தெய்வநல்லூர் கதைகள் -4

This entry is part 4 of 10 in the series தெய்வநல்லூர் கதைகள்

இந்தத் தெருவில்தான் தெண்டிலு செந்தில் வீடு இருப்பது. இதற்கு அடுத்த தெரு மறக்குடித் தெரு. இங்கிருந்துதான் கிடா கருப்பையா வருவது. அதற்கு அடுத்த தெரு கோனாக்கமார் தெரு. இங்கிருந்துதான் “ஊளப்பால்” இசக்கி வருவது. தெண்டிலு மிக விவரமாக எங்கள் குழுவில் சேர்ந்ததுமே தனது பகுதியிலிருந்து வருபவர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களுடன் சேர்ந்து பள்ளிக்கு வருவது, வீட்டிற்கு செல்வது என அமைத்துக் கொண்டு விட்டார். ஆகவே அவர் குழுவிற்குள் ஒரு குறுங்குழுவை  உருவாக்கி விட்டார். எங்களுக்கு இது அங்கிட்டும், இங்கிட்டுமாக தெரிந்தாலும் வாக்குத் தத்தம் செய்ததை எண்ணி பொறுமை காத்தோம். எங்கள் பொறுமையை தனது முயற்சிகளுக்கான முன்னேற்றம் என எண்ணிக்கொண்ட தெண்டிலு, குழுவின் ஒவ்வொரு முடிவிலும் எதிர்ப்பை , மறுப்பைப் பதிவு செய்து கொண்டிருந்தார். அவரை அடக்க வழி கேட்டு குழும மூத்தோர் என்னை அணுகியிருந்தனர். மிக முக்கியமாக சிவாஜி, ஈத்தக்குச்சி முருகன் (மா முருகன்), டொம்ப்ளி செல்வம், டும்ரீக்கோல் குருசாமி போன்ற குழும மூத்தவர்கள் குழு இது குறித்து கவலை தெரிவித்தபடியே இருந்தனர். 

பள்ளி இடைவேளைகளில் பெண்கள் பெஞ்சின் உட்புறமிருந்து அவர் பதுக்கி வைத்திருக்கும் நெல்லிகாய், உளுந்து, வத்தல், காயம் சேர்த்து இடித்த உப்பு, பனங்கிழங்கு, தவுணு, கருப்பட்டித் துண்டும் எள்ளுப்புண்ணாக்கும், மிதுக்கம் பழம், வறுத்த புளியங்கொட்டை, வேகவைத்த மொச்சை, புளியம்பிஞ்சு, கொடுக்காபுளி போன்ற பண்டங்கள் உளவுத்துறை, தகவல் தெரிவிப்போர், உளவாளிகள் ஆகியோர் வலைப்பின்னல்கள் மூலம் கண்டறியப்பட்டு குழுவின் செயற்குழுவில்  அறிக்கையிடப்பட்டு அன்று நியமிக்கப்பட்டோர் மூலம் கைப்பற்றப்பட்டு ( பொம்பளப் புள்ளைகளுக்கு தெரியாமத்தான் ) குழுவின் முன்னிலையில் வைக்கப்படும். அளவு எவ்வளவாக இருப்பினும் சமமாகப் பங்கிடப்படும் (கருப்பட்டி சிறு துண்டெனில் அனைவர் நாக்கிலும் வரிசையாக ஒரு தேய்ப்பு தேய்க்கப்படும், கரைந்து மறையும்வரை). பெண்கள் இதை சாரிடமோ, டீச்சரிடமோ புகாரளிக்க இயலாது. ஏனெனில் வகுப்பறைக்குள் உணவுப் பொருளைக் கொண்டு வருவது தடை செய்யப்பட்டிருந்தது. ஆகவே பெண்கள் நாங்கள் அவர்களைக் காட்டிக் கொடுத்து விடாமலிருக்கவும், அதே நேரம் தங்கள் செயல்பாட்டைத் தொடரவும் ஒரு முடிவெடுத்திருந்தனர். அதாவதாகப்பட்டது எங்களுக்கும் ஒரு பங்கினை ஒதுக்கி வைத்து விட்டு அவர்கள் பங்கை ரகசியமாகக் காப்பாற்றிக் கொள்வது. (2௦12 ல் திருவானைக்கால் கோவிலில் சந்தித்த “மெஜுரா “ ஜெயலட்சுமி சொல்லித்தான் எங்களுக்கு தினமும் தின்பண்டங்கள் கிடைத்த ரகசியம் தெரிந்தது. கருமம், அதுவரை அது எங்கள் “தெறம” என்ற நினைப்பிலயே இருந்திருக்கிறோம்) 

இந்த நிலையில் வாரத்தில் இரண்டு நாட்கள் பெண்கள் குழுவில் இருந்து எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்ற நில் ரிப்போர்ட் எனப்படும் ஏதுமில்லை அறிக்கையே வந்தது. நாங்கள் முதலில் இதை சற்று கவனக்குறைவாகக் கையாண்டு விட்டோம். ஆனால் “அமுக்கு டப்பா” அருண்ராஜ் கொடுத்த சிறு தகவல் சிவாஜியை சிந்திக்க வைத்தது. அதாவது ஏதுமில்லை அறிக்கை குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு நாளில் மாலை இடைவேளை முடிந்ததும் கிடா மீதும், ஊளப்பால் மீதும் பனங்கிழங்கு வாசம் வீசியிருக்கிறது. சிவாஜி எப்போதுமே சற்று ஆழமாக வேலை செய்யக்கூடியவர். அவர் பெயருக்கேற்றார்போல் அவ்வளவு எளிதில் உணர்ச்சிகளை வெளிக்காட்டுபவர் அல்லர்.

சிவாஜி இரண்டு வாரங்கள் என்னிடம் கூட சொல்லாமல் ஒரு ஆய்வு செய்தார். அன்று மாலை பள்ளி விட்டதும் என்னை சந்திக்க என் வீட்டிற்கு வந்தார். செண்பக விநாயகர் மேடை எனப்படும் எங்கள் குழுவின் தலைமைச் செயலகத்தில் சந்திப்பு வேண்டாமெனச் சொல்லி எங்கள் ஆபத்து கால பதுங்கிடமான ஹரிஹரபுத்ரா பால்பண்ணையில்  (வீட்டை ஒட்டி சிறு சந்துக்கும் வீட்டுக்கும் நடுவே சுற்றிலும் மண்சுவர் ஒரு இரண்டடிக்கு எழுப்பப்பட்ட இரண்டு கிரவுண்டு இடம், வீட்டை ஒட்டி சரித்து இறக்கப்பட்ட தகரக் கூரை, உள்ளே நீளமான சிமின்ட் ஸ்லாப் – பால் அளந்து ஊற்ற , மீதமிருக்கும் இடங்களில் வளர்ந்த மரங்கள், பண்ணைக்குப் பின்புறம் ஒரு சாண எரிவாயு கிணறு – இதுவே பால்பண்ணை. மாலை 2 மணிநேரங்கள் மட்டுமே இயங்கும், மாட்டை ஓட்டி வந்து பால் கறந்து கொடுத்து விட்டு போவார்கள், வாங்குவோர் காத்திருந்து வாங்கிச் செல்வர், மீதி நேரம் “சும்மா இருத்தலே அம்மா பொருளென்று அறிந்திட்டேனே “ என இருக்கும். பின்னாட்களில் இந்த இடம் சில சம்பவங்களுக்குச் சாட்சி) சந்திக்கலாமென்ற போதே எனக்கு ஏதோ சிக்கல் எனத் தெரிந்து விட்டது. சிவாஜி தன் ஆய்வு முடிவை ரகசிய அறிக்கையாக எனக்கு மட்டும் சமர்ப்பித்தார். எப்போதும் பண்டங்களைக் கைப்பற்றச் செல்லும் குழுவினர் இருவராகத்தான் இருப்பார்கள். அறிக்கையின்படி ஏதுமில்லை அறிக்கையை இதுவரை தெண்டிலு செந்தில் நண்பர்கள் மட்டுமே சமர்ப்பித்திருக்கிறார்கள். அதாவது கைப்பற்றும் பணி தெண்டிலு கோஷ்டியின் ஆட்களிடம் ஒப்படைக்கப்படும்போது மட்டுமே ஏதுமில்லை அறிக்கை குழுவிற்கு வருகிறது. அதே நேரம் பிற நண்பர்களிடம் ஒப்படைக்கப்படுகையில் குழுவினரின் பண்டாரம் நிறைகிறது.

