வாசம் 

கரண்ட் கட்டான அந்த நள்ளிரவில் ரோஸிக்கு நான் கதை சொல்லிக்கொண்டிருந்தேன். கதை கதையாய் சொல்லிக்கொண்டிருந்தேன். நான் சொல்லிய கதைகளின் நதிமூலம் ரிஷிமூலம் எல்லாம் ரோஸிக்கு புரிந்திருக்க நியாயம் இல்லை. அவள் பிறந்து இன்றுடன் வெறும் ஐந்து மாதங்கள் தான் ஆகின்றன. எப்படி துல்லியமாக சொல்கிறேன் என்றால், இன்று காலையில் அரக்க பறக்க ஆபீஸுக்கு நான் கிளம்பி கொண்டிருந்த வேளையில் தான், என் வீட்டம்மா, “ஏங்க இன்னைக்கு பாப்பாவோட அஞ்சாவது பிறந்த நாள், நியாபகம் இருக்கா”, கேட்டு விட்டு பதிலுக்குக் கூட காத்திராமல் பிரிட்ஜ்ல் மிச்சமிருந்த கத்திரிக்காய், பாகற்காய், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய்  எல்லாவற்றிலும் தலா ஐந்து ஐந்து என்று ஏதோ குலசாமிக்கு படையல் போடுவது போல ரோஸிக்கு முன்னே பரப்பி வைத்திருந்தாள்.  அதில் ஒரு தட்டத்தில் ஐந்து என்று சீனி கொண்டு எழுதி வேறு அவளின் கக்கத்தின் அருகே  வைத்திருந்தாள். “பாருங்க பாருங்க அம்மாவ பாருங்க” என்று செல்பி எடுத்துக்கொண்டும், ரோஸியைச் சிரிக்கச் சொல்லியும் பாடாய் படுத்தி கொண்டிருந்தாள். ரோஸி எதை பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு கிடந்தாள். 

ஆபீஸ்க்கு கிளம்பும் அவசரத்தில் நான் சாக்ஸ் மாற்றி எடுத்த கடுப்பில், “இந்த வீட்ல ஒன்னு வச்சா வச்ச எடுத்த இடத்தில இருக்காது” என்று சத்தமேயில்லாமல் சத்தம் போட்டது பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவள் ரோஸியிடம் விளையாடிக் கொண்டிருந்தாள். ஏதோ எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது போல்.

வேறு சாக்ஸை எடுத்துவர சொன்னால் சண்டை வரும் என்ற பதற்றத்தில் ஷூ அணிந்த பின்னர் இந்த சாக்ஸ் சமாச்சாரம் வெளியே யாருக்கும் தெரியப்போவதில்லை என்று சுய சமாதானம் செய்து  கொண்டு ஆபீஸுக்கு கிளம்பியது நினைவில் இருக்கிறது. 

வெளியில் மழை பெய்ய ஆரம்பித்தது. நேரம் பிடிக்கப் பிடிக்க அதன் முனகல் கூடிக் கொண்டு போனது. மழைக்கென்று தனியான ஒரு குரல் உண்டு. அந்த ரசமான குரலில் “உவ்… உவ்” வென்று சத்தம் போட்டது. சில நேரங்களில் “சோ…சோ” வென. காற்றுக்கு திறந்து வைத்திருந்த ஜன்னல்கள் வழியாக வீட்டிற்குள் மின்னல் விழுந்து ஓடி கூடத்தை நிரப்பியது. இடி இடிப்பதற்கு ஏற்றாற் போல மரங்கள் போட்ட ஆட்டம் அந்த கும்மிருட்டில் தெளிவாக தெரிந்தது. வெளியில் நிறுத்தி வைத்திருந்த என்னுடைய பைக் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் புதைவது போல மழை தண்ணீர் ஏறிக்கொண்டிருந்தது வீதியில். அதன் சைடு ஸ்டாண்ட் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. 

