‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’

காளிதாசனின் விக்ரமோர்வசீயம் எனும் படைப்பு புரூரவஸ்- ஊர்வசி ஆகியோரது காதல்கதையைக் கூறுவதாக அமைந்தது. அதற்கு ஏன் காளிதாசன் விக்ரம- ஊர்வசீயம் எனப் பெயரிட்டான் என்பதற்குக் காரணங்கள் கூறப்படுகின்றன. அது இங்கே இப்போது நமக்குத் தேவையில்லை. விக்ரமன் என்பது புரூரவஸின் மற்றொரு பெயர் எனும் கூற்றை மட்டும் நினைவில் கொள்ளலாம். இந்தப் படைப்பு நாடக வடிவில் அமைந்ததாகும். ஸம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ளாததால் நான் மூலத்தைப் படிக்க வாய்ப்பு எழவில்லை. பலரும் மொழிபெயர்த்துள்ள இந்த சம்ஸ்கிருத நாடகம் ஸ்ரீ அரவிந்தராலும் முதலில் நாடக வடிவாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அரவிந்தருள் இருந்த கவிஞன் அத்துடன் நின்றுவிடவில்லை என்பதுதான் பெரியதொரு ஆச்சரியம். இதனை அவருடைய உள்ளம் அசைபோட்டுக் கொண்டே இருந்துள்ளது. ஒரு காலகட்டத்தில் இதனைக் கவிதை வடிவாக்குகிறார். உரைநடை வடிவமும் நாடக வடிவமும், படிப்பதனை, கதையைப் புரிந்து கொள்வதனை எளிதாக்குகின்றன. ஆனால், நான் படித்தவரை பார்க்கும்போது, கவிதைவடிவின் வர்ணனைகளும், சொல்லலங்காரங்களும் (உரைநடையிலும் நாடகத்திலும் இந்த நயங்கள் உண்டு தான்) இதனை மிகவும் ரசித்து மகிழத்தக்க ஒரு படைப்பாக மாற்றிவிட்டன எனப் படித்து உணரும்போது உள்ளம் துள்ளுகிறது. ஸ்ரீ அரவிந்தரின் ஆங்கிலம் மிகக் கடினமானது எனக் கூறக் கேட்டுள்ளேன். மிகவும் பிரயத்தனப்பட்டு மொழியாக்கம் செய்து ஒரு பத்து வரிகளைப் படிக்கும்போது எழும் சந்தோஷ அலைகளில் புரண்டெழும்போது புத்துணர்ச்சி எழுகிறது.

சிறிய கவிதைத் துண்டைப் பார்த்த நாம் இப்போது நீண்ட கதைவடிவக் கவிதைக்குள் புகப் போகிறோம். அணுவணுவாக இந்தக் கதையை, அது கூறப்பட்டுள்ள கவிதைநயத்தை உணர்ந்து ரசிக்கப் போகிறோம். சென்ற கட்டுரையில் புரூரவஸ்- ஊர்வசியின் கதையைப் பற்றி சிறிது பார்த்தோம். இப்போது இந்தப் பகுதிக்கான கதைச் சுருக்கத்தை மட்டும் கொடுக்கிறேன். பின் கவிதைக்குள் மூழ்கலாம்.

நாடகத்தின் முதல் அங்கத்தில் அரசன் புரூரவஸ் தனது சூரியதேவ வழிபாட்டை முடித்துக்கொண்டு வரும்வழியில் தேவமங்கை ஊர்வசியின் பதற்றத்திலிருக்கும் தோழிமார்களைக் காண்கிறான். கேசி எனும் அரக்கன் ஊர்வசியையும் அவள் தோழி சித்ரலேகாவையும் சிறைப்பிடித்துக்கொண்டு சென்றுவிட்டான் என அவர்கள் கூறுகின்றனர். புரூரவஸ் அரக்கனுடன் போரிட்டு அவர்களை விடுவிக்கிறான். தன்னுடைய தேரில் ஊர்வசியை ஏற்றிவரும்போது அவளழகைக்கண்டு காதல் கொள்கிறான். அவளும் புரூரவஸ்தான் அரக்கனுடன் போரிட்டு அவளை விடுவித்தது என அறிந்து அவன்மீது காதல் வயப்படுகிறாள். நாடகத்திலும் இந்தக் காட்சிகளே அழகாக விவரிக்கப்பட்டுள்ளன.

