ஒழிக தேசியவாதம்-2

தமிழாக்கம் : கடலூர் வாசு

ஒருங்கிணைந்த மனித நேயம் (INTEGRAL HUMANISM)

40 வருடங்களுக்கு பிறகு 1965ல், தீனதயாள் உபாத்யாயா,”ஒருங்கிணைந்த மனித நேயம் எனும் நம்பிக்கை தரும் பதத்தை முன்மொழிந்தார். இது, நாடு என்ற பெயரில் பல பெட்டிகளில் தனித்தனியாக அடைக்கப்பட்டுள்ள மனித குலத்திற்கு அப்பாற்பட்டதாக விளங்கியது. மேலும், தேசியம் எனும் மேற்கத்திய சொல்லைப் போல் தோன்றினாலும் அதிலிருந்து கடன் வாங்கியதாக இல்லை. 1930களில், பிரெஞ்சு கத்தோலிக்க சிந்தனையாளர், ஜாக்விஸ்  மார்ட்டின் என்பவர், humanisme integral எனும் கருத்தை வெளியிட்டிருந்தார். ஆனால் உபாத்யாயா இதை  அறிந்திருந்ததாகத் தெரியவில்லை. அது, இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் பொது வழித் தடைகள் அளவற்றதாக இருந்த காலம். மற்றும், இப்பதம்,   பல இந்திய எழுத்தாளர்களிடையே  இதற்கு முன்னரே மேலெழுந்தவாரிப் பிரயோகத்தில் இருந்தது. கருத்துப் படிவமாக இல்லை. 

இருந்தாலும், இவ்விரு பதங்களுக்குமான சம்பந்தத்தை பார்ப்போம்: 1930 பிரான்சில், இராணுவ மதச்சார்பற்ற 3 வது குடியரசு ஆட்சியிலிருந்தது. கம்யூனிச அச்சுறுத்தலும், 1960 இந்தியாவைப் போல், முன்னேறிக் கொண்டிருந்தது. இவ்விரண்டுமே கடவுள் நம்பிக்கையற்றது. ஆனால், மானுடத்தன்மை கொண்டது என அவர்களே கூறிக் கொண்டனர். இரண்டுமே மத நம்பிக்கையின்மையைத்தான் குறிக்கிறது.  கடவுள் இல்லை எனும் இவ்விரண்டு கட்சிகளுக்கும் எதிராக, மத நம்பிக்கையுடையவர்கள் வைத்த நுண்ணறிவு மிக்க வாதம்,  மனிதர்களின் கடவுள்  பரிமாணத்தை மறுக்கும் மானுடம் ஒன்றிணைந்த மானுடமல்ல என்பதாகும். காணும் பொருளே உண்மை என்னும் வாதம் மனிதர்களுக்கு இயற்கையாக ஏற்படும் கடவுளுணர்வை மலர விடுவதில்லை.அதை வளர விட வேண்டும். 

ஒருங்கிணைந்த மனித நேயம் என்ற பெயர் மேதைத்தனத்தை எட்டுகிறது.. அப்பாவித்தனமாகவும்  அதே சமயம் ஆக்கபூர்வமாகவும் ஒலிக்கிறது. யாருமே ஆட்சேபனை கூற முடியாது. இதனால்தான், ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. இவ்விரண்டின் அதிகாரபூர்வமான கருத்தியலாக இருந்தாலும், ஹிந்துத்துவா பற்றிய புத்தகங்களில் வல்லுநர்கள் இதை இருட்டடிப்பு செய்துள்ளனர். அறிவற்ற செயற்பாட்டுடைய இவ்வல்லுனர்கள், எதிர்மறை சொற்களையே முன் தள்ளுகின்றனர். ஹிந்து தேசியவாதிகள் என்பதுதான் இவர்களகராதியிலேயே இன்று வரை மிருதுவான அடைமொழி. தொழிலாளர் கட்சியைப் பற்றிய எந்த புத்தகத்திலும் சோஷலிசம் என்ற வார்த்தை இடறாமல் இருக்காது. ஆனால் இந்திய அறிவாளிகளும், இந்திய நோக்காளர்களும், பா.ஜ .க. ஆர்.எஸ்.எஸ். பற்றிய முன்னுரைகளில், அவர்களது உண்மையான கருத்தியலை வாசகர்களிடம் கூற வேண்ட அவசியமில்லை   என்பது அவர்களிடையே பிரமாணமாகவே மாறி விட்டது. 

