மிளகு – அத்தியாயம்  நாற்பத்தேழு 

ஜெரஸோப்பா, கோழிக்கோடு– ஆண்டு 1605

இம்மானுவல்  பெத்ரோவை இந்துஸ்தானத்துக்கு போர்த்துகல் தேசத்தின் தலைமை அரசப் பிரதிநிதியாக நியமித்து அரசராணை வந்து சேர்ந்து ஒரு மாதமாகிறது. இன்னும் அது சம்பந்தமான பரபரப்பு ஓய்ந்தபடியாக இல்லை.

அவரை சந்தித்துப் பேச, இந்துஸ்தானத்துக்கு போர்த்துகல்லில் இருந்து பல தரத்தில் உத்தியோக நிமித்தம் வந்திருக்கும் பிரமுகர்கள் நிறையப்பேர் ஹொன்னாவருக்கு வந்து   போகிறார்கள்.   

தில்லியில் முகல்-எ-ஆஸம் மொகலாய சக்கரவர்த்தி அக்பர் அரசவைக்கு போர்த்துகல் பிரதிநிதியாக உள்ள பால்தஸார் ட சில்வா முதல் திருவிதாங்கூர் அரச அவையில் லிஸ்பனிலிருந்து பங்குபெறும் ராஜ்ய பிரதிநிதி ஜோஸ் பிலிப்போஸ், கொச்சி பிரதிநிதி ஜியார்ஜ் புன்னோஸ் வரை வந்து காத்திருந்து சந்தித்து மரியாதை செய்து திரும்பப் போகிறார்கள். 

ஒவ்வொருவரும் இரண்டு வாரம், மூன்று வாரம் என்று நீண்ட நெடும்பயணமாக வந்து, உத்தர கன்னடப் பிரதேசத்தில் பெத்ரோவைக் சந்தித்து விட்டு, அரபிக்கடல் இந்தியப் பெருங்கடலோடும், வங்காள விரிகுடா சமுத்திரத்தோடும் ஒன்று கலக்கும் குமரித்துறை வந்து சேர்கிறார்கள். அங்கிருந்து புறப்பட்டு மதுரையும் ராமேஸ்வரமும் பார்த்து விட்டு 

ஊர் திரும்புகிற திட்டத்தில் வந்து போகிறார்கள். 

தென்னிந்தியாவில் போர்த்துகீசியர்களின் இருப்பு வட இந்தியாவில் இருப்பதைவிட அதிகம்தான் என்பதால் இங்கே அவர்களுடைய சிநேகிதர்கள், உறவில் பட்டவர்கள் இப்படியானவர்களைச் சந்தித்துப் போகவும் இந்தப் பயணத்தை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்துகிறார்கள்.

பெத்ரோ வீட்டில் இந்தியா முழுவதிலிருந்தும் கொண்டு வந்து அன்பளிப்பாக பெத்ரோவுக்குத் தரப்பட்ட இனிப்புகளும், கலைப் பொருட்களும், உடுக்கவும், போர்த்திக் கொள்ளவுமான ஜரிகை சேர்த்த, பட்டும் பருத்தியும், சீன வெல்வெட்டுத் துணிகளுமாக நிறைந்திருக்கின்றன. 

பெத்ரோவின் மனைவி மரியா போன மாதமே தாய் வீட்டிலிருந்து ஹொன்னாவர் திரும்பி வந்திருக்க வேண்டியது தாமதமாகி, வரும் மாதம் தான் வர இருக்கிறாள். பிறந்த குழந்தை அவளுடைய ஆரோக்கியத்தை சார்ந்திருப்பது தீவிரமாகத் தேவைப்படுவதால் தாயும் சேயும் இன்னும் மருத்துவர் கண்காணிப்பில் தான்.

ஈதிப்படி இருக்க, பதவி உயர்வு கிடைத்ததும் பெத்ரோ துரை மாதாகோவிலுக்குக் கூட வழிபடப் போகவில்லை. மிர்ஜான் கோட்டைக்குச் சென்று மிளகு ராணி சென்னபைரதேவியவர்களிடம் செய்தி பகிர்ந்து, மகாராணியின் வாழ்த்துகளைப் பெற்றுத் திரும்பினார். ஆனைத் தந்தத்தில் செய்த நீளமான படகும் படகோட்டிகளுமாக அற்புதமான சிற்பத்தை மிளகு ராணி   அன்பளிப்பாக அளித்தது தன் மீது அவருடைய தனிப்பட்ட அன்பைக் காட்டியதாக நினைத்து நினைத்துப் பேருவகை அடைந்தார் பெத்ரோ.

”இந்துஸ்தானம் முழுமைக்குமான போர்த்துகீஸிய அரசப் பிரதிநிதி என்பது நல்ல பதவி தான்”   சந்திப்பின் போது மகாராணி கூறினார். “இந்துஸ்தான் முழுவதும் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டாள் சென்னா அடுத்து. அப்போது தான் இந்துஸ்தானை அறியப் பயணம் செய்ய பெத்ரோ திட்டமிட்டார்.

இந்திய நாடு முழுவதும் சிறிது சிறிதாகப் பயணம் போய் அங்கங்கே பேரரசர்களையும், சிற்றரசர்களையும் கண்டு பழகி நன்னம்பிக்கையும் நல்லிணக்கமும் தேடி வர முனைப்பாக இருக்கிறார் அவர். 