கரண்ட் சட்டெனெ கட் ஆனது. மழையின் தீவிரம் அறிந்த யாரோ ஒரு அதிகாரியின் கட்டளையாக இருக்க வேண்டும். என் வீட்டு திண்ணையில் ஒரு தெருநாய் வந்து ஒண்டியது . மழையில் நன்றாக நனைந்திருந்த அது உடலை சிலுப்பியபடி சுற்றி சுற்றி வந்தது. அடிக்கும் காற்றும் மழையும் மனதிற்கு இதமாக இருந்தது. ஜன்னலோரம் நின்று கொண்டு மழையை ரசித்துக்கொண்டிருந்தேன். ஒரு டீ சாப்பிட வேண்டும் போல இருந்தது. மரியம் இல்லாதது அப்போது தான் என் உணர்வில் வந்தது. மண்ணில் விழும் மழை துளியை போல மரியத்தின் நினைவு மனதுக்குள் விழுந்து கொண்டிருந்தது.  அவள் இருந்திருந்தால் அவளிடம் கேட்கலாம். முதலில் மறுப்பாள் . திட்டுவாள். ஆனால் போட்டு தருவாள். பாசமானவள். பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு போயிருக்கிறாள். நானே கூட டீ போடுவேன். நன்றாக இருக்காது. அதுவுமில்லாமல் அலுப்பாக இருந்ததால் டீ குடிக்கும் எண்ணத்தை தள்ளி போட்டேன். 

எவ்வளவு நேரம் மழை பெய்தது என்று எனக்கு தெரியாது, ஆனால் நான் ஒரு அரைமணி நேரம் அதாவது மழை விடும் வரையில் அங்கேயே தான் நின்று கொண்டிருந்தேன். ஃபோனை பார்த்தேன். மணி ஒன்று இருபது என்று காட்டியது. கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. தூக்கக் கலக்கம்! கசக்கி கொண்டே மெத்தையில் சாய்ந்தேன். எரவானத்தில் பேன் தொங்கிக் கொண்டிருந்தது. சுழலாமல் இருக்கும் அதை பார்க்கவே பாவமாக இருந்தது. படுத்த கொஞ்ச நேரத்தில் அயர்ந்து தூங்கி விட்டது திடீரென்று பேயிடியாக இடிக்கும் ஓசையும், கண்களை பறிக்கும் மின்னல் ஒளி என் மீது படர்ந்து பரவிய அசட்டையிலிருந்து உணர்ந்து  பதறி எழுந்து உட்கார்ந்த போது தான் தெரிந்தது. இடியின் இரைச்சல் தூக்கி வாரி போட்டது. நெஞ்சை அடைப்பது போன்று திம்  திம்மன்றிருந்தது. வானமே இடிந்து விழுவது போல பெருந்சத்தம். 

திம் ….தடாம் ….துஷ்…தும்….

விசுக் கென்று ஒரு மின்னல் என் மீது தாவி ஓடுவது போல வெளிச்சம் உள்ளில் வந்தது. ஒருக்களித்திருந்த ஜன்னலை எழுந்து போய் அடைக்க நெருங்கிய போது என் உடல் வெப்பம் கூடுவது போல பட்டது. அந்த குளிர்ந்த இரவில்  ஜன்னல் மட்டும் வெப்பமாக இருந்தது எனக்கு ஏன்னென்று புரியவில்லை. இன்னும் சமீபம் போன போது ஒரு முடை நாற்றம் வீசுவதை உணர்ந்தேன். கூடவே ஒரு மனித விசும்பல். உற்று முகர்ந்தேன்! அது ஒரு பெண்ணின் விசும்பல்!

“யாரும்மா அது”, கதவை திறந்தேன். 

