
“அத்தை! நீங்க ‘ட்ரூத்-இன்’ பாக்கறதுண்டா?”
“அப்பப்ப யாராவது இதைப் படின்னு சொன்னா அதைமட்டும் பார்ப்பேன்” என்றாள் சரவணப்ரியா.
“அப்ப நான் எழுதின இரண்டு கட்டுரைகள் அதில வந்திருக்கு. படிச்சு சொல்லுங்கோ!”
“அதுக்கு முன்னாடி. உன் புத்தகத்தின் விமரிசனங்களை ‘தினமலர்’ல பார்த்தேன். சில அத்தியாயங்களை இன்னும் விரிவா எழுதியிருக்கலாம் என்பது தான் குறை.”
“எனக்கு அது புகழ்மாலை.”
“மானசா! நல்ல காரமா எழுதியிருக்கே. ‘ட்ரூத்-இன்’னுக்கு பிடிச்சமாதிரி.”
“அதில வரணும்னு திட்டம்போட்டு எழுதல. எழுதி முடிச்சதும் படிச்சுப் பார்த்தப்ப அங்கே அனுப்பலாம்னு தோணித்து. முக்கியமான விஷயம், ஒண்ணொண்ணுக்கும் இருநூறு டாலர். என்னோட ஸ்டூடன்ட் லோன் முழுக்க அடைச்சாச்சு.”
“ரொம்ப சந்தோஷம். யூ.எஸ்.ல நடக்கறதை நல்லா படம்பிடிச்சு காட்டியிருக்கே. பொருளாதாரத்தைப் பாதிக்காத எந்த எதிர்ப்பும் பொழுதுபோக்கு என்ற கருத்து மற்ற நாடுகளுக்கும் பொருந்தும். போலிஷ் பெண்கள் ஒற்றுமையா போராட்டம் நடத்தறதால தான் கொஞ்சமாவது பலன் இருக்கு. அது சரி, எழுதறதுக்கு எப்படி ஐடியா கிடைச்சுது?”
“அதுக்கு ஒரு கதை.”
“கதாசிரியர் ஆக உனக்கு எதிர்காலம் இருக்கு.”
“உங்க ஆசீர்வாதம் பலிக்கட்டும்.”
“சரி, கதையைச் சொல்!”
“உங்க ஊர்ல கங்கா சஹாதேவன்னு ஒருத்தி. நாற்பத்தியைந்து வயசு சொல்லலாம்.”
“எனக்கு பரிச்சயம் இல்ல. பொம்மிக்கு ஒருவேளை தெரிஞ்சிருக்கும்.”
“அவங்களுக்கு ஒரு பெண். அவ பெயரும் மானஸா.”
“கதை சுவாரசியமா இருக்கு.”
“இப்ப அவளுக்கு ட்யுக்ல முதல் வருஷம்…”
“உன்னைவிட கொஞ்சம் சின்னவ. மேலே சொல்!”
“அந்த மானஸா சஹாதேவன் இன்னொரு மானசா சகாதேவன் இருப்பது தெரிஞ்சதும் எனக்கு ஒரு ஈ-மெய்ல் அடிச்சா. இந்த மூணு மாசத்தில ஒருத்தரைப்பத்தி இன்னொருவருக்கு நிறைய தெரியும். நம்ப மாட்டீங்க, அவளும் ‘கங்கா: த கர்ல் ஹு வான்ட்டட் டு ஸ்விம்’ ன்னு அவ அம்மாவை வச்சு ஒரு புத்தகம் எழுதியிருக்கா. அது மார்ச் மாசம் வெளிவரும்.”
இரண்டு பெண்களுக்கு ஒரே பெயர், அவர்களின் முதல் புத்தகத்தின் தலைப்பும், விஷயமும் ஒரே மாதிரி. அடுத்த முறை பரிமளாவுடன் பேசும்போது இதைச் சொல்ல வேண்டும்.