முதல் பயணம் கோழிக்கோடு தான். மாமனார் வீட்டுக்குப் போன மாதிரியும் இருக்கும். தலைமை ராஜபிரதிநிதியின் முதல் அரசாங்கப் பயணமாகவும் இருக்கும் என்பதே அவர் கணக்கு. பிரியமான பெண்டாட்டி மரியாவையும் நேரில் பார்த்து, பெண் விஷயத்தில் தான் வேலி தாண்டவில்லை என்று சம்பிராதயமான உறுதிமொழி கொடுக்க வேண்டியிருக்கிறது.  கஸாண்ட்ராவோடு செய்யும் சில்மிஷங்கள் வேலி தாண்டலாகாது. அவ்வப்போது அவசரமாகத் தாண்டினாலும், கால் சராயை விழுத்துப் போட்டு,  கூடல் தவிர்த்து, முன்நேர விளையாட்டுகளோடு முடித்து, உடனே குளித்துவிட்டுத் திரும்பியாச்சு. அது கிடக்கட்டும், சிற்சில விதங்களில் தனிப் பயணமாகவும் இந்த முதல் அலுவல் நிமித்தமான பயணம் கோழிக்கோட்டுக்கு வைக்கப் படுகிறது.

பதவி உயர்வு கிடைத்ததும் பெத்ரோ ஜெரஸோப்பா நகரில் ஒரு அலுவலகம் திறந்தார். ஹொன்னாவர் ரதவீதி மாளிகை பார்க்க வருகிறவர்களால் நிரம்பி வழியத் தொடங்கியது அதற்கு முக்கியக் காரணம். 

ஒரு மாதம் முன் அவுத் என்ற லக்னோ, கல்கத்தா, திருச்சிராப்பள்ளி,  திருவனந்தபுரம் நகர போர்த்துகீசிய பிரதிநிதிகள் ஒரே நாளில் வந்து கொஞ்சம் சிரமமாகி விட்டது. பகலில் ஆளுக்கு ஒரு குரிச்சி, கூட வந்தவர்களுக்கு வாசலில் பாய் விரித்து இடம் என்று ஏற்பாடு செய்ய, வீடே கல்யாண வீடு மாதிரி கோலாகலமாக இருந்தது. கஸாண்ட்ரா அலுத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் ருசியாகச் சமைத்து விருந்து வைத்தாள்.

ராத்திரி பெத்ரோ படுக்கையை லக்னோ பிரதிநிதியோடும், திருச்சி பிரதிநிதியோடும் பகிர்ந்து கொள்ள வேண்டிப் போனது. கஸாண்ட்ரா ஆர்வமும் சிருங்காரமுமாக பெத்ரோவைக் கண்ணுக்குள் பார்த்தபடி வீடு போக, அவுத் மாநிலப் பிரதிநிதியின் முழு இரவும் தொடர்ந்த அபானவாயு பேரொலியும், திருச்சி பிரதிநிதி மணிக்கொரு தடவை மூத்திரம் போக எழுந்து போய் வந்ததும் வெகு தொந்தரவாகி விட்டது பெத்ரோவுக்கு. 

ஹொன்னாவர் மாளிகை வசிக்க, ஜெருஸோப்பா அலுவலகம் வேலை பார்க்க என்று ஏற்படுத்திக் கொள்ளத் திட்டம் நடப்பிலாக்கப்பட்டது. 

என்ன ஆனதென்றால் இரவு வெகுநேரம் அலுவலகத்தில் அதாவது ஜெரஸோப்பாவில் சந்திப்பு, லிகிதம் வாசிக்க, எழுத என்று செலவிட்டு நடு ராத்திரிக்கு வீடு திரும்ப ஹொன்னாவருக்குப் போகக் கிளம்பினால், சாரட் ஓட்டி, சிப்பந்தி, குதிரை, எல்லாரும், எல்லாமும் உறக்கத்தில். 

நடு ராத்திரிக்கு கொள்ளைக்காரர்கள் சுற்றுவது உண்டோ இல்லையோ, காட்டு விலங்குகள் ஜெரஸோப்பாவுக்கு வெளியே சுற்றுவதைப் பலபேர் பார்த்ததாகச் சொல்கிறார்கள். லிஸ்பனில் சீராகத் தொடங்கி, மாட்ரிட்டில் நல்ல கல்வியும் பழக்க வழக்கங்களும் சேர்ந்த ஆளுமையாக உருவாகி, மிர்ஜான் கோட்டையிலும் ஹொன்னாவரிலும் ராஜதந்திரம் கற்று தலைமை பிரதிநிதியாகப் பதவி உயர்வும் பெற்றிருப்பது சிறுத்தைப் புலி வாயில் சிக்கிக் கொல்லப்பட இல்லையே. 

எனவே ஜெர்ஸோப்பா அலுவலகத்திலேயே ஒரு நாள் உறங்க வேண்டி வந்தது. மேஜைகளை இழுத்துப் போட்டு, துணிகளைக் குவித்துத் தலைமாட்டில் தலையணை போல் வைத்து, கொசுக்கடிக்கு நடுவே அவர் தூங்குவதாகப் பெயர் பண்ணி, அடுத்த நாள் அப்படியே வேலையைத் தொடர வெகு சங்கடமானதாகப் போனது. 

அதற்கப்புறம்  இப்போதெல்லாம் மாலை ஆறு மணிக்கு மேல் யாரையாவது அவசியம் சந்திக்கணும் என்றால் ஹொன்னாவருக்கு வரச்சொல்லி விடுகிறார். மற்ற சந்திப்புகள் மறுநாள் தான். அவரவர் தங்குமிடத்தை அவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேணும் என்பதிலும் குறிப்பாக இருக்கிறார் அவர். 

தான் ஜெரஸோப்பாவில் இல்லாத நேரத்தில் சேதி வாங்கி வைக்க ஒரு இளம் போர்த்துகல் அதிகாரியை மாமன்னர் உத்தரவுப்படி தில்லியில் இருந்து இடம் மாற்றி இங்கே வேலைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். குரியகோஸ் என்ற அந்த இளைஞர் பெத்ரோவுக்கு உதவியாளாராக உத்தியோகம் பார்க்கும் நேர்த்தி பெத்ரோவுக்கு ரொம்பவும் பிடித்துப் போயிருக்கிறது.

