தென்னேட்டி ஹேமலதா- பொது உலக பரிச்சயம் அல்லது மேதமை பிரபஞ்சம்

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

1950 வது தசாப்தத்தில் தொடங்கிய லதாவின் நாவல் படைப்பு 1960 வது தசாப்தத்தில் வேகம் பிடித்தது. 1960 பிப்ரவரியில் ‘எடாரி புவ்வுலு’ (பாலைவனப் பூக்கள்) (ஆதர்ஸ க்ரந்த மண்டலி) நாவல் வந்தது. மீண்டும் ஆகஸ்ட் மாதத்தில் ‘ராக ஜலதி’ என்ற நாவல் வெளிவந்தது. இந்த ஆறு மாத இடைவெளியில் அவர் எழுதிய நாவல்கள் ஐந்து. ராகஜலதி நாவலில், இந்த எழுத்தாளரின் நாவல்கள் என்ற தலைப்பின் கீழ் ‘எடாரி புவ்வுலு’ என்ற நாவலோடு கூட ஜீவன ஸ்ரவந்தி, நீலி நீடலு, மிகிலிந்தேமிடி? வனகின்னெர, வாரிஜா என்ற ஆறு நாவல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒரு ஆண்டில் ஏழு நாவல்கள் என்ற கணக்கில் அவருடைய படைப்பின் வேகத்தைக் கணக்கிடலாம். ‘பதவிஹீன’ என்ற நாவல் ஆந்திரபிரபா பத்திரிகையில் 1961 ஜூனிலிருந்து அக்டோபர் வரை தொடராக வந்தது. 1963 ல் நீஹாரிகா, உமர்கய்யாம், பகவந்துடி பஞ்சாயதி, வைதரணீ தீரம் என்ற நாவல்கள் வெளிவந்தன. 1969ல் மகா நகரம்லோ ஸ்திரீ என்ற நாவல் வந்தது. அந்த ஏழும் இந்த ஏழும் சேர்த்தால் அறுபதாவது தசாப்த நாவல்கள் பதினான்கு.  இவற்றில் உமர்கய்யாம் தவிர மீதி எல்லாம் சமூக நாவல்களே.

இந்த தசாப்தத்தில் லதா எழுதிய ஊஹாகானம் (1963), அந்தரங்க சித்ரம் (1965) என்ற நாவல்கள் வெளிவந்தன. அந்தரங்க சித்ரம் அவருடைய சுயசரிதைப் படைப்பு. ஊஹாகானம் அவரிடம் தோன்றிய கற்பனைகளின் எழுத்துருவம். ஒரு  விஷயத்தின் மீது சிந்தனைகள் எங்கு பரவினாலும் அவற்றை அப்படியே பதிவு செய்த எழுத்துக்களின் ராகமாலிகை இவை. இவற்றைப் படிப்பது லதாவுடைய  நாவல்களின் ஆராய்ச்சிபூர்வமான பதிவுக்கு உபயோகப்படும் என்று நிடதவோலு மாலதி, தென்னேட்டி ஹேமலதா பற்றி எழுதிய கட்டுரையில் (Thulika.net 4-11-2013) குறிப்பிடுகிறார்.

1962 லேயே கட்டி ஆஞ்சநேய சர்மா என்பவர் லதாவின் இலக்கியம் பற்றி ‘சாஹிதீ  லதா’ என்ற புத்தகம் எழுதினார் என்றால் இலக்கிய துறையில் பிரவேசித்து ஏழெட்டு ஆண்டுகள் ஆவதற்கு முன்பே லதா எத்தனை தூரம் வாசகர் உலகத்தை கவர்ந்திருந்தார் என்பது தெரிகிறது. அதற்குக் காரணமான மூலசக்தி தன் காலத்துப் பெண் எழுத்தாளர்களை விட மாறுபட்டு அவருக்கு கிடைத்த பொது உலக பரிச்சயம் அல்லது மேதமை பிரபஞ்சம் என்று கூறவேண்டும். அதுவே அவருடைய நாவல்களை சமகாலத்து பெண் நாவல்களை விட  மாறுபட்டவையாக நிலைநிறுத்தின. 

அது எவ்வாறு என்று பார்ப்போம்.

‘எடாரி புவ்வுலு’ நாவலை, ‘சாகித்திய வனத்தில் லதாவை (லதா என்றால் படரும் கொடி என்ற பொருளும் உண்டு) நட்ட எங்கள் அண்ணன் டாக்டர் காலிபாபா  சுப்பாராவுக்கு’ என்று சமர்ப்பித்துள்ளார் லதா. ஒரு காலை நேரம் 6:00 மணிக்கு பார்வதி குமட்டி அடுப்பை விசிறிக் கொண்டிருந்தபோது மைத்துனன் ராஜு புதிதாக திருமணமான பெண்ணோடு ரயிலை விட்டிறங்கி வீட்டுக்கு வருவதாகத்  தொடங்குகிறது இந்த நாவல்.

பெரியவர்களுக்குத் தெரியாமல் திடீரென்று செய்து கொண்ட திருமணத்திற்கும்  மணம் முடித்த பெண்ணுக்கும் அண்ணனின் அங்கீகாரத்தை பெற்றுத் தரும்படி   மைத்துனன் தன் தோளில் சுமத்திய பொறுப்பை நிறைவேற்றி, பார்வதி நாவலின்  கதையை நடத்துவதற்கு வழி வகுக்கிறாள்.