கடமை தவறாது அறிக்கையை சமர்பித்ததும்தான் சிவாஜி தன் உணர்வுகளுக்கு இடம் கொடுத்தார். (ஏல, பட்டவராயனுக்கு முட்ட நேந்து விட்ருப்பேன், நம்ம பண்டத்தைல்லாம் ஏமாத்தி, களவாண்டு தின்ன வாயிலல்லாம் புண்ணு வந்துருக்கும். நாம அவிங்களுக்கு சத்தியம் செஞ்சு கொடுத்துட்டோமுனுதான் அரவங்காட்டாம இருக்கேன். நீதான் பைசல் பண்ணனும் , ச்சொல்லிட்டேன்). அறிக்கை கையில் கிடைத்ததும் எனக்கு இரவு உறக்கம் தொலைந்து விட்டது. குழுவிற்கு இப்படி ஒரு நிலையா என ஒருபுறம் வேதனையும், துரோகத்தை எண்ணி ஆத்திரமும் பொங்கின. என்ன செய்வது, குழுவினருக்கிடையே விரிசல் வராமல் எப்படி இதைக் கையாள்வது என வெவ்வேறு விதங்களில் சிந்தித்து இரவுக் கனவுகளில் அனைத்து சாத்தியக்கூறுகளும் காட்சிகளாக வந்து விட்டன. காலையில் என்னிடம் முழுத் திட்டமும் இல்லை எனினும் ஒரு யுக்தி மட்டுமே இருந்தது. 

 அன்று பள்ளிக்கு சற்று விரைவாகச் சென்று “ஊதா சுகுமாரி“யிடம் நானே விசாரித்தேன்.  அவர் எங்களுக்கு உள்கை (இன்சைடர் என்றறிக) ஆக இருந்து அன்று பெண்களால் கொண்டுவரப்பட்ட பண்டங்கள் எவை எனவும், அவை பதுக்கப்படும் இடங்கள் எவை எனவும் தகவல் கொடுப்பவர். அவருக்கான பங்கை எங்கள் குழு நியாயமாகவும், நேர்மையாகவும் தவறாது கொடுத்து விடும். ஊதா வின் தகவல்படி ஏதுமில்லை அறிக்கை நாட்களிலும் பண்டங்கள் உள்ளே கொண்டுவரப்பட்டிருக்கின்றன, மட்டுமன்றி கையாடப்பட்டிருக்கின்றன. அவருக்குரிய பங்கும் அவருக்குச் சென்றுள்ளது என்பதால் அவருக்கு எல்லாமே சரியாக இருப்பதாகத் தோன்றியுள்ளது. எனக்கு சட்டென விஷயம் பிடிபட்டது. தகவலை ஊதா என்னிடம், தெண்டிலிடமும் மட்டுமே சொல்ல முடியும். ஏனெனில் நாங்கள் இருவரும்தான் வீட்டுப்பாட நோட்டை சார் சார்பில் பார்வையிட்டு சாரிடம் நிறைகுறை சொல்லவேண்டியவர்கள். ஊதா செந்திலிடம் தகவல் சொன்ன நாட்களில் மட்டுமே இந்த துரோகச் செயல் நடந்துள்ளது.

தெண்டில் மண்ட தனிக்குழு அமைத்துக்கொண்டு எங்கள் குழுவை உடைக்க முயற்சிப்பது தெளிவாகி விட்டது. நான் அவசரப்படக்கூடாது எனத் தீர்மானித்தேன். குழும மூத்தோரை மட்டும் அணுகி இவ்விஷயத்தை சொன்னேன். யாரும் எதிர்பாரா விதமாக எங்கள் குழுவில் இருந்த “முட்ட” ராமர்தான் அதிகம் உணர்ச்சிவசப்பட்டது. தன் தந்தையின் கத்தி எங்குள்ளது என தனக்குத் தெரியும் என்றும் அதை தான் கொண்டு வருவதாகவும் தெண்டிலை  காதறுத்து  விட்டுவிட வேண்டுமென்றும் உறுதிபடக் கூறினார். நாங்கள் அவரை ஆற்றுப்படுத்தி நாம் வழக்கமான பையன்கள் இல்லை என்பதால் சற்று யோசித்து முடிவெடுப்போம் என்றும் தலைமைக் குழுவின் மீது மூத்த உறுப்பினர்கள் நம்பிக்கை வைப்பது அவசியம் என்றும் சொன்னோம். அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

தற்காலிக அட்-ஹாக் இவ்வளவும் நடந்து நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை யோசித்துக் கொண்டிருக்கையில்தான் சுனா கானாவை பீடி குடிக்கும் வழக்கத்துக்காக குழுவிலிருந்து விலக்க வேண்டுமென தெண்டில் கோஷ்டியார்  குழுவில் புரட்சி செய்தது. இப்போது உங்களுக்குத் தெரிந்ததா தெண்டில் கோஷ்டியாரின் துரோக எண்ணம்?

சுனா கானா குழுவில் நீடிப்பது குறித்த விவாதங்கள் அவர் இல்லாதபோது பள்ளியிலும், தலைமைச் செயலகத்திலும் நடைபெற்றன. வாக்குவாதம் உச்சத்துக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் சிவாஜி தின்பண்ட ஊழலைக் குறித்து சொல்லிவிடவா என கண்களால் எனைக் கேட்பதும் நான் பொறுமையுடன் இருக்கும்படியும் சொல்வதும் தொடர்ந்தது. இந்த நிலையில்தான் சிவாஜி ஒரு அறிவார்ந்த காரியத்தைச் செய்தார். ஒரு மாலைக் கருக்கலில் அவர் என்னை குழுவின் பதுங்குமிடதுக்கு அவசராமாக அழைத்துச் சென்றார். அங்கு சுனா கானா இருந்ததைப் பார்த்ததுமே எனக்கு விஷயம் புரிந்து விட்டது. நான் திரும்பி சிவாஜியை முறைத்தேன். ஆனால் சுனா கானா என் எண்ணத்தைப் புரிந்து கொண்டவராய் பேசினார் – “ஏல, யார்ல அந்த தெண்டிலு ? ராமையா சார்வாள் மகன்தான ? ங்கொப்பனவாளி, ஈஸ்வரம்பிள்ள வீட்டு சந்து வழியாத்தான பள்ளிக்கூடம் வாரான்?….” என ஸ்வரம் பிடித்து அவரைத் தான் கை கால்களை முறித்து விடுவதாகச் சூளுரைத்தார்.

 நான் செந்தில் அவர்கள் அணிந்துள்ள  திருநீறின் மகத்துவத்தைச் சொன்னேன். ஆனால் சிவாஜி அதற்கு  எதிர்தர்க்கம் வைத்தார். “சாமானியத்தைக் காட்டிலும் விசேடம் சிறப்பெனினும் நித்தியப் பொருளில் நிலைத்திருக்கும் விசேடமும் பகுக்கத்தக்கதே ஆதலின் பகுக்க இயலா சமவாயத்தை இவ்விடம் செயல்படுத்தல் ஒவ்வாது” என தருக்கசங்கிரக தீபிகையின் சொல்லை ஆதார சுருதியாக்கி தன் தரப்பை முன்வைத்தார். கூடவே சம்பவம் நிகழும் தினத்தில் சுனா கானா தலைக் குளித்து திருநீறும் அணிந்து அன்று பீடி விலக்கி விரதமிருப்பின் சிறிய மகத் தை பெரிய மகத் சந்திப்பதில் யாதொரு விக்கினமும் இல்லையென்றும் பொருள்விளக்கம் அருளினார்.  வன்செயல்களின்றி மதிநுட்பத்தால் செயல்படுதலே சிறந்தது என நான் தந்த விளக்கம் பலவீனமாகியது. ஆக தெண்டில் காயமடைவது உறுதி என்றிருந்த சூழலில் “ஊழிற் பெருவலி யாவுள?” எனும் சொல் நிலைக்கும் விதத்தில் காட்சிகள் மாறின.

தெண்டில் செந்திலை தான் தாக்கப்போவதாகச் சூளுரைத்து சுனா கானா என்ற கார்த்திக் கணேசன் சென்றதும் நான் சிவாஜியைக் கடிந்து கொண்டேன். ஆனால் அவரோ நான் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காததாலும், தலைமைச் செயலக சந்திப்புகளுக்கு தனக்கு அழைப்பு வராத காரணத்தை சுனா கானா வற்புறுத்திக் (ஒங்கம்மா சத்தியமா சொல்லுல சிவாஜி…) கேட்டதாலும் தான் உண்மையைச் சொல்லவேண்டியதாயிற்று என்றார். 