முதல் சந்திப்பிலேயே காதல் என்பதனை காளிதாசன் அழகாக உணர்த்துகிறான். ஹேமகூட மலைச் சிகரத்தில் ஊர்வசியின் தோழிகள் அவளுக்காக தவிக்கும் உள்ளத்துடன் காத்திருக்கின்றனர். புரூரவஸ் தனது தேர்ப்பாகனிடம் தேரை நிறுத்தக் கூறும்போது அது தடாரெனச் சீரற்ற இடத்தில் நிற்கிறது. புரூரவஸும் ஊர்வசியும் ஒருவரோடொருவர் மோதிக் கொள்கின்றனர். புரூரவஸ் எண்ணுகிறான், “எத்தனை இனிமையானது தேர் இந்தச் சீரற்ற இடத்தில் இறங்குவது.”

“அவளுடைய தோளும் இடையும் என்மீது உராய்வதில் காதலின் முதல் சிலிர்ப்பை உணர்கிறேன்,” என்கிறான் அவன்.

கவிதை பலபடிகள் மேலேபோய் காட்சிகளை வெகு நுணுக்கமாக விளக்குகிறது.

ஊர்வசி

காண்டம்-1

புரூரவஸ் ராட்சசனுடனான போர் முடிவடைந்து
உலகை நோக்கித் திரும்பினான், எல்லையற்ற விண்வெளியின் வழியாக
பூமிக்கும் சுவர்க்கத்திற்கும் இடையே ஒரு விண்மீனைப்போலப் பிரயாணித்தான்
நிதானமாகவும் பிரகாசமாகவும். மெதுவாக நமது மனிதக்காற்றை
அவன் சுவாசித்தான்; ஏனெனில் கீழ்நோக்கி இப்போது தெய்வீகக் குளம்புகள்
நெருப்பை அலட்சியமாகத் துவைத்தபடி சப்தம் எழுப்பியவாறு சென்றன,
பெரிய பூமி அவனைநோக்கி விரைந்தது, பசுமையாக.
புலர்பொழுதின் முதல் கோடுகளுடன் அவன் சிகரங்களைத் தொட்டான்,
ஆனால் முரட்டுத்தனமான உயரங்களில் நிற்காமல், அடைந்தான்
மழைக்கு உட்பட்ட கீழான சிகரங்களை,
இளைப்பாறினான். வடக்கே பார்த்தவன் அங்கு கண்டான்
அசுரத்தனமான பனிமூட்டம் ஆகாயத்தில் உயர்ந்து ஏறுவதனை
அந்த வலுவான மௌனத்தை உணர்ந்தான். அவன் காதில்
பின்வாங்கும் போரின் சப்தங்கள் இருந்தன,
சக்கரங்கள் அகலமாக நொறுங்குவதும் உரத்த நாராசமான 15
முரசொலியும் எதிரிகளின் வருத்தம் நிறைந்த நடையும்.
ஆதலால் அவன் மகிழ்வோடு தனது ஆத்மாவிற்குள் அருந்தினான்
அடைய முடியாத மாசற்ற அமைதியை
மலைகளுடையதும் புனிதமான அவன் தாயின் மார்பகங்களுடையதும்.
ஆனால் அவன் அந்த நிசப்தத்தைச் செவியுற்றதும், ஓர் எண்ணம்
அவனுக்குத் தோன்றியது அந்த நீரூற்றிலிருந்து. அவன் திரும்பி
அந்த அமைதியான கன்னிமையான கிழக்கினை வெறித்தான்,
நாளின் அந்தப் பிறப்பைப் பார்த்தவண்ணம்,
ஒரு சிறப்பான கவிதையின் வரி, மங்கலிலிருந்து வளர்ந்து
மெதுவாக நன்றான பேச்சாக விரிவது போல.