“கங்கா என் அம்மாவுக்கு எதிரான கேரக்டர். புதிய மனிதர்களை, புதிய சூழலை தேடிப்போய் சந்திக்கும் தைரியம். தன் பாய்ன்ட்டை மத்தவங்க ஏற்கும்படி வைக்கும் சாமர்த்தியம். இதெல்லாம் என் அம்மாவுக்குக் கொஞ்சமும் கிடையாது.”
“மனிதர்கள் ஒரே மாதிரி இருந்தா எப்படி?”
“அந்த மானஸா பத்துப் பன்னிரண்டு கட்டுரைகளும் எழுதியிருக்கா. ‘ஹஃபிங்டன் போஸ்ட்’, ‘செவன்டீன்’ இதிலெல்லாம் வந்திருக்கு.”
“எதைப்பத்தி?”
“பொதுவா பெண்களுக்கு அதிக உரிமை, கன் கன்ட்ரோல்…”
பிரசுரத்துக்கு தயாராக ஒரு புத்தகம், முன்னேற்றக் கொள்கையில் கட்டுரைகள், ஆயிரம் என்ன பத்தாயிரத்தில் ஒருத்தி. ட்யுக் மட்டுமா? எல்லா ஐவி கல்லூரிகளும் அவளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருக்கும்.
“கட்டுரைகளைப் படிச்சப்ப என் கவனம் ஃப்ளாரிடால நடந்த எதிர்ப்புப் போராட்டங்களுக்கு தாவித்து.”
“கண்கள் வழியாக விரல்களுக்குத் தூண்டில் போடும் இன்டர்நெட்டின் மகிமை.”
“அந்த போராட்டங்களில பங்கெடுத்த டீன் கும்பல் மாளிகையில வசிக்கிறவங்க. அந்த மாளிகைகளும் கேட் போட்டு மத்தவங்க நுழையாதபடி தடுத்த வேலிக்குள்ள. நிஜமாவே ஏழைகள் படற கஷ்டம் அவங்களுக்குத் தெரியுமா?”
பணக்கார வீட்டுப்பெண்கள் சேரிகளுக்குப் போய் சமூகசேவை செய்தது சரவணப்ரியாவின் நினைவுக்கு வந்தது.
“ஏதோ அந்தமட்டுக்கும் எதிர்ப்பு காட்டறாங்களேன்னு பாராட்டணும்.”
“இந்த ஏனோ தானோ எதிர்ப்பு நிஜமான சீர்திருத்தத்துக்கு இடைஞ்சல்னு நினைக்கிறேன்.”
அது தான் அவள் கட்டுரைகளின் சாரம் என்றால் அதை அவள் இன்னும் சிறப்பாக நிலைநாட்டி யிருக்க வேண்டும். அறிவுரையை அடுத்த உரையாடலில் சொல்லலாம்.
பூங்காவில் ஒரு உலாத்தல்
மானசா சகாதேவன்
துப்பாக்கி கலாசாரத்தை எதிர்த்து சான்ஃபோர்ட் நகரை வலம் வந்த இளைஞர்களுக்கு ஒருசில வார்த்தைகள். உங்கள் ‘உயிருக்குப் போராடும் அணிவகுப்பு’ சனிக்கிழமை முற்பகல் (ஞாயிற்றுக்கிழமை என்றால் சர்ச் செல்வோருக்கு இடைஞ்சலாக இருந்திருக்கும்) யாருக்கும் எவ்விதத் தொல்லையும் தராமல் இனிதே நடந்து முடிந்தது. வாரக்கடைசியில் வேலைசெய்யும் பணியாளர்கள் தங்கள் தொழிலகம் போவது தாமதம் ஆகவில்லை. நுகர்பொருள் கடைகளில் வியாபாரம் குறையவில்லை. வேக உணவகங்களின் உடல்நலத்தைக் கெடுக்கும் சேவையிலும் தடங்கல் இல்லை. ஊர்வலத்தின் முடிவில் பேசிய சிலரின் வார்த்தைகளில் உணர்ச்சி தெறித்தது, சினம் பொங்கியது. துப்பாக்கிகளின் எண்ணிக்கையைப் பெருக்கும் ‘என்ஆர்ஏ’ நிறுவனம் வசவுகளுக்கு