
நிலை
இவ்வளவு நாள் கடந்தபின்னும்
பழுப்பேறிய காகிதத்தில்
வரைந்தும் எழுதியும்
வைத்தது போல் இன்னும்
தன்னுள் பிறக்காத
அந்த வெளியுலகத்தினுள்
இருந்து வெளியே வந்தால்
அவனைப் பந்தாடும்
கால்களிலிருந்து தப்பிக்க
அவனும் விளையாடினான்
அன்பையும் நன்மையையும்
அவர்களுக்குப் போக
மிச்சத்தை வழங்கினார்கள்
எரிந்து கொண்டிருக்கும்
உடலிலிருந்து வார்த்தைகள்
வருவதற்கு ஏன் இவ்வளவு
நேரம் என்று தெரியவில்லை
அவன் காத்திருக்கிறான்
அவன் எதிர்ப்பையும் மீறி
அவனுக்கொரு சொல்லொன்று
சொல்ல அங்கு யாரும் இல்லை
சீட்டுக்கட்டின் விதிகளின்படி
ஒன்று சேர்க்கத் தவறிவிட்டபோது
கடலில் மிதக்கும் துரும்பென
அவன் நீந்திக்கொண்டிருந்தான்
கவிதை
ஒரு துப்பறிவாளன்
அறிந்த மொழியின்
கூறுகளைக் கவிஞன்
சாவகாசமாய் புறந்தள்ளுகிறான்
மேலும் அவனது எண்ணத்தில்
நம்பிக்கை வைத்து
புதியதைக் கண்டுபிடிக்கும்
ஆர்வத்தில் காலம் கடத்துகிறான்
அதிகமான அர்த்தங்களை
கொண்ட சொற்களை
அவன் ஒன்று சேர்க்கிறான்
ஒரே சொல் அனைத்து
அர்த்தங்களைத் தந்துவிடும்போது
அவனுக்குச் சொற்களின்
தேவையே இருக்கவில்லை
மொழியும் மனமும்
இரு துருவங்களாக
மனதை வழிநடத்த
முடியாமல் போகிறது
அது சொல்கிறது
அது எழுதுகிறது
யாரோ ஒருவனின் மனதிலிருந்து
அப்படியென்றால் அது
இன்னும் இருக்கிறது
காலத்தை மென்று தின்ன
மனிதர்களின் மனதிலிருந்து
அது பேசுகிறது ஒட்டுமொத்த
மனிதர்களுக்கான வார்த்தைகளை
அது தேர்ந்தெடுக்கிறது
பண்பட்ட மனதில்
சட்டெனத் துளிர்க்கும்
இளந்தளிர் என
முதலில்
ஒரே நேரத்தில்
நிர்வாணமாகவும்
உடுத்தமுடியாத அளவுக்கு
உடைகளும் அணிந்திருந்தான்
அவன் இவ்வாறு இருக்க
நியாயம் கற்பித்தவர்கள்
வாழ்ந்து முடிந்து
இறந்து போயிருந்தார்கள்
வேறுவழியின்றி அவனது
பாதையைத் தேர்ந்தெடுத்தான்
நிர்க்கதியானவன் அல்லல்
படுவது சாத்தியமே
காலத்தில் உறைந்திருக்கும்
அக்காட்சி நிலைத்துவிட்டது
பிரம்மாண்டத்தின் முன்னே
அவன் தனியாகக் கிடந்தான்
முதன்முறை முதன்முறையாக
எல்லாமே அற்புதம்தான்
நினைவு
ஒரே ஒரு கற்பனை
அல்லது ஒரு விருப்பம்
சொல்லவைக்கிறது ஒரு வார்த்தை
எழுதவைக்கிறது ஒரு எழுத்தை
எனது கவனத்தால் அதற்கு
கிடைக்கும் சுதந்திரத்தை
இழக்கச் செய்கிறேன் நான்
வார்த்தைகளின் பயன்பாடு
அதே வார்த்தை
நான் கொள்ளும்
அர்த்தத்தின் முன் போரிடுகிறது
எல்லாவற்றிற்கும் ஒரு
பதிலைச் சொல்லமுடிந்தது
சொல்லாமல் இருந்தும்கூட
அது அதற்கான பதில் இல்லை
எப்பொழுதோ முடியவேண்டிய
இந்த உரையாடல்
தொடர்ந்துகொண்டிருக்கிறது
எனது உணர்வுகளை
நான் அறிந்தவரை
பிட்டு பிட்டு வைக்கிறேன்
தோதான நினைவுகளில்
பிரத்தியேகம்
பறவையின் கூச்சலில்
உலோகத்தின் சாயல்
திடீரென ஜன்னலின் வழியே
அவன் பறந்ததைப் பார்த்தான்
சேவலின் கூவலில்
விடியலின் வாசம் வர
கடிகாரத்தைப் பார்த்தான்
படிமம் ஒன்று
உரித்த நுங்கென
நீரில் மிதந்து மனதின்
கரையோரம் ஒதுங்கியது
எதையும் காட்டும்
கண்ணாடி அல்ல அது
அடுக்குகளைப் பாதுகாக்கும்
பூமியின் தோல்
எனவும் சொல்வதற்கில்லை
அதை அவன்
கேட்டுக்கொண்டே இருக்கும்
குரலற்றவனின் குரலாக
உள்ளேயும் வெளியிலும்
இருக்கும் ஒரே இடத்திலிருந்து
அவனுக்கென பிரத்தியேகமானதை
அவன் கண்டடைந்தான்