அந்த சாம்பல்நிறத் தெளிவும் முத்துப்போன்ற தன்மையும்
மேலும் மேலும் மலர்ந்தது, பூமியின்மீது திரும்பவும் தூய்மையாக
புராதனக் காலையின் புதுமை திரும்பியது,
புத்திக்கூர்மையும் தூய்மையும் நிறைந்த சக்தியுடன் வாழ்வு துவங்கியது,
சுவர்க்கத்தின் நீர்த்தாரைகளால் புதுப்பிக்கப்பட்டது போல 30
இப்போது அது அவனருகே ஓடியது;
அகன்று தோன்றும் பெருமையினூடே அவன்
அதிகாலையின் ஒரு முகத்தைக் கண்டான்
புதிர்களிலிருந்து ஒரு பசுமையான உடல்,
முன்னறிவிப்பான ஒளியில் நன்கு போர்த்தப்பட்டிருந்தது.
பூரணமான காந்தியைவிட இன்னும் செழிப்பாக. அது அவள்,
பொன்னிறக் கன்னி, உஷை, உயிர்களின் தாய்,
ஆயினும் கன்னி. இனியதொரு மௌனத்தில்
முகத்திரையின்றி, மெல்லிய புன்னகையுடன்,
ஒரு மணப்பெண்ணைப்போல, சிவந்த கன்னங்களுடன்,
அவளுடைய மார்பு முழுவதும் மலர்கள், காலையிளங்காற்று
அவள் கூந்தலைக் கலைக்க, முழுதும் தங்கமயமாக அவள் வந்தாள்.
தனியாக அவள் வரவில்லை. அவள் பின்னால் சிரித்த முகங்கள்
(கொண்ட) இனிமையான தேவ கன்னிகைகள், எவருடைய அழகுகள்
யுத்தம் செய்து களைத்த கடவுள்களின் வேலையை எளிதாக்குகின்றதோ (அவர்கள்) 45
தங்கள் பொன்னிறமான காலைச் செயல்கள் பொன்னாக எழும்படி
சாஸ்வதமான கடலின் இளமையினின்றும் பிறந்த
இளமையான சாஸ்வதமான அவர்கள், அலைகள்
அவர்களின் கால்களிலும் அவர்களின் குரல்களிலும் புதியதான
நுரைபோன்றும், கடல் அவர்கள் ஆத்மாக்களில் காதலாகவும் (இருந்தன).
சிரித்துக்கொண்டே அவர்கள் மேகங்களினூடே ஓடியாடினர், அவர்கள் தலைமயிரும்
ஆடைகளும் காற்றில் புயலால் அலைவது போன்று இருந்தது.
ஆகாயம் அவர்களால் அழகாகி விட்டது; அவர்களுடைய பாதங்கள்
ஒரு ஓய்வில்லாத அழகாகவும், மகிழ்ச்சியான கண்கள் காலையின்
எழிலால் நிரம்பியும், தெய்வீகமான முகங்கள் பின்னுக்குச் சாய்ந்து
காற்றின் துடுக்கான முத்தங்களுக்காகவும் காத்திருந்தன.
எண்ணற்ற பனித்துளிகள் ஒளிர்வதுபோல் அவர்கள் ஆடினார்கள்,
மேனகா, மிஸ்ரசாக்ஷி, மல்லிகா,
ரம்பா, நெலபா, ஷீலா, நளினி,
லலிதா, லாவண்யா, திலோத்தமா, 60
பல இனிய பெயர்கள்; அவர்களுள் இவளும்.
அவளைக் கண்ட அரசன் புரூரவஸ்
ஆனந்தத்தால் சிலிர்த்து நடுங்கினான்,
புரூரவஸின் பரந்த இதயம்
கடலைப்போல் கொந்தளித்தது – ஒரு பலத்த காற்று வீசும்போது
