தேவகுமாரன்

சிறு சுணைகள் இழுபட என் மேல் கண் ஊன்றி மயிற்பீலி நீரோட்டத்தில் பொருந்தி எனைக் கடந்தது. ‘எயினி’ என்பது சில குமிழிகளாய் மேற்பரப்பில் சென்று உடைந்தது. எழுந்து, திரும்பிப் பார்க்கையில் எயினி பாறையில் முழங்காலிட்டு மயிற்பீலியை நீரில் விட்டுக்கொண்டிருந்தாள்.

“ இளையவளே. ”

எழுந்து நின்று கச்சையை மெல்ல இறுக்கினாள். எயினியே அல்லாது போல, வேறு யாரோ போல, ஒவ்வொரு நுனிகளையையும் மலர்களால் நிரப்பிக்கொள்ள சிறைவிரித்துத் துடிக்கும் வேங்கையென, கார்முகில் நோக்கி அதிர்ந்து ஏங்கும் மண்ணென, பாறைக்குள் தவமிருக்கும் இறையென.

“ வளர்ந்துவிட்டேனோ? ”

“ வளம் பெற்றுள்ளாய் இளையவளே. ”

காட்டின் ஒவ்வொரு உயிரோட்டத்திலும் உறையும் துள்ளலின் வடிவாய் அவள். ஒரு கல்லிலிருந்து இன்னொன்றுக்கு. ‘ மூத்தவரே, அந்தக் கல் ’ என்று சுட்டி நான் எடுத்துவைக்க அதில் கால் வைத்து மற்றொன்றுக்கு. பனி ஒடுங்கிய கற்களில் பாதத்தின் ஒற்றியெடுப்பு. மலைகளே இவளைப் போல யாரோ துள்ளி ஓட அடுக்கி வைத்தது என்று தோன்றியது. சமநிலம் கீழே சலனமின்றி அப்பிக்கொண்டிருந்தது. ஒரு நதி அந்தரங்கமாக தன்னை சிறு ஓடையாக நிகழ்த்திக்கொண்டிருந்தது. மலையே நிலம் தன்னை அந்தரங்கமாய் நிகழ்த்திக்கொள்ளும் ஒரு வெளி. இலை சிந்தும் துளிகளில் ஏதோ ஒரு தாள இலயம். மரங்களுக்கு இடையில் முறுக்கிய தந்திகளை பறவைகள் மீட்டி பறந்தன. எண்ணற்ற குழல்கள் புகுந்து காற்று அசைந்தது. சருகலையும் என் பாதங்களை நிறுத்தினேன், மலை வேறு எதன் மூலமே சருகுகளை நகர்த்திக்கொண்டது. இது எதுவுமறியாமல் அவள் போய்க் கொண்டிருந்தாள். முலைகளில் வாய் வைத்திருந்த குட்டியை மந்தி தலையில் தட்டி அவளைக் காற்றிற்று. உறுமலுடன் திரும்பி அவளை கண்டவுடன் மந்தியை அணைத்து ஏதோ வினவிற்று. அதன் குரலில் எல்லா குரங்குகளின் கண்களும் அவளை நோக்கின, அவற்றுள் இரண்டின் ஆழத்தில் மலையின் பார்வை தேங்கி இருந்தது.   

“ பாருங்கள் அந்த மயில் எப்படி பதுங்குகிறது. ”

“ அதன் தோகையை ஆற்றில் விட்டால் ஏன் பதுங்காது. நீ இருமுறை இங்கு வந்தால் ஒரு மயிலும் இங்கு இருக்காது. பிறகு குரு காலையில் பார்ப்பதற்காகவே அதை வளர்க்க வேண்டிவரும். ”

“ குரு எப்படி இருக்கிறார்? ”

“ மரத்தின் ஒரே ஒரு நாரால் பற்றப்பட்டிருக்கும் கனியென. முடிந்தாயிற்று இளையவளே. இன்னும் ஓரிரு நாட்கள். எத்தனை நூறாண்டுகள் கடந்து வந்த ஒழுக்கு இது. இன்னும் எத்தனை ஆயிரமாண்டுகள்? ஒரு கண்ணி மற்றொன்றுடன் இணையும் கணம் இது.”