அங்கே யாரும் இல்லை. அந்த கெட்டியான இருளில் எவரின் இருப்பும் எனக்குப் புலப்படவில்லை. ஆனால் ஒரு பெண்ணின் அழுகை மட்டும் எனக்கு கேட்டது   கூடவே  அந்த சகிக்க முடியாத முடை நாற்றமும். அந்த கேவலில் தோய்ந்திருந்த துயரம் என்னை இம்சித்தது. 

நான் மூக்கைப் பொத்திக்கொண்டே வீதிக்கு வந்தேன். மழை விட்டிருந்ததில் விசும்பல் சத்தம் தெளிவாக கேட்டது. நான் சுற்றியும் முற்றியும் துழாவினேன். அவள் இல்லை. கண்களை சுருக்கி வலது கையை குவித்து முயற்சித்து பார்த்தேன். அவள் அகப்படவில்லை. அவளின் குரல் எங்கிருந்து வருகிறது என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. நான் வீதியை விட்டு எதிரில் உள்ள திடலில் தேடினேன். அங்கும் அவள் கிடைக்கவில்லை. அவளின் இருப்பை தன் விசும்பலில் உணர்த்தினாள். அவ்வளவு தான். ஆனால் முன்பை விட சன்னமாக!

வீதியைப் பார்த்தேன். அது எப்போதும் போலவே இயல்பாக இருந்தது. அக்கம் பக்கத்தாருக்கு அவளின் அழுகை கேட்கவில்லை போலும் அனைவரும் தூங்குகிறார்கள். எனக்கு தான்  ராக்கூத்து என்று எழுதியிருக்கும் போல.

நான் வீட்டிற்கு வந்து கதவை அடைத்தேன். ஜன்னலை சாத்தினேன். மணி மூன்று. இன்னும் த்ரீ ஹவர்ஸ் தூங்கலாம் என்ற நிம்மதி பெருமூச்சு விட்ட படி தூங்க போனேன். தூங்கியும் போனேன். ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். என் படுக்கைக்கு நேரெதிருந்த செயரில் யாரோ ஒருத்தி உட்கார்ந்திருந்தாள். அந்த பெண் கேவிக் கேவி அழுது கொண்டிருந்தாள். ஆச்சர்யம். அதே குரல். நான் முன்பு கேட்ட அதே குரல். அவள் வேக வேகமாகக் கேவினாள். அவளின் கேவல் ஏன் அழுகிறேன் என்று என்னை கேள் என்பது போல இருந்தது. 

என் படுக்கை அறையில் யாரென்று தெரியாத ஒரு பெண் அர்த்த ராத்திரியில் அழுது கொண்டிருக்கிறாள். எனக்கு பயம் தொற்றிக் கொண்டது. அவளை அழைக்க வாயெடுத்தேன். நா வறண்டு போனது. நான் எழுப்பிய சொற்கள் என் காதுகளுக்கே எட்டவில்லை. வாயை மட்டும் அசைந்தது. 

ஒருவேளை ஏதும் கெட்ட கனவாக இருக்குமோ என்ற என் எண்ணத்தை களைத்து போட்டது அந்த முடை நாற்றம். குப்பென்று வீச்சம். நான் உமட்டிக் கொண்டேன். திடீரென்று என் அறையில் குளிர்ச்சி கூடியிருந்தது. 

தைரியத்தை எல்லாம் திரட்டி கேட்டேன். “ஏய். யாரது. நீ எப்படி  என் பெட்ரூமில். என்ன வேணும்”, ஒருவழியாக கேட்டு முடித்தேன். என் குரல் எனக்கே வேறு மாதிரி மெல்லியதாய் ஒலித்தது.  சண்டையிடும் சமயங்களில், “ஒங்க கட்ட குரல்ல கத்திப் பயமுறுத்தாதீங்க” என்று மரியம் என் குரல்வளையைக் கேலி பேசுவது எனக்கு நினைவில் வந்தது.  

அவள் விடாமல் செருமிச் செருமி அழுது கொண்டேயிருந்தாள்.