பெருங்கடல் உயர்ந்து எழுவதுபோல,
அந்த அதிர்ச்சியை உணரக் காத்திருந்தது போல, அவன்
அவள் முகத்தின் எதிர்பார்ப்பில் அசைந்தான். ஏனெனில்
அதனுடைய தெய்வீகத்தில் இதுவொரு ரகசியம்
பிரகாசம் நிறைந்த உச்சி சூரியன் போல, அல்லது பாதி தெரியும்
அவளது தலைமயிரால் தொல்லைப்படுத்தப்பட்ட (வடிவம்போல?)
இருப்பினும் சுவர்க்கமே சுவாசித்தது
அவளது கைகால்களினின்றும், அற்புதமான கேசத்திலிருந்தும் வரும்
நறுமணங்களையும் ஸ்வப்னங்களையும்; பின் ஒரு இடைவெளியில்
அப்பேரரசன் பேச்சற்று நின்றான், குழப்பமடைந்து, பார்த்தான் 75
அந்த அழகான வடிவமும், சிரிப்பும், களிப்பும்
உலகை வெல்லுவதை. இறுதியில் பெருமூச்சுடன்
இனம்புரியாத ஆவல் மேலிடப் பேசினான்
தனிமையே அதனைக் கேட்குமாறு. “ஓ வலிமையுள்ள கடவுளே,
நீ யார் என்னைத் தன் தீக்கரங்களால் இழுப்பது
எனது ஆத்மாவை நிறங்களால் பூசுவது?
குன்றுகள் நகரும், எப்போதுமுள்ள நட்சத்திரங்கள்
தங்கள் மாற்றப்படாத சுழற்சியினின்று விலகும் என்று நான் எண்ணுகிறேன்
இல்லை புரூரவஸ்; இருப்பினும் நான் வீழ்கிறேன்.
எனது ஆத்மா எனக்கே தொடர்பின்றிச் சுழல்கிறது, கட்டுப்படுத்தவியலாத
புரவிகளின் குளம்போசை கேட்கிறது.
மனிதர்கள் என்னைப்பற்றிக் கூறினர்: ‘அரசன் புரூரவஸ்
மனிதனைவிட உயர்வானவன்; நிர்மலமான ஸ்வர்க்கத்திற்கு
சமத்துவத்துடன் தனது கம்பீரமான குணங்களுடன் உயர்கிறான்.’
இப்போது நான் ஏன் கவர்ச்சியான பூமியை நோக்கித் தாழ்கிறேன்? 90
நீ, நீ யார், புதிர்! பொன்போன்ற அதிசயம்!
மனதை உருக்கி வசீகரிப்பவளே! நான் விரும்பும் மங்களமான
மென்மையான மாலைப்பொழுதுகளின் ஒரு பகுதியல்லவா நீ?
உனது அழகை நான் அந்த மேகங்களில் கண்டதில்லையோ?
நிலவொளியில், நட்சத்திரவொளியில், நெருப்பில்?
ஏதோவொரு மலரின் துயரமான பிரகாசமாய்? ஒரு முகம்
அதன் நினைப்பு, ஒரு சித்திரம்போல என்னுடன் வாழ்வதாய்
நான் தொலைத்துவிட்ட ஒரு எண்ணமாய்? ஓ உனது குரலோசை
ஏதோ ஒரு சோலையில் இடையறாது ஒலிக்கும் வசந்தகாலத்தின் குரல்கள்,
அல்லிமலர்களை மொய்க்கும் தேனீக்களின் மொழிகள்
நிலவிற்கு வழிவிடும் அமைதியான நீர்நிலைகள்?
கடந்த பிறவிகளில் கட்டாயமாக நான் உன் பெயரை விரும்பியிருப்பேன்,
ஒவ்வொரு பதம் பதமாக இப்போது முயற்சிசெய்து
