
1.
லாவகமாக
விரைந்து வரும் தொப்பிகளை
தலையில் வாங்கிக்கொள்பவன்
தவறி
தரைக்கு தந்தபோதும்
குறைந்தபாடில்லை
கூடாரத்துள்
கைத்தட்டலின் ஓசை.
2.
நாய் ஒன்று மட்டும்
மறுத்து ஓடியதும்
அழகி கையிலிருந்த
குச்சியைக் காட்டியதை
செய்தபடியிருந்த
நாய்களெல்லாம் சிரிக்க
அதன் பின்னோடிய
அவள் கூடாரத்தை
சிரிப்
பூ வாக்கினாள்
3.
முதல் முறை தவறியது
அடுத்த முறை
வெகு அருகில் சென்று தவறியதும்
அரங்கம் பிரார்த்திக்கத் தொடங்கியது
இம்முறை அவளே பந்தாகி
சுழன்று மேலேறியவுடன்
அரங்கமே திரண்டெழுந்து
கூடையுள் அமர்ந்து
இரங்கியது.
4.
அடுத்தடுத்த
காட்சிகளுக்கிடையே
கெட்டித்தக் காலத்தை
கரைந்தோடச் செய்த
கோமாளிகள்
சிரிப்பாய் சிரித்து கொண்டனர்
சிறார்களாக
அரங்கிலும்
அமர்ந்திருந்தும்.
5.
நீண்டு தொங்கும்
வெண்ணிற துணிகளிடையே
பளிங்கென
சுழன்றும் விரிந்தும்
அந்தரத்தில்
மிதந்தவள்
இறங்கினாள்
எல்லோர் மனதிலும்
படிந்ததோர்
இறகாக.