ஐயகோ! உபாத்யாயா அடிப்படையிலிருந்து இதை மேலே கொண்டு சென்ற் பின்  அவருடைய பேச்சு தேசியவாத விளக்கமாக பின்னடைந்து விட்டது. இந்த அமைப்பின் முக்கிய கருத்து, சித்தி,அதாவது தேசத்தின்  ஆன்மா என்பதாகும். இது, 1780ல், ஜோஹான் ஹெர்டர் என்ற தேசியவாத கோட்பாட்டாளருக்கு பிரியமான கருத்து.  கடந்த குளிர்காலத்தில் ஹிந்து தேசியத்தின் இதய பீடமாக கருதப்படும் பூனே, மும்பை, நகரங்களில் நடந்த உபாத்யாயாவின் நூற்றாண்டு விழாவில் இந்த எளிமையான கருத்தியல் மீண்டும் உயிர் பெற்றதை நான் கண்டேன். எனக்கு இணக்கமான சில கருத்தரங்கங்களும் இருந்தன. ஆனால், புதிய யோசனைகள் அவ்வளவாக இல்லை. அவையும் சித்தி எனும் தயிரை கடைவதாகவே இருந்தது.  

தேசத்தின் ஆன்மா ஒரு  தேசத்தின்  மனநிலையை உள்ளடக்கிய புள்ளியியல் பிரதிபலிப்பு எனும் கருத்து அர்த்தமுள்ள ஒன்று.. இத்தகைய கருத்தையும் கூட தீவிர பரிணாமங்கள் மாற்றக் கூடும். 

ஒரு உதாரணம்: பண்டைய கால ரோமர்கள் ஒழுங்கமைப்பில் வல்லவர்களாக இருந்தனர். இதனால்தான் பயமற்ற கட்டமைப்பில்லாத காலர்(Gauls)களையும், ஜெர்மானியர்களையும் வெல்ல முடிந்தது. ஆனால்,ரோம  இராணுவத்தில் கூலிப் படையாளியாக இருந்த ஆர்மீனியஸ் என்ற ஜெர்மானியர் இவ்வமைப்பில் திறன் பெற்ற பின், தன்னாட்டிற்கு திரும்பி ஒரு பெரிய படையை கட்டமைத்து ரோமானியர்களை  முறியடித்தார்.  இதுவே,பாரம்பரியமாகக் கருதப்படும் ஜெர்மானியர்களுடைய  சீரான கட்டமைப்பு திறனின் முதற் பிரயோகம். மாறாக, பல நூற்றாண்டுகளாக சீரமைப்புடன் இருந்த  இத்தாலியர்கள் தாறுமாறான நடப்பிற்கு   பழமொழியாகி விட்டனர். சிறந்த கலைஞர்கள் ஆனால் மோசமான திறனாளிகள், அரசியல்வாதிகள் என்ற பெயரை அடைந்து விட்டார்கள். உணவு வகைகள், காதல் போன்ற்வற்றில் அறிவுடையவர்களாக உள்ளனர.  ஆனால்,  ஒரு காரியம்  ஒழுங்காக நடக்க வேண்டுமென்றால் இவர்களை நம்புவதில் பயனில்லை. எனவே, ஒரு தேசத்தின் ஆன்மா என்பதுமே மாறுதல்களுக்கு உட்பட்டதுதான். 

சித்தி என்ற சொல்லை  விளக்குவது  கடினமாக தோன்றினால் அதை நெறிமுறைக்கான கருத்தாக உபயோகிப்பது என்பது அதிலும் கடினம். குடிகார ஐயர்லாந்து நாட்டினர் எனும் பதத்தில்  தானிய மணியளவு உண்மை இருந்தாலும் அந்நாட்டு தேசியவாதிகள் அதை போற்றி பாதுகாக்க வேண்டிய பதமாக கருத மாட்டார்கள். இந்து அல்லது இந்திய தேசிய ஆன்மா ஏதென்று எனக்கு தெரியவில்லை. ( காலனீயத்திற்கு முன் ஆசியாவிற்கு வந்த ஐரோப்பிய  பயணிகள், வன்முறைக்கார முஸ்லிம்கள், சோம்பல் மிகுந்த புத்த மதத்தினர்,  மூர்க்க சீனர்கள் , வஞ்சகம் மிக்க ஹிந்துக்கள் என மாறுபாடற்ற பகுதிகளாக வைத்திருந்தனர்) இதை விட விரும்பத்தகாத பதங்களும் இருந்திருக்கக் கூடும். அவையெல்லாவற்றையும் மேல்தூக்கி நிறுத்துவது நியாயமல்ல. உபாத்யாவின் காலத்தில், பொதுவுடைமை கொள்கை மிகவும் விசாரமளிப்பதாக இருந்தது அதில் தவறில்லை. ஏனென்றால் இந்திய சிந்தனைக்கு , ஏன், ரஷ்ஷிய, சீன சிந்தனைக்கும் கூட  ஒவ்வாததாக இருந்தது. கம்யூனிச சித்தாந்தத்தையும்  போட்டியிட்ட  இதர சித்தாந்தங்களையும்  தேசிய ஆன்மாவை குறிப்பிடாமலேயே வறுத்தெடுத்திருக்கலாம். 

