மூங்கில் காடு

 அனுமன் எரித்த பொன்இலங்கையின் அதிகாலை அது. கதிரவனின் முதல் கீற்று நிலத்தில் விழும் பொழுதில் முக்கூடல் மலைச்சரிவிலுள்ள அந்த  மூங்கில் காட்டின் மூங்கில்கள் பொன் நிறத்தில் பூத்திருந்தன. கதிரவனின் ஔிப்பொறிகளை கோர்த்ததைப் போன்று மூங்கில் காடு முழுவதும்  பொன்மலர் சரங்களாக மலர்ந்திருந்தன.

இலங்கைவாசிகள்  அனைவரும் மூங்கில் பூத்த  நிலத்தின் வசீகரத்தை அஞ்சினர். அழிவின் காலம் என்று சாமியாடிகள் சிற்றூர் விழாக்களில் அருள் வந்து கூறினார்கள். அது இலங்கை முழுவதும் பரவியதால் மக்கள் அந்த அதீதமான அழகையும்  அபசகுனம் என்று எண்ணினார். அடுத்த ஒருசில நாட்களிலேயே அனைத்தும் இயல்பாக மாறினாலும் இலங்கை எரிந்ததை கண்முன்னால் கண்ட ஒவ்வொருவர் மனங்களிலும் அது அனுதினமும் அணையாது எரிந்தது. அரசன் அரியணையில் இருக்கும் காலத்திலேயே நிகழ்ந்துவிட்ட ‘எரிப்பறந்தெடுத்தலால்’ அதிர்ந்திருந்தது இலங்கை. அதிகாலையில் திடுக்கிட்டு விழித்த பெண்கள் தங்களின் சிறுமக்களை அணைத்து கண்ணீர்விட்டனர். அப்பால் உறங்கும் துணைவர்களை நீர் நிறைந்த கண்களால் பார்த்து மனம் கொதித்தனர். இலங்கை எரிந்ததை வானரத்தின் சேட்டை என்று விளையாட்டாய் பேசிச்சிரிக்கிறார்கள். நாளை இலங்கைக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எண்ணிப்பார்க்காத மூடர்கள் என்று ஆத்திரம் கொண்டு அன்றாடத்தை பூசல்களால் நிறைத்துக் கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் தள்ளிவைத்து விட்டு அன்று இலங்கை மனமலர்ச்சியுடன் எழுந்தது. அன்று ராவணரின் பிறப்புநாள்.  தென்கடலில் இருந்து எழுந்த கூதிர் காலத்தின் குளிர் காற்றலைகள் அந்த மேட்டு நிலத்தின் பொன்மஞ்சள் சுடராய் நின்றிருந்த முக்கூடல் மலையை  மோதி கடந்து  கொண்டிருந்தன. 

அதிகாலை மென்குளிரில் ஒரு பெருமூங்கிலின் பாதத்தில் தலைவைத்து ராவணர் உறங்கிக்கொண்டிருந்தார். அவர் முகம் வீணைஇசையில் ஒன்றியதைப்போல் கூம்பியிருந்தது. அந்த பெரிய மூங்கிலின் நுனிதளிர் வானத்தில் எங்கோ மறைந்திருந்தது. மலைமண்ணின் சரிவில் கிடந்த அவரின் கால்கள் ஒன்றன் மீது ஒன்று படிந்திருந்தன. அவரின் பரந்த முதுகை மெல்ல மெல்ல துளைந்த மூங்கில் தளிர்  நெஞ்சில் கிளைத்து பொன்பூக்களை உதிர்ந்தது. மண்டோதரி பதறி எழுந்து அமர்ந்தாள். திரும்பி ராவணரின் முகத்தைப் பார்க்கும்போதே அவர் மலர்ந்து விழித்தார். அவருடைய மனதின் ஒரு கண் உறங்குவதே இல்லை. அது சூட்சுமங்களை தொட்டு அறிவது. 