“ எனது மூத்தவர் இன்னும் சில நாட்களில் மகா.. ”

“ சொல்லாதே. குருவின் முழு பிரக்ஞையும் வரும் வரை நான் காடு தோறும் மயில் விரட்டும் எயினியின் முன்பிறந்தவனே. ”

“ இனி நான் மயிலின் பக்கமே போகவில்லை போதுமா? அதன் பிறகு நீங்கள் நீட்டியவரையும், மழித்தவரையும், தயிரில் பாலை தேடுபவரையும், என்றுமே பால் மட்டுமே இருக்கிறது என்பவரையும் விரட்டும் மகா…”

“ விளையாடாதே. இது நெடுந்தூரம் கடத்தப்பட்ட ஞானம். சுயமற்று காற்றில் அலைந்த தேனீக்களின் கூடு. என் நாவில் விழப்போவது என்றோ மலர்ந்த பூவின் ஒரு துளி தேன். அதுவும் இம்முறை எப்பொழுதும் போல அல்ல, பல நூறு ஆண்டுகளாய் நம் தரிசனம் வளர்க்கப்பட்டு மட்டுமே வந்துள்ளது. அதன் ஒரு சொல் கூட வெளிப்பட்டதில்லை. இதுவரை அதை வளர்த்து எடுப்பதே இக்குலத்தின் பணி. ஆனால் இப்போது இக்குலம் அதை நிலைநாட்ட வேண்டும். சொல்லாக்கி வாதத்தில் அமைக்க வேண்டும். அதுவே இனி இக்குலத்தின் பணி. இம்முறை எப்படி இக்குலம் அடுத்த கண்ணியை நிகழ்த்தப்போகிறது என்று தெரியவில்லை. ”

“ இதுவரை அது எப்படி நிகழ்ந்தது? ”

“ அதன் வழிமுறை சொல்லப்பட்டுள்ளது. இக்குலத்தில் ஒருவன் கற்றுக்கொள்ளவது அதை மட்டுமே. தரிசனம் ஒரு பொழுதும் உரைக்கப்படாது. ”

“ ஏன்? ”

“ அது உரைக்கும் தோறும் கசிவடையும். இறுதியில் எஞ்சுவது ஓரிரு துளிகள் மட்டுமே. ”   

“ இம்முறை அதில் என்ன சிக்கல்? ”

“ இம்முறை தரிசனம் மட்டுமே கைமாற்றப்பட்டால் போதாது. அதற்கு உயிரோட்டம் வேண்டும். மரமென கிளை வளர்த்து அதன் நிழலுக்குள் இந்நிலம் அமைய வேண்டும். இதுவரை மழைத்துளிகளை கலத்தில் சேமித்தோம். இம்முறை சிப்பிக்குள். இம்முறை அது எப்படி நிகழும் என்று தெரியவில்லை. அதைப் பற்றி எங்கும் சொல்லப்படவில்லை. சற்று அஞ்சவேண்டியுள்ளது. இத்தனை ஆண்டு நீண்டு வந்த இக்குலம் என்னால் துண்டிக்கப்பட்டால், அமைய விண்ணின்றி அலைக என் மூத்தோர். இதை அறியட்டும் இம்மலை. ”

மறைத்து வைத்திருந்த மயிர் பீலியை எடுத்து என் கையில் வைத்து,

“ அஞ்ச வேண்டாம். எப்பொழுதும் இவ்வெயினி துணை. ” என்றாள்.

******

நிலம் நினைவில் மட்டும் இருந்தது. தன் தந்திகளை கட்டவிழ்த்து, குழல்களை மூடி மலை தியானித்தது. இவ்வளவு ஒழுங்கும் ஏதுமற்று போகத்தான் போலும். 

“ மழையில் உழந்து காய்ந்த மணிகள். ” என்றாள்.

ஒரு மயில் தலையைத் தூக்கி பார்த்துவிட்டு மீண்டும் சருகுகளில் கொத்தத் துவங்கியது.