இங்கேயும், சித்தி என்ற வார்த்தை, மதச் சார்பிலிருந்து நழுவி மதச்சார்பின்மை வழியாக தப்பியோடத்தான்  உதவுகிறது. அதுதான் உபாத்யாவின் எண்ணமும் ஆகும். சரி! ஹிந்து தர்மம் என்பதற்கான பிரகாசமான சிறந்த மதச் சார்பின்மை தொனிக்கும் பதம்தான்  ஒருங்கிணைந்த மனித நேயம் என்றே வைத்துக் கொள்வோம். . இதன் மூலம் உபாத்யாயா சொல்ல வருவது என்னவென்றால் அனைத்து இந்தியர்களின் பொதுவான சிந்தனை என்பது ஹிந்துயிசத்திலிருந்து பீறிக் கொண்டு வெளி வருவதுதான்.  சசி தரூர், ராமச்சந்திர குஹா போன்ற மதச்சார்பற்றவர்கள் வெளியாருக்கு  போதிக்கும் இந்தியாவும் கூட அவர்களது வாய் சொல்லக் கூசும் ஹிந்துயிசம்  என்ற வார்த்தைக்கு இணங்கும்  தலையசைவுதான். ஹிந்துயிசம்தான் ஒருங்கிணைந்த மனித நேயத்தின் அடிப்படை ஆதாரம் எனப்  பெருமிதம் கொள்ளாமல் உபாத்யாயா வும் இதர சங்கப் பரிவாரங்களும் முதலிலிருந்தே ஹிந்துயிசத்தை குறைத்துப்  பேசுவதையும் மதச் சார்பின் பின்னால்  மறைப்பதையுமே தொழிலாகக் கொண்திருந்தனர்.. முடிவில், ஒருங்கிணைந்த நேயம் மதச் சார்பற்ற இந்தியாவை விளக்குவதாக அமைந்து விட்டது. உபாத்யாயாதான் பா.ஜ.க.வின் மதச்சார்பின்மைக்கு முன்னோடி ஆகி விட்டார்.

அயோத்தி

1990களில் நடந்த அயோத்தி சர்ச்சை சமயம் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. வினர் ராமரின் விசுவாசிகளாகவும் அயல் நாட்டினரான பாபரிடம் ஆத்திரம் கொண்டவர்களாகவும்  தங்களை காண்பித்துக் கொண்டனர். உண்மையில், பாபர் வெளிநாட்டிருந்து வந்ததால் ஆலயங்களை இடிக்கவில்லை. கிரேக்கர்கள், சித்தியர்கல், குஷ்னர்,ஹன், ஆங்கிலேயர்கள் அனைவருமே வெளிநாட்டினர்தான். ஆனால் அவர்களெவருமே ஆலயங்களை தொடவில்லை. ஆனால் உள்ளூர்காரனான மாலிக்காபூர் முஸ்லிமாக மாறிய பின் பாபரை போலவே ஹிந்து ஆலயங்களை இடித்துத் தள்ளினான். எனவே இது ஹிந்துயிசத்திற்கும் இஸ்லாமிற்குமிடையேயான மதப் போராட்டம். இந்துக்  கடவுளான ராமருக்கு எதிராக இஸ்லாமிய பாபர் நடத்திய போராட்டம். ஆனால், சங்கப் பரிவாரமோ இந்தியாவிற்கும் அயல்நாட்டினருக்குமான கலவரம் என்ற துணியை போட்டு  மறைக்கிறது. 

முகம்மது நபியும், அலியும்,  மெக்காவிலுள்ள காபாவில்  நுழைந்த போது  அவர்கள் வேறொரு  நாட்டிலிருந்து வரவில்லை. ஒரு குறிப்பிட்ட நாட்டினரை  வரையறுக்கும் மரபணு, தோல் நிறம், பாஷை, உணவு, இலக்கிய பரம்பரை ஆகிய அனைத்திலுமே இவர்கள் சூறையாட வந்தவர்களிடமிருந்து எவ்விதத்திலும் மாறுபட்டவர்கள் அல்ல. இந்தியா, மத்திய மேற்கு ஆசியா, மத்திய தரைக்கடல் ஆகிய இடங்களில் முஸ்லீம் படையெடுப்பாளர்கள்  செய்தது போலவே இவர்களும் காபாவிலிருந்த விக்கிரகங்களை அடித்து நொறுக்கினர். 