வைகறையிலயே அரண்மனை உற்சாகம் கொண்டு வேங்கை,காந்தள்,அரிதாய் காலம் மயங்கி மலர்ந்த குறிஞ்சி மலர்களையும் சூடியிருந்தது. அகில் புகை சூழ்ந்த அரண்மனையை அடுத்து இருந்த ஆக்குமுற்றத்தில் தினையை வறுத்து கொட்டி குவித்திருந்தனர். பெண்கள் கல் உரல்களில் தினையை அள்ளியிட்டு குத்தியும், ஒருகாலை மடித்து மறுகாலை நீட்டி வைத்து கருங்கல் திரிகையில் தினையை இட்டு திரித்து மாவாக்கினர். இளைஞர்கள் தேனடைகளை கொண்டு வந்து அடுக்கிக் கொண்டிருந்தனர். எரியும் நெருப்பில் மலைக்கிழங்குகளை சுட்டு  எடுத்து குவித்தனர். நாள் முழுவதும் அரண்மனை நோக்கி கூத்துப்பார்க்கவும் ராவணரை காணவும் வரும் மக்களுக்கு  உணவளிப்பதற்காக மறுபுறம் தேக்கிலைகள் குவிந்து கிடந்தன. ராவணர் எழுந்ததும் சாளரத்தின் வழியே ஆக்குமுற்றத்தை  கண்டபின்பு நீராடி சிவனாரை வழிபடுவதற்காக சென்றார். வேங்கை மரத்து சிவன் முன் அமர்ந்த அவர் அரைவில் போன்ற வீணையின் தந்திகளை மீட்டினார். மிகமெதுவாக குறிஞ்சி மலர்ந்தது. சட்டென்று காந்தள் ஐந்து இதழ்களை விரித்து ஆடியது. சுனை நீர் தண்மை கொண்டு வழிந்து பாறை குழிகளில் தங்கியது. குளிர்ந்தது. பெருங்கடல்  கரித்தது. மூங்கிலை துளைக்கும் வண்டைப்போல வண்டு ஓசையிட்டு துளைத்தது. வீணையை கீழேவைத்த ராவணர் சிவனின் பாதத்தில் முழுஉடலும் நிலத்தில் படிய முற்றிலுமாக விழுந்து பணிந்தார். அங்கிருந்தவர்களில் மண்டோதரி முதலில் இயல்பு  நிலைக்கு வந்து அவர் தோளைத்தொட்டு புன்னகைத்தாள். 

வயோதிகர்கள் அன்றும்  மனம் மலரவில்லை. அவர்கள் முந்தின நாட்களை விட அன்று மிகவும் சோர்ந்து ஒடுங்கினர். அந்திநேரம் நெருங்கும் வேளையில் அங்கங்கே இருந்த பாறைகளில், தங்கள் சிறு வீட்டின் முற்றங்களில் இலங்கைவாசிகள் அமர்ந்து உரையாடிக் கொண்டிந்தனர். அணைந்து கொண்டிருந்த அந்தி சூரியனை பார்த்தபடி முதிய அன்னை அனு, “இது லங்காபுரியின் பொன்பூக்கும் காலம்…”என்று தனக்குள்  சொல்லிக்கொண்டாள். அவள் தினமும் அந்தியில் இப்படி மூங்கல்காட்டை பார்த்தபடி அமர்ந்து  புலம்பிக் கொண்டிருந்தாள். அவை அந்தி வெளிச்சத்தில் மேலும் மேலும் மஞ்சள் ஔி கொண்டன.  அவளின் எதிரே அமர்ந்திருந்த இளம் சம்யுக்தை சற்று தொலைவில் தெரிந்த மூங்கில்காட்டை விழிகளை விரித்துப் பார்த்தாள். அவளால் அதிலிருந்து கண்களை மாற்றமுடியாது இமைக்காமல் அமர்ந்திருந்தாள்.

“இந்த மூங்கில்காடு தளிர் விட்ட காலத்தில் நம் தசமுகன் பிறந்தார். அப்போது அந்த மலைச்சரிவு புற்காடாய் இருந்தது இன்னும் என் நினைவில் உள்ளது..மூங்கில் காட்டின் அருகில் வாழக்கூடாது என்பதால் அதோ அங்கு தெரிகிறதே வழுக்குப்பாறை அதற்கு அப்பால் குடியிருப்புகளை அமைப்பதில்லை,”

“ஏன்…”

“மூங்கில் அடியில் படுத்தால் முதுகை துளைத்து வளருமாம்…”

“அப்படி வளருமா?”