இந்த நாவலில் பார்வதி, ஆனந்தராவு ஒரு ஜோடி. அவளுடைய மைத்துனன் ராஜு அவனுடைய மனைவி சத்தியவதி இன்னொரு ஜோடி. ராஜுவின் நண்பன் சிவராவு, அவன் திருமணம் செய்து கொண்ட சுனந்தனா இன்னொரு ஜோடி. காமாக்ஷி, டாக்டர் மதுசூதனராவு மற்றொரு ஜோடி. அன்னபூர்ணா -சங்கர் ராவு, சங்கராவு -மகாலட்சுமி அம்மா, சத்தியவதி – சர்மா, அன்னபூர்ணா – ராஜு… இவ்வாறு பலவித ஆண் பெண் ஜோடிகளின் இடையில் பாலியல் ஈர்ப்புகள், போராட்டங்கள், குடும்ப உறவுகள் போன்றவற்றை விவாதத்திற்கு வைத்த நாவல் இது.

சம்பவங்களின் பரிணாமங்களை விட காதல், இச்சை, ஒழுக்கம், அநீதி, சமுதாய அமைப்பு, தனி மனிதன் முதலான அம்சங்களின் மீது மாறுபட்ட அபிப்பிராயங்கள், உரையாடல்கள் போன்றவற்றின் தொகுப்பாகவே இந்த நாவலின்  கதையம்சம் உள்ளது.

இந்த நாவலில் வெற்றிகரமான தாம்பத்திய உறவு பார்வதி ஆனந்தராவுடையது. பார்வதி சௌந்தர்யமும் நற்குணமும் கொண்டவள். பணிவோடு கூடிய ஆளுமை உடையவள். திருமணமானது முதல் கணவனையும் குடும்பத்தையும் மாமனார் மைத்துனர் அனைவரையும் தன்னவர்களாகக் கருதி, அவர்களுக்காக சிரமப்பட்டு உழைத்து அந்த குடும்பத்திற்கு அவள் முக்கியமானவளாக இருந்தாள். நாவல்  தொடங்கும் போது அவள் கர்ப்பவதி. நாவல் முடியும் போது பிறந்த குழந்தைக்கு ஓராண்டு பிறந்தநாள் விழா நடக்கிறது. அதாவது இந்த நாவலின் கதை ஒன்றறை ஆண்டு, இரண்டாண்டு காலத்தின் மீது நடக்கிறது.

பெண்களில் பெண்மை மட்டுமல்ல, தாய்மை கூட இருக்கிறது என்ற விஷயம் நிறைய கணவர்களுக்குத் தெரிவதில்லை என்று கூறுகிறார் பார்வதியைப் பற்றிக் கூறும்போது ஆசிரியை.

உண்மையில் சிலர் பிறக்கும்போதே தேவதை அம்சத்தோடு பிறக்கிறார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களுடைய அதிகாரத்திற்கு எந்த குறைவும் எப்போதும் வருவதில்லை. எந்த மனிதரும் அவர்களுடைய கருணையான பார்வையில் சுகப்படுவார்கள் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். நல்லது கெட்டதுகளைச் சமமாகப் பார்ப்பதும் எதிரில் இருப்பவர்களை எவ்விதத்திலும் குறைவு படுத்தாமல் இருப்பதும் அவர்களுடைய குணம் என்று பார்வதியின் குணத்தை அறிமுகம் செய்கிறார் ஆசிரியை.

சத்தியவதியைப் பற்றி, பார்வதி, அவள் என்னைப் போலவே ஒரு பெண். அவளுக்கு அநியாயம் நிகழக்கூடாது. என் மைத்துனன் விரும்பி மணம் செய்து கொண்ட மனைவி. ஆதலால் இந்த வீட்டில் எனக்கு எத்தனை உயர்ந்த ஸ்தானம் உள்ளதோ அவளுக்கும் அதே இடம் இருக்கிறது என்று எண்ணுகிறாள். அது அவளுடைய உயந்த குணத்தின் இயல்பு. தர்மபத்தினியாக கணவனைத் தவிர மற்றொருவரை எண்ணாத உத்தமப் பெண் அவள்.

ராஜுவின் நண்பன் சிவராவு விலைமாதர் குலப் பெண் சுனந்தனாவைத் திருமணம் செய்து கொண்ட விஷயம் குறித்து காமாட்சி, “கலப்புத் திருமணம் செய்து கொண்டான் என்பதற்காக நீ அவனை வெறுக்கவில்லை அல்லவா?” என்று சந்தேகம் வெளிப்படுத்தியபோது பார்வதி, “அப்படிப்பட்ட குணங்கள் எனக்கு எப்போதுமே இல்லை. அவரவருக்குச் சுகமான வழியில் அவரவர் வாழ்க்கை நடத்துவர். நடுவில் நமக்கு என்ன வந்தது?” என்று கூறக்கூடிய அமைதியான திட மனம் அவளுடையது. 

“யாருக்கு எப்படி விருப்பமோ அப்படி வாழலாமா?” என்று காமாட்சி தூண்டிக் கேட்டபோது, “பிறருக்குத் துன்பம் ஏற்படாதவரை அவரவர் தமக்கு இஷ்டமான முறையில் வாழ்வது அத்தனை விமர்சிக்க வேண்டிய விஷயம் அல்ல” என்கிறாள். திருமணம் பல ஜென்மங்களின் பந்தம் என்பது அவளுடைய திடமான நம்பிக்கை. அன்னபூர்ணாவோடு ராஜு நெருக்கம் கொண்ட செய்தி தெரிந்தவுடன் சத்தியவதியின் சொத்து வெளியில் சென்றுவிடும் என்று கவலைப்பட்டாள்.

மதராஸ் சென்று சத்யவதியை அழைத்து வரும்படி மைத்துனனுக்கு  கட்டளையிடாமல் இருக்க முடியாமல் போகிறாள். அவ்விதமாக ஓர் ஆண்டுக்குப் பிறகு ராஜுவுக்கும் சத்தியவதிக்கும் வாழ்க்கையை திருத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பினை அவள் ஏற்படுத்திக் கொடுக்கிறாள். அதனைப் பயன்படுத்தி கொள்ளும் உரிமையும் புத்தியும் முயற்சியும் அவர்களிடம் இல்லாமல் போவது   வேறு விஷயம்.

