சிதறும் கணங்கள்

முற்றாக இருள் விலகியிராத அதிகாலைப் பொழுது. இரவின் மௌனம் இன்னுமும் கடந்து கொண்டு தான் இருந்தது. கடைசி லயத்தின் பந்தலைச் சுற்றியிருந்த வாகனங்கள் இருந்த இடம் தெரியாமல் போயிருந்தன. கீழே சிதறிக் கிடந்த சீட்டுக் கட்டுக்களும் பீர் டின்களும் மண்ணாகிப் போய்க் கிடந்தன. மேசையில் தெளிந்து கிடந்த காப்பியும் காய்ந்திருந்தது.. ஈக்கள் அந்த வெள்ளத்தில் விளையாடிக் கொண்டிருந்தன. மீதிருந்த உணவுப் பண்டங்களும் சில மூடப்பட்டும் சில திறந்தும் ஈக்களுக்கு வழிவிட்டிருந்தன. 

 “ …என் பேராண்டி தலைக்கு தண்ணி ஊத்துர அழக நீங்கள் பார்த்ததிலலடி….பாவம் டி என் பேரன்…இனி அந்த அழக எப்படி பார்த்து ரசிப்பேன்… டேய்…குமரு…குமரு…..”

“ யோவ் மாரி….என் புள்ளைக்கு நீயே எமனா வந்துட்டீயேயா….”

மூக்கில் ஒழுகிய சளியைச் சட்டை நுனியில் துடைத்துக் கொண்டு நீட்டிய காலை மடக்கி சுவரோரத்தில் சாய்ந்தாள் அங்கம்மா பாட்டி.

அங்கம்மா பாட்டியின் புலம்பல் ‌சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் சிலருக்கு மட்டும் அது மனவேதனையாக இருந்தது.‌ ஒட்டிய கன்னத்தோடு எப்போதும் காட்சியளிக்கும் அங்கம்மா பாட்டி ஓயாது அழுது முகத்தை நீங்க விட்டிருந்தாள். 

அங்கம்மா பாட்டி குமரேசன் பிறந்து பதினாறாம் நாள் முதல் அவன் தலைக்கு நல்லெண்ணையை மட்டுமே பயன்படுத்தி வந்தவர்.

“ ஆத்தா….நாறுது இந்த எண்ணெய்….” முதல் முறையாக விபரம் அறிந்த குழந்தையாய் முகம் சுழித்துக் கொண்டு குமரேசன் சொன்னபோது அங்கம்மா பாட்டிக்கு கோபம் கோபமாய் வந்தது. 

“ குமரு…கண்ட கண்ட பிள்ளைங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு ஆத்தாவுக்கு கோபத்த உண்டு பண்ணாத….”

என்று சொல்லிக் கொண்டே பக்கத்து மரத்தூணில் செருகி வைத்திருந்த மூங்கில் குச்சியை இழுத்த இழுப்பில் தலைத்தெறிக்க ஓடிய குமரேசன் நல்லெண்ணைக்கு நண்பனானான்.

நெற்றியில் சதா சரிந்து விழுந்து கொண்டிருக்கும் முடிகளை வழக்கம் போலவே இரு விரல்களால் கோதி மேலே இழுத்து விட்டுக் கொள்வான் குமரேசன். அம்முடிகள் தலையில் அமர்ந்து கொள்கிறதோ இல்லையோ எப்போதும் போலவே தலையை குலுக்கிக் குலுக்கி ஆட்டிக் கொள்வதில் அவனுக்கு ஆத்ம திருப்தி. எப்படியும் அவை  சிறிது நேரத்தில் நெற்றிக்குத் திரும்பி விடும். அவனது விரல்களும் தத்தம் வேலைகளைத் தொடங்கி விடும். நொடிப் பொழுதில் “ ரிப்பீட் “ ஆகும் இந்த செயல் குமரேசனுக்கு பழகிப் போன ஒன்றுதான்.

அடர்த்தியான தலைமுடி அவனுக்கு. கோரை முடி என்பதால் எப்போதும் அவை நேர்த்தியாக இருக்கும். அவனது முடியைச் சீண்டிப் பார்க்க நினைப்பவர்களுக்கு முந்தைய சம்பவம் ஞாபகத்தில் சட்டென புகுந்து விடும்.