“புல் கொண்ட விழைவுதான்  மூங்கில்..புற்களைத்தான் முதன்முதலாக இந்த நிலத்தில் உயிராக படர்ந்தனவாம்.  அவை சூரியனை நோக்கி தவம் இருந்தன. சூரியன் தன் அதிகாலை ஔியால் புல்வெளியை தொட்டுப்பரவி பசும் ஔியே உருவாக நின்றாராம். எதற்கான தவம் என்று புற்களை எழுப்பி கேட்டாராம்..பரவுவதைப்போலவே நாங்கள் உயர்ந்து வளர வேண்டும் என்று புற்கள்  கேட்டதாம். வேகமாக பரவி நிலத்தை மூடிவிடும் நீங்கள் உயரமாக வான் நோக்கி எழுந்து வளர வேண்டும் என்றும் வரம் கேட்பது சரியா  என்றாராம். மிச்சமுள்ள  தாவரங்களுக்கு நிலம் இல்லாமல் போகாதா என்றாராம்? இல்லை நாங்கள் தான் முதலில் உங்கள் ஔியை வாங்கி உயிரானோம். காலகாலமாக தரையில்  வளர்ந்து மடியமுடியாது என்று புற்கள் ஒருசேர சொல்லயதும் சூரிய தேவர் புன்னகைத்து அப்படியே ஆகட்டும் நீங்கள் உங்கள் விழைவுபடியே உயர்ந்து வளருங்கள். ஆனால் மடிவதற்கு முன் இருதிங்களில் உங்களின் இந்த விழைவு பெருகும். அப்போது நீங்கள் வான்நோக்கி எழுந்து இப்போது போலவே அனைவரும் ஒன்றாய் பூத்து இந்த நிலத்தில் உயர்ந்து நின்று ஒன்றாய் மடிவீர்கள்..” என்று வரம் அளித்தாராம்.

“இந்த காடு சீக்கிரம் காய்ந்து மடிந்து விடுமா,”என்றபடி சம்யுக்தை பின்கழுத்தை தாங்கிப்பிடித்து மூங்கில்காட்டை அன்னாந்து பார்த்தாள். 

தலையாட்டிய அன்னை முகம் சோர்ந்து, “மூங்கில் காடு பூத்தால் மூங்கில் காடு அழியும்..மிகை மலர்வும், ஒட்டுமொத்தஅழிவுமாக இருக்கும் விழைவே  மூங்கிலின் உருவில் நிலத்தில் வளர்கிறது ,” என்றாள்..

காடுகளுக்கு வழிவிட்டு அங்கங்கே சிறு சிறு இல்லங்களால் ஆன லங்காபுரியில் பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. மேற்குபுறம்  இருந்த திரிகூட அருவியின் கீழ் ராவணர் எளிய மரவுரி கச்சையுடன் நின்றார். தலை உச்சியில் விழும் அருவி நீர் தெறித்து உடலில் வழிந்தது. அந்த வெளிச்சத்தில் நீரும், அவர் உடலும் ஔிகொண்டு துலங்குதைக்கண்ட இளம் காவல்அரக்கர்கள் வைத்த கண்களை எடுக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

“அரக்கால் கடந்தெடுத்த உடல்..” என்றான் ஒருவன். அங்கிருந்தவர்களிலேயே மூத்தஅரக்கர்,“தானே பற்றி எரியும் பிழம்பு,”என்றார். 

“வயதானால் புத்தி பிசகிவிடும்..அவரின் பிறப்பு நாளில் இப்படியா சொல்வீர்,” என்று அருகில் இருந்த இளம்வீரன் பற்களை கடித்தான். 

“இம்மலையில் உள்ள மூங்கில் காடுகள் , அதோ அந்த அந்திவானம், கண்முன்னே நிற்கும் அரசன் வரை அனைத்தும் பொன்..”

“பின் உமக்கென்ன குறை,”

அவர் மேற்கொண்டு பேசாமல் ராவணரை பொன்னாக்கும் அந்திசூரியனை ஒருமுறை பார்த்துவிட்டு குனிந்தார். ஓடும் நீரிலும் அதே பொன்னொளி கண்டு கையிலிருந்த கோலை நீரில் வீசி கலைத்தார்.