தெண்டில் செந்திலின் திருநீறு மகிமையோ, குங்கும மகிமையோ, யாதென அறியோம், அவன் மீது அப்படி ஒரு தாக்குதல் நிகழாமல் விதி அவனைக் காத்தது. அதே நேரம் அவன் தவறுக்குத் தக்க தண்டனையும் கிடைத்தது. மறுநாள் தெண்டில் செந்தில் பள்ளிக்கு வரவில்லை. விஷயம் கசிந்திருக்குமோ என எனக்கும், சிவாஜிக்கும் ஐயம் ஏற்பட்டது. ஆனால் மறுநாள் கிடா கொண்டுவந்த தகவல் “தெண்டிலு க்கு அம்ம போட்ருக்கு “.  ஆக அடுத்த பதினைந்து தினங்கள் அவன் பள்ளிக்கு வர இயலாது. இருவிதங்களில் நானும் சிவாஜியும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் சிவாஜி எப்போதும் போல் தன் சீரிய சிந்தனைப் போக்கில் ஒழுகிச் சென்று ஓர் ஐயத்தை முன்வைத்தார். “தெண்டிலு பள்ளியூடத்துக்கு வந்ததும் சுனா கானா அவன அடிச்சாம்னா என்னல செய்ய ?”

நாங்கள் இருவரும் ஒரு வாரம் சென்றதும் சுனா கானாவைச் சந்தித்து செந்திலை மன்னித்து விடுமாறு கூறலாம் என நினைத்தோம். ஒரு வாரம் கழித்து சுனா கானாவே எங்களைச் சந்திக்க வந்ததும், அவர் கூறிய தகவலும் எங்களை ஒரே நேரத்தில் வருத்தமாகவும், நிம்மதியாகவும் ஆக்கியது. அந்த விஷயத்திற்கு முன்பு தெண்டிலு விஷயம் “எரி முன்னர் வைத்தூறு “போலக் கெட்டது. 

சுனா கானா மீண்டும் பணிக்குப் போகிறார். இம்முறை ஆடகலிங்கம் அவர்களின் எலுமிச்சைத் தோட்டத்திற்கு. அது ஒன்றும் கதிரெழச் சென்று நிழல் மறைய இல்லம் திரும்பும் பணியன்று. நெடிது நிற்கும் மேற்கு மலைத்தொடரின் கால் நகமெனக் கிடக்கும் ஊர்தான் தெய்வநல்லூர். அந்த மலைத்தொடர்களின் கீழே காடுகளை ஒட்டி இருக்கும் இடங்களில்தான் எலுமிச்சைத் தோட்டங்கள் இருக்கும். அங்கு பணி என்பது அங்கேயே தங்கி இருக்க வேண்டியது. காய்ப்பு முடிந்தால் ஒட்டுக்கன்று போடும் பணியும், பூப்பு தொடங்கி விட்டால் காய்ப்பு வரை தொடர் வேலையும் இருக்கும். மாதம் ஒருமுறை மட்டுமே ஊருக்குள் வர இயலும். யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி தொல்லைகளும், மான், முயல், உடும்பு போன்ற எதிர்பாரா ஊக்கப்பரிசுகளும் கிடைக்கும் இடம். வீட்டில் அவர் அப்பா புலியார் வற்புறுத்தலுக்கிணங்க தான் அப்பணியை ஒப்புக்கொண்டதாகச் சொன்னார். மறக்காமல் எங்களுக்கு காராச்சேவு வாங்கி வந்திருந்தார். 

இங்கிருந்து விடை பெற்றுப் போன  சுனா கானா ஐந்தாறு ஆண்டுகள் கழித்து பிறிதொரு நாளில் திரும்பி ஊருக்கே வந்து விட்டார். குறிப்பாக ஆடகலிங்கம் கழகப் பணியென சொல்லிவிட்டு கரகக் கலைஞர்கள் இருவரை தனி ஆட்டத்துக்கு தோட்டத்துக்கு அழைத்து வந்ததிலிருந்து பத்து நாட்களுக்குள். நான் சுனா கானாவின் முழுக்கதையையும் உங்களுக்கு சொல்லி விட வேண்டுமென்று நினைக்கிறேன். ஆகவே நாம் காலத்தால் முன்பின்னாகச் செல்லவேண்டியிருக்கும். தொடர்கிறீர்கள்தானே?   

சுனா கானா வின் எதிர் வீடு வான்மதி, நிறைமதி, முழுமதி ஆகிய மதி சகோதரிகளின் தந்தையான ஆடகலிங்கம் அவர்களின் வீடு. உள்ளூர் கழகத்தின் முக்கியப் பிரமுகர் அவர். மிக முக்கியமாக ஊருக்குள் ஸ்கூட்டர் வைத்திருந்த வெகு சில கனவான்களில் அவரும் ஒருவர். அந்தத் தெருவிலேயே வீடு என்று சொல்லத்தக்க கட்டிடங்கள் நான்கைந்து தான் உண்டு. ஆனால் இவர் வீடு அப்போதே இரண்டடுக்கு மாளிகை என உயர்ந்து முப்புறமும் உப்பரிகைகள் கொண்டு இலங்கியது. பலவண்ணக் கலவை நிறக் கண்ணாடிகளை சன்னலுக்குக் கதவென வைத்ததும், உப்பரிகைக்கு கைப்பிடி சுவர் கட்டாமல் பூப்பூத்த இரும்புக் கம்பிகளை வைத்து வேலி கட்டியிருந்த அழகையும்  பார்க்கவே பலரும் அவர் வீடு இருந்த தெருவின் வழியே சென்றார்கள். 

அந்தத் தெருவில் நான்கைந்து ஓட்டுச் சாய்ப்பு உள்ள வீடுகளைத் தவிர்த்து பிற வீடுகள் மண்ணும், இன்று அறிவுஜீவிகளால் இகழப்படும், தம்மை ஏற்காதோர் மீது வீசப்பபயன்படுத்தும் பசுஞ்சாணமும் கரைத்த கலவையால் ஆண்டுக்கொருமுறை பூசி மெழுகிக் காக்கப்பட வேண்டியவை. மேற்கூரை என நிற்கும் ஒன்று மூன்று அல்லது இரட்டை அடுக்கு தென்னங்கிடுகுகளால் ஆனது. ஈராண்டுக்கொருமுறை மேலடுக்கையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மொத்த அடுக்குகளையும் மாற்றியாக வேண்டும்.  ஊருணிக்கு ஆண்களும், முள்ளுக்காட்டு பொட்டலுக்கு பெண்களும், வீதியின் ஓர சாக்கடைகளில் குழந்தைகளும் சென்று செய்யும் காரியத்தை செய்ய இவர் வீட்டுக்குள்ளேயே மூன்று அறைகள் கட்டியிருந்தது ஊராரின் வியப்பிற்கும், பொறாமைக்கும் ஆளாகியது. மதுரையிலிருந்து வேன் ஒன்றில் வந்திறங்கியோர் அதுவரை வயல்களில் மட்டுமே இருந்த பம்ப் செட் போன்ற ஒன்றை இவர் வீட்டில் நிறுவினார்கள். அதுவரை ஊரில் இரு இடங்களில் மட்டுமே திறந்தால்  நீர் வரும் குழாய்கள்  ஆடகலிங்கம் அவர்களின் வீட்டிற்குள்ளேயே இருந்தன. குறிப்பாக வழுவழுப்பான பீங்கான் கோப்பைக்கு மேலே இருந்த குழாய் சமையலறைக்கு அருகிலேயே பொருத்தப்பட்டதும், சமையலறைக்கு உள்ளேயே திறந்தால் எப்போதும் தண்ணீர் வரும் குழாயும் என்பது ஊர்ப்பெண்களை அயத்துப் போகச் செய்தது. அவர்கள் வேலை செய்யும் விதத்தை உள்ளூர் பம்ப் செட்டு மெக்கானிக் “பூம்பருப்பு” சுடலை கூர்ந்து கவனித்து தனது மேலான கருத்தை வெளியிட்டார் – “பூட்ஸும், புல் டவுசர் பெல்சும் போட்டுட்டு வேல பாக்காங்க. செருப்பு போட்டுக்கிட்டு வேலயப் பாத்தா மயிராவே வெளங்கும் “. பூம்பருப்பு சுடலை பிறிதொரு நாளில் பரமேசுவரப் பிள்ளை வயல் கிணற்றில் மோட்டார் பழுது நீக்கச் சென்று “கரண்டடித்து” கிணற்றில் வீழ்ந்து கைலாயம் ஏகினார். “பூம்பருப்பு” சுடலை கதைக்கு பிறகு வரலாம்.