“ ஏண்டியம்மா செல்லம்மா…ஒன் வீட்டுல கறி சோறு இல்லையா? கோழி கீழி வாங்கிப் போட வக்கில்லையா?…ஒன் மகனுக்கு சோத்தப் போட்டு வளக்கலையா நீ? கடிச்சு திண்ண என்… என் மவன் சதத்தான்  கெடச்சுதா? …என் மவன் தனியா மாட்டுனான் அழுத்தி ஒக்கார வைச்சு முடிய வலிச்சி எடுத்துடுவன்…சொல்லி வை…”

கட்டை ராணியின் முரட்டுக் குரல் இரண்டு லயத்து மக்களையும் சுற்றி வளைக்க வைத்தது. வீட்டு முன் கூடிய கூட்டத்துக்கு முன்னால் குமரேசனின் விரல்கள் தலைமுடியைத் தான் வாரிக் கொண்டிருந்தன. கண்களின் பார்வையில் கட்டை ராணியின் மகன் மீது அனல் தெறித்துக் கொண்டிருந்தது. தைப்பிங் தேம்பி அழுது கொண்டிருந்தவன் கையில் குமரேசனின் வெட்டுப் பற்களின் அச்சு ஆழமாகப் பதிந்திருந்தன.

 கருகருவென்று வளர்ந்திருந்தன குமரேசனின் முடிகள். முடியைப் பாதுகாப்பதில் அவன் வல்லவன் தான். தினமும் தலைக்கு தண்ணீர் ஊற்றிக் கொள்வான். 

“ குமரு…அடை மழை டா…தலைக்கு தண்ணியை ஊத்திடாத….சளி புடிச்சுக்கும் டா….”

செல்லம்மா என்னதான் கத்தினாலும் குளியறையில் நுழைந்து விட்டால் முதலில் கண்ணில் படுவது ரோகினி சீயக்காய் ஷாம்பு தான். குமரேசன் ஆடைகளைக் களைந்து குளிக்கிறானோ இல்லையோ முதலில் சீயக்காய் ஷாம்பு மூடியைத் திறந்து மூக்குத் துவாரம் வரை எடுத்துச் சென்று நெடியை உள்ளிழுத்துக் கொள்வான்.. அந்த வாசனை வயிறு வரை உணர வைப்பான். அந்த வாசனையும் வயிற்றுக்குள் உலாவிக் கொண்டு தொண்டையில் ஒரு விதமான பித்த உணர்வைப் போல ஊர்ந்து வாய் வழியே வெளியே வந்து விடும். பலமுறை இவ்வாறு வாசனையை இழுத்துக் கொண்டு மூச்சடைக்கிக் கொண்டு ஆழ்மனத்தில் பத்து முதல் ஒன்று வரை எண்ணி மெல்ல மெல்ல காற்றை வெளியாக்குவான். அந்த சீயக்காய் ஷாம்புவின் வாசனை உடல் முழுவதும் பரவி ஆத்மாவைக் கூட தொட்டு விடும்.

உள்ளங்கையில் மூடியின் அளவை விட கொஞ்சம் அதிகமாகவே ஊற்றிக் கொண்டு மறுபடியும் நுகர்ந்த பின்னரே தலைக்குத் தேய்ப்பான். பத்து விரல்களும் முடியின் அடிவரை சென்று மசாஜ் செய்யும். 

“‌ இதோ வருகிறான்…ஓராங் ஊத்தான் பவர் மேன் குமரேசன்…” 