அருவிநீராடி திரும்பிய ராவணர் தோல்ஆடையும் முத்து ,சங்கு ,அணிகலன்களும் அணிந்து  முகம் மலர கூத்துமுற்றத்தை நோக்கி நடந்தார்.  வழியில் அவரைக் காணும் ஒவ்வொரு அரக்கியரும் மனம் குழைந்து துண்கள் அருகிலும், சுவர் ஓரங்களிலும், கதவுகளின் பக்கங்களிலும் நின்று  பார்த்தார்கள் . அந்தக்குழைவு நொதித்ததைப் போன்று அதில் ஆங்காரமும் இருந்தது. அசோகமரத்தடியில் அமர்ந்திருக்கும் சீதையை நினைத்து அவர்களின் மனம் கொண்ட பதட்டம் அது.

ராவணர் அவர்களைக் புன்னகைத்து கடந்து சென்று கொண்டிருந்தார். அந்தப்புன்னகை அவர் முகத்தில் ஒவ்வொரு அரக்கியராலும் உண்டாகி மற்றொருவரில் எதிரொளித்து மேலும் மேலும் பலமடங்கு பெருகியது. முதியஅரக்கி நீலா இடையில் கையூன்றி தலையை ஆட்டி ஆட்டி சிரித்தபடி  தன் கூட்டத்துடன் அந்தப்புர வாயிலில் நின்றாள். ராவணரின் கன்னம் வழித்து சொடுக்கினாள். அந்தபுரத்து வாயில் தாதி இடது கையை மூடி அவர் முகத்திற்கு நேரே மூன்று முறை சுற்றி விலகிச்சென்றாள். அவர்களை அவர் எப்போதும் மறுப்பவரல்ல.

ராவணரின் ஒவ்வொரு பிறப்புநாளிலும் நடத்தப்படும் ராவணக்கூத்திற்காக அரண்மனை ஆட்களும், ராவணரின் சுற்றமும், குடிமக்களும் கூத்து முற்றத்தில் கூடியிருந்தார்கள். அவரின் முப்பதாவது அகவையில் தொடங்கிய நிகழ்வு அது. முதிய கூத்தரால் எழுதப்பட்ட நாடகம்.  முதன்முதலாக இரண்டு நாழிகை பொழுது நடிக்கப்பட்ட கூத்து சென்ற பிறப்புநாளில் ஆறுநாழிகைகளை கடந்தது.

கூத்து முற்றத்தில் கூத்து தொடங்கியது. பெண்கள் கூட்டத்தை நோக்கி கூத்தன்  கைகளை வீசி சொல்லத் தொடங்கினான். மன்னவருக்கு பத்துதலை வந்த கதை சொல்லனுமா? என்றான். கூத்தி இடையில் கை வைத்தபடி சொல்லு என்றாள். ‘உங்களால் வந்த வினை. இந்த பெண்களால் முளைத்த தலைகள்’ என்றான். கூட்டம் அரவாரம் செய்யத் தொடங்கிய சமயத்தில் ராவணர் புன்னகையுடன் அங்கிருந்து வெளியேறினார்.

தினைபுனத்து மூதூரின்  மன்றில் கூத்து இன்னும் தொடங்கவில்லை. ராவணர் அணிகலன்களை கலைந்து தோல் ஆடையுடன் களிற்றின் மத்தகத்தில் ஏறினார். அரண்மனையை அடுத்த மூங்கில் காட்டைக் கடந்தால் சந்தனசிறுகுடி. அதற்கும் அப்பால் கடம்பஞ்சிறுகுடி.  மூங்கில்காட்டின்  எல்லைக்குள்ளே களிற்றிலிருந்து இறங்கி நடந்தார். தன் சுற்றமும், ஊரும், முக்கூடல் மலையும் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் கதைகளை ஒற்றர்கள் வழியே அவர் அறிந்திருந்தார். சீதையை கவர்ந்து வந்த போது ஆர்ப்பரித்த குடிமக்கள் அவளின் அசோகமரத்தடி வாழ்வை அறிந்ததும் அமைதியானார்கள். பெண்கவர்தல் தலைவனின் பெறுமை. ஆனால் கவர்ந்த பெண் தலைவனை ஏற்காமல் வெளியே மரத்தடியில் அமர்ந்தால் குலத்திற்கு கேடு என்று முதியவர்கள் முகம் சுருங்குகிறார்கள் என்றும், கவர்ந்த பெண்ணை மீண்டும் அளிப்பதும் வழக்கமில்லை என்றும் பேசுவதாக ஒற்றர்கள் வந்து சொல்லினர்.