அரசுப் பயணமாக இதோ கோழிக்கோடு கிளம்பிக் கொண்டிருக்கிறார் பெத்ரோ. ஹொன்னாவரில் வீட்டில் இருந்து அதிகாலை கிளம்பும்போது வீட்டு நிர்வாகி கஸாண்ட்ராவிடம் ஒரு வாரத்துக்கான பணிகளின் பட்டியலைச் சொல்லிப் போக உத்தேசித்திருந்தார். கஸாண்ட்ராவுக்கு முத்தமளிக்கவும் பெறவும் அணைப்பு ஆலிங்கனமாகவும் அந்த அதிகாலை கழிந்துபோனது.

ஹொன்னாவரில் இருந்து கடல் பயணமாகவே கோழிக்கோடு பயணப்பட முதலில் யோசனை சொல்லியிருந்தார் பெத்ரோ. காற்று திடீரென்று அதிக வேகத்தோடு வீசியும், மணிக்கணக்காக காற்று அவிந்து போயும், கடற்கரையை நெருங்கிய கடல் பரப்பு இருப்பதால், படகு அல்லது சிறு கப்பலில் பிரயாணம் வைக்காமல் ஹொன்னாவரிலிருந்து மங்கலாபுரம் கடலோடி, அங்கிருந்து கோழிக்கோடு, தரை மார்க்கமாகப் போகத் தீர்மானமானது,

பதவி உயர்வு பெற்ற சென்ஹோர் பெத்ரோவை முதலாவதாகச் சந்திக்க   ஆர்வம் காட்டினார் ஸாமுரின். வேறெங்கும் போக வேண்டாம். நேரே கோழிக்கோடு வந்துவிடலாம் என்று அபிப்பிராயம் சொல்லியிருந்தார் அவர். 

மைசூரில் இருந்து மன்னர் வாடயார், என்றால் உடையார், செய்தி அனுப்பியிருந்தார் – போகும் வழியில் சற்றே மாற்றம் செய்து மைசூர் வந்து போனால் மகிழ்ச்சி அடைவேன் என்னும் தாக்கல், என்றால் செய்தி அது. வழிமாற்றத்தை உடையாருக்காகச் செய்து, கடற்கரையோடு போகாமல் நிலம் புகுந்தால்,  மற்றவர்களுக்கும் அதேபோல் செய்ய வேண்டி வரும். செய்தால், கோழிக்கோடு அடுத்த வருடம் தான் போய்ச் சேர முடியும். 

இப்போதோ மூன்றே நாளில்  ஹொன்னாவர் – கோழிக்கோடு பயணம் நிறைவேறி விட்டது. திங்கள்கிழமை காலையில் புறப்பட்டு, மூன்றாம் நாள் புதன்கிழமை சாயந்திரம் கோழிக்கோடு போய்ச் சேர்ந்தார்கள். 

சாமுத்ரியைப் பார்க்க வந்திருக்கீர்களா என்று கடற்கரைச் சாலை சுங்கச் சாவடியில் பெத்ரோ துரையைக் கேட்டபோது இல்லை என்று சொல்லிவிட்டார் அவர். ஸாமுரின் என்று தான் சொல்லிப் பழக்கமானதால் சாமுத்ரி வேறே யாரோ என்று அவருக்குத் தோன்றியதே காரணம். 

சுங்க அதிகாரி கோழி இறகால் காது குடைந்தபடி, சுத்த  கொங்கணியில் சொன்னது இப்படி இருந்தது – ”எங்கள் மன்னர் அலையடிக்கும் அரபிக் கடலுக்குக் காவல் இருக்கப்பட்டவர். சமுத்திரக் காவலர் சாமுத்ரி. உங்க ஆளுங்க அந்த வார்த்தை வாயில் வராமல் ஸாமுரின் ஆக்கிட்டீங்க. போறது, எப்போ சாமுத்ரி அரசரைப் பார்க்கப் போறீங்க? அனுமதிக் கடிதம் இருக்கா?” 

பெத்ரோவின் கூட வந்தவர்கள் அவர் யார் என்று விளக்கியதை அசிரத்தையாகக் கேட்டுக் கொண்டிருந்தான் சுங்கன். பெத்ரோ தன் கூட வந்த இன்னொரு பணியாளன் காதில் ஏதோ சொல்லி விட அவன் நெட்டோட்டம் ஓடிப் போனான். 

சீக்கிரமே பெத்ரோவின் மாமனார் காப்ரியல் ஃப்ரான்சிஸ்கோ ஓட்டமும் நடையுமாகச் சுங்கச் சாவடிக்கு வந்து விட்டார். அவரைப் பார்த்ததும் சுங்க அதிகாரி தலையசைத்து வணங்கி மரியாதை செலுத்தினான். எந்த மறுப்பும் சொல்லாமல்  பெத்ரோவிடம் உள்ளே வர அனுமதி முத்திரையைக் கொடுத்து இன்னும் ஒரு வாரத்துக்கு அது செல்லுபடியாகும் என்று விளக்கினான். 

“போர்த்துகல் ராஜாவு இவிடெ அயச்ச வளரெ பிரதான உத்யோகஸ்தனாணு இத்தேஹம், கேட்டோ.  இவர் வந்நதாயறிஞ்ஞால் சாமுத்ரி ராஜாவு தன்னே   காணான் இவிடெ எத்துமாயிரிக்கும்.”.