அதன் இனிமையைத் திரும்ப உணர நினைக்கிறேன். உனது வசீகரம் –
காணும் பொருள்களில், அமைதியான தனிமையான பனிப்பிரதேசங்களில் 105
இரக்கமற்ற பெரிதாக எரியும் நடுப்பகல்களில்,
நகரங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் மலைக்காற்றிலும்
பூமியின் அத்தனை அழகும் உன்னிடம் உள்ளது,
ஆத்மாவின் அனைத்து சுகபோக அனுபவங்களும் உள்ளன.
ஓ நான் உனது வசீகரிப்பை விடுத்து புனிதத்தன்மையை மட்டுமே
எதிர்பார்த்ததனால் நீ வருகிறாயா, (பெண்)தெய்வமே
அழகினால் பழிதீர்த்துக்கொள்ள வருகின்றனையா? வா!
வெளிச்சத்திலிருந்து உன் முகத்திரையை விலக்கிவிடு!
ஒரு வரம்பிற்குள் இரு,
ஓ எல்லையற்ற நளினமே! நான் உன்னைக் காணவும் தழுவவும்.
ஏனெனில் எனதுடன் இயற்கையில் பொருந்தும் ஒரு பெயரை நீ கொண்டுள்ளாய்
என எனது உள்ளம் அறியும்,
நமது சேர்க்கை மாயையால் தவிர்க்க முடியாதது,
வேதத்தின் கச்சிதமான ஒரு செய்யுளைப்போல என உணர்கிறேன். 120
உனது பாதங்களை என் இதயத்தின்மீது வைப்பாயாக,
ஓ (பெண்)தெய்வமே! பெண்ணே, எனது மார்பினுள் குடியேறு!
நானே புரூரவஸ், ஓ ஊர்வசீ.”
ஒரு மனிதன் காலையின் சாம்பல்நிறத் தோற்றத்தில்,
நினைவிலிருத்திக்கொள்ள இயலாத ஒரு கனவிலிருந்து விழிப்பது போல,
வாழ்க்கையைப் பற்றிச் சிலபொழுதுகள் குறைகூறியவாறும்
பழக்கமான பழைய எண்ண அலைகளை அடித்து விரட்டியும்,
தன் வழக்கமான மகிழ்ச்சியையும் கவலைகளையும் வெறுத்தவாறும்
ஒரு கனவின் இன்ப உணர்ச்சியை நினைவுபடுத்திக் கொள்ள முயல்கிறான்;
வீணில் நெடுக முயன்று தனது வலிமிகுந்த எண்ணங்களை
பல வேறுவிதங்களில் புரட்டிட, திடீரெனத் தோன்றும்
ஒரு பொறி, மற்றொன்று, மூளையில் ஒரு மின்னலைப்போல
அந்தத் தோற்றம் எரிகிறது, அந்தப் பெயர் துயரத்திலிருந்த அரசனின்
சிந்தனையில் பாய்ந்தெழுகிறது.
அவன் மகிழ்ச்சியில் குரலெழுப்பி, குதிரைகளைச் சவுக்காலடித்தான்: 135
அவை, பின்னங்கால்களை உதைத்து இமாலய உயரத்திற்குத் தாவி
குளம்புகளால் தென்திசைக் காற்றை உதைத்துத் துவைத்தன.
ஆனால் இப்போது அந்த அழகிய கூட்டத்திலிருந்து
பயமும் நடுக்கமும் நிறைந்த திகைப்புடனான ஒரு கதறல் வெளிப்பட்டது.
தவிர்க்கமுடியாத அருகே வரும் கூரிய நகங்களையும்
கொடிய சிறகுகளின் படபடப்பையும் கண்டு அவர்கள் திகைத்து