இஸ்லாமிய மதத்தின் மூர்த்தித் தகர்ப்பை அத்தேசத்துடன் ஒருமைப்படுத்துவது தவறு. மேலும் இப்போதைய சங்கப் பரிவாரம் இவ்வாறு செய்வது வேண்டுமென்றே  செய்யும் தவறாகும். தப்பித்தோடும் செயல். மத வெறியாளர்கள் என்ற பட்டத்தை தவிர்ப்பதுடன்   மதச் சார்பற்றவர்கள் தங்கள் முதுகை தட்டிக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் சங்கம் சத்தியமாக ஹிந்து சமயத்தை சார்ந்ததல்ல எனக் கூறுகின்றனர். மதச்சார்பற்ற தேசியத்தைதான் கடை பிடிக்கிறோம் என்ற இவர்கள் கூற்று  மேற்கிலும், அந்நாட்டு அறிவாளிகளின்  கண்டனத்திற்கும்  இடமளித்துள்ளது.

சங்கத்தினுடைய தேசிய விசுவாசத்தைக் கூட விளம்பரத்திற்காக செய்யும் தவறு என ஒதுக்கி விடலாம். ஆனால் சரித்திர பெயராக விளங்கும்  ஹிந்து என்ற    அடையாளத்தை  வெட்கமாக நினைப்பது மாபெரும் தவறாகும். ஒரு காலத்தில், நாங்கள்  ஹிந்து தேசியவாதிகள் எனக் கூறியவர்கள்- இன்றும் அனைத்து ஊடகங்களாலும் அவ்வாறே அழைக்கப்படுபவர்கள்-தற்போது தேசியவாதிகள் மட்டுமே.  இதையே மீண்டும் மீண்டும் மதச் சார்பற்ற நடுநெறியாளர்களிடம் கூறுகின்றனர். இவ்வாறு கூறுவதன் மூலம் அவர்களது அங்கீகாரத்தைப்  பெறலாமென நினைக்கின்றனர். தேசியம் முழுமை பெற்று விட்டது. தருமம் விலை போய் விட்டது. சங்கத்திற்கும், முக்கியமாக பா.ஜ.க.விற்கும், தேசியம் என்ற வார்த்தை மதச் சார்பற்ற தேசியம் என்ற தவறான பதத்திற்கு நுழைவுக்  குழாயாக மாறி விட்டது. ஹிந்துக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சுத்தமாக கை கழுவப்பட்டு விட்டன.

பா.ஜ.க வின் மதச்சார்பின்மை (BJP SECULARISM)

பா.ஜ.கவில் இப்போது நாம் காண்பது மதச்சார்பின்மையின் ஆளுமை. கோட்பாடற்ற இப்பதம், பிற்கால ஜனசங்கத்திலும், புதிய பா.ஜ.கவிலும் ஆதிக்கம் செலுத்திய வாஜ்பாயி காலத்திலேயே உருவெடுத்து விட்டது. 1991 அரசியல் வெற்றிக்குப்  பின் அயோத்தி சம்பந்தப்பட்ட விஷயங்களில் பா.ஜ.க. அதன் தொடர்பை  கத்தரிக்க ஆரம்பித்து விட்டது.  டிசம்பர் 1992, 6ம் தேதி, ஹிந்து ஆர்வலர்கள், பா.ஜ.க. தலைமையை மீறி பாபர் மசூதியை தகர்த்தபோது, அக்கட்சித் தலைவர் அத்வானி, என் வாழ்நாளிலேயே இதுதான் “மிகக் கரிய நாள்” என்றார். அவ்வாறிருந்தும், அகண்ட  பார்வையில், இச்செயல் நீண்ட கால சர்ச்சைக்கு ஒரு விரைவான முடிவை கொடுத்ததினால்  பல்லாயிரக் கணக்கினர்  உயிர்  தப்பினர். 1998-2004 வாஜ்பாயி அரசாங்கம், ஹிந்துக்களின் முன்னுரிமை பட்டியலில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. ஜன சங்கத்தின் ஒரு அங்கமான விச்வ ஹிந்து பரிஷத் அளித்த  நாற்பது புள்ளி பட்டியலையும் கையெடுக்கவில்லை. மறைந்த பிரமோத் மகஜன், பா.ஜ .கவின் திட்டமும் செயல்பாடும் ஒன்றுபடவில்லை என்பதை உணர்ந்து, ஹிந்துக்களின் சில கோரிக்கைகளை நாடுளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: அவற்றை கூட்டணிகள் நிராகரித்தாலோ தோல்வியுறச் செய்தாலோ தேர்தல் விவாதங்களில் முன் நிறுத்தலாம். வெற்றி கண்டாலோ தேர்தல் களத்தில் அவற்றை பரிசுக்  கேடயங்களாக காட்டலாம் என்றார்.ஆனால், வாஜ்பாயி  அவர்களோ பொருளாதாரத் திட்டங்களு டன்தான் வாக்காளர்களை சந்திக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்தார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உச்சியில் இருந்தபோதும் அவர் தோல்வியைத்தான் கண்டார். 