 சொல்லிக் கொண்டிருக்கும்போதே சாமுத்ரியின் தனி சாரட் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ராஜாங்க அதிகாரி நேரே பெத்ரோவிடம் போய் வணங்கி, ”ஐயா, சாமுத்ரி தம்ப்ரான் உங்களை கொட்டாரத்துக்கு அழைத்து வர சாரட் அனுப்பியிருக்கிறார். ஏறி வந்து சிறப்பிக்க வேண்டும்” என்று வேண்டினார். சாமுத்ரியே சாரட் அனுப்பி அழைக்கும் வெள்ளைக்காரன் மேல் எல்லோருக்கும் மதிப்பு ஏற்பட்டது.

இருட்டுவதற்குள் கொட்டாரத்துக்கு, என்றால் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்து ஸாமுரின் அரசரோடு சந்திப்பு நிகழ்த்த பெத்ரோவுக்கு வாய்த்தது. 

ஸாமுரின் என்று கேட்டுக் கேட்டு அவருக்கு ஒரு முகம் மற்றும் ஆளுமை அடையாளத்தைக் கற்பனை செய்திருந்தார் பெத்ரோ. முன்பல் விழுந்த, வயதான சிரியன் கத்தோலிக்க பிஷப்பாக, சதை பிடித்து, முழு அங்கி தரித்து, தலை முக்கால் பகுதி வழுக்கை விழுந்து, குரல் தழதழத்துக் கழுத்தறுக்கக் கத்தி தீட்ட வைக்கிறதான நைச்சியமாகப் பேசும்  வைதீகனாக பெத்ரோ கற்பனை செய்த ஸாமுரின் இருந்தார். 

இங்கே வந்து பார்த்தாலோ, முப்பது வயதுக்கு ஒரு நாள் கூட அதிகம் சொல்ல முடியாத இளைஞராக இருந்தார் ஸாமுரின். நெடுநெடுவென்று நல்ல உயரம். ஆறடி இருப்பார். போர்த்துகல் – எஸ்பானியப் பேரரசுகளின் மாமன்னரான விவேகமுள்ள பிலிப் என்ற ஒன்றாம் பிலிப் மன்னரை விட ஒரு பிடி அதிகம் உயரம். கறுத்த உடல். ஆப்பிரிக்கர்கள் போல் அரைத்துக் குழைத்துப் பூசியது போல கருப்பு விழுது விழுதாக பூசி வைத்த உடல் இல்லை. சற்றே மங்கிய கறுப்பு, கண்கள் நெருப்புத் துண்டுகளாக ஒளி விடுகின்றன. 

பெத்ரோ ஆணாக இல்லாமல் போயிருந்தால் நிச்சயம் ஸாமுரினை மோகித்திருப்பார். கஸாண்ட்ரா இடத்தில் வெகுவான காமத்தோடு வைக்காவிட்டாலும் வனப்பு கண்டு காதலுற்று இருப்பார். 

கஸாண்ட்ராவோடு, இவன், இவர், முயங்கினாலோ. அபத்தம். கற்பனை செய்வது மகா குற்றம். பெத்ரோ வேகமாகப்  புன்நினைவு  களைந்தார். 

ஸாமுரின் இடுப்பில் அவசரமாக உடுத்தியதுபோல் ஒரு பட்டுத் துணியை இறுக்கக் கட்டி இருக்கிறார். அதற்கு மேல் உடை ஏதும் அணியவில்லை. 

பரந்த மார்பும் கரளை கரளையாகக் கையும் காலும் வாய்த்து இரு பக்க கை அமரும் இடங்களிலும் சிங்க உருவங்கள் வடித்து நிறுத்திய அரியணையில் அமர்ந்திருக்கிறார் ஸாமுரின். 

மேலுடம்பில் துணி மறைத்துப்  போர்த்தாததைக் குறையாக்காமல் கழுத்திலிருந்து இடுப்பு வரை நீளமான, குறைந்த நீளத்தில், மத்திய நீளமாக முத்துமுத்தாகப் பதித்த மாலைகளும் காசுமாலைகளும் அழகான ஆபரணங்களாக அவர் நெஞ்சில் தவழ்கின்றன. 

தோள்களிலும் இறுகக் கவ்விப்பிடித்த ஆபரணங்களை ஸாமுரின் அணிந்திருக்கிறார். இடுப்பில் ஒரு குத்துவாளைச் செருகியிருக்கிறார். தலையில் பெரியதோர் ஆபரணமாக மணிமுடி தரித்திருக்கிறார். அதற்குள் இடைவெளியை அழகான மயில் அல்லது வேறு ஏதோ வண்ணமயமான பறவை இறகுகள் மறைத்துள்ளன. 

தலைமுடியை முன்குடுமி கட்டியிருப்பது அவர் அரியணையில் இருக்கும்போது குனிந்து ஏதாவது தேடினால் அன்றி     கண்ணில் படுவதில்லை. 

காலில் செருப்புகளோடு கணுக்கால் பிடிக்கும் ஆபரணங்களையும் அணிந்திருக்கிறார் ஸாமுரின். சில மாலைகளைத் தவிர எந்த ஆபரணமும் பொன்னாக ஒளி வீசவில்லை. வெள்ளியில் செய்தமைத்தவையாக இருக்கக்கூடும் என்று பெத்ரோவுக்குத் தோன்றியது. செம்போ வெங்கலமோவாக இருக்காது தான்.

அரியணை கூட சிங்கம், வளைவுகள், சிறு இலை, கொடி வேலைப்பாடுகளோடு வெள்ளியில் செய்ததாக இருக்கக் கூடும்.   தரைக்கு மேலே அரையடி உயரத்தில் ஒரு படி வைத்து அமைக்கப்பட்டிருக்கிறது அது. 