சட்டனே அழுகையை நிறுத்தி. என்னை நோக்கினாள். எனக்கு சொரேரென்று இருந்தது. அடிவயிறு தானாக ஒருமுறை முதுகுப்பக்கத்தை தொட்டுவிட்டு மீண்டது.  

அழத் தொடங்கினாள். இந்த முறை பெருங்குரலெடுத்து “ஐயோ அம்மா எனக்கு யாருமே இல்லையே, அம்மா…. தா….யேய் ,,,,” கத்தினாள். பிறகு  “ஆஅ…ஆஅ…ஆஅ…” வென்று சிரித்து அடங்கினாள்.  எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.  

“ஏய் யாருடீ நீயி, எழுந்திச்சி வெளிய போடி” என்று கத்தினேன். நான் பொறுமை இழந்திருந்தேன். ஆனாலும் எனக்கு பயமாக இருந்தது. 

சில நிமிடங்கள் கொடுமையான மௌனம் என் அறையில் நிலவியது. நெடிய மௌனத்திற்கு பிறகு அவள் பேசலானாள். “எங்க வீட்ல என்னை வெளியே போகச் சொல்லிட்டாங்க. எங்க போறதுன்னு தெரியாமல் கால் போன போக்கில் போயிக்கொண்டிருந்தேன்.  வழியில் மழையில் தெப்பலாக நனைந்துவிட்டேன். சாப்பிட்டு ரெண்டு மூணு நாளாகிவிட்டது. பசி தாங்க முடியல. மயக்கமும் சோர்வுமாக இருக்கு. தலை சுத்துச்சு. மேற்கொண்டு நடக்க விடவில்லை. இங்க வரும் பொது மழை சரியா பிடிச்சிக்க ஆரம்பித்தது. உங்க வீட்டில் ஒதுங்கினேன். நீங்கள் என்னை தேடி வெளியே வந்த பொது, குளிர் பொறுக்காமல் உள்ளே புகுந்துவிட்டேன்”, என்று நடுங்கி கொண்டே விட்டு விட்டு சொல்லி முடித்தாள் . 

அவளை கூர்ந்து பார்த்தேன். ஒடிசலாக இருந்தாள். கன்னங்கள் ஒட்டி போயிருந்தன. உதடுகள் எதையோ முணுமுணுப்பது போல துடித்து கொண்டேயிருந்தது. 

“எதாவது காசு வேணுமா. ஏதாவது சாப்பிடுறயா”, என்றேன்.அவள் மௌனமாகவே இருந்தாள். 

ரெண்டு நாளாக சாப்பிடவில்லை என்று அவள் சொல்லிய பிறகும் அப்படி கேட்டது எனக்கே வெக்கமாக இருந்தது. இரு வாரேன் என்று நான் மெல்ல எழுந்து கிச்சனில் மீதம் இருந்த மூன்று இட்டலிகளை ஒரு தட்டத்தில் இட்டு கொண்டு வந்தேன். 

சேர் காலியாக இருந்தது. அவள் இப்போது என் படுக்கையில் கிடந்தாள்.   மென்மையாக மூச்சு விட்டபடி  தூங்கி கொண்டிருந்தாள். அவள் மூச்சில் அறையின் குளிர்ச்சி மாறி வெப்பம் ஏறியது. நான் அவளை எழுப்பப் போனேன். 

“காத்து இல்லாம மகாராணிக்கு ஒரு நிமிஷம் பொறுக்க முடியாதோ, முளைக்கும் போதே கருத்து, இந்தாங்க ஒங்க புள்ளைய நீங்களே தூங்க வைங்க”, ஏறக்குறைய பிள்ளையை என்னிடம் வீசி விட்டு போனாள் மரியம்.  அவள் போய் கொஞ்ச நேரத்தில் ரூமிலிருந்து மெல்லிய குறட்டை சத்தம் வந்தது. குறட்டை விடுவதை பற்றி சொன்னால் ஒத்து கொள்ளமாட்டாள் அதற்கு வேறு சம்பந்தமே இல்லாமல் சண்டை பிடிப்பாள்.  எதற்கு வம்பு  என்று ரோஸியிடம் சொன்னேன். விளங்கிக் கொண்டாள் போல ‘கக்… கக்…’ என்றாள். சிரிப்பு தான்! 