சில நேரங்களில் சீயக்காய் உடல் முழுவதும் படர்ந்து விடும். பெரிய அறையைப் போல குமரேசனின் தாத்தா 50களிலே கட்டிய அந்த குளியலறை குமரேசன் காட்டும் வித்தைகளுக்கு ஒத்துழைத்து விடும். ஆள் இடுப்பு அளவு உயர கட்டப்பட்டிருக்கும் தொட்டியில் தலையை முக்கி நீரில் மிதக்கும் முடியைக் கண்களைப் பிதுக்கிக் கொண்டு  ரசிப்பான். தொட்டியின் உள்ளிறங்கித் தண்ணீரில் முடியை மிதக்க விடுவான். அதே வேளையில் கால் பெருவிரலைக் கொண்டு தொட்டியின் தக்கையைத் தள்ளித் தள்ளி விட்டு தொட்டியிலிருந்து தண்ணீரை வெளியேற்றி மகிழ்வான். பெரிய ஆள் பாதி அளவிற்குப் போடப்பட்டிருக்கும் தொட்டி கரை மீது ஏறிக் கொண்டும் அமர்ந்துக் கொண்டும் தான் சாகசம் புரிய ஏற்ற இடமாகவே கற்பனைக்குள் உருமாற்றியிருந்தான்.

 மாதத்திற்கு ஒரு முறையாவது அவனை முடிக் கடையில் பார்த்து விட்டால் அந்தக் கடைக்காரருக்கு விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். கத்தரிக்கோல் தலையில் இருந்தால் கண்களை உருட்டி சீப்பியின் நடுவில் எத்தனை அங்குலத்திற்கு முடி வெட்டத் தயாராகிக் கொண்டிருப்பதை முகத்திற்கு நேரே கையில் பிடித்திருக்கும் கண்ணாடியின் வழியே அறிந்து அவன் போடும் கூச்சலில் 

“ அபாங், சாயா மாரி லம்பாட் சிக்கிட்….”

என்று காணாமல் போகும் வாடிக்கையாளர்கள் தான் அதிகம்.  கம்பத்து மூலையில் ஒத்த வீட்டிலிருக்கும் கள்ளுக்கடை மாரியப்பன் தாத்தா மட்டுமே அவன் மனதறிந்து முடியைக் கத்தரித்து விடுவார். அதற்காக அவர் பெறும் கூலி என்னவோ ஒத்த டன்ஹில் சிகரெட்டுதான்.

ஆற்றோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் வெளிச்சம் இருளுக்கு கொஞ்சம் வசதியாகத் தான் இருந்தன. 

குமரேசன் அணிந்திருந்த மெல்லிய வேட்டி சில்லென்று வீசிய காற்றில் திறந்து கொண்டு தொடை வரையிலும் குளிரை ஏற்படுத்தியது. மேனியில் மூடியிருந்த மற்றுமொரு வேட்டியும் மெல்ல விரித்து கொண்டதில் தேகமெங்கும் குளிரின் தாக்கம் அதிகமாகிப் போனது.

அவன் உடல் சிணுங்குவதைப் பார்த்தப் பெரியப்பா,

“சீக்கிரமா வேலயப் பாருங்கள். பொழுது விடிஞ்சரப் போது…”

கட்டளையை இட்டுக் கொண்டே குமரேசனின் கைகளைப் பிடித்தப்போது அவரது கைகளிலிருந்து உஷ்ணம் அவனுக்கு இதமாகிப் போனது. முதன் முறையாக அவரின் முரட்டு கைகளை அன்றுதான் பற்றியிருந்தான். உஷ்ணம் அதிகமாக அதிகமாக அவனது மூளையின் செயல்பாடுகளும் உஷ்ணமானது. 

அன்றைய முன்தினம் குமரேசன் தூங்கவேயில்லை. இடுப்பில் கட்டிவிடப்பட்டிருந்த வேட்டித் துண்டு மனைக்க்கட்டையில் அமர்ந்தவுடன் நடுவில் விரிந்து கொண்டது. உள்ளே அணிந்திருந்த வெள்ளை நிற அரைக்கால் சிலுவாரில் சிவப்பு நிற நூலில் தைத்த கிழிந்த இடம் கொஞ்சம் விரிந்து கொண்டது. அதைக் கையை வைத்து மறைப்பதற்குள் ஐயர் குமரேசனின் வலது கையை மேலே உயர்த்தி இடது கையை கையை கீழே நகர்த்தி பூணூலைக் கொடுத்து விட்டார். 

“ அந்த அங்கிள் சொல்லறதை அப்படியே செய்டா..”