ஸாமுரின் செருப்பணிந்த ஒரு காலை படியில் ஊன்றி, மற்றதை இருக்கையில் மடித்து வைத்து அமர்ந்திருக்கிறார். அவருக்குப் பின் நீல நிறத்தில் சாட்டின் துணித் தலையணை உறை போட்ட திண்டு ஒன்று ஸாமுரின் அரியணையில் சாய்ந்து சௌகரியமாக அமர வகை செய்கிறது.

முரட்டுச் செருப்புகளும், காதில் பெரிய வளையங்களும், அணிந்து, தலைப்பாகை வைத்த வீரர்கள் நான்கு பேர், வலது கரத்தில் ஓங்கிப் பிடித்த வாளோடு அரியணைக்கு அருகே, நாலு பக்கமும் நிற்கிறார்கள். இன்னொரு வீரன், தரையில், அரியணை பக்கம் ஜாக்கிரதையாக அமர்ந்திருக்கிறான்.

 அரசவையில் ஸாமரினுக்குத் தொட்டு விடும் தூரத்தில் முப்புரிநூல் தரித்த முதிய ஆலோசகர் நின்றபடி இருக்கிறார். பெத்ரோ போர்த்துகீஸ் மொழியில் சொல்வதை மலையாளத்தில் மொழிபெயர்ப்பதும், ஸாமுரின் மலையாளத்தில் உரைப்பதை போர்த்துகீஸ் மொழிக்கு மாற்றுவதும் ஆலோசகரின் பணிபோல. வெகுவேகமாக மொழியாக்குவதால் வார்த்தைக்கு வார்த்தை சரிதானா என்று சோதிக்க முடியவில்லை. சென்னபைரதேவி அரசவையில் பிரதானி நஞ்சுண்டையா நிதானமாக எல்லோருக்கும் எல்லாம் விளங்கும்படி மொழிபெயர்ப்பார். இந்த ஆலோசகர் எதற்கோ ஓட்டஓட்டமாக ஓடுகிறார். அப்புறம் ஒன்று, இந்த மலையாள பூமியில், எல்லோரும், எப்போதும் வேகமாகத்தான் பேசுகிறார்கள்.

பலாப்பழ சுளைகளும், வாழைப்பழத்தையும் வாழைக்காயையும் சிறு சக்கரங்களாகத் துண்டுபடுத்தி தேங்காய் எண்ணெயில் மொறுமொறுப்பாகப் பொறித்தெடுத்து மிளகுப்பொடியும் உப்பும் தூவிய வறுவலும், தென்னை இளநீரும், உரையாடலுக்கு இடையே, ஸாமுரினுக்கும் பெத்ரோவுக்கும் வழங்கப்படுகின்றன. கையில் பிடித்த உணவுத் தட்டுகளோடு அரசியல் பேச்சுவார்த்தை நடத்த பெத்ரோவுக்குச் சற்றே சிரமமாக இருந்தாலும், பொருட்படுத்தாமல் பேசியபடி  இருக்கிறார். 

அவரிடம் மிளகு விலை நிர்ணயம் பற்றிய முதல் கட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என்று போர்த்துகல் பேரரசர் பிலிப்பு தீவிரமாக இருப்பதை பெத்ரோ சொல்லிப் பேச்சு வார்த்தைகளைத் தொடங்க   வேண்டியுள்ளது. 

ஒரு பக்கம் மிளகு அரசி ஜெர்ஸோப்பா மகாராணி சென்னபைரதேவியோடு மொத்த மிளகுக் கொள்முதல் பற்றி உடன்படிக்கைக்கு வழி செய்தபடி, மற்றொரு பக்கம், கோழிக்கோடு ஸாமரினோடு மலபார், தலைச்சேரி இன மிளகுக்குத் தனி வணிக ஒப்பந்தம் ஏற்படுத்துவது பற்றிப் பேச பெத்ரோவுக்குச் சற்றும் பிடிக்கவில்லை. 

என்ன செய்ய, போர்த்துகல் மன்னர் தீவிரமாக இந்தப் பேச்சு வார்த்தைக்கு முனைந்திருக்கும்போது அவருடைய பணிவான ஊழியர் பெத்ரோ என்ன செய்யமுடியும். அதை நோக்கி பேச்சை நகர்த்த ஒரு சரியான தருணத்தை எதிர்பார்த்து இளநீர் பருகிக் கொண்டிருந்தார் பெத்ரோ. இனிப்பும் உப்புமாக இந்தத் தென்னை இளநீரும் தனிச் சுவையாக இருந்தது.

அரசியலை விட மதம் சம்பந்தமான பிரச்சனைகள் ஸாமுரின் மன்னர் கவனத்தை அதிகம் கவர்ந்திருப்பதாகத் தெரிந்தது அவருக்கு.  இங்க்லீஷ் கிழக்கிந்தியா கம்பெனி, தெற்கு பிரதேசமெல்லாம் போர்த்துகீசியர்களையும் அவர்களின் மத அமைப்பான கத்தோலிக்க கிறித்துவத்தையும் இந்த பூமியிலிருந்து ஓட்டி விட்டு புராட்டஸ்டண்ட் கிறித்துவத்தையும், இங்கிலீஷ் வணிகர்களையும் இந்தியா முழுக்கப் பரவி இருக்க முழு முனைப்போடு செயல்படுகிறார்கள் என்று தகவல் பகிரும் ஆர்வமும், வரவழைத்துக்கொண்ட வருத்தமுமாகச் சொன்னார் ஸாமுரின்.

”நீங்கள் ஜெரஸோப்பாவிலும் ஹொன்னாவரிலும் உடுப்பியிலும் இப்படியான புராட்டஸ்டண்ட் தொந்தரவை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?” என்று விடாமல் விசாரித்தார் ஸாமுரின் மன்னர். 