“திருமணம் ஒரு முக்கியமான அனுபவமே. ஆனால் விவாகரத்து பற்றி என்ன சொல்வது?” என்பது காமாட்சியின் கேள்வி. காதல் என்ற பெயரில் எத்தனை சுலபமாகத் திருமணத்திற்கு முன்னேறுகிறார்களோ அதே அளவு சுலபமாக விவாகரத்துக்கும் தயாராகிறார்கள் என்பது அவளுடைய கணிப்பு. பெரியவர்கள் நடத்தும் திருமணங்கள் மீதே அவளுக்கு விருப்பம். உள்ளம், திருமணம் இரண்டும்  ஒரே இடத்தில் சேர்ந்த தாம்பத்தியத்திற்கு அவள் பிரதிநிதியாக விளங்கினாள். 

சத்தியவதி, ராஜு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். காதலில் உற்சாகத்தைத் தவிர விவேகம் இருக்காது என்பது ஆசிரியை லதாவின் அபிப்ராயமாகத் தெரிகிறது. அந்த உற்சாகம் உடலின் உணர்சிகளைத் தூண்டுவதற்குக் காரணம் ஆகிறபோது திருமணத்திற்கு அவசரம் ஏற்படுகிறது. நிதானமாக உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் விரைவிலேயே ஒருவருக்கொருவர் பழையவர்களாகிவிடுகிறார்கள். சத்தியவதியோடு மூன்று மாதங்கள் குடும்பம் நடத்தியதிலேயே ராஜு மறு ஆலோசனையில் விழுவது அதனையே காட்டுகிறது. 

எத்தனை அழகான காட்சியாக இருந்தாலும் தினமும் பார்த்துக் கொண்டே இருந்தால் பழக்கமாகிப் போகிறது என்று நினைக்கிறான். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் திருமணம் செய்து கொண்டானே தவிர உண்மையாக தான்  அவளைக் காதலிக்கவில்லை என்று தோன்றுகிறது என்று கூட எண்ணுகிறான். 

அண்ணனோடு ஒப்பிட்டு தன்னைக் குறைத்து பேசும் முறையைக் கண்டு அவனுடைய உள்ளம் உடைந்து துன்பப்படுகிறது. பிறந்த வீட்டுக்குச்   சென்றபோது அண்ணி உடன் வராமலும் உதவி செய்யாமலும் இருந்ததால் அவள் பட்ட கஷ்டம், இருவரின் இடையில் வாக்குவாதம் அதிகரிப்பது, அவன் படுக்கை விரிக்கச் சொன்னபோது உன்னுடைய தாசி அல்ல என்று அவள் எதிர்த்து பேசுவது, அவன் கையை உயர்த்தி கன்னத்தில் அறைவது, ரோஷம் வந்து அவள் அப்போதைக்கப்போதே கிளம்பி மதராஸ் போவது எல்லாம் நடந்து விடுகின்றன.

பெண் கோபம் வந்து வீட்டை விட்டு வெளியேறுகிறாள் என்றால் அவளுக்கு நஷ்டமே தவிர ஆண்களுக்கு எவ்விதத்திலும் நஷ்டம் இல்லை என்பது அவனுடைய அபிப்பிராயம்.

ஆனால் ஆணுக்கு தெரியாதது என்னவென்றால்… “அப்படிப்பட்ட சத்தியவதிகளின்   மனதின் உள்ளே ஓடுவது அன்புப் பிரவாகம் என்றும் அவை அவ்வாறு பாய்ந்து   கொண்டே இருக்கும்” என்றும் அந்த அபிப்பிராயத்தை நாவலாசிரியை லதா வியாக்கியானிப்பதை கவனிக்க முடிகிறது.

பார்வதியைப் பற்றிக் கூறினாற்போல் அல்லாமல் சத்யவதியின் அந்தரங்கத்தை அனேக உத்வேகமான சந்தர்ப்பங்களில் இருந்து காட்சிகளின் மூலம் வாசகர்கள் தாமாகவே அவளைப் பற்றி தெரிந்து கொள்ளும்படி செய்கிறார் ஆசிரியை லதா.

சத்யவதி மதராஸ் நகர வாழ்க்கையில் வளர்ந்தவள். இன்டர்மீடியட் படித்திருந்தாள். பெண்ணாக சொந்த இருப்பை வளர்த்துக் கொள்வதற்கு அவை அவளுக்கு போதுமானதாக இருந்தன. அண்ணன், அண்ணி, மதராஸ் பெருமை குறித்த அவளுடைய சொற்கள் அனைத்தும் அவளுடைய பிரத்தியேக இருப்பினை எடுத்துக் கூறுகின்றன. கணவன் மேல் கோபம் கொண்டு பிறந்து வீட்டுக்குச் சென்ற சத்தியவதி, ரயிலில் ஒரு தாயின் மடியில் சிரிக்கும் சிசுவைப் பார்த்து, ஆமாம். அவன் வளர்ந்து பெரியவன் ஆவான். ஆணாக மாறுவான் என்று எண்ணுகிறாள். ஆயிரம் ராஜுக்களின் வாரிசு என்று அந்த சிசுவின் எதிர்கால பரிணாமத்தை யூகிக்கிறாள். 

