எலிசபெத் பிஷப்: இரு மொழிபெயர்ப்புகளும் சில குறிப்புகளும்

ஒரு கலை 

இழப்புக் கலையில் தேறுவது அவ்வளவு கடினமல்ல.
இழக்கப்படுபவை இழப்பை இவ்வளவு
எத்தனிப்பதால் இழப்பு பேரழிவல்ல.

ஒவ்வொரு நாளும் ஏதோவொன்றை இழ. ஏற்றுக்கொள்
தொலைந்த வீட்டுச்சாவி, விரயமான நேரத்தின் பதற்றத்தை.
இழப்புக் கலையில் தேறுவது அவ்வளவு கடினமல்ல

எனவே பழகு, மேலும் இழக்க, துரிதமாக இழக்க,
இடங்களை, பெயர்களை, செல்லவேண்டிய
இலக்குகளை, இவையெதுவுமே பேரழிவில் முடியாது.

அம்மாவின் கைக்கடிகாரத்தை இழந்தேன். இதோ பார்! பிரியமான
மூன்று இல்லங்களில் கடைசியும் அதற்கு முந்தையதும் பறிபோவதை.
இழப்புக் கலையில் தேறுவது அவ்வளவு கடினமல்ல.

அருமையான இரு நகரங்களை இழந்தேன். அவற்றைக்காட்டிலும் அகண்ட
என் ராஜ்யங்களையும், இரு ஆறுகளையும், ஒரு கண்டத்தையும்.
அவற்றிற்காக ஏங்குகிறேன், ஆனால் இதுவும்கூட பேரழியவல்ல.

—உன்னை இழந்ததும்கூட (நகைக்குரல், பிடித்தமான
கையசைவு) இதைப் பொய்க்காது.
இழப்புக் கலையில் தேறுவது அவ்வளவு கடினமல்ல என்பது திண்ணம்
அது (எழுதிவிடு!) பேரழிவைப் போல் தோன்றினாலும்.

காத்திருப்பு அறையில்

வூஸ்டர் மாசசூஸட்சில்
கொன்சுயலோ அத்தைக்கு
பல்வைத்தியர் அப்பாய்ண்ட்மெண்ட்.
காத்திருப்பறையில் அமர்ந்திருந்தேன்.
குளிர்காலம். விரைவிலேயே
இருட்டிவிட்டது. அறை
நெடுக பெரியவர்கள்,
கடுங்குளிர் ஜாக்கெட்டுகள், மேலங்கிகள்
விளக்குகள் இதழ்கள்.
அத்தை போய்
நேரமாகிவிட்டது போலிருந்தது
காத்திருக்கையில் நான்
நேஷனல் ஜியோக்ராஃபிக் வாசித்தேன்
(எனக்கு வாசிக்கத் தெரியும்). கவனத்துடன்
வாசித்தேன் புகைப்படங்களை:
எரிமலையின் இருண்ட
சாம்பல் நிரம்பிய உட்பாகம்;
அதிலிருந்து
பொங்கிவழிந்த நெருப்போடைகள்.

ஓசாவும் மார்டின் ஜான்சனும்
குதிரைச் சவாரி அரைக்காற்சட்டையில்
கயிறு வைத்த பூட்ஸ் தக்கைத்தொப்பி அணிந்தபடி,
கம்பில் தொங்கும் சடலம்
–”லாங் பிக்”, (மானுட மாமிசத்தை) தலைப்பு சுட்டியது
நூலால் பலமுறை சுற்றப்பட்டு
குவிந்து நீண்ட தலைகளுடன் குழந்தைகள்;
ஆடைகளற்ற கருப்பிகள்
லைட்பல்புகளின் கழுத்தை ஒத்த
கம்பி சுற்றப்பட்ட கழுத்துகள்.
அவர்கள் முலைகள் கொடூரமாக இருந்தன.
ஒரே மூச்சில் படித்து முடித்தேன்
இடையில் நிறுத்த கூச்சப்பட்டதால்.
அதன்பின்தான் முன்னட்டையைக் கவனித்தேன்
மஞ்சள் விளிம்புகளை, தேதியை..

திடீரென்று, உள்ளிருந்து
ஓ என்ற வலிச்சத்தம்
–கான்சுயலா அத்தையின் குரலில்–
உரத்ததாக அல்லாது, நீடிக்காமல்.
பயந்த முட்டாள் பெண்ணவள்
என்பதை அறிந்திருந்தும்
நான் ஆச்சரியப்படவில்லை.
சங்கடப் படுத்தியிருக்கலாம் என்றாலும்
நான் சங்கடப்படவில்லை. நான்தான் அது என்பதே
என்னை முழுதும் ஆச்சரியப்படுத்தியது:
என் குரல், என் வாயில்.
சிந்திக்காமலேயே
நான் என் முட்டாள் அத்தையாகிவிட்டேன்
நான்–நாங்கள்– வீழ்ந்துகொண்டிருந்தோம், வீழ்ந்துகொண்டிருந்தோம்,
நேஷனல் ஜாக்ராஃபிக்
பிப்ரவரி, 1918 இதழின்
முன்னட்டையில் கண்களைப் பதித்தபடி
எனக்கே சொல்லிக்கொண்டேன்: மூன்று நாட்களில்
ஏழு வயதாகிவிடும் உனக்கென்று.
சுழலும் வட்டுலகிலிருந்து
சில்லிட்ட, கருநீல வெளிக்குள்
விழும் உணர்வை நிறுத்துவதற்காகவே
அதைக் கூறிக்கொண்டேன்.
.
ஆனால் நீயும் ஒரு நான்தான்,
நீ ஒரு எலிசபத்
நீ அவர்களுள் ஒருத்தி
என்று என்னையே உணர்ந்துகொண்டேன்.
நான் எதுவாக இருந்தேன்
கிஞ்சித்தேனும் பரிசீலிப்பதைக்கூட அஞ்சினேன்.
மேலே அதிகம் பார்க்க முடியாததால்
-அக்கம்பக்கம் பார்த்தேன்-
நிழல்படிந்த சாம்பல் முட்டிகளை
காற்சட்டைகளை, குட்டைப்பாவடைகளை, பூட்சுகளை
விளக்குகளின் கீழே
வேற்று ஜோடிக் கைகளை.
இதைக்காட்டிலும் விநோதமாக எப்போதுமே
நிகழ்ந்ததில்லை என்பதை அறிந்திருந்தேன்
இனியும் நிகழாது என்பதையும்.
என் அத்தையாகவோ அல்லது நானாகவோ
அல்லது வேறு யாராகவோ
நான் ஏன் இருக்கவேண்டும்?
எவ்வொற்றுமைகள்–
பூட்சுகள், கைகள், என் தொண்டையில் நான் உணரும்
குடும்பக்குரல், ஏன் நேஷனல் ஜாக்ராஃபிக்கும்
பயங்கரமான அந்த தொங்குமுலைகளும் கூட–
எங்களெல்லோரையும் பிணைத்தன
அல்லது அனைவரையும் ஒருங்கிணைத்தன?
எவ்வளவு– அதற்கான சரியான சொல்லை நான்
அறிந்திருக்கவில்லை — எவ்வளவு “அசாத்தியமிது”…
இன்னும் உரத்து மோசமாகிவிடக்கூடிய
ஆனால் மோசமாகாத வலிக்குரலை செவிப்பதற்காக
அவர்களைப் போல் நானிங்கு எப்படி வந்தேன்?