”எங்கள் பகுதிக்குள் கிழக்கிந்தியக் கம்பெனியோ புரட்டஸ்டண்ட் மதப் பிரசாரகர்களோ நினைத்தபடி வந்து மதம் பரப்ப முடியாது. ஜெரஸோப்பா மகாராணி அதை அனுமதிப்பதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறார். மதத்தையும் வியாபாரத்தையும் கலக்க வேண்டாம் என்று கம்பேனியாரிடம் கண்டிப்பாகச் சொல்லி விட்டாராம்”. என்றார் பணிவோடு, பெத்ரோ.

சொன்ன பிறகுதான் பெத்ரோவுக்கு  உரைத்தது. சென்னபைரதேவி புகழ் பாடிவிட்டு அவரை ஒதுக்கி வைத்துத் தனி மிளகு உடன்படிக்கைக்கு ஸாமுரினை அழைப்பது சரியாக வருமா? அவருக்குத் தெரியவில்லை. 

மிளகுராணி சென்னபைரதேவியும், அபயராணி அப்பக்கா தேவியும் இருக்கும்வரை, டச்சுக்காரர்களின் ஏகாதிபத்யமோ, இங்கிலீஷ் ஈஸ்ட் இண்டியா கம்பெனியின் குள்ளநரித் தந்திரங்களோ,  இங்கே எடுபடாது என்றார் ஸாமுரின். போர்த்துகீசியர்களும் இந்தப் பட்டியலில் உண்டு என்பதை அவர் தற்காலிகமாக மறந்திருந்தார். பெத்ரோவும் தான்.

திடீரென்று ஸாமுரின் எழுந்தார். எல்லோரும் எழுந்து வணங்கித் தலை தாழ்த்தி இருக்க அவர் பின் அரங்கத்துக்கு நடந்தார். போகும்போது யாரிடமோ காதில் ஏதோ சொல்லிப் போனார். 

”ஸாமுத்ரி மகாராஜாவு அற்ப சங்கைக்கு ஒதுங்கப் போயிருக்கார். பெத்ரோ துரைக்கு ஒதுங்க வேணுமென்றால் உதவி செய்யச் சொன்னார்”. அந்த அரண்மனை ஊழியர் பணிவு விலகாத குரலில் பெத்ரோவுடன் சொன்னார்.

 நன்றி, இப்போது வேண்டாம் என்று புன்சிரிப்போடு தலையசைத்துச்   சொல்லி விட்டார் பெத்ரோ. லிஸ்பனில் இருந்து அரசாங்க உத்தியோகம் கொடுத்து வெளியே அனுப்பும்போது இந்துஸ்தானி, கொங்கணி வசவுகளைக் கற்பிப்பதோடு, மணிக்கணக்காக சிறுநீர் கழிக்காது அடக்கியபடி வேலையில் ஈடுபடவும் பயிற்சி அளித்திருக்கிறார்கள். அதை அடிக்கடி செய்யக் கூடாது, உடல் நலம் கெட்டுவிடும் என்ற மருத்துவ ஆலோசனையும் கூட உண்டு.

சிறுநீர் கழித்து வந்த ஸாமுரின், கை கழுவி ஈரம் உலராத கரங்களோடு பெத்ரோவின் கைகளைப் பற்றிக் குலுக்கியபடி உற்சாகமாகச் சொன்னார் – ”முக்கியமான சந்தோஷ சமாசாரத்தைப் பற்றி நான் பேசவே இல்லையே. மன்னிக்க வேண்டும். உங்களுக்குத் தலைமைப் பிரதிநிதி என்ற மகத்தான பதவி உயர்வை உங்கள் பேரரசர் அளித்திருப்பதாக அறிகிறோம். எங்களின் அன்பான வாழ்த்துகள். ஆசம்சகள்”. 

நன்றி சொல்லி பெத்ரோ அமர்ந்தார்.

”எங்கள் அவை இந்த வாரம் செயல்படாது. பத்து நாள் ஓணத் திருநாள் கொண்டாட்டங்கள் இன்று தொடங்குகின்றன. அனைவரும் ஓணச் சிந்தனைகளில் இருப்பார்கள். என் இஸ்லாமிய கப்பல் தளபதி கூட இங்கே இல்லை, சொந்த ஊருக்குப் போயிருக்கிறார். அவருக்கும் ஓணம் உண்டு”  என்று சிரித்தார் ஸாமுரின்.

 குஞ்ஞாலி மரைக்காயர் ஊரில் இல்லை என்று அறிய நிம்மதியாக இருந்தது பெத்ரோவுக்கு. குஞ்ஞாலி பட்டம் பெற்ற கடற்படைத் தளபதிகள் ஸாமரினோடு சேர்ந்து உக்கிரமாகப் போராடி, வேறெந்த அரசும் வியாபாரம் பேசி நாடு பிடிக்க முற்பட்டால் அவர்களின் கப்பல்களை முற்றுகையிட்டுத் திருப்பி அனுப்புவார்கள். சுலைமான் என்ற பெயருள்ள  தற்போதைய குஞ்ஞாலி மரைக்காயர் சென்னபைரதேவிக்கு நல்ல சிநேகிதத்தில் இருக்கப்பட்டவர். அவரை வைத்துக்கொண்டு தனி வர்த்தக ஒப்பந்தம் பற்றிப் பேசுவது தர்மசங்கடமாக இருக்கும் பெத்ரோவுக்கு. 