அச்சத்திலாழ்ந்த புறாக்களைப்போல நெருங்கி நின்றனர்.
அது அவனாலன்று, அவனை அவர்கள் கண்டாரில்லை, ஆனால் வடதிசையினின்று
ஒரு அச்சம் அவர்களைப் பீடித்தது, புரூரவஸும்
தொலைதூரத்து மேகத்தின் முழக்கம் போலும் ஒன்றினைச் செவியுற்றான்.
மிகுந்த சினத்துடன், அவன் பாதி திரும்பினான். வடமேற்குத் தொலைவில்
சுவர்க்கம் அடர்த்தியாக நின்றது, சோர்வெனும் இருளிலாழ்ந்தவண்ணம்,
இருளை இருளே மறைத்தபடி; வானவெளியில் மேகம் எழுந்து
அனைத்து வெளிச்சத்தையும் புதைத்து விடுவதுபோல
மேகத்தைப் பிடிவாதமாக வானவெளியில் (மறைத்தது). குறுக்கே 150
பெருத்த இடிமுழக்கம் போன்ற ரகசியக்குரல்கள் விரைந்தன,
சோகைபிடித்த முரட்டுத்தனமான மின்னல் நடுக்கமாக
விளிம்பிலிருந்து விளிம்பிற்கு (தாவியது). திடுக்கிட்டு
தென்திசைக்காற்று விழுந்தது (நின்றது). பின்பு சிறிது நேரம்
இடிமின்னலுடன் கருக்கொண்டு மழையை ஒரு ஆடையாக
உடுத்துக்கொண்டு, நிரந்தரமான அம்மேகம்
கம்பீரமாகக் குரலின்றி நின்றது. நீண்டபொழுது இதயம் துடிக்காது
காது கேட்பதற்காகக் காத்திருந்தது. அசைவற்ற
படைகளிலிருந்து திடீரென வேகமெடுத்து விரைந்து
பரவுகின்ற குதிரைவீரர்கள் போல், அந்த மங்கலான
அபாயமிகுந்த பிண்டத்தினின்று ஒரு மெல்லிய ஒளிமேகம்
சுவர்க்கத்தினூடே விரைந்து சென்றது, அதன்பின் நீர்த்தாரைகளாகக்
கொட்டும் மழை ஈரமாகவும் பசுமையான வரிகளாகவும்.
வேகமாக வியப்புடன் விரைந்தது அந்த ஆச்சரியமான குழப்பம்,
மழையின் உறுமலுடனும் காற்றின் சிறகுகளின் சந்தடியுடனும் 165
அடக்கும் தொடுவானத்தின் பிடித்தத்துடனும் இடையிடையே இடி முழக்கம்
தேகத்தையே நொறுக்கும் சப்தத்துடனும் மின்னலுடனும்
கண்களால் சகிக்க (காண) முடியாதபடிக்கு,
சுவர்க்கத்தின் பெரும் கழுகொன்று அத்தனை இருளையும்
கீழுள்ள பனியற்ற உயரங்களுக்கு விரட்டி
விடியலையும் விழுங்கி நின்றது. தொடர்ந்த இந்தச் சந்தடிகளிடையே
புரூரவஸ் ஆச்சரியத்திலாழ்ந்து ஸ்தம்பித்து நின்றான்:
ஆனால் அவன் பார்த்துக் கொண்டிருந்தபோதே, பறக்கும் மயிர்க்கற்றைகளுடன்
ஒரு கொடூரமான முகத்தையும் பயங்கரமான, அடையாளம் தெரியும்
கண்களையும் உணர்ந்தான். திரும்ப நோக்குங்கால்
பல நூறு யுத்தங்களில் சந்தித்தவனை அறிந்தான்,
அவன் கேசி எனும் அரக்கன். 177