அப்படி தான் இந்த கதையை ரோஸிக்கு சொல்ல ஆரம்பித்தேன். ஆனால் திரண்டு வந்த கற்பனையை அப்படியே ரோஸியிடம் எப்படி சொல்வது, அதனால் கொஞ்சம் மாற்றிச் சொன்னேன். உண்மையில் கதையின் ஓட்டத்தில் எனக்கு தோன்றியது என்னவெனில்,  

“ரெண்டு நாளாக சாப்பிடவில்லை என்று அவள் சொல்லிய பிறகும் அப்படி கேட்டது எனக்கே வெக்கமாக இருந்தது. இரு வாரேன் என்று நான் மெல்ல எழுந்து கிட்சேன்க்கு சென்று மீதம் இருந்த மூன்று இட்டலிகளை ஒரு தட்டத்தில் இட்டு கொண்டு வந்தேன். சேயர் காலியாக இருந்தது. அவள் இப்போது என் படுக்கையில் கிடந்தாள்.

அவள் உட்கார்ந்திருந்த சேயரில் ப்ரிஷ்டத்தின் தடம் படிந்திருந்தது. கூந்தலில் இருந்து வழிந்த நீர் திவலைகள் சேயரின் பின்னால் கோலப் புள்ளிகள் போல சிந்தியிருந்தன. அவளின் சின்னச் சின்ன பாதச் சுவடுகள் என் படுக்கை வரையில் நீண்டிருந்தன. அவளின் சுவாசம் என் அறையில் நிறைந்திருந்தது. சுவாசத்திற்கு ஏற்றாற் போல அவளது புடைத்த மென்மார்புகள் ஏறி இறங்கி கொண்டிருந்தன. ஒரு பக்கமாக படுத்திருந்ததாலோ என்னவோ அவளது இடுப்பு குறுகியிருந்தது. அவளது பாத ரேகைகள் ஆழமான வெட்டுக்கள் போல தடித்திருந்தன. கைகளை கவனித்தேன். அதில் விரல்கள் மெலிந்து நீண்டு அழகாக இருந்தன. அவள் எக்கச்சக்க அழகுடன் இருந்தாள். ஆனால் அந்த வாடை மட்டும் சகிக்கமுடியாதபடி வீசியது. 

நான் அவளை உற்று பார்த்தேன். மழையில் நனைந்திருந்த அவள் ஆடை உடலோடு ஒட்டி கொண்டிருந்தது. உடல் பாகங்கள் வெள்ளெனே வெளியே  தெரிந்தன. உள்ளுடுப்புகள் அணிந்தாளில்லை போல. அவள் மாநிறத்தில் இருந்தாள். கச்சிதமான அளவில் அவளின் மார்புகள் என்னை சொக்கி இழுத்தன. அவளின் வனப்பு என்னை சோதித்து பார்த்தது. 

நான் அவளை தொட போனேன். அள்ளி எடுத்து ஆலிங்கனம் கொள்ள பேராசையில்… பொங்கும் காமத்துடன்!

சட்டென நினைவு திரும்பியது போல தலையை அவசரமாக உலுப்பி நான் ரோஸியை பார்த்தேன். அவளுக்குச் சொன்ன கதைக்கே திரும்பினேன். “……..நான் அவளை எழுப்ப போனேன். சட்டென அவள் மறைந்து போனாள்”. “ஆஅ ….ஆஅ…” என்ற சிரிப்பு சத்தம் மட்டும் கேட்டது. முடை நாற்றம் வெகுவாக வீசியது.   