யோசித்துப் பார்க்கும்போது இனியும் அநேக தர்மசங்கடமான சூழ்நிலைகள் அவருக்கு ஏற்படக்கூடும் என்று பட்டது. உத்திர கன்னட பிரதேசத்துக்கான போர்த்துகீஸ் பிரதிநிதியை விட ஹிந்துஸ்தான் தேசத்துக்கான தலைமை போர்த்துகீஸ் பிரதிநிதி இன்னும் சக்தி வாய்ந்தவர். இன்னும் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியவர். 

”இந்த வருடம் நல்ல விளைச்சல் என்பதால், ஓணம் கொண்டாடுவது, கேரள பூமி முழுக்க சிறப்பாக இருக்கும்” என்று நற்சொல் சொன்னார் பெத்ரோ. 

விளைச்சல் என்ற வார்த்தையைப் பிடித்துக்கொண்டு மலபார் மிளகுக்கும் தலைச்சேரி மிளகுக்கும் தாவிப் போய்த் தனி ஒப்பந்தத்துக்கு சீக்கிரம் வரவேண்டும். 

“அதே, நல்ல விளைச்சல் தான் மிளகு முக்கியமாக. உங்கள் மாமனார் சொல்லியிருப்பாரே”. ஸாமுரின் கண்ணில் குறும்பு மின்ன பெத்ரோவிடம் விசாரித்தார். 

“அவர் பயிர் பண்ணும் விவரம் எதுவும் அறியேன் அரசபிரானே. பெண்ணைக் கொடுத்தார் மனைவியாக. போதும் என்று சொல்லி விட்டேன். மிளகு அவருக்கும் நல்ல ராசியான விஷயம் என்றால் எனக்கும் சந்தோஷமே”  

 பட்டும் படாமலும் பேசிச் சிரித்தார் பெத்ரோ. 

மாமனார் மிளகு சாகுபடி செய்து சென்னபைரதேவியால் பெத்ரோ அதற்காகக் கண்டிக்கப்பட்டதை நிச்சயம் மிளகு ராணியிடமிருந்து ஸாமுரின் அறிந்திருப்பார். அதை விட்டு விட்டு, நேரே, வந்த காரியத்தை எடுக்க வேண்டியதுதான். 

ஸாமுரின் அடுத்து சிறுநீர் கழிக்க எழுந்து போய், அங்கே மனசில் தோன்ற, மீதி பேச்சு வார்த்தையை அப்புறம் ஒருநாள் வைத்துக் கொள்ளலாம் என்றோ, இவ்வளவு பேசியது மரியாதை நிமித்தமான வரவுக்குப் போதுமானது என்றோ அறிவித்து கொட்டாரத்து அந்தப்புரத்துக்குப் போகலாம். 

அந்தப்புரத்தில் அழகான மலையாளிப் பெண்களோடு சுகித்திருக்கப் போனவரைக் கையைப் பிடித்து இழுத்து, மிளகு நிர்ணய விலை பற்றிப் பேசுவது ரசனைக் குறைச்சலானது மட்டுமில்லை மிகப்பெரிய தர்மசங்கடமும் தான். 

ஓஓஓ என்று வாயில் பாக்கு அடக்கிக் கொண்டு வெற்றிலையும் மென்றபடி அ, ஒ, ஹ, ஊ என்று ஒற்றை எழுத்துப் பதில் சொல்லியபடி இருந்தார் ஸாமுரின். 

“விஸ்தரிச்சு முறுக்கியாலும். நல்லா தாம்பூலம் தரிச்சுக்குங்க” என்ற கோரிக்கையோடு தாம்பூலப்  பெட்டியும் புது எச்சில் படிக்கமும் பெத்ரோவுக்கும் நீட்டப்பட்டது.

”பாத்திரத்தில் இருந்து துளி சீவல் பாக்கையும் கால் வெற்றிலை கிள்ளியும் சுருட்டி எடுத்துக்கொண்டார் பெத்ரோ. அந்த தாம்பூலத்தை குப்பாயத்துக்குள் மறைவாக வைத்துக் கொண்டார். 

“மலபார் மிளகும், தலைச்சேரி மிளகும் நல்ல சாகுபடி என்பதில் போர்த்துகீசியர்கள் சந்தோஷப்படலாம்” என்று ஸாமுரின் சொல்ல, பெத்ரோ நன்றி சொல்லி   பேச ஆரம்பித்தார்.

”அதைப் பற்றித்தான் பேச வந்திருக்கேன் யுவர் ஹைநெஸ்”   என்று பணிவாகச் சொன்னார். 

“ஓ என்னைப் பார்க்க வரல்லியா?” அடுத்த வெற்றிலையை எடுத்தபடி ஸாமுரின் கேட்டார். 

“அதற்குத்தான் முதல் இடம்”. 

பெத்ரோ தீர்க்கமாக சுவாசம் இழுத்துச் சொன்னார். பொய் சொல்லும்போது மூச்சை இழுத்து விடுவது அவர் வழக்கம். வெகு விரைவில் மூச்சு திணறப் போகிறோம் என்று பெத்ரோவின் மனம் களியாக்கியது. 

”மகாராஜா, எங்கள் பிலிப் பேரரசருக்கு அவ்வப்போது ஏதாவது புது சிந்தனை ஏற்படும். இப்போது நடக்கற நல்லா நடக்கிற ஏதாவது ஒரு வழிமுறையைத் தவிர்த்து புதுசா ஒரு செயல் திட்டத்துக்கு வழிவிட்டால் என்ன ஆகும் என்று யோசிப்பார். முக்கியமானவங்க கிட்டே அதைப் பங்கு வைத்து இது நடந்தா என்ன ஆகும் என்று கேட்பார். சில தடவை அவரோட சிந்தனை ஓட்டம் சரியாக இருக்கும். இன்னும் சில தடவை அது அவ்வளவு சரியாக இருக்காது. எப்படி இருந்தாலும் ஒரு புதுச் சிந்தனைக்கு இடம் கொடுத்து யோசித்த சந்தோஷம் அவருக்கு பெரிசு”.  பெத்ரோவுக்கு மகிழ்ச்சியளித்த அவருடைய சொந்த முகவுரை இது.