பார்த்தீர்களா, சுனா கானா கதையைச் சொல்ல வந்து எங்கோ வந்து விட்டோம். அவ்வப்போது இவ்வாறாய் நிகழ்வது உங்களுக்கு சம்பவங்களின் முழுப் பரிமாணமும் புரிய வேண்டும் என்பதற்கே. ஆகவே இதையே கூறுமுறை எனக்கொண்டு இப்பனுவலை ஓதி உணர்வீராக.  

அத்தெருவில் உள்ளோர் அனைவருமே ஒருவிதத்தில் சொந்தங்களாக இருப்பார்கள். இன்னுமொரு விஷயம் உங்களுக்குச் சொல்ல விட்டுப் போயிற்று. மு மாரியப்பன், முட்ட ராமர், சுனா கானா, சிவாஜி ஆகியோரும் ஒருவருக்கொருவர்  உறவே. ஈண்டு விஷயம் என்னவெனில் சுனா கானா வுக்கு ஆடகலிங்கம் ஏதோ ஒருவகையில் சொந்தம்.  ஆடகலிங்கம் புலிச் சுப்பையாவாளை அவ்வப்போது தன் அரசியல் எதிரிகளுக்கு எதிரான ஆட்டங்களிலும், அரசியல் நடவடிக்கைகளிலும் பங்குபெறச் செய்வது வாடிக்கை. பதிலாக காவல் நிலையங்களில்  புலிச் சுப்பையா விருந்தாடப் போகும் நேரங்களில் அதைத் தடுத்தாட்கொண்ட தகைமை சால் பெரியோராக ஆடகலிங்கம் வந்தருள்வார். புலி சுப்பையா தம் மகன் இங்ஙனம் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி மகிழ்வுடன் தொழில் கற்கும் கையறு நிலையில் தான் இருப்பதை  ஆடகலிங்கத்திடம் நறுந்தேறல் மாந்தி இருவரும் நட்பூக்கம் கொண்ட நற்பொழுதில் இயம்பியதால் வந்த வினைதான் ஆடகலிங்கத்தின் கழகத் தொடர்புகளால் சுனா கானா ராஜபாளையம் உணவு விடுதிக்குப் போனது. ராஜபாளையத்தில் தம்  கழகத் தொடர்புகளைப் பயன்படுத்தி ஆடகலிங்கம் பெற்றுத்தந்த பணியினை பணிப்பயிற்சிக் காலமெனக் கொண்டு சுனா கானா திரும்பி வந்ததும் ஆடகலிங்கம் சுனா கானாவை மீண்டும் பானம் தயாரிக்கும் பெரும்பணியில் ஈடுபடுத்திடவே விழைந்தார். ஆனால் புலிச் சுப்பையா நயந்தும், பணிந்தும், முறைத்தும் தம் மகனை அப்பணியில் இறங்க விடவில்லை. ஆகவே ஆடகலிங்கம் தம் எலுமிச்சைத் தோட்டத்திற்கு அனுப்பி நான்கைந்து ஆண்டுகள் வைத்திருந்தார். ஆனால் சுனா கானா ஊருக்குத் திரும்பும் மாத விடுமுறை தினங்களிலும் கூட தன் வீட்டிற்கு ஒரு எலுமிச்சை கூட எடுத்து வருவதில்லை. ஆடகலிங்கம் வீட்டிற்குக் சுனா கானா கொணர்ந்து வருவதிலிருந்து விரல்களை அகல விரித்தால் அவற்றின் இடையே நழுவி விடும் இரு பழங்களை மனமுவந்து ஆடகலிங்கம் மனைவியார் சுனா கானா வீட்டிற்குத் தருவார். 

எலுமிச்சைத் தோட்டப்பணியை சுனா கானா விட்டுவந்த காரணத்தை அவர் தந்தையார் சுப்பையா தனது புலிவேச ஆட்டத்திறன்கள் அனைத்தையும் பயன்படுத்தியும் சுனா கானா சொல்ல மறுத்து விட்டார். இக்குறையை அவர் ஆடகலிங்கத்திடம் முறையிட்டு அழ அவர் பதறி சுனா கானா வை வற்புறுத்த வேண்டாமெனவும் பையன் நல்லவன், நேர்மையானவன், காடு அலுத்து வீடு தேடி வந்திருப்பான் எனவும் சமாதானங்கள் பலகூறி இனி சுப்பையா சுனா கானாவிடம் அவர் தோட்டப்பணியை விட்டுவிட்டு வந்த காரணத்தை வினவ வேண்டாமென கேட்டுக்கொண்டார். மிகத்துல்லியமாக ஆட்டைக் கவ்வும் புலிவேசக்காரனான சுப்பையா அவ்வாறெனின் தன் மகனுக்கு வேறோர் பணி பெற்றுத் தரவேண்டுமென்று கோரிக்கை வைத்தார். வேறு வழியின்றி ஒப்புக்கொண்ட ஆடகலிங்கம் ஒரு வரலாற்றுப் புரட்சியை ஏற்படுத்தினார்.

தம் கழகத்தின் தலையாயப் பணியாகிய நிதி திரட்டலுக்குச் சென்றிருக்கையில் செட்டியாரம்மா அதுவரை கழகத்திற்கு அளித்த நிதிக்குப் பகரமாக கழகத்தாரிடம் ஒரு சேவையையேனும் பெற்றுவிட வேண்டும் என நில்லா நின்ற  ஊசிமுனைத் தவத்திற்கு காலம் கனியும் வேளை வந்தது.  பரணி அப்பா தனக்கு பணி செய்ய ஒரு ஆள் வேண்டுமெனக் கேட்டார். நல்வாய்ப்பை நழுவ விடாது ஆடகம் சுனா கானாவை செட்டியாரம்மா வீட்டில் பணிக்கு சேர்த்துக் கொள்ளுமாறு விண்ணப்பித்தார்.

பரணி-சுனா கானா பள்ளி விவகாரம் வேறு இரு வீட்டாரையும் சங்கடப்படுத்தியதால் ஆடகலிங்கம் பரணி அப்பா, புலியார் ஆகியோர் செட்டியாரம்மாவின் வீட்டு மாளிகை முகப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். பரணி திருநவேலி க்குப் படிக்கப்போய் விட்டதாலும், சம்பவங்கள் நிகழ்ந்து ஆண்டுகள் கடந்து விட்டதாலும், இருவரும் பாங்குற வளர்ந்து விட்டதாலும்  சுனா கானா இங்கு பணி செய்வதில் யாதொரு சிக்கலும் இல்லை என ஆடகலிங்கம் உரைத்தார். புலியார் மெல்லத் தயங்க உள்ளறையிலிருந்து குகை கிளம்பி வெளிவந்த கிழப்புலி எனத் தோன்றிய செட்டியாரம்மா புலிச் சுப்பையாவிடம் “ டே புலி, ஒம்மவன வரச்சொல்லு. அவன்ட்ட நான் பேசிக்கிடுதேன்” என்றும், மகனாகிய பரணி அப்பாவிடம்  “நுமுந்த பையனை வீட்ல வேலைக்குன்னு சொன்னா வருவானா, அவன வயல்ல வேலைக்குச் சொல்லு. அறுப்புக்கு அறுத்ததுல எட்டுக்கு ஏழரை கட்டுதான் வீட்டுக்கு வருது. தலன விடுச்சேசி தோகன  பட்டிதே ….” என தெலுகில் முத்தாய்ப்பு வைத்து மொத்தம் முப்பதே நொடிகளில் முக்கால் மணிநேரப் பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டுவந்து அருளினார்.

சுனா கானா செட்டியாரம்மா வீட்டில் வேலைக்குப் போக ஆரம்பித்த காலங்களில் நான் ஊரில் இல்லை. மேல்நிலைப்பள்ளிப் படிப்புக்கே நாங்கள் குடும்பத்தோடு ஊரில் இருந்து நெல்லைக்கு வந்து விட்டோம். இந்தக் காலங்களில் எங்கள் குழுவிலிருந்து சுனா கானாவுடன் நெருக்கமாக இருந்தது சிவாஜி எனப்படும் சா கணேசன் மட்டுமே.  ஆகவே சிவாஜி சொன்னவற்றின் அடிப்படையிலேயே சம்பவங்கள் இனி உங்களுக்கு விளக்கப்படும்.