நான் சொல்லிக்கொண்டிருந்த கதையும் என் நடிப்பும் பாவமும் ரோஸிக்கு பிடித்திருந்ததா இல்லையா என்பது புரியவில்லை. அவள் என்னை என்னவோ போல வெறித்து பார்த்தாள் . அப்படியே அவள் அம்மாவின் சாயல். ரோஸி மரியம்  மாதிரி இருப்பதாக மரியின் வீட்டாட்கள் சொல்வதில் பிசகு ஏதும் இல்லை என்று எண்ணி கொண்டேன். 

“சரி சரி பாப்பாவுக்கு பிடிக்கலைன்னா வேறு கதையை அப்பா சொல்லட்டுமா”, அவளிடம் அனுமதி கேட்டேன். 

ரோஸி வெம்புவது போல முகத்தை சுளித்தாள். வாய மூடுறீயா இல்ல நான் அழுவட்டுமா என்கின்ற தொனி! எனக்கு கதை சொல்லும் மனநிலை! 

ஒரு ஊர்ல ஒரு கொசு இருந்துச்சாம். அது ஒரு குட்டி போட்டுச்சாம். பிறகு அது ஒரு குட்டி போட்டுச்சாம். இப்படி குட்டி குட்டியா போட்டு போட்டு, அந்த ஊர் முழுக்க ஒரே கொசுவா ஆகிடுச்சாம். அந்த ஊர்ல ஒரு கிழவன் இருந்தானாம்.அவன் மட்டுமே அந்த ஊரில் இருந்தானாம். காலை நேரத்துல வெளியூருக்கு வேலைக்கு போய்ட்டு ராத்திரிக்கு தான் வீட்டுக்கு வருவானாம். களைச்சு போய் வரும் கிழவனாரை தூங்க விடாமல்  ஊர்ல இருந்த அத்தனை கொசுவும் அவனை போட்டு கடிச்சி வச்சிருமாம். நிதம் இதே இம்சையாகி போக கிழவன் ஒரு நாள் கொசுவர்த்தி கொளுத்தி வச்சிட்டு தூங்கி போனானாம். காலையில எழுந்து பாத்தாக்கா அவனை சுத்தி எல்லா கொசுவும் மூச்சு திணறி செத்து கிடந்துச்சாம். கிழவனுக்கு ஒரே சந்தோசம். இன்னைக்கு கொசுவர்த்தி இல்லாமையே நிம்மதியா தூங்கலாம் என்று நினைத்து கொண்டு வேலைக்கு போய்ட்டனாம், ராத்திரிக்கு தூங்கவிடாம ஒரே ஒரு கொசு மட்டும் தொல்லை பண்ணிருக்கு. என்னடான்னு பாத்தாக்கா, ராத்திரி ஏத்தி வச்ச கொசுவர்த்தில இது மட்டும் எப்படியோ தப்பிச்சது தெரியவந்துருக்கு. இரு ஒன்ன வசிக்கிறேன்ன்னு சொல்லி ராவுக்கு ஒரு கொசுவர்த்தி வாங்கி வந்தானாம். அதுக்குள்ள அந்த கொசு என்ன பண்ணிச்சாம், குட்டி குட்டியா வத வதையா பெத்து போட்டுருக்கு, இது தெரியாத கிழவன், ஒரு கொசுவுக்கு பாதி போதும்ன்னு கஞ்ச தனம் பண்ணிக்கிட்டு பாதியை மட்டும் கொழுத்தி வைக்க, ராத்திரி முச்சூடும் தூங்காம அவதி பட்டுருக்கான். மறுபடி மக்கியா நாளு முழு கொசுவர்த்தி கொளுத்தி வைச்சு எல்லா கொசுவவையும் கொன்னு போட்டிருக்கான். அதுல ஒன்னும் மறுபடி தப்பிச்சி ,போய் குட்டி குட்டியா பெத்து போட்டு, கிழவனை கடியோ கடின்னு கடிச்சு வைக்க , கிழவன் வர்த்தி ஏத்தி வைக்க, ஒன்னு தப்பிக்க….ன்னு இது நடந்துக்கிட்டே இருக்கிறத பாத்து நொந்து போன அந்த கிழவன் என்ன பண்ணிருக்கான், கொசுவர்த்திய மைய்ய அரைச்சி ஒரு சட்டியில் ஊத்தி, குடிச்சிட்டு அவன் செத்து போய்ட்டானாம். அதோட கத முடிஞ்சி போச்சாம்”,  என்று சொல்லி நானாக சிரித்து கொண்டிருந்தேன். 