“பெண்கள் பிறக்க மாட்டார்கள். தயார் செய்யப்படுவார்கள்” என்ற சைமன் தே   பாவுரே கூறிய கருத்தின் இயல்பு அறிந்தவளாக சத்தியவதி இங்கு காணப்படுகிறாள். ஆண்கள் மனிதர்களாக அன்றி, அதிகார பிரதிநிதிகளாகவும்,   பெண்களின் மீது அதிகாரம் செய்பவர்களாகவும் தயார் செய்யப்படும் சமுதாய இயல்பை அவள் அடையாளம் கண்டு கொண்டதாகத் தெரிகிறது. பெண்ணானதால் நான் எதிலும் குறைந்து விட்டேனா என்ன? என்பது அவளுடைய கேள்வி. பெண்ணாகப் பிறந்ததால் மட்டுமே ராஜுவுக்குத் தலைவணங்கி ஸலாம் செய்ய வேண்டுமா என்று எண்ணுகிறாள். என்னை அடிக்கும் அதிகாரம் அவனுக்கு யார் கொடுத்தது? நான் எவ்வாறு அவனை எதிர்க்க முடியாமல் போனேன் என்று ஆச்சரியப்பட்டாள்.

இன்டர் வரை படித்துள்ளதால் எங்காவது வேலை செய்து பிழைக்கலாம் என்ற தன்மானம் அவளுக்கு இருந்தது. ஒழுக்க விழுமியங்களின் மீது பிடிப்பு அவளுக்கு அவ்வளவாக இல்லை. கடைப்பிடிக்க முடியாமல் போனாலும் சில ஆதரிசங்கள் அவளுக்கு இருந்தன. தனக்குத் தானாகவே வாழ வேண்டும் என்பது அவற்றில் ஒன்று. காதலிக்க வேண்டுமே தவிர விபச்சாரம் செய்யக் கூடாது என்பது மற்றொன்று. ஆனால் அவற்றைக் கடைப்பிடிப்பது எவ்வாறு என்று அவளுக்குத் தெரியவில்லை என்கிறார் ஆசிரியை லதா.

தன்மானம் உள்ள பெண் யாரானாலும் அந்த நேரத்தில் அவ்வாறே நடந்து கொள்வார்கள் என்று ராஜு அடித்த அடிக்குத் தான் கிளம்பி வந்து விட்டது சரியே  என்று சமாதானப்பட்டாலும், தப்பு செய்துவிட்டேனோ என்று மறுபுறம் கவலையும் படுகிறாள்.

ராஜுவைத் தான் காதலிக்கவில்லை. அது ஒரு பிரமை என்று எண்ணுகிறாள். அவன் மீது கோபத்தோடு அவ்வாறு எண்ணி திருப்திப்படுகிறேனோ என்று   சந்தேகமும் வந்தது. சர்மாவோடு நட்பு வேண்டும். உடல் அவனைக் கோருகிறது    கூட. ஆனால் தனியாக அவனோடு உட்காருவது தவறு என்று ரத்தத்தில் ஊறிய  பண்பாடு எச்சரிக்கிறது. இவ்விதம் ஊசலாடுகின்ற சத்தியவதியின் மானசீக நிலையை திருமணம் ஓரிடத்தில் சேர்த்தது. உள்ளம் இன்னொரு இடத்தில் நிலைபெற்றது என்று விமரிசிக்கிறார் ஆசிரியை லதா.

அனார்கலி, ஏகவீரா போன்ற இலக்கிய கதாபாத்திரங்களோடு ஒப்பிட்டுக் கூறி,  தர்மத்திற்கு இதயத்திற்கும் இடையில் போராட்டம் எதிர்கொண்டுள்ள பெண்ணாக சத்தியவதியைக் காட்டுகிறார் ஆசிரியை .

அன்னபூர்ணாவும் சத்தியவதி போன்றவளே. அன்னபூர்ணா சங்கர்ராவின் அக்கா மகள். இளமையில் காதலில் விழுந்து வஞ்சனைக்கு உள்ளாகி கருவுற்ற அவளை தாய்மாமன் அவமானங்களிள் பிடியில் சிக்காமல் விஜயவாடா அழைத்துச் சென்று வீடு பார்த்து கருவைக் கலைத்துப் படிக்க வைக்கிறான். 

அவளுக்குத் திருமணம் செய்விக்க வேண்டும் என்று எண்ணினான். ஆனால் உலகின் அபவாதத்திற்கு பயப்படாமல் தனக்காக நின்ற தாய் மாமனை விட  உத்தமன் தனக்குக் கிடைக்க மாட்டான் என்று அவனைத் தவிர வேறு யாரையும்  திருமணம் செய்ய மாட்டேன் என்று அவள் பிடிவாதம் பிடிக்கிறாள். ஆதரிசங்கள், ஆராதனைகள், ஆவேசங்கள் எல்லாம் அடங்கி, வாஸ்தவத்திற்கு வந்த போது தன்னைவிட இருபத்தைந்து வயது பெரியவனான தாய்மாமனிடம் சம்சாரத்தின்  சாரம் தென்படாதபோது, புடவைக்காகவும் நகைக்காகவும் அவனை நச்சரிப்பவளாக மாறிப் போவதோடு அல்லாமல் புதிதாக அறிமுகமான ராஜுவின் மேல் அவள் மனம் ஈடுபட்டது. அவனுக்காக மதராசுக்கு இடம் மாறினாள்.   ராஜுவுக்கு நெருக்கமானவளாக ஆனாலும் தானே அவனுடைய உலகமாக  முடியாமல் போனாள். இருவருமே வேறு வேறு திருமண பந்தத்தில் கட்டுப்பட்டிருந்தார்கள். 