”சந்தோஷம், உங்கள் பிலிப்பு அரசர் உங்க கிட்டே பகிர்ந்துக்கிட்ட, நீங்க என்னிடம் பகிர்ந்து கொள்ளப் போவது என்ன?” ஸாமுரின் கேட்டார்.

”இங்கே, கேரளத்தில் விளையும் மிளகுப் பயிருக்கு மட்டும் உங்களோடு வர்த்தக உடன்படிக்கை ஏற்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும் என்று எங்கள் அரசர் நினைக்கிறார்” என்றார் தயங்கித் தயங்கி பெத்ரோ.

ஸாமரின் எதுவும் பேசாமல் இருந்தார் ஒரு நிமிடம். அரசவை மண்டபத்தில் வரிசையாக ஏற்படுத்தியிருந்த விளக்குத் தூண்களில் தீபங்களை ஒரு கோல் விளக்கைக் கொண்டு ஏற்றியபடி வெண்மை உடுத்த, தலை முடி ஈரமாகக் குளித்து இன்னும் பின்னிக்கொள்ளாமல் விட்டபடி ரம்மியமான ஒரு அழகுப் பெண் ஏற்றி வைத்துப் போனாள். தேங்காய் எண்ணெயும் கற்பூரமும் கலந்த அற்புதமான ஒரு மணம் அவை எங்கும் பரவியது. 

ஸாமுரின் விளக்கொளியில் கறுத்து உயர்ந்த ஒரு தேவதூதன் போல் நின்றார். பெத்ரோவும் மரியாதை கருதி எழுந்து நின்றார். அவரை உட்காரச் சொல்லிக் கை காட்டினார் ஸாமுரின்.  பெத்ரோ தயக்கத்தோடு இருக்கையின் முனையில் படபடப்போடு அமர்ந்தார்.

ஸாமுரின் பேச ஆரம்பித்தார்- 

”அருமை நண்பர் பெத்ரோ அவர்களே, எங்கள் மிளகின் சிறப்பை நீங்கள் உணர்ந்திருப்பதோடு எங்கள் வெளிப்படையான பேச்சையும், புது சிந்தனைகளுக்கு கதவு சார்த்தாத எங்கள் குணம் குறித்தும் தெரிந்திருப்பதை மகிழ்வோடு பாராட்டுகிறேன். நன்றி பெத்ரோ. எங்கள் மிளகு சிறப்பாக இருக்க எங்கள் உழைப்பு, எங்கள் மழைக்காலம், இவற்றோடு எங்கள் சிநேகிதர்களைப் புறக்கணிக்காத, கைவிடாத கேரளீயத் தனிக் குணம் இவை எல்லாம் உரமாக, உயிர்ச் சொத்தாக அமைந்து போயிருக்கு. இதில் ஒன்று குறைந்தாலும் கேரளத்தில் நல்ல மிளகு உற்பத்தியாகாது. காலம் கனியும்போது பிலிப்பு மகாமன்னர் எங்கள் சிறந்த அரச நண்பர் ஆகட்டும். அதுவரை நாங்கள் எங்கள் அன்புக்குரிய மிளகு ராணி சென்னபைரதேவியோடு அரசியல் நட்பு பாராட்டுவதை இழக்க மாட்டோம். அவருக்குத் தெரியாமல் ஒரு கரண்டி மிளகோ, ஒரு ஏலக்காயோ கூட விற்கமாட்டோம். கோவில் மணி அடிக்கிறது. இறைவனும் உறுதிப்படுத்தும் செய்தி இது. நீங்கள் தொடர்ந்து எங்கள் நல்ல நண்பராக இருக்கலாம். இரு நாடுகளுக்கும் கலாசார சிநேகமும் பெருகி வளரட்டும்”. 

கை எடுத்துக் கும்பிட்டு உடனே உள்மண்டப ஒழுங்கைக்குள் வேகமாக நடந்து மறைந்தார் ஸாமுரின். 

மாமனார் வீட்டுக்குள் பெத்ரோ நுழைந்து மனைவி மரியாவையும் சின்னஞ்சிறு மகனையும் அணைத்துப் புன்சிரித்து சிரசில் முத்தமிட்டார்.   இதோ ஒரு நிமிடம் என்று காலணிகளை அவசரமாகக் கழற்றி உதறி விட்டுத் தோட்ட வெளிச்சத்தில் நடந்தும் ஓடியும் போனார். 

மிளகும், பிலிப்பும், சென்னபைரதேவியும், ஸாமுரினும் யாரும் எங்கேயும் போகட்டும். பெத்ரோவுக்கு இப்போது மேலும் தள்ளிப்போட முடியாத வேறு காரியம் இருக்கிறது.   

கால்களை நனைத்து சால் வெட்டியதுபோல் சுழித்து ஓட,  மரத் தண்டுகளை ஈரமாக்கிச் சுழன்று மண்ணில் இறங்கி, வாழை மரங்களைச் சுற்றி வளைந்து திரும்பி, பாத்தி கட்டி வளர்த்த கீரையை விளிம்பில் தொட்டு நெடி மிகுந்து பெருக, நிறுத்தாமல்  சிறுநீர் கழித்தபடி இருந்தார் பெத்ரோ. 

Series Navigation<< மிளகு அத்தியாயம் நாற்பத்தாறுமிளகு  அத்தியாயம்   நாற்பத்தெட்டு    >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.