பரணி வீட்டில் பணி என்பதை முதலில் சுனா கானா மிகக் கடுமையாக எதிர்த்திருக்கிறார். புலிச் சுப்பையாவின் எந்த மிரட்டலும், கெஞ்சலும் செல்லுபடியாகவில்லை. சுனா கானா முன்னர்  தான் பற்களும், நகங்களும் இழந்து விட்ட புலியே என உணர்ந்தார் சுப்பையா. ஆனால் செட்டியாரம்மாவை மட்டுமாவது சுனா கானா சந்தித்து வேலைக்கு வரப்போவதில்லை என்பதைத் தெரிவிக்குமாறு வேண்டிக்கொண்டார்.  சுனா கானா மிகுந்த தயக்கத்துடன்தான் செட்டியாரம்மா வீட்டிற்குப் போனார். வாயிலில் எப்போதும்போல் மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்தார் பரணியின் அப்பா. சுனா கானா படியேறும்போதே அவர் எழுந்திருந்தார். உட்பக்கம் திரும்பி “அம்மா, கணேசடு ஒச்சாடு “ என்றார். இவர் படியேறி ஓரத்தில் நின்று “அய்யா, அப்பா சொன்னார். ஆனா…” எனும்போது செட்டியாரம்மா வாயிலில் தோன்றினார். 

“கணேசா , உக்கார்” என மோடாவைச் சுட்டினார். சுனா கானா சற்று தடுமாறி “இல்லம்மா, பரவால்லம்மா…”எனத் தயங்க 

“உக்கார்டா “ – கைகளும், கால்களும் செய்யும் பணியை செட்டியாரம்மா குரல் வழியாகவே செய்ய முடிந்த திறம் படைத்தவர். செட்டியாரம்மா வெகுகாலமாகவே அதாவது பிறந்தபோதே இப்படித்தான் பிறந்திருப்பாரோ என எண்ணவைக்கும் தோற்றத்தில் இருப்பவர். வெண்மையா, சந்தன நிறமா எனப் பிரித்தறிய முடியா நிறத்தில் ஒற்றை இழை சிவப்புச் சரிகைப் புடவை. எப்போதும் வெள்ளை ரவிக்கை. பெரிய ஒட்டு எலுமிச்சை அளவில் கொண்டை. கருப்பும்,தங்க நிறமும் கண்ட கண்ணாடி. கழுத்தில் ருத்திராட்சம் போல ஒரு மாலை. முகப்பிலிருந்தே இறங்காமல் ஊரைக் கட்டிவிடும் ஆள். 

சுனா கானா உடனே அமர்ந்தார். செட்டியாரம்மா உள்ளே திரும்பிய நொடியில் பரணியின் அம்மா ஒரு செம்பில் நீரும், ஒரு பெரிய டம்ளரில் மோரும் கண்டு வந்து சுனா கானா முன்பு வைத்தார். “ஏண்டா நீ பள்ளிக்கூடம் போகல்ல?” 

“அம்மா , அது …”

“கணேசா, உம் படிப்பு வேற. நீ வேலக்கின்னு இங்க சேர வேண்டாம்,  இங்க இரு. பரணிக்கு வெவரம் பத்தாது. நீ அவனுக்கும் மூத்தவன்தான… அவனுக்கு கணக்கு, வழக்கு, வெதப்பு, அறுப்பு ன்னு ஒண்ணும் தெரியாது. நாளைக்கு அவன் வளந்தான்னா,  கூட நிக்க அவனுக்கு ஆள் கெடையாது. இருந்து அவனப் பாத்துகறியா?” – செட்டியாரம்மா சுனா கானாவின் கண்களை நேரே பார்த்தவாறே கேட்டார்.

சுனா கானா எதுவும் மறுக்காமல் தலையசைப்பில் சம்மதம் தெரிவித்தார். செட்டியாரம்மா எழுந்தார் – “ லெச்சு , கிடங்கி பீகம் வாடு தக்கர ஈ “ என்றார். கிடங்கி சாவியை பரணி அப்பா எழுந்து சுனா கானாவிடம் கொடுத்தார். சுனா கானா வாங்கிக் கொண்டு செட்டியாரம்மாவை ஏறிட்டார்.

“நம்ம கிட்டங்கி பின்னாடிதான் இருக்கு,தெரியும்ல. அதைப் பார்த்துக்கோ இப்ப. என்ன வருது, என்ன போகுதுன்னு நீ வந்து சொன்னாப் போதும். தை மாசம் வரட்டும். ரைஸ் மில்லையும் பார்த்துக்கோ. ஆனா சம்பளத்த நீதான் வாங்கிக்கணும். உங்க அப்பன் வந்தான்னா பைசா கிடைக்காது. சொல்லிடு.. பேங்க் அக்கவுண்டு ஆரம்பிச்சு அதுல போடு, இல்லன்னா காகி சார்ட்ட சொல்லி போஸ்ட் ஆபீசுல கணக்கு எடுக்க சொல்றேன், அதுல போட்டு வச்சிக்க. என்ன ?” – சுனா கானா வாய்க்குள் இருந்த மோர் கன்னங்களுக்கிடையே உருண்டோடும் சப்தம் வெளியே கேட்குமளவு தலையாட்டினார். 

வீட்டிற்குள் நுழையும் தருணத்தில் செட்டியாரம்மா திரும்பினார் – “கணேசா, இனுமே இங்கேயே சாப்டுக்கோ. அதுக்குன்னு வீட்டுக்கு போகவேண்டாம்னு சொல்லல. நம்ம வீட்லதான் இனி உனக்கு சாப்பாடு …. என்ன?” – பதிலுக்கு காத்திருக்கும் வழக்கமே இவருக்குக் கிடையாதா என்று தோன்ற வைக்கும் விதத்தில் செட்டியாரம்மா உள்ளே போய்விட்டார்.

அவ்வாறாக பரணி வீட்டில் பணியில் சேர்ந்த சுனா கானா வயலிலிருந்து பண்டங்களை கிட்டங்கிக்கு ஏற்றி வரும் ட்ராக்டர் ஓட்டும் பணியினையும் ஒரே மாதத்தில் ஏற்றுக்கொண்டார். அதுவே மு மாரியப்பனால் “அவம் செட்டியாரம்மா வீட்ல ட்ராக்டருதானடே ஓட்டுதான் “ என சிறப்பித்துக் கூறப்பட்டது. முதலில் சுனா கானா வைக் கண்டு சற்று முகம் சுளித்த காகி சார்வாளும் பத்தே நாட்களில் கிட்டங்கிக் கணக்குகளில் வரவுகளும், செலவுகளும் சரியாக அமர்வதைக் கண்டு வியந்தார். வர வேண்டிய பாக்கி இருக்கும் இடங்களுக்கு அவர் சுனா கானாவோடு சென்று திரும்புகையில் பேரேட்டில் வரவுப் பக்கங்களை மட்டுமே நிரப்பும்படி இருந்தது. காகி சார் அதன்பின்னர் சுனா கானா வின் இத்தகைய சிறப்புகளுக்கு தன்னிடம் அவர் பள்ளிப் பயின்றதே என சொல்ல ஆரம்பித்தார் ( சுனா கானா இல்லாத நேரங்களில்தான்). அவர் அடிக்கடி சொல்வது – “எலேய், எங்கிட்ட படிச்சவன் எவனும் வீணாப் போனதுல்ல தெரியுமா? இந்தா, சுனா கானாவப் பாத்தியா, அவன் இம்புட்டு உசரத்துக்கு வந்ததுக்கு நான் அன்னைக்கு கண்டிச்சு சொல்லிக் கொடுக்கக்கண்டுதான் …”.  ஆனால் நாங்கள் அன்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட , ஆனால்  கேள்விப்படுகையில் வியந்த சம்பவமும் நடந்தது. அன்று வியந்தது முப்பது ஆண்டுகள் கழித்துப் புரிகிறது.

பரணி திருநவேலி பள்ளியிலிருந்து விடுமுறைக்கு வந்த முதல்நாளில் சுனா கானாவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். செட்டியாரம்மா அவரிடம் இருபத்தைந்து நொடிகள் மட்டுமே சுனா கானா குறித்து பேசியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. சுனா கானாவைப் பார்த்து பரணி “சுனா கானா, எப்டிடே இருக்கே ?” எனக் கேட்க பதிலுக்கு இவர் “ நல்லாருக்கேன்”  என ஆரம்பித்து எப்படி முடிக்க எனத் தடுமாறி ..”அய்யா” என்று இழுக்க பரணி “டே, இதென்ன புதுசா ங்கொய்யா? பரணின்னே சொல்லுடே “ என்று சொன்ன கணத்திலிருந்து இருவரும் மாறிப் போனார்கள்.