உள்ளானது. உயரப்பிடித்த போஸ்டர்களின் வாசகங்கள்… எங்கள் இரத்தம் உங்கள் கைகளில் வாக்கு அளிக்கும்போது இதை மறக்கமாட்டோம் நாங்கள் நிற்கும் தரை எங்களுக்கே சொந்தம் எதிர்ப்புக்கூட்டம் முடிந்து கோபம் அடங்கி சமாதானம் பரவியதும் வீட்டை நோக்கி விரைந்த தனியார் ஊர்திகள். ஊடகத்தில் ஊர்வலத்தைப் புகழ்ந்து செய்தி அறிக்கைகள். ஒருத்தி ஒரு பிரபலத்துடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் படம். அவளுக்குப் பின்னால் இடுப்பில் துப்பாக்கி செருகிய வெள்ளை காவலர்களின் சிரித்த முகங்கள். இப்போது, இந்தப் படத்தைப் பாருங்கள்! ஸ்டான்டிங் ராக்கில் ஒரேயொரு ஆதி அமெரிக்கர், சுத்தமான நீரின் அவசியத்தை உணர்த்த, ஒரு தண்ணீர் புட்டியைத் தூக்கிப்பிடிக்கிறார். அவருக்குப் பின்னால் ஆயுதம் தாங்கிய ஒரு படை. இன்னொரு படம்.. ஒருத்தி தனியாக கால்களைத் தரையில் பதித்து நிற்கிறாள். படான் ரூஜ் (லூசியானா) போலிஸ் கறுப்பு மக்கள்மேல் அளவுகடந்த வன்முறை பயன்படுத்துவதை எதிர்ப்பது அவள் நிலைப்பாடு. ஆயுதம் இல்லாத அவளைக் கைது செய்ய போருக்குப்போகும் படைவீரர்கள் போல காவலர்கள். ஏன் இந்த வித்தியாசம்? உங்களுடைய போராட்டத்தால் யாருக்கும் ஆபத்து இல்லை. தற்போதைய சட்டங்களும் ஒழுங்குமுறையும் தடங்கல் இல்லாமல் தொடரும் என்கிற நிச்சயம். தரையடி எண்ணெய்க்குழாயையும் போலிஸின் அடக்குமுறையையும் எதிர்ப்பது அமெரிக்க வாழ்க்கையின் அடித்தளத்தையே தாக்குவது போல. அவற்றை முளையிலேயே கிள்ளுவது அவசியம். அணிவகுப்பு முடிந்ததும் நீங்கள் உங்கள் தினசரி வாழ்க்கைக்குத் திரும்புவீர்கள் என்பது வெளிப்படை. கிட்டத்தட்ட எல்லாருமே கல்லூரிக்குப் போகும் வசதி உள்ளவர்கள். படித்துப்பட்டம் வாங்கி பதவிகளில் அமர்ந்ததும் நீங்களும் ஆட்சியாளர் பக்கம். மாணவ கும்பலைப் பார்த்து அவர்கள் எதற்கு பயப்பட வேண்டும்? அந்த ஆதிக்குடியினரின் எதிர்ப்பும் கறுப்புப்பெண்ணின் போராட்டமும் அப்படி இல்லை. ஒரு காலைப்பொழுதுடன் முடிந்தவிடாது. அவர்களை விலைகொடுத்து வாங்குவதும் சாத்தியம் இல்ல. அவர்களை அடக்க அதிகப்படியான வன்முறை தேவை. உண்மையிலேயே சமுதாயத்தில் மாற்றங்களை நீங்கள் உண்டாக்க விரும்பினால்… போர்த்தளவாடங்கள் கொண்ட போலிஸ் படையைக் கலைக்க.. யூ.எஸ். இராணுவத்தை சுருக்க.. சொத்துக்கு உச்சவரம்பும் வருமானத்திற்குக் குறைந்தபட்சமும் நிர்ணயிக்க.. போராடுங்கள்! |
பெண்ணியத்தின் வெற்றி!
மானசா சகாதேவன்
பெண்ணியத்தை ஆதரித்து பதின்பருவப் பெண்கள் நடத்திய போராட்டம்.