கரண்ட் வந்து விட்டிருந்தது. பேன் மெல்லிய காற்றோடு சுழல ஆரம்பித்தது. 

“இதெல்லாம் ஒரு கத, தூ,” என்றபடி மரியம் வெளியே வந்தாள் . 

“நீ தூங்கிட்டன்னு நெனச்சேன். இன்னும் தூங்கலையா ….வழிந்தேன். பின்னர் சுதாரித்து கொண்டு, “ஏய் நான் புள்ளைக்கு என்னவோ சொல்லுறேன், நீ ஏன் அத கேக்குற” என்றேன். 

இப்படியே அந்த கதையில் கொசுவுக்கு பதிலாக நாய் பூனை, எலி, அது இதுன்னு யார் யாரையோ நடிக்க வைத்தேன். சில கதைகளில் கிழவனுக்கு பதில் கிழவி என்ற அளவில் திரைக்கதையில் மட்டும் மாற்றம் செய்து மீண்டும் மீண்டும் ஒரே கதையை பைத்தியக்காரன் போல சொல்லிக் கொண்டிருந்தேன். கிளைமேக்ஸ் நெருங்கும்  போது என்னையும் மீறி சிரிப்பு பொத்து கொண்டு வந்தது. வாய் விட்டு சத்தம் போட்டு சிரித்தேன். “ஆஅ…ஆஅ…” 

அதில் என்னையும் மீறி மழையில் நனைந்த அந்த பெண்ணின் சாயல் பொதிந்திருப்பதாக தோன்றியது. 

பொறுக்க முடியாத கோவத்துடனும். அடக்க முடியாத சிரிப்புடனும் மரி உள்ளேயிருந்து வந்தாள் . “ஒங்க அப்பனுக்கு பைத்தியம் பிடிச்சி போச்சு ரோஸி நீ வா நாம தூங்குவோம்,” என்று சொல்லி பிள்ளையைத் தூக்கி கொண்டு போனாள் .

ரோஸியின் பார்வையும் அவள் அம்மா சொல்வதை ஆமோதித்து போலவே இருந்தது. நான் சிரித்து கொண்டே தூங்கப் போனேன். கற்பனையில் தோன்றியவளின் நினைவாக இருந்தது. 

காற்றில் சட சடவென அடித்து கொண்ட ஜன்னல் என் தூக்கத்தை கலைத்தது. எழுந்து உட்கார்தேன். வெளியில் மழை பெய்து ஓய்ந்திருக்கும் போல. ஸ்லாப் வழியாக மழை துளிகள் சொட்டி கொட்டிருந்தது. செல்போனை உசுப்பினேன். மணி மூன்று. திரையில் ரோஸி  அழகாகச் சிரித்து கொண்டிருந்தாள்.  கொட்டாவி விட்டபடி நெட்டி சோம்பல் முறித்து ஜன்னலைச் சாத்த எழுந்து போனேன். வயிற்றை குமட்டுவது போல பிரட்டிக் கொண்டு வந்தது. கெட்ட வாடை! தாளமுடியாமல் ஜன்னலை சாத்திவிட்டு மெத்தையில் படுத்தேன். என் படுக்கைக்கு எதிரே இருந்த செயரில் மழையில் நனைந்த ஒரு பெண் மூக்கை உரிந்து உரிந்து விசும்பிக் கொண்டிருந்தாள்!  

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.