பரணி கல்லூரிப் படிப்புக்குப் போய் விடுமுறைக்கு வரும்போதெல்லாம் சுனா கானா புத்தூக்கம் கண்டவராக ஆகிவிடுவார். ராஜபாளையம், மதுரை, திருநவேலி எனச் சென்று படம் பார்ப்பது, தோப்பில் பரணி பார்லி வடிநீர் அருந்த சுனா கானா காவலிருப்பது, குற்றாலத்துக்கு குளிக்கப் போவது, பார்டர் கடையில் சாப்பிடப்போவது, தலையணை வழுக்கப்பாறை அருவிக்குப் போவது, போகாப் பொழுதுகளில் புளியங்குடிக்குப் போய் வீடியோ கேசட் எடுத்து வந்து படம் பார்ப்பது என இருவரும் சேர்ந்துதான் திரிந்தார்கள்.

சிவாஜியையும் சில முறைகள் ராஜபாளையத்துக்கு சினிமா பார்க்க அழைத்துச் சென்றுள்ளனர். இங்கும் நான்கைந்து ஆண்டுகள் வரை சுனா கானா பணியாற்றியிருப்பார். அதற்கு அடுத்த ஆண்டுகளில் அவருக்குத் திருமணப்பேச்சை எடுக்க உத்தேசித்திருப்பதாக புலியார் பிள்ளையார் கோவில் மண்டபமாகிய செய்தி ஒலிபரப்புத்துறை அலுவலகத்தில் தெரிவித்திருந்தார்.

ஒரு நாள் மாலையில் சிவாஜி வீட்டிற்கு வந்த சுனா கானா சிவாஜியுடன் வெளியே போக விரும்பியதாகச் சொல்லி நாங்கள் படித்த பள்ளி, செண்பக விநாயகர் கோவில் மேடை, எங்கள் வீட்டுப் பின்புறத் தோட்டம், வீதிகள், இலங்குளத்துக்கரை, உமையொருபாகன் கோவில், தேரடி முதலான இன்னபிற இடங்கள் யாவற்றையும் சைக்கிளில் சென்று பார்வையிட்டிருக்கிறார். சிவாஜி அன்று இரவு வீடு திரும்புகையில் ஆடகலிங்கம் அவர்கள் தன் மூத்த மகளுக்குத் திருமணம் செய்ய நிச்சயித்த திருமணப் பத்திரிக்கையைக் கொடுத்துச் சென்றதை அறிந்தார். மணமகன் ராஜபாளையத்தை அடுத்த மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் எனக்கண்டார். ஊரிலேயே முதன்முறையாக இக்கல்யாணம் வீட்டில் அல்லாமல் ராஜபாளையத்தில் ஒரு திருமண மண்டபத்தில் நடக்க ஏற்பாடாகி இருந்தது. 

மறுநாள் காலையில் சிவாஜி வீட்டிற்கே வந்து அவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பிய மு மாரியப்பன் பதட்டத்துடன் சொன்னார் – “ஏல, நம்ம சுனா கானா மருந்தக் குடிச்சிட்டாம்ல. ஜவஹர் டாக்டர் ஆசுபத்திரிக்கு இப்பதாம் தூக்கிட்டு போனாக. வாரியா, போயி பார்ப்போம் “. இவர்கள் சென்று பார்க்கையில் சுனா கானா எனும் சுப்பையா கணேசனின் உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. வாழ்க்கையில் பீடி தவிர வேறெதுவும் குடிக்காத, எங்களைக் குடிக்கவிடாத , தனக்குக் கிடைத்த ஒவ்வொரு பண்டத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்ட, தன் துக்கத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளாத பிரியம் மிக்க நண்பர் சுனா கானா  இவ்வாறாக மீண்டும் ஒருமுறை மீள வரமுடியா விதத்தில் எங்களிடமிருந்து சொல்லாமல் விடைபெற்றுக் கொண்டார்.

அதிலிருந்து இரண்டு ஆண்டுகளில் மதி சகோதரிகளில் மூத்த மதிக்குப் பிறந்த ஆண்குழந்தைக்கு கணேஷ் என்று பெயரிடப்பட்டிருந்தது. அதற்கு சில ஆண்டுகளுக்குப் பின் பிறந்த பரணியின் மகனுக்கும் ஸ்ரீகணேஷ் என்ற பெயர்தான். சிவாஜியின் மூத்த மகள் பெயர் கணேஷ்வரி.

கிட்டத்தட்ட ஈராறு ஆண்டுகாலம் எங்களுடன் நட்பைப் பேணிய சுனா கானா மரணம்தான் எங்கள் தெய்வநல்லூர் நட்புக் குழுவின் முதல் மரணம். உலகியல் முறையில் மரணத்தை உணர்ந்த, ஆனால் புரிந்துகொள்ள இயலாத இளமையின் தொடக்க வயதுகளில் இருந்தபோது நிகழ்ந்த மரணம். எங்களை முதிர்ச்சி அடையத் தூண்டிய முதல் மரணம். 

மீண்டும் சுனா கானா எலுமிச்சைத் தோட்டத்திற்குப் பணிக்குப் போனபின் உள்ள காலத்திற்கு வருவோம். இந்த இடைப்பட்ட காலங்கள் ஆர்வமூட்டும் பல சம்பவங்கள் நிறைந்த காலம். அதிலும் அவ்வப்போது சுனா கானா வருவார் என்பது ஒரு ஆறுதல்.

தெண்டில் மண்டையன் தலைக்கு தண்ணி ஊற்றப்பட்டதும் பள்ளிக்குத் திரும்பினார். முகத்தில் கரும்புள்ளிகளாக நான்கைந்தும் நாக்கில் இரண்டு மூன்று சூட்டுத்தழும்பு போன்ற தழும்புகளுமாக இருந்தார். அம்மை போட்ட ஆளை கேலி பேசுவது தெய்வக்குற்றம் என “அமுக்கு டப்பா” அருண்ராஜ் ( அன்னார் ஒரு கிறிஸ்தவர் என்பது குறிப்பிடத்தக்கது) சொன்னதால் தெண்டில் அனுதாப மற்றும் அச்சத்தின் வாய்ப்புகளால் காப்பாற்றப்பட்டார். ஆனால் இச்சம்பவத்தை சிவாஜி ராஜதந்திரத்துடன் கையாண்டார் –“ ஏமாத்தி திங்க ஐடியா கொடுத்தாதான் வாயிலயும் அம்ம போடும்னு எங்க ஆச்சி சொன்னா. வாங்கித் தின்னவனுக்கும் வராம இருக்கணும்னா  மாரியம்மன் கோயிலுக்கு செவ்வாக்கெழம பதினொரு சுத்து சுத்தி மாப்பு சொல்லணுமாம். ஆனா தெண்டிலுக்கு ஏன் அம்மப் போட்டுச்சுன்னு தெரியலயே “ என அவர் ஆச்சியின் உடல்மொழி மற்றும் சொல்லிழுப்பு முறைகளை மனதில் கொண்டு உடலில் காட்டி அருளினார். குறிப்பாக கடைசி வரியில் “கோழிக் கொடலு” எனச் சிறப்பித்துக் கூறப்படும் அவரது ஆச்சியின் வழிவந்த பரம்பரைத் திறன் பெரிதும் வெளிப்பட்டதாக குழும உறுப்பினர்களால் சிவாஜி வெகுவாகப் பாராட்டப்பெற்றார்.

~oOo~

இங்கு ஒரு சிறு இடைவெளி. வாசித்து வரும் நண்பர்கள் பலரும் இங்கு தோன்றும் வரலாற்று மாந்தர்களின் “சிறப்புப் பட்டங்கள்” குறித்து விளக்கம் தேவையென கேட்டுள்ளார்கள். சில மாந்தர்களுக்கு அவ்வவ்வாறே விளக்கப்பட்டிருந்தாலும் சிலருக்கு மேலதிக விளக்கம் தேவை எனப் புரிகிறது. இங்கு சிலரது பட்டங்களுக்கான பெயர் வரலாறு காலங்கருதி சுருக்கமாக உரைக்கப்படுகிறது.

அவ்வாறே இனி வரவிருக்கும் பட்டங்களுக்கான காரணமும் உடனேயே அடைப்புக்குறிக்குள் விளக்கப்படும் என்பதும் இவ்வரலாற்று நூலின் கூறுமுறைகளில் “புதியன புகும் கால வகையின “ வற்றில் ஒன்றாக ஆகிறது என அறிக. 