சிந்தனையில் நடந்த அவர் சந்தனசிறுகுடியின் மன்றில்  நின்றார். நிலத்தில் அமர்ந்தவர் கைகளில் உள்ள மண்ணை சற்றுநேரம் முகர்ந்து கொண்டார். அருகில் இருந்த முதியவர் , “நம் மண் போல பித்தாக்குவது எதுவும் இல்லை,”என்றார். ராவணர் புன்னகைத்தார். சுற்றி சந்தனமரங்களைத்தவிர வேறு எந்த தாவரங்களும் உயரமாக இல்லை. புற்களைத்தவிர மற்ற மரங்களும் செடிகளும் புதர்களும் சோம்பிக்கிடப்பதை பார்த்தபடி கண்களை சுழற்றினார்.

“நீ எந்த சிறுகுடியை சேர்ந்தவனப்பா..”

“நான் முக்கூடலை சேர்ந்தவன்,”

“அங்கில்லாமல் இங்கு ஏன் வந்தாய்,”

“நான் மலையிறங்கி சென்றுவிட்டு முக்கூடலுக்கு திரும்பிக்கொண்டிந்தேன்… கூத்துப்பார்க்கலாம் என்று இங்கே நின்றுவிட்டேன்,”

ராவணரிடம் பேசிய முதியவர் இளைஞன் ஒருவனை அழைத்தார். அவன் சில சுட்ட கிழங்குகளும் சுரைகுடுகையில் நீரும் கொண்டு வந்து ராவணருக்கு கொடுத்தப்பின்,“பட்டனார் பேசிக்கொண்டே இருப்பார்,”என்றான்.

“கேட்கத்தான் வந்தேன்..”

“கேட்பது மட்டுமல்ல இங்கு சிறக்கக்கூத்து காணலாம்..” என்றபடி அவன் அவரின் தோள்களை ஒருமுறை உற்றுப்பார்த்து புன்னகத்தப்படி நகர்ந்தான்.

சந்தன மரங்களை பார்த்தபடி கிழங்கின் கருகிய மேல்தோலை உரித்த ராவணரிடம் முதியவர்,“இந்த சந்தன மரங்களின்  விழைவுதான் அதன் மணம். முற்றிலுமாக மற்ற தாவரங்களின் வேர்களையும் உறிஞ்சிவிடும்,” என்று சந்தனமரத்தை பற்றி சொல்லத்தொடங்கினார்.

ராவணர் தலையாட்டியபடி கிழங்குகளை உண்டார். நடக்க முடியாத முதிய அரக்கஅன்னைகளை,தாதைகளை தூளியில் கொண்டுவந்து கூத்து மன்றில்  அமர வைத்துக் கொண்டிருந்தார்கள். கர்ப்பிணி அரக்கியர் தங்களின் வயிற்றின் மீது கைவைத்தபடி கால்மடக்கி மறுகையை தரையில் ஊன்றிக்கொண்டு அமர்ந்திருந்தார்கள்.    ராவணரின் பிறப்புநாளன்று லங்காபுரியின் சிறுகுடிகள் அனைத்திலும் ராவணக்கூத்து நடந்தேறும். எங்கெங்கு காணினும் ராவணரின் தலைகளாகும் இலங்கை. ராவணராக வேடமிடுபவர் ஒரு மண்டலம் தங்களுக்குள் ராவணகூத்தை  ஓட்டிப்பார்ப்பார்கள். களத்தில் வந்து நிற்கும்போது  ராவணவரே வந்து நிற்பதாக  பார்ப்பவர்களுக்கு மனம்மயக்கும் உணர்வை ஏற்படுத்துவதே கூத்தர்களின்  கனவாக இருக்கும். கூத்து முடிந்த மூன்றாம் நாள் ராவணர் கூத்தர்களுக்கு அரண்மனையில் உணவு அளித்து, அவர் கைகளால் பரிசளிப்பார். 

