தமிழாக்கம் : இரா . இரமணன்

ஓ ! ஒளி என்கிறீர்களே
நான் என்றென்றும் அனுபவிக்கவே முடியாத
அது என்ன?
இந்த அப்பாவிக் குருடனுக்கு
அதன் வரங்கள் என்ன
கூறுங்களேன்.
காணும் அதிசயங்கள் பற்றி பேசுகிறீர்கள்.
பிரகாசமாய் ஒளி வீசும் சூரியன் என்கிறீர்கள்.
நான் உணர்வதெல்லாம்.
அதன்சூடு மட்டுமே.
எப்படி அவனால்
இரவென்றும் பகலென்றும்
உண்டாக்க முடியும்?
நான் விளையாடும்போது
என்னுடைய பகலும்
நான் தூங்கும்போது
என் இரவும் உருவாகின்றன.
நான் விழித்திருக்கும்போதெல்லாம்
அது பகலே.
.
என் கெடுவாய்ப்பின் துன்பத்தை
பெருமூச்சு விட்டு
நீங்கள் வருந்துவது
பலமுறை என் செவிகளில் விழுகிறது.
ஆனால்
எப்போதும் என்னால் அறிய முடியா
இழப்பை
நிச்சயமாய் பொறுமை கொண்டு சுமப்பேன்
ஆகவே
என்னால் பெற முடியா ஒன்று
என் மன ஊக்கத்தை சிதைக்காதிருக்கட்டும்.
ஒரு ஏழைக் குருட்டு பையனாய்
நான் இருந்தாலும்
இப்படிப் பாடும்போது
நான் ஒரு ராஜாவே.

கோலி சிப்பர்
கோலி சிப்பர் -(நவம்பர் 1671- டிசம்பர் 1757) இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகர், நாடக ஆசிரியர், அரசவைக் கவிஞர். தன்னுடைய வாழ்க்கையை Apology for the Life of Colley Cibber என்கிற நூலில் தன்போக்கில் சுற்றி திரியும் பாணியில் எழுதினர்.ரிச்சர்ட் III என்பது இவர் எழுதிய முக்கிய புத்தகம் என்கிறது விக்கிபீடியா.