எடுத்த எடுப்பில் என் கண்ணில் பட்டது பங்கெடுத்தவர்களின் மிகையான ஒப்பனை.
ஒப்பனை ஆண்கள் நமக்குப் போட்ட வேலி. குதியுயர் காலணிகள் பெண்களின் கவர்ச்சிக்கு ஆண்கள் உருவாக்கியவை. நம் சொந்தப்பணத்தையும் பயனுள்ள வழிகளில் செலுத்த வேண்டிய நேரத்தையும் முள்கம்பிகளாக மாற்றும் சடங்கு. நிஜமான சிந்தனை வேலிக்கு வெளியில்.
அடுத்ததாக…
அவர்களின் விலையுயர்ந்த இளஞ்சிவப்பு ஆடைகள். அவை பங்களா தேஷிலோ ஸ்ரீலங்க்காவிலோ முதுகு ஒடிய ஏழைப்பெண்கள் தயாரித்தவை.
திருத்திய கூந்தல், செதுக்கிய நகங்கள். அதற்காக அலங்கார (பெண்) தொழிலாளர்கள் சுவாசிக்க நேரிடும் வேதியியல் கரைப்பான்கள் – இனவளர்ச்சி உறுப்புகளைப் பாதிக்கும் ஃபார்மால்டிஹைட், டாலுவின்…
கூட்டத்தில் பேசியவர்களின் உரைகளில் சமுதாயத்தில் வேர் ஊன்றி யிருக்கும் அதிகாரப்படிகளைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை. ஆண்களுக்கு சமமான சுதந்திரம், வருமானம். கணினித்திரையின் முன் உட்காராத பெண் தொழிலாளர்களைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
பெண்ணியத்தின் அடையாளம் உணர்ச்சி வசப்படுதல். அதன் அடிப்படையில் உருவாகும் அமைப்பில் உயர்வு தாழ்வு கிடையாது. அதில் வெள்ளை ஆண்களைக் கூட்டுசேர்ப்பது தான் பெண் விடுதலையின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அந்த மாற்றம் குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். எல்லா உழைப்பும் சமம் என்கிற நிலையில் ஹஸ்பன்ட் (எஜமானன்) என்கிற வார்த்தை அர்த்தம் இழந்து வாழ்க்கைத்துணை என்ற பெயர் உருவாகும். எந்தத் தீர்மானத்திலும் எல்லாருடைய பங்கெடுப்பும் ஒப்புதலும்.
அதிலிருந்து அடுத்தடுத்து வாழும் குடும்பங்களின் தொகுதி, வர்த்தக நிறுவனங்கள், அரசாங்கம் என பெண்ணியம் விரிவடையும். எல்லா மட்டத்திலும் பாதி பெண்களின் பங்களிப்பு. எந்த அமைப்பிலும் மேலிருந்து கீழ் என்ற அதிகார நிர்ணயம் இராது. போட்டியோ லாபநோக்கோ இல்லாத தன்னிறைவுப் பொருளாதாரம் அதன் ஆணிவேர்.
இந்தப் பரிசோதனை சாத்தியமா?
இல்லை என்றால், குறைந்த பட்சம்..
ஆண்களுக்கு சமமான அதிகாரத்துக்கு ஆசைப்படாமல், நம்மைவிடத் தாழ்ந்த நிலையில் இருக்கும் உழைப்பாளிகளுடன் நம் செல்வத்தைக் கொஞ்சம் பகிர்ந்துகொள்வோம்!
டிசம்பர் இரண்டாவது வெள்ளிக்கிழமை. அதிகாலை கல்லூரியில் இருந்து கிளம்பி காலைப்பொழுது முடிவதற்குள் திரும்பிய மானஸாவை வீட்டில் இறக்கிவிட்டு அவள் தந்தை வேலைக்குச் சென்றார். பழகிய சமையலறையில் ப்ரெட், வெண்ணெய், பால் அந்தந்த இடங்களில். அவற்றை வைத்துத் தயாரித்த உணவை ரசித்துத் தின்றாள்.