மன்றில் இருந்த மிகப்பெரிய சந்தன மரத்தை சுற்றி விரிந்த சந்தனமுற்றத்தில் கூத்து தொடங்கியது. முழுநிலா கிழக்கே எழுந்து வந்தது. பந்தங்களை கொளுத்தி வைத்தார்கள். மஞ்சள் பிழம்பாக பந்தங்கள் எரிய ராவணன் தன் சின்னஞ்சிறிய பாதங்களில் கிங்கிணி ஒலிக்க, இடைசலங்கை சலங் சலங் என்று ஓசையிட அரண்மனை முற்றத்தில் நடந்து வந்தான். கால்தடுங்கி விழுந்து எழுந்து அழுதான். அதை தாங்காத முதிய அரக்கி ஒருத்தி, அவன் குஞ்சாமணிக்கு ஆயிரம் முத்தங்கள் என்று சொல்லி தன் கைகளால் தொட்டு, தொட்ட கைகளை முத்தமிட்டாள். அவளைப்  பார்த்து அவன் சிரித்து கைத்தட்டினான். அப்போது முளைத்தது அவனுடைய இரண்டாம் தலை. 

சிறுவனாகி பிடறி குறுமுடிகள் வியர்வையில் படிந்து நிற்க இடைக்கச்சையும், இடுப்பரணும் அணிந்து கைகளில் வீணையுடன் அமர்ந்திருந்தான். அந்த பயிற்சிகாலத்தில் ஒருநாள் வீணையின் நாண் அறுந்து விழுந்தது. பயிற்சி முடித்து நாத மண்டபத்திலிருந்து ஆசான் வெளியேறினார். தலைகுனிந்து அமர்ந்திருந்தான் ராணவன். காவலர், அமைச்சர் என்று யார் அழைத்தும் தலையை நிமிர்த்த இயலாது திண்டாடிக் கொண்டிருந்தனர். வழக்கமான பொழுதில் காலை உணவிற்கு அவனை காணாது தேடி வந்த  செவிலித்தாய்  மகதீ நாதமண்டம் வந்துசேர்ந்தாள். தன் கனத்த இடையை கைகளால் தாங்கியபடி குனிந்து அவன் மென்புறங்கழுத்தைத் தொட்டு இந்த தங்கக்கழுத்து என் இறைவனுடையது என்று நிமிர்த்தினாள். ஆசானை மீஞ்சியவன் என்று அவனை அணைத்துக்கொண்டாள் . அன்று அவனின் மூன்றாம் தலை முளைத்தது.

இளவரசனாக பட்டம் ஏற்கும் அன்று அருவிநீராடி காட்டின்மணம் சூழ வந்து பீடத்தில் அமர்ந்தான். உடல் ஈரத்தை ஒற்றியெடுத்து சுண்ணம் பூசி காலில் கழலும், தோளில் கங்கணமும், காதில் குழைகளும், இடையில் செந்நிறக்கச்சையும், கழுத்தில் ஆரமும் அணிவித்து, குழல் சீவி, மீசை முடிக்கு நெய்யிட்ட தாதி அவன் மீசையை முறுக்கி விட்டு, “அழகன்,” என்றாள். அன்று அவைக்கு சென்றவனுக்கு நான்குதலைகள்.

எங்கிருந்தோ கடலில் அடுத்தடுத்து படையெடுத்து வந்த சுறா மீன்களால்  நிலையழிந்த இலங்கைப்பாக்கத்தின் சேர்ப்பன் அன்றொருநாள் ராவண அவையில் வந்து நின்றான். அப்போதுதான் இளவரசனாக பொறுப்பில் இருந்த ராவணன் சேர்ப்பனுடன் சமுத்திரக்கரைக்கு வந்தான். கடலுக்குள் பொங்கிய எரிமலையால்  நிலையழிந்த சுறாக்கள் சினத்தில் அலைவுற்று கரைக்கு வந்திருந்தன. பரதவ  இளைஞர்களுடன் கடற்கரைக்கு இந்தப்புறம் மலைகாட்டில் புகுந்து மான்கள், பன்றிகள் என்று அடுத்தடுத்து வேட்டையாடிக்கொண்டு சென்று கடலில் வீசி அவற்றை திசைதிருப்பி விட்டான். அமைதியான கடற்கரையில் அன்றைய முழுநிலாவின் ஒலியில் மீனும் தினையரிசி சோறும் உண்டு சமுத்திரம் பார்த்து அமர்ந்திருந்தான்.  இளம்சேர்ப்பனின் தலைவியான தெரிவை பரதவப்பெண்களுடன் அங்கு வந்தாள். அவர்கள் கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களால் ஆன மாலையை அவளின்  சிறுமகளின் கைகளில் கொடுத்து அவனுக்கு அளித்து அரசர்கரசன் என்று வணங்கினார்கள் . கடல் அலைகளுடன் இணைந்து  அர்ப்பரிக்கும் சிரிப்புடன் சிறுபெண்ணினை பார்த்து நிமிர்ந்த அவன் ஐஞ்சிரன்.