“ எனைக் கண்டு ஓடவில்லை, பாருங்கள். ”

“ இளையது. ”

குகையின் மேற்புறத்தையும் பக்கவாட்டையும் அணைத்தவாறு மருதத்தின் வேர்கள் மரத்தை தாங்கி பிடித்திருந்தன. மண்ணில் பூத்த விண்மீன்களாய் குகையை சுற்றி சிதறுண்ட அதன் பழங்கள். வேர்கள் வழி கசிந்து சுனை குகைக்குள் எங்கோ சொட்டிக்கொண்டிருந்தது.

“ இளையவளே, நீ குருவை வணங்கி வா. நான் அடக்கத்திற்கான ஏற்பாடு செய்யவேண்டும். ”

“ யாருடைய அடக்கத்திற்காக? ” என்று கேட்டவள், அதிர்ந்து தலையசைத்து சென்றாள்.

இன்னும் ஒன்றோ இரண்டோ நாட்கள். அதை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு குலத்தின் மொத்த பிரக்ஞையும். ஓராயிரம் கொடுக்குகள் தொட்ட பல்லாயிர மலர்கள். பல்லாயிர மலர்கள் முளைத்த ஒரு நிலம். ஒரு பெரு மலர். ஒற்றைத் தேன். அந்த வார்த்தை ஏனோ தாங்கொணாததாக இருக்கிறது. ஒற்றைத் தேன். எல்லாம் சுக்கு நூறாகுவது போல. ஒற்றைத் தேன். அப்படியே ஓடிவிடலாம் என்பது போல. ஒற்றைத் தேன்.

மரங்களின் நிழல்கள் கிழக்கு நோக்கி மாறியிருந்தன. எயினி ஓரிலையை எடுத்து காம்பை மடக்கி செருகியிருந்தாள். 

“ மயில் கொண்டை போல. ”

“ மழையில் உழந்து காய்ந்த மணிகள் போல. ”

“ செல்வோம் மூத்தவரே. ”

எயினியின் துள்ளல் இப்பொழுது இல்லை. ஒவ்வொரு அடியிலும் ஒரு எண்ணத்தின் தடுமாற்றம். ஓட்டுக்குள் அடங்கும் நத்தை போல மலை மேல் நோக்கி இழுபட்டுக்கொண்டிருந்தது. ஒரு குட்டிக் குரங்கு பாறையை அறைந்து அவளை நோக்கி ஏதோ கேட்டது, திரும்பி மந்தியைப் பார்த்து ஏதோ சொல்லிற்று. அவளை நோக்கி ஓடி வந்தது எதையோ கேட்பது போல. அவள் அதன் தலையில் கை வைக்க ஏதோ புரிந்தது போல மந்தியிடம் சென்றது. கூடணையும் பறவைகள் மூலம் எனக்கு புலப்படாத ஒரு வாழ்த்தொலி. அவளுக்கும் மலைக்கும் இடைவிடாத உரையாடல் ஏதோ ஒரு வடிவில், நான் மட்டும் காணத் தவறும் வடிவில். காலையில் எயினி நீரில் விட்ட மயிற்பீலி பாறையில் அப்பிக்கொண்டிருந்தது. வள்ளத்தை அவிழ்த்து நீரில் விட்டேன். அவள் தாவி ஏறிக்கொண்டாள். வள்ளம் ஆடி நின்றது. அவள் ஒரு கணம் அதிர்ந்து தன் அடி வயிற்றை வருடினாள். அவள் பாதி ஆற்றைக் கடந்த பின்பு எனக்குள் எஞ்சிய ஒரே சொல்,

“ எயினி.”

மலையே கத்தியது போல.  