திருமணமானவர்களின் மீது ஆசை ஏற்படுவது கூடாது என்று தடை விதித்த தர்மசாஸ்திரத்தைப் பற்றி ஆலோசித்து, திருமணமானவர்களின் மீது காதல் ஏற்படக் கூடாது என்ற தடையை ராஜு ஏன் தன் உள்ளத்திற்கு விதிக்க முடியாமல் போனான் என்று சிந்திக்கிறாள். செய்யலாம், செய்யக் கூடாது என்ற தடைகள் தர்மசாஸ்திரத்தில் இருக்கும் வரை இரகசிய உறவுகள் தொடரத்தான் செய்யும். இல்லாவிட்டால் அன்னபூர்ணாவைப் போல் தற்கொலைக்குத் துணிவதோ சத்யவதியைப் போல் போகத்திலும் போதையிலும் மூழ்கிப் போவதோ நடக்கும்.

அன்னபூர்ணா காமாட்சிக்கு எழுதிய கடிதத்தில் ராஜுவைப் பார்த்த மறு கணமே நான் தாரா, அன்னா கரீனினா போலவே ஆகிவிட்டேன் என்று கூறுகிறாள். இந்திய மற்றும் சர்வ தேச இலக்கிய கதாபாத்திரங்களை எடுத்துக்காட்டுவதன் மூலம் சம்சாரம் செய்து வரும் பெண்களின் வாழ்க்கையில் பிற ஆண்களிடம் கொள்ளும் ஈர்ப்பு ஏற்படுத்தும் மனப் போராட்டங்களை எடுத்துக்காட்டுவதாகத் தெரிகிறது. இதயங்கள் தோற்பதும் சமுதாய அமைப்பு வெல்வதும் இறுதிப் பரிணாமமாகத் தெரிகிறது.

இந்த நாவலில் முக்கியமான பாத்திரம் காமாட்சி. இவள் நவீனப் பெண். இருபத்தேழு வயது. பி.ஏ பாசாகி இருந்தாள். திருமணம் ஆகவில்லை. தாய் இல்லை,  தந்தை கூறியபடி எழுத்தாளராக ஆவது அவளுக்கு விருப்பமான விஷயம் அல்ல. ஆனால் அதை அவரிடம் அவள் கூற இயலாது. அவ்வாறு வெளியில் கூறமுடியாமல் போனவை பல. அவற்றில், எந்த ஆணிடமும், “நான் உன்னைக் காதலிக்கிறேன். என்னைத் திருமணம் செய்து கொள் என்று கூறுவதும்  ஒன்று” என்று அவள் கூறுவது கவனிக்கத் தக்கது. அதற்காக தன் மனதில் இருக்கும எண்ணத்தை வெளியில் சொல்ல முடியாத ஊமை அல்ல அவள்.

கருப்பாக இருப்பதும், அவளுடைய கேரக்டர் நல்லதல்ல என்று உலகம் எண்ணுவதும் அவளுக்குத் திருமணம் ஆகாமல் இருப்பதற்கு காரணம் என்று  எந்த ஒரு மனவிகாரமும் இல்லாமல் சொல்லக்கூடியவள். தன்னுடைய நடத்தை நல்லது அல்ல என்று உலகம் எண்ணுவதற்குக் காரணங்கள் தன்னுடைய ஆளுமையிலேயே உள்ளது என்று தெரிந்த பெண் அவள்.

ஆண்களைப் பார்த்து வெட்கப்படாமல் இருப்பது, பெண்ணாக ஈர்ப்பு பதார்த்தம் ஏதாவது தன்னில் இருக்கிறதா என்ற உணர்வு இல்லாமல் போவது, ஆண்களோடு ஊர் சுற்றுவது, எந்த ஆணையும் கண்டு கொள்ளாமல் இருப்பது போன்றவை அவளை உலகத்தின் பார்வையில் நற்குணம் இல்லாத மனுஷியாகச் செய்தன. ஏனென்றால் அது உலகம் கருதும் பெண் மாதிரிக்கு மாறுபாடானது. பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று உலகம் எடுத்துக் கூறிய பெண்ணாக காமாட்சி ஏன் இருக்க முடியாமல் போகிறாள்?

பரந்த படிப்பு அவளை புத்திக் கூர்மையான மனுஷியாகச் செய்தது. மனதின் மீது   அதிகாரம் செலுத்துவது புத்தியே. ஆறு வயதிலேயே தாய் மரணம் அடைந்தாள். தன்னை வளர்த்த தந்தை மீது அன்பு செலுத்த முடியாமல் போகிறாள். ஒவ்வொரு கணமும் எந்த மனிதரை வெறுக்கிறேனோ அவரிடமே அன்பு செலுத்தி   வாழ்க்கையே தள்ளிக் கொண்டு வருகிறேன் என்று சிவராவிடம் சொல்லி  வருத்தப்படுகிறாள். தாயின் மூலம் அவளுக்கு வந்த ஆஸ்தி, அவள் திருமணம் செய்து கொண்டு சென்று விட்டால் தன்னால் அனுபவிக்க இயலாமல் போய்விடுமோ என்று தந்தை அவளுடைய திருமண விஷயத்தில் தகுந்த  சிரத்தை காட்டவில்லை என்பது அவளுடைய குற்றச்சாட்டு.

பார்வதி தம்பதிகளையும், சிவராவு தம்பதிகளையும் பார்த்து தாம்பத்ய   உறவுகளில் உள்ள ஆனந்தம் தன் அனுபவத்திற்கு வராதா என்று உள்ளுக்குள்ளேயே ஏங்குகிறாள். அதற்காக தந்தை கூறினார் என்று சிவராவைத் திருமணம் செய்து கொள்ளும் முயற்சியை அவள் செய்யவில்லை.