மணம் முடித்த நாட்களில் தண்டகாரண்யத்து காடுகளுக்கு செல்வதும் திரும்புவதுமாக இருந்தவன், மேகநாதனை மண்டோதரி கருவுற்ற போது அவளுடனே  இருந்தான். அவளின் உடல் மனநிலைகளை கூர்ந்து கவனித்து,இளவயதில் கற்றுக்கொண்ட மருத்துவஞானத்தை இணைத்து குமாரதந்த்ரா என்ற மருத்துவ நூலை எழுதினான்.  அவள் கைகள் எப்போதும்  பிடிமானத்திற்காக துலாவிக்கொண்டே இருந்தன. மெத்தையில் இருந்து எழுந்து  பிடிமானம் துலாவிய மண்டோதரியின் கைகளுக்கு அருகில் அவர் எப்போதும் இருந்தார். அதிலொரு நாள் தன் எழுத்தாணியுடனும் சுவடிகளுடனும் தரையில் அமர்ந்து  புன்னகைத்தவாறு, “இந்த நிலையில் சிசு ஒரு சுழலும் சக்கரம்..அதனால் அதற்கு பெயர் ஆலவட்ட நிலை என்று குறிப்பிடலாம்,” என்று சிரித்தார். மண்டோதரி நாழிகை பொழுதிற்கும் மேல் அவரையே பார்த்து கொண்டேயிருந்தாள். அவளை தோள் தொட்டு  உசுப்பி எழுப்பி தலையாட்டி புன்னகைத்த ராவணருக்கு ஆறுதலைகள்.

‘மன்னவர் அவர் குணத்தை பார்’ என்று கூத்தி தன் புராணத்தை தொடங்கினாள். அரக்கியர் பெருமூச்சு விட்டபடி கைச்சேர்த்து, கால்களை மாற்றி அமர்ந்து ஒருவர் முகத்தை ஒரு பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள். கருவுற்ற அரக்க மகள்கள்  மாறாத புன் சிரிப்புடன் இருந்தனர். அவன் போல் ஒரு பிள்ளை என்றே மனம் நிறைந்து எண்ணிக்  கொண்டார்கள். பின்னால் அமர்ந்திருந்த ராவணர் புன்னகைத்த படி,“மன்னவரின் வேல்திறம், வில்திறம், தேர் திறம், தவவலிமை பற்றியெல்லாம் இவர்களுக்கு ஒரு அக்கறையும் இல்லை,” என்று அருகில் இருந்தவரிடம் கூறினார்.

“பேசாமல் இருமய்யா..பெண்கள் பாய்ந்துவிடுவார்கள். இன்று அவர்களுக்கான நாள்..நமக்கு வேண்டுமென்றால் புதிதாக ஒரு வீரக்கூத்து புனைந்துகொள்வோம்,”

“புனைவதா,” என்று ராவணர் கூறும் பொழுது கூத்தின் அடுத்தப் பகுதி தொடங்கியது.

“கூட்டத்தில் சலசலப்பு அதிகம்  கூத்தனே…” என்றாள் கூத்தி.

“அது சலசலப்பில்லை…ஆர்ப்பரிப்பு”

“அந்தபுரத்தையே பாடுகிறாயாம்..”

“வேறு என்ன பாட வேண்டுமாம்,”

“பாதியிலிருந்து பாடுகிறாயே ஆதிக் கதையை பாடு கூத்தனே,”

“முடிந்தால் இனி நீ பாடு…” என று கூத்தன் தன் கோலை ஊன்றி முகத்தை கோணி நின்று கொண்டான்.

கூத்தி தன் கோலை அசைத்துக்கொண்டே சந்தனமரத்தை சுற்றி வந்தாள்.  ஔிந்து நின்று முகம் மட்டும் காட்டி பாடத்தொடங்கினாள்.