இது மலர் சின்னம்மாவின் குரல். ஏதோ ஒரு கை விரல்கள் முடியைக் கோதியதில் கையிலிருந்த பூணூலை கீழே போட்டு விட்டு முடியைச் சரிசெய்ய நினைப்பதற்குள் பூணூலை உடம்பில் மாட்டி விட்டார் ஐயர். ஐயரின் செயல்கள் யாவும் மாயவித்தைகள் போலவே உணர்ந்தான். 

இந்த விடியற்காலைப் பொழுதிலும் அதே ஐயரிடம் மாட்டிக் கொண்டதில் குமரேசனுக்கு வருத்தமாகிப் போனது. வரும்போது கொண்டு வந்திருந்த கறுப்பு காப்பியும் “ அம்பாட் செகி “ ரொட்டியும் குமரேசன் வயிற்றுக்கு நிறைவைத் தந்தது. அடுத்த ரொட்டியைக் கையிலெடுத்து இரண்டாக உடைத்து காப்பியில் நனைக்க முற்பட்டப் போது,

“ போதும் போதும் வா…”

பெரியப்பாவின் முரட்டுக் கைகள் மீண்டும் குமரேசனைப் பற்றிக் கொண்டன. குமரேசனின் கண்கள் காப்பியில் நனைந்து கொண்டிருந்த ரொட்டித் துண்டுகளின் மீதேயிருந்தன. அவை காப்பியில் மூழ்கிப் போயின. 

“ குமரேசன்….அங்கில் சொல்ற மாதிரியே செய்யி …”

மீண்டும் ஒரு கை தலையைக் கோதிவிட்டதில் யாரென்று திரும்பிப் பார்ப்பதற்குள் மாயமாய் மறைந்து போனது அக்குரல். குமரேசனின் முகம் மாறிப் போயிருந்தது. மீண்டும் தலைமுடியை கோதி விட முடியாமல் ஐயரின் கெடுபிடி ஆரம்பமானது. அவனின் கோபத்தை உணர அங்கொருவருமில்லை என்பதை அறிந்தவன் மூக்கின் வழியே ஏதோ ஒரு வாடை நகர்வை உணர்ந்தான். பழக்கமான வாடையது. சுற்றும் முற்றும் கண்களை உருட்டிப் பார்த்தான். இருள் சூழ்ந்த ஆற்றோரத்தில் கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லை. சாம்பிராணி வாசனையை விட மூக்கைத் துளைத்த வாடையைத் தேடிக் கொண்டே ஆட்டுவித்த தஞ்சாவூர் பொம்மையைப் போலானான்.

அவனது மூக்கைத் துளைத்துக் கொண்டருந்த அந்த வாடை அவனது அருகில் உணர ஆரம்பித்தான். நிமிர்ந்து பார்க்கையில்,

“ வாடா…பேராண்டி…”

காப்பு காய்த்திருந்த முரட்டுக் கைதான் அழைத்தது. குமரேசனின் முகத்தில் புன்னகை அடையாளமிட்டிருந்தது. அரவணைத்த கையைப் பற்றிக் கொண்டு நடந்தான் குமரேசன். 

ஆற்றோரமிருந்த சிறு கல்லின் மீது அவனை உட்கார வைத்தார் மாரியப்பன் தாத்தா. அந்நியமாகியிருந்த அந்த இருள் சூழ்ந்த பொழுதில் தாத்தாவின் வருகையை மட்டுமே தனக்குரியதாக உணர்ந்த குமரேசன், தாத்தா சவரப் பெட்டியைத் திறந்தபோது ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து கொண்டான். திடீரென ஞாபகம் வந்தவனாய்,

“ தாத்தா மூஞ்சிப் பார்க்க கண்ணாடி எடுத்துட்டு வரலையா?… 

தாத்தாவின் மௌனம் அவனுக்கு விந்தையாக இருந்தது. தலையில் தாத்தா தெளித்த தண்ணீர் இன்னும் அவனுக்குள் பல கேள்விகளை  ஆரம்பமாக்கியது. குமரேசன் தன் தலையை ஆட்டிக் கொண்டபோது தாத்தா

“ ஷ்ஷ்ஷ்….” 

என்று “ அதட்டியது “ குமரேசனுக்குள் யுத்தம் ஆரம்பமானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.