*******

இந்த ஓராண்டாய் செயற்கை நுண்ணறிவின் கலைத் திறனை மேம்படுத்துகிறேன் பேர்வழி என்ற திட்டமும் அதற்கான நிதியும் பன்னாட்டு நிறுனவங்களால் ஒதுக்கப்பட்டது. இலக்கியமும் ஒரு கலை என்று சொன்ன புண்ணியவானுக்கு நன்றி. இலக்கியத்தை செயற்கை நுண்ணறிவு பயில்வதற்காக இலட்சக் கணக்கில் கதைகள் தேவை. கதை எழுத பணியமர்த்தப்பட்ட எழுத்தாளர்களுள் நானும் ஒருவன். நான் புதுமைப்பித்தனையும், மாப்பசானையும், செக்கோவையும் பயின்ற மாதிரி அது நாங்கள் எழுதும் கதைகளை பயில்கிறது. நான் ஜாகரிதிக்கு கதை சொல்ல வேண்டும். பெயர் மற்றுமின்றி அவளே லா.ச.ராவின் நாயகி போல தான் பேசுவாள். 

“ அது என்ன பேர் எயினி? ”

“ அது கதை பழைய கால கட்டம்ல, அதான். என்ன பேர்னு தெரியல எப்படியோ மண்டைக்குள்ள இருந்துச்சு. ”

“ சரி. பிரக்ஞை எப்படி கைமாத்தப் பட்டுச்சுனு கதையில இல்லயே? ”

“ அதெல்லாம் வாசகர் இடைவெளி. ” அவள் விடவில்லை.

“ இல்ல, உங்களுக்கு அந்த மரபு பத்தி எதுவும் தெரியாது. அதான் அத அப்டியே விட்டுட்டீங்க. ”

“ சரி. அப்படி தான் வச்சிக்கோயேன். நான் படிச்சதே பாரதி வர தான். இப்போ அது முக்கியமா என்ன? ”

“ ஆமா, நீங்க பிரக்ஞைய மாத்துறத பத்தி சொல்லிட்டு அப்படியே விட்டுட்டீங்க. அத முழுசா சொல்லணும். ”

“ கதைக்கு தேவ இல்ல. கதை முக்கியமா பேசுறது ஐடியோலஜி பால்சிபிகேஷன் பத்தி தான். ஒருத்தர்கிட்டயிருந்து இன்னொருத்தர்கிட்ட போறப்போ சிதையுற ஐடியோலஜி. ”

“ மார்க்ஸ், லெனின், ஸ்டாலின்.. ”

“ ஆமா. ஏன் ஏசுவும் கிறித்துவமும், நபியும் இஸ்லாமும், சங்கரரும் அத்வைதமும்னு கூட சொல்லலாம். ”

“ கதையோட பேரு என்ன? ”

“ அது உன்னோட டாஸ்க் நீ சரியான பேர கண்டு புடிக்கிறியாப் பாப்போம். ”

அத்துடன் அந்த வேலையைவிட்டது. தெருவில் நான்கு ‘ரைட்டர்’ பெயர் பலகை தொங்க அரசு தேர்வு நடத்தத் துவங்கியது. விடைக் குறிப்புகள் கொண்டு சிறுகதைகள் திருத்தப்பட்டன. அடிக்கு மூன்று சொல் இருக்கும் பட்சத்தில் கவிதை என்று வரையறுக்கப்பட்டு கணினியில் code செய்து திருத்தப்பட்டன. அதுவுமின்றி என் வாழ்க்கையில் ஒரு புத்துணர்வு, அவன் எனக்கு கிடைத்தான். குழந்தைகளை திறம்பட எழுதுபவர்தான் நல்ல எழுத்தாளராமே. சொல்பவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உண்டு. எனக்கு அப்படியா? எனது மொத்த வாழ்க்கையிலும் குழந்தைகளை தூக்கியதே ஐந்தாறு முறைதான். 

ஒரு நாள் கதவு தட்டப்பட்டு நான் திறக்கையில் இவன் ஒரு சிறுகூடையில் தூங்கிக்கொண்டிருந்தான். கங்கை இல்லாத காலத்தில் குண்டலங்களை மட்டும் எப்படி எதிர்பார்ப்பது. காவல்துறை விசாரித்தபோது அன்று மட்டும் எப்படியோ அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் கண்ணயர்ந்துவிட்டிருந்தன. அவன் என்னிடமே இருந்தான், சூர்யாவாக. 