தந்தைக்கு விருப்பமில்லாததால் தான் விரும்பிய டாக்டர் மதுசூதன ராவோடு திருமணத்திற்கும் தயாராக முடியாமல் போகிறாள். வெறுக்கும் தந்தையை வழிபடுவதற்கும், காதலிக்கும் டாக்டரை காதலிக்காமல் போவதற்கும், திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கும் இவ்வாறு பரஸ்பர விரோதமான மன உளைச்சல்களின் இடையில் நசுங்கும் பெண்ணாகத் தென்படுகிறாள் காமாட்சி.

தனக்குக் கிடைத்த சம்சாரத்தில் சந்தோஷத்தையும் திருப்தியையும் பெறும் பார்வதி என்றால் கௌரவம். ஒரு விதமாக அவள் காமாட்சியின் ஆதரிசப் பெண்கூட. ஆனால் அது அவளுக்குக் கிடைக்காத வாழ்க்கை. எத்தனை தெரிந்தாலும் தெரியாது போலவே பெண்கள் நடிக்க வேண்டும் என்று உலகம் ஆசைப்படுகிறது. அவ்வாறு நடிக்க முடியாமல் போவதால்தான் உலகத்தில்  கெட்ட பெயர் வாங்க வேண்டி வந்தது என்ற முழுமையான புரிதல் அவளுக்கு இருந்தது.

காமாட்சி உணர்ச்சிவசப்படுபவள். தன்னில் ஏற்படும் தேவையில்லாத எண்ணங்களுக்கு விடையை இலக்கியத்தில் தேடுகிறாள். அவள் ஏகவீரா என்ற நாவலைப் படித்ததாகவும் அதில் ‘அறம் செய விரும்பு’ என்ற சொல்லில் நின்று விட்டு தர்மம் என்றால் என்ன? தர்மம், அதர்மம் நல்லொழுக்கம் தீயொழுக்கம், ,  தேசம், காலம், மனிதர்கள் எல்லாம் ஒப்பீட்டுச் சொற்களே அல்லவா என்ற  சிந்தனையில் ஆழ்கிறாள்.

உலகத்தால் ஏளனம் செய்யப்படுபவர்கள், துரத்தப்படுபவர்கள், சமுதாயத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டு நிந்தைக்கு உள்ளாகும் பெண்கள் ஆகியோரே தன் தோழிகள் என்று எண்ணுகிறாள். சங்கர் ராவு அவ்விதமாகவே அவளுக்கு நண்பனானான். வளர்த்து பெரியவளாக்கிய அக்கா பெண் செய்த தப்பை நெஞ்சில் மூடிவைக்க வேண்டும் என்ற நல்ல குணம் அவதூறாக அவனைச் சுற்றிக் கொண்டபோது ஊரில் இருக்க முடியாமல் அன்னபூர்ணாவோடு விஜயவாடாவுக்கு வந்து படிக்கவைத்து திருமணம் செய்ய நினைத்த போது தாய்மாமனுக்கு வைப்பாட்டியாக இருப்பதற்குக் கூட விருப்பமே. ஆனால் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்ததால் திருமணம் செய்து அவளுக்குத் துணிமணி நகைகள் வாங்கிக் கொடுத்து சந்தோஷப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்த சங்கர்ராவுக்கு பத்திரிக்கைக்கு படம் வரையும் பணியை கொடுத்து அவனுக்கு ஆதரவு அளிக்கிறாள்.

சங்கர் ராவு, தான் அன்னபூர்ணாவுக்காக மனைவியையும் குடும்பத்தையும் விட்டுவிட்டு தியாகமும் செய்ததாக நினைத்துக் கொண்டிருக்கையில் அவன் செய்தது தவறு என்று அவளால் கூற முடிகிறது. அன்னபூர்ணாவிடம் பரிதாபத்தை அவளால் அறிவிக்க முடிகிறது.

திருமணம் தற்போது புயலில் சிக்கிய குடிசையாக மாறிவிட்டது என்றும் உள்ளே இருப்பவர்கள் வெளி வருவதற்கும், வெளியில் இருப்பவர் உள்ளே செல்வதற்கும்   முயற்சிப்பார்கள் என்பதும் காமாட்சியின் அபிப்பிராயம். குடிசையாக இருந்தால் நான் போக மாட்டேன் என்றும் பெரிய பங்களாவாக இருந்தால் மட்டுமே பிரவேசிப்பேன் என்றும் கூறுகிறாள். தன்னுடைய தன்மானத்திற்குத் தகுந்த  தாஜ்மஹால் தேவை என்று அதிகப்படியாக இன்னொரு நிபந்தனையைக் கூட சொல்கிறாள். காதல், திருமணம் இந்த இரண்டும் ஒரே நேரத்தில் கிடைக்காதோ  என்ற சந்தேகம் கூட அவளுக்கு இருந்தது. நிஜ வாழ்க்கையில் சுகமும் கௌரவமும் பெற முடியாமல் அவமதிப்பையும் அவமானங்களையும் விழுங்கி துக்கத்தைப் பொறுத்துக் கொண்ட பெண்களை காலத்தின் இறுதியில் பொறுமைசாலிகளாகவும் பத்தினிகளாகவும் புகழ்வதில் உள்ள பொருளற்ற தன்மையை அவள் ஏளனம் செய்கிறாள்.

சீதையை இப்போது வழிபட்டால் மட்டும் என்ன பிரயோஜனம்? அவள் வாழ்ந்த காலத்தில் அனுபவித்த துயரத்திற்கு இது பரிகாரம் அல்ல என்பது காமாட்சியின் கருத்து. ஒழுக்கம் என்ற மயக்க மருந்தை பெண்களின் ரத்த நாளங்களில் இன்ஜெக்ஷன் செய்து அவளை அடக்கி விட்டால் அவள் விழுந்து கிடப்பாள். அதுவே சுகமான நித்திரை என்று பிக்சர் பெயிண்ட் செய்து காட்சிப்படுத்துகிறது  உலகம். இந்த ஒழுக்கம் என்ற பதார்த்தத்தால் அந்த நீதிக்கு கட்டப்பட்டு இருப்பதால் பெண் சுகப்படுவாள் என்று எண்ணும் அஞ்ஞானத்தைப் போன்றது   வேறு எதுவும் இல்லை என்று எண்ணுகிறாள். 

