊர்வாய்க்கென நடக்கும்  எளிதில் தண்டிக்கக்கூடிய குற்றங்கள் மிகவு குறைவு. தனது வயதான  அடிமைகளைத் துன்புறுத்திய  ஒரு பணக்கார மேட்டுக்குடி பத்ரீசியன் பெண்மணியை  நான் ரோமிலிருந்து வெளியேற்றியபோது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், அதேவேளை மூப்புகாரணமாக இயலாமையில் தள்ளப்பட்ட பெற்றோரை புறக்கணிப்பது இதே மக்களுக்கு  கூடுதல் அதிர்ச்சிக்குரியது.  எனக்கு இரண்டுமே மனிதாபிமானமற்ற செயல்களே, இவற்றுக்கிடையில் பேதங்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

தொடரும்…..

Series Navigation<< அதிரியன் நினைவுகள் -15அதிரியன் நினைவுகள் -17 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.