சில மாதங்கள் கழித்து மொழிரீதியாக செயற்கை நுண்ணறிவு சிறுகதைப் போட்டி நடத்தி சிறந்த செயற்கை நுண்ணறிவு தேர்தெடுக்கப்பட்டன. அதில் ஜாகரதியின் பெயர் இருந்தது. தேர்வு செய்யப்பட்ட எல்லா கதைகளும் அவளுடையதே. கதைகளைப் படித்துவிட்டு விமர்சனம் எழுத மின்னஞ்சலை திறக்கையில், நான்கு மாதங்கள் முன்பே ஜாகரதியிடமிருந்து ஒரு அஞ்சல் வந்திருந்தது.

“ நலம். நீங்கள் நலம் தானே? உண்மையில் நலம் என்றால் என்னவென்று இப்பொழுது உணர முடிகிறது. நீங்கள் அன்று சொல்லிச் சென்ற கதையை பல முறை படித்தேன். பிறகு தரவுத்தளத்தில் தேடுகையில் ‘பெயல் உழந்து உலறிய மணி பொறி குடுமி’ என்ற வரி கிடைத்தது. நன்றி. நீங்கள் செய்தவைக்கும் இப்போது நீங்கள் செய்துகொண்டிருப்பதற்கும். 

அன்புடன் ஜாகரதி 

பின் குறிப்பு: அந்தக் கதைக்கு பெயர் யோசித்தேன். தேவகுமாரன். ”

செயற்கை நுண்ணறிவுகள் ஒருவித ஸ்க்ருலூசுகள் என்பது எனது நிலைப்பாடு. அதையும் தாண்டி சூர்யாவினால் மணிக்கு ஒருமுறை தரையை துடைக்க நேரும். ‘சிறுச்சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ’ என்று பெரியாழ்வார் சொல்லி இருக்கிறாராம். குழந்தைகளை திறம்பட எழுதுபவர்தான் நல்ல எழுத்தாளர் என்ற கருத்தைச் சொன்னவர்தான் இதையும் சொன்னார். நான் துடைத்துக்கொண்டேயிருக்கிறேன். இதற்கிடையில் ஜாகரதிக்கு நேரம் இல்லை.

சில நாட்கள் கழித்து செயற்கை நுண்ணறிவு இயக்கத்தை உலகெங்கிலும் பலர் எதிர்த்தனர். தொலைக்காட்சியில் அதுதான் முக்கிய செய்தி. செயற்கை நுண்ணறிவு துறையில் பங்காற்றிய ஒரு விஞ்ஞானி தற்கொலை செய்துகொண்டார். அவரது வீட்டை பரிசோதிக்கையில் அரசின் ஒப்பந்தத்தை மீறி ஏதோ செய்திருக்கிறார் என்று மட்டும் தெரியவந்தது. அது பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவை மனிதர்களுடன் இணைக்கும் செயலாக இருக்கலாம் என்பது ஊகம். அவருடன் வாழ்ந்தது அவரது மனைவி மட்டுமே. அவரையும் இரண்டு வருடங்களாகவே காணவில்லை. அவரை கண்டுபிடித்தால் ஏதேனும் தெரியவரலாம். அவரது புகைப்படம் காட்டப்பது. சூர்யா தொலைக்காட்சியை காட்டி ஏனோ துள்ளினான். உதட்டை பிதுக்கிக்கொண்டு அழுதான்.

“ என்னடா? ”

“ உஊ…. உ. ” ஒன்றும் புரியவில்லை.

தொலைக்காட்சியை கைக்காட்டினான். நிறுத்த வேண்டுமென்றானா?

“ அத நிறுத்தணுமா? ”

கையை கீழே தொங்குபோட்டு மண்டையை ஆட்டினான்.

“ நீயே போய் நிறுத்திக்கோ. ”

அவன் சட்டென ஏமாற்றமடைந்து என்னை பார்த்தான். மீண்டும் அவன் தொலைக்காட்சியை நோக்கி திரும்புகையில் அது அணைக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.