அதனாலேயே எப்போதும் பரத்தையரும் ஒதுக்கப்பட்டவரும் ஆன பெண்களின் பக்கமே அவள் நின்றாள். விடுதி இல்லங்களை வந்தடைந்த திக்கற்ற பெண்களின் வாழ்க்கையைப் படித்து அவர்களிடம் இரக்கத்தையும் அனுதாபத்தையும்  காட்டுகிறாள். அவர்களைப் பற்றி  பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதுகிறாள். சுகம் என்று நினைப்பதைப் பெறுவதற்கு பொறுமை என்பது இல்லாமல் மீண்டும்  கர்ப்பவதியாகத் தனியாக நின்ற லீலா என்ற பெண்ணை ஆதரிக்கிறாள்.

“அதர்மத்தின் மீது வெறுப்பு, கொடுமைகளைச் சகிக்க முடியாமல் போவது, நியாயத்தைக் காப்பது, தன்னம்பிக்கை, அழகை ரசிப்பது போன்றவற்றை மனிதனில் வளர்ப்பதே உயர்ந்த இலக்கியம். மனிதன் தன்னைத்தான் அறிந்து கொண்டு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு சத்தியத்திற்காகவும் நியாயத்திற்காகவும் போராடும்படியாகச் செய்து மனிதனில் உள்ள கீழ்மை குணங்களை அழிப்பதே சிறந்த இலக்கியம்,” என்று காமாட்சி இலக்கியம் பற்றி வெளிப்படுத்திய அபிப்ராயம் அவளுடைய வாழ்க்கைத் தத்துவத்தை பிரதிபலிக்கிறது.

சத்தியம் என்று நம்பிய விஷயத்திற்காகவும் நியாயத்திற்காகவும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பேசுகிறாள் என்பதால்தான் துஷ்டை என்று உலகத்தால் பெயர் சூட்டப்பட்டு, பெண்ணின் மாதிரிக்கு மாறுபாடாக வடிவம் பெறுகிறது காமாட்சியின் ஆளுமை. 

“நான் இந்த நாகரீக பிரபஞ்சத்திலுள்ள எதிலும் சமரசம் ஆவதற்காக வரவில்லை. ஒவ்வொன்றையும் எதிர்த்து நிற்பதற்கே வந்துள்ளேன்” என்று கூறக்கூடிய தைரியம் அவளுடைய அடிப்படை குணம். 

இந்த நாவலில் சுகமடைந்த பெண்கள் இருவரே என்ற குறிப்பு உள்ளது. அவர்கள் யார்? திருமணத்தில் தர்மம், அர்த்தம், காமம் மூன்றையும் திருப்தியாக அனுபவித்து ஆனந்தமடைந்த பார்வதி, கணவன் மூலம் சுகம் கிடைக்காத திருமண அமைப்பைக் கண்டு பயப்படாமல் தன் சந்தோஷம் தன்னுடையது என்பதாக வாழ்ந்த லீலா. முழுவதுமாக அடங்கிப் போவது அல்லது முழுவதுமாக  எதிர்ப்பது இவை மட்டுமே ஆனந்தத்திற்கு காரணங்கள். 

சத்யவதியும் அன்னபூர்ணாவும் திருமணத்தால் கிடைக்கும் பாதுகாப்பு, காதலில் உள்ள சுதந்திரம், இரண்டும் வேண்டுமென்று ஆசைப்பட்டு ஒழுக்கம், ஒழுக்கமற்றவை பற்றிய உள் மனப் போராட்டத்தோடு சுகம், சாந்தி இரண்டையும் இழந்தார்கள். காமாட்சி ஆசைப்பட்டது உயர்ந்த திருமண உறவு. அதில் காதல் என்பது உள்ளீடான கயிறு. ஆனால் ஆதரிச மயமான அப்படிப்பட்ட வாழ்க்கை பாலைவனத்தில் பூக்கும் பேரீச்சம் பூவைப் போன்றது. எத்தனை தூரம் உண்மை, எத்தனை தூரம் பிரமை என்பது புரியாது. அதைக் கண்டுபிடிக்க முடியாத குழப்பத்தில் இறுதிவரை சிந்தனைசெய்து கொண்டே வாழ்ந்து கழித்தாள் காமாக்ஷி.