~oOo~

தொடர்புள்ள முந்தைய ஆக்கம்:


என்ன? படித்தீர்களா?

வேறு ஏதோ உலகங்களில் பகைவர்களை அழித்து மீளும் புரூரவஸைக் காட்சிப்படுத்திக் கவிதை துவங்குகிறது. நுணுக்கமான விவரிப்புகள் இயற்கையின் எழில், தனிமைப் பிரதேசங்களின் கடுமை, இவற்றை அலட்சியமாக எதிர்கொள்ளும் அரசனின் கம்பீரம் ஆகியவற்றை அழகுறப் புலப்படுத்துகின்றன. (வரிகள் 0- 29)

‘எல்லையற்ற விண்வெளியின் வழியாக
பூமிக்கும் சுவர்க்கத்திற்கும் இடையே ஒரு விண்மீனைப்போலப் பிரயாணித்தான்
நிதானமாகவும் பிரகாசமாகவும். மெதுவாக நமது மனிதக்காற்றை
அவன் சுவாசித்தான்; ஏனெனில் கீழ்நோக்கி இப்போது தெய்வீகக் குளம்புகள்
நெருப்பை அலட்சியமாகத் துவைத்தபடி சப்தம் எழுப்பியவாறு சென்றன,
பெரிய பூமி அவனைநோக்கி விரைந்தது, பசுமையாக.’

புலர்காலையின் அழகில் உலவும் தேவமங்கையரின் வர்ணனை உள்ளத்தைக் கொள்ளைகொள்ளுவது. (வரிகள் 30 – 75)

‘ஆகாயம் அவர்களால் அழகாகி விட்டது; அவர்களுடைய பாதங்கள்
ஒரு ஓய்வில்லாத அழகாகவும், மகிழ்ச்சியான கண்கள் காலையின்
எழிலால் நிரம்பியும், தெய்வீகமான முகங்கள் பின்னுக்குச் சாய்ந்து
காற்றின் துடுக்கான முத்தங்களுக்காகவும் காத்திருந்தன.’

ஊர்வசியைக் கண்ணுற்றுக் காதல் வயப்படும் மானிட மன்னனைக் காண்கிறோம். (வரிகள் 76 – 123)

‘ஓ எல்லையற்ற நளினமே! நான் உன்னைக் காணவும் தழுவவும்.
ஏனெனில் எனதுடன் இயற்கையில் பொருந்தும் ஒரு பெயரை நீ கொண்டுள்ளாய்
என எனது உள்ளம் அறியும்,
நமது சேர்க்கை மாயையால் தவிர்க்க முடியாதது,
வேதத்தின் கச்சிதமான ஒரு செய்யுளைப்போல என உணர்கிறேன்.’

அரக்கனைக் கண்டு பரிதவிக்கும் இளமங்கையர் கூட்டத்தின் செயல்கள் வெகு அழகாக ரசனையோடும் பிரமிப்பு குன்றாமலும் வழங்கப்பட்டுள்ளன. (வரிகள் 124 – 138)
அரக்கன் கேசியின் வருகையும், இருப்பும் சுவாரசியம் குன்றாமல் ஒரு நாடகத்தின் அழகுடன் (கதையே தெரியாதவர்களை) படபடக்கும் நெஞ்சுடன் படிக்கத் தூண்டி விட்டு விரைகின்றன அல்லவா? (வரிகள் 140-177)

‘பறக்கும் மயிர்க்கற்றைகளுடன்
ஒரு கொடூரமான முகத்தையும் பயங்கரமான, அடையாளம் தெரியும்
கண்களையும் உணர்ந்தான்.’

இதையெல்லாம் எடுத்துக் கூறினது நான் ரசித்த விதத்தைப் பகிர்ந்து கொள்ளத்தான். இதற்கும் அப்பாற்பட்ட உணர்வுகளையும் எண்ணங்களையும் இவை அவரவர் உள்ளங்களில் எழுப்பலாம்.

ஒன்று நிச்சயம். ஒரு கவிஞனுக்குண்டான சுதந்திரம் எல்லையற்றது. ஸ்ரீ அரவிந்தர் அதனை முழுமையாக உணர்ந்து பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

நிதானித்துப் படித்து ஆழ்ந்துசிந்தித்து முத்தெடுக்க வேண்டிய கவிதை இது!

(தொடரும்)

Series Navigation<< ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில்ஊர்வசி காதலில் கண்விழித்தாள்! >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.