காத்திருப்பு அறை பிரகாசமாகவும்
மிகவுமே வெப்பமாகவும் இருந்தது. கருத்த பேரலை
ஒன்று மற்றொன்று, அதன்பின் மற்றொன்றென்று
அலைகளின் கீழே அது வழுக்கிச்சென்றது.
அதன்பின் அதற்குள் மீண்டும் இருத்தப்பட்டேன்.
போர் தொடர்ந்து கொண்டிருந்தது. வெளியே
வூஸ்டர், மாசசூஸட்சில்
இரவும், சேறும், குளிருமாக
இன்னமும் பிப்ரவரி ஐந்து, 1918.

~oOo~

“When you write my epitaph, you must say I was the loneliest person who ever lived,” Bishop said to Robert Lowell.
Photograph courtesy Yale Collection of American Literature / Beinecke Rare Book and Manuscript Library

தே(ற்)றும் கலை: எலிசபெத் பிஷப்பின் கவிதை

…Do
you still hang your words in air, ten years
unfinished, glued to your notice board, with gaps
or empties for the unimaginable phrase–
unerring Muse who makes the casual perfect?

For Elizabeth Bishop 4, Robert Lowell

இன்னமும்
காற்றில் உலவ விட்டுக்கொண்டிருக்கிறாயா உன் வார்த்தைகளை
, ,  கற்பனைசெய்ய முடியா வரியை இடைவெளிகளயும் வெற்றிடங்களையும் கொண்டு நிரப்பி, பத்து வருடங்களாக முடிக்கப்படாத கவிதையை
உன் நோட்டீஸ் பலகையில் ஒட்டவைத்துக்கொண்டு
சகஜமானதை பரிபூர்ணமாக்கும் பிழையா கலைவாணியே
?

எலிசபெத் பிஷப்பிற்காக 4, ராபர்ட் லொவல்.

முற்றிலும் புனையப்பட்டதாகவே தோன்றினாலும் இது முற்றிலும் உண்மையே. எலிசபெத் பிஷப்பை வாசித்துக் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்டிருந்தன; அவரை அனேகமாக மறந்துவிட்ட நிலையில் என் பெயர் அழைக்கப்படுவதற்காகப் பல் டாக்டர் ஆபீசின் காத்திருப்பறையில் அமர்ந்திருந்தேன். வாட்ஸ்ஆப்பில் நண்பரின் குறுஞ்செய்தி மின்னியது. எவரோவொருவரின் டிவிட்டர் பதிவிலிருந்த புலிட்சர் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்கக் கவிஞர் விஜய் சேஷாத்ரியின் கட்டுரைக்கான இணைப்பை அனுப்பியிருந்த்தார். அதில் விஜய், மிஸ் பிஷப்பின் “காத்திருப்பு அறையில்” கவிதையே எக்காலத்திற்குமான உலகின் தலைசிறந்த கவிதை என்று விவாதத்திற்குரிய கூற்றை முன்வைத்தார். அனிச்சையாகவே அதற்கு மறுப்புரையாக என் மனம் எனக்குப் பிடித்த கவிதைகளின் பட்டியலைத் தொகுக்கத் தொடங்கியது: ஹார்டியின் த டார்க்லிங் திரஷ், பவுண்டின் இரண்டாவது காண்டோ, எலியட்டின் த லவ் சாங் அஃப் ஆல்ஃப்ரெட் ப்ரூஃப்ராக், டெனிசனின் யூலிசீஸ், காத்திருப்பு அறையைக் காட்டிலும் சிறப்பான சில பிஷப் கவிதைகளும்கூட த ஃபிஷ், த மூஸ், ஏன் இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒன் ஆர்ட் கவிதையுமேகூட…அப்போதுதான் கவனித்தேன், சுட்டிக்குக் கீழே நண்பர் “காத்திருப்பு அறையில்” கவிதை தனக்குப் புரியவில்லை என்று பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டிருந்ததை. அதன்பின் சிறிது நேரத்திற்கு அக்கவிதையைப் பற்றி கதைத்துக் கொண்டிருந்தோம். உள்ளே / வெளியே குறித்து, சுயத்தை முதன்முதலில் அடையாளம் கண்டு கொள்ளும் தருணம், கவிதையின் தரவு முரண்பாடுகள், முதல் வாசிப்பைக் காட்டிலும் அதை சுவாரசியமாக்கிய பிஷப்பின் சில சரிதைத் தகவல்கள் என்றெல்லாம் பேசிவிட்டு முடித்துக் கொண்டோம். வெளியே, ஃபாக்ஸ்பரோ மாசசூசெட்ஸில், அன்று நவம்பர் 3, 2019.