இந்த நாவலின் பெயர் எடாரி புவ்வுலு. (பாலைவனப் பூக்கள்). இந்தச் சொல்லை ஒரு தத்துவ அர்த்தத்தோடு மீண்டும் மீண்டும் உபயோகிக்கிறாள் காமாட்சி. சிவராவோடு முதல் சம்பாஷணையில் அவள், “வாழ்க்கையை ஆரம்பிக்கும் முதல் நாட்களில் ஒவ்வொரு பூவும் நமக்காகவே மலர்கிறது என்று எண்ணுவோம். சில நாட்கள் சென்ற பின்தான் அவை பாலைவனப் பூக்கள் என்று நமக்குத் தெரியும்,” என்று ஆழமான பெருமூச்சு விட்டு அவள் சொன்ன சொற்களுக்கு சிவராவு, “உன் மனதில் எரிமலைகள் சில இருக்கின்றன என்று எண்ணுகிறேன்” என்று கூறுகிறான். அதனைத் திருத்தும் விதமாக அவள், எரிமலைகள் அல்ல. நம் அனைவரின் மனதிலும் பாலைவனப் பூக்கள் சில உள்ளன. மிகவும் பயங்கரமான பாலைவனத்தில் ஒரு சின்ன ஒயேசிஸ். அந்த பாலைவனச் சோலையில்   இரண்டு இலைகளோடு ஒரு பேரிச்சம்பழ மரம். அந்த பேரிச்சம்பழ மரத்திற்கு ஒன்றோ இரண்டோ பூக்கள் இருக்கலாம். அவ்வப்போது வழி தவறிய, தனித்த ஒட்டகம் ஏதாவது ஒன்று மெலிந்து போன தன் கழுத்தை நீட்டி அந்த பூவைப்   பறித்தால், அந்த அதிர்ஷ்டம் அந்தப் பூவுடையதா? அல்லது ஒட்டகத்துடையதா? என்று ஆலோசிப்பதற்கு அருகில் யாருமே இருக்க மாட்டார்கள்” என்கிறாள். இந்த கருத்தை சங்கராவிடம் சொல்லிப் படம் கூட வரைந்து காட்டுகிறாள்.

“ஏமாற்றத்தோடு கூடிய இதயத்திற்கு ஆசையை ஏற்படுத்தும் படம் அது”  என்கிறார் ஆசிரியை. பாலைவனப் பூக்களின் படத்தைப் பார்த்து சர்மா, அதே பெயரோடு நாடகம் எழுதுவதும் அதனை விஜயவாடாவில் காட்சிப்படுத்துவதும்  கூட நடக்கின்றன.

பாலைவனம் போன்ற வாழ்க்கையில் பெண் என்பவள் ஒயேசிஸ் போன்றவள் என்பதும் பாலைவன பூக்கள் ஆசையோடும் நிராசையோடும் எதிர்பார்ப்போடும் தொடரும் நம் வாழ்க்கை என்பதும் நாவலாசிரியை லதாவின் கருத்து.

சிவராவின் மனைவி சுனந்தனா விலைமகள் குடும்பத்தில் பிறந்த பெண். காதலித்து திருமணம் செய்து கொண்ட சிவராவால் அவளுடைய நடத்தையிலும்  சுபாவத்திலும் அவளுடைய குலத்தின் மூலங்களைக் காணாமல் இருக்க முடியவில்லை. அந்தச் சொல்லைக் கூறி அவளை அவமானப்படுத்தாமலும் இருக்க முடியவில்லை. அது அவர்களிடையே அடிக்கடி சண்டைக்குக்  காரணமாகிறது.

காதலை களங்கம் செய்யும் ஒழுக்கம் குறித்த ஆண்களின் நீதி பற்றிய சர்ச்சை  அந்த சந்தர்ப்பத்தில் வருகிறது. மணமாகி மனைவியை விட்டு விலகிய சிவராவு,  விலைமாதர் குலத்தில் பிறந்து ஒருவர் இருவரோடு சரீர சம்பந்தம் ஏற்பட்டாலும் திருமணம் செய்து கொண்டு கௌரவமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்த சுனந்தனாவை விட எந்த விதத்தில் ஒழுக்கமானவன்? என்ற கேள்வியைக் கேட்கிறது இந்த நாவல்.

அதுமட்டுமல்ல. சுனந்தனாவை அவன் குலத்தைக் குறிப்பிட்டு கீழ்மைப்படுத்தி    பேசும்போது அவளுடைய தாய், சுனந்தனா பிராமண குலத்தில் பிறந்தவள் என்று கூறுகிறாள். சுனந்தனாவின் தந்தை ஐம்பது வயதில் குழந்தைக்காக பதினைந்து வயதுப் பெண்ணை திருமணம் செய்து கொண்ட போது சுனந்தனா பிறந்தாள். அந்த சம்சாரத்தில் திருப்தி இல்லாமல் பிறந்த பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு  இருபது வயது இளைஞனோடு வெளியேறிவிட்டாள். அழைத்து வந்தவன் விட்டுவிட்டுப் போனபோது வாழக் கற்றுக் கொடுத்து பாதுகாப்பு அளித்தவள் மோகனாங்கி என்ற விலைமாது. அதனால் அவளை அவமதிப்பது என்றால் உன் குலத்தை நீயே தாழ்த்திக் கொள்வது என்று எச்சரிக்கிறாள் சிவராவிடம்.

விலைமாதர்கள் பிறக்க மாட்டார்கள். தயார் செய்யப்படுகிறார்கள். அதற்குப் பொறுப்பு வகிக்க வேண்டியது சமுதாயமே. சின்னக் குழந்தைகளை திருமணம் செய்து கொண்ட வயதான ஆண்களுக்கு அதிகாரத்தையும் அகம்பாவத்தையும் அளித்த திருமண அமைப்பைப் பார்த்து விரலை சுட்டிக் காட்டுகிறது இந்த நாவல்.

பிராமண குலத்தின் உயர்வைத் தாழ்த்தும் தீய கலாச்சாரம் பற்றி என்ன சொல்வது? கீழ் குலத்தவர்களாக அவமதிக்கப்படும் விலைமாதர் குலப்  பெண்களிடம் உள்ள வாழ்க்கை விழுமியங்களைப் பற்றி என்ன சொல்வது?   போன்ற கேள்விகளையும் இந்த சந்தர்ப்பத்தில் எடுத்து வருகிறது இந்த நாவல்.  

லதாவின் அடுத்த நாவலில் ஏறக்குறைய இதே கருத்துக்கள் மாறுபட்ட கோணங்களில் பிரதிபலிப்பதைப் பார்க்க முடிகிறது.  

(வளரும்)

Series Navigation<< தென்னேட்டி ஹேமலதாராகஜலதி என்ற நாவல் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.