கல்லூரிப்படிப்பின் எட்டில் ஒரு பங்கு முடிந்துவிட்டது. எல்லா பாடங்களிலும் ‘ஏ’. இனி மூன்றரை வாரங்களுக்கு படிப்பையோ பாடத்தையோ நினைக்கக்கூடாது. வித்தியாசமாக என்ன செய்யலாம்? தேங்கி நிற்கும் பகீரதன்- கங்கைக் கதையை சலசலப்புடன் ஓடவைக்கலாம். அதற்குக்கூட என்ன அவசரம்?
குளித்ததும் நகங்களில் வர்ணம் பூசப்போனபோது அவற்றின் தாறுமாறான வளர்ச்சி கண்களை உறுத்தியது. அம்மா பார்ப்பதற்கு முன்,
சைகான் நெய்ல் சலான்.
அவளை வரவேற்றவள் அவளுடன் பள்ளிக்கூடத்தில் படித்தவள், வலைத்தள செய்திகள் தயாரிப்பில் உதவியவள். கரோலைன் ஹாகின்ஸ். இலவசம் என்பதால் கொலம்பியா சமுதாயக் கல்லூரியில் சேர்ந்திருந்தாள்.
“ஹாய், மனா! ஐந்து நிமிஷம்…”
“காத்திருக்கிறேன்.”
மானஸாவுக்குப் பின்னால் யாரும் இல்லாததால்,
“‘ட்ரூத்-இன்’னில் நீ எழுதிய இரண்டு கட்டுரைகளும் பிரமாதம். எதிர்காலம் பற்றிய சிந்தனையை நிச்சயம் தூண்டும்” என்றாள் மற்றவள்.
ஒரு ட்யுக் மாணவிக்கும் சமுதாய நீதிக்குப் போராடும் ஒரு செய்தித்தளத்துக்கும் சம்பந்தம் இருக்குமா? என்கிற சந்தேகம் அவள் குரலில்.
“அப்படி நான் எழுதியதாக நினைவில்லையே.”
“மானஸா சஹாதேவன் என்று போட்டிருந்தது, எழுத்தும் இலக்கண சுத்தமாக இருந்தது.”
அந்த அபூர்வப்பெயரில் வேறு யார் இருக்க முடியும்?
“நான் இல்லை, அது வேறொருத்தி.”
“அப்படியென்றால் படித்துப்பார்! உனக்கும் பிடிக்கலாம்.”
ஒரு வியட்நாம் பெண், “மானஸா!” என்று அழைக்க…
அவள் சொன்னபடி கை கால் விரல்களை நீட்டினாலும் மானஸாவின் மனதை நிறைத்த கேள்வி. மூன்றாவதாக ஒரு மானசா சஹாதேவனோ? அந்த சந்தேகம் வீட்டிற்கு வந்து முதல் கட்டுரையை விரித்ததும் மறைந்துபோனது. ஆசிரியர் குறிப்பில்… சென்னை ஆனிக்ஸ் பிரசுரத்தின் நிதிநிர்வாகி, அவள் எழுதிய ‘ய உமன் லைக் வினதா’ (வினதாவைப் போல் ஒரு பெண்) சமீபத்தில் வெளியானது.
மின்தகவல்கள் வழியே அவள் கற்பனை செய்த மானசா வீட்டின் பாதுகாப்பைவிட்டு – பௌதிக நீளத்தில் மட்டுமல்ல, எண்ணங்களின் அகலத்திலும் – வெகுதூரம் போகாத நாய்க்குட்டி. பாடங்களை ஒழுங்காகப் படித்து பட்டம் வாங்கினாலும் கட்டுப்பாடுகளுக்குள் அடங்கிய குடும்ப வாழ்க்கைக்குத் தன்னை தயார் செய்யும் மனநிலை.
இரண்டு கட்டுரைகளையும் மேலோட்டமாகப் படித்ததுமே அந்த சித்திரம் சிதைந்தது.