அடுத்த மூன்று வருடங்களில் பிஷப் எழுதியது எதையுமே நான் படிக்கவில்லை. திடீரென்று எதிர்பாராத விதமாகத் தற்செயல் போல் தோன்றும் விதியின் விளையாட்டுத்தனம் தன் மூக்கை நுழைத்தது. வீட்டின் மேல்தளத்திற்கு இட்டுச்செல்லும் படிக்கட்டுகள் முடியும் இடத்தில் என் நூலகத்தின் இடப்பற்றாக் குறையால் புறந்தள்ளப்படும் புத்தகங்கள் எந்த முறைமைக்குள்ளும் வரையறுக்க முடியாத வகையில் வந்துசேரும் ஒரு புத்தக அலமாரி ஒன்றிருக்கிறது. வாசிப்பு-விதி தலையிடாதிருக்கும் பட்சத்தில், படிக்கட்டில் ஏறும்போதோ கீழே இறங்கிச் செல்லும் போதோ அதைப் புறக்கணிப்பதே என் வழக்கம். இம்முறை பக்கத்து அறையில் என் மனைவி கர்நாடக சங்கீதம் பயின்றுகொண்டிருந்ததைச் சிறிது நேரம் ஒட்டுக் கேட்டுவிட்டுத் திரும்புகையில், அவ்விதியின் உந்துதலால் கவிதை வடிவங்கள் குறித்த நார்டன் தொகுப்பால் ஈர்க்கப்பட்டேன். அத்தொகுப்பில் பேசப்பட்ட முதல் கவிதை வடிவமான வில்லனெல்லைப் (Villanelle) பற்றிப் படிக்கத் தொடங்கினேன். அதன் இறுதியில் கொடுக்கப்பட்டிருந்த கவிதைகளைப் படிக்கும் அவசரத்தில் உரைநடையை நான் முழுவதும் படிக்கவில்லை. பக்கங்களை வேகமாகப் புரட்டினேன். டிலன் தாமஸ்சின் Do not go gentle into the good night கவிதையில் கண்கள் தாமதிக்கையில் அதற்குச் சற்று மேலே முந்தைய கவிதையின் கடைசி பத்திகள் அவற்றின் எப்போதோ வாசித்த பரிச்சயத்தால் கவனத்தை ஈர்த்தன: மிஸ் பிஷப்பின் “One Art” கவிதை. முந்தைய வாசிப்பில் பிடித்திருந்தது இவ்வாசிப்பிலும் பிடித்தமாக இருந்தது என்னை மகிழ்வித்தது. எழுதுவதென்பது எனக்குப் பெரும்பாலும் ஒரு தற்செயல் நிகழ்வே. (அசையும் விரல் எழுதிச்செல்வது போன்ற தோரணைகளில் சிறிது நமபிக்கை இருப்பதால்) எனவே சற்றும் எதிர்பார்த்திராத அவ்வாசிப்பு அளித்த ஊக்குவிப்பால் மறுநாளே அக்கவிதையை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். முடித்தவுடன் நண்பருக்கு அனுப்பி வைத்தேன். இருவரும் மொழிபெயர்ப்பை வாட்ஸ்ஆப்பில் விவாதித்தோம். அதன்படி மொழிபெயர்ப்பும் உருமாறியது. ஓரளவிற்கு இருவருக்கும் திருப்திகரமாக ஒரு சமரச மொழிபெயர்ப்பு அமைந்துவிட்ட நிலையில் நான் எங்கள் வழக்கப்படி அவரை மொழிபெயர்ப்பு குறிப்பொன்றை எழுதும்படி கேட்டுக்கொண்டேன். பிஷப்பை வாசித்ததில்லையே என்று அவர் ஜகா வாங்கினார். நான் 2019இல் அவர் அனுப்பிய வாட்ஸ்ஆப் சுட்டியையும் அதன் பின் நாங்கள் விவாதித்த “காத்திருப்பு அறையில்” கவிதையையும் நினைவூட்டினேன். அதை அவர் சுத்தமாக மறந்துவிட்டார். ஆனால் நினைவுச்சாலைகளில் மீள்பயணம் செய்தது இன்னொரு தூண்டுதலாக அமைந்த்தால் நான் அந்தக் கவிதையையும் மொழிபெயர்ப்பு செய்யத் தொடங்கினேன், ஏதோ அதுவும் இவ்வளவு நாட்களாக என் அரைகுறை மொழிபெயர்ப்புக்காக “காத்திருந்தது” போல்… ஒருக்கால் அசையும் விரல் சில சமயங்களில் எழுதியபின் தாமதிக்கவும் செய்யலாம் போல.