தெண்டில் மண்டை செந்தில் – செம்பட்டை நிற முடி குட்டையாக வெட்டப்பட்டு அறுப்பு முடிந்த நெல்வயலென நட்டுக்கிட்டு நிற்கும் முடிகள் காதுக்கு மேலிருந்து மட்டுமே காணப்படுவதாலும், பிறர் பேசக் கேட்கையில் அன்னார் செய்யும் தலையசைப்பு வேலியில் பெட்டையைக் காத்து நிற்கும் ஓணானின் (தெண்டில் என்பது ஊர்ப்பெயர்) தலையசைப்பை ஒத்திருப்பதாலும் மேல வீதி கு மாரியப்பனால் அளிக்கப்பட்ட பட்டமென அறிக

கிடா கருப்பையா பெயர்க்காரணம் முன்பே சொல்லப்பட்டது

ஊளப்பால் இசக்கி என்ற எசக்கி – கன்று பிரசவித்த பத்து நாட்களுக்குள் கறக்கப்பட்ட பால் அதன் கொழுப்புத் தன்மையால் மிக விரைவிலேயே கெடுமணம் எழுப்பும் (ஊளைப்பால் என்பார் எம்மூர் அறிஞர் அய்யாக்கள்) என்பதால் கன்று ஈன்ற மாட்டின் பாலை விற்பனைக்குக் கொடுப்பதில்லை. அது அறியாமல் இசக்கி ஒருமுறை கைமாறுதலாக ஊளைப்பால் வைத்திருந்த கேனை டைமண்ட் டீ ஸ்டாலுக்குக் கொடுத்து விட டீக்கடை உரிமையாளரான கரிமாஅழகன் என்ற கருப்பையாவால் பட்டமளிக்கப்பட்டவர்.

டும்ரீக்கோல் குருசாமி – எம் குழுவின் தலைமைக் குழு செயலாளராகிய இவரே எம்மால் பட்டமளிக்கப்பட்ட பெருமையை முதலில் பெற்றவர். கள்ளன் போலீஸ் விளையாட்டில் போலீசாருக்கு மட்டுமே துப்பாக்கி அளிக்கப்படுவது மரபு. அவர்கள் குரலால் குண்டு வெடித்துவிட்டு அது யாரைத் தாக்கியது என்றும் சொல்ல வேண்டும். அவ்வாறு குண்டாலும், குரலாலும் தாக்கப்பட்ட திருடர்கள் மரணமடைவதும், காயமடைவதும் போலீஸுக்கும், திருடருக்கும் இருக்கும் உறவின் அடிப்படையில் நிச்சயிக்கப்படும். இதில் போலீசாக இருக்கும் நாங்கள் சுடுகையில் எங்கள் துப்பாக்கி “டுமீல்” என்றே குரல் குண்டு வெடிக்கும். ஆனால் குருசாமி காவல்துறை பொறுப்பேற்று களமிறங்குகையில் அன்னாரது துப்பாக்கி “டும்ரீக்கோல்” என்றே குரல் குண்டு வெடிக்கும். அதுவும் வெடிப்பதற்கு முன்னர் “டுமு, டுமு, டுமு, டும்ரீக்கோல் “ என ஒவ்வொரு டுமு  விலும் வேகம் கூட்டப்பட்டு டும்ரீக்கோலில் உச்சஸ்தாயியை அடையும். – “ஏங்குள்ளது பெசல் துப்பாக்கி. சிவகிரி வரை சுடும்லா. அதான் ..” என அப்போதே அதி நவீன துப்பாக்கியைத் தன் பயன்பாட்டிற்கென கண்டுபிடித்து பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளுக்கும், தனித்தமிழ் ஏமான்களுக்கும் கடும் அறைகூவல் விடுத்தவர் குருசாமி என்றறிக.

அமுக்கு டப்பா அருண்ராஜ் – நீளமாக வளரும் கிளிமூக்கு மாங்காய்க்கு  சில நேரம் கிளையில் கீழ்ப்பாகம் அழுந்தி விட்டால் அடையும் வடிவத்தை ஒத்த உடலமைப்பாலும், வகுப்பில் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் காட்டும் உடல் மற்றும் முக பாவனைகளின் அடிப்படையில் கணித ஆசிரியர் இஸ்மாயில் சார் அவர்களால் அளிக்கப்பட்ட பட்டம் என அறிக.( ஏல, நீ இருக்க தெரு பேருதானால கேட்டேன். அதுக்கும் பதில் சொல்லாம அமுக்கு டப்பா கணக்கா நிக்கே, தடிமாடு..”. – திரு. இஸ்மாயில், 1985 ஆம் ஆண்டின் மழைக்கால பிற்பகல் ஒன்றில், தெய்வநல்லூர் கெசட்டியர், வால்யூம் 19) 

ஈத்தகுச்சி முருகன் – எவ்வளவு சிறிய டவுசர் வாங்கினாலும் நில்லாத துடி இடையாளர் என்பதாலும், “என்புதோல் போர்த்த உடம்பு” என்பதன் மெய்விளக்கமாகத் திகழ்ந்ததாலும் காகி சார்வாளால் பட்டமளிக்கப்பட்டவர்

முட்ட ராமர் – அன்னாரது மூத்த சகோதரர் வைத்திருந்த கடையின் இயல்பாலும், அன்னார் பள்ளிப் பாடங்களில் காட்டும் செயல்திறத்தாலும்  நன்கு படிக்கும் கெட்ட குணமுடைய கு ராமர் எனும் வேண்டப்பட்ட எதிரியிடமிருந்து அடையாளம் பிரித்துக் காணவேண்டிய அவசியத்தால் “காதுநுள்ளி அருணாசலம் “ சார்வாளால் ( அவரது தண்டனை அடிமுறை என்பதே காதின் கீழ்ப்பகுதி முடியும் இடத்தில உள்ள மென்சதையினை அவரது இடக்கை கட்டைவிரல்- சுட்டுவிரல்களின் நகநுனியால் தேர்ந்த அறுவைச்சிகிச்சையாளரின் நுட்பத்துடன் பற்றி அழுத்தத்தை மாணவரின் தாங்குதிறனுக்கு ஏற்பவும், அதேநேரம் அதில் கூடுதல் திறன் பயிற்சியை மாணாக்கர் அடையும் விதத்திலும் கூட்டிக்கொண்டே செல்வதாகும்)  அளிக்கப்பட்ட பட்டம் இதுவென அறிக.

டொம்ப்ளி செல்வம் – கருவிலேயே திருவுடையவராய் பிறந்த அன்றே பேச முயன்றவர் எனும் இவரது தாயாரின் கூற்றை மிகை எனக்கொண்டாலும் இவர் வெகுவேகமாகப் பேச ஆசை கொண்ட காரணத்தால் அடுத்தடுத்து வரும் இரு சொற்களின் முதலெழுத்துகளை அடிக்கடி தம் திறனால் இடம் மாற்றி உச்சரித்து விடுவார். அவ்வாறாக கம்பளி டப்பா மேலே என ஆறு மாத்திரை அளவில் சொல்லவேண்டியதை மூன்று மாத்திரை அளவுகளாகக் குறுக்க வேண்டி இவர் வேகமாய் “டொம்ப்ளி கப்பா மேல” என உரைத்தகாலில் அவர் அக்காவான சுந்தரியால் டொம்ப்ளி என குடும்பப் பட்டமளிக்கப்பட்டவர்.

இவ்வாறான பட்டப்பெயர்கள் பல பயின்று வரும் நூலிது என்பதால் இனி ஆங்காங்கே விளக்கங்கள் காணக் கிடைக்கும். இதில் சுனா கானா அவர்களால் சூட்டப்பட்டு எவராலும் உச்சரிக்கப்படாமல் ரகசிய சந்திப்புகளில் மட்டும் சிலமுறை கமுக்கமாக உச்சரித்து நாங்கள் மகிழ்ந்த பட்டப்பெயர் ஒன்றுண்டு. அது பரணியின் வன்கோன்மை மீது சுனா கானா சீற்றமடைந்திருந்த காலத்தே பரணிக்கு சூட்டிய பெயர் – “தங்கக் குஞ்சு” – வலக்கை ஆட்காட்டி விரல் குறுக்குவாக்கில் மூக்கின் கீழ்ப்பகுதியில் படியும்படிக்கு விரல்களால் வாயைப் பொத்திக்கொண்டு சிரிப்பாணி மின்ன “த்தங்கக்குஞ்சு” என்று வேகமாகவும், ரகசியமாகவும் சொல்லிப்பாருங்கள். த் ல் வாயை மூடிய விரல்கள் சு வருகையில் எடுக்கப்பட்டுவிட வேண்டும்.  புளிப்பு மிட்டாய் வாய்க்குள் போன முதல்நொடி போல இருக்கிறதா? 