சூர்ப்பநகையின் தமையனுக்கு ஏழாம் தலை,வில் தொழில் பழகும் நாட்களில் குரு மகளின் தோழனுக்கு எட்டு தலை என்று அவள் கூறும் போது ஆண்கள் பக்கமிருந்து ஆரவாரம் கிளம்பியது.

ஆண்மக்களால் நிறைந்து கொண்டிருந்த இலங்கேசனின் மாளிகை திரிசடையின்  குரலால் சிலிர்த்து புன்னகைத்தது. விபீஷ்ணனின் கைகளில் இருந்து அவளை வாங்கிக்காண்டு, “பெண்மக்களின் சுகம் இதுதானோ.. இவளால் நாம் மாளிகையே ஒரு முறை திரும்பி அமரும்,” என்று  அதிர்ந்து சிரித்தவருக்கு ஒன்பது தலைகள்.

“ஆமாம்.. ஆமாம்…இவள்கள் வீட்டை, நாட்டை மட்டுமல்ல  இந்த நிலத்தையே திருப்பி அமைப்பர்,”என்று ஒருவன் கத்தினான். அருகில் இருந்தவர்கள் அவனை அழுத்திப்பிடித்து அமர  வைத்தனர்.

கூத்தனும் கூத்தியும் இணைந்து கோல்களை சுழற்றி பாடினார்.

 “பத்தாவது தலை மன்னவரின் தலை..எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் நிலதை உரிமையாக்கும்..” என்று தொடங்கி விழையாத பெண்ணைத் தொட்டால் தலை சிதறும் என்ற பேச்சு உண்டு என்று இருவரும் நிறுத்தினர். அனைவரும் சிரித்தனர்.

 “இலங்கைக்கு வெளியே சொல்லிய கதைகள் இவை… விழையாத ஒன்றை நோக்கி நீளாது எங்கள் பெரியவனின்  கைகள்..” என்றவுடன் கூத்து  விசை கொண்டது. கூத்தில் புதிதாக சீதை அமர்ந்திருக்கும் அசோகமரம் வந்தது. அருள் வந்த ஒரு முதுஅரக்கர் எழுந்து ஆடினார்.

‘பொன் இலங்கை..

இது பொன்இலங்கை…

இது ஔியிழந்து மங்கும்’ என்று தன் வசம் இழந்து ஆடினார். அனைவரும் பதைத்து நின்றிருந்தனர்.காய்ந்த இலைகளில் தடவி உலர வைத்திருந்த மலைக்காட்டு வேங்கைப்பாலை நீரில்  தொட்டு கூத்தன் அவர் நெற்றியில் வைத்தான். கூத்தி இலங்கையையும், அந்த சிறுகுடிகளையும் வாழ்த்தி முடித்தாள்.

அந்த வைகறைப் பொழுதில் அவர்கள் கலைந்து சென்று தங்களின் சிறுஇல்லங்களுக்குள் பெருமூச்சுடன் ஒடுங்கிக் கொண்டனர்.

ராவணர் மூங்கில் வனத்தில் புகுந்து நடந்தார். அவரை பின் தொடர்ந்து தும்பிக்கையை ஆடியப்படி களிறு நடந்தது. துளைவிழுந்திருந்த மூங்கில்களில் காற்று நுழைந்து வெளியேறும் நாதத்திற்கு ஏற்ப விரல்களை அசைத்தபடி நடந்தார். உடலே இசையானதைப்போல அவரின் நடை ஒரே தளத்தில் நடந்தது. 

 எங்கிருந்தோ முரளும் வண்டின் ஓசை கேட்டதும் களிறு காதுகளை வேகமாக ஆட்டியது. அதன் முளரல் அந்த வனத்தையே துளைத்து அதிர்ந்தது. ஒரு கணம் இல்லை எனவும் மறுகணம் அதிர்ந்தும் அது பறக்கும் சத்தம் மூங்கில் வனத்தை நிலையழித்தது. தூரல் மழை பெய்வதைப்போல மூங்கில்கள் சின்னஞ்சிறுவிதைகளை உதிர்த்துக்கொண்டிருந்தன. எங்கேயோ ஒரு குயில் குரல் தனியே கூகூகூ என்று உயிரே குரலாகக் கூவியது. சற்று நேரத்தில் மூங்கில்வனம் தன் பொன் கரங்களால் அவரை முழுமையாக மூடிக்கொண்டது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.