In the Waiting room தன்னுணர்வின் திடுக்கிடும் தோற்றத்தை அல்லது இன்னமும் துல்லியமாக வரையறுக்க வேண்டுமானால் தன்னுடைய மற்றும் மற்றவர்களின் சுயத்தைக் குறித்த உணர்வை ஒரு ஏழு வயது சிறுமியின் கண்ணோட்டத்திலிருந்து ஆராய்கிறது. பல் வைத்தியரின் காத்திருப்பறையில் அவள் நேஷனல் ஜியோகிராஃபிக்கின் சமீபத்திய இதழைப் புரட்டியபடி தன் அத்தை பல்பரிசோதனை முடிந்து வெளியே வருவதற்காகக் காத்திருக்கிறாள். முதல் வாசிப்பில் கவிதை கூறியதுகூறல் போல் தொனிக்கும் ஒரு உண்மையை அப்பட்டமாக கூறுவதை நாம் உணர்ந்து கொள்கிறோம்: நாம் நாமாக இருப்பதுபோல் மற்றவர்களும் மற்றவர்களாக அவரவரது சுயங்களாக இருக்கிறார்கள். தனக்கொரு சுயம், தன் “முட்டாள் அத்தை”க்கொரு சுயம், காத்திருப்பறையில் அமர்ந்திருக்கும் மற்றவர் எல்லோருக்கும் ஒரு சுயம் இருப்பதைக் கண்டறிவது அந்த ஏழு வயதுச் சிறுமியைத் திகைக்க வைக்கிறது. தான் ஒரு சுயம் என்றும் அச்சுயமுமே தன்னை மனிதக் குழுவின் ஒரு பகுதியாக மாற்றும் வகைமையின் ஒர் தனிப்பட்ட உதாரணம் என்பதை உணர்ந்து கொள்வது அச்சிறுமியைத் திக்குமுக்காடச் செய்கிறது, இந்த உணர்வலைகள் தன்னை நனைத்துச் செல்கையில் காத்திருப்பறையே முழ்கிச் செல்லும் பிரமைக்கும் அவள் ஆளாகிறாள். குறைந்தபட்சம் கவிதையின் கதையாடல் அதைத்தான் நம்மிடம் வெளிப்படையாகக் கூறுகிறது. அக்காத்திருப்பு அறையில் நிகழ்வதை விவரிப்பதற்கான வார்த்தைகளைக்கூட அச்சிறுமி அறிந்திருக்கவில்லை என்பதை ஐம்பது வருடங்கள் கடந்து பெரியவளாக அந்நிகழ்வைக் கவிதையில் நினைவாக அவள் கண்டெடுப்பதின் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம். இம்மாதிரியான சாதாரண விவரங்களிலிருந்து (வருடம் 1918, வூஸ்டரில் பல் வைத்தியர் அலுவலத்தில் இருக்கிறேன், வெளியே குளிர், உள்ளேயோ மேலங்கிகள் ஆர்க்டிக்குகளின் அணிவகுப்பு, மேஜையின்மீது நேஷனல் ஜியோகிராஃபிக் இதழ் இத்யாதி) ஓர் மீப்பொருண்மைக் கணமொன்று உருவாவதே விஜய்க்கு இதை ஒரு முக்கியமான கவிதையாக ஆக்கியிருக்கலாம். பரிச்சயமான சூழலுக்குள் பரிச்சயமற்றது வெடிப்பது பிஷப்பின் கவிதையின் ஓர் நிலையான அம்சம். பஸ் பயணத்தை இடைமறிக்கும் அந்தக் கடமானை நினைவுகூர்கிறோம். இடத்தகவல்களை (பெயர்ந்து செல்லும் உப்புக் கரிக்கும் மூடுபனி, வழுக்கியமரும் குளிர்ந்துருண்ட படிகங்கள், சாம்பல் படிந்த முட்டைக்கோசுகள், அப்போஸ்தலர்கள் போன்ற லூபின்கள் போன்றவை) ஊர்வம்புடன் (குடிப்பழக்கத்திற்கு ஆளானான். பிரசவத்தில் மரிந்துவிட்டாள் இத்யாதி) சுவரசியமாகக் கலக்கும் கவிதையின் இறுதியில், அதன் தலைப்பைப் பெயராகக் கொண்டிருக்கும் அவ்விலங்கு திடுமென பிரவேசிக்கிறது:

A moose has come out of
the impenetrable wood
and stands there, looms, rather,
in the middle of the road.
It approaches; it sniffs at
the bus’s hot hood.

ஊடுருவயியலா காட்டிலிருந்து
வெளிப்பட்ட கடமான்
அங்கு நின்று கொண்டிருந்தது

சாலையை ஆக்கிரமித்தபடி.
நெருங்கியது
; முகர்ந்தது
பஸ்சின் வெம்மையான முகப்பை.

எந்தவொரு ஆயத்த ஆரவாரமும் இல்லாமல் கவிதையில் இவ்வகையான ஊடுருவும் தருணம் வெடிப்பது அதன் அர்த்தப் புலத்தை விரிவுபடுத்துகிறது. அவரது சிறந்த கவதைகளிள் ஒன்றான At the Fishhouse-இல் பிஷப் கூறுவது போல் இக்கணம் சுட்டெரிப்பதாகவும் அமையலாம்:

If you should dip your hand in,
your wrist would ache immediately,
your bones would begin to ache and your hand would burn
as if the water were a transmutation of fire
that feeds on stones and burns with a dark gray flame.
If you tasted it, it would first taste bitter,
then briny, then surely burn your tongue.
It is like what we imagine knowledge to be:

கையை நனைத்தால்
உங்கள் மணிக்கட்டு வலிக்கும் உடனடியாக
உங்கள் எலும்புகள் வலிக்கத் தொடங்கும்
உங்கள் கையோ எரியும்
எதோ நெருப்பே நீராக உருமாறி
கற்களை உண்டு இருண்ட சாம்பல் சுடராக எரிவது போல்.
அதைச் சுவைத்தால்
, முதலில் கசப்பாக இருக்கும்
பின் கரிக்கும்
, அதன்பின் நிச்சயமாக நாக்கைச் சுடும்.
அறிவை நாம் கற்பனை செய்து வைத்திருப்பதைப் போல.

உலகின் குளிர்ந்த கடுவாயிலிருந்தும் அதன் கல்நெஞ்சிலிருந்தும் பெறப்படும் இவ்வறிவானது எப்போதுமே ஓடிக்கொண்டிருக்கிறது, வெளிக்கொணரப்படுகிறது. மேலும் அனைத்து அறிவுமே வரலாற்றுப் பூர்வமாக இருப்பதால் (கவிதையிலும் நம் வாழ்வுகளிலும் முன் சென்றதைக் கொண்டே பின்னால் கண்டடையும் அர்த்தத்திற்கு வந்து சேர்வதால்) அது காலத்திலும் அமையப்பெறுகிறது. எனவேதான் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கையில் அது ஓடியதாகவும் ஆகுகிறது (“flowing and flown”)

ஆனால் எரிமலைகளும் சுயத்தின் தீவிரத் தனிமையும், மீட்கப்பட்டு லண்டனின் பரிச்சயமான சூழலில் இருத்தப்படும் ராபின்சன் க்ரூசோவின் அபாரமாக கற்பனை செய்யப்பட்ட தனிமையை நமக்கு நினைவூட்டுகிறது. முன்னாள் தரைதட்டிய தீவுத்தனிமையில் அவன் வர்ட்ஸ்வர்த்தின் டாஃப்ஃபடில்ஸ் கவிதை வரிகளை நினைவுகூர்கையில் ஒரு வார்த்தை மட்டும் நினைவிற்கு வராமல் அவனைத் திணறடிக்கிறது. அது “solitude” (தனிமை) ஆக இருப்பதே நகைமுரண். I’d have /nightmares of other islands / stretching away from mine / infinities of islands… என்று அவன் தற்போதைய லண்டன் தனிமையில் அங்கலாய்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாது “காத்திருப்பு அறையில்” கவிதையில் நாம் எதிர்கொண்ட அந்த இனக்குழு/ சான்றுரு வரையறுப்பின் தீவிரமான வடிவத்தையும் நமக்களிக்கிறான்:

The sun set in the sea; the same odd sun
rose from the sea,
and there was one of it and one of me.
The island had one kind of everything:
one tree snail, a bright violet-blue
with a thin shell, crept over everything,
over the one variety of tree,
a sooty, scrub affair.