கோழிகொடலு பட்டவாரத்தி என்ற பட்டவத்தி என்ற சிவாஜியின் ஆச்சி – அம்மையார் தான் வளர்க்கும், தான் பார்க்கும், தான் தொடும் அனைத்தும் தனக்கு உரிமை என்றே நினைப்பதில் கூட எள்ளளவு ஏற்பு உண்டு. ஆனால் அவை அனைத்தையும் பிறர் தன்னிடமிருந்து பிடுங்கி அனுபவிக்கிறார்கள் எனும் கருத்துடையவர். ( நான் பிஞ்சிலருந்தே பாத்து வச்சிருந்த மாங்காய நீ எப்படிட்டி பிடுங்கலாம்? – சிவாஜி அம்மாவிடம் ). ஒருமுறை இவர் கோழியை காலையிலிருந்து காணவில்லை என்றும் மதியம் அதை “ஜப்பான்” பூமாரி அம்மாதான் அறுத்து சமைத்து விட்டதாக இவர் பஞ்சாயத்து கூட்டி அருளினார். எரிக்கும் வெயிலில் பஞ்சாயத்து கொடிக்கால் சாவடியில் கூடியது. பூமாரியின் அம்மா அது தனது வளர்ப்புக் கோழியே என்றும் கன்றுக்குட்டி மிதித்து விட்டதால் தான் குழம்பாக்கியதாகவும் தன்னிலை விளக்கமளித்தார். ஆகவே  பஞ்சாயத்தார் பட்டவத்தி அம்மையிடம் “உங் கோளிங்கே சரி.. சாட்சி எதுனாச்சும் உண்டுமா ?” என வினவ அம்மையார் அதுகாறும் தனது முன்கொசுவ மடிப்பில் செய்தித்தாளில் பொதிந்து வைக்கப்பட்டிருந்த சாட்சியை எடுத்து பஞ்சாயத்தார் முன்னிலையில் வைத்தார். அது கோழிக்குடல். பஞ்சாயத்தார் விளக்கெண்ணெய் அருந்திய வேங்கை என முகம் கொண்டு இது உன் கோழியின் குடலென எப்படி அறிவாய் எனக் கேட்க பஞ்சாயத்தாரின் தகுதி அம்மையாரால் அறம் பாடப்பட்டது. – “எங்கோளி கொடலு எதுன்னு எனக்குத் தெரியாதா? அது முட்டையிலிருந்தப்பவேலருந்து வளத்தவ நானு எனக்குத் தெரியாதா அது கொடலு எதுன்னு ?”  எனத்தொடங்கி தத்தம் ஆணுறுப்பை அரிந்து எடுத்து கலந்து  வைத்து விட்டால் தம் குறி எது எனச் சரியாக எடுத்து மீண்டும் பொருத்திக் கொள்ள இயலா இப்பஞ்சாயத்தாரா தமக்கு நல்ல தீர்ப்பு சொல்லப்போகின்றார்கள் எனக் கேட்டு விழிநீர் எரிய , மூச்சின் கண் உலைவார நின்றார். அப்போதுதான் அவர் கோழி மேய்ந்து திரும்பிய செய்தி பஞ்சாயத்தை அடைய “தானொரு பேதைப்பெண் , தான் காட்டும் கோழிக்குடல் பொருத்தமற்றது “ என்பதைக்கூட  உணரா பஞ்சாயத்தாரை மீண்டும் அறம்பாடி பஞ்சாயத்தை நிறைவித்தார்.    

இப்போது வரலாற்றுக்கு வருவோம். தெண்டில் செந்திலின் அம்மைக்கும், சிவாஜி ஆச்சியின் சொல்லுக்கும் பயந்த தெண்டில் குழுவினர் செவ்வாயன்று பள்ளிக்கு வருகையில் நீறு நிறை நெற்றியும், கள்ளிபூத்தாற்போல குங்குமமும் கொண்டு இலங்கியது சிவாஜியால் எங்களுக்குச் சுட்டப்பட்டது. அமுக்கு டப்பா மூலம் அவர்கள் சமாதானம் பேச நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அதாவது நாங்கள் இருதரப்பாருமே இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அதன்பின் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் எதுவும் சொல்லாமலும், மீண்டும் பழைய குழுவைத் தொடராமலும், எங்கள் குழுவில் மவுன சாட்சியாகவும் மட்டுமே  ஒரு மர்ம நபராக தெண்டில் நீடித்தார். அவர் அடங்கி விட்டார் என நினைத்தோம். ஆனால் தலைக்கு “மூனாந்தண்ணி” விடும்வரைக்கும் பதுங்கி இருக்கிறார் என்பதை எங்களுக்கு உய்த்தறிய இயலாமல் போயிற்று. 

இச்சம்பவங்களை ஒட்டி காலாண்டுத் தேர்வுகள் முடிந்து ஒருவார விடுமுறை. விடுமுறை முடிந்து வந்தபோது எங்களுக்கு தெண்டில் அளித்த அதிர்ச்சி நாங்கள் எதிர்பாராதது. மட்டுமன்றி எங்களால் மாற்று யுக்தி கூட கண்டறிய முடியவில்லை. எங்கள் குழுவின் மதியூகியான சிவாஜியே அயத்துப் போனார். தெண்டிலின் கொட்டம் எல்லை மீறிப் போகுமளவுக்கு ஆனபோதுதான் அவர் வந்து சேர்ந்தார். அடுத்த நான்கைந்து ஆண்டுகள் எங்கள் குழுவை ஒன்பதாம் நூற்றாண்டின் சோழப்பேரரசென ஆக்கி, தெண்டில் குழுவை பாண்டியன் ஆபத்துதவிக் குழுவெனப் பதுங்கச் செய்த அநிருத்த பிரேமராயர் வந்தார். இச்சம்பவங்களை வரும் அத்தியாயங்களில் விரிவாகப் பார்ப்போம்.

(தொடரும்)

Series Navigation<< தெய்வநல்லூர் கதைகள்- 3தெய்வநல்லூர் கதைகள் – 5 >>

5 Replies to “தெய்வநல்லூர் கதைகள் -4”

  1. பள்ளிப் பிள்ளைகளின் பண்டார அரசியல் துப்பறியும் கதை இப்பொழுது தான் சூடு பிடிக்கிறது. கூறும் முறை சற்றே முன்னும் பின்னும் நகர்ந்து சுழற்றினாலும் சொல் நேர்த்தியும் பகடியும் சேர்ந்து விளையாடுகிறது. சுனா கானா ஊரில் நல்ல பெயர் பெற்றிருந்தான் போலும். அவன் மரணம் எல்லோரையும் பாதித்திருக்கிறது. இக் கதையை இப்பொழுது வாசிப்பவர்களையும் சேர்த்தே பாதிக்கிறது..

    1. பட்டப்பெயர்கள் உருவான விதம் வாசிக்க ஆர்வமும் சிரிப்பாகவும் இருந்தது.இன்று அத்தகைய நுண்ணுணர்வு கொண்ட மாணவர்கள் நட்பு வட்டாரம் அருகி விட்டது.ஊர் மனிதர்கள் வட்டார வழக்கு அனைத்தும் இயல்பாக வருகிறது.தொடருங்கள்…👍

  2. ஒவ்வொருவரின் பட்டப்பெயருக்கும் விளக்கம் சொல்லி வாசகர்களின் வயிற்றில் பால் ஊற்றியிருக்கிறார் கட்டுரை ஆசிரியர். என்னதான் நகைச்சுவையான கட்டுரையானாலும் சுனா கானா இழப்பு கஷ்டமாகத்தான் உள்ளது. மது சகோதரிகளில் மூத்தவள் கல்யாணத்திற்கும் அவர் மரணத்திற்கும் ஒரு கோடு போடச் சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தி வாசகனை யூகிக்க விட்டுவிடுகிறார்.
    பால்ய காலக் கதை என்று சும்மா நழுவவிடாமல் இருக்க ஆசிரியரின் அங்கத நடையும், அக்காலக் கிராமத்தை / மாந்தரை காட்சிப்படுத்துவதிலும் தனித்து நிறுத்துகிறது.

  3. தெய்வநல்லூர் கதைகளின் மொழி அதற்கு நகைச்சுவை தன்மை தருகின்றது. கணேசனின் கதை, செட்டியாரம்மாவின் குணம் போன்றவை நகைச்சுவை மொழியில் சொல்லப்பட்டாலும் சோகமும், கூர்மையும், ஊரின் உறவையையும் காட்சியாக காட்டுகின்றது. விவசாய குறிப்புகள், ஊரின் அமைப்பு, தெரு அமைப்பு, ஊரின் தொழி்ல்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.