யூ.எஸ்.ஸின் சௌகரியமான தினசரி வாழ்க்கையைப் பாதிக்காத எதிர்ப்புகளால் பலன் இல்லை, அவற்றில் பங்கு எடுப்பவர்களுக்கும் நிஜமான மாற்றங்களில் அக்கறை இல்லை. இதை இந்தியாவில் வணிகம் படித்த ஒருத்தி எழுதியிருக்கிறாள். சே!எழுத்துக்கும் இப்போது அவுட்சோர்ஸிங்!
இம்மாதிரி போராட்டங்களில் மானஸா கலந்துகொண்டு உரை நிகழ்த்தி இருக்கிறாள், அவற்றை கட்டுரைகளில் விவரித்து இருக்கிறாள். அதனால், இன்னொரு முறை ஊன்றிப்படித்தாள். வார்த்தைகளைக் கூரிய அம்புகளாக மாற்றிய மானசாவின் திறமையை இன்னொரு எழுத்தாளர் என்ற விதத்தில் ரசித்தாள். அவை அவள் ஒருத்தியைக் குறிபார்த்து எய்யப்படவில்லை என்றாலும் அப்படிப்பட்ட எண்ணம் அவளுக்கு ஏன் தோன்ற வேண்டும்? மானசாவை முன்பே அறிந்தவள் என்ற காரணத்தினால்? கடைசியாக நடந்த வார்த்தைப் பரிமாற்றம் மானசாவின் உபதேசத்தில் முடிந்ததால்? ரசனை எரிச்சலாக, கோபமாக மாறியது.
சமுதாயத்தின் அமைப்பில் எந்த பெரிய மாற்றத்தையும் அவளோ அவள் கட்டுரைகளோ கொண்டுவரப்போவது இல்லை என்று இடித்துக்காட்ட அந்த மானசா யார்? எழுத்துக்களின் ஒரே குறிக்கோள் புரட்சியை உருவாக்குவது என்று யார் சொன்னார்கள்? நேரத்தைக் கடத்தவோ மிஞ்சிப்போனால் சுய-விமரிசனம் செய்யவோ வழிசெய்யலாம். அவ்வளவுதான்.
தற்போதைய சமுதாய அமைப்பின் உருவாக்கலில் அவள் தாய் கங்காவைப்போல கோடிக்கணக்கான மனிதர்களின் உழைப்பு அடங்கியிருக்கிறது. ஒருசிலர் அளவுக்குமேல் பணம் சேர்க்கிறார்களா? அந்த அளவு என்ன? அதை நிர்ணயிப்பது யார்? இயந்திர சமுதாயத்தினால் தான் எங்கோ உட்கார்ந்து யூ.எஸ்.ஸைக் குறைசொல்லும் அவள் கட்டுரைகள் பலருடைய பார்வைக்கு எட்டுகின்றன. அந்த அமைப்பை ஒரே நாளில் இடித்துவிட முடியுமா? அப்படி நிஜமாகவே நடந்தால் அது தன்னைப் பாதிக்காது என்கிற தைரியத்தில் எழுதியிருக்கிறாள். யூ.எஸ்.ஸில் பொருளாதார வளர்ச்சி வேகம் இழந்தால் அதன் பாதிப்பு இந்தியாவிலும் இருக்கும். பி.பி.ஏ. பட்டம் வாங்கியவளுக்கு இதுகூடவா தெரியவில்லை? அப்பட்டத்தின் முதல் ‘பி‘யை ‘எம்’மாக, அவள் வெளிநாட்டிற்கு வந்து மாற்றுகிறாள், ‘ஸ்மார்ட்-பே’ இல்லை ‘க்ராஸ்-டாக்’ அவளை இருநூறாயிரம் டாலருக்கு அழைக்கிறது, அப்போது அவளுடைய இலட்சிய எழுத்து என்ன ஆகிறது என்று பார்க்கலாம்!
பெயரும் திறமையும் ஒன்றாக இருந்தாலும் இரண்டு பெண்களுக்கு இடையே கைநீட்டித் தொடமுடியாத அளவுக்கு வித்தியாசங்கள். ஒரு தடவை சந்தித்த இரு வளைகோடுகள் இன்னொரு முறை ஒன்றையொன்று வெட்டும் என்பது அவசியம் இல்லை.
(தொடரும்)