சூரியன் கடலில் அஸ்தமித்தது; அதே ஒற்றைப்படை சூரியன்
கடலிருந்து உதித்தது,
அதனைப் போலொன்றும் என்னைப் போலொன்றும் இருந்தன.
எல்லாவற்றுக்கும் ஒருவகை மட்டுமே அந்த தீவில் இருந்தது:
ஒற்றைவகை மரநத்தை, ஒளிரும் ஊதா-நீலத்தில்
மெல்லிய மேலோட்டுடன், புகைக்கரி மண்டிய,
புதர்போல் முடங்கிய ஒற்றைவகை மரத்தின் மீதும்.
அனைத்தின் மீதும் ஊர்ந்தபடி.

கவிதையின் இறுதியில் வரும் அந்த அர்த்தச்செறிவுமிக்க கத்தி (அதன் ஒவ்வொரு வடுவும் கீறலும், அதன் நீலம்தோய்ந்த கூர்பகுதியும், உடைந்த முனையும், அதன் மரப்பிடியின் சிராயொழுக்கும்… அவனுக்கு அத்துப்படி) நிலத்தில் இருத்தப்பட்டிருப்பதால் ஏற்படும் முன்னாள் சாகசக்காரனின் தனிமையின் (அவன் தற்போது சிலுவையைப் போல் சுமந்து கொண்டிருக்கும் தனிமையின்) சோகமனைத்தையும் ஒருங்கிணைக்கும் படிமமாகவும் அமைகிறது:

The knife there on the shelf–
it reeked of meaning, like a crucifix.
It lived.

Now it won’t look at me at all.
The living soul has dribbled away.
My eyes rest on it and pass on

அதோ அலமாரியில் கத்தி
ஒரு சிலுவையைப் போல்
, அர்த்தங்கள் பெருக்கெடுத்தன அதனிடமிருந்து
அது உயிர்த்திருந்தது.

….

இப்போதோ என்னை அது பார்ப்பதே இல்லை.
அதன் உயிர்ஜீவன் வடிந்துவிட்டது.
என் பார்வை அதில் படிந்து பின் கடந்து செல்கிறது.


நிச்சயமாக, “இன் த வெயிட்டிங் ரூம்” கவிதையின் திறந்த தன்மையே அதன் குறியீட்டுத்தனத்தை அதிகரிக்கிறது. அதன் திட்டமிடப்பட்ட தரவு முரண்பாடுகள் (பிப்ரவரி 1918 நேஷனல் ஜ்யோக்ராஃபிக் இதழில் ஆப்பிரிக்கப் பழங்குடியினர் பற்றிய கட்டுரைகள் எதுவும் இல்லை, இருப்பினும் எரிமலைகள் பற்றிய கட்டுரைகள் இருந்தன), உள்ளிற்கும் வெளியிற்கும் இடையே நிகழும் அதன் பொருட்படுத்தல்கள் (கற்பனையா உண்மையா என்று நிர்ணயிக்க முடியாத “குடும்பக் குரலில்” ஒலிக்கும் ஓ வென்ற வலியின் குரல், சாம்பல் நிறைந்த, கருப்பு உட்புறங்களைக் கொண்டிருக்கும் எரிமலை தீயோடைகளாக பொங்கி வழிவது, வெளிச்சம் / வெப்பமூட்டப்பட்டிருக்கும் வைத்தியர் அலுவலத்தின் உட்புறமும் அதற்கெதிராகக் குளிரும் சகதியாகக் கிடக்கும் வூஸ்டர் மாசசூஸ்ட்ஸ் எனும் வெளியும்), கவனமாக மறைத்து வைக்கப்பட்ட மிஸ். பிஷப்பின் தற்பால் விருப்புணர்வு, இல்லறமும் அதை அச்சுறுத்தும் அந்நிய நடப்புகள் குறித்த தேய்வழக்கான கருத்துகளும், 1918-இன் புறத்தே மும்முரமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் போர், கவிதை பதிப்பிக்கப்பட்ட எழுபதுகளின் புறத்தேயும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது… இப்பதிப்பு பல கருத்துகளைக் கவிதையின் திறந்த அர்த்தப்புலத்திற்குள் ஈர்த்துக்கொள்கிறது.

Louise Crane and Elizabeth Bishop in 1937.

காத்திருப்பறையில் கவிதையின் போகிறபோக்கில் விவரித்துச் செல்லும் உருவம் சார்ந்த தடைகளற்ற சகஜமான பாணிக்கு மாறாக One Art கவிதை தன் இருபொருட்தன்மைமிக்க பார்வையை வெளிப்படுத்துவதற்கு ஒரு பழம்பெரும் கவிதை வடிவத்தைத் தேர்ந்தெடுக்கிறது. மீண்டும் மீண்டும் ஒலிக்கும் வரிகள் மற்றும் சொற்களைக் கோரும் வில்லனெல் விவசாயத்தின் கடுமையான உழைப்பைச் சிறிது ஆசுவாசப்படுத்துவதற்காகப் பாடப்படும் கிராமியப் பாடலிடம் அதன் தோற்றத்திற்காகக் கடன்பட்டிருக்கலாம். (villano வில்லனோ, என்பது விவசாயிக்கான இத்தாலிய வார்த்தை, வில்லா என்பதே பண்ணை வீட்டிற்கான லத்தீனிய வார்த்தை.) தோற்றம் எவ்வாறாக இருந்தாலும் நமக்குத் தெரிந்த காலத்திலிருந்து அது தன் முறைமையான வடிவக் கட்டுபாடுகளாலேயே அடையாளப்படுத்தப்படுகிறது: அதன் 19 வரிகள் மூன்று வரிகள் (tercets) கொண்ட ஐந்து பத்திகளாகவும் அதை முடித்துவைக்கும் நான்கு வரிகள் (quatrain) கொண்ட பத்தியாகவும் பகுக்கப்பட வேண்டும், முதல் டெர்ஸெட்டின் முதல் மற்றும் மூன்றாவது வரி மீண்டும் மீண்டும் மாறி மாறி பிற பத்திகளில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும், இப்படிப் பல வடிவக் கட்டுப்பாடுகள் (பிற கட்டுப்பாடுகளை நீங்கள் கூகுள் செய்து அறிந்து கொள்ளலாம்.) ஆனால் முக்கிய விஷயம் என்னவென்றால், உள்ளடக்கத்தின் தீவிரம் (ரௌத்திரப்படு, ஒளியின் மறைதலுக்கு எதிராக ரௌத்திரப்படு, என்று வில்லனெல் வடிவத்தில் அமைந்திருக்கும் ஒரு பிரபலமான டிலன் தாமஸ் கவிதை அறிவுறுத்துகிறது) வடிவத்தின் விளையாட்டுத்தனத்தால், இதெல்லாம் சகஜமப்பா என்று கவிதாயினி தோள்களைக் குலுக்கிக்கொள்வது போல், குறைக்கப்படுகிறது. மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் வரும் திருச்சாழல், கண்டராதித்தனின் நவீன வடிவத்தில் நினைவுக்கு வருகிறது.

இன் த வெயிட்டிங் ரூம் (சொல்ல மறந்துவிட்டேன், அது “The Country Mouse” என்ற உரைநடை வடிவத்தில்தான் முதலில் எழுதப்பட்டது.) போல் தடைகளற்ற சுதந்திரமான ஃப்ரீ வெர்ஸ் வடிவத்தில் எழுதப்படாத முறையான கட்டுபாடுகள் விடுக்கும் தடைகள் நிறைந்திருக்கும் வில்லனெல்லால் ஒரு நேர்கோட்டுக் கதையாடலை வெளிப்படுத்த முடிவதில்லை. மிஸ். பிஷப்பின் முழுக் கவிதைத் தொகுப்பைப் புரட்டுகையில் அதன் தொடக்க வரிகள் அன்றாடத்தில் ஸ்திரமாக கால் ஊன்றிருப்பதை நம்மால் உடனடியாகவே இனம்காண முடிகிறது. (இதோ ஒரு கடற்கரை, இதோ ஒரு துறைமுகம், வூஸ்டர் மாசசூஸட்சில், அதிகாலை நாலு மணியின் துப்பாக்கி-உலோக கருநீலத்தில், மீன், ரொட்டி மற்றும் தேநீரின் குறுகிய மாகாணங்களிலிருந்து, குளிர்ந்த மாலையாயினும்…) இவற்றிற்கு நேர்மாறாக ஒரு கலை கவிதையின் தொடக்கம் ஒரு சுருக்கமான பழமொழி அல்லது மெய்யுரையைப் போல் தொனிக்கிறது: “இழப்புக் கலையில் தேறுவது அவ்வளவு கடினமல்ல.” வலிந்து மறுக்கிறதோ என்று வாசகரைச் சந்தேகிக்கச் செய்யும் வகையில் கவிதை கட்டமைக்கப்பட்டிருப்பதால் அதன் வரிகளுக்கு இடையே பொருட்படும் அர்த்தங்களையும் உடன்வாசித்து கவிதையில் சொல்லப்படாது விடுபட்டிருப்பதையும் ஊகிக்க அவர் உந்துவிக்கப்படுகிறார்.

இழப்பு அதன் அடிக்கடி நிகழும் தன்மையால் சகஜப்படுத்தப் படுகிறது. ஆரம்பத்தில் அதன் வலி, தொலைந்த பொருளின் முக்கியத்துவமின்மை (அம்மாவின் சாவிக்கொத்து) அல்லது அதன் நகைச்சுவையான மறுபரிசீலனை மூலம் நையாண்டி செய்யப்படுகிறது (…இரு நகரங்களை… ஒரு நதியை.. ஒரு கண்டத்தை இழந்தேன்.) ஆனால் வறண்ட புன்னகைக்குப் பிறகு, இழந்த விஷயத்தின் மகத்துவத்தைக் கவிதை அதிகரித்துக்கொண்டே செல்கிறது, இறுதியில் ஒரு காதலரின் இழப்பைப் பட்டியலிடுகையில் அதன் வலிந்த நகைச்சுவையானது பரிதாபத்திற்கு வழிவகுக்கும் வகையில் இழந்த காதலரின் நகைக்குரலையும், பிடித்தமான கையசைவையும் நெகிழ்வாக நினைவுகூர்கிறது. பாதுகாக்கும் கவசத்தைத் தளர விட்டதை விரைவிலேயே உணர்ந்துகொள்வதால் மீண்டும் தன் உலர்ந்த முகமூடியை தருவித்துக்கொள்ளும் வகையில் இழப்புக் கலையில் தேறுவது அவ்வளவு கடினமல்ல என்பது திண்ணம் என்று தன் ஆரம்ப வரிக்குத் திரும்புகிறது. ஆனால் இப்போது வாசகர் அதைத் “தேர்ச்சி பெறுவது கடினம்” என்றே அர்த்தப்படுத்திக்கொள்கிறார். கவிதையை உரைப்பவர் பேரழிவெனக் கருதிய இழப்புகளைக் கவனமாகப் பட்டியலிலிருந்து தவிர்ப்பதை (அல்லது மட்டுப்படுத்துவதை) அவர் அனுமானிக்கிறார். அதிர்ஷ்டவசமாக, இக்கவிதையைப் பொருத்தமட்டிலுமாவது சரிதைத் தகவல்கள் கவிதையின் குழப்பங்களைத் தெளிவுபடுத்த உதவுகின்றன. பிறந்து எட்டு மாதங்களே ஆகிவிட்டிருந்த நிலையில் தந்தையை இழந்தார் என்றும், ஐந்து வயதில் தாயை மனக்கிலேசத்திற்கு இழந்தார் என்றும், அவரது கவிதைகள் மிகவும் மெச்சிய நோவா ஸ்கோஷியாவில் தாய்வழி தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்டுத் தந்தையின் குடும்பத்தாரால் நியூ இங்கிலாந்திற்கு இடம்பெயர்க்கப்பட்டார் என்றும் அவ்வாழ்க்கை வரலாறு நமக்குக் கூறுகிறது. பிற்காலத்தில் பிரேசிலிற்கு இடம்மாறி அங்கு லோடா டே மஸ்சியாடோ (Lota de Macedo) என்ற பெண்ணுடன் காதல் வயப்பட்டிருந்ததையும் அப்பெண்ணும் 1967-இல் நியூயார்க்கில் தற்கொலை செய்து கொண்டார் என்பதையும் நாம் அச்சரிதையின் வழியே தெரிந்துகொள்கிறோம்.

காத்திருப்பு அறையில் கவிதையில் செய்ததைப் போலவே பிஷப் அதன் முன்னோடியான In the Village சிறுகதையில் சில மூர்க்கமான கவிதைக் கணங்களைப் பதிவுசெய்திருக்கிறார். தாயின் மனநோயையும் அதன் விளைவால் அவர் தனித்து வைக்கப்பட்டிருந்ததையும் அக்கதை புனைவுபடுத்துகிறது. அதன் ஆரம்பம் ஓன் ஆர்ட் கவிதையில் அவர் பட்டியலிடத் தவிர்த்த, அதைச் சாவிக்கொத்து மற்றும் கைக்கடிகாரத்தை தொலைத்துவிடுவதைப் போல் சாதாரண விஷயமாக பாவித்ததைப் குறித்த ஒரு துப்பை நமக்களிக்கிறது. அதை இங்கு முழுமையாக அளிக்கிறேன், அவ்வளவு அழகாக இருக்கிறது என்பதற்காக மட்டுமல்ல, உணர்வுத் தீவிரம் எவ்வளவிற்குக் கவிதையில் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்துவதற்காகவும்:

ஓர் அலறல், ஓர் அலறலின் எதிரொலி அந்த நோவா ஸ்கோஷியா கிராமத்தின் மீது படர்கிறது. எவருமே அதைக் கேட்பதில்லை; அங்கேயே அது படர்ந்திருக்கிறது, எக்காலத்திற்கும். பயணிகள் ஸ்விட்சர்லாண்டின் வானத்துடன் ஒப்புமை செய்யும் அத்தூய நீல வானங்களின் மீது ஒரு சிறு கறையாக; மிகவும் இருண்மையாகவும் நீலமாகவும் அவை இருப்பதால் அடிவானத்தைச் சுற்றி அவை இன்னமுமே கருத்திருப்பதைப் போல் தோற்றமளிக்கின்றன – அல்லது அவற்றைக் கண்ணுறும் கண்களின் விளிம்புகளில்தான் அவை கருக்கின்றனவா? – எல்ம் மரங்களில் மேகத்தைப் போல் முகிழும் பூக்களின் நிறம் அல்லது ஓட்ஸ் வயல்களின் ஊதா நிறம்; காட்டையும், நீரையும், வானையும் கருக்கும் ஏதொவொன்று. அதைப்போல்தான் அவ்வலறலும் அங்கு படர்ந்திருந்தது, செவி மடுக்கப்படாது, நினைவில் மட்டுமே- கடந்தகாலத்திலும், நிகழ்காலத்திலும், இடைப்பட்ட வருடங்களிலும். ஒருவேளை ஆரம்பிக்கையில் கூட அது சத்தமாக இல்லையோ என்னவோ, அதற்கு அங்கு வாழ்ந்தாக வேண்டும் அவ்வளவுதான், எப்போதும் வாழ்ந்தாக வேண்டும். அதன் சுருதியே என் கிராமத்தின் சுருதியும்கூட. தேவாலயத்து கோபுரத்தின் மின்னல் கம்பியை விரல் நகத்தால் சுண்டிப் பாருங்கள், நீங்களும் அதைச் செவிக்கலாம்.  

வாழ்நாள் முழுதும் உற்ற நண்பராக இருந்த ராபர்ட் லோவல் (Robert Lowell) தன் For the Union Dead கவிதைத் தொகுப்பில் In the Village கதையை The Scream என்ற கவிதையாக உருமாற்றினார். அதன் முடிவு ஒரு கலை கவிதையின் இழப்புக் கலையை தேர்ச்சி பெறுவதற்குக் கடினமாக ஆக்கியிருக்கும், பேரழிவாகவும் கூட:

A scream! But they are all gone,
those aunts and aunts, a grandfather,
a grandmother, my mother—
even her scream—too frail
for us to hear their voices long.

ஓர் அலறல்! ஆனால் அவர்களெல்லோரும் போய்விட்டார்கள்,
வண்டி வண்டியாக அத்தைகள், ஒரு தாத்தா,
ஒரு பாட்டி
, என் அம்மா
அவள் அலறல்கூடமிக பலவீனமாக
நம்மால் நீண்ட நேரம் கேட்க முடியாதபடி.

ஒரு வகையில் அழிவுகரமானதாக மாறவல்ல இழப்பு அதன் இடிபாடுகளுக்கு எதிராக கரைசேர்க்கப்பட்டிருக்கும் கவிதையின் சந்தக் கலையால் வெல்லப்பட வேண்டும் என்பதே இங்கு உட்கிடையாக நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. வில்லனெல் என்ற பெட்டகம் அதன் சுழன்று மீளுரைக்கப்படும் வரிகளின் வழியே இவ்விழப்புகளை ஒளிமுறிவு செய்வதற்கு ஏதான ஒரு எதிரொலி அறையை வழங்குகிறது, மேலும் ஒவ்வொரு முறையும் அவ்வரிகள் மீளொலிக்கையில் அவற்றின் உணர்ச்சிப் பரவல் மற்றும் தீவிரத்தன்மை கூர்ந்து விரிவடைவதை நாம் உணர்கிறோம். இந்த வாசகனைப் பொறுத்தமட்டில் உரைப்பவரின் அத்தனை உருவ மற்றும் உணர்வுக் கட்டுபாடுகளையும் மீறி இழப்பு அதன் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டு கடைசி வார்த்தையைத் தன்னுடையாக்கிக் கொள்வதில்தான் கவிதையின் உற்சாகம் பொதிந்திருக்கிறது. செஸ்டினா என்ற மற்றொரு கவிதையில் (இதுவும் ஒரு முறைசார்ந்த கவிதை வடிவம், ஆறு வரிகள் கொண்ட ஆறு ஸ்டான்சாக்கள், மற்றும் நிறைவு செய்யும் மூன்று வரிகள் கொண்ட ட்ரிப்லெட்டைக் கொண்டு கட்டமைக்கப்படும் கவிதையில் ஆறு வார்த்தைகள் மட்டும் குறிப்பிட்ட விதத்தில் சுழன்று கொண்டே இருக்க வேண்டும்) ஒரு பாட்டி தனது கண்ணீரைத் தனது பேரக்குழந்தையிடமிருந்து மறைக்க முயல்கிறார், அக்குழந்தை அக்கண்ணீர்த் துளிகளைத் தான் பார்க்கும் அனைத்து பொருட்களுக்கும் இடப்பெயர்ச்சி செய்கிறது:

It’s time for tea now; but the child
is watching the teakettle’s small hard tears
dance like mad on the hot black stove,
the way the rain must dance on the house.

இப்போது தேநீர் அருந்தும் நேரம், ஆனால் குழந்தையோ பார்த்திருக்கிறது
சூடான கருப்படுப்பின் மீது கிறுக்குத்தனமாக நடனமாடும்
டீக்கெண்டியின் கடுமையான சிறு கண்ணீர்த் துளிகளை
,
மழையும் வீட்டின் மீது இப்படித்தான் நடனமாடும் போல.

குழந்தை அத்துளிகளைத் தன் வரைபடத்தின் (கலையின்) வழியே கட்டுப்படுத்த முயல்கிறது (அநேகமாக அறியாமலேயே). படத்தில் ‘கண்ணீர்த் துளிகளைப் போலுள்ள பொத்தான்களை அணிந்திருக்கும் மனிதனை” வரைகிறது. மேலும் படத்தில் ஆல்மனாக்கின் பக்கங்களுக்கு இடையிலிருந்து / கண்ணீர்த் துளிகளையொத்த குறு நிலவுகள் வீழ்கின்றன” அது வீட்டின் முன் கவனத்துடன் வரைந்திருக்கும்/ மலர்ப்படுக்கையில் மீதிருக்கும் குழந்தையின் மீது”. முடித்துவைக்கும் ஆன்வாயில் (envoi) கவிதை வடிவம் கோருவதற்கு ஏற்ப அந்த ஆறு சுழலும் வஸ்துக்களான குழந்தை, பாட்டி, வீடு, அடுப்பு, ஆல்மனாக் மற்றும் மழை ஒருங்கிணைக்கப்பட்டு இழப்பின் புதிர்மை மற்றொரு புதிர்மையாக உருமாற்றப்படுகிறது:

Time to plant tears, says the almanac.
The grandmother sings to the marvelous stove
and the child draws another inscrutable house.

கண்ணீரை நடும் நேரம் என்கிறது பஞ்சாங்கம்.
பாட்டி அற்புதமான அடுப்பைப் பார்த்துப் பாடுகிறார்
குழந்தையோ மற்றொரு புரிந்துகொள்ள முடியாத வீட்டை வரைகிறது.

அவர் முடித்த கடைசி கவிதை ஸானெட்-ஆக இருப்பதும் பொருத்தமானதே. ஸானெட் வடிவத்தில் (பதினான்கு வரிகள், சந்தநயம் மற்றும் திருப்பங்கள் (turn) குறித்த கட்டுப்பாடுகள்) எழுதப்பட்ட இக்கவிதையே உணர்வின் எரிமலைகளை அபாரமான கலையின் பூரணத்துவத்தால் கட்டுப்படுத்தும் வித்தையில் தேர்ச்சி பெறுவதற்கான அவரது இறுதி முயற்சியாகும். வாழ்நாள் முழுவதும் அடக்கிவைக்கப்பட்டவை இப்போது முற்றிலும் விடுவிக்கப்பட்டு எங்குவேண்டுமானலும், குறிப்பாக அவை சந்தோஷமாக இருக்கக்கூடிய ஓர் இடத்திற்கு, பறந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன. குதூகலம் என்பதைவிட அக்கடைசி வார்த்தையைப் பிறிதொன்றாக வாசிக்க நமக்குதான் எவ்வளவு ஆசை! அப்படிச் செய்வதும் எவ்வளவு தவறு!

Caught — the bubble
in the spirit level,
a creature divided;
and the compass needle
wobbling and wavering,
undecided.
Freed — the broken
thermometer’s mercury
running away;
and the rainbow-bird
from the narrow bevel
of the empty mirror,
flying wherever
it feels like, gay!

பிடிபட்டது- குமிழி
ரசமட்டத்தில்
,
பிளவுற்ற உயிராக
;
திசைகாட்டியின் ஊசி
தள்ளாடித் தத்தளிக்கிறது
முடிவெடுக்காது.
விடுவிக்கப்பட்டது- உடைந்த
வெப்பமானியின் பாதரசம்
ஒடிச் செல்கிறது
;
வெறுமையான ஆடியின்
சாய்முனையிலிருந்து
வானவில்-பறவை
விரும்பிய இடத்திற்கு
பறந்து செல்கிறது
, குதூகலமாக!

~oOo~

நம்பி கிருஷ்ணன், May 2023.

மூலநூல்கள் / மேலும் படிக்க: Bishop, Elizabeth, Poems, Farrar, Straus and Giroux, 2011

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.