இப்போதுள்ள பா.ஜ. க. அரசாங்கமும் இதே செயல்பாட்டைத்தான் தொடருகிறது. உச்ச நீதி மன்றத்தின் முத்தலாக்(மனைவியை உடனடி விவாகரத்து செய்யும் முறை) செல்லாது என்றளித்த  தீர்ப்பு, பா.ஜ. க. முஸ்லிம்களுடைய குடும்பச் சட்டத்தை முழுவதுமாக ரத்து செய்து அனைவருக்கும் பொதுவான  குடியியல் சட்டத்தை  நோக்கி மெதுவாக நகருகிறது என்பதை மக்களிடையே நிரூபிப்பீதற்காக உபயோகிக்கும் ஒரு அத்தி இலையாக உள்ளது. உண்மையில், இவ்வழக்கு, சில முஸ்லீம் பெண்மணிகள் நீதி மன்றத்திந்கு எடுத்துச் சென்றதாகும். பா.ஜ.க. தற்செயலாக தீர்ப்பு வந்த சமயம் ஆட்சியில் இருந்தது. (அத்தீர்ப்பை உடனடியாக சட்டமாக்கியது பாராட்டதற்குரியது. எதிர்மாறாக, 1985ல் ஷா பானோ வழக்குத்  தீர்ப்பு முஸ்லீம் பெண்களுக்கு ஜீவனாம்ச உரிமையை அளித்த பின் ராஜிவ் காந்தி தலைமையில் இருந்த காங்கிரஸ் ஆட்சி அவ்வுரிமை 90 நாட்களுக்கு மட்டுமே. அதன் பிறகு அவர்களது உறவினர்களோ அல்லது வக்ஃப் மன்றமோதான் அதற்கான  பொறுப்பு என்ற சட்டத்தை இயற்றியது. இச்சட்டம் ,முற்போக்கான தீர்ப்பை ஷரியா விதிகளுக்கு இணக்கமாக இருப்பதற்காக மாற்றப்பட்டதாகும். . பின் வந்த வழக்குகளின் மூலம்  உச்ச நீதி மன்றம்  1986ல் இச்சட்டத்தை  ரத்து செய்தது). 

இவ்வாறே, கல்வி, ஆலய நிர்வாகம்  ஆகியவற்றில் ஹிந்துக்களுக்கு பாரபட்சமாந சட்டத்தை அகற்றவேண்டும் என்பதற்கான மசோதாவும் மஹேஷ் கிரி என்ற பாராளுமன்ற உறுப்பினர் முன்மொழிந்தது; கட்சியோ அரசாங்கமோ அல்ல. (பின்னர் ,பா.ஜ .க. பாராளுமன்ற உறுப்பினர், சத்யபால் சிங் விரிவான ஒரு மசோதாவை முன்மொழிந்தார். ஹிந்து ஆர்வலர்கள் ஆதரவு அளித்த இம்மசோதாவும் அரசாங்கத்தால் மேலெடுத்துச் செல்லப்படவில்லை.) நேருவை போல், முந்தைய ஆர்.எஸ்.எஸ். இலட்சியவாதி, நானா தேஷ்முக் போல், இந்திய விவகாரங்களில் அழைப்பில்லாமலே தலையிடும் அரசு சாரா அமைப்புகள் போல், தனியுடமை, பொதுவுடைமை இயற்பொருள் வாதிகள்(Materialists) போல், பா.ஜ.க. வும் வளர்ச்சி ஒன்றின் மேல்தான் சத்திய பிரமாணம் செய்கின்றது. மதச்சார்பற்றவர்கள்  அதன்   மேல் சாத்தியுள்ள ஹிந்து பிம்பத்தை ஹிந்துக்களின் வாக்குகளை அள்ளுவதற்கு  பா.ஜ .க. மகிழ்வுடன்  பயன் படுத்திக் கொள்கின்றது. ஆனால், ஹிந்துக்களின் எந்த ஒரு தேவையையும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை.

அது எதிர்பார்ப்பது போல்,  மதச்சார்பற்றவர்கள் அதன் முதுகில் தட்டிக் கொடுக்க ஒன்றும் தயாராக இல்லை. அவர்கள் வட்டாரத்தை பொறுத்த வரை, 1920 களிலிருந்து 1960வரை எழுதப்பட்ட காராசாரமான ஹிந்து நூல்களை தற்போதுள்ள பா.ஜ .கவின் முகத்தில் வீசியெறிந்தால் அவர்கள் காரியம் முடிந்து விட்டதாக நினைக்கின்றனர். தங்கள் முதுகில் என்றாவது ஒரு நாள் இவர்களது ஷொட்டு விழும் என்ற கற்பனையில் மிதக்கும்  ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ .க. வினர் அவர்களது சித்தாந்தந்தையே வீட்டுக் கொடுக்கத் தயாராக உள்ளனர். ஏனென்றால், மதச்சார்பற்றவர்கள் எது  சரியான நடை முறை எனக் கூறுகின்றனரோ அதற்குத்தான் இவர்கள் நடனமாடுகின்றனர்.  

தவறான கட்டுமானம் (MISCONTRUCTION)

தேசியவாதிகளின் கருத்தோட்டம்(Paradigm) எவ்வாறு  பிரச்சினைகளை திரிக்கின்றன என்பதை நான் மீண்டும் மீண்டும் பார்க்கின்றேன். பிறமதபோதகர்களின் சவால்,  இவர்கள் நினைப்பது போல்,  தற்போது மேற்கத்தியர்களின் தலையீட்டால் நடப்பது அல்ல. பெரும்பான்மையான மதபோதகர்கள் இந்தியர்களாவர். அமெரிக்க தொலைக்காட்சியில் வரும் மதப்பிரச்சாரகர்கள் கூட பன்மத விவாதங்களுக்கு உள்நாட்டினர்  ஒருவரைதான் தேர்ந்தெடுத்து  அனுப்புகின்றனர். மதபோதகர்கள் அமெரிக்க  உளவுத்துறையை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களது குறிக்கோள், பல நூற்றாண்டு காலங்களாக, அமெரிக்க உளவுத்துறையோ  காலனிய ஆதிக்கமோ  வருமுன்னரே இருந்த ஒன்று. அவர்களது இலக்கு, நாடோ மாகாணமோ அல்ல. அவர்கள் குறி வைத்துள்ளது உருவ வழிபாடுள்ள மதங்கள் மட்டுமே;  இந்தியாவில். முக்கியமாக இந்து மதம் மட்டுமே.  

எனது அனுபவத்தில் இரண்டு உதாரணங்களை கூறலாம். குரு கோபிநாத் என்பவர், லாஹிரி ,மஹாசாயா , ஸ்வாமி யோகானந்தா போன்றவர்கள் ஹிமாலய மலையில் வாழ்ந்து வந்த, வயதை சரியாகக் கணிக்க இயலாத பாபாஜி என்பவர்தான் ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த கோரக்நாத் என்று அறிவித்துள்ளார் என்று என்னை நேசித்த ஒரு நபர் என்னிடம் கூறினார். நான் இது சந்தேகத்திற்கிடமானது என அவரிடம் கூறினேன். இதற்கு அவர் அளித்த பதில், கோபிநாத் அறிவொளி அடைந்தவர் என்பதாகும். அறிவொளி பெற்ற  நபர்கள் பலரை நான் சந்தித்துள்ளேன். யோகத்தில் சாதாரண மனிதர்களை விட முதிர்ச்சி அடைந்திருப்பதால் மட்டுமே உலக விவகாரங்களிலும் அத்தகைய தேர்ச்சி மாயமாக அவர்களிடம் இணைந்து விடும் எனக் கூற இயலாது. அவர்களது அறிவும் கருத்துகளும்  பிறரை போல் அவர்களது பின்புலத்தையும்  சூழ்நிலையையும் பொறுத்துத்தான் இருக்கும். எனவே, குரு கோபிநாத் அவர்கள் பாபாஜி ஆயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்துகொண்டிருப்பவர் என சாதித்தால் மற்ற சாதாரண மனிதர்களை போலவே அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கும் உள்ளது என நான் பதிலளித்தேன். எனது நண்பர் இவ்வாதத்தை சட்டென நிறுத்தி விட்டு, நான் மேற்கத்தியர்களுக்கே உரிய பாரபட்சத்தை விடாப்பிடியாக கையாளுகிறேன் எனக் கூறினார். ஏதோ ஹிந்துக்கள் இத்தகைய இயற்கைக்கு முரணான விவரங்களில் சந்தேகமே பட மாட்டார்கள் அல்லது அந்த அளவிற்கு ஏமாறக் கூடிய மேற்கத்தியர்கள்  இல்லை  என்பது போலிருந்தது அவர் பேச்சு. பகுத்தறிவிற்கு முன் எடுபடாத நம்பிக்கைகளை மறைமுகமாக எடுத்துச் செல்ல ஹிந்துக்கள் – மேற்கத்தியர்கள் என்ற பிரிவினைத் திரை உபயோகமாக  உள்ளது.  

மற்றொரு விவாதத்தில், ஹிந்துக்கள், பிரிவினைக்கு காரணம் முஸ்லிகள் அல்ல; ஆங்கிலேயர்கள்தான். அது மட்டுமல்லாமல் ஆங்கிலேயர்கள்  ஹிந்து சமுதாயத்தையே படுகொலை செய்து விட்டார்கள் என்பதாகும். ஹிந்துக்களை கொலை செய்ய வேண்டும் என்ற வெறி ஆங்கிலேயர்களுக்கு ஒரு போதும் இருந்ததில்லை. அவர்களது குறிக்கோள் பணம் பண்ணுவது மட்டுமே. அதற்காக தீட்டிய   பொருளாதார திட்டங்கள் ஏற்படுத்திய மிகப்பெரிய இணை சேதம் உயிரிழப்பு. பிரிட்டிஷ் ஆதிக்கம் மக்கள் இருந்தார்களா இறந்தார்களா, பட்டினியால் வாடினார்களா  என்பதில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை.  முஸ்லீம் லீக் பிரிவினை திட்டத்தை தொடங்கிய  போது பிரிட்டிஷ் அரசாங்கம் அதை  மறுத்தது. (ஆனால், காங்கிரஸ் இந்தியாவின் ஒரே கட்சி அல்ல எனக் கிண்டலடித்தது) .முஸ்லிம்களின் வன்முறைகள் அதிகரித்ததால் வேறு வழியில்லை என்பதாலும் பனிப்போர் ஆரம்பித்த பின், பிரிவினையால் கிடைக்க இருக்கும் ஆதாயத்தாலும்  அதற்கு ஒப்புதல் அளித்தது. பிரிவினை நூற்றுக்கு நூறு முஸ்லீம் திட்டம்தான்.பிரிட்டிஷ் ஒப்புதலும், காங்கிரஸ் கட்சியினரின் மன மாற்றமும் ஒரே சமயத்தில்தான் நடந்தது. முடிவாக, ஜூன் 1947ல், “பிரிவினை என் பிணத்தின் மேல்தான்” எனக் கூறிய காந்தியுமீ அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாகி விட்டது.   

மேலும், ஹிந்துக்கள் வெளிப்படையாக கூறா விட்டாலும் எப்போதோ கிளம்பிச் சென்ற ஆங்கிலேயர்களை வீறாப்பாக  மீண்டும் விரட்டி அடிப்பது போல் பேசுவதெல்லாம்  எங்கே முஸ்லிம்களை தாங்கள் அவமதித்து விடுவோமோ என்ற பயமே என்பது எந்த ஒரு பார்வையாளருக்கும்   கண் கூடாகத் தெரியும். எஸ்.ஆர். கோயல் சொல்வது போல், எதற்கெடுத்தாலும் ஆங்கிலேயர்கள் மீது குற்றம் சுமத்துவதென்பது மாயாஜாலம் செய்பவர்கள் வேண்டுமென்றே பார்வையாளர்களை திசை திருப்ப நடிப்பது  போல் உள்ளது. சர்க்கஸ் கோமாளி மட்டும்தான் அதை நம்புவது போல் நடிப்பான். 

அது எவ்வாறிருந்தாலும், விவாதத்தின் போது  ஏமாளிகள், சோம்பல் ம்மிக்கவர்கள் என்பதற்கு பதிலாக மந்தமானவர்கள் (தமஸிக்)என்ற வார்த்தையை கூறினேன். வெடித்தெழுந்த ஒருவர், நான் எல்லா இந்தியர்களையும் மந்தமானவர்கள் எனக் குற்றம் சாட்டுகிறேன் என எச்சரித்தார். தொடந்து நடந்த வாக்குவாதங்களின் போது  இவ்வரியை விடாமல் திருப்பி திருப்பி சொன்னார். இத்தகைய அரசியல் பிரமை இந்தியர்களுக்கு மட்டுமல்ல, மேற்கத்தியர்களுக்கும் பொதுவானது. முஸ்லிம்களை தட்டித் தடவி சமாதானம் செய்வது இந்தியாவை போலவே ஐரோப்பாவிலும் மிகையாக உள்ளது. அதே சமயம், முஸ்லிம்களுடன் சமாதானமாக செல்வதை மறைக்க வேண்டி நீண்ட காலமாக செத்துக் கிடக்கும்  காலனீயத்துக்கு எதிராக காட்டப்படும் போலி வீராப்பை நம்பாதவர்களும்  இந்தியாவில் பலர் உள்ளனர். அதில் முதன்மையானவர் மறைந்த எஸ்.ஆர். கோயல், ஒரு உண்மையான தேச பக்தர். 

தேசிய வாதத்தில் மீண்டும் விழுந்தால் ஹிந்துக்கள் பிரச்சினைகளை தவறாகப் புரிந்து கொள்ள ஹேதுவாகும். நிறப் பாகுபாடு  கொள்கைப்  பாகுபாட்டைவிட மிகச் சுலபமானது.  சோம்பேறி தமசிக் மனத்திற்கு பிடித்தமானது.. ஆனால், இது எதிரிகளை நண்பர்களாகவும், நண்பர்களை எதிரிகளாகவும் தவறாக நம்பச் செய்யக் கூடியது.போர்க்களத்தில் இது உதவும் என நினைத்தால் அவர்கள் அதைதொடர்ந்து  நம்பட்டும். 

முடிவுரை

போர்க்களத்திற்கு தானாகவே செல்லாமல் எதிரிகளால் வலுக்கட்டாயமாக இழுக்கப்பட்டால், யதார்த்த நிலையை சரியாக அறிவதுதான் மரணத்தையோ  உயிரோடிருப்பதையோ முடிவு செய்யும். போருக்கான காரணங்களையோ ஆதாயங்களையோ ஆராய்வதற்கான தருணம் அதுவல்ல. எதிரியின் குணமும் நோக்கமும் அந்நேரத்தில் முக்கியமல்ல. தேச நலனும் கருத்தியலும் போரில் ஒன்றியிருப்பது மிக அதிசயம். இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்குமிடையே நடந்த வங்காள தேசப்  போரை  மட்டுமே  உண்மையிலே தரும யுத்தம் எனக் கூறலாம், அவ்வாறு ஒன்றிருக்கும் பட்சத்தில். 

நானறிந்த ஒரு யோகாசிரியர் இந்தியா மீது ஆர்வமுள்ள ஐரோப்பிய மாணவர்களை கடிந்து கொண்டார். இந்தியா ஒரு பொருட்டல்ல. அது ஒரு நாள் மறைந்து விடும். இந்தியா  முழுமையானதல்ல. என்றும் நிலைத்திருக்க போவதும் இல்லை.  யோகத்தின் தொட்டில் என்றளவில் ஓரளவு முக்கியத்துவம் வாய்ந்தது. மற்றும் பல கலாச்சார வளங்களுக்கான தொட்டில்  என்றார். ஆனால்,இந்தியாவிற்கு அதன் கலாச்சாரம்தான் இன்றியமையாதது. அதாவது,அதன் சனாதன தர்மம். ஆளில்லாத ஒரு தீவில் ஒரு ஹிந்து பயணிக் குழு சிக்கிக் கொண்டால் அவர்களால் இப்புதிய இடத்தில் ஒரு ராம ராஜ்ஜியத்தை நிறுவ இயலும். அவர்களது பூசைக்கு தேங்காயோ சாமந்திப் பூக்களோ கிடைக்காமால் போகலாம். அப்புதிய  சூழ்நிலையிலும் அவர்களால் சனாதன தர்மத்தை அதற்கேற்றாற் போல் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.  

முடிவாக, நான் சொல்வது,  தேசியவாதம் பகட்டான கருத்தியல் அல்ல. அந்தரங்கமான உணர்வு. அதற்கேற்ற  சொல்லான தேசப்பற்று என்பது  இயற்கையானது. சில கருத்தியல்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றை  பிரிக்கப் பார்க்கிறது. ஆனால் ஹிந்து தர்மம் அவ்வுணர்வை  ஏற்றுக் கொள்கிறது,மேலும்,  ,வளர்ச்சியூட்டுகிறது.ஆர். எஸ். எஸ். தேசிய வாத பிரச்சாரத்திற்காக செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவும் வீண் செலவேயாகும். தேசிய உணர்வை புகுத்துவதற்காக பாடப் புத்தகங்களை மாற்றியெழுதும் முயற்சியும் தவறான போக்கே. தாய் நாட்டின் மேலான பாசம் இயல்பான ஒன்று. அதற்கான பிரச்சாரம் தேவையற்றது. வேத கால ரிஷிகளின் தாய்நாடு ஹரியானாவை சேர்ந்த சரஸ்வதி நதிப் பள்ளத்தாக்கு மட்டுமே. பரத மஹாராஜா அவரது பெயரையுடைய துணைக்கண்டத்தைப் பற்றிக்  கேள்விப்பட்டதே இல்லை.  ஆனால், இப்போது வாழும் இந்தியர்களுக்கு அது யதார்த்தமான உண்மை. அப்பகுதியைதான் அவர்கள் நேசிக்கின்றனர் எனவே அவ்வுணர்வை  நிலைநிறுத்த வேண்டும். 

நவீன காலத்தில், முன்பை விட அரசாங்கத்திற்கு முக்கியத்துவம் உள்ளது. ஹிந்து கலாச்சாரத்தை போற்றி பாதுகாக்க இந்திய குடியரசு மிக அத்தியாவசியம். அவ்விதத்தில் இந்திய தேச பக்தர்களாக  இந்தியர்கள் இருப்பது சரியே. அத்தேசிய உணர்வை ஒருவரும் மற்றவர்க்கு சொல்லித் தரத் தேவையில்லை. 

முந்தைய பகுதி

(This is based on an article in Hindu Human Rights,London,October 2017): What about Hindu nationalism? – Koenraad Elst | BHARATA BHARATI

One Reply to “ஒழிக